http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 52

இதழ் 52
[ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

எங்கே போயின ஏரிகளும் குளங்களும்?
சிவிகை பொறுத்தாரும் ஊர்ந்தாரும்
திரும்பிப் பார்க்கிறோம் - 24
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 6
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - முதல் பாகம்
Virtual Tour On Kundrandar Koil - 4
ஐராவதி நூல் வெளியீட்டு விழா - ஒளிப்படத் தொகுப்பு (Videos)
அவர் - ஆறாம் பாகம்
நீங்கல் சரியோ நீயே சொல்!
பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்
இதழ் எண். 52 > நூல்முகம்
பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்
ச. கமலக்கண்ணன்

தமிழர் தொழில்நுட்பம் என்பதற்கும் தமிழ்நாட்டுத் தொழில்நுட்பம் என்பதற்கும் சிறிதளவு வேறுபாடு உண்டு. சில தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே தோன்றி வளர்ந்து சிறந்து விளங்கும். அது பின்னர் வெளிநாடுகளுக்கும் பரவும். பாசன முறைகளைப் பொறுத்தவரை தமிழ்நாடு கடந்த 3000 ஆண்டுகளாகச் சிறந்து விளங்கி வந்துள்ளது. எகிப்து, பிற ஆப்ரிக்க நாடுகளில் நதிநீரைப் பயன்படுத்தித் தரிசு நிலத்தை வயலாக்கிய தொழில்நுட்பம் தமிழ்நாட்டவரால் கற்றுத் தரப்பட்டதென்ற கருத்தை மேனாட்டுப் பொறியாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். (டாக்டர். வா.செ.குழந்தைசாமி, 'பழந்தமிழரும் பொறியியலும்', பல்கலைப் பழந்தமிழ், பக்கம் 147)

கட்டடக்கலையும் அது போன்றதொரு தொன்மையான புலமை ஆகும். மயமதம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் வடமொழிக்கு மாறியிருக்கக் கூடும் என்று பிரெஞ்சு அறிஞர்கள் கருதுவர். (Bruno Dagens, Maya mata). அதற்கு முன்னர் அது தமிழ்நூலாக இருந்தது. தமிழ்நாட்டில் முழுக்க ஆட்சி பெற்றிருந்தது. அப்போது இந்தியா முழுவதும் இருந்து வந்த தொழிலாளர்களும், யவனர்களும் (ஐரோப்பியரும்) கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

யவனத் தச்சரும் அவந்திக் கொல்லரும்
மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும்
பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும்
கோசலத் தியன்ற ஓவியத் தொழிலரும்
வத்த நாட்டு வண்ணக் கம்மரும்

(பெருங்கதை : 1-58, 40-44)


என, கொங்கு விஜயமங்கலத்தில் வசித்த கொங்குவேள் தம் பெருங்கதையில் கூறுவார். இவர்கள் அவர் காலத்தில் (கி.பி. ஆறு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு) தமிழ்நாட்டில் தொழில்புரிந்தோர் எனக் கொள்ளலாம்.

மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்
கொண்டினிதியற்றிய கண்கவர் செய்வினைப்
பவளத் திரள்காற் பன்மணிப் போதிகைத்
தவள நித்திலத் தாமம் தாழ்ந்த
கோணச் சந்தி மாண்வினை விதானத்துத்
தமணியம் வேய்ந்த வகைபெறு வனப்பிற்
பைஞ்சேறு மெழுகாப் பசும்பொன் மண்டபத்து
இந்திர திருவன் சென்றினி தேறலும்

(மணிமேகலை, சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை, 2243-52)


எனச் சீத்தலைச் சாத்தனார் மாவண்கிள்ளியின் அரசிருக்கையை விவரிப்பார்.

வெளிநாட்டுத் தொழிலாளர் பலர் கூடிப் பணிகளைச் செய்தபோதும், இதனைத் தமிழ்நட்டுத் தொழில்நுட்பம் என்றே கொள்ளல் வேண்டும். இங்குள்ள பெருந்தச்சன் (தலைமைப் பொறியாளர்) ஆணைக்கிணங்க அவர்கள் செயல்பட்டார்கள் எனக் கொள்ளல் வேண்டும். இவற்றில் வெளிநாட்டுத் தொழில்நுட்பம் ஏதும் இல்லையென உறுதிப்படக்கூற இயலாதெனினும், தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருப்பதால், இது தமிழ்நாட்டுத் தொழில்நுட்பமே எனக் கொள்ளலே பொருந்தும்.

இந்திய வணிகர்களும், தொழிலாளர்களும், உலகம் முழுவதும் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். யவனர் எனப்படும் ஐரோப்பியர், தமிழ்நாட்டுக் கோட்டைகளில் காவல்பணி செய்தனர். கட்டுமான வேலையில் பல யவனத் தச்சர் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்து இருந்ததால் கருத்துப் பரிமாற்றமும் இருந்திருக்க வேண்டும். யாரிடமிருந்து எது வந்தது, எது போயிற்று என்று உத்தேசமாகக் கூறலாமேயன்றி, உறுதியாகக் கூற இயலாது. புதிய சான்று கிடைக்கும்போது பழைய செய்தி வலுவிழந்து விடும். யார் எதைப் பிடித்து நிறுத்தித் தமதாக்கிக் கொள்கிறார்களோ, அதற்கு முதன்மை உண்டு. அந்த வகையில் அந்தந்த இடத்தில் கிடைக்கும் எச்சங்கள் ஆய்விற்குப் பெருந்துணை புரிகின்றன.
தமிழையும் பொறியியலையும் இரு கண்களாகப் பாவித்த முனைவர் கொடுமுடி சண்முகம் அவர்கள் தனது முனைவர் பட்ட ஆய்வேடான 'பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்' நூலில் தனது ஆய்வு நோக்கத்தைப் பற்றி விளக்கும் முதல் அத்தியாயத்தில் மேற்கண்டவாறு குறிப்பிடுகிறார். முனைவர் கொடுமுடி சண்முகம் அவர்கள் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையில் பல பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை, சிற்பக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பு வகித்தவர். இவரை எங்கள் குழு ஓரிரு விழாக்களில் பார்த்திருக்கிறது என்றாலும், நேரடி அறிமுகம் இல்லை. அந்தப்பேறு எங்களுக்கு வாய்க்கும் முன்னரே புற்றுநோய் முந்திக்கொண்டது. இந்நூலில் வெளியாகியிருக்கும் இவரது சாதனைப் பட்டியல் 9 பக்கங்களுக்கு விரிந்து பிரமிக்க வைக்கிறது. வரலாற்றை முதன்மைப் பாடமாகக் கொண்டிராத மற்றொரு அறிஞர். சமஸ்கிருதமும் பிரெஞ்சும் கற்றவர். இவரது சாதனைகளில் சில.

1. எண்ணாயிரம் என்பது ஊரின் பெயர். கழுவிலேற்றப்பட்ட சமணர்களின் எண்ணிக்கை அன்று என நிறுவியுள்ளார்.

2. ஆர்க்காடு நவாபிற்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடந்த அடையாறு சண்டை நிகழ்ந்த இடம் கண்டு, அங்கிருந்த இரும்பு பீரங்கியினை அகழ்ந்தெடுத்துக் காட்சிக்கு வைத்தார்.

3. செஞ்சி அருகே கடலியில் மாவீரன் இராஜாதேசிங்கு வீரமரணம் அடைந்த இடத்தில் கல்வெட்டுப் பொறித்து நட்டார்.

4. மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி பழைய வளாகத்தில் மாதவி ஆடிய மேடைக்கு இளங்கோவடிகள் கூறிய அளவுகளின்படி ஓர் ஆடல்மேடை அமைத்தார்.

5. மேட்டூர் அணை வைரவிழாவை ஒட்டி, சிலப்பதிகாரக் கானல்வரி, இயற்கை வணக்கம், காவிரிநாடு பற்றிய புறநானூற்றுப் பாடல், பாரதியார் பாடல், தனிப்பாடல் ஆகியவற்றைக் கருங்கல்லில் பொறித்து வைத்தார்.

6. கண்ணகி தெய்வமான இடம் திருச்செங்கோடு என்பதற்கான விரிவான ஆராய்ச்சி நடத்தி அறிக்கை தயாரித்து வெளியிட்டார்.

7. விழுப்புரம் பொதுப்பணித்துறை விருந்தில்லங்களுக்குத் திருமுடிக்காரி இல்லம், நல்லியக்கோடன் இல்லம், கவிகாளமேகம் இல்லம் எனப் பெயரிட்டுப் பொறித்து வைத்தார்.

8. திண்டிவனம், விழுப்புரம், சேலம் ஆகிய இடங்களில் திறந்தவெளிப் பொதுப்பணி வரலாற்றகம் அமைத்தார்.

9. உளுந்தூர்ப்பேட்டை அருகில் செங்குறிச்சி ஏரியாவிலுள்ள ஏரி மதகு பற்றிய கல்வெட்டு வாசகத்தினை ஏரியின் நீரியல் விவரங்களுடன் கல்லில் பொறித்துத் தென்பெருஞ்சாலையில் நட்டார்.

10. ஆதிமனிதன் கல்வீடு மாதிரி வடிவம் கிருட்டிணகிரி அணைப்பூங்காவில் அமைத்தார்.

தெள்ளமுது (கையெழுத்துப் பத்திரிகை, 1959-60), நண்பராயம் (கையெழுத்துப் பத்திரிகை, 1963), இளநிலைப் பொறியாளர் (பொதுப்பணித்துறைப் பொறியாளர்களுக்கான மாத இதழ், 1968-74), இளங்கோ (1972-74), கொங்கு (அறிவியல் மற்றும் வரலாற்று மாத இதழ், 1971-76), தேனோலை (ஓலைச்சுவடிகள் தொடர்பான காலாண்டிதழ், 1973-1985) போன்ற இதழ்களை நடத்திய அனுபவமிக்க இவர் தமிழில் பொறியியல் தொடர்பாகவும் தமிழ்மொழி தொடர்பாகவும் கீழ்க்கண்ட நூல்களைப் படைத்துள்ளார்.

1. அளக்கையில் முதல் தொகுதி (Surveying Vol.1, Tamilnadu Text Book Society, Chennai)
2. பொறியியலின் வரைவியல் (Geometrical Drawing, Anna University)
3. மண் விசையியல் (Soil Mechanics, Tamil University, Thanjavur)
4. ஏரிப்பாசன வரலாறு (History of Tanks and Irrigation, Sekar Pathippakam, Chennai)
5. பண்டைப் பாசனப் பொறியியல் (Ancient Irrigation Engineering, Thenolai pathippakam)
6. புதிய தமிழ் வடிவம்
7. தேவைக்கேற்ற தமிழ்
8. திருச்செங்கோடு
9. குறும்பொறைக்கோமான்
10. வண்ணம்
11. எண்ணாயிரம்

புதுவைப் பல்கலைக்கழகம் Interdisciplinary Research என்னும் பலதுறையினரும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுப் பலதுறை இணைவு ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்று அறிவித்தது இவரைப் பழந்தமிழர் கொண்டிருந்த பொறியியல் நுட்பத்திறனைப் பற்றி ஆய்வு செய்யவைத்தது. பழந்தமிழர் என்றால் யார் என்று வரையறை செய்யவேண்டுமல்லவா? அதைக் கீழ்க்கண்டவாறு வரையறுக்கிறார்.

இந்தியப் பெருநாட்டின்மீது முகமதியர், ஐரோப்பியர் என்ற இரு பெரும் வல்லாண்மை ஆதிக்கங்கள் நுழைந்தன. தமிழ்நாட்டில் சோழப் பேரரசர்கள் மிக வலுவாகத் தங்கள் பேராட்சியைத் தமிழகத்திலும், காப்பாட்சியைத் தென்கிழக்காசியாவிலும் மேற்கொண்டிருந்த காலத்தில் முகமதியர் வடக்கே நுழைந்தனர். கஜினி முகமதுவும், கோரி முகமதுவும் வந்தபோது மாமன்னன் முதலாம் இராசேந்திரன் ஆட்சிபீடத்தில் இருந்தான். முகமதியர் ஆதிக்கம் தமிழ்நாட்டில் எட்டிப் பார்க்க முடிந்ததே தவிரத் தலையெடுக்க முடியவில்லை. சோழர்கள் வலுவிழந்தபின், மாலிக்காபூர் படையெடுத்து வந்து மதுரையில் மிகச்சிறிய காலம் ஆண்டபோது, ஆற்காடு நவாபு போன்ற ஒருசில ஆட்சியாளர்கள் தலையெடுத்தனர். மக்களிடையே மதமாற்றம் ஓரளவு இருந்தது. முகமதியர் கட்டடக்கலையும், பிற அறிவியல் கலைகளும், மதம் மாறிய முகமதியர்களுடன் நின்றுவிட்டதேயன்றித் தமிழகத்தில் ஊடுருவிப் பரவவில்லை. ஏற்கனவே தமிழகத்தில் பரவலாகப் பேணப்பெற்ற கலைகளை அவை மாற்ற முடியவில்லை.

பொதுவாக முகமதியர் ஆட்சியால், கட்டடக்கலைத் துறையில் பெருத்த மாறுதல் எதுவும் ஏற்படவில்லை என்பது இ.பி.ஹேவல் போன்ற வரலாற்றறிஞர்களின் கருத்து. முகமதியர்களால் நியமிக்கப்பட்ட தொழிலாளிகளும் அறிவாளிகளும் இந்தியர்களாகவே இருந்தனர்; அல்லது இந்திய வம்சாவளியினராக இருந்தனர். அவர்களின் அடிப்படைக் கட்டுமான உத்திகள் இந்தியத் தன்மையன; புறநிலை அழகுத் தோற்றங்கள் மட்டும் முகமதியப் பாணியாக அமைந்தன.

முகமதியருக்குப் பின் வந்த ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில், மேற்கண்ட நிலை சற்றே மாறிவிட்டது. கருத்தோட்டத்திலும் வேறுபாடு இருந்தது. இந்து மதத்தில் மூடநம்பிக்கைகள் மிக அதிகமாக இருந்ததைக் கொண்டு, இந்தியர்கள் அறியாமை மிக்கவர்கள் என்ற எண்ணம் ஐரோப்பியரை வலுவாகப் பிடித்துக் கொண்டது. இந்தியாவில் ஏதேனும் சிறப்பைக் கண்டால், அது இந்த நாட்டுக் கருத்தாக இருக்காது என்று கருதப்பெற்று வேறு இடத்தில், அதற்கு ஆதாரம் தேடும் போக்கு இருந்தது. இதனையும் இ.பி.ஹேவல் சுட்டிக் காட்டுகிறார்.

ஆங்கிலேயர் தம் ஆட்சியின்போது எல்லாவற்றையும் தம் நாட்டிலிருந்து கொணரத் தலைப்பட்டனர். தமது ஆட்சி முறையை, தமது குடியேற்ற நாடுகள் எல்லாவற்றிலும் பரப்பினர். தம் நாட்டுக் கல்வி முறையையே இந்தியாவிலும் புகுத்தினர். அதன் வழியாக இந்திய நாட்டுக் கருத்துகள் முட்டுச்சந்து போல நின்றுவிட்டன. மேலைநாட்டுக் கலைகள் தழைத்துப் பெருகி வெற்றிநடை போட்டன.

முகமதியருக்கும், ஐரோப்பியருக்கும் பெருத்த வேறுபாடு ஒன்று உண்டு. முகமதியர்கள், இந்தியாவில் நுழைந்து, ஆட்சிப் பொறுப்பேற்றதும், இங்கேயே தங்கிவிட்டனர். அதனால் அவர்களும் இந்தியர்களாகி விட்டனர். ஆங்கிலேயரின் செங்கோல் இலண்டன் மாநகரத்திலேயே இருந்துகொண்டு, ஆணைச் சக்கரம் மட்டும் சுற்றிக் கொண்டே வந்தது. அவர்கள் ஆட்சி முடிந்ததும், அவர்கள் இந்தியாவை விட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற சாதனைகள், வேதனைகள் அத்தனையையும் இந்தியர்கள் தமதென்றே போற்றி வருகின்றனர்.

எனவே, ஆங்கிலேயர் வருகைக்கு முந்திய காலகட்டம், இந்த ஆய்வில் முதன்மை பெறுகிறது.

சோழப் பேரரசர்களின் ஆட்சிக்காலத்தில், ஆண் வாரிசு இல்லாத காலங்களில் மண உறவு காரணமாக ஆந்திர, கன்னட இளவரசர்கள், சோழ அரியணை ஏறினர். பின்னர் கங்கர், மராட்டியர், போசளர் போன்ற இன வழி மன்னர்களும் தமிழ்நாட்டு அரியணையில் இடம்பெற்றனர். அவர்கள் அனைவரும் தமிழர்களோடு இரண்டறக் கலந்துவிட்டனர். எனவே, அக்கால கட்டத்தை அயலாட்சி எனக் கருத இயலாது. இக்காரணம் கொண்டும் ஐரோப்பியர் ஆட்சிக்கு முந்திய காலம் இந்த ஆய்வில் கருதப்பட்டுள்ளது.


இவரது ஆய்வேடு கீழ்க்கண்ட எட்டு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

1. முன்னுரை
2. கணக்கு
3. நீட்டலளவு
4. பாசனம்
5. கட்டடம்
6. எந்திரங்கள்
7. நெடுஞ்சாலைகள்
8. தொகுப்புரை

பொறியியலுக்கு அடிப்படை கணக்கு. 'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப' என்ற குறளிலிருந்து நேற்றுவரை கிராமப்புறங்களில் விளையாடிக்கொண்டிருந்த தாயக்கட்டம், ஆடுபுலி ஆட்டம் வரையிலான கணக்கு தொடர்பான செய்திகளைத் தொகுத்து அலசி ஆராய்ந்திருக்கிறார். திண்ணைப் பள்ளிக்கூடங்களில் கணக்குப் பயிற்றுவித்த முறை, பாமரர்களும் பயன்படுத்திவந்த விடுகதைகளும் வினாப்பாடல்களும், நாலாயிரத் திவ்வியபிரபந்தம், கம்பராமாயணம், சோழர்காலக் கணித நூல்களான கணக்கதிகாரம், காக்கைப் பாடினியம், பரிபாடல், தொல்காப்பியம் எனக் காலவெள்ளத்தில் பின்னோக்கிப் பயணித்திருக்கிறார்.

இந்தியாவில் மெக்காலே கல்விமுறை அறிமுகமாவதற்கு முன்பு திண்ணைப் பள்ளிக்கூடங்களில்தான் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. ஊருக்கு ஓர் ஆசிரியர் இருப்பார். அவரது வீட்டுத் திண்ணைதான் பள்ளிக்கூடம். மாணவர்கள் மணலில் எழுதிப் பழகினர். பெரும் செல்வந்தர்கள் தம் பிள்ளைகளுக்கு ஆள்வைத்துப் பாடங்களை ஓலையில் எழுதித்தந்தனர். எனினும், ஓலைச் செலவைக் குறைப்பதற்காக எல்லாவற்றையும் மனப்பாடம் செய்துவிடப் பயிற்சியளிக்கப்பட்டது. செந்தமிழும் நாப்பழக்கம்!!! ஒரு பொருளை ஒருமுறை மனப்பாடம் செய்துவிட்டால் மட்டும் போதாது. அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிடில் நினைவுப்பெட்டகத்தின் பின்வரிசைக்குச் சென்றுவிடும். இப்பயிற்சிக்காக உருவானவைதான் சில விளையாட்டுக்கள். பல்லாங்குழி, தாயக்கட்டம், பாண்டி, கில்லி, குலைகுலையாய் முந்திரிக்காய், தெள்ளாட்டம், கிளித்தட்டு போன்றவை பள்ளி செல்லாமலேயே கணக்குக் கற்க உதவின.

