http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 41
இதழ் 41 [ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2007 ] இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம். இந்த மாதம் முதல் வரலாறு டாட் காம் இதழ் வெளியானவுடன் வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாக அறிந்து கொள்ளும் வகையில், Newsletter என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். முகப்புப் பக்கத்தில் கீழே இருக்கும் பெட்டியில் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்தால், ஒவ்வொரு மாதமும் கட்டுரைகளின் பட்டியலை மின்னஞ்சலில் பெறலாம். கடந்த ஒருவார காலமாகச் சோதனை முயற்சியில் இருக்கும்போதே நிறைய வாசகர்கள் பதிந்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு தலையங்கத்துக்கு வந்த வாசகர் கருத்துக்களில் பெரும்பாலானவை தொல்லியல் துறையின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தன. ஒருசில கருத்துக்கள் தொல்லியல் துறையின் பணி என்னவென்றே தெரியாமல், குறைத்து மதிப்பிட்டு எழுதப்பட்டவையாகத் தோன்றின. ஆனால் இதற்கு வாசகர்களைக் குறை கூறுவதில் எந்தப் பயனும் இல்லை. தொல்லியல் துறையுடன் நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைக்காத ஒரு சராசரி இந்தியனுக்கு இத்துறையின் செயல்பாடுகளைப் பற்றி எப்படிப்பட்ட எண்ணம் இருக்குமோ, அதை வெளிப்படுத்தியிருப்பதாகக் கொள்ளலாம். இதற்குக் காரணம், ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி மக்களிடையே பொதுக்கருத்தை உருவாக்கும் பத்திரிகை ஊடகங்கள் இத்துறையை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை எனலாம். தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றித் தரும் செய்திகளை எடிட் செய்தோ செய்யாமலோ வெளியிடுவதுடன் நிறுத்திக் கொள்கின்றன. சினிமாத்துறைத் தகவல்கள் அளவுக்கோ, அரசியல் புலனாய்வுக் கட்டுரைகள் போன்றோ இத்துறையைப் பற்றியும் வெளியிட ஏராளமான தகவல்களும் சம்பவங்களும் இருக்கின்றன. உண்மையில், மற்ற எல்லா அரசுத் துறைகளையும்விட, தொழிலை நேசித்து ஈடுபாட்டுடன் பணிபுரியும் ஊழியர்களின் சதவீதத்தில் முதலிடம் வகிக்கிறது எனலாம். இப்படி ஈடுபாட்டுடன் பணிபுரிய ஊழியர்கள் தயாராக இருந்தாலும், அவ்வப்போது சில குறைகள் ஏற்படுவதற்குக் காரணம், குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு என்றே எண்ணுகிறோம். பழமைவாய்ந்த நினைவுச் சின்னங்களில் பெரும்பாலானவை இன்று தனியார் வசமே இருக்கின்றன. அவற்றைக் கையகப்படுத்த வேண்டுமானால், அவர்கள் கேட்கும் தொகையை நஷ்ட ஈடாகத் தரவேண்டும் என்று இத்துறையின் சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். நெடுஞ்சாலைத்துறை, ரயில்வேத்துறை போன்று அரசு நிர்ணயித்த விலைக்கே இடங்களையும் கட்டடங்களையும் எடுத்துக் கொள்வதில்லை. இத்துறைக்கு மட்டும் ஏன் இந்தச் சிறப்புச் சலுகை என்று தெரியவில்லை. இதனால் பல்லாவரம் மகேந்திரர் குடைவரை, மாமல்லபுரம் மகாவராகர் குடைவரை போன்றவைகள் தொல்லியல் துறையின் பராமரிப்பை இன்னும் பெறாமலேயே இருக்கின்றன. திருப்பட்டூர்க் கற்றளியை முன்னாள் தொல்லியல்துறைக் கண்காணிப்பு அலுவலர்கள் திரு. கூரம் திருவாழி நரசிம்மன் அவர்களும் திரு. தியாக.சத்தியமூர்த்தி அவர்களும் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களும் தனிப்பட்ட முயற்சிகள் எடுத்தும் இன்னும் தொல்லியல்துறையின்கீழ்க் கொண்டுவர முடியவில்லை. அப்படியே துறையின் கட்டுப்பாட்டில் சில நினைவுச்சின்னங்கள் கொணரப்பட்டாலும், பராமரிப்பும் பாதுகாப்பும் சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை. பல நினைவுச்சின்னங்கள் பெரும்பாலும் மூடப்பட்டே கிடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குழுவினர் மாமல்லபுரம் சென்றிருந்தபோது திருக்கழுக்குன்றம் குடைவரையையும் பார்க்க விரும்பியது. ஏற்கனவே உள்ள முன் அனுபவத்தால், நாங்கள் செல்லும் நேரத்தில் (பகலில்தான்) திறந்திருக்குமா என்று துறை