![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 73
![]() இதழ் 73 [ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2010 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
செம்மொழியான தமிழ்மொழியாம்!
முனைவர் கரு.அழ. குணசேகரன் அவர்கள் 'அதுவே...' என்று முடித்தவுடன் சற்று இடைவெளி விட்டு, (ஸ்ருதிஹாசன் என்று நினைக்கிறேன்) பெருங்குரலெடுத்துப் பாடும் பெண்ணின் குரலில் ஒலித்த இந்த வரிதான், 5 நாட்களும் ஆய்வரங்கத்திலிருந்து நாங்கள் வெளியே வந்த போதெல்லாம் எங்கள் செவிகளில் புகுந்த ஒரே பாடலான 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற கலைஞரின் கவிதையில் ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர். ரகுமான் செய்திருந்த மொழிச்சிதைவுகளையும் மீறி, மனதைக் கொள்ளை கொண்டது. ஏற்கனவே துரிதகதியில் பாடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பாடலை மேலும் உச்சஸ்தாயிக்கு எடுத்துச் சென்றது, 'யாவரும் கேளீஈஈஈஈர்' போன்ற நீட்டல் விகாரங்களையும் கம்பநாட்டாழ்வாரையும் கவியரசி அவ்வை நல்லாளையும் கடித்துத் துப்புவதையும் ஓரளவுக்குப் பொறுத்துக்கொள்ளச் செய்தது. வழக்கமாக உதித் நாராயணன் செய்யும் அரும்பணிகளை இந்தப் பாடலில் மற்ற இளம் பாடகர்கள் செய்திருந்தார்கள். இந்த மையநோக்கப் பாடல் வெளியானபோது மனதில் பல கேள்விகள் எழுந்ததை அடக்க முடியவில்லை. ரகுமானின் தமிழ்க் கொலைகள் அகில உலகப் புகழ்பெற்றிருப்பது தெரிந்தும் ஏன் இந்தத் தற்கொலை முயற்சி? இளையராஜாவிடம் கொடுத்திருந்தால் இன்னும் மனதை வருடும் இசையாகவும் இருந்திருக்கும், மொழியும் காப்பாற்றப் பட்டிருக்குமே? ரகுமான் பாடலைப் பதிவு செய்து முடித்தவுடன் அப்படியே வெளியிட்டு விட்டார்களா? தமிழகத்தின் ஆரம்பப் பள்ளிப் பிள்ளைகள் கூடத் தெரிந்து வைத்திருக்கும் 'யாவரும் கேளிர்' என்ற உயர்ந்த தத்துவத்தை 'கேளீர்' என்று இசையமைத்தவரே தவறாகப் பாடியதை வெளியிடுவதற்குமுன் கலைஞர் உட்பட யாருமே உணரவில்லையா? அல்லது தெரிந்திருந்தும் அதைத் திருத்தும் அக்கறை இல்லையா? தமிழ்மொழியின் சிறப்புகளைப் படமாக்கும் பணி ஏன் மலையாளியான கௌதம் மேனனிடம் தரப்பட்டது? தமிழகத்துப் பழங்கோயில்களையும் ஓவியங்களையும் என்னதான் காட்டியிருந்தாலும், இதையெல்லாம் பார்த்து ஒரு பெருமிதம் கொள்ள வைக்கவில்லையே? சேரன், தங்கர்பச்சான், சீமான் போன்ற தமிழ்த் துடிப்புள்ளவர்களிடம் தந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்குமே? இதைவிட மக்கள் தொலைக்காட்சியின் 'வாழ்க செந்தமிழ்' பாடல் மிக நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளது. பாடியவர்களும் உணர்ந்து பாடியிருப்பதாகத் தோன்றுகிறது. அந்தக் குழுவினரிடமாவது தந்திருக்கலாமே? இப்படி இன்னும் பல கேள்விகள். என்ன புலம்பி என்ன பயன்? இதெல்லாம் வெளியிடுவதற்குமுன் யோசித்திருக்க வேண்டியவை. வெளிவந்த பிறகு என்ன செய்ய முடியும்? வேறு வழியில்லாமல் கேட்டுக்கொண்டிருப்பதைத் தவிர? பார்க்காமல் இருக்கலாம். ஆனால் கேட்காமல் இருக்க முடியாதே!! ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான ஒரு பாடலையே இவர்களால் ஒழுங்காகச் செய்ய முடியவில்லையே, ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் மாநாட்டை எந்த லட்சணத்தில் செய்திருப்பார்களோ என்று மனம் சற்றுக் கவலையுற்றது. 2009 ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டிலேயே அழைப்பிதழ் வந்துவிட்டது. கட்டுரைச் சுருக்கம் அனுப்பப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடிகை மீனாவின் புண்ணியத்தில் இறுதிக் கட்டுரையும் எழுதப்பட்டு அனுப்பியாகிவிட்டது. இங்கே மீனாவின் புண்ணியம் எப்படி வந்தது என்பது பற்றி ஒரு முன்கதைச் சுருக்கம். செம்மொழி மாநாட்டுக்காக நான் தேர்ந்தெடுத்த தலைப்பு, 'ஜப்பானியர்களின் பார்வையில் தமிழும் தமிழகமும்'. தமிழகத்துக்கு வந்துபோன ஜப்பானியர்களுக்கும் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ளும் ஜப்பானியர்களுக்கும் தமிழையும் தமிழ்நாட்டையும் பற்றி எத்தகைய பார்வை இருக்கிறது என்பதை வெளிக்கொணர்வதற்காக இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். இதற்காக ஒரு கருத்துக்கணிப்பை நடத்தலாம் என்று முடிவு செய்து, கேள்வித்தொகுதி (Questionnaire) ஒன்றையும் தயார் செய்தேன். அது தமிழ்நாட்டுப் பயண விவரம், தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அல்லது கற்றுக்கொள்ளும் அனுபவம், தமிழர்களுடன் பழகிய அனுபவம், தமிழ்த் திரைப்படங்களுடனான தொடர்பு, தமிழகக் கலைகளுடனான தொடர்பு ஆகிய 5 பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. யார் யார் தமிழகத்துக்கு வந்து போயிருக்கிறார்கள் என்பதை எப்படிக் கண்டறிந்து, அவர்களிடம் இக்கேள்வித்தொகுதியைக் கொண்டு சேர்ப்பது? கேள்வித்தொகுதியைத் தயார் செய்து முடித்ததும் என் கண்முன்னால் பூதாகரமான வடிவெடுத்து நின்றது. அலுவலக நண்பர்கள் மற்றும் பல்கலைக்கழக நண்பர்களின் பெயர்களைப் பட்டியலிட்டபோது, எண்ணிக்கை இருபதைத் தாண்டவில்லை. ஓஸகாவில் இருக்கும் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் யசுதா அவர்கள் சுமார் 10 பேரிடமிருந்து விடைகளைப் பெற்றுத்தந்தார். குறைந்தபட்சம் 100 பேராவது விடையளித்தால் சற்று நல்ல தகவல் தொகுப்பாக இருக்கும் என்று எண்ணியிருந்தேன். அப்போதுதான் டோக்கியோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியைப் பற்றி நண்பர் ஒருவர் சொன்னார். ஏற்கனவே பெற்றிருந்த அனுபவங்களால், போகவேண்டாமென்று முடிவுசெய்து, முன்பதிவு செய்யாமல் விட்டிருந்தேன். காரணம் வேறு ஒன்றுமில்லை. பொங்கல் விழாவாக இருந்தாலும் தீபாவளியாக இருந்தாலும் வேறு எல்லாப் பண்டிகை தினங்களிலும் நடைபெறும் விழாக்களில் சினிமாப் பாடல்கள்தான் முக்கிய நிகழ்ச்சிகளாக இடம்பெறுகின்றன. யாராவது ஏதாவதொரு திரைப்படப் பாடலைப் பாடுவார்கள் அல்லது சிலர் அதற்கு ஆடுவார்கள். இதில் ஒரு கொடுமை, குழந்தைகளின் திறமையை வளர்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, ஆரம்பப்பள்ளிச் சிறுவர் சிறுமிகளுக்கும் பயிற்சி கொடுத்து ஆடவைப்பதுதான். இதில் என்ன திறமை வளர்ந்துவிடும் என்று தெரியவில்லை. யாரோ எழுதிய பாடலை யாரோ பாடி, அதற்கு யாரோ ஆடியதை அப்படியே அச்செடுத்தாற்போல் ஆடிக்காட்டுவதில் என்ன திறமை வளரும்? மேடைப்பயம் (Stage fear) போகும் என்பது அபத்தமான வாதம். நன்கு பயிற்சி செய்த அந்தக் குறிப்பிட்ட பாடலுக்காக மேடையில் ஏறும்போது வேண்டுமானால் பயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வேறொரு பாடலுக்காக மேடையேறச் சொன்னால் கைகால்கள் உதறாமல் என்ன செய்யும்? விழா ஏற்பாட்டுக் குழுவினரில் யாராவது ஒரு பாடலை எழுதி, அவர்களே இசையமைத்துப் பாடி, நடனத்தையும் அமைத்தால், அதை அருகிலிருந்து பார்க்கும் குழந்தைகளுக்கு 'கிரியேட்டிவிட்டி' என்றால் என்னவென்று புரியும். திறமைகளை வளர்த்துக்கொள்வது எப்படி என்பது பிடிபடும். ஒரு நல்ல பயிற்சியாளர் செய்ய வேண்டியதும் இதைத்தான். இதுதான் உண்மையாகவே மேடைப்பயத்தைப் போக்கும் வழிமுறை. பொங்கல் பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பது பற்றியோ, அதை எவ்வாறு கொண்டாடவேண்டும் என்பது பற்றியோ மருந்துக்கும் எந்த நிகழ்ச்சியும் இருக்காது, மேடைக்குப் பின்புறம் உள்ள திரையில் எழுதப்பட்டிருக்கும் 'பொங்கல்' என்ற 4 எழுத்துக்களைத் தவிர. சினிமாப்பாட்டுக்கு ஆட்டம் போடுவதை ஏன் பொங்கலின் பெயராலும் தமிழ்ப் புத்தாண்டின் பெயராலும் செய்யவேண்டும்? சும்மா ஆடிவிட்டுப் போகவேண்டியதுதானே? இப்படியே ஆண்டுதோறும் ஆடிக்கொண்டிருந்தால், பொங்கலையும் புத்தாண்டையும் இப்படி ஆடித்தான் கொண்டாடவேண்டும் என்ற எண்ணம்தானே அந்தச் சிறுவர் சிறுமிகளின் உள்ளத்தில் பதிந்திருக்கும்? யாராவது வெளிநாட்டினர் அந்தப் பிள்ளைகளைப் பார்த்து, பொங்கலை எப்படிக் கொண்டாடுவீர்கள் என்று கேட்டால், நான்கு சினிமாப் பாடல்களைப் பாடுவோம், ஐந்து பாடல்களுக்கு ஆட்டம் போடுவோம் என்று சொன்னால் எப்படியிருக்கும்? இன்று இந்தியாவிலும் பள்ளிகளில் ஆண்டுவிழாக்கள் இப்படித்தான் நடைபெறுகின்றன என்று நண்பர்கள் மூலம் அறிந்து வெறுத்துப் போகிறேன். இவ்வாறு கைவிட்டிருந்த நிகழ்ச்சிக்காக முன்பதிவு செய்யத்தூண்டியது நண்பரிடமிருந்து வந்த இன்னொரு செய்திதான். இந்த வருட விழாவில் நடிகை மீனா கலந்து கொள்கிறாராம். மீனாவைப் பார்ப்பதற்காகச் செல்ல விரும்பினேன் என்று எண்ணி விடாதீர்கள். டோக்கியோவிலுள்ள மீனா ரசிகர் மன்றத்தினர் 100 ஜப்பானியர்கள் இந்நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டுத்தான் சென்றேன். அவர்கள் அனைவரிடமும் கேள்வித்தொகுதிகளைக் கொடுத்ததில், பெரும்பாலானோர் விடைகளை நிரப்பிக் கொடுத்துவிட்டார்கள். இறுதியில் எண்ணிப் பார்க்கும்போது மொத்தம் 96 பேர் விடையளித்திருந்தார்கள். விடைகளின் பகுப்பாய்வையும் முடிவுகளையும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், இந்தச் சுட்டியில் உள்ள பவர் பாயிண்ட் கோப்பைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஜூன் மாதத் துவக்கத்திலேயே மூன்று நான்கு தடவைகள் பயண விவரங்களை அனுப்புமாறு மின்னஞ்சல்கள் வந்துவிட்டன. எல்லாக் குழுக்களுக்கும் தனித்தனியாக மின்னஞ்சல் அனுப்பியபிறகு, மாநாடு பற்றிய தகவல் அறிவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி சேவை மைய எண்கள் நாளிதழ்களில் வெளியாகியிருந்தன. அவற்றை அழைத்து விவரம் கேட்டால், இன்னும் தங்குமிடம் பற்றிய தகவல்கள் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டன. ஜூன் 20ம் தேதி வரை இதுதான் நிலைமை. ஒருவழியாக 20ம் தேதி இரவு தங்குமிடம் பற்றிய தவல்களும் ஆய்வரங்க அமர்வு நிகழ்ச்சி நிரலும் கைக்குக் கிடைத்தன. கூடவே, தங்குமிடத்தில் உதவிக்காக நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பு அதிகாரியின் தொலைபேசி எண்களும் கிடைத்தன. அவரை அழைத்து விவரம் தெரிவித்துவிட்டு, 22ம் தேதி எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த விடுதிக்குச் சென்றதும் அன்புடன் வரவேற்று, அறை ஒதுக்கீட்டிற்கு வேண்டிய உதவிகளைச் செய்தது வரவேற்புக்குழு. கோவை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒரு மாதத்துக்கு முன்பு பார்த்த கோவை வேறு, அன்று பார்த்த கோவை வேறு. விடுதிக்குச் செல்லும் வழியில்தானே கொடிசியா வளாகம் அமைந்திருக்கிறது, அதையும் ஒரு பார்வை பார்த்துவிடலாம் என்று நினைத்துச் சென்றால், பாதுகாப்புக் காரணம் கருதி, உள்ளே அனுமதி மறுத்துவிட்டார்கள். அழைப்பிதழையும் புகைப்படம் ஒட்டிய Delegate sheetஐயும் காட்டிய பின்பும் அந்தக் காவல்துறை அதிகாரி 'நாளைக்குத்தான் ஐயா இத்தகைய அட்டை உள்ளவர்களுக்கும் அனுமதி' என்று பணிவாக மறுத்துவிட்டார். அவரது அடையாள அட்டையைக் கண்டுதான் வியந்தேன். 'சென்னை சரகம்' என்று இருந்தது. கொங்கு மண்டலத்தில் இருப்பவர் என்றால் இந்தப் பணிவு எங்கள் ஊரின் இயல்பு என்று புரிந்து கொள்ளலாம். ஆனால், மரியாதை என்றால் என்னவென்றே தெரியாத சென்னையிலிருந்து வந்திருக்கும் ஒரு காவலர் இவ்வளவு பணிவாகப் பேசுகிறாரே என்ற வியப்பு மேலிட்டது. காவல்துறையே இத்தகைய பணிவைக் கொண்டிருக்கும்போது, வரவேற்புக் குழுவைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அறை ஒதுக்கப்பட்டதுமே, எனக்கான அடையாள அட்டை, 23ம் தேதி இனியவை நாற்பது ஊர்வலத்தை எந்த மேடையிலிருந்து எந்த இருக்கையிலிருந்து பார்வையிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்ட அட்டை, கொங்கு மண்டலத்தைப் பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 2 நூல்கள், விழா அழைப்பிதழ்கள், திருவள்ளுவர் உருவம் தாங்கிய நினைவுப்பரிசு ஆகியவை அடங்கிய மூங்கிலால் செய்யப்பட்ட ஒரு பையை அளித்தார்கள். அறை நன்கு சுத்தமாக இருந்தது. எப்படியும் ஒருநாளைக்கு சுமார் 1500 ரூபாய் வாடகை இருக்கும். விழா நடக்கும் ஐந்து நாட்களுக்கும், அதற்கு முன்னும் பின்னும் தலா ஒரு நாள் என ஏழு நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். காலைச் சிற்றுண்டி இலவசம். இரவு உணவு ஒரு நாளைக்கு ரூ. 350 வரை சாப்பிட்டுக்கொள்ளலாம். காலையில் சிற்றுண்டி முடித்ததும் அழைத்துச்செல்லப் பேருந்து வந்தது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையில் இவ்வளவு நல்ல குளிர்சாதனப் பேருந்துகள் உள்ளனவா என்று வியப்பு மேலிட்டது. முன்பின் அமர்ந்திருப்பவர் முகம் தெரியாதபடி இருக்கும் தொலைதூர மிதவைப் பேருந்து போலல்லாமல், வெட்ட வெளிச்சமாக இருக்கும் நகரப்பேருந்தே மிக அருமையாகக் குளிரூட்டப்பட்டிருந்தது. செம்மொழி மாநாட்டுக்காக வெளியிடப்பட்டிருந்த திருக்குறள் இசை மென்மையாகக் கசிந்து கொண்டிருந்தது. அவினாசி சாலையெங்கும் பரவியிருந்த காக்கிச் சட்டைகளுக்கு நடுவே புகுந்து சென்றபோது, முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்களுடன், நிறுத்தப்பட்ட போக்குவரத்தின் நடுவில் தலைமைச் செயலகம் சென்று வரும் அமைச்சர்கள் எப்படி உணர்வார்கள் என்று புரிந்தது. ஐந்து நாட்களும் இந்த மரியாதை தமிழால் அறிஞர்களுக்குக் கிடைத்தது. ![]() ![]() ![]() ![]() ![]() அடுத்து இந்த 5 நாட்களும் பொதுமக்களுக்கான பொது அரங்கத்திலும் அறிஞர்களுக்கான ஆய்வரங்கத்திலும் நடந்தது என்ன? (தொடரும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |