http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 72
இதழ் 72 [ ஜூன் 16 - ஜூலை 15, 2010 ] இந்த இதழில்.. In this Issue.. |
வாசகர்களுக்கு வணக்கம். அனைவரும் நலம்தானே?
நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வரலாறு டாட் காமின் இந்தக் கட்டுரை ஓரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டுரை. ஆம். இது நமது திங்களிதழின் ஆயிரமாவது கட்டுரை ஆகும். சாதாரணமாகப் பார்த்தால் ஆயிரம் என்பது பெரிதாகத் தோன்றாது. ஆனால் முழுக்க முழுக்க வரலாறு மற்றும் வரலாறோடு நெருங்கிய தொடர்புடைய இலக்கியம் சார்ந்த ஆயிரம் ஆக்கங்கள்... முழுக்க முழுக்க உலகத் தமிழர்களின் ஆதரவை மட்டும் நம்பி இணையத்திலேயே நேரடியாகப் படைக்கப்பட்ட ஆயிரம் ஆக்கங்கள்... ஆறு வருடங்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்னும் ஒரு மாதத்தில் ஏழாவது வருடத்தில் கால்பதிக்கப் போகும் ஆயிரம் ஆக்கங்கள்... எனும்போது இதன் பரிமாணம் புறக்கணிக்கப்படக்கூடிய ஒன்றல்ல என்பது புலனாகும். இதனைச் சாத்தியமாக்கிய பெருமை முழுவதும் வாசகர்களாகிய உங்களையே சாரும். கடைவிரித்தேன் - கொள்வாரில்லை! என்று கவலையுற்ற வள்ளலாரின் நிலையில் எங்களை விட்டு வைக்காமல் கடைவிரித்த நாள்முதலாய் இன்னும் கொடு! இன்னும் கொடு! என்று நீங்கள் வரலாற்று வைரங்களை வாங்கிக் கேட்டுப் பெற்றதினால்தானே இன்னும் மென்மேலும் ஆழமாக இத்துறைக்குள் செல்லவேண்டும் என்கிற ஆர்வம் வந்தது? உற்சாகம் குறைந்திருக்கும் பல நாட்களில் உங்களின் பின்னூட்டங்களல்லவா வைட்டமின் டானிக்காய் வந்து சேர்ந்தன? பத்து தமிழ் இளைஞர்கள் ஒரு அறிஞரின் கீழ் இணைந்து ஒற்றுமையாய்ச் செயல்பட்டாலே போதும். பலப்பல காரியங்களைச் சாதிக்கலாம் என்பதற்கு எங்களைச் சான்றாக்கிய இறைவனையும் உங்களையும் நோக்கி - இதே ஆதரவை என்றும் கொடுங்கள்! - எனக் கைநீட்டி இறைஞ்சுவதைத் தவிர வேறோன்றும் செய்வதறிகிலோம். நிற்க. வரும் ஆகஸ்ட் மாதம் வரலாறு டாட் காம் ஆறாம் ஆண்டைப் பூர்த்தி செய்ய இருக்கிறது. ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ஏதாவது வரலாற்றுப் பயணத்தை வாசகர்களுடன் மேற்கொள்ளலாமா? அல்லது அரங்கம் அமைத்து விழா எடுக்கலாமா? அல்லது சிறப்பிதழ் வெளியீட்டுடன் நிறுத்திக் கொள்ளலாமா? என்றெல்லாம் யோசனைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது எண்ணங்கள் யோசனைகள் இருந்தால் editor@varalaaru.com எனும் முகவரிக்கு எழுதி அனுப்பலாம். கோவையில் சென்றமாதம் சிறப்பாக நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வரலாறு டாட் காமின் ஆசியர்கள் திரு. கமலக்கண்ணன் - ஜப்பானியர் பார்வையில் தமிழும் தமிழகமும் என்ற தலைப்பிலும், திரு. கோகுல் சேஷாத்ரி - முதலாம் பராந்தகர் காலம் காட்டும் சோழர் சிற்பக் கலைக்கூறுகள் என்ற தலைப்பிலும் கட்டுரை வாசித்தார்கள். வரலாறு டாட் காமின் இணைபிரியாத் தோழர்கள் திரு. சீதாராமனும் திரு. நீலனும் பார்வையாளர்களாய் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். வரலாறு டாட் காம் எனும் குடும்பத்தை வரலாற்று வழியில் ஆற்றுப்படுத்தும் அறிஞர்கள் முனைவர் திரு. கலைக்கோவன் - பரங்குன்றம் வடகுடைவரை வளாகப் புதிய கண்டுபிடிப்புக்கள் எனும் தலைப்பிலும் முனைவர் நளினி - மாடக்கோயில்களில் வெற்றுத்தளங்கள் - எனும் தலைப்பிலும் கட்டுரை வாசித்தார்கள். மாநாட்டில் வரலாறு டாட் காம் குடும்பத்திற்குப் புதிய உறவுகள் சில கிடைத்தன. தொல்லியல் துறையில் பணியாற்றி ஒய்வுபெற்ற ஸ்தபதி இராமன் அவர்களை முதன் முறையாகச் சந்தித்தோம். சந்தித்தவுடனேயே நீண்டநாட்கள் பழகிவிட்டதைப் போன்றொரு எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அவரது படைப்புக்களை இனி நம் மாத இதழ் வெளியிட்டு மகிழும். ஸ்தபதியாருக்கு அடுத்தபடியாக நாகப்பட்டினம் வரலாற்று ஆர்வலர் குழுவை வழிநடத்தும் திரு. இராமச்சந்திரனும் நம் குடும்பத்தில் ஒருவராகி உள்ளார். இவரது படைப்பு அடுத்த இதழில் வெளியாகும். மாநாட்டு அனுபவங்கள் பற்றி நமது கோகுல் சேஷாத்ரி அவருக்கே உரிய நகைச்சுவை நடையில் ஒரு நீண்ட கட்டுரையை இந்த இதழில் வழங்கியுள்ளார். அடுத்த இதழில் கமலக்கண்ணன் அவரது பார்வையில் மாநாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார். மீண்டும் அடுத்த இதழில் சந்திக்கும்வரை தங்களின் அன்பையும் ஆதரவையும் வேண்டி அமைகிறோம். வணக்கம். அன்புடன் ஆசிரியர் குழு.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |