http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 69

இதழ் 69
[ மார்ச் 16 - ஏப்ரல் 15, 2010


இந்த இதழில்..
In this Issue..

நூற்றாண்டு நாயகர்கள் - தமிழர் பண்பாடு
வாசிப்பில் வந்த வரலாறு - 2
கயிலைப் புனிதர் சைவத்திரு ப.மூக்கப்பிள்ளை
Gandharva Ganam - Book Review
குடவோலை கண்ட தமிழ்க்குடியே!
இதழ் எண். 69 > இதரவை
கயிலைப் புனிதர் சைவத்திரு ப.மூக்கப்பிள்ளை
இரா. கலைக்கோவன்

திருச்சிராப்பள்ளியில் திருமுறைகள் தொடர்பான விழாக்கள் என்றாலே அவர் பெயரை நிகழ்நிரலில் உறுதியாகப் பார்க்க முடியும். தமிழ், சைவம், வரலாறு என்னும் மூன்றின் பாலும் நெருங்கிய நேயமுடையவர். குழந்தை போல் சிரிப்பு; திருநீற்றால் நிறைந்த நெற்றி. திருமுறைகள் என்றால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்பறாது மணக்க மணக்கப் பேசும் இயல்பு. தமிழ்நாட்டுத் திருமடங்களுடன் நெருங்கிய தொடர்புடைய அந்தப் பெருந்தகை வேறு யாருமல்லர், கயிலைப் புனிதர் சைவத்திரு ப.மூக்கப்பிள்ளை அவர்களேதான்.

'திருஎறும்பியூர் அருள்நெறித் திருக்கூட்டத்தார் உங்கள் உரையைக் கேட்க விரும்புகிறார்கள்' என்று தவத்திரு அடிகளார் பெருமான் அழைக்க, அங்குச் சென்றபோதுதான் கயிலைப் புனிதரை நெருக்கமாகச் சந்திக்கும் வாய்ப்பமைந்தது. அதற்கு முன்னால் அவரைப் பார்த்திருக்கிறேன்; பழகியதில்லை. அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அந்தக் கூட்டத்தில் என்னையும் தொழிலதிபர் அருட்செல்வர் திரு.வீ.கண்ணப்பனாரையும் பாராட்டக் கருதியிருந்தமை எனக்குத் தெரியாது. நிகழ்ச்சியின் ஊடே அடிகளார் எங்களைப் பற்றிச் சில சொல்லிப் பாராட்டிப் பொன்னாடை போர்த்தியபோதுதான், அப்பெருந்தகையின் பார்வையில் என் பணிகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து உளமார மகிழ்ந்தேன். வாழ்த்திப் பேசிய கயிலைப் புனிதர் என் கோயிலாய்வுப் பணிகளைக் குறிப்பிட்டபோதுதான் அவர் பார்வைக்கும் என் பணிகள் சென்றிருப்பதை அறியமுடிந்தது.

தில்லை நகரில் வாழ்ந்த அருளாளர் ஒருவர் ஆர்வலர்களுக்காகத் தம் வீட்டின் முன்பகுதி அறையில் திருமுறை நூலகமொன்றைத் தொடங்கினார். அத்தொடக்க விழாவிற்கு நானும் கயிலைப் புனிதரும் அழைக்கப்பட்டிருந்தோம். விழாவில் பேசிய திரு. சுவர்ண காளீசுவரன், பழையாறைக் கோயில்களைப் பற்றித் தவறான தகவல்களைத் தந்துகொண்டிருந்தார். நான் அப்போதுதான் பழையாறைக் கோயில்கள் அனைத்தையும் ஆய்வுசெய்து முடித்திருந்தேன். அவர் பேசப்பேச எனக்குப் பொறுக்கவில்லை. என்னருகே அமர்ந்திருந்த கயிலைப் புனிதர் என் உள்ளக் கொதிப்பை எவ்வாறு உணர்ந்தாரென்று எனக்குத் தெரியவில்லை. 'பிழையாகச் சொல்கிறாரோ?' என்று வினவினார். 'ஆம்' என்றேன். 'உங்கள் பேச்சின்போது தயங்காமல் மறுக்கலாம்' என்றார். அவர் அப்படிச் சொல்லாமல் இருந்திருந்தாலும் நான் திரு. காளீசுவரனின் பிழையான கூற்றுகளை மறுத்திருப்பேன். ஆனால் அப்பெருந்தகை அநுமதி தந்தமை என்னை வாழ்த்துவது போலிருந்தது. என் உரை முழுவதும் திரு. காளீசுவரனே வியாபித்திருந்தார். நேரடி ஆய்வுகளின்றிக் கருத்துச் சொல்வது எத்தனை பிழையான செயல் என்பதைச் சான்றுகளோடு சுட்டியபோது கயிலைப் புனிதரைப் பார்த்தேன். அவர் புன்னகை பொலிந்த முகத்தினராய்க் கருத்தோடு கேட்டுக் கொண்டிருந்தார். என் உரை முடிந்ததும், 'கண் திறப்பாக அமைந்தது' என்று அங்கேயே அனைவர் முன்னிலையிலும் பாராட்டி மகிழ்ந்தார்.

எனக்குத் திரு. ப.மூக்கப்பிள்ளையிடம் மிகப் பிடித்த விஷயம் அவரின் உடனடிப் பாராட்டும் உளந்திறந்த கருத்துக்கூறலும்தான். எதற்கும் தயங்கார். யாரென்றும் நோக்கார். மனதில் பட்டதைத் தெளிவுற மொழியும் ஆற்றல் அவருக்குண்டு. அந்தத் துணிவே அவருக்கோர் அழகையும் இளமைப் பொலிவையும் தருவதை நான் பலமுறை இரசித்திருக்கிறேன். பலரை அணுக்கமாக அநுமதித்திருந்தாலும் ஒவ்வொருவரின் நிறையும் குறையும் அறிந்தவராகவே அவர் இருக்கிறார் என்பதை அவருடன் அமைந்த நெருங்கிய உரையாடல்களால் அறிந்திருக்கிறேன். தொடர்புள்ளவர், தொலைவிலுள்ளவர் என்றெல்லாம் பார்க்காமல் கருத்துரைக்கும் அவரது நேர்மையும் எனக்குப் பிடிக்கும். திருமடங்களுடன் இணக்கமான பிணைப்பிருந்தாலும் மடத்தின் செயற்பாடுகள் சிறக்க வேண்டுமென்ற நோக்கில் அந்தந்த மடத்தலைவர்களிடமே சில, பல பரிந்துரைக்க வல்லவராய் அவரிருப்பது சைவத்திற்குப் பேறு.

ஒரு தமிழ்ப் பற்றாளராகவும் அருளாளராகவும் நற்செயல்களுக்குத் துணைநிற்கும் இயல்பினராகவும் திருமுறைகளை ஆழ்ந்து நேசிப்பவராகவும் மட்டுமே அவரை அறிந்திருந்த எனக்கு, அவர் பற்றிய கருத்தோட்டத்தையே புதிதாகப் புனைந்துகொள்ளும் அளவிற்கு உதவியது 'ஞானசம்பந்தம்' இதழில் வெளியாகியிருந்த ஓர் அறிவிப்பு. திருமுறைகளை மறுபதிப்புச் செய்யப் பொருளுதவி கேட்டுத் தருமபுரம் திருமடம், அதன் திங்கள் வெளீயீடான ஞானசம்பந்தம் இதழில் வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தது. அடுத்த இதழில் அவ்வேண்டுகோளுக்குச் செவிசாய்த்திருந்த பெருமக்களின் பெயர்கள், அவர்தம் கொடைத் தொகைகளுடன் வெளியாகியிருந்தன. திருவாசகத்தைப் பதிப்பிக்கக் கயிலைப் புனிதர் நூறாயிரம் ரூபாய் கொடையளித்திருந்தார். படித்ததும் வியப்பும் மகிழ்வும் நிறைந்தன. எத்தனை பேருள்ளம் இருந்தால் பாடுபட்டு ஈட்டிய பொருளில் இத்தனை பெருந்தொகையைத் திருமுறைப் பதிப்புக்குத் தந்திருப்பார் என்ற வியப்பு இன்றும் எனக்குண்டு. நான் பேசும் கூட்டங்களில் உரை முடிந்ததும் என்னைச் சந்தித்துப் பெயரட்டைகளை நான் கேளாமலேயே தந்து, 'உங்கள் பணி அற்புதம். வேண்டுவன கேளுங்கள்' என்று அவர்களாகவே வாக்களித்துப் பின் தனித்த சந்திப்புகளில், ஆயிரம் காரணங்கள் கூறியும் கூறாமலும் அகலக் கைவிரிக்கும் போலி மனிதர்களுக்கிடையே அவர் மிகவும் வேறுபட்டவராய்த் தெரிந்தார். அவர்மீது எனக்கிருந்த மரியாதை இந்த அறிவிப்பினால் பன்மடங்கு உயர்ந்தது.

செண்பகத் தமிழரங்கு க.இராசவேலுவை எனக்குப் பிடிக்கும். மறைவிற்குப் பிறகும் மனைவியைத் தொடர்ந்து நேசித்து உருகும் அரிய மனிதர் அவர். அவருடைய வழிகாட்டலில் செண்பகத் தமிழரங்கு திருச்சிராப்பள்ளியின் சிறப்புக்குரியவர்களைப் பாராட்ட ஒரு விழா அமைத்தது. பாராட்டுக்குரியவர்களின் பட்டியலைத் தந்து ஒருவரைத் தேர்ந்து நான் பாராட்டவேண்டுமெனக் கேட்டபோது சற்றும் தயங்காமல் திருவாசகக் கொடையாளர் மூக்கப்பிள்ளையையே தேர்ந்தேன். என் உள்ளத்து உணர்வுகளுக்குச் சொல்வடிவம் தந்து உரையாற்றினேன். அந்த உரை எனக்கு மிகவும் மனநிறைவு தந்த உரைகளுள் ஒன்று. ஒரு கனிந்த உள்ளத்தின் சொந்தக்காரரை அவைக்குச் சரியாக அடையாளம் காட்டியதாகப் பேராசிரியர் சு.தங்கமுத்துவும் பிறரும் பாராட்டியபோது மனம் நெகிழ்ந்தேன்.

அவருடைய பன்னிரு திருமுறைக் கழக ஆண்டு விழாக்களில் அவ்வப்போது நான் அழைக்கபெறுவதுண்டு. பிற சொற்பொழிவாளர்கள் போல் பழங்குப்பைகளையே கிளறிக் கொண்டிராமல் தலைப்பு எதுவாயினும் அதில் புதிது கண்டு கூறல் என் கடமையென இன்றும் கருதிவருவதால் அவர் கூட்டங்கள் திருமுறை ஆய்வுக் களங்களாகவே எனக்கு உதவின. அப்பர் பெருமானைப் புரிந்து கொள்ளவும் அவரிடம் உளமிழக்கவும் கயிலைப் புனிதரும் ஒருவகையில் காரணரெனலாம். 'அப்பர் எனும் அரிய மனிதர்' அவர் களத்தில்தான் முதலில் விதைக்கப்பட்டது. என் உரைகளை அவர் ஆழ்ந்து கவனிப்பார். புதிய தரவுகளைக் கருத்தில் கொள்வார். சரியெனக் கருதின் தயங்காமல் பாராட்டுவார்.

'சேக்கிழாரின் செந்தமிழ்த்திறம்' பேசுமாறு ஒருமுறை பணிக்கப்பட்டேன். பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தரின் முன்னுரையோடு வெளியாகியிருந்த பெரியபுராணப் பதிப்பு என்னிடம் இருந்தது. அ.ச.ஞா தம் முன்னுரையில் எழுதியிருந்த சில வரலாற்றுக் குறிப்புகள் குறித்துப் பேசினாலே போதுமென்று கருதி, அவர் குறிப்புகள் உண்மையிலிருந்து எந்த அளவிற்கு விலகியுள்ளன என்பதைச் சான்றுகளுடன் சுட்டி விளக்கியுரைத்தேன். அந்த உரை முடிந்ததும், 'நான் கூட அதைப் படித்து மயங்கியிருந்தேன். சான்றுகளோடு விளக்கும்போதுதான் சரியானவை வெளிச்சம் பெறுகின்றன. உங்களைப் போன்று கள ஆய்வு செய்பவர்களால்தான் இது இயலும்' என்று கயிலைப் புனிதர் அரவணைத்தது பேரூக்கம் தந்தது.

பல்லவர் கலைப் பணிகளை ஓரளவிற்கு ஆராய்ந்து முடித்திருந்த நிலையில், புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நூலாக்கும் விழைவேற்பட்டது. மாமல்லபுரம் ஒருகல் தளிகளுள் ஒன்றான தருமராஜரதம் என்றழைக்கப்படும் அத்யந்தகாமம் தனி நூலாகவே வடிவெடுக்கத் தொடங்கியிருந்தது. அதைப் பதிப்பிக்கவும், பல்லவர் பணியுடன் பாண்டியர், முத்தரையர் கலைப்பணிகளை ஒப்பிட்டு ஆராயவும் பெருந்தொகை தேவைப்பட்டது. திருவாசக நினைவு தந்த துணிவில் கயிலைப் புனிதரை அணுகக் கருதினேன். வரலாறு இதழ் தொடங்கிய நாளிலிருந்து அதன் அட்டைக்கு விளம்பரம் தந்து அவ்விதழ் தொடர்ந்து வெளிவரத் துணைநின்ற பெருந்தகை அவர். அதனால் அவரைத் தொல்லை செய்யத் தயக்கமாகவும் இருந்தது. பலமுறை எனக்கு நானே விவாதித்துக்கொண்டு அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன்.