வெளிநாடு செல்லும் பெரும்பாலானவர்களுக்கு ஓர் அனுபவம் இருக்கும். "இந்தியர்கள் கணக்கில் புலி" என்பார்கள். இதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால், இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் ஒரு வித்தியாசம் புலப்படும். மற்ற நாடுகளில் பள்ளிக்குச் சென்று முறையாகக் கற்றால்தான் கணிதம் பயிலமுடியும். ஆனால் இந்தியாவில் சில நடைமுறைப் பயிற்சிகளாலேயே பாமரர்கள்கூடக் கணக்கில் புலிகளாக உலா வருவதைக் காண்கிறோம். உதாரணமாக, அமெரிக்காவிலோ ஜப்பானிலோ மெக்டொனால்ட்ஸ் அல்லது ஏதாவதொரு கடையில் சென்று பொருள் வாங்கும்போது, பில் போடும் இயந்திரம் என்ன சொல்கிறதோ அவ்வளவு பணத்தைத்தான் கேட்பார்கள். அவ்வியந்திரம் தவறாகச் சொன்னாலும் அதை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. அதுவும் ஒவ்வொரு வாடிக்கையாளராகத்தான் அவர்களால் கவனிக்க முடியும். ஆனால் நம் ஊரில் மளிகைக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சி ஒரே ஆளாய் ஒரே சமயத்தில் பத்துப்பேரைக் கவனித்துக்கொண்டு, கடைப்பையன்களுக்கு வேலையையும் சொல்லிக் கொண்டிருப்பார். இடையிடையில் 'என்னண்ணே! அரிசி வாங்கி இருபது நாட்கள் ஆகிடுச்சி! இன்னும் தீரலையா? வெளியூர் ஏதாவது போய்விட்டீர்களா?' என்று ஒவ்வொரு வாடிக்கையாளரைப் பற்றியும் தனித்தனியாகவும் கணித்துக் கொண்டிருப்பார். இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற கேள்விக்கு இந்நூல் விடையளித்தது. கணக்கு இந்தியர்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தது.

சில சுவாரசியமான விடுகதைகளும் இந்நூலில் ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்றிரண்டைக் காண்போம்.

காலே அரைக்கால் காசுக்கு
நாலே அரைக்கால் வாழைக்காய்
காசுக் கெத்தனை வாழைக்காய்?


பின்னக் கணக்கை மனக்கணக்காகப் போடவேண்டும்.

முதல்வரி : 1/4 + 1/8 = 3/8 காசு
இரண்டாம் வரி : 4 + 1/8 = 33/8 வாழைக்காய்
மூன்றாம் வரி : 3/8 காசுக்கு 33/8 வாழைக்காய் என்றால் ஒரு காசுக்குப் பதினோரு வாழைக்காய்கள்.

எண்ணஞ்சு கால் சிரசனை
இருபத்தொருமா சிரசன்
கொல்லுகிறேன் நானென்றான். ஏன்?
ஏனென்றால்
ச எழுத்து நாலதையும்
த எழுத்து ஒன்பதனையும்
தூக்கிச் சென்றதால்.


எண்ணஞ்சு கால் : 8 X 5 X 1/4 = 10 சிரசன் = இராவணன்
இருபத்தொருமா : 20 X 1/20 = 1 தலையன் = இராமன் (ஒரு மா = 1/20)
ச எழுத்து நாலு : சீ (ச, சா, சி, சீ)
த எழுத்து ஒன்பது : தை (த, தா, தி, தீ, து, தூ, தெ, தே, தை)

சுருக்கிச் சொல்லப்பட்டது இராமாயணம்.

"பணியாரத்தைத் தின்னச் சொன்னால் குழியை எண்ணுகிறானே?" போன்ற பழமொழிகளும் எடுத்தாளப்பட்டுள்ளன. வாழ்க்கையைச் சற்று உன்னிப்பாகக் கவனித்தால், எல்லாவற்றிலும் கணக்கு இருப்பது புரியும். சிற்றுண்டி உண்ணுவோர், இலையில் விழும் பணியாரத்தை எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. வயிறு நிரம்புகிறதா என்று பார்க்கவேண்டும். வயிறு நிரம்பியதும் போதும் என எழுந்து விடவேண்டும். ஆனால் பணியாரம் சுடுகிற பெண்ணுக்கு இது பெரும் கணக்கு. ஓர் ஆள் பத்துப் பணியாரம் உண்ணுகிறார். பத்துப்பேர் உள்ளனர். சுமாராக 100 பணியாரம் தேவைப்படும். ஒரு கல்லில் குடையப்பட்டிருக்கும் குழிகள் 7. எப்படியும் 15 அடசல் எடுக்கவேண்டும். 5 பணியாரங்கள் மீதமாகும். அதைப் பூனைக்கு வைத்து விடலாம். ஓர் உழக்கு பதினைந்து பணியரம் காணும். ஆக ஏழு உழக்கு அரிசி ஊறவைத்தால் அடுத்த நாளைத் தாண்டலாம். இது இல்லத்தலைவிகளின் கணக்கு. எனவே, அடுப்பூதும் பெண்ணுக்கும் கணக்கு தேவை.

அந்தக் காலத்தில் பண்டமாற்றுமுறை இருந்தது. நாட்டுக்கு நாடு அளவுகள் மாறுபடும். ஒன்றிலிருந்து மற்றதுக்கு மாற்ற வேண்டும். படைகளை அணிவகுக்க வைக்கவும் கணக்கு வேண்டும். இப்படி எல்லாச் செயல்களிலும் முக்கியமான ஓர் இடம்பெற்றிருந்ததை நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். கணக்குக்கு உரிய முக்கியத்துவம் அளித்தனர். கணக்கு தொடர்பான நூல்கள், எண்முறைகள், இலக்கங்கள், தமிழ் இலக்கியங்கள், பண்டைத் தமிழ்க் கல்வெட்டுகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட கணிதக் கூறுகளையும் விவரித்துள்ளார். வட்டத்தின் சுற்றளவு காணும் தமிழர்களின் வாய்ப்பாடு வியப்பளிக்கிறது.

விட்டமோர் ஏழு செய்து
திகைவர நான்கு சேர்த்து
சட்டென இரட்டி செயின்
திகைப்பன சுற்றுத்தானே.


சங்கப் புலவரான காக்கைப்பாடினியார் இயற்றிய இப்பாடல் PIE (22/7) என்ற காரணியைக் குறிக்கிறது.

விட்டம் - Diameter - D

2 X (D + 4D/7)
2 X (11D/7)
22D/7
r = D/2
ஃ வட்டத்தின் சுற்றளவு 2 X (22/7) X r.

வட்டத்தின் பரப்பளவு காணவும் பழந்தமிழ்ப் பாடல் உள்ளது.

வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க
சட்டெனத் தோன்றுங் குழி.


வட்டத்தரை = 1/2 X 22D/7 = (22/7) X (D/2)
விட்டத்தரை = 1/2 X D = D/2
பரப்பளவு = (22/7) X (D/2) X (D/2) = (22/7) X r X r.

வியப்பாக இருக்கிறதா? இதுபோல் இன்னும் எண்ணற்ற செய்திகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

அடுத்த இயல் நீட்டல் அளவுகள். இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரம் நீளம் ஆகும். இவற்றை அளப்பதில் தமிழர் கொண்டிருந்த அளவைகளையும் அளக்கும் முறைகளையும் விரிவாக ஆராய்ந்துள்ளார். ஆங்கிலமுறை, மெட்ரிக் முறை, தமிழ்முறை ஆகிய மூன்றிலும் உள்ள பட்டியலும் தரப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை, மலைபடுகடாம், பதிற்றுப்பத்து போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள அளவைகள் தொடர்பான தகவல்களை விரிவாக விவரித்துள்ளார். மாதவி ஆடிய மேடையை இளங்கோவடிகளின் துணைகொண்டு இருபதாம் நூற்றாண்டில் நிர்மாணித்த அனுபவம் இருந்ததால், இவரது விளக்கங்கள் படிக்க எளிதாகவும் சுவையாகவும் இருக்கின்றன. கண்ணகியும் கோவலனும் பயணம் செய்த தொலைவுகளை வரைபடமாகவும் தந்துள்ளார். மணிபல்லவத்துத் தருமபீடிகையின் அளவுகளைச் சீத்தலைச் சாத்தனார் சொல்வது, சாதுவன் உரை, மணிமேகலையின் வான்பயணம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.

நடைமுறை அளவுகளான விரல், விரற்கடை, பிடி, சாண், அடி, முழம் போன்றவற்றிற்கு இணையான ஆங்கில மற்றும் மெட்ரிக் அளவைகளும் தரப்பெற்றுள்ளன. கோயில்கள் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அளவுகள் அந்தந்தக் கோயில்களிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்வெட்டுகளிலும் அத்தகைய கோல்கள் எத்தனை பயன்படுத்தப்பட்டன என்பதையும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு கோயிலுக்கும் வேறுபடும்.

தஞ்சை பெரியகோயில் - 24 விரல்
திருவண்ணாமலை - 24 விரல்
சிதம்பரம் - 25 விரல்
காஞ்சி வரதர் கோயில் - 26 விரல்
மதுரை மீனாட்சி கோயில் - 23 3/4 விரல்
பழனி திருவாவினன்குடி - 23 1/2 விரல்

முனைவர் கலைக்கோவன் கண்டுபிடித்துக் கொடுத்த திருப்பைஞ்ஞீலி, வாலிகண்டபுரம் மற்றும் தென்னேரி உத்தமசோழீச்சுரம் கோயில் அளவைகளையும் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் கண்டறிந்து கொடுத்த சிந்துவெளி அளவுகோல்களையும் பதிவு செய்துள்ளார். விரல் நீளம் என்கிறோமே, எந்த விரல் என்று சந்தேகம் வராதா? இதற்காகத் தனியாக ஓர் ஆய்வே நடத்தியிருக்கிறார். அடியார்க்கு நல்லார் முதல் பலவற்றை மேற்கோள் காட்டி, பெருவிரல் நீளமே இவ்வளவுடன் ஒத்து வருவது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

அடுத்ததாகப் பாசனம். இதில் நீர்வட்டம் என்ற தலைப்பில் கீழ்க்கண்ட சுவையான தகவலைப் பரிமாறிக்கொள்கிறார்.

கடல்நீர் கடும் வெப்பத்தால் ஆவியாகி, மேகமாகத் திரண்டு, உள்நாட்டில் மலைகளின்மீது மழையாகப் பொழிகின்றது. பொழிகின்ற நீரில், நிலத்தில் புகுந்ததுபோக, எஞ்சியது ஓடி மீண்டும் கடலிலேயே கலக்கின்றது. நீர்வட்டம் என்ற தலைப்பில் இரண்டாம் வகுப்பிலேயே இப்பாடம் தற்போது கற்றுத் தரப்படுகிறது. இக்கருத்து உருவாவதற்குமுன் வேறு பல கருத்துகள் நிலவியிருந்ததைக் காணுதல் வேண்டும்.

மேலை நாட்டில் பிதாகரசுக்கு ஆசிரியராக இருந்தவர் தேல்ஸ். கி.மு. ஏழாம் நூற்றாண்டினர். கடலிலிருந்து, நிலத்துக்கடியிலுள்ள பாறைப் புழைகளின் வழியாகக் கடல்நீர் ஊடுருவி வந்து, மலைப் பாறைகளின் அழுத்தத்தால், தரையிலிருந்து ஊற்று நீராக வெளியேறி அருவியாகிறது என்று கருதினர். (Konard Keiehack; Graund Wasser and Quellenkinde, p.74).

கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பிளாட்டொ 'நிலத்துக்கடியில் டார்டாரஸ் எனப்படும் பெரிய குகைவாயில்கள் இருக்கின்றன; இவற்றின் வழியாகக் கடல், குளம், நதி, ஊற்று ஆகிய அனைத்திற்கும் நீர் வருகிறது' என்பார். 'கடல் நீர் ஆவியாக மாறுகிறது. அது ஆகாயத்தில் மேகமாகச் செல்வது போலவே நிலத்தின் அடியிலும் மேகமாகச் செல்கிறது. மலையின் அடிப்பகுதிக்கு வந்ததும் இம்மேகம் நீராக மாறி ஊற்றுகள் வழியே சுரக்கிறது' என்பது பிளேட்டோவின் மாணவரான அரிஸ்டாட்டிலின் கருத்து. (Paramelle Liable; L'art de decourir les sources, 1856. மேற்கோள்: வா.செ.குழந்தைசாமி, பழந்தமிழரும் பொறியியலும், பக். 147-148)

தமிழ்ப் புலவர்களில் பட்டினப்பாலை ஆசிரியர் உருத்திரங்கண்ணனார், பரிபாடல் ஆசிரியர்கள் நல்லந்துவனாரும் மையோடக் கோவனாரும் நீர்வட்டம் பற்றிப் பேசுகின்றனர்.

வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல
நீரினின்று நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர் பரப்பவும்
அளந்து அறியாப் பல பண்டம்

(பட்டினப்பாலை 126-131)


என்ற பட்டினப்பாலை வரிகளில், புகார்த்துறைக் கப்பல் சரக்கு தரைக்கு வருவதும், தரைச்சரக்கு கப்பல் ஏறுவதும் புலவருக்கு மழைமேகம் கடலில் நீர் எடுத்துத் தரையில் பொழிவதையும், தரைநீர் கடல் சேருவதையும் நினைவூட்டுகிறது.

நிறைகடல் முகந்து உராய், நிறைந்து நீர் தளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று வானம்

(பரிபாடல் 6 : 1-2)


என்பார் நல்லந்துவனார். வைகை வெள்ளம் அவரது சிந்தனையைத் தூண்டி வெள்ளப்பெருக்கிற்குக் காரணத்தை ஆராயப் புகுகின்றது.

திரை இரும் பனிப்பௌவம் செவ்விதா அற முகந்து
உர உரும் உடன்ற ஆர்ப்ப ஊர் பொறை கொள்ளாது
கரை உடை குளமெனக் கழன்று வான் வயிறு அழிபு
வரை வரை தொடுத்த வயங்கது வெள்ளருவி

(பரிபாடல் 7 : 1-4)


குளத்தின் கரை உடைந்தால், எவ்வாறு பெருவெள்ளம் தோன்றுமோ, கடலிலிருந்து ஆவியாகிய மேகம் அவ்வாறு மழையைக் கொட்டுகிறது என்கிறார் மையோடக் கோவனார். கடல்நீர் ஆவியாகி மேகமாக நகர்ந்து மழையாகப் பொழிந்து அருவியாக ஓடும் செய்தியோடு, அவ்வாறு ஓடுகின்ற நீர் குளங்களில் சேமிக்கப் படுவதையும், அவ்வப்போது குளக்கரை உடைந்துபோகும் செய்தியையும் இங்கே அறிவிக்கின்றார்.

தமிழ்ப் பாடல்களில் கடல்நீர் தரைப்புழை வழியாக ஊடுருவும் செய்தி காணப்படாமையாலும், மேகத்திற்கு நீர்தரும் மூலப்பொருளே கடல் என்பது தெளிவாகக் கூறப்பட்டமையாலும், பண்டைத் தமிழகத்தில் நீர்வள இயலில் ஒரு தெளிவான கருத்து நிலவியிருந்ததென்று கருதலாம்.


மற்ற இயல்களைவிட இது அதிக நீளமானதாக இருக்கிறது. தொல்காப்பியம் கூறும் கற்சிறை என்ற அணை, திருக்குறளில் வரும் மழை தொடர்பான செய்திகள், சிலப்பதிகாரம் தரும் 'மாமழை போற்றுதும்', 'மாவண்கிள்ளி மூலம் இளங்கோ தரும் மாதம் மும்மாரி பற்றிய விளக்கம்', மணிமேகலையில் வரும் வனங்கள், பூங்காக்கள், எந்திரவாவி, பரப்புநீர், கரப்புநீர், ஏரிகளில் நீர்க்கசிவு, பரிபாடல் கூறும் நீர்வட்டம், நீரேற்று கருவிகள், சீவகசிந்தாமணி தரும் ஏரி நிரம்பிக் கலிங்கல் வழியே வெளியேறுதல், பெருந்தொகை, நிகண்டுகள், மழைக்குறி சாஸ்திரம் முதலியவற்றையும் விரிவாக விளக்கியுள்ளார்.

இலக்கியங்கள் வழியே நீர்வள இயலுக்காகப் பாடுபட்ட பல தலைவர்களையும் அறிமுகப்படுத்துகிறார். 'நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய' என்று ஆக்கிய பாண்டியன் நெடுஞ்செழியன், 'காடுகொன்று நாடாக்கிய' திருமாவளவன் என்னும் கரிகாலன், ஸ்ரீமாற ஸ்ரீவல்லப பாண்டியன், மருதுபாண்டியர் பற்றிய செவிவழிக் கதை ஆகியவற்றைக் கூறுகிறார். வரலாற்றுக்கால நிகழ்ச்சிகளை மட்டுமின்றி, தான் பொறியியலில் படித்த புவியியல்கால நிகழ்வுகளையும் ஆங்காங்கே எடுத்தாண்டுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள ஆறுகள், ஏரிகள், அணைக்கட்டுகள் போன்றவற்றின் வரலாறுகளை எழுதியுள்ளார். மதகுகளைப் பற்றியும் அவைசார்ந்த கல்வெட்டுகளையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலைப் படிக்கப் படிக்க நம் பாட்டன்கள் உலகுக்கே அறிவு பாலிக்கக்கூடிய திறமை பெற்றிருந்தபோதும், நம் தலைமுறையினர் மேலைநாட்டுத் தொழில்நுட்பங்களுக்கும் கலாச்சாரத்துக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கிறோமே என்ற வேதனைதான் மேலிடுகிறது. மற்ற நாடுகள் நம் அறிவைப் பயன்படுத்திக்கொண்ட அளவுக்கு நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. ஜப்பானில் இன்று புத்தகக் கடைகளில் அதிக அளவு விற்பனையாகிக் கொண்டிருப்பது 'இந்திய முறைக் கணிதம்' என்ற புத்தக வரிசைதான். ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் இது பாடமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால் நம் குழந்தைகள் கால்குலேட்டரின் உதவியால் மனக்கணக்கு என்னும் அரிய செல்வத்தை இழந்து வருகின்றனர். பாசனத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. சோறுடைத்த சோழநாட்டு மக்கள் விவசாயம் வேறு ஏதோ நாட்டு மக்களுடைய தொழில் என்று எண்ண ஆரம்பித்திருக்கின்றனர். புலம்ப ஆரம்பித்தால் இப்படியே முடிவின்றிப் புலம்பிக் கொண்டிருக்கலாம். இந்நூலின் இரண்டாம் பாகத்திலிருக்கும் கட்டடங்கள், எந்திரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகியவற்றைப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.