http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 28

இதழ் 28
[ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

இமயத்துக்கே மகுடமா?
கதை 8 - தேவன் தொட்ட சுனை (இறுதிப் பகுதி)
Valanchuli - Interesting Observations
உடையாளூர்க் கயிலாசநாதர் கோயில்
ஜப்பானில் தமிழும் பரதமும்
திரு. ஐராவதம் மகாதேவன் - அறிமுகம்
இரண்டாண்டு நிறைவு வாழ்த்துச்செய்திகள் - II
Links of the Month
இதழ் எண். 28 > பயணப்பட்டோம்
ஜப்பானில் தமிழும் பரதமும்
ச. கமலக்கண்ணன்
அணுகுண்டின் பாதிப்பு வெகுநாட்களுக்குத் தொடர்ந்தது. சடாக்கோவும் பள்ளிக் குழந்தைகளும் மனதை விட்டு அகல மறுத்தனர். ஒருவழியாக, ஜூலை கடைசி வாரத்தில் ஓஸகாவில் நடைபெற்ற தென்ஜிம் திருவிழா மனதுக்கு ஆறுதலளித்து, வேறு திசையில் கவனம் செலுத்த உதவியது. ஜப்பானில் திருவிழாக்களுக்குப் பஞ்சமே இல்லையென்றாலும், மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வருடத்துக்கு இரண்டோ மூன்றோதான். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு திருவிழா. ஒவ்வொரு திருவிழாவுக்கும் ஒவ்வொரு புராணம். பள்ளியில் படிக்கும் காலத்தில், கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூர் என்ற ஊரில் கோலாகலமாக நடக்கும். சுற்றியிருக்கும் பதினெட்டு பட்டிகளிலிருந்தும் மக்கள் வந்து குவிவார்கள். பிறகு கல்லூரி, வேலை என்று வெளியூர் வாசத்தினால் பாரியூர் செல்வது குறைந்து விட்டது. இந்தத் தென்ஜிம் திருவிழா அதை நினைவூட்டியது.

டோக்கியோவில் காண்டா (Kanda), கியோட்டோவில் கியோன் (Gion) மற்றும் ஓஸகாவில் தென்ஜிம் ஆகிய மூன்று திருவிழாக்களும் ஒரே நேரத்தில் கொண்டாடப்படும். ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கு பெற்றும், லட்சக்கணக்கானோர் பார்த்தும் மகிழக்கூடிய ஒரு பிரம்மாண்டமான திருவிழா. இதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. கி.பி 845 முதல் 903 வரை திரு. சுகாவரானொமிச்சிஸானே என்று ஒரு அறிஞர் ஓஸகாவில் வாழ்ந்து வந்தார். அவர் இறந்த பிறகு தோஜிமா (Dojima) ஆற்றங்கரையில் தகனம் செய்யப்பட்டார். அதன் பின்னர் சில நாட்கள் கழித்து, ஓஸகாவில் பெரும் இயற்கைச் சீற்றம் ஏற்பட்டது. இடி, மின்னல், மழை, புயல், சூறாவளி, சுனாமி என அல்லும் பகலும் ஓய்வு ஒழிச்சலின்றி இயற்கையால் துன்புறுத்தப்பட்டனர். இவையனைத்தும் சுகாவரானொமிச்சிஸானேவின் மரணத்தையொட்டியே நடந்ததால், அவர்தான் காற்றுக் கடவுளாக மாறியிருக்கிறார் என நம்பத் தொடங்கி விட்டனர். அவரைச் சாந்தப் படுத்துவதற்காக, பூஜைகளும் தோஷ நிவர்த்திகளும் செய்யப்பட்டன. அதன் முடிவில், அக்கல்லறையை நோக்கிப் பதக்கத்துடன் கூடிய ஒரு தெப்பம் தற்செயலாக மிதந்து வந்து சேர்ந்தது. அப்போது ஷிண்டோ முறைப்படி அப்பதக்கத்துக்குப் பூசை செய்யப்பட்டுப் புனிதமாக்கப்பட்டது. பின்னர் ஓஸகா பெருநகரமாக உருவெடுக்கத் தொடங்கியபோது, இப்பூசையும் ஒரு பெரிய திருவிழாவாக உருவெடுக்கத் தொடங்கி இன்று பிரம்மாண்டமான கோடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவர் ஒரு அறிஞர் என்பதால், கல்விக் கடவுளாகவும் வணங்கப்படுகிறார்.

கொண்டாடும் முறையும் கிட்டத்தட்ட நம் ஊரைப் போலவேதான். கரகாட்டம், ஒயிலாட்டம், தேரோட்டம், முத்துப்பல்லக்கு, தீர்த்தக்குடம் எடுத்தல், அலகு குத்துதல், வாணவேடிக்கைகள் என்று நாம் கலந்து கட்டி அடிப்பதைப் போலவே இங்கும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்திக் கொண்டாடுகிறார்கள். "இன்னும் சற்று நேரத்தில், சாமி ஆற்றுக்குச் செல்ல இருப்பதால், தீர்த்தக்குடம் எடுக்க இருக்கும் பக்தகோடிகள் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!" என்று மைக்கில் அறிவிப்பது போலவே, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பட்டியலிட்டுச் செய்கிறார்கள். சுமார் மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே ஆயத்த வேலைகள் ஆரம்பித்து விடுகின்றன. விழாக்குழு அமைக்கப்படுகிறது. செலவினங்களுக்கு நம் ஊரைப் போலப் பொது மக்களிடம் உண்டியல் குலுக்குவதில்லை. மாறாக, திருவிழாவின்போது மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளில் இருக்கும் வணிக நிறுவனங்களிடம் நன்கொடை வசூலித்து, கலை நிகழ்ச்சிகளின்போது விளம்பரம் செய்கிறார்கள். உதாரணமாக, ஒரு ஊர்வலக் குழுவினரின் செலவுகளை ஒரு நிறுவனம் ஏற்றுக் கொண்டால் அக்குழுவினரின் உடைகளில் அந்நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.

குழந்தை உறுப்பினர்கள்


விழா மட்டுமல்ல. விழாக்குழுவும் மிகப் பிரம்மாண்டமானதுதான். ஆண், பெண், குழந்தைகள் வித்தியாசமின்றி, சுமார் 3000 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். அனைவரும் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்பார்கள். இதில் ஊர்வலக்குழுக்கள், நாட்டியக்குழுக்கள் என்று இரண்டு விதமான பிரிவுகள் இருக்கும். பல்வேறு விதமான தேர்களும் பல்லக்குகளும் தயாரிக்கப்படும். இவற்றிற்கு மிக்கோஷி என்று பெயர். ஒவ்வொரு ஊர்வலக்குழுவும் ஒரு மிக்கோஷியைச் சுமந்து அல்லது இழுத்து வரும். நாட்டியக்குழு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒப்பனையுடன் ககுரா என்ற பாரம்பரிய இசையை இசைத்துக்கொண்டு நாட்டியமாடி வரும்.மிகப்பெரிய மிக்கோஷி
தேர் வடிவில்
பல்லக்கு
உருளைவடிவப் பல்லக்கு
இழுத்துச் செல்லும் பல்லக்கு
நம் ஊரைப்போன்ற பல்லக்கு


இதில் கண்களைக் கவரும் அம்சம் நாட்டியங்கள்தான்.சீனாவின் டிராகன் நடனம்
குடை நாட்டியம்
குழல் வித்தகர்கள்
செந்தொப்பி வீரர்கள்


பாரம்பரியக் கிமோனோ உடையுடன்


காலை சுமார் 9 மணிக்கு ஆரம்பித்து 2 கி.மீ தூரத்தை இக்குழு கடந்து முடிப்பதற்கு மாலை 5 மணி ஆகிவிடும். ஓஸகாவின் மிக அகலமான தெருவான மிடோசுஜி வழியாக இவ்வூர்வலக்குழு வரும்போது காணத் திரண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். 2 கி.மீ தூரத்தைக் கடந்து தென்ஜிம்பாஷி பாலத்தை அடைந்தவுடன் ஊர்வலத்தின் அடுத்த நிகழ்ச்சி தொடரும். ஊர்வலத்தில் கொண்டுவந்த மிக்கோஷிகளைப் படகுகளில் ஏற்றுவார்கள். இந்த 3000 பேரும் சுமார் 100 படகுகளில் ஏறிக்கொள்வர். தோஜிமா ஆற்றின் இரு மருங்கிலும் மக்கள் குவிந்திருக்க, 100 படகுகள் அணிவகுத்துச் செல்வதைக் காணக் கண் கோடி வேண்டும்.


மக்கள் கூட்டம்
படகுகளின் அணிவகுப்பு


மக்கள் கூட்டத்திற்குச் சற்றும் குறைவில்லாமல் சாப்பாட்டுக் கடைகளும் நிறைந்திருக்கும். விதவிதமான சிறப்புப் பதார்த்தங்களும் ருசி பார்க்கப்படக் காத்திருக்கும். யாகி சொபா (நூடுல்ஸ்), ஒகோனொமியாகி (கிட்டத்தட்ட நம் ஊர் வெஜிடபிள் ஊத்தப்பம் போல), யாகி தொரி (நெருப்பில் வாட்டிய கோழி), தக்கோயாகி (ஆக்டோபஸ் பணியாரம்), குதாமோனோ (அலங்காரம் செய்யப்பட்ட பழவகைகள்) என நிறைந்து கிடக்கின்றன. இத்தனை கடைகள் இருந்தும், ஒவ்வொரு கடையிலும் கூட்டத்திற்குக் குறைவே இல்லை. நானும் எனது நண்பரும், அடுத்த ஆண்டு இங்கு மிளகாய் பஜ்ஜிக்கடை வைக்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறோம்.

பலகாரக்கடைகள்
சாக்லேட்டில் தோய்த்தெடுக்கப்பட்ட வாழைப்பழம்


தென்ஜிம்பாஷி பாலத்திலிருந்து ஹொக்கோனகாஷி பாலத்தைப் படகுகள் அடைந்ததும் வாணவேடிக்கைகள் ஆரம்பமாகும். வரிசையாகச் செல்லும் ஒவ்வொரு படகும் ஹொக்கோனகாஷி பாலத்தை அடைந்ததும், கொண்டுசென்ற பட்டாசுகளை வரிசையாகக் கொளுத்துவர். இப்படியே 100 படகுகளும் வாணவேடிக்கை நடத்தி முடிக்க இரவு மணி 10 ஆகிவிடும். இந்தப் பட்டாசுகளுக்காகச் செலவு செய்யும் மொத்தத்தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள். இதற்காகவென்றே தனியாகத் தயாரிப்பார்கள். நிறுவனங்கள் செலவை ஏற்றிருந்தால், வானத்தில் அதன் சின்னமோ அல்லது பெயரோ எழுதிக் காண்பிக்கப்படும். இதோ இணையத்தில் கிடைத்திருக்கும் சில வீடியோக்கள்.நானும் என் அலுவலக நண்பன் முக்காய் கட்சுகியும் இத்திருவிழாவிற்காக தென்ஜிம்பாஷியில் ரயிலிலிருந்து இறங்கியபோது, ரயில் நிலையத்தை விட்டு வெளியே வரவே முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். பத்தடிக்கு ஒரு போலீஸ்காரர். அந்த நாள் முழுவதும் ஊருக்குள் வாகனங்கள் நுழையத்தடை. மெல்ல மெல்ல ஊர்ந்து, சுமார் 1/2 கி.மீ தூரத்திலிருக்கும் பாலத்தை அடைவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆனது. நாங்கள் சென்று சேர்வதற்கும் வாணவேடிக்கைகள் ஆரம்பமாவதற்கும் சரியாக இருந்தது. நம் ஊரில் தீபாவளிக்கு ஒவ்வொரு பட்டாசாக எண்ணி எண்ணி வெடித்தது ஒருவித சந்தோஷம் என்றால், சில மணி நேரங்கள் தொடர்ந்து வானத்திற்கே விளக்கடித்துக் காட்டியதைப் பார்ப்பது வேறொரு விதமான பரவசம்.

இந்த வானத்திற்கே விளக்கடிக்கும் வித்தை இந்த ஒருநாள் மட்டும்தான் என்று இல்லை. டோக்கியோவில் ஷின்ஜுக்குவும் ரொப்பொங்கி மலையும் தினமுமே இப்படித்தான் கோலாகலமாக இருக்கும். ஒருமுறை டோக்கியோவில் இருந்து இரவுப் பேருந்தில் ஓஸகா வந்தபோது, தற்செயலாகப் பேருந்தின் ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தேன். மேகங்கள் ஒளிவீசிக் கொண்டிருந்தன. என்னடா இது! தவறிப்போய் ஓட்டுனர் பேருந்தைச் சொர்க்கலோகத்துக்கு ஓட்டி வந்து விட்டாரா என்று பார்த்தால், ஷிபுயா என்ற இடத்தில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தது. பாதி விளக்குகள் சாலைகளுக்கும் அதிலிருக்கும் மனிதர்களுக்காக என்றாலும், மீதிப்பாதி நிலாவுக்கு ஒளியைக் கடன் கொடுத்துக் கொண்டிருந்தன. வழக்கமாகச் சாலை விளக்குகளில் மேல்மூடி இல்லாததால், ஒளி ஆறு பக்கங்களிலும் சிதறிப் பாய்ந்து கொண்டிருக்கும். அதுபோக, முப்பரிமாண (3D) விளம்பரப் பலகைகளும், 'எங்களை மாதிரி பெரிய பெரிய தாதாக்களெல்லாம் இருக்கும்போது நீ என்ன பெரிசா பிலிம் காட்டிட்டு இருக்கே?' என்று சாலை விளக்குகளைக் கிண்டல் செய்து கொண்டிருக்கும். ஓஸகா மட்டும் என்ன குறைச்சலா? இதோ படங்கள்!

பேருந்தில் வந்தால் இப்படியொரு கண்கொள்ளாக் காட்சி. ரயிலில் வந்தால் இன்னொரு அதிசயம். உள்ளே செய்யப்பட்டிருக்கும் அலங்காரங்களைப் பார்த்து முடிப்பதற்குள் ஓஸகா வந்து சேர்ந்துவிடும். விமானப்பயணம் முதல் சிலமுறைகள் சற்று பயம் கலந்த எதிர்பார்ப்புடன் இருக்கும். பிறகு போரடித்து விடும். ஆனால் இந்த ரயில் பயணங்களில் சுகானுபவங்கள் இன்னும் நிறைய மீதமிருக்கின்றன என்றே தோன்றுகிறது. பயணக்களைப்பே தெரிவதில்லை. ஒரு திரையரங்குக்குள் அமர்ந்திருப்பது போலத்தான் இருக்கிறது.நாள்தோறும் அனுபவிக்கும் இதுபோன்ற சிறுசிறு சந்தோஷங்கள்தான் வெளிநாட்டு வாழ்வை மகிழ்ச்சிகரமாக ஆக்குகின்றன. மழைநாளில் புத்தகக்கடைக்குச் சென்றால், கைப்பிடியையும் மறைக்காமல், பையினுள்ளும் மழைநீர் புகாவண்ணம் அழகான பாலித்தீன் சுற்றிக் கொடுப்பது, விளம்பரங்களுக்காக என்றாலும்கூட, சாலையோரங்களில் திசுக் காகிதங்களையும் வெயிலுக்கு விசிறியையும் இலவசமாகக் கொடுப்பது போன்ற செயல்கள் அந்தந்த நேர அசௌகரியம் மற்றும் தர்மசங்கடங்களைப் போக்கி மகிழ்வூட்டுகின்றன. அறுசுவை விருந்தில் வைக்கப்படும் உப்பையும் ஊறுகாயையும் போல இப்படிப்பட்ட தற்காலிக சுகங்கள் ஒருபுறமென்றால், நிரந்தரமான சில பேரின்பங்களும் இருக்கின்றன. விருந்துக்கு உப்பும் ஊறுகாயும் தேவைதான் என்றாலும், பலவிதமான ஊறுகாய்களைக் கொண்டே வயிற்றை நிரப்பி நெடுநாட்கள் உயிர்வாழ முடியுமா? அதனால்தான், 'ஒருவாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்' என்பதுபோல, யாரும் எதிர்பார்த்திராத பேரின்பம் பயக்கக்கூடிய பல அரிய நிகழ்வுகளும் காத்திருக்கின்றன. தமிழ் மீது ஆர்வமும் பற்றும் உள்ளவர்கள் ஜப்பான் வந்தால் அவர்களுக்கு எந்த விதமான பேரின்பங்கள் கிடைக்கும்? அந்த எல்லையில்லாப் பேரானந்தத்தை, நான் ஓஸகாவில் சந்தித்த மூன்று பேரின் நேர்காணல் வாயிலாக விளக்குகிறேன்.

யொஷிகோ யுகினகா (Yoshiko Yukinaga)

மாய்நிச்சி ஷிம்புன் என்ற தினசரியில் சாலை விபத்துகளைப் பற்றித் தகவல் வெளியிடும் நிருபராக வேலை. மிகுந்த தன்னம்பிக்கையும் புதிய விஷயங்களைக் கற்கும் ஆர்வமும் நிரம்பியவர். ஏற்கனவே கீழ்மலையும் பொற்கோயிலும் கட்டுரையில் இவரது இந்தியப் பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். அப்பயணத்திட்டம் தயாரிக்கும்போதுதான் எனக்கு அறிமுகமானார். எத்தனை பேர் செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, 'தனியாகத்தான்' என்றார். அப்படியே ஆடிப்போய்விட்டேன். நம் ஊரிலேயே பிறந்து வளர்ந்து நன்றாகத் தமிழ் பேசிச் சமாளிக்கக்கூடிய பெண்களையே தனியாகச் சென்னைக்கு அனுப்பப் பெற்றோர் பயப்படுவார்கள். முன்பின் பார்த்திராத ஊருக்கு, அரைகுறைத் தமிழை வைத்துக்கொண்டு, அதுவும் ஆபத்துத் தருணங்களில் உதவுமா என்பது பற்றிய கவலையில்லாமல், இந்தப்பெண் தனியாகச் செல்வதாகச் சொல்கிறாரே என்று அடிவயிற்றைப் பயம் கவ்வியது. இருப்பினும், அவரது முயற்சியை அதைரியப்படுத்தாமல், சென்னையில் அவரது தோழியும், பாண்டிச்சேரியில் நண்பர் 'திலகா' சுப்ரமணியம் வீட்டிலும் பார்த்துக் கொள்வார்கள் என்று உறுதிப்படுத்திக்கொண்டு, திருச்சியில் திரு.சேஷாத்ரியிடமும் (கோகுல் அப்பா) குடந்தையில் திரு.சீதாராமனிடமும் தகவல் தெரிவித்துக் கவனித்துக் கொள்ளுமாறு செய்துவிட்டு, பயணத்திட்டம் வகுத்துக் கொடுத்தேன். அதற்கு முன்பும் பின்பும் நடந்தவற்றை இதோ அவரே கூறுகிறார்.கமல் : வணக்கம். உங்களுக்குத் தமிழ்நாட்டுக்குப் பயணம் செல்லவேண்டும் என்று எப்படித் தோன்றியது?

யொஷிகோ : எனக்குத் தமிழ்மொழி மீது மிகுந்த ஆர்வம் உண்டு. தமிழர்கள் பழகுவதற்கு மிக இனிமையானவர்கள். ஜப்பானியர்களைப் போலவே, உபசரிப்பதிலும் விருந்தோம்பலிலும் அக்கறை உள்ளவர்கள். முன்பு இலங்கையில் இருந்தபோது, தமிழ்நாட்டையும் அங்குள்ள கோயில்களையும் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றைக் காணவேண்டும் என்று நெடுநாட்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். மார்ச் 2006ல்தான் வாய்ப்பு கிடைத்தது.

கமல் : இலங்கையில் இருந்திருக்கிறீர்களா? எங்கே, எப்போது என்று விளக்கமாகக் கூறுங்கள்.

யொஷிகோ : ஓஸகா பல்கலையில் நான் பட்டம் பெற்றது சர்வதேச உறவுகள் (International Relationships) என்ற துறையில். அதன் ஒரு பகுதியாக, 2004 மார்ச் மாதத்திலிருந்து 1 வருடம் கிளிநொச்சியில் தங்கி, AMDA என்ற சேவை நிறுவனத்தின் மூலமாக, போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவச் சிகிச்சையளிக்கும் சேவையில் ஈடுபட்டிருந்தேன். நடமாடும் மருத்துவமனையில் இருந்ததால், பாதிக்கப்படாத பிற மக்களுடனும் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது தமிழைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் நிறையத் தெரிந்து கொண்டேன்.


யொஷிகோ (தொப்பியுடன்) - கிளிநொச்சி - இலங்கை


கமல் : அப்போதுதான் தமிழ் படித்தீர்களா?

யொஷிகோ : ஆமாம். பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் தாய்மொழியில்தான் முழுமையாக வெளிப்படும். எனவே, எனக்குத் தமிழ் தெரிந்திருந்தால், நோயாளிகளுடன் இன்னும் சற்று நெருக்கமாகப் பழகி, அவர்களது பிரச்சினைகளை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும் என்று முடிவு செய்து, தமிழ் கற்க ஆரம்பித்தேன். இருப்பினும், சிரமமான பணிச்சூழலுக்கிடையில், அவ்வளவாகக் கற்கமுடியவில்லை. ஆனால், கற்றுக் கொள்வதற்குச் சுலபமாகவும், சுவாரசியமாகவும் இருந்ததால், ஓஸகா திரும்பிய பிறகும் தொடர்ந்து கற்றுக்கொள்ள விழைந்தேன்.

கமல் : ஓஸகாவில் எப்படித் தமிழ் கற்றீர்கள்?

யொஷிகோ : ஓஸகாவில் ஆசியத் தன்னார்வ மையத்தின் கலாச்சாரப் பயிற்சிக்கூடம் ஒன்று உள்ளது. பணி நிமித்தமாக ஒருநாள் அங்கு சென்றபோது, திரு. சுப்ரமணியம் என்பவர் தமிழ் வகுப்புகள் எடுப்பது பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே சேர்ந்து விட்டேன். அப்போது முதுநிலை கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்ததாலும், வேலை தேடிக் கொண்டிருந்ததாலும், வகுப்புகளுக்குச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டேன். இருப்பினும், இதுபோல் இன்னொரு வாய்ப்பு கிடைப்பது அரிது என்பதால், தொடர்ந்து கற்று வந்தேன்.

கமல் : நீங்கள் கற்றுக்கொண்ட தமிழ் தமிழ்நாட்டுக்குச் சென்றபோது எந்த வகையில் உதவியது?

யொஷிகோ : பேருந்து வழித்தடங்களை யாருடைய உதவியுமின்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. தமிழ்நாட்டில் இருந்தவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும், நான் பேசும்போது, தெரியாமல் ஏதாவது பேசி, அதைத் தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்று தயங்கி, பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினேன்.

கமல் : தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களுக்குச் சென்றீர்கள்?

யொஷிகோ : முதலில் சென்னை. பிறகு அங்கிருந்து பாண்டிச்சேரி சென்று திரு. சுப்ரமணியம் வீட்டில் 2 நாட்கள் தங்கி இருந்துவிட்டு, தஞ்சாவூர் சென்றேன். அங்கே திரு. சீதாராமன் பெரிய கோயிலைச் சுற்றிக்காட்டி உதவினார். பிறகு மதுரை மற்றும் கன்னியாகுமரியில் தங்குமிடமும் போக்குவரத்தும் ஏற்பாடு செய்து கொடுத்தார். இடையில் திருச்சி வந்தபோது, திரு. சேஷாத்ரி அவர்களின் வீட்டிற்குச் சென்றேன். அவரும் அவரது மனைவியும் என்னைக் கனிவுடன் உபசரித்து, அந்த நாளை மறக்கமுடியாமல் செய்து விட்டார்கள். பிறகு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். பல்வேறு இந்தியப் புராணக் கதைகளைச் சொன்னார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கமல் : நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தபோது நடந்த மறக்கமுடியாத சம்பவங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

யொஷிகோ : எனக்கு விஜய் படங்களை மிகவும் பிடிக்கும். இதைப்பற்றி, சீதாராமனிடம் தஞ்சாவூரில் சொல்லிக் கொண்டிருந்தேன். பிறகு என்னைத் திருச்சி கொண்டு வந்து விடும்போது, 'ஆதி' படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கிற்குள் நுழைந்தவுடன் ஆச்சரியப்பட்டுப் போனேன். படம் வெளியான சில நாட்களிலேயே அதைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. அதேபோல், திரு. சேஷாத்ரி அவர்களின் வீட்டில் ஊஞ்சல் ஆடியதும் மறக்க முடியாதது.

கமல் : நீங்கள் பார்க்க விரும்பியதையெல்லாம் பார்த்து விட்டீர்களா? அல்லது அடுத்தமுறை போகும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று எதையாவது விட்டு விட்டீர்களா?

யொஷிகோ : அப்படி எதுவும் விடவில்லை. நீங்கள் சொன்ன எல்லா இடங்களையும் பார்த்து விட்டேன். அடுத்த முறை செல்லும்போது நடிகர் விஜய்யைச் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்குள் நன்றாகத் தமிழ் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என முயற்சி செய்கிறேன்.

கமல் : பேட்டிக்கு நன்றி யொஷிகோ. வாழ்த்துக்கள்.

ஒருவழியாகப் பயணத்தை நல்லபடியாக முடித்துக்கொண்டு வந்த பிறகுதான், வயிற்றில் கட்டி வைத்திருந்த நெருப்பை இறக்கி வைக்க முடிந்தது. இவரது தந்தை புத்தமதத்தின் குருமார்களில் ஒருவர் என்பதால், இயல்பிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு, கலாச்சாரம் தொடர்பான விஷயங்களை ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறார்.

இவர் விஜய் ரசிகை என்றால், அடுத்து வருபவர் ரஜினி ரசிகர். வெறும் ரசிகர் மட்டுமல்ல. 400 ஜப்பானியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஓஸகா ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவரும் கூட. இவருக்கு எப்படித் தமிழின் மீது ஆர்வம் வந்தது? இவரைப் பற்றியும் அதே கட்டுரையில் குறிப்பிட்டிருந்தாலும், இன்னும் பல வியக்கவைக்கும் தகவல்களுடன் அவரது பேட்டி!

யசுதா டெட்சுனோசுகே (Yasuda Tetsunosuke)கமல் : வணக்கம். உங்களுக்கு ரஜினியைப் பற்றி எப்படித் தெரிந்தது?

யசுதா : டோக்கியோவில், Nihon Skyway என்ற வீடியோ நிறுவனம் ஆசியத் திரைப்படங்களை ஜப்பானில் அறிமுகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதில் திரு. எடோக்கி (Edoki) என்பவர் முதல் தமிழ்ப்படமாக முத்துவை அறிமுகப்படுத்தினார். ஜப்பானியர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றாக ஓடியதால், பிறகு மணிரத்னத்தின் ரோஜா, இருவர், பம்பாய் மற்றும் ஷங்கரின் ஜீன்ஸ் ஆகிய படங்களையும் ஜப்பானிய சப்டைட்டிலுடன் வெளியிட்டது. ஆனால் அவை முத்து அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. ஸ்டைலால் ரஜினியும், கண்ணழகால் மீனாவும் பிரபலமாகி விட்டார்கள். ரஜினிக்கு Dancing Maharaja என்ற பட்டமும் கிடைத்தது.

கமல் : ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் எண்ணம் எப்படி வந்தது?

யசுதா : முதலில் ஓஸகாவில் ரசிகர் மன்றம் இல்லை. டோக்கியோவில் இருந்தது. அதில் இரு விதமான ரசிகர்கள் இருந்தனர். ரஜினியின் காமெடியை ரசிப்பவர்களும், சண்டைக்காட்சிகளை ரசிப்பவர்களும் இருந்து வந்தார்கள். பின்னர் அவர்களுக்குள் காமெடி சிறந்ததா, ஆக்ஷன் சிறந்ததா என்ற கருத்து வேறுபாட்டில், இரண்டாகப் பிரிந்து விட்டார்கள். எஜமான் படத்தை வெளியிடும்போது, இரு பிரிவினருக்கும் மோதல் முற்றி, திரையரங்குகளிலும் வீடியோவிலும் ஒரே சமயத்தில் வெளியிட்டு, குழப்பம் ஏற்பட்டு விட்டது. இதனால் அம்மன்றம் கலைக்கப்பட்டு, ஓஸகாவில் என் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.கமல் : ஓஸகாவில் ஆரம்பித்தபின் என்னென்ன விஷயங்கள் செய்தீர்கள்?

யசுதா : ஆரம்பித்தபின் 2000ம் ஆண்டு படையப்பாவை வெளியிட்டோம். அப்போது ரசிகர் மன்றத்தினர் அனைவரும் சேர்ந்து, ஒருநாள் வாடகைக்கு ரயிலை எடுத்து, அதற்கு ரஜினி ரயில் என்று பெயர் சூட்டி, ஓஸகாவிலிருந்து திரையரங்குவரை ஓட்டினோம். இதனால் ரஜினியின் புகழ் இன்னும் பலரைச் சென்றடைந்தது. ஜப்பான் தொலைக்காட்சிகளிலும் இந்நிகழ்ச்சி காட்டப்பட்டது.கமல் : ரஜினியை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?

யசுதா : ஆமாம். மூன்று தடவைகள் சென்னை சென்றிருந்தாலும், ஒரேயொரு தடவைதான் சந்திக்க முடிந்தது. நேரில் சந்தித்தபோது கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஒரே பிரமிப்பாக இருந்தது. திரையில் தோன்றிப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டவர், இவ்வளவு எளிமையாக இருந்ததைக் கண்டு வியந்துபோனோம். அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டு, ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டோம். ரஜினி ரயில் தொடர்பான புகைப்படங்களைக் காட்டிவிட்டு, ரஜினியுடன் பேசவேண்டும் என்பதற்காகத்தான் தமிழ் படித்தோம் என்று சொன்னோம். அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்கு ஜப்பான் வாருங்கள் எனக் கூறிவிட்டுக் கிளம்பி விட்டோம். அப்போது பாமக பிரச்சினை இருந்ததால், அவராலும் அவ்வளவாக நேரம் செலவிட முடியவில்லை.கமல் : மீண்டும் சந்திக்க முயற்சி செய்தீர்களா?

யசுதா : சந்திரமுகி வெளியானபோது சென்னை சென்றிருந்தோம். ஆனால் சந்திக்க முடியவில்லை. சந்திரமுகியின் முதல்நாள் முதல்காட்சி பார்த்தோம். சென்னை ரசிகர்கள் அதை ஒரு திருவிழா போல் கொண்டாடியதைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டோம். ஜப்பானில் திரையரங்குகளில் படத்தில் வரும் சத்தத்தைத் தவிர வேறு எந்தச் சத்தமும் இருக்காது. மிகவும் அமைதியாகப் பார்ப்பார்கள். நகைச்சுவைக் காட்சிகளில் கூட அடுத்தவருக்குத் தொந்தரவாக இருக்குமே என்று, வாய்விட்டுச் சிரிக்க மாட்டார்கள். ஆனால், ரஜினி படத்தை ஆரவாரத்துடன் பார்க்க வேண்டும் என்று விரும்பி, ஓஸகா ரசிகர்களுக்காகத் தனிக்காட்சி திரையிட்டுக் கொண்டு, அரங்குக்குள் பட்டாசுகள் கூட வெடிப்பதுண்டு.கமல் : சுனாமியின்போதுகூட உங்கள் மன்றத்திலிருந்து உதவியதாக நண்பர் ரஜினிராம்கி மூலமாக அறிந்தேன். அதைப்பற்றிக் கூறுங்களேன்.

யசுதா : ஆமாம். உங்களுக்கே தெரியும். உலகிலேயே சுனாமியால் அதிகம் பாதிக்கப்படும் நாடு ஜப்பான்தான். அதன் பாதிப்பை முழுமையாக உணர்ந்தவர்கள் நாங்கள். அதனால், இந்தியச் சகோதரர்கள் எத்தகைய பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள் என்று முழுமையாக உணர்ந்து கொண்டோம். ரசிகர் மன்றத்தினர் அனைவரும் சேர்ந்து நிதி திரட்டி, சுமார் 1 இலட்சம் யென் (35000 ரூபாய்) அளித்தோம். இந்திய அரசு வெளிநாட்டினரிடமிருந்து எந்த உதவியையும் பெற மறுத்ததால், சென்னைக் கிளை மன்றத்தின் மூலமாக இந்த நன்கொடையை அளித்தோம்.

கமல் : தக்க நேரத்தில் உதவியதற்கு நன்றி. வேறு என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?

யசுதா : அடுத்து சிவாஜி திரைப்படம் வெளியாகும்போதும் சென்னை சென்று, முதல் நாள் முதல் காட்சி பார்க்கத் திட்டமிட்டிருக்கிறோம். இனிமேல் வெளியாகும் ரஜினி படங்களை அதேநாளில் ஜப்பானிலும் வெளியிட ஏற்பாடு செய்யுமாறு சென்னை செல்லும்போது விநியோகஸ்தர்களிடம் கேட்க இருக்கிறோம்.

கமல் : தமிழில் ஓரளவுக்கு நன்றாகவே பேசுகிறீர்கள். நான் பேசுவதைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்?

யசுதா : ஆசியத் தன்னார்வ மையத்தின் கலாச்சாரப் பயிற்சிக்கூடத்தில் திரு. சுப்ரமணியம் அவர்களிடம்தான் கற்றுக் கொண்டேன். அந்த வகுப்புகள் முடிவடைந்தபிறகு, திரைப்படங்களில் வரும் பெயர்களை எழுத்துக்கூட்டிப் படித்து, வாசிக்கும் திறனை வளர்த்துக் கொண்டேன். சென்னையில் இருக்கும் திருமதி. கல்பனா அவர்கள் ஜப்பானிய மொழி மூலம் தமிழ் கற்க ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்கள். அதுவும் மிக உபயோகமாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கே சந்தித்தவர்கள் பேசிய தமிழை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசுவதால், சற்று சிரமமாக இருந்தது.

கமல் : ஆமாம். சென்னையிலிருந்தபோது, முதன்முதலில் திருமதி கல்பனாவிடம்தான் நான் ஜப்பானிய மொழி பயின்றேன். தமிழ் மூலமாக ஜப்பானிய மொழி கற்கவும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்கள். தமிழ் தொடர்பாக வேறு என்னென்ன முயற்சிகள் செய்கிறீர்கள்?

யசுதா : கவிஞர் வைரமுத்து அவர்கள் ஓஸகா வந்திருந்தபோது, அவரைச் சந்தித்து உரையாடியது மறக்க முடியாதது. ரஜினிக்கு அவர் எழுதிய பாடல்களின் பொருளை விளக்கிக் கூறினார். பிறகு அவற்றை நினைவில் இருத்திக் கொள்ள மிகவும் எளிதாக இருந்தது. இந்தியா என்றால், மசாலா உணவுவகைகள்தான் என்று பெரும்பாலான ஜப்பானியர்கள் தவறாக எண்ணியிருக்கிறார்கள். அவர்களுக்கு மசாலாவைத் தவிரவும் தமிழ்நாட்டுக்கு நிறையச் சிறப்புகள் இருக்கின்றன என்று எடுத்துக்கூறி வருகிறோம்.கமல் : நாங்கள் செய்ய வேண்டிய பணியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. போனவாரம் பேசிக்கொண்டிருந்தபோது, திருமாவளவன் அதிமுகவில் இணைந்ததைப் பற்றிக்கூடக் கேட்டீர்கள். ரஜினியோடு நின்றுவிடாமல், தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற விஷயங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்கிறீர்கள். இத்தகைய ஆர்வத்தைக் கண்டு மிகவும் மகிழ்கிறேன். தமிழ் செய்தித்தாள்களைப் படிப்பீர்களா?

யசுதா : ஆமாம். நாள்தோறும் தினத்தந்தியைப் படிப்பதும் தமிழை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கிறது. அதுபோக, AnyTamil.com, IndiaNews.com, The Hindu ஆகிய இணையத் தளங்களிலிருந்தும் தகவல்களைத் தெரிந்து கொள்கிறேன். மேலும், இங்கிருக்கும் தமிழர்களிடம் பேசும்போதும் சில விஷயங்களைத் தெரிந்து கொள்கிறேன்.

கமல் : தமிழ், தமிழ்நாடு மற்றும் தமிழர்களிடம் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பிற்கு நன்றி யசுதா. தொடரட்டும் உங்கள் பணி.

இவர் உண்மையிலேயே வித்தியாசமானவர்தான். வருடம் முழுவதும் இவரும் இவரது மனைவியும் சேர்த்து வைக்கும் பணத்தில் பாதியை இந்தியா வந்து போவதற்காகச் செலவிடுகிறார்கள். இவர் இப்படியென்றால், அடுத்துச் சந்திக்க இருப்பவர் இன்னும் வித்தியாசமானவர். தன் வாழ்க்கையையே பரதநாட்டியத்திற்காக அர்ப்பணித்தவர்.

மயூரி யுகிகோ (Mayuri Yukiko)

'மயூரி' என்ற பட்டம் பெயரளவில் மட்டுமல்ல என்று இவரது நடனத்தைக் காண்பவர்கள் ஒத்துக்கொள்வார்கள். சென்னை சென்று நாட்டியம் கற்று வந்த பிறகும் திருமணமே செய்துகொள்ளாமல், பரதத்துக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்து, மற்ற ஜப்பானியப் பெண்களுக்கும் கற்றுத் தருகிறார். கடல்மல்லை ஜப்பானிலிருந்தால் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த தொமிகோ அவர்கள்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் இவரது பேட்டி இதோ!கமல் : வணக்கம். பரதநாட்டியத்தின்மீது உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது?

யுகிகோ : பல்கலை மாணவியாக இருந்தபோது, மேற்கத்திய நடனங்களான பாலே போன்ற நடனங்களைப் பயின்று பயிற்சி செய்து வந்தேன். 1993ம் ஆண்டு ஒருமுறை சுற்றுலாவுக்காகக் கல்கத்தா சென்றிருந்தபோது, இந்தியப் பாரம்பரிய நடனத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அதிலிருந்த அபிநயங்கள் சற்றுப் புதுமையாகவும், சிறிது சிரமமாகவும் இருந்தன. ஆனால் மிகவும் பிடித்திருந்தன. ஆகவே, அதைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. ஆனால் அதற்குள் பயணம் முடிந்துவிட்டதால், ஓஸகா திரும்ப வேண்டியதாயிற்று.கமல் : பிறகு எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்?

யுகிகோ : பரதநாட்டியம் கற்றுக்கொள்ளச் சிறந்த இடம் சென்னைதான் என்று கேள்விப்பட்டு, சென்னை சென்றேன். அப்போதுதான் சென்னைக்கு முதல்முறையாகச் செல்வதால், ஆரம்பத்தில் சற்று கஷ்டமாக இருந்தது. சென்னையில் ஒரு இளம்பெண் தனியாகத் தங்கியிருப்பது ஆபத்தான விஷயம் என்று கூறினார்கள். ஆனால் எனக்குப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. அது 1998ம் வருடம். திருவல்லிக்கேணியில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்து, நாட்டியப்பள்ளிகளைத் தேடிக்கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்த கொஞ்சநஞ்ச ஆங்கிலமும் அவ்வளவாக உதவவில்லை.கமல் : அப்படியானால், எப்படி நாட்டியப்பள்ளியைக் கண்டறிந்தீர்கள்?

யுகிகோ : அது சற்று வித்தியாசமான முயற்சி. முதலில் தி.நகர் குமரன் சில்க்ஸ் துணிக்கடைக்குச் சென்றேன். அங்கு பரதநாட்டிய உடை விற்கும் பகுதிக்குச் சென்று உடைகளை வாங்கிக்கொண்டு, அவற்றைத் தைக்கும் தையலகங்களின் முகவரிகளை வாங்கிக் கொண்டேன். பின்னர் ஒவ்வொரு தையலகமாகச் சென்று, அங்கே இதுவரை பரதநாட்டிய உடைகளைத் தைத்தவர்களின் முகவரிகளைச் சேகரித்துக் கொண்டேன். அவர்களை ஒவ்வொருவராகத் தொடர்புகொண்டு, நாட்டியப்பள்ளிகள் குறித்து விசாரிக்கத் தொடங்கினேன். பெரும்பாலானவர்கள் கூறிய பதில் 'கலாக்ஷேத்ரா'.கமல் : ஓ! நீங்கள் கலாக்ஷேத்ராவின் மாணவியா?

யுகிகோ : அந்த அளவுக்கு எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. முதலில் கலாக்ஷேத்ராவுக்குச் சென்று விண்ணப்பித்தேன். ஆனால், அங்கே 20 வயதுக்கு உட்பட்டவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்வார்கள் என்று கேட்டு வருந்தினேன். அதிர்ஷ்டவசமாக, அங்கே பணிபுரிந்த யசோதா என்ற ஆசிரியை, தனது ஓய்வு நேரங்களில் வீட்டில் பரதம் சொல்லித் தருவதாகக் கூறி, அவர்கள் வீட்டிலேயே தங்கிக்கொள்ள அனுமதியும் தந்தார்கள். திருவல்லிக்கேணியிலிருந்து அடையாறுக்கு மாறினேன்.கமல் : சென்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு காலம் சென்னையில் இருந்தீர்கள்?

யுகிகோ : சுமார் 2 வருடங்கள் இருந்தேன். சென்னையில் பெரும்பாலான இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். அப்போது சங்கீத வித்வத் சபை, நாரதகான சபா, வாணிமஹால் முதலிய இடங்களில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிகளைத் தவறாமல் சென்று பார்ப்பேன். ஷோபனாவின் நாடகத்தை மிகவும் விரும்பி ரசித்திருக்கிறேன். பரதநாட்டியம் தொடர்பான தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்க விரும்பினேன். ஆனால், அவ்வளவாகக் கிடைக்கவில்லை. என் ஆசிரியை வைத்திருந்த சில வீடியோக்களை மட்டுமே பார்க்க முடிந்தது.

கமல் : உங்களின் அரங்கேற்றம் எங்கே எப்போது நடந்தது?

யுகிகோ : 2003ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி மியூசிக் அகடமியில் மினிஹாலில்தான் எனது அரங்கேற்றம் நடந்தது. கலாக்ஷேத்ராவின் ஆசிரியர்களும் வந்திருந்தார்கள். பத்திரிகைகளும் பாராட்டி எழுதின. திரு.தனஞ்செயன் அவர்கள் வந்திருந்து வாழ்த்தியது மனதுக்கு மிகுந்த நிறைவைத் தந்தது. அந்த நினைவுகள் இன்றும் பசுமையாக இருக்கின்றன. பிறகு சில மாதங்கள் தங்கியிருந்து விட்டு, ஓஸகா திரும்பி விட்டேன்.

கமல் : ஓஸகா வந்தபிறகு எப்படி பரதத்தைத் தொடர்கிறீர்கள்?

யுகிகோ : வீட்டில் ஓய்வு நேரங்களில் பயிற்சி செய்து வந்தேன். பிறகு ஜப்பானில் நடைபெற்ற இந்திய விழாக்களில் பங்குபெற்று வந்தேன். நண்பர்களின் இல்ல விசேஷங்களில் ஆடினேன். அவ்வப்போது நராவில் புத்தர் கோயில்களிலும் ஆடுவதுண்டு. சில மாதங்களுக்கு முன்பு நானே சொந்தமாக நராவில் ஒரு நாட்டியப்பள்ளியைத் துவக்கினேன். அடுத்த மாதம் கோபேயில் இன்னொரு பள்ளியைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

கமல் : பரதம் கற்றுக்கொள்ள ஜப்பானியர்கள் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகிறார்கள்?

யுகிகோ : ஜப்பானில் நாட்டியம் கற்றுக்கொள்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பரதநாட்டியம் பற்றித் தெரிவதில்லை. மேற்கத்திய நடனங்கள் அளவுக்கு பிரபலம் இல்லை. இருப்பினும், பரதத்தின் சிறப்புகளை எடுத்துக்கூறினால், ஈர்க்கப்பட்டு, ஆர்வம் கொண்டு கற்கத் தொடங்கி விடுகிறார்கள். எனவே, பரதத்தைப் பற்றி முடிந்தவரையில் ஜப்பானியர்களிடம் எடுத்துக் கூறிவருகிறேன்.

கமல் : இந்தியாவில் அல்லது ஜப்பானில் நடைபெறும் நாட்டியவிழாக்களில் ஏதாவது பங்கு பெற்றிருக்கிறீர்களா?

யுகிகோ : மாமல்லபுரத்திலும் சிதம்பரத்திலும் நாட்டியாஞ்சலியில் நடனமாடி இருக்கிறேன். ஜப்பானில் பெரிய விழாக்களில் பங்கு பெற்றதில்லை என்றாலும், சிறு விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், நராவில் நடைபெற்ற புத்தர் கோயில் திருவிழாவின்போது, தொடர்ந்து 2 மணிநேரங்கள் ஆடியது பலரது கவனத்தை ஈர்த்தது. இதுபோன்ற விழாக்கள் இன்னும் பலருக்குப் பரதத்தைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

கமல் : பாரதத்தின் பாரம்பரியக் கலையின்மீது தாங்கள் வைத்திருக்கும் பற்றுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்ததைப் போல, அயல்நாட்டில் வாழும்போது, தாய்நாட்டை நினைவுபடுத்தும் சிறு விஷயங்கள் கூட மனதை நெகிழச் செய்யும். அதிலும் இவர்களைப் போல இந்தியக் கலை மற்றும் மொழியின் மீது பற்றுக் கொண்டவர்களைச் சந்திக்கும்போது, இன்பம் இருமடங்காகிறது. இவர்களைப் பாராட்டி, ஊக்குவிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. நம் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பாரம்பரியங்களையும் நமது மக்களிலேயே பெரும்பான்மையோர் உணராத நிலையில், எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த இவர்கள் பற்றிக்கொண்டு போற்றுவது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம். நம் கலாச்சாரத்தின் வேர்களைத் தேசம் தாண்டிய அடுத்த தலைமுறைக்கும் பரவச் செய்வதில் இவர்கள் போன்றவர்களின் முயற்சிகள் நம் அனைவரின் நன்றிக்கும் உரியது. எப்போதும் கைக்கருகில் இருக்கும் ஒரு பொருளின் அருமை அது கையை விட்டுப் போன பின்னர்தான் தெரியவரும் என்பதுபோல, வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் நாம் தொலைத்த பெருமைகளைப் போல் இப்போது இருப்பனவற்றையும் விட்டு விடாமல், நாம் வாழும்போதே அக்கலைகளையும் வாழ வைப்போமாக!
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.