http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 31
இதழ் 31 [ ஜனவரி 16 - பிப்ரவரி 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
குடைவரைகள்
திருப்புத்தூர்ச் சிங்கம்புணரிச் சாலையில், திருப்புத்தூரில் இருந்து பதின்மூன்று கிலோமீட்டர் தொலைவில் வலப்புறம் பிரியும் சாலை, அரளிப்பட்டிக்கு அழைத்துச்செல்கிறது(1). இரண்டு கிலோமீட்டர் தொலைவு இந்தச் சரியற்ற பாதையில் செல்லத் துணிந்தவர்கள் அரளிப்பட்டியை அடையலாம். அழகான தாமரைக் குளமும் ஆளரவமின்றி இருக்கும் கரையோர மடங்களும் அறைகளாகத் தடுக்கப்பட்டிருக்கும் மஞ்சு விரட்டு மாட்டுக் கொட்டிலும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பரந்துகிடக்கும் வெற்று மைதானமும் அரவங்கிரிப் பாறையை முப்புறத்தும் சூழ்ந்துள்ளன. இப்பாறையின் பின்னால் பசுமையோ பசுமை. குன்றின் உச்சியில், செட்டியார் பெருமக்களின் திருப்பணியாய் முளைத்துச் சதுர்வேதிமங்களத்து உருத்திரகோடீசுவரரின் ஆட்சிக்குள் அரவணைக்கப்பட்ட முருகன் திருக்கோயில். ஒருகாலப் பூசையில் பசுமைகளைப் பார்த்தே பசி தீர்த்துக் கொள்கிறார் எம்பெருமான். மண்டபம் அரவங்கிரியின் தென்சரிவில் கிழக்குப் பார்த்த நிலையில், 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற கொள்கையில் அசைக்கமுடியாத பற்றுடைய யாரோ வெட்டிச் சென்ற அளவில் சிறிய மண்டபக் குடைவரை(2). தென்வடலாக 2.23 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 90 செ.மீ. அகலமும் கொண்டுள்ள மண்டபத்தின் தரையில், முழுக்காட்டு நீர் வெளியேற ஆழமான, ஒழுங்கற்ற காலொன்று காணப்படுகிறது. மண்டபத்தின் தென், வடசுவர்களில் ஆழமான கோட்டங்கள் வெட்டப்பட்டுள்லன. தென்சுவரில் 92 செ.மீ. உயரத்தில், 72 செ.மீ அகலத்தில் அமைந்துள்ள 12 செ.மீ ஆழக் கோட்டத்தில் ஆடவர் சிற்பம் ஒன்று நிறைவடையாப் பணியாய் விளைந்துள்ளது. வடசுவரில் 58 செ.மீ. உயரத்தில், 71 செ.மீ. அகலத்தில் வெட்டப்பட்டுள்ள 12.5 செ.மீ ஆழக் கோட்டத்தில், 33 செ.மீ உயரமுள்ள சிறிய அளவிலான இலிங்கபாணம் வெட்டி அதன் முகப்பில் பிள்லையாரைச் செதுக்கியுள்ளனர்(3). உற்றுப் பார்ப்பவர்களுக்கே இப்பிள்ளையாரின் தரிசனம் கிடைக்கும். மண்டபக் கூரையின் வெளிநீட்டலாய் 10 செ.மீ அளவிற்கு நீளும் பாறைப்பகுதி கபோதம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை மேற்குச் சுவரின் நடுவில் 70 செ.மீ அகலத்தில், 1.80 மீ உயரத்திற்கு நிலை அமைப்போ, அணைவுத் தூண்களோ அற்ற திறப்புச் செய்து கருவறை அகழ்ந்துள்லனர். தென்வடலாக 2.60 மீ. அளவும் கிழக்கு மேற்காக 2.65 மீ அளவும் கொண்டு சதுரமாக அமைந்துள்ள கருவறையின் உயரம் 2.04 மீ. தரையின் நடுவே பாறையில், உயரக் குறைவானதொரு சதுர தளத்தின்மீது 47 செ.மீ. உயர வேசர ஆவுடையாரும் அதன்மீது 29 செ.மீ உயர உருளைப் பாணமும் செதுக்கப்பட்டுள்ளன. சிறிய அளவிலான கோமுகம் வடபுறம் காட்டப்பட்டுள்ளது. அதன் கீழே தரையில் முழுக்காட்டு நீர் வாங்கும் பள்ளம். இந்நீர் வெளியேறக் கருவறைத் தரையிலும் மண்டபத் தரையிலும் ஆழமான ஒழுங்கற்ற காலொன்று வெட்டப்பட்டுள்லது. சிற்பங்கள் தென்கோட்ட ஆடவர் இரண்டு கால்களையும் குத்துக் கால்களாக வைத்து அமர்ந்த நிலையில் வலக்கையை முழங்கால் மீது இருத்தி(4), இடக்கையின் முழங்கைப்பகுதி இடமுழங்கால் மீது தாங்கலாக இருக்குமாறு கையை மடித்து இடப்புறமாக உயர்த்தியுள்ள இத்தென்கோட்ட ஆடவரின் வெறுமையான செவிகள் நீள்செவிகளாகக் காட்டப்பட்டுள்ளன. உயர்த்தியுள்ள இடக்கையில் சிதைந்த நிலையில் மலர்(5). பாதங்களும் முகமும் சிதைந்துள்ளன(6). தலையில் மகுட அமைப்புகள் ஏதுமில்லை. மரபுப்பகுதியும் இடுப்புப்பகுதியும் சிதைந்திருப்பதால் ஆடை, அணிகலன்களை அடையாளம் காணக்கூடவில்லை. வடகோட்டப் பிள்ளையார் இலலிதாசனத்தில் உள்ள இப்பிள்ளையார் இடம்புரியாகக் கரண்ட மகுடராய்க் காட்டப்பட்டுள்ளார். வயிற்றின் நடுவே உதரபந்தம். இடமுன்கை வயிற்றருகே உள்ளது. துதிக்கையின் கீழ்க் காணப்படும் வலமுன்கை சிதைந்துள்ளது. பின்கைப் பொருட்களை அடையாளம் காணக்கூடவில்லை. தமிழ்நாட்டுக் குடைவரைகள் எவற்றிலும் இடம்பெறாத இந்த இலிங்கப் பிள்ளையார் சிதைந்திருந்தபோதும் சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளார். முடிவுரை இக்குடைவரையின் எளிய அமைப்பு, சிவகங்கை மாவட்டக் குன்னத்தூர்க் குடைவரைத் தொகுதியின் முதற் குடைவரையை நினைவூட்டுகிறது(7). கட்டமைப்பு, சிற்பங்கள் கொண்டு இதன் காலத்தைக் கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியாகக் கொள்ளலாம். குறிப்புகள் 1. இக்குடைவரையில் ஆய்வு மேற்கொண்ட நாட்கள் 23-7-1994, 13-3-2003. உடன் வந்தவர் வணக்கத்திற்குரிய குருமகா சந்நிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளாரின் நேர்முக உதவியாளர் திரு. நீலமேகம். ஆய்விற்கு உதவியவர்கள் பேராசிரியர் முனைவர் அர.அகிலா, இசையாசிரியை இரா.இலலிதாம்பாள். 2. தி.இராசமாணிக்கம், சு.இராசவேல், அ.கி.சேஷாத்ரி ஆகியோர் இக்குடைவரைக் கோயில் கருவறை மட்டுமே கொண்டுள்ளது என்று பிழையாகக் குறிப்பிட்டுள்ளனர். தென்னகக் குடைவரைக் கோயில்கள், கழகம், 1989, ப. 71, மு.கு.நூல், ப. 151. 3. தி.இராசமாணிக்கம், சு.இராசவேல், அ.கி.சேஷாத்ரி இவர்கள் இவ்வடிவத்தை முகலிங்கமாகக் கண்டு, முகலிங்கம் பற்றிய விரிவான தரவுகளில் ஆழ்கின்றனர். மு.கு.நூல்கள், பக். 71, 151. 4. வலக்கைத் தொடைமீது இருப்பதாகத் தி.இராசமாணிக்கம் பிழையாகக் குறித்துள்ளார். மு.கு.நூல், ப. 72. 5. தி.இராசமாணிக்கம், சு.இராசவேல், அ.கி.சேஷாத்ரி இவர்கள் இக்கையிலுள்ள பொருள் சரியாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். மு.கு.நூல்கள், பக், 72,151. 6. தி.இராசமாணிக்கம், சு.இராசவேல், அ.கி.சேஷாத்ரி இவர்கள் சிதைவினால் செதிலாகப் பிளந்திருக்கும் பகுதியைத் தடியாகக் காண்கின்றனர். மு.கு. நூல்கள், பக். 72, 151. 7. விரிவான தரவுகளுக்குக் காண்க : கோ.வேணிதேவி, இரா.கலைக்கோவன், 'குன்னத்தூர் குடைவரைகள்', வரலாறு 6, பக் 55-72. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |