http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 31

இதழ் 31
[ ஜனவரி 16 - பிப்ரவரி 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

தமிழிசை தழைக்க...
திரும்பிப் பார்க்கிறோம் - 3
அரளிப்பட்டிக் குடைவரை
சோழதேசத்தில் ஒரு சேரர் கோயில் - 1
சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம் - 1
சங்கச்சாரல் - 14
இதழ் எண். 31 > கலைக்கோவன் பக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 3
இரா. கலைக்கோவன்

அன்புள்ள வாருணி, 'இலக்கிய இளவல்' நான்காண்டுகள் பயின்று பெறும் பட்டம். இதில் இலக்கியத் தாள்கள் ஆறும் இலக்கணத் தாள்கள் ஆறும் மொழித் தொடர்புடைய பிற தாள்கள் ஆறும் எனப் பதினெட்டுப் பாடங்கள் பயிலவேண்டும். 1980ல் 'இலக்கிய இளவல்' படிப்பில் சேர்ந்தேன். அக்டோபர் 1981ல் முதலாண்டுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இலக்கியம் இரண்டு தாள்களும் இலக்கணம் ஒரு தாளும் தமிழ்நாட்டு வரலாறு ஒரு தாளும் இருந்தன. இலக்கியமும் வரலாறும் எளிமையாக இருந்தன. இலக்கணம்தான், தொடர்பற்றுப் போனமையால் சற்று ஆழ்ந்து படிக்க வேண்டியதாயிற்று. புலவர் பெரிதும் இருந்து ஊக்கினார். நிறைய ஐயங்கள் எழுந்தன. எல்லாவற்றிற்கும் அவரிடமிருந்து விடைபெறக் கூடவில்லை. பேராசிரியர் இராம. சண்முகம் அது போன்ற நிலைகளில் விரிவாகப் பேசி வழிப்படுத்தினார்.

இலக்கணம் பயிலும் முறைகள், நினைவுகொள்ளும் விதம், தொடர்புபடுத்திப் பொருள் காணும் வழி என அனைத்தும் அவரிடம் விவாதித்துக் கற்றவையே. இந்தக் கலந்துரைகள்தான் இலக்கணம் முதல் தாளில் 82 மதிப்பெண்கள் பெற்றுத்தந்தன. தமிழக வரலாறு தாளில் 75. இலக்கியம் இரண்டாம் தாளிலும் 75. முதல் தாளில்தான் மதிப்பெண் குறைந்து போயிற்று. நன்றாக எழுதியிருந்தும் 58தான் கிடைத்தது.

1975ல் கண்மருத்துவப் படிப்பு முடித்திருந்ததால், 1980ல் படிப்பதோ, தேர்வெழுதுவதோ துன்பம் தருவதாக இல்லை. ஆனால், தேர்வுக் கூடத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை. மருத்துவத் தேர்வுகள் எழுதியபோது உடன் எழுதியவர்கள் அனைவரும் மருத்துவ மாணவர்கள். கண் மருத்துவத் தேர்வின்போது உடன் எழுதியவர்கள் அனைவரும் மருத்துவர்கள். இப்போதோ, நான் ஒருவன் மட்டுமே மருத்துவன். மற்றவர்கள் அனைவரும் ஆசிரியர்கள். பல்வேறு பள்ளிகளில் பணியாற்றிய அப்பெருமக்களுள் இளையவர்களும் இருந்தனர். வயதானவர்களும் இருந்தனர்.

முதலாண்டுத் தேர்வுகள் சிராப்பள்ளியில் பழைமை வாய்ந்த ஒரு கல்லூரியில் நிகழ்ந்தன. என் அறைத் தேர்வுக் கண்காணிப்பாளர் அக்கல்லூரிப் பேராசிரியர். அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார். அருகே வந்து வியப்புடன் பார்த்தவாறே, 'டாக்டர், நீங்கள் எங்கே இங்கே?' என்று கேட்டார். இலக்கிய இளவல் படிப்பதாகவும் முதலாண்டுத் தேர்விற்கு வந்திருப்பதாகவும் கூறியதும் அதிர்ந்தார். அதற்குள் தேர்வுத் தொடங்குவதற்கான மணி அடித்துவிட்டது. அவர் கேள்வித்தாள்களைத் தந்தார். நான் எழுதத் தொடங்கினேன். தேர்வெழுதி முடிப்பதற்குள் அனேகமாக அந்தச் சுற்றிலிருந்த அத்தனை அறைக் கண்காணிப்பாளர்களும் ஓர் அதிசயப் பொருளைப் பார்ப்பது போல் வந்து பார்த்துப் போயினர். அன்றைக்கு நான் ஒரு காட்சிப் பொருளானேன்.

