http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 72

இதழ் 72
[ ஜூன் 16 - ஜூலை 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆயிரம் ஆக்கங்கள்
மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 1
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - இனிய பயணம்
நாகப்பட்டினம் வரலாற்று ஆர்வலர்கள் குழு
பங்கேற்பாளன் பார்வையில் செம்மொழி மாநாடு
விதுஷி வித்யா சங்கரின் இரு புத்தகங்கள் – ஒரு பார்வை
நலமிகு கார்த்திகையே!
இதழ் எண். 72 > கலையும் ஆய்வும்
மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 1
இரா.கலைக்கோவன், மு.நளினி
புதுக்கோட்டையிலிருந்து ஏறத்தாழ 20 கி. மீ. தொலைவில் உள்ள திருமெய்யத்துக் குன்றின் கீழ்ச்சரிவில் தென்பார்வையாகச் செதுக்கப்பட்டுள்ள இரண்டு குடைவரைகளுள் பள்ளி கொண்ட பெருமாள் குடைவரை1, பிற்காலக் கட்டுமானங்களின் இணைப்பால் பெரும் வளாகமாக உருவெடுத்துள்ளது.2 சிவன் கோயிலிலிருந்து மதிற்சுவரொன்றால் பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் பிரிக்கப்பட்ட3 இவ்வளாகத்தின் நுழைவாயிலாய் ஐந்து நிலைக் கோபுரம் துணைத்தளம், பிரதிபந்தத் தாங்குதளம் கொண்டு நிற்கிறது.

பூமிதேசம்வரை கருங்கல்லாலான அதன் முதல்தளச் சுவரை எண்முக அரைத்தூண்கள் தழுவியுள்ளன. அவற்றின் போதிகைகளிலிருந்து இறங்கும் நாணுதல்கள் சற்றே நீளமான பூமொட்டுகளைக் கொண்டுள்ளன. ஆழமற்ற கபோதக்கூடுகளில் பரவலாகச் சிற்பங்கள். மேற்றளங்கள் நான்கும் செங்கல் திருப்பணி.

மண்டபம்

முதற் கோபுரவாயிலுக்கும் இரண்டாம் வாயிலுக்கும் இடையில் அமைந்துள்ள நீளமான மண்டபத்தின் மேற்கில் துணைத்தளத்தின்மீது வரிசையாக மூன்று திருமுன்கள். விமானமும் முகமண்டபமுமாய் அமைந்திருக்கும் அவற்றுள், தெற்கிலிருந்து வடக்காகச் சக்கரத்தாழ்வார், ஆண்டாள், கிருஷ்ணர் எழுந்தருளியுள்ளனர். பாதபந்தத் தாங்குதளம் பெற்ற முதலிரண்டில் சக்கரத்தாழ்வார் விமானம் ஒருதள வேசரமாகவும் ஆண்டாள் விமானம் இருதள வேசரமாகவும் அமைய, கிருஷ்ணர் விமானம் கபோதபந்தத் தாங்குதளத்தில் ஒருதளத் திராவிடமாக உள்ளது.

இம்மூன்று திருமுன்கள் அமைந்துள்ள தளத்தின் மீது எழுமாறு, திருமுன்னிற்கு இரண்டு தூண்கள் என ஆறு தூண்கள் உள்ளன. அவற்றுள் சக்கரத்தாழ்வார் திருமுன்னிற்கு முன்னுள்ள தூண்கள் சிற்பங்களேதும் பெறாமல் வெறுமையாக அமைய, ஆண்டாள் திருமுன்னிற்கு முன்னுள்ள தூண்களில் பெண் சிற்பங்கள் உள்ளன. ஒரு பெண் ஆடல்நிலையிலும் மற்றொரு பெண் வலக்கையால் எச்சரிக்கும் நிலையிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளனர். இருவருமே பல்வேறு அணிகலன்களால் அழகூட்டப்பெற்றுள்ளனர்.

கிருஷ்ணர் திருமுன்னிற்கு முன்னுள்ள தூண்களில் கிரீட மகுடமணிந்த ஆடவர்கள் சிற்பங்களாகியுள்ளனர். ஒருவர் வலக்கையில் மலர்மொட்டேந்தி, இடக்கையைக் கடியவலம்பித மாக்கி நிற்க, மற்றொருவர் வணக்க முத்திரையில் பத்திமையுடன் காட்சிதருகிறார். கடியவலம்பிதர் தூணின் கிழக்கு முகத்தில் காட்டப்பட்டுள்ள பெண் அவரது துணைவியாகலாம். வணக்கர் தூணின் கிழக்கு முகத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய கைகளுடன் காட்சிதருகிறார். இத்தூண்களில், 'செவ்வப்ப இராமன் நித்தம் சதாசேர்வை' 'தயிலப்பன் நித்தம் சதாசேர்வை' என்று அறிவிக்கும் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன.

மண்டபத்தின் கிழக்கில் ஆண்டாள் திருமுன்னுக்கு எதிர்ப்புறம் இருக்குமாறு துணைத்தளத்தின் மீது பாதபந்தத் தாங்கு தளத்தில் ஒருதளத் திராவிடமாக எழும் இலட்சுமிநரசிம்மர் திருமுன் அமைந்துள்ளது. இம்மேடையின் விளிம்பிலுள்ள தூண்கள் சிற்பங்கள் பெறவில்லை. ஆனால், திருமுன் முன்னுள்ள தூண்களில் அனுமாரும் அடியவர் ஒருவரும் அஞ்சலியில் உள்ளனர்.

மேற்கில் இருக்கும் ஒவ்வொரு திருமுன் முன்பும் இரண்டிரண்டு தூண்கள் அமையுமாறு இரண்டு வரிசைகளில் பன்னிரண்டு தூண்களை மண்டபத்தில் அமைத்துள்ளனர். அவற்றுள், எதிரெதிராக உள்ள முதலிரு தூண்கள் சிற்பங்கள் பெறவில்லை. ஏனைய பத்துத் தூண்களும் நெடிய சிற்பங்களைப் பெற்றுள்ளன. அவற்றுள் பெண்சிற்பங்கள் நான்கு. ஆண் சிற்பங்கள் ஆறு. பெண்சிற்பங்களுள் ஒன்று குறமகளைப் படம் பிடித்துள்ளது. வலத்தோளிலும் இடுப்பருகே வலப்புறத்தேயும் குழந்தைகளைக் கொண்டுள்ள குறமகளின் கடக இடக்கையில் கூடை உள்ளது. கவரிக் காரிகையாய் ஒரு பெண்ணும் இருகைகளிலும் தட்டேந்தியவராய் மறு பெண்ணும் காட்சிதர, நான்காமவர் வலக்கையை உயர்த்தி, மண்டலநிலையில் ஆடல் மகளாய் நிற்கிறார். அவரது இடக்கையில் குண்டிகை.

ஆடவர்களுள் ஒருவர் ஆமை பற்றியிருக்கும் வலக்கைக் கோலுடன் நடைபயில்கிறார். நன்கு வளர்ந்த மீசையும் இடக் கையில் வாழைப்பழச் சீப்புமாய் நிற்கும் அவர் பிடியில் கயிற்றால் பிணைக்கப்பட்ட குரங்கொன்றும் உள்ளது. வலக் கையில் குறுவாளுடன் உள்ள ஆடவர் இடத்தோளில் நங்கை ஒருத்தியைச் சுமந்துள்ளார். அப்பெண்ணின் இடக்காலை ஆடவரின் இடக்கை பிடித்துள்ளது. இடக்கையால் மீசை முறுக்கும் மற்றொருவர் வலக்கையில் கத்தியேந்தியவாறு முன்னேறுகிறார். தலையில் கிருஷ்ணர் கொண்டை. வணக்க முத்திரையில் உள்ளவர் அடியவர் போலும். இடக்கையில் வில்லுடன் உள்ள மற்றொரு ஆடவர் வலக்கையைத் தொடையில் வைத்துள்ளார். கையின் கீழ் மலரம்பு. தலையில் கிரீடமகுடம். ஆறாமவர் இடத்தோளில் வில்லேந்தியுள்ளார். வலக்கையில் கத்தி. பாதங்களில் சிறு கயிறுகளால் பிணைக்கப்பட்ட மிதியடிகள். இச்சிற்பங்கள் அனைத்துமே பல்வேறு அணிகலன்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன.

உய்யவந்த நாச்சியார்

இரண்டாம் வாயில் வழி உள்சுற்றில் நுழைந்ததும் மேற்கில் உய்யவந்த நாச்சியார் திருமுன் வரவேற்கிறது. கிழக்கு நோக்கியுள்ள இத்திருமுன் முகமண்டபம், முத்தளத் திராவிட விமானம் எனக் கபோதபந்தத் தாங்குதளத்துடன் உள்ளது. கருவறையில் கரண்டமகுடம், பட்டாடை கொண்டு அர்த்தபத்மாசனத்தில் உள்ள இறைவியின் பின்கைகளில் தாமரை மலர்கள். முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் உள்ளன.

சுற்றின் தென்கிழக்கில் நீளமான மேடையொன்று அமைத்து ஆழ்வார்களையும் ஆச்சார்யார்களையும் நிறுவியுள்ளனர். அடுத்து மடைப்பள்ளி. இரண்டாம் வாயிலின் எதிரில் பலித்தளமும் கொடிமரமும் அமைய, அவற்றின் பின்னால் பெருமண்டபமாய் அமைந்துள்ளது சுந்தரபாண்டியன் குறடு.

சுந்தரபாண்டியன் குறடு

கபோதபந்தத் தாங்குதளத்தின் மீதெழும் இம்மண்டபத் தின் தென்சுவர் எண்முக அரைத்தூண்களால் அணைக்கப்பட்ட ஒன்பது பத்திகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஓரப்பத்திகள் இரண்டும் கர்ணபத்திகளாய் அமைய, அவற்றை அடுத்துள்ள பத்திகளும் நடுப்பத்தியும் ஒரே அகலத்தில் சாலைப்பத்திகளாய், சிற்பங்களற்ற அகலக் குறைவான கோட்டங்களுடன் அமைந்துள்ளன. அவற்றிற்கு இடையில், மேற்கிலிரண்டும் கிழக்கில் இரண்டுமாக, கர்ணபத்தி அளவில் இரண்டு பஞ்சரப்பத்திகள் காட்டப்பட்டுள்ளன. பத்திகளின் இடைப்பட்ட சுவர்ப்பகுதிகளை ஒருகால் பஞ்சரங்களும் குடப்பஞ்சரங்களும் அலங்கரிக்கின்றன.

திருச்சுற்று

இம்மண்டபத்தை அணைத்துள்ள திருச்சுற்றின் மேற்குப் பகுதியில், இக்கோயில் வளாகத்தை சத்தியகிரீசுவரத்திலிருந்து பிரிக்கும் மதில்சுவரையொட்டிக் காணப்படும் தளத்தின் மீது அமைந்துள்ள அனைத்து அறைகளும் வெறுமையாக உள்ளன. இம்மேற்குச் சுற்றின் முடிவில்தான் பள்ளி கொண்ட பெருமாள் குடைவரை அமைந்துள்ளது. குடைவரையைச் சுற்றுடன் துணைத்தளத்தின் மீதமைந்த முன்றிலொன்றும் மண்டபம் ஒன்றும் இணைக்கின்றன. முன்றில் கூரையை எண்முக அரைத் தூண்கள் பதியப்பெற்ற முச்சதுர, இருகட்டு உடலினவான தூண்கள் பூமொட்டுப் போதிகைகள் கொண்டு தாங்குகின்றன.

சுற்றிலிருந்து முன்றிலையடைய நான்கு பெரும்படிகள் உள்ளன. முன்றில் கூரையில் உள்ள பிற்கால ஓவியம் வெளி வட்டத்தில் அன்னவரி பெற்ற தாமரைப் பதக்கத்தையும் நாற்புற மூலைகளிலும் கால் மேல் கால் போட்ட நிலையில் சாய்ந்து படுத்திருப்பவர்களாய்ப் பெண்களையும் படம்பிடிக்கிறது. முன்றிலை அடுத்துள்ள மண்டபம் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், வேதிகை பெற்று விளங்குவதுடன் உட்புறத்தே பக்கங்களில் பாறைச்சுவர்களையும் உள்ளடக்கியுள்ளது.

மேற்குப் பாறைச் சுவரிலிருந்து கிளைக்குமாறு செவ்வகம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் அரைத்தூண் ஒன்று வெட்டப்பட்டுள்ளது. அது போலவே கிழக்குப் பாறைச்சுவரிலிருந்தும் உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண் ஒன்று வெட்டப்பட்டுள்ளது. அதன் மேலிருந்து மேற்கு நோக்கி வளரும் தரங்கப் போதிகையை வடமுகத்தில் மட்டுமே காணமுடிகிறது. இந்த அரைத்தூணையொட்டி மேற்பகுதியில் மட்டும் பரவியுள்ள கிழக்குப் பாறைச்சுவர் கீழ்ப்பகுதியில் இடம்பெறவில்லை. இக்கிழக்குப் பாறைச்சுவரில் பழங்கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. இதையொட்டி உள்ள மண்டபக் கூரைப்பகுதியில் நடுவில் தாமரைப் பதக்கமும் இருபுறத்தும் செண்டுகளுக்கு இடையிலான மீன்களும் வெட்டப்பட்டுள்ளன.

பாறைச்சுவரின் அரைத்தூண்களுக்கு இடைப்பட்டு இருக்குமாறு மண்டபத்தின் வடசுவர் மேற்கிலும் கிழக்கிலும் சாளரங்களும் இடையில் வாயிலும் கொண்டு பொருந்த இணைக்கப்பட்டுள்ளது. முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகைகளின் உதவியுடன் உத்திரம், வாஜனம், வலபி தாங்க, அரைத்தூண்களின் மேல் அமருமாறு பலகைக் கற்களால் கூரை அமைக்கப்பட்டுள்ளது.

மண்டபத்திற்கு மேலுள்ள பாறைப்பகுதி பேரளவிற்குச் சீர்மை செய்யப்பட்டுள்ளது. இது கல்வெட்டுப் பொறிப்பிற்காக இருந்திருக்கலாம். தமிழ்நாட்டிலேயே மிக ஆழமாகக் குடையப் பட்டுள்ள குடைவரையாக மெய்யத்துப் பள்ளி கொண்ட பெருமாள் குடைவரையைக் குறிப்பிடலாம்.

சுந்தரபாண்டியன் மண்டபத்தின் வடபுறத்தே அமைந்துள்ள சத்தியமூர்த்திப் பெருமாள் திருமுன், குடைவரை வளாகத்தையடுத்துள்ள வடசுற்றில், பின்னாலுள்ள பாறைச் சரிவைத் தழுவியவாறு அமைந்துள்ளது. அதற்கும் குடைவரை முன்னுள்ள முன்றில், மண்டபம் இவற்றிற்கும் இடையில், ஏறத்தாழ இரண்டரை மீட்டர் அகலத்தில் விரியும் சுற்று, இந்தத் திருமுன்னின் பின் மிகச் சுருங்கி, ஒருவர் ஒருவராகப் போகுமளவு குறுகிக் கிழக்கில் மீண்டும் விரிவடைகிறது.

இச்சுற்றுவெளியில்தான் சத்தியமூர்த்தித் திருமுன் அருகே பெருந்தேவியின் கல்வெட்டுள்ள வடிவமைக்கப்பட்ட கற்பலகை சிமெந்துப்பிடியில் நிறுத்தப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தித் திருமுன்னின் இடப்புறத்தே, சுற்றின் கிழக்குப்பகுதியில் அடுத்தடுத்துச் சேனைமுதலியாருக்கும் இராமருக்கும் எனத் திருமுன்கள் அமைந்துள்ளன. பாதபந்தத் தாங்குதளத்துடன் ஒருதள வேசரமாக அமைந்துள்ள சேனைமுதலியார் திருமுன் சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன. அத்திருமுன்னின் முன்றில் தூண்கள் சிறக்க வடிக்கப்பட்டுள்ளன. இராமர் திருமுன் இரு தளத் திராவிடமாக அமைந்துள்ளது. அதன் முன்றில் தூணில் திருப்பணியாளர் வணங்கிய கைகளுடன் காட்சி தருகிறார். இத்திருமுன்களின் பின்னும் வடசுற்றிலும் மேடையமைத்து நாகச் சிற்பங்களை நிறுவியுள்ளனர்.

குளம்

கிழக்குச்சுற்றின் நடுப்பகுதியில் குளத்திற்கான வாயில் கோபுரத்துடன் அமைந்துள்ளது. காளயுக்தி ஆண்டுத் தைத் திங்கள் பன்னிரண்டாம் நாள் மதுரை ஜில்லா சிவகங்கைச் சீமைக் காரைக்குடியிலிருந்த நாட்டுக்கோட்டையாரில், கல்வாயில் நாட்டு இளையாத்தக்குடியான குலசேகரபுரத்து, இரணியூர் மருதங்குடியான இராசநாராயணபுரத்துப் பிள்ளையார்பட்டியான திருவேள்பூருடையார் முருகப்பச் செட்டியார் மகன் இராமநாதன் செட்டியாரால் வெட்டப்பட்ட இந்த எண்கோணக் குளம் கல்வெட்டில் சத்தியபுஷ்கரணி எனக் குறிக்கப்பட்டுள்ளது.4 ஆழமாக வெட்டப்பட்டுள்ள குளத்தின் சுற்றுச் சுவரில் எட்டு இடங்களில் சிறிய அளவிலான சிற்பங்கள் அமைக்கப்பட்டு, இந்திரத்துயமன பாண்டியன், கருடபகவான், ஆஞ்சநேய மூர்த்தி, ஆதிசேஷ கட்சகன் பகவன், சந்திரபகவான், ஸத்திய மகரிஷி, புரூரவ சக்கிரவர்த்தி, கமலநயனராசா என அவற்றின் பெயர்கள் வெட்டப்பட்டுள்ளன.5