நான் சொன்னவற்றையெல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார். என் பணிகளை அவர் எப்படி மதிப்பீடு செய்து வைத்திருக்கிறார் என்பதை அன்றுதான் நான் புரிந்துகொள்ள முடிந்தது. என் எதிர்பார்ப்பு, தயக்கம் இரண்டையும் கண்டுணர்ந்தவராய், அவரே, எவ்வளவு தொகை வேண்டியிருக்கும் என்று கேட்டார். எனக்குச் சட்டென்று எதுவும் சொல்லத் தெரியவில்லை. பெருந்தொகையாகும் என்று மட்டும் உணர்ந்திருந்ததால் அதை மட்டுமே கூறினேன். 'எது பற்றியும் கவலுறாமல் பணி தொடருங்கள். உங்கள் உழைப்பின் தகுதியும் தமிழிற்கு அது தேவையென்பதையும் நானறிவேன். செய்வோம்' என்று மட்டுமே கூறினார். என் கண்களில் நீர் மல்கியது. வரலாறு இதழிற்காகத் தட்டக்கூடாத கதவுகளையெல்லாம் தட்டியிருக்கிறேன். தேவைக்குத் தருவதாக வாக்களித்துக் கேட்ட நேரங்களில் மறுமொழிகூட அனுப்ப மறந்து போனவர்களை நினைவு வைத்திருக்கும் என் உள்ளம் அவர் அரவணைப்பில் குழைந்தது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகக் கருத்தரங்கிற்காகத் தயார் செய்து கொண்டிருந்த டிசம்பர்த் திங்களில் ஒருநாள் கயிலைப் புனிதர் என் மருத்துவமனைக்கு வந்தார். சில மணித்துளிகள் அன்போடு பேசிக்கொண்டிருந்துவிட்டு, 'உங்கள் பணிக்கு உதவும்' என்று கூறிக் கையில் ஒரு காசோலையைத் தந்தார். அதை நான் சற்றும் எதிர்பார்க்காமையால் அதிர்ந்து போனேன். கேட்டதை நினைவு கொண்டு இல்லம் தேடிவந்து உதவும் இவர்போல் அருளாளர்கள் வேறு யாரேனும் இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருப்பார்களா என்பது ஐயப்பாடே. அவர் தந்த அந்த ஐம்பதாயிரம் ரூபாயில்தான் 'அத்யந்தகாமம்' நூல் உருவாயிற்று.

மாமல்லபுரம் தர்மராஜரதம் அனைவரும் அறிந்த தளி. அதை உருவாக்கிய இராஜசிம்மப் பல்லவர் அத்தளியைத் தம் பெயரால் அத்யந்தகாமப் பல்லவேசுவர கிருகம் என அழைத்து மகிழ்ந்தார். அந்தத் தளி பற்றிய இறுதிக்கட்ட ஆய்வுகளுக்கும் அவ்வாய்வை நூலாக்கும் பணிக்கும் கயிலைப் புனிதரின் கொடை உதவியது. வரலாற்று நூல்களைத் தம் பிள்ளைகளைவிட மிகுதியாய் நேசிக்கும் திரு. வெள்ளையாம்பட்டு சுந்தரம் அத்யந்தகாமத்தைப் படித்துவிட்டு மனமுருகிப் பாராட்டியபோதும், என்னுடன் உரையாடக் கருதின் உடனே சென்னையிலிருந்து தம் மகிழ்வுந்தில் வந்து பேசிக்களித்து வாழ்த்திச் செல்லும் முதுபெரும் பெருந்தகை திரு. நித்தியானந்தம், அத்யந்தகாமத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்டு, 'இது தமிழர் சொத்து' என்று உளமுருகச் சொன்னபோதும் நான் கயிலைப் புனிதரின் கரங்களுக்குத்தான் நன்றி கூறினேன். அப்பெருந்தகை உளம் கனிந்ததால் அன்றோ அத்யந்தகாமம் அச்சானது.