என் இருக்கைக்குப் பின்னிருக்கையில் இருந்து தேர்வெழுதியவர் வயது முதிர்ந்த ஆசிரியர். அடிக்கடி ஐயங்கள் கேட்டபடி இருந்தார். எனக்குச் சொல்வதா, கூடாதா என்ற குழப்பம். எங்கள் மருத்துவத் தேர்வுகளில் இதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு கண்காணிப்பாளர் இருப்பார். யாரும் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பமுடியாது. பேசுவது என்பது கொலைக் குற்றம் போல் கருதப்பட்டது. ஆனால், இங்கே பலரும் மிக எளிதாகப் பேசிக்கொண்டனர். சில ஆசிரியர்கள் மடியில் புத்தகமோ குறிப்பேடுகளோ இருந்தமையைப் பார்க்கமுடிந்தது. என் இடப்புறம் இருந்து எழுதியவர் குறிப்பேடு வைத்திருந்தும் அதில் விடையைக் கண்டறிய முடியாது திணறிக்கொண்டிருந்தார். சுருக்கமாகச் சொல்வதானால் அது தேர்வுக் கூடமாகவே இல்லை. என் பின்னிருந்தவர் பலமுறை கேட்டுத் தளர்ந்து போனார். தேர்வு முடித்து வெளியில் வந்ததும், 'உதவியிருக்கலாமே' என்று கேட்டபடி அருகில் வந்தார். என் நிலைமையை விளக்கியதும் புரிந்துகொண்டு, 'பொறுத்தாற்றிக் கொள்ளுமாறு வேண்டினார். இரண்டாம் நாள் அவர் ஏதும் கேட்கவில்லை. மூன்றாம் நாள் இலக்கணத் தேர்வுக்கு அவரும் மடியில் புத்தகம் வைத்திருந்தார். அன்று வந்த கண்காணிப்பாளர் சற்றுக் கடுமையானவர். அவர் தொடக்கத்திலேயே, 'நீங்கள் எல்லாம் ஆசிரியர்கள். அதனால் கையில், பையில், மடியில் ஏதேனும் இருந்தால் கொடுத்துவிடுங்கள். பிடித்துவிட்டால் மூன்றாண்டுகள் தேர்வெழுத முடியாது' என்று எச்சரிக்கை செய்தார். பலர் புத்தகங்களை அறைக்கு வெளியில் வைத்து வந்தனர். என் பின்னால் இருந்த வயதானவர் துணிந்தவர் போலும்! புத்தகத்தைத் தம்மிடமே வைத்துக்கொண்டார். நான் எழுதிக்கொண்டிருந்தபோது அடிக்கடி அவருடைய குரல் ஒலித்தது. புத்தகம் வைத்திருந்தும் பயன்படுத்தத் தெரியவில்லை போலும்! அன்று அவர் என்ன எழுதினாரோ! அந்தக் கடவுளுக்கும் அவருக்கும்தான் வெளிச்சம். முதலாண்டுத் தேர்வுகள், 'அனைத்து விதங்களிலும் ஆசிரியர்களும் மாணவர்களே' என்ற பேருண்மையை எனக்குப் புலப்படுத்தின.

மாடக்கோயில்கள் ஆய்வில் கிடைத்த அனுபவங்கள் அனைத்துமே மறக்கமுடியாதவைதான். எனினும், ஆக்கூரும் தலைச்சங்காடும் சிறப்பாகக் குறிக்கத்தக்க நினைவுகள் விளைவித்த இடங்களாகும். மயிலாடுதுறை தரங்கம்பாடி வழியில் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆக்கூர். இவ்வூரிலுள்ள திருக்கோயில், 'அழகிய தான்தோன்றி மாடம்' என்று கல்வெட்டுகள் குறிப்பதால் அங்குச் சென்றோம். திரு. வைத்திய நாத சிவாச்சாரியார் பரிவுடன் வரவேற்றார். கோயிலைச் சுற்றிக் காண்பித்தார். மாடக்கோயில் ஆய்வின் முதற்கட்ட நிலையிலேயே ஆக்கூர் அமைந்துவிட்டதால், அப்போதிருந்த தெளிவற்ற கண்ணோட்டத்தில் அக்கோயில் விமானத்தை மாடக்கோயில் அமைப்பாகவே கருதிக்கொண்டேன். மாடக்கோயில் ஆய்வு முற்றுப்பெற்ற நிலையில்தான், தெளிவான வரையறைகளைப் பெறமுடிந்தது. ஆக்கூர் தான்தோன்றி மாடத்தின் தற்போதைய கட்டுமானம் மாடக்கோயில் அமைப்புடையதன்று என்பதை உணர்ந்தேன். இக்கோயில் பற்றிய கட்டுரை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான 'தமிழ்ப்பொழில்' இதழில் (1983 ஜனவரி/பிப்ரவரி), 'ஆயிரத்தில் ஒருவருக்காய் அமைந்த தான்தோன்றி மாடம்' என்ற தலைப்பில் வெளியானது.

கல்வெட்டுகள் ஒன்று போல் இக்கோயில் இறைவனைத் தான் தோன்றி மாடமுடையார் என்றழைப்பது நோக்க, அறுபத்து மூவருள் ஒருவரான சிறப்புவி நாயனாருடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இக்கோயிலின் பழைய கட்டுமானம் மாடக்கோயில் அமைப்பில் இருந்திருக்கலாமோ என்று கருதத் தோன்றுகிறது. இக்கோயில் பற்றிய என் கட்டுரை, கல்வெட்டுகளில் இருந்து வரலாறு பெறும் திறமையின் முதற்படியில்கூட நான் அடிவைக்காமையை வெளிக்காட்டவல்லது. திரு. வைத்தியநாதன் ஆர்வமான இளைஞர். கோயில் ஆய்வு முடிந்ததும் அவருடன் படமெடுத்துக்கொண்டோம். அவர் தம்மைத் தம் குடும்பத்துடன் ஒரு படம் எடுத்துத் தருமாறு வேண்டினார். குடும்பத்துடன் படமெடுத்துக்கொள்ள அதுநாள்வரை வாய்க்கவில்லை என்றவர் இல்லம் வந்து காபி அருந்தும்படி வேண்டினார். அவர் இல்லம் ஏழ்மையின் பிடியில் இருந்தது. 'எங்களால் முடிந்தது. கூச்சப்படாமல் சாப்பிடுங்கள்' என்று காபி தந்தார். என்னால் அந்தக் காபியைக் குடிக்கமுடியவில்லை. அதனால் என் பங்கின் பெரும்பகுதியைத் திரு ஆறுமுகத்தின் கோப்பையில் ஊற்றினேன். அவரும் குடிக்கத் திணறிக்கொண்டிருந்தார். என் துணைவி எப்படியோ அருந்தி முடித்தார். எங்களைக் காப்பாற்றுவது போல வைத்தியநாதனின் மனைவி அவரை உள்ளா அழைத்தார். படமெடுத்து முடிந்ததும், தலைச்சங்காடு பற்றிக்கூறி தாம் உடன்வந்து கோயிலைக் காட்டுவதாக வைத்தியநாதன் சொல்ல உடனே புறப்பட்டோம். என் துணைவி என்னிடம் மெல்லிய குரலில், 'நீங்கள் நனி நாகரிகர் இல்லை' என்றார். உண்மைதான். உள்ளம் வலித்தது. பாழாய்ப்போன நாசியும் நாவும் அவற்றையும் மீறிய மருத்துவ உணர்வும் என்னை அன்று நாகரிகம் இழக்கச் செய்தமை உண்மைதான். இந்தக் காபியைத்தானே திரு.வைத்தியநாதன் குடும்பம் நாளும் அருந்துகிறது என்பதை நினைக்கும்போதெல்லாம் எனக்கு வேதனை வரும். எவ்வளவுதான் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தாலும் கோயிலுக்குத் தங்களால் இயன்றதைச் செய்து கொண்டிருக்கும் இது போன்ற சிவாச்சாரியர்கள் சிலரை ஆய்வுப் பயணங்களில் சந்தித்திருக்கிறேன். எதற்கும் தாழாத அந்தப் பெருமக்கள் இந்த மண்ணின் கோயில்களைப் போலவே எண்ணங்களால் உயர்ந்தவர்கள்.

ஆக்கூரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயிலை அடைந்தபோது கோயில் பூட்டியிருந்தது. திரு.வைத்தியநாதன் கோயில் சிவாச்சாரியார் திரு.கந்தசாமியின் வீட்டை அடைந்து அவரை அழைத்துவந்தார். தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட இளைஞர் கந்தசாமி, கோயிலைத் திறந்து எங்களை உள்ளே அனுமதித்தார்.

அவர் கூறிய தலபுராணக் கதைகளையெல்லாம் பொறுமையாகச் செவிமடுத்த பிறகு, கோயிலின் உண்மையான வரலாற்றையும் கட்டமைப்புத் தொடர்பான தகவல்களையும் கோச்செங்கணான் பற்றிய குறிப்புகளையும் கூறினேன். அதுவரை நான் பார்த்திருந்த மாடக்கோயில்கள் பற்றியும் எடுத்துரைத்தேன். செம்பியன்மாதேவி என்ற பெயர் அவருக்குப் புதிதாக இருந்தது. குறைவான ஏட்டுக் கல்வியை பெற்றிருந்த அவருக்கு நான் தந்த செய்திகள் கோயிலைப் பற்றிய ஒரு பெருமித உணர்வை அளித்தன. மிகவும் மகிழ்ந்த நிலையில், தம் கோயிலுக்கு அருகிலேயே மற்றொரு கோயில் இருப்பதாகக் கூறி, அதையும் பார்த்து அதன் வரலாறு கூறவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நாங்கள் திருச்சுற்று முடித்து வந்தபோது, என் வாழ்வரசியார் கோயிலின் தரைப்படம் வரைந்துகொண்டிருந்தார். பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். என் மாமா திரு. ஆறுமுகம் விமான ஆய்வுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். விமானம் பற்றிய தெளிவான கட்டடக்கலைக் கண்ணோட்டம் எனக்கு அப்போது கிடையாது என்றாலும், எது விமானம், எது கோபுரம் என்ற அடிப்படை உண்மைகளைப் பல நூல்களைக் கற்றதன் வாயிலாகப் பெற்றிருந்தேன். திரு. கந்தசாமி கொணர்ந்த ஏணியின் உதவியுடன் திரு. ஆறுமுகம் முகமண்டபக் கூரைமீது ஏறியிருந்தார். நானும் திரு. கந்தசாமியும் அவரைப் பின்பற்றி மேலே வந்தோம். விமானத்திலிருந்த சுதை உருவங்களை அருகிருந்து பார்க்க இது உதவியது.

தொடக்க காலத்தில் சிற்பம், சுதையுருவம் பிரித்தறியத் தெரியாமல் இருந்தது. சுதை வடிவங்களையும், 'சிற்பங்கள்' என்ற சொல்லாட்சி கொண்டே தொடக்கக் காலக் கட்டுரைகளில் பிழையாகக் குறித்திருப்பதை என்னைத் தொடர்ந்து படிப்பவர்கள் அறிவர். இந்த என் குழப்பங்களுக்கெல்லாம் காரணம், கோயிற் கட்டடக்கலை பற்றிய தெளிவான வழிகாட்டு நூல்கள் ஏதும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ இல்லாமைதான். ஆங்கிலத்தில் திரு. கூ.இரா.சீனிவாசன் எழுதியுள்ள 'தென்னிந்தியக் கோயில்கள்' எனக்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகே கிடைத்தது. அந்த நூலும் முழுமையான அளவில் கோயில் கட்டடக்கலைச் செய்திகளைப் பெற்றிருப்பதாகக் கூறமுடியாது.

படித்த தரவுகளின் அடிப்படையில் கோயில் கட்டுமானங்களை அணுகியபோது பல சிக்கல்கள் நேர்ந்தன. திரு. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தின் நூல்களையே பெரிதும் சார்ந்திருந்தமையால், அவருடைய தாக்கம் கட்டுரைகளில் ஊடாடியது. அவர் செய்திருந்த பிழைகளை நானும் செய்யுமாறானது. கள ஆய்விற்குப் புறப்பட்ட ஒரு சில தினங்களிலேயே பிழைகளை உணரத் தொடங்கிவிட்டேன். ஆனால், அவற்றைச் சரிசெய்துகொள்ளச் சரியான ஆசிரியர்களோ, வழிகாட்டிகளோ, நூல்களோ கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில் கோயில்களே உதவின. ஒவ்வொரு கோயிலும் ஒரு புத்தகம். நான் சந்தித்த முதல் கோயிலில் இருந்து இந்த நொடிவரை, நான் பார்த்துக் களித்த எந்தக் கோயிலும் பேசத் தவறியதே இல்லை. உறையூர்ப் பஞ்சவர்ணசாமிக் கோயிலில் ஏற்பட்ட அநுபவங்கள் கோயிலுக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலக உணரவில்லை என்பது உண்மைதான். ஆனால், மாடக்கோயில் பயணங்கள் மெல்ல, மெல்ல அந்த உணர்வை மலரவைத்தன. மிக விரைவிலேயே கோயில்கள் என்னை உறவாக்கிக் கொண்டமையைப் புரிந்துகொள்ள முடிந்தது. நேசிப்பவர்களை நோக்கி எதன் கைகளும் நீளமுடியும் என்பதற்கு நான் சான்றானேன்.

திரு. கந்தசாமி கோயில் கட்டடக்கலை, சிற்பங்கள் பற்றி ஏதும் அறியாதவர். என்றாலும், தெரிந்துகொள்வதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. சுதை உருவங்களைப் பார்த்து நான் குறிப்பெடுத்தபோது அமைதி காத்தவர், நான் பணி முடித்ததும், சிற்பவியல் பற்றிப் பல கேள்விகள் கேட்டார். சிவபெருமானின் திருவுருவங்கள், தலபுராணங்கள், ஊர்களில் வழங்கும் கதைகளுக்கும் இறைத்திருமேனிகளுக்கும் உள்ள தொடர்புகள் எனப் பலவும் கேட்டவர், தமக்கு வழிபாட்டு மந்திரங்கள் தவிர வேறெதுவும் தெரியாது என்பதைத் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார். தம் தந்தையார் சொல்லிக்கொடுத்த மந்திரங்களும் செய்திகளும் போதுமென்று தாம் இத்தனை நாள் இருந்ததாகவும், இனி நிறைய தெரிந்து கொள்ள விழைவு பிறந்துள்லதாகவும் அவர் கூறியபோது என் கண்கள் நனைந்தன. இதுபோன்ற உணர்வுபூர்வமான அநுபவங்களைப் பல கோயில்களில் நான் சந்தித்திருக்கிறேன்.

இந்நிகழ்வு நடந்து, ஏறத்தாழ இரண்டாண்டுகளுக்குப் பிறகு நண்பர் மருத்துவர் பொ. பெருமாளின் இளவல் திரு. நடராசனும் அவர் துணைவியார் திருமதி தங்கமும் இல்லம் வந்திருந்தனர். கோயில்கள் பார்க்க விரும்பிய அவர்களுடன் என் குடும்பத்தாருடன் பயணமானேன். அனைவரும் தலைச்சங்காடு சென்றிருந்தோம். அப்போது திரு. கந்தசாமியை இரண்டாம் முறையாகச் சந்திக்க நேர்ந்தது. அந்த இரண்டாண்டுக் காலத்தில் அவரிடம் ஏற்பட்டிருந்த வளர்ச்சியை, மாற்றத்தை மிகவும் மகிழ்வு பொங்க அனுபவித்தேன். திரு. நடராசனுக்கு அவரே கோயிலைச் சுற்றிக் காண்பித்து விளக்கினார். என் அறிமுகம் அவருக்குப் பலவகையிலும் தூண்டுதலாக இருந்தமை பற்றிப் பேசினார். அன்றைய காலைப்பொழுது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பொழுதாக அமையுமென்று புறப்பட்டபோது நான் நினைக்கவில்லை.

தலைச்சங்காடு சங்கராண்யேசுவரர் கோயிலில் இருந்து பத்துக் கல்வெட்டுகள் 1925ல் படியெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றுள் ஒரு கல்வெட்டுக்கூட இன்று அங்கு முழு நிலையில் இல்லை. திருப்பணியாளர்களின் கோரப்பசிக்கு இரையாகிவிட்ட அக்கல்வெட்டுகளின் துணுக்குகளைத் திரு. கந்தசாமிக்குக் காட்டியபடி, அவை கூறும் தகவல்களை அவருடன் பகிர்ந்து கொண்டன.

மாடக்கோயில் ஆய்வு தொடங்கியபோது எனக்குக் கல்வெட்டுப் படிக்கத் தெரியாது. அரிதின் முயன்று எழுத்துக்கூட்டிப் படிப்பேன். ஆனால், மாடக்கோயில் ஆய்வு நிறைவுற்றபோது, கல்வெட்டுகளைத் தொடராகப் படிக்குமளவு பயிற்சி ஏற்பட்டது. விடாமுயற்சியும் உழைப்பும் ஊக்கமும் இருந்தால் யாரும் கல்வெட்டுப் படிக்கலாம் என்பதற்கு என்னைவிடச் சிறந்த சான்று இருக்கமுடியாது. எந்தக் கல்வெட்டியல் நூலையும் கையில் எடுத்துக்கொண்டு போய்க் கல்வெட்டுப் படிக்கவில்லை. எந்தக் கல்வெட்டாய்வாளரும் கல்வெட்டுப் படிக்கச் சொல்லித் தரவில்லை. உழைப்பும் ஊக்கமும் மட்டுமே துணைநின்றன. பரவலான படிப்புப் பின்புலமாய் இருந்து உதவியது.

கல்வெட்டுப் படிக்கப் பலரும் விழைகின்றனர். ஆனால், அது ஓர் அரிய செயல் என்ற எண்ணம் எப்படியோ எல்லார் உள்ளத்திலும் வேர்விட்டு வளர்ந்திருப்பதால், 'நம்மால் முடியுமா?' என்ற தயக்கத்துடனே கல்வெட்டுகளை அணுகுகின்றனர். பார்வை நன்றாக உள்ள எவரும் மொழிப் பயிற்சி பெற்றிருந்தால் கல்வெட்டுகளைப் படிப்பது எளிமையானதே. ஒரு நாள், இரண்டு நாள் படிப்பில் கல்வெட்டுக் கண்ணுக்குள் வந்துவிடாது. தொடர்ந்து பயில வேண்டும். கல்வெட்டுகளைத் தொடராகப் படிக்க ஏறத்தாழ ஓராண்டுப் பயிற்சி எனக்குத் தேவையாக இருந்தது. கண்கள் கல்லெழுத்துக்களுடன் பழகிக் கலக்கவேண்டும். அது சொல்லும் செய்திகளுடன் உள்ளம் உறவாடவேண்டும். கல்வெட்டுப் பாடங்கள் வெளியாகியுள்ள தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதிகளை ஆழப் பயின்றால் இவை இரண்டும் எளிதில் வயப்படும்.

கல்வெட்டுப் படிப்பது எவ்வளவு எளிமையானதோ, அவ்வளவு கடினமானது அதிலுள்ள வரலாற்றைப் புரிந்துகொள்வது. படிப்பதற்கான பயிற்சியினும் இதற்கான பயிற்சி பல படிநிலைகளை கொண்டது. என் தொடக்கக் காகக் கட்டுரைகளைப் பார்த்தால், எத்தனை சிறுபிள்ளைத்தனமாக வரலாறு தொகுக்கத் தொடங்கியிருந்தேன் என்பது புலப்படும். கல்வெட்டுச் சொற்களின் ஆழமான பொருள் உணர்த்தலைப் பல்லாண்டுப் பயிற்சியும் பரவலான படிப்புமே தந்தன. இவற்றின் வழி என் பின்னாளைய கட்டுரைகள் வளப்பட்டன.

சங்காரண்யேசுவரர் கல்வெட்டுகளில் திளைத்து மகிழ்ந்த திரு. கந்தசாமி அருகிலிருந்த பெருமாள் கோயிலுக்கு எங்களை அழைத்துச் சென்றார். மங்கையாழ்வார் பாடல்பெற்ற அந்தத் திருத்தலம், 'நாண்மதியப் பெருமாள் கோயிலாய்' எங்களை வரவேற்றது. அறங்காவலர் திரு. சுந்தரராமானுஜர் அன்புடன் வரவேற்றார். பிரதிபந்தத் தாங்குதளம் பெற்ற இக்கோயில் விமானம் எளிய நிலையினது. ஆதித்த கரிகாலர், முதலாம் இராஜராஜர், முதலாம் இராஜேந்திரர் கல்வெட்டுகள் இக்கோயிலில் சுக்குநூறாகச் சிதறிக்கிடந்தன. இங்கிருந்து ஆறு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டதாகக் கல்வெட்டறிக்கைக் கூறுகிறது.

அக்கல்வெட்டுகள் இங்கிருந்து சுவடழிந்த திருச்சித்திரக் கூடத்து ஆழ்வார் கோயில் திருமதுரை ஆதிவராகர் கோயில், திருவாய்ப்பாடி ஆழ்வார் கோயில் இவற்றை அடையாளப்படுத்துவதுடன், கங்கைகொண்டசோழபுரம், திருக்கோட்டியூர், மேல்நாட்டுக் கொல்லம் இவற்றைச் சேர்ந்த வணிகர்கள் இக்கோயிலுக்கு உவந்தளித்த கொடைகளையும் எடுத்துரைக்கின்றன. இக்கல்வெட்டுத் தரவுகள் திரு. சுந்தரராமானுஜருக்குப் பேரதிசயமாக இருந்தன. தம் ஆட்சியின் கீழ் உள்ள கோயில் இத்தனை பெருமையுடையதா என்று வியந்து களித்தவர், அக்கல்வெட்டுத் தரவுகளைக் கட்டுரையாக்கி அளிக்குமாறு அன்புடன் வேண்டினார். அவர் மகிழ்வை வெளிப்படுத்தும் விதமாக என் பிள்ளைகளுக்கு அவர் தோப்பு மாம்பழங்களைத் தந்ததுடன் எங்கள் அனைவருக்கும் சுவையான இளநீர் தந்து போற்றினார்.

திரு. சுந்தரராமானுஜம் வயது முதிர்ந்தவர். அரிய சான்றோர். நல்ல வைணவர். அவரிடம் பழக்கமேற்பட்ட பிறகு, இரண்டு முறை என் இல்லம் வந்து தங்கியுள்ளர். இரண்டு முறையும் என் வீட்டு வெளிக்கூடத்தில் தங்கி, அவரே சமைத்து உண்டார். அவர் அன்பும் மனித நேயமும் அளப்பரியன என்பதால், அவரது பழக்க வழக்கங்களில் நான் தலையிடவில்லை. என்னைத் தம் மகனினும் அன்பு பாராட்டி நேசித்தார். அவர் துணைவியார் இறந்த பிறகு தளர்ச்சியுற்ற நிலையில் ஒருமுறை வந்திருந்தார். அதற்குப் பிறகு அவருக்கும் எனக்கும் தொடர்பு விட்டுப்போயிற்று. அவர் வேண்டுகோளை ஏற்று, திரு. கந்தசாமியையும் மகிழ்விக்கும் விதமாகச் செந்தமிழ்ச்செல்வியில் நான் எழுதிய கட்டுரைதான், 'சைவமும் வைணவமும் தழைத்தோங்கும் தலைச்சங்காடு'. 1983ம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் இதழ்களில் இக்கட்டுரை வெளியானது. இதழ்ப் படிகளை இருவருக்குமே அனுப்பியிருந்தேன்.

வாருணி, உழைப்பை மட்டுமே நம்பி, ஆர்வமே அடிப்படையாக, எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் கோயில்களின் வாயில்களை நெருங்கிய எனக்கு இறைவன் மிகப்பெரிய நட்பு வட்டத்தை உருவாக்கித் தந்தான். தொடக்கத்தில் எனக்கு ஆழமான இறைநம்பிக்கை இருந்ததில்லை. கடவுள் உண்டு என்ற கொள்கையன்தான் என்றாலும், கடவுளால்தான் எல்லாம் என்ற எண்ணம் ஒருநாளும் இருந்ததில்லை. கோயில்கள் என்னை மாற்றின. ஒவ்வொரு கோயிலிலும் எனக்கேற்பட்ட அநுபவங்கள் வரலாற்றை மட்டுமா நான் கற்குமாறு செய்தன! என் பண்புகளை மாற்றி அமைத்தன. என்னை மேன்மைப்படுத்தின. விலை மதிக்கமுடியாத உறவுகளை எனக்குப் பெற்றுத்தந்தன. தனி மனிதனாகப் பயணம் மேற்கொண்டவன் நாளடைவில் நிறுவனமானேன்.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.