வடக்குப் படித்துறைச் சுவரில் இரண்டு சிறிய அளவிலான காவலர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவை பத்திர நாம தீர்த்த பாலகாள், சுபத்திர நாமதீர்த்த பாலகாள் எனப் பெயரிடப்பட்டுள்ளமையை அவற்றின் கீழுள்ள கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.6 படித்துறையை ஒட்டி வைகாசித் திங்கள் விசாக பூர்ணிமை முதலான விசேடங்களின்போது பெருமாள் தீர்த்தம் பிரசாதிக்கப் பதினாறு காலால் தீர்த்தவாரி மண்டப மொன்றும் அதன் மேற்கில், மலையை ஒட்டி மற்றொரு மண்டபமும் இராமநாதன் செட்டியாரால் உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டு மண்டபங்களிலுமே அவரது சிற்பம் உள்ளது. மேற்கு மண்டபச் சிற்பத்தின் கீழ்க் காரைக்குடி மெ. முருகப்பச் செட்டியார் குமாரன் ராமனாதன் செட்டியார் எனும் கல்வெட்டு இடம்பெற்றுள்ளது.7

வராகர் திருமுன்

மண்டபத்தின் மலையொட்டிய பகுதியில் உள்ள இயற்கையான மலைப்பிளவை வராகப் பெருமானின் கருவறையாக்கியுள்ளனர். ஒருதளச் சாலை விமானமாக உள்ள இந்தத் திருமுன்னில் இறைவன் நிலமகளுடன் சுகாசனத்திலுள்ளார். பின்கைகளில் சங்கும் சக்கரமும். வல முன் கை காக்கும் குறிப்பில் உள்ளது. இட முன் கையைக் காணக்கூடவில்லை. முப்புரிநூலுடன் உள்ள இறைவனின் இடத்தொடையில் கரண்டமகுடத்துடன் நிலமகள். பட்டாடையணிந்துள்ள அவரது கைகள் வணக்க முத்திரையில் உள்ளன. குளத்திற்கான நுழை வாயில் சுவரின் இருபுறத்தும் சடையவர்மர் சுந்தரபாண்டியரின் கல்வெட்டொன்று பல துணுக்குகளாகச் சிதறியுள்ளது.

இலட்சுமி நரசிம்மர்

சத்தியபுஷ்கரணியின் கிழக்குக் கரையில் சிதைந்தநிலையில் காணப்படும் செங்கல் கட்டுமானத்துள் சுகாசனத்திலுள்ள இலட்சுமி நரசிம்மரின் வலக்கால் இருத்தக் கீழே தனித்தளம் காட்டப்பட்டுள்ளது. வல முன் கையைக் காக்கும் குறிப்பில் காட்டி, இட முன் கையால் இலட்சுமியின் இடுப்பை அணைத்துள்ள இறைவனின் பின்கைகளில் சங்கும் சக்கரமும். திருமுகம் இலட்சுமிக்காய் இலேசாகத் திரும்பியுள்ளது. முப்புரிநூல், உதரபந்தம், மணியாரம், பூப்பதக்கமாலை, பட்டாடை அணிந்துள்ள இறைவனின் இடத்தொடையில் இறைவி அமர்ந்துள் ளார். வலக்கையில் தாமரைமலர். இடக்கை தொடையில் ஊரு முத்திரையில். மார்புக்கச்சு அணிந்துள்ள இறைவியின் கழுத்தில் சுவர்ணவைகாக்ஷம்; இடையில் பட்டாடை; கைகளில் வளைகள், கங்கணங்கள்; செவிகளில் பனையோலைக் குண்டலங்கள்.

சத்தியமூர்த்தித் திருமுன்

சுந்தரபாண்டியன் குறடு என்றழைக்கப்படும் மண்டபத்துடன் முச்சதுர, இருகட்டுத் தூண்கள் நீள்மொட்டுப் போதிகை களுடன் கூரை தாங்கும் பேரளவிலான இடைநாழிகை ஒன்றால் இணைக்கப்பட்டுள்ள சத்தியமூர்த்தித் திருமுன், ஒருதளத் திராவிட விமானம், முகமண்டபம், திருச்சுற்று என அமைந்துள்ளது. அதன் நுழைவாயிலைப் பக்கத்திற்கொருவராக இரண்டு காவலர்கள் காக்கின்றனர். இருவர் பின்கைகளிலும் சங்கு, சக்கரம். வலப்புறமுள்ளவர் இடக்கையை உருள்பெருந்தடியின் மேல் இருத்தி, வலக்கையால் அச்சுறுத்த, இடப்புறமுள்ளவர் வலக்கையைத் தடியின் மேல் இருத்தி, இடக்கையால் அச்சுறுத்துகிறார்.

திருச்சுற்று

வாயிலின் வழி விரியும் திருச்சுற்றின் கூரையை முச்சதுர, இருகட்டுத் தூண்கள் நீள்மொட்டுப் போதிகைகள் துணையுடன் தாங்குகின்றன. இத்தூண்களின் கீழ்ச்சதுரத் தலைப்பில் நாகபந்தமும் இடைச்சதுர முகங்களில் தாமரைப் பதக்கமும் அமைய, கட்டுகள் முப்பட்டை பெற்றுள்ளன. சுற்றின் மேற்கில் கூரையாகப் பாறைச்சரிவு அமைந்துள்ளது. சுற்றின் வெளிச் சுவர் கபோதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, எண்முகத் தூண்கள் அணைத்த சுவர், நீள்மொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டமைய, சுவரின் விமானப் பகுதியில் கிழக்கிலும் மேற்கிலும் பஞ்சர அலங்கரிப்புப் பெற்ற கோட்டங்கள் காட்டப்பட்டுள்ளன.

கோட்டங்களில் விஷ்ணுவின் நின்றகோலச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. பின்கைகளில் சங்கு, சக்கரம் கொண்டுள்ள இச்சிற்பங்களின் வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை கடியவலம்பிதத்தில் உள்ளது. கிரீடமகுடம், மகர குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், இடைக்கட்டுடன் புலிமுக அரைக்கச்சு இருத்தும் கச்சம் வைத்த பட்டாடை இவை இரண்டு சிற்பங்களிலும் இடம்பெற்றுள்ளன. முத்தாரம் பெற்றுள்ள கிழக்கரின் பின்னுள்ள திருவாசி பூவேலைப்பாடுடன் அமைய, சவடி கொண்டுள்ள மேற்கரின் திருவாசி தீக்கங்குகளுடன் திகழ்கிறது. அவரது சங்கும் எறிநிலையில் வடிக்கப்பட்டுள்ள சக்கரமும் கூடத் தீக்கங்குகள் கொண்டுள்ளன. கிழக்கரின் தோள்களில் ஸ்கந்த மாலை. சிரித்த முகத்துடன் திகழும் இந்தச் சோழர் காலச் சிற்பங்களுள் மேற்கில் உள்ளது இணையற்ற அழகுடன் உள்ளது.

கிழக்குக் கோட்டச் சிற்பத்தின் அருகில் இரண்டு சிற்பங்கள் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளன. அர்த்தபத்மாசனத்தில் அஞ்சலிக் கைகளுடன் மார்பில் சாய்த்து வைத்த தண்டத்துடன் காட்சிதரும் இராமாநுஜர் சிற்பம் வஸ்திர முப்புரிநூலுடன் உள்ளது. நீள்செவிகள் வெறுமையாக உள்ள இதுவும் சோழர் காலச் சிற்பமாகலாம்.

இதை அடுத்து சுகாசனத்திலுள்ள ஆடவரின் வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை தொடையின்மீது உள்ளது. தலையில் கரண்டமகுடம். செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடன் பட்டாடை அணிந்திருக்கும் இச்சிற்பத்தை இன்னாரென அடையாளம் காணக்கூடவில்லை. சிற்ப அமைதி இதைப் பிற்காலத்துக்கு உரியதாக்குகிறது.

விமானம்

தாமரை ஜகதி, உருள்குமுதம், கண்டம், கபோதம் பெற்றமைந்த கபோதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நாகபந்தத் தலைப்பிட்ட பாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், நீள்மொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்ட விமானத்தின் சுவர்களில் முப்புறத்தும் காட்டப்பட்டுள்ள கோட்டப் பஞ்சரங்கள் வெறுமையாக உள்ளன. விமானக் கட்டமைப்பில் உள்ள முகமண்டபக் கோட்டப் பஞ்சரங்களும் வெறுமையாக உள்ளன.

சுற்றிலிருந்து முகமண்டப வாயிலை அடைய மூன்று படிகள் உதவுகின்றன. நான்முக அரைத்தூண்கள் அணைத்த அதன் வாயில் வெறுமையாக உள்ளது. வாயிலின் இருபுறத்தும் பக்கத்திற்கொன்றாக அமர்சிம்மங்கள் உள்ளன.

கருவறையில் சத்தியமூர்த்திப் பெருமாள் நின்றருளிய தேவராய்த் தனித்துக் காட்சிதருகிறார். பெருமாளின் வல முன் கை காக்கும் குறிப்பில் உள்ளது. இட முன் கை கடியவலம்பிதமாய் அமையப் பின்கைகளில் தீக்கங்குகளுடன் சங்கும் எறி நிலைச் சக்கரமும். கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், பட்டாடை கொண்டு பல்வேறு அணிகலன்களுடன் அலங்காரபுருஷராய் விளங்கும் பெருமாளின் இடப்புறம் நின்றநிலையில் கரண்ட மகுடம், பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், பட்டாடை இவற்றுடன் வலக்கையைக் கடகத்திலும் இடக் கையை அருள் முத்திரையிலும் கொண்டவராய் கருடன். அவரையடுத்து அமர்ந்துள்ள நிலமகள் கரண்டமகுடம், தோள், கை வளைகள், ஆரங்கள், பட்டாடை அணிந்தவராய்க் கைகளைக் கடகத்தில் கொண்டுள்ளார்.

விஷ்ணுவின் வலப்புறம் கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், முத்துமாலை, சவடி, முப்புரிநூல் இவற்றுடன் வலக்கையைக் கடகத்தில் இருத்தி நிற்கும் ஆடவரைக் கோயிலார் புரூரவ சக்கரவர்த்தியாகக் காணுகின்றனர். அவரை அடுத்துக் கால்களை உட்புறமாய் மடக்கி அமர்ந்த நிலையில் சடைமகுடம், நீள்செவிகள் இவற்றுடன் காட்சிதரும் சத்தியமகரிஷியின் கைகள் கடகத்தில் உள்ளன. உற்சவமூர்த்திகளாய் அழகிய மெய்யர், திருமகள், நிலமகள், ஆண்டாள் திருமேனிகள் மூலவரின் முன்னுள்ள மேடைமீது காட்சி தருகின்றன.

கருடன் திருமுன்

இடைநாழிகையின் தென்புறத்தே சுந்தரபாண்டியன் மண்டபத்தை ஒட்டி அமைந்துள்ள தனித் திருமுன்னில் பெருமாளை வணங்கியவாறு வடமுகமாய்க் கருடாழ்வார். சமபாதத்தில் நிற்கும் அவரது சிறகுகள் உடலொட்டி மடிக்கப்பட்டுள்ளன. தலையில் கிரீடமகுடம். செவிகளில் தாமரைப் பூக்கள். மகுடத்தின் பக்கவாட்டில் பக்கத்திற்கொன்றாகக் காட்டப்பட்டிருக்கும் கிளிகள் இப்பூக்களைக் கொத்துகின்றன. மீசையும் கோரைப்பற்களும் கொண்டு பெரிய பதக்கம் பொருந்திய மாலையும் பாம்புச் சவடியும் அணிந்து காட்சிதரும் கருடனின் கைகளில் பாம்பு வளைகள். விரல்களில் மோதிரங்கள். கால்களில் வீரக்கழல்கள். இடுப்பிலுள்ள மரவுரியாடை மீது பாம்பொன்று இடைக்கச்செனச் சுற்றியுள்ளது.

மேற்கில் உள்ள சிறு அறை பூட்டப்பட்டுள்ளது. இந்தச் சுந்தரபாண்டியன் மண்டபத்தின் சுவர்களில் பல கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்பது படியெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.8 பூட்டப்பட்ட அறையை ஒட்டியுள்ள இடச்சுவர் முழுவதும் பரவியுள்ள கல்வெட்டுகள் படியெடுக்கப்படாதவை. ஆனால், படிக்கமுடியாதவாறு வண்ணப் பூச்சில் அவை அழிவைச் சந்தித்துள்ளன. படிக்கக்கூடிய நிலையில் இருந்த படியெடுக்கப்படாத கல்வெட்டுகள் இரண்டு இங்கிருந்து படியெடுக்கப்பட்டுள்ளன.9

சுந்தரபாண்டியன் குறடும் சத்தியமூர்த்தி விமானமும் ஒரே காலத்தன. மண்டப, விமானச் சுவர்களின் எண்முக அரைத்தூண்களும் அவற்றின் சதுரபாதத்திலுள்ள நாகபந்தங்களும் நீள்மொட்டுப் போதிகைகளும் இக்கட்டமைப்பைப் பதினான் காம் நூற்றாண்டினவாகக் கொள்ளவைக்கின்றன. சுற்றின் வடபுறமுள்ள தூண்களில் வணங்கிய நிலையிலான அடியவர் சிற்பங்கள் பலவாய் உள்ளன.

குடைவரை வளாகம்

வளாகத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள குடைவரையின் தென்புறத்தே, கிழக்கிலும் மேற்கிலும் நீட்டியுள்ள பாறைப்பகுதிகளை இணைக்குமாறு பின்னாளில் சுவர் எழுப்பிக் குடைவரைக்குள் நுழைய வாயில் அமைத்துள்ளனர்.10 வாயிலுள் நுழைந்ததும் குடைவரைக் காட்சிதான். தூண்களற்ற மண்டபம் முன்னாலும் அம்மண்டபத் தரையிலிருந்து 24 செ. மீ. உயரத்தில் உள்ள முகப்புடனான கருவறை பின்னாலும் எனக் குடைவரை இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது.

மண்டபம்

நுழைவாயிலிலிருந்து கருவறைவரை தென்வடலாக 4. 20 மீ. அளவில் விரிந்துள்ள இம்மண்டபம், கிழக்கு மேற்காக வாயிலை ஒட்டிய முதற்பாதியில் 8. 40 மீ. அளவும் கருவறையை நெருங்கும் அடுத்த பாதியில் 8. 96 மீ. அளவும் கொண்டுள்ளது. மண்டபத்தின் தரை நன்கு சமன் செய்யப்பட்டுள்ளது. கருவறை முகப்பில் தொடங்கி வாயில்வரை நீளும் மண்டபப் பக்கச் சுவர்கள் 2. 35 மீ. அளவிற்கு நேராகச் சென்று, பின் 23 செ. மீ. உட்பக்கமாய்த் திரும்பி, மீண்டும் 1. 85 மீ. அளவுக்குத் தெற்காய் நீண்டு பிற்கால மண்டபத்துடன் பொருந்துகின்றன. நன்கு சீரமைக்கப்பட்டுள்ள இச்சுவர்களின் மேல் நீளும் கூரை, பாறைக் கூரையாகவே மண்டப வாயில்வரை தொடர்ந்தாலும், பக்கச்சுவர்களின் உள்மடிப்பிற்கேற்ப, வளைமுகமாக இறங்கிச் சற்று உயரம் குறைந்த நிலையிலேயே வாயிலை நெருங்குகிறது.

மண்டபத் தரையிலிருந்து முகப்பை அடைய பாறையிலேயே நான்கு படிகள் வெட்டப்பட்டுள்ளன. கீழ்ப்படி நிலாக் கல்லாக அமைய, மேல் மூன்று படிகளுக்குத் துளைக்கை போல வடிவமைக்கப்பட்ட பிடிச்சுவர்கள் காட்டப்பட்டுள்ளன. முகப்பின் நடுப்பகுதிக்கு முன் அமைந்துள்ள இப்படிகளின் இருபுறத்தும், பிற்காலத்தே இருபெரும் கற்பாளங்களை வைத்து இரண்டு நீளப் படிகளாக்கியுள்ளனர். அவை பக்கச் சுவர்கள்வரை நீள்கின்றன. முகப்பின் கீழ்ப்பகுதியில் பாதபந்தத் தாங்குதளம் இருந்து இப்பாளங்களால் அது மறைக்கப்பட்டுள்ளமையை உறுதிசெய்யுமாறு பாதங்களுடனான கண்டத்தின் மேற்பகுதியும் மேற்கம்பும் பட்டிகையும் பாறைப்படிகளின் இருபுறத்தும் தெரிகின்றன.

முகப்பு

8. 44 மீ. நீளமும் 58 செ. மீ. அகலமும் கொண்டுள்ள முகப்பின் நடுப்பகுதியில் இரண்டு முழுத்தூண்களும் ஓரங்களில் பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களும் காட்டப்பட்டுள்ளன. சதுரம், கட்டு, சதுரமென்ற அமைப்பிலுள்ள அவற்றுள் முழுத்தூண்கள் பாறைப்பாளங்களாலும் அரைத்தூண்கள் செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. மேற்சதுரங்கiளைவிட அரைமடங்கு கூடுதல் உயரம் பெற்றுள்ள கீழ்ச் சதுரங்கள் முகப்புத் தரையில் நன்கு பொருந்தியுள்ளன.

தூண்களின் மேல் இருத்தப்பட்டாற் போல் தோற்றமளித்தாலும் போதிகைகள் உத்திரத்திலேயே வெட்டப்பட்டுள்ளமையை உற்றுநோக்கினால் அறியலாம். முகப்புத் தரையைப் போலப் போதிகையும் உத்திரமும் பாறையில் உருவானவை. நடுத் தூண் களுக்கான போதிகைகள் இருபுறமும் கைவிரிக்க, அரைத்தூண்களின் போதிகைகள் முழுத்தூண்களை நோக்கி மட்டும் கைநீட்டியுள்ளன. இக்கைகள் கீழ்க்கை, மேற்கை என வேறுபடுத்த முடியாத அளவிற்குப் பரவியிருந்தாலும் வளை முகமாக இருப்பதை உணரலாம். 10 செ. மீ. கனத்தில் உள்ள உத்திரத்தையடுத்துக் கூரை அமைந்துள்ளது. வாஜனமோ, வலபியோ இல்லை.

கருவறை

முகப்பையடுத்துக் கிழக்கு மேற்கில் 8. 94 மீ. அளவுக்கு நீளும் கருவறை பெருமாளின் பள்ளி கொண்ட கோலத்தைப் பெற்றுள்ளது. முகப்பிலிருந்து 1. 92 மீ. உட்தள்ளிக் கருவறைப் பின்சுவரையொட்டியே பெருமாளின் படுத்த திருக்கோலம் உள்ளது. ஐந்து தலைகளையும் விரித்துக் குடை போல அமைத்துத் தன் நீண்ட, திரண்ட உடலைக் கோளவடிவச் சுருள்களாக்கிப் படுக்கையாய்க் கிடத்தியுள்ள ஆதிசேஷனின் திருமேனி, கருவறைப் பின்பகுதியின் ஐந்தில் மூன்றுபகுதிகளை எடுத்துக் கொண்டுள்ளது.11 படுக்கையில் சற்றே வல ஒருக்கணிப்பாய்ப் படுத்திருக்கிறார் விஷ்ணு.12

கருவறைப் பின்சுவரைத் தழுவி அமைந்துள்ள படுக்கையையும் பரந்தாமனையும் சூழ இருக்குமாறு படுக்கையையொட்டிக் கருவறைத் தரையிலும் கிழக்கு, வடக்கு, மேற்குச் சுவர்களிலும் சிற்பங்கள் வெட்டப்பட்டுள்ளன.13 முகப்பிலிருந்து படுக்கைவரை கருவறைத் தரை வெறுமையாக இருப்பது போலவே அதன் கிழக்கு, மேற்குச் சுவர்களும் வெறுமையாக உள்ளன. படுக்கையை நெருங்குமிடத்தில் கிழக்கு, மேற்குச் சுவர்கள் இரண்டுமே வளைமுகமாய்த் திரும்பி வடசுவரைத் தழுவுகின்றன.

சிற்பங்களால் நிறைக்கப்பட்டுள்ள வடசுவரும் இலேசான வளைவுடன் உள்ளது. வளைமுகமாய்த் திரும்புமிடத்தில் கிழக்குச் சுவரிலும் பின்சுவரிலுமாய் நெடிய திருமேனியர்களாய் மது, கைடபர்கள் காட்டப்பட்டுள்ளனர். மேற்குச் சுவர் வளை முகமாக வடசுவரைத் தொடுமிடத்தில் சுவரின் உச்சிப்பகுதியில் ஓர் ஆண் வடிவம் இடுப்பளவிற்காய் வணக்க முத்திரையில் உள்ளது. கீழே கருடன் உட்பட அறுவர்.

பள்ளி கொண்ட ஆழ்வாருக்கு மேலுள்ள சுவர்ப்பகுதி முழுவதும் சிற்பக்களஞ்சியமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மேற்கில் சந்திரனில் தொடங்கிக் கிழக்கில் சூரியனில் முடியும் இத்தொகுதியில், நடுவிலுள்ள நான்முகனையும் சேர்த்து இருபத்தைவர் இடம்பெற்றுள்ளனர். மேற்குச் சுவர் வடசுவரைத் தொடுமிடத்தில் உச்சியில் ஓர் ஆடவர் சிற்பம் இருப்பது போலக் கிழக்கிலும் இரண்டு சிற்பங்கள் உள்ளன. வடசுவரில் சிற்பங்களுக்குக் கீழே ஆதிசேஷனின் வளைந்த பற்கள் தெரியும் திறந்த வாயிலிருந்து வெளிவரும் நச்சுக் காற்று, தீச்சுவாலைகளாய்14 மது, கைடபர்களை நோக்கிப் பரவுமாறு வடிவமைக்கப்பட்டுள் ளது. பெருமாளின் திருவடியருகே கருவறைத் தரையில் நிலமகள்.15

(தொடரும்)

குறிப்புகள்

1. ஆய்வு நாட்கள்: 19, 26. 1. 2003, 2, 6. 2. 2003, 13. 7. 2003, 6. 5. 2006. உடனிருந்து உதவிய இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை உதவியாளர்கள் திரு. மோகன், திரு. ஆறுமுகம் இவர்கட்கு நன்றி.

2. 'இக்கோயில் ஸ்ரீரங்கம் வைணவக் கோயிலைவிடக் காலத்தால் முந்தியது' எனும் ஜெ. ராஜாமுகமது, தம் கூற்றுக்கான சான்றுகளேதும் தரவில்லை. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, ப. 239.

3. IPS: 340, 341; SII 22: 387; மு. நளினி, 'வைஷ்ணவ மாகேசுவரம்' பாதைகளைத் தேடிய பயணங்கள், பக். 167-173.

4. நா. வள்ளி, 'திருமயத்தில் நாட்டுக்கோட்டை செட்டியார் கல்வெட்டுகள்' ஆவணம் 6, தமிழகத் தொல்லியல் கழகம், பக். 46-47.

5. மேற்படி, ப. 47.

6. இவை களஆய்வின்போது கண்டறியப்பட்டன.

7. நா. வள்ளி, 'திருமயத்தில் நாட்டுக்கோட்டை செட்டியார் கல்வெட்டுகள்' ஆவணம் 6, ப. 47.

8. அவற்றுள் ஒன்று புதுக்கோட்டைக் கல்வெட்டுகள் தொகுதியில், சேனைமுதலியார் திருமுன்னில் இருப்பதாகத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. IPS: 967.

9. தினமணி, 5. 8. 2003, 8. 5. 2006.

10. இந்த வாயிலிலேயே முகப்புத்தூண்கள் சதுரம், கட்டு, சதுரமென அமைந்திருப்பதாகக் கே. வி. செளந்தரராஜன் எழுதியுள்ளமை சரியன்று. மு. கு. நூல், ப. 103.

11. 'கருவறையின் முழு இடத்தையும் பள்ளி கொண்ட பெருமாள் பிடித்துள்ளார்' என்கின்றனர் சு. இராசவேலுவும் அ. கி. சேஷாத்திரியும். மு. கு. நூல், ப. 186.

12. விஷ்ணுவின் இத்திருக்கோலம், தூண்களை முன்புறம் மறைத்தவாறு காணப்படுவதாகச் சு. இராசவேலுவும் அ. கி. சேஷாத்திரியும் எழுதியிருப்பதன் பொருளை விளங்கிக் கொள்ளக்கூடவில்லை. மு. கு. நூல், ப. 186.

13. பள்ளி கொண்ட பெருமாளைச் சூழ விளங்கும் தேவர்கள், முனிவர்கள் குழாத்தை அடையாளப்படுத்துமாறு இரண்டு சான்றுகள் கிடைத்துள்ளன. குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி திருவரங்கப் பெருமாளைச் சூழ இருந்தா ரைப் போற்றிப் பரவுகிறது. தும்புரு, நாரதர், அயன், அரன், இந்திரன், அரம்பையர், முனிவர் இவர்கள் பெருமாளைப் போற்றி வணங்க, கருடனும் பெருமாளின் ஐந்து கருவிகளான வில் (சார்ங்கம்), சங்கு, ஆழி, தண்டு, வாள் இவையும் அவரைப் புறஞ்சூழ்ந்து காப்பதாகக் குலசேகர ஆழ்வார் பாடியுள்ளார். பெருமாள் திருமொழி: 647 - 657.
நாமக்கல் அரங்கநாதர் குடைவரையிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ள வடமொழிக் கல்வெட்டு மார்க்கண்டேய மகரிஷி, கருடன், வருணன், நான்முகன், சிவன், தக்கன், சந்திரன், சூரியன், தும்புரு, நாரதர், குரு, பிருகு, ஸ்ரீதேவி, மது, கைடபர், விஷ்ணுவிற்குரிய ஐந்து ஆயுதபுருஷர்களான சார்ங்கம், கெளமோதகி (தண்டு-கதை), சக்கரம், நந்தகம் (வாள்), பாஞ்சஜன்யம் (சங்கு) இவர்கள் பள்ளி கொண்ட பெருமாளைச் சூழ அமைந்திருப்பதாகக் கூறுகிறது. நுஐ 36: 18.
விஷ்ணுவிற்குரிய ஐந்து ஆயுதங்களும் மனித வடிவில் அமைந்தபோது ஆயுத புருஷர்களாயின. சங்கு, வாள் இவை ஆடவர்களாகவும் கெளமோதகி பெண்ணாகவும் சக்கரம், வில் இவை பேடுகளாகவும் கொள்ளப்படுகின்றன. சிற்ப வடிவில் பேடுகளை இனங்காட்ட முடியாது என்பதால் அவர்களையும் ஆண்களாகவே சித்தரித்ததாகச் சம்பகலட்சுமி எழுதியுள்ளார். ஏய்ள்ைய்ேஎய் ஐஉடிடேிப்ச்ய்யீhல் in கூய்அட்ை ஊடிர்வ்ேச்ல், யீ.246.
குலசேகர ஆழ்வாரும் நாமக்கல் கல்வெட்டும் வழங்கும் சூழ இருப்பார் குழுவில் திருமெய்யம் சிற்ப அரங்கில் இருப்பவர்களாக மார்க்கண்டேயர், கருடன், சந்திரன் - ரோகிணி இணை, தும்புரு, நாரதர், நான்முகன், தக்கன், சப்த ரிஷிகள், பொந்து முனிவர் மூவர், சூரியன், மது, கைடபர் இவர்களை மட்டுமே உறுதிபட அடையாளம் காணமுடிகிறது. தமிழ்நாட்டிலுள்ள பள்ளி கொண்ட பெருமாள் குடைவரைகள் எவற்றிலும் பெருமாளைச் சூழ இருப்பவர்களுள் சிவபெருமானையோ, இந்திரனையோ, வருணனையோ காணமுடியவில்லை.
பாம்புப் படுக்கையை ஒட்டி கருடாசனத்தில் காணப்படும் பெண்வடிவம் கச்சின்றிக் காட்சியளிப்பதால் அதை நாமக்கல் கல்வெட்டுக் குறிப்பிடும் ஸ்ரீதேவியாகக் கொள்ளத் தயக்கம் ஏற்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டு வைணவக் கோயில்கள் சிலவற்றுள் ஸ்ரீதேவி, பூதேவி இருவர் சிற்பங்களுமே கச்சின்றி அமைந்திருப்பதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இந்நிலையில் திருமெய்யம் குடைவரையிலுள்ள கருடாசனப் பெண் சிற்பத்தை ஸ்ரீதேவி, பூதேவி இருவரில் யாராகவும் கொள்ளலாம்.

14. 'வளையுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ' என்பார் குலசேகர ஆழ்வார். பெருமாள் திருமொழி 648:2.
இவற்றை அம்புகளாய்க் காண்கிறார் கே.வி.செளந்தரராஜன். மு. கு. நூல், ப. 103.

15. நிலமகள் திருமாலின் பாதத்தில், அருகே அமர்ந்திருப்பதாகச் சு. இராசவேலுவும் அ. கி. சேஷாத்திரியும் குறிப்பிட்டுள்ளனர். மு. கு. நூல். ப. 186; இவர் திருமகளா, நிலமகளா என்ற சம்பக லட்சுமியின் ஐயம் நியாயமானதே. மு. கு .நூல், ப. 73.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.