கயிலைக்குச் சென்று கயிலைப் புனிதராய்த் திரும்பியதும் என் இல்லம் வந்து வாழ்த்தித் திருநீற்றுப் பிரசாதமும் கங்கைநீரும் தந்த அப்பெருந்தகையின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ளும் பேறு எனக்கு வாய்த்தது. விழாவில் பெருந்திரளாய் அன்பர்கள் கூடியிருந்தமையாலும், திருமடத்துத் தலைவர்கள் உரைக்கே நேரம் போதாமல் இருந்தமையாலும் என்னால் அங்கு அப்பெருந்தகையைப் போற்றி உரையாற்றக்கூடவில்லை. அடுத்தநாள் அவர் அநுமதி பெற்று நானும் என் வாழ்வரசியும் அவர் இல்லம் சென்று வாழ்த்துப் பெற்றபோது, தனக்கு வந்திருந்த பொன்னாடைகளுள் ஒன்றை எனக்குப் போர்த்தி, என் துணைவியாரிடம், 'கவனமாய்ப் பார்த்துக்கொள் அம்மா, இவரிடமிருந்து தமிழ்நாடு நிறைய எதிர்பார்க்கிறது' என்று அன்பொழுகக் கூறியவேளை என் கண்கள் ஈரமானதைத் தடுக்கக்கூடவில்லை.

கயிலைப் புனிதரின் அன்புவட்டம் மிகப்பெரியது. தமிழ், திருமுறைகள் தொடர்பான தமிழ்நாடு தழுவிய அத்தனை அமைப்புகளுடனும் அவருக்கு உறவுண்டு. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அவர் உதவி கேட்டுப் பலரும் வந்து பயன்பெற்றுச் செல்வதை நான் அறிவேன். யாருக்குத் தரவேண்டும், எவ்வளவு தரவேண்டும், எப்போது தரவேண்டும் என்பனவற்றில் அவருக்கென்று ஒரு கணக்குண்டு என்பதைப் பேராசிரியர் எழில்முதல்வன் கூறக் கேட்டிருக்கிறேன். அவரால் அரவணைக்கப்பட்ட அமைப்புகள் ஒன்றிரண்டல்ல. எனினும், யாருக்கு என்ன தருகிறோம் என்பதை அவர் எப்போதுமே வெளிச்சொன்னதாக அறியேன். வலக்கை தருவதை இடக்கை அறியாத அறச் சிந்தனையாளராகவே அவரை நான் பார்த்திருக்கிறேன்.

அவரைச் சந்திக்க நான் செல்லும்போதெல்லாம் இளமை பொங்கும் அவர் முகத்தையும் கள்ளமில்லா அந்தச் சிரிப்பையும் நெஞ்சில் நிறைத்து வருவேன். ஒவ்வொரு முறை விடைபெறும்போதும் திருமுறை அடிகளை வாய்மணக்க இசையுடன் சொல்லித் தம் திருநீற்றுப் பையிலிருந்து கைநிறைய திருநீறு எடுத்து என் நெற்றியில் இட்டு வாழ்த்தி, 'உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள், நிறைய செய்யவேண்டியுள்ளது' என்று அன்பொழுகக் கூறுவார். அப்பெருந்தகையின் திருக்கரம் என் நெற்றியில் படும்போதெல்லாம் சிவபெருமானே என்னை வாழ்த்துமாறு போல உணர்ந்திருக்கிறேன். வாழ்க்கையில் இதுபோன்ற வாய்ப்புகள் எத்தனை பேருக்கு அமையும்! உளம் நிறைந்த அவர் வாழ்த்தும் உணர்வுகளை உற்சாகப் படுத்தும் அவர் அன்பும் என்னைத் தடையின்றி நடக்க வைக்கின்றன. என் பயணத்தின் நோக்குகளைத் தோன்றாத் துணையாய் இருந்து அவருடைய ஆற்றல் வழிநடத்துகிறது. கயிலைப் புனிதரின் திருக்கண்ணோக்குக் கூட்டத்தில் அடியேனும் ஒருவன் என்பது மகிழ்வு தருவது மட்டுமன்று, நிறைவானதும்கூட.

திருச்சிராப்பள்ளி டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினரால் வெளியிடப்படும் வரலாறு ஆய்விதழ் தொகுதி 14,15 இல் வெளியான கட்டுரை இது.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.