http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 59

இதழ் 59
[ மே 15 - ஜுன் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

ஒற்றுமையே உன் விலையென்ன?
பழந்தமிழ்க் கல்வெட்டுக்கள் - 2
Virtual Tour on Kudumiyanmalai - I
Silpi's Corner - 10
Remembering T.V.Sadasiva Pandarathar (1892 - 1960)
இதழ் எண். 59 > கலையும் ஆய்வும்
பழந்தமிழ்க் கல்வெட்டுக்கள் - 2
மா. இலாவண்யா
சென்ற மாதம் தமிழ் பிராமி கல்வெட்டுகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் கல்வெட்டு, பானைஓட்டுக் கீறல்களின் பாடங்களைப் பார்த்தோம். இந்த மாதம் மேலும் இரு கல்வெட்டுப் பாடங்களைப் பார்க்கலாம்.

கீழே உள்ள படத்தினைப் பாருங்கள். இக்கல்வெட்டு திருப்பரங்குன்றத்தில் மேற்கு மலைச் சரிவில் உள்ள ஒரு குகையின் பின்புறச் சுவரின் அருகில் உள்ள உயர்த்திய கற்படுக்கைகளின் முன்புறம் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ் கல்வெட்டுகள் பொதுவாக நாம் எழுதும் வகையில் இடமிருந்து வலமாக பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தக் கல்வெட்டில் கல்வெட்டு கற்படுகைகளின் முன்புறத்திலிருந்து பார்ப்பவருக்கு வலமிருந்து இடமாகவும் தலைகீழாகவும் பொறிக்கப்பட்டுள்ளது போல் காணப்படும். முத்துப்பட்டி என்ற ஊரில் கரடிப்பட்டி குன்றில் உள்ள குகையிலும் இதே போல எழுத்துக்கள் வலமிருந்து இடமாகவும் தலைகீழாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த கல்வெட்டுகளில் விசேஷம் என்னவென்றால் இக்கல்வெட்டுகளை கற்படுக்கைகளின் மேல் உட்கார்ந்து கீழே குனிந்து பார்ப்பவருக்கு சரியாகவும் இடமிருந்து வலமாகவும் தெரியும். இக்கல்வெட்டுகளை செதுக்கியவர்கள், இவற்றை கற்படுக்கைகளில் அமர்ந்து தியானம் செய்யும் சமண முனிவர்கள் பார்வையில் படவேண்டுமென்ற எண்ணத்துடன் இவ்வகையில் செதுக்கியிருக்கலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுப் படம் சரியாக இடமிருந்து வலமாக தெரியுமாறு எடுக்கப்பட்டுள்ளது.





கல்வெட்டுப் பாடம்: 'அ ந து வ ன கொ டு பி த வ ன' - அந்துவன் கொடுபிதவன் என்று படிக்கவேண்டும்.

செய்தி: அந்துவன் என்ற பெயருடைய ஒருவன் இதைக் கொடுத்தவன் என்று உள்ளது. இதை என்பது கற்படுக்கையை குறிப்பிடுவதாகக் கொண்டு, அக்கற்படுக்கையை முனிவருக்காக ஏற்படுத்தியவன் அந்துவன் என்று பொருள் கொள்ளவேண்டும்.

பின்வரும் கல்வெட்டுப்படத்தினைப் பாருங்கள். இதுவும் திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு கல்வெட்டின் ஒரு பகுதி. முழுக்கல்வெட்டையும் புகைப்படம் எடுக்கக்கூடவில்லை. ஆதலால் தெளிவாகத் தெரியும் இந்தக் கல்வெட்டுப் பகுதியினை படம் எடுத்தோம்.





இந்த ஒரு வரிக்கல்வெட்டு இரு பகுப்பாக ஒரு ஒற்றைக் கோடு மூலம் பகுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நான்காவதாக வரும் ஒரு நீள ஒற்றைக் கோடுதான் பகுப்பதற்காக வெட்டப்பட்டுள்ள கோடு. ல ய ன என்று தெரியும் முதல் மூன்று எழுத்துகளும் முழுக்கல்வெட்டின் முதல் பகுதியில் உள்ள கடைசி மூன்று எழுத்துக்களாகும். இக்கல்வெட்டில் நீள்கோட்டிற்கு பிறகு வரும் எழுத்துக்கள் முதற்பகுதி எழுத்துக்களைவிட அளவில் சிறியனவாக உள்ளன. முதற்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக அப்பகுதி எழுத்துக்கள் பெரியனவாக வெட்டப்பட்டிருக்க வேண்டும்.

கல்வெட்டு புகைப்படத்தில் இல்லாத முதல் பகுதி - 'எருகாடுர் இழகுடும்பிகன் பொலாலையன்' என்று உள்ளது.

இரண்டாவது பகுதி புகைப்படத்தில் நீள் கோட்டிற்கு பிறகு உள்ளது - 'செ ய தா [ன*] ஆ ய ச ய ன நெ டு சா த ன' - செய்தான் ஆய்சயன் நெடுசாதன் என்று படிக்கவேண்டும்.

முதல் பகுதி செய்தி - எருகாடுர் என்பதை எருகாட்டூர் என்று படித்து, எருகாட்டூர் என்ற ஊரின் இழ குடும்பத்தை சேர்ந்த பொலாலையன் வழங்கியது என்று பொருள் கொள்ளலாம். அவன் வழங்கியது அந்த குகையும் அதில் அமைந்துள்ள கற்படுக்கைகளாகவும் இருக்கவேண்டும். இதில் ஈழ என்பதைத் தான் இழ என்று குறித்திருக்கிறார்கள் என்று திரு ஐராவதம் மகாதேவன் கருதுகிறார். மேலும் ஈழ என்பது இலங்கை ஈழத்தைக் குறிப்பதாகவோ அல்லது மரம் ஏறுபவர்களை ஈழ என்று குறிப்பதனால், மரம் ஏறும் வகுப்பைச் சேர்ந்தவன் பொலாலையன் என்ற பொருளில் வழங்கியுள்ளதாகவோ இருக்கலாம் என்று அவரது 'Early Tamil Epigraphy" புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில் இரண்டாவதாக வரும் மரம் ஏறும் குடும்பத்தை சேர்ந்தவன் என்ற கருத்து மிகவும் ஏற்புடையதாக இருப்பதாகவும் கருதுகிறார்.

இரண்டாவது பகுதி செய்தி - ஆய்சயன் நெடுசாதன் என்பவன் அந்த கற்படுக்கையை செய்தவன் என்று பொருள் கொள்ளலாம்.

இதுபோன்ற கல்வெட்டுகளின் மூலம் அந்நாளைய மக்களின் வாழ்க்கைமுறை, ஊர் பெயர்கள், இனப்பெயர்கள், ஆண் மற்றும் பெண்களின் பெயர்கள் போன்று எத்தனையோ சுவாரசியமான செய்திகளைத் தெரிந்துகொள்ள முடிகிறதல்லவா.

முன்பே குறிப்பிட்டபடி தமிழ் பிராமி எழுத்துக்கள் வளர்ச்சியடைந்து 5ம் நூற்றாண்டிற்கு மேல் வட்டெழுத்தாக மாற்றமடைந்தது. வட்டெழுத்த்துகளும் 5-6ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துகள் முற்கால வட்டெழுத்தென்றும், 6ம் நூற்றாண்டிற்கு பிற்பட்ட எழுத்துக்கள் பிற்கால வட்டெழுத்தென்றும் பகுக்கப்பட்டிருக்கின்றன. முற்கால வட்டெழுத்து எவ்வாறு இருந்தன என கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அடுத்த மாதம் சில வட்டெழுத்துக் கல்வெட்டுகளின் படங்களையும் செய்தியினையும் பார்க்கலாம்.



this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.