அலுவலகத்தில் கேட்டபோது, அதன் சாவி இப்போது மாமல்லபுரம் அலுவலகத்தில்தான் இருக்கிறது. யாராவது இங்கிருந்து வந்து திறந்து விட்டால்தான் உண்டு என்ற பதிலே கிடைத்தது. காஞ்சிபுரத்திலும் இத்தகைய அனுபவம் ஏற்பட்டது. காஞ்சி நகருக்கு வெளியே அமைந்திருக்கும் மகேந்திரர் குடைவரைகள் பெரும்பாலானவற்றை ஒரே காவலர்தான் பார்த்துக் கொள்கிறார். அங்கு சிறிது நேரம், இங்கு சிறிது நேரம் என்று பயணத்திலேயே பாதிநேரம் கழிந்து விடுகிறது. ஆய்வாளர்கள் யாராவது முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றால், திறந்து வைத்துக் காத்திருக்கிறார்கள். அந்தவகையில் பாராட்டவே செய்யலாம். அரசு அதிக நிதி ஒதுக்கி, ஒவ்வொரு நினைவுச் சின்னத்துக்கும் ஒவ்வொரு காவலரை நியமித்தால், பார்க்க விரும்புபவர்களுக்கும் வசதியாக இருக்கும். வேலைவாய்ப்பும் பெருகும். மாமல்லபுரம், தஞ்சாவூர் போன்று எப்பொழுதும் திறந்திருக்கும் இடங்களில்கூட, மக்களுக்குத் தேவையான தகவல்கள் சரியாகக் கிடைக்கின்றதா என்றால், இல்லை என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. நுழைவாயிலில் முதலில் கண்ணில்படும் அறிவிப்புப் பலகையிலேயே ஏகப்பட்ட தகவல் பிழைகள். தஞ்சாவூரில் விமான உச்சியில் இருப்பது 80 டன் எடையுள்ள ஒரே கல் என்றுதான் இன்னும் இருக்கிறது. மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் ரதத்தின்முன் இருக்கும் பலகை ஏராளமான சுட்டல்களுக்குப்பின் தற்போது சரி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு அறிவிப்புப் பலகையை எழுதும் ஓவியர் தவறு செய்யலாம். ஆனால் அதை நிறுவும் முன் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை சரிபார்க்க வேண்டியது அலுவலர்களின் கடமையல்லவா? பல்வேறு கஷ்டங்களுக்கிடையில் நினைவுச் சின்னங்களை ஆய்வு செய்து ஆய்வாளர்கள் வெளியிடும் புத்தகங்களை ஆயிரக்கணக்கானவர்கள் படிக்கிறார்கள் என்று கொண்டால், இத்தகைய பலகைகளை இலட்சக்கணக்கானவர்கள் படிக்கிறார்கள் என்று சொல்லலாம். இதிலிருந்தே தெரியவில்லையா, எதில் அதிகக் கவனமாக இருக்கவேண்டும் என்று? அலுவலர்கள் வேறு வேலைகளில் ஈடுபட்டிருப்பின், பிழை திருத்துபவர்களைப் பணியில் அமர்த்தும் வகையில் அரசின் நிதி ஒதுக்கீடு இருப்பின், இதுபோன்ற தவறுகள் களையப்படலாம். மக்கள்வரத்து அதிகமாக இருக்கும் கோயில்களில் அக்கோயில் தொடர்பான ஆய்வுநூல்களை விற்பனை செய்து கூடுதல் வருமானம் சேர்க்கலாம். தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் போன்று ஓவியங்கள் இருக்கும் கோயில்களில் அவ்வோவியங்களின் புகைப்படங்களை விற்பனை செய்யலாம். பெரிய கோயிலின் சாந்தாரநாழியில் இருக்கும் ஓவியங்களைத் தற்போது வெளியிலிருந்தே அனைவரும் கண்டுகளிக்கும்படி செய்துவிட்டதால், அவற்றின் சிறு அளவுப் புகைப்படங்களையும் விற்பனைக்கு வைக்கலாம். சிற்பங்களையும் புகைப்படம் அல்லது நாள்காட்டி வடிவில் தரலாம். இதுபோல் இன்னும் எத்தனையோ பரிந்துரைகளை இலவசமாக வழங்கலாம். ஆனால் அவற்றைச் செயல்படுத்த எத்தனையெத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றனவோ, யார் அறிவார்? மத்திய அரசும் மாநில அரசும் அதிக நிதி ஒதுக்கினால் இப்பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்றாலும்கூட, இவ்விஷயத்தில் அரசின் கவனத்தைக் கவரவேண்டியது அவசியம். அரசு இதுபோல் ஆயிரம் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கான முன்னுரிமைகளில் தொல்லியல்துறை புறக்கணிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உயர் அதிகாரிகளின் கடமை. ஒரு நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளும் ஒருங்கே வளர்ச்சியடைந்தால்தான் அதை முன்னேற்றம் என்று சொல்லமுடியும். ஐந்து விரல்களும் ஒரே விகிதத்தில் வளர்ந்தால்தான் அதற்குப்பெயர் வளர்ச்சி. ஓரிரு விரல்கள் மட்டும் வளர்ந்தால் அதை வீக்கம் என்றுதான் கூறுவோம். புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்களாக!!! அன்புடன் ஆசிரியர் குழு. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |