http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 73
இதழ் 73 [ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2010 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
குடைவரைகள்
சென்ற இதழ்த் தொடர்ச்சி...
சிற்பங்கள் இக்குடைவரையிலுள்ள சிற்பங்களைப் பள்ளி கொண்ட பெருமாளின் தலைப்பக்கச் சிற்பங்கள், திருவடிப்புறச் சிற்பங்கள், வடசுவர்ச் சிற்பங்கள் என மூன்றாக வகைப்படுத்தலாம். பள்ளி கொண்ட பெருமாள் ஆதிசேஷனில் படுத்திருக்கும் விஷ்ணுவின் வலக்கை மேலே நீண்டு, சேஷனின் தலையருகே கீழ்நோக்கித் தாழ்ந்து, பாம்புடலைத் தொட்டவாறுள்ளது. இடக்கை வயிற்றருகே மேல்நோக்கி மடங்கிக் கடகமாய் விரல்களை வயிற்றை நோக்கித் திருப்பியுள்ளது.16 வலப்பாதம் சேஷனின் மீது சாய்ந்திருக்க, இடப்பாதம் நிமிர்ந்துள்ளது. இடையில் கணுக்கால்கள்வரை நீளும் பட்டாடை. அதை அரையிலிருத்தும் அரைக்கச்சின் மேலும் கீழும் முத்துவரிகள். இடைக்கட்டு நன்கு சரிந்து பக்கவாட்டில் முடிச்சுகள் கொண்டுள்ளது. உதரபந்தம், முகப்புடன் அமைந்த தோள் வளைகள், முத்துக்கள் பதித்த கைவளைகள், முழங்கையருகே கடகவளைகள், மகரகுண்டலங்கள், செவிப்பூக்கள், சரப்பளி, பெருமுத்துமாலை, ஆரம் என அணிமணிகளுடன் விளங்கும் இறைவனின் திருவடிகளில் தாள்செறிகள்; விரல்களில் மோதிரங்கள். முத்துமாலை படர்ந்துள்ள மார்பில் வலப்புறம் ஸ்ரீவத்ஸ மறு. இடுப்பில் தொங்கு சரங்களுடன் மேகலை. தலைப்பக்கச் சிற்பங்கள் விஷ்ணுவின் தலைக்குப் பின்னால் கருவறைத் தரையில் தென்பார்வையாய் இளமைக்கோலத்துடன் அமர்ந்திருப்பவர் மார்க்கண்டேயர். அவருக்குப் பின்னால் நின்றநிலையில் கருடன். இருவருக்கும் இடையில் ஆடவர் ஒருவர் சிற்பம். அவருக்கு மேலே, கருடனுக்கு இடப்புறமாய்ப் பின்சுவரில் 'பொந்து' போலக் கோளவடிவில் குடைந்து மூன்று முனிவர் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயர் கருடாசனத்தில் இளமைக்கோலத்துடன் சடைமகுடம், சரப்பளி, வஸ்திர முப்புரிநூல் இவற்றுடன் காட்சிதரும் மார்க்கண்டேயர் இடைக்கட்டுத் தழுவிய பட்டாடையணிந்துள்ளார். ஒன்றையொன்று நெருங்கியுள்ள கைகள் கடகத்தில் உள்ளன. கருடன் மார்க்கண்டேயருக்குப் பின்னால் கரண்டமகுடம், முப்புரிநூல் இவற்றுடன் நிற்கும் கருடனின் இறக்கைகள் இருபுறத்தும் மடிந்துள்ளன. சடைக்கற்றைகள் மகுடத்தை மீறிப் புறந்தள்ளியுள்ளன. செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். இருகை களையும் குறுக்கீடு செய்து பெருமாளுக்குப் பணிவு காட்டினாலும், இடக்கை மார்பருகே தர்ஜனியாக அச்சுறுத்துகிறது. வலக்கை இடத்தோளில் படிந்துள்ளது. கடைவாய்ப் புறத்தே கோரைப்பற்கள். கைகளில், மேற்பகுதியில் முகப்பணியுடனான நாகத் தோள்வளைகள்; மணிக்கட்டுகளில் வளைகள். கழுத்தில் கண்டிகை, சரப்பளி. இடையாடை கணுக்கால்வரை நீண்டுள்ளது. அரைப்பட்டிகையின் முடிச்சுத்தொங்கல்கள் தொடைகள் மீது தவழ, இடைக்கட்டு இருபுறத்தும் முடிச்சிடப்பட்டுள்ளது. ஆடவர் சிற்பம்17 மார்க்கண்டேயருக்கும் கருடனுக்கும் இடையிலுள்ள பின்சுவரின் கீழ்ப்பகுதியில் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, வஸ்திரமுப்புரிநூல் பெற்று இடுப்பளவாகக் காட்சிதரும் ஆடவரின் வலக்கை மலர்மொட்டைத் தோளில் சாய்த்துப் பிடித்திருக்க, இடக்கை இறைவனைப் போற்றுகிறது. 'பொந்து' முனிவர்கள் கருடனுக்கு இடப்புறம், கருவறைப் பின்சுவரில் கோளவடிவில் 'பொந்து' போலக் குடைந்து அதில் மூன்று அமர்நிலைச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கால்களைக் குறுக்கீடு செய்து அமர்ந்திருக்கும் அம்மூவருள் முன்னால் இருப்பவர் ஆசிரியர் போலும். தாடியும் சடைப்புரிகள் இழிந்த சடைமகுடமும் பட்டாடையுமாய்க் காட்சிதரும் அவரது கைகள் கடகத்திலுள்ளன. வஸ்திர முப்புரிநூல், வளைகள், முத்துமாலை, குண்டலங்கள் அணிந்துள்ள அவரது இதழ்கள் திறந்திருப்பதாலும் கைகளின் அமைப்புக் கொண்டும் அந்தப் பெரியவர் இறைவனை வழிபடுவதாகக் கருதலாம். பெரியவருக்குப் பின்னால் காணப்படும் இளைஞர் வலக்கையை முழங்கால் மீது இருத்தியுள்ளார். இடக்கை வயிற்றருகே கடகமாய்க் கவிழ்ந்துள்ளது. தலையில் முகப்பணிகள் பொருந்திய கரண்டமகுடம். பூட்டுக்குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், வளைகள் அணிந்துள்ள அவரது இதழ்கள் மூடியுள்ளன. இளயவரின் இடப்புறம் நடுவயதினர் ஒருவர் கழுத்தளவு மட்டும் தெரியுமாறு தலையைக் காட்டி அமர்ந்துள்ளார். கிரீடம் போன்றதொரு மகுடம் அணிந்துள்ள அவரும் பெரியவரின் மாணவராகலாம். திருவடிப்புறச் சிற்பங்கள் விஷ்ணுவின் திருவடிப்புறத்தே உள்ள மூன்று சிற்பங் களுள் ஒன்று நிலமகள். பிற இரண்டும் விஷ்ணுவை அழிக்க வந்த மது, கைடப அரக்கர்களாய் அமைந்துள்ளன. நிலமகள் சடைமகுடமும் அதிலிருந்து இடுப்புவரை பின்னிறங்கும் அழகிய சடையுமாய்க் கச்சற்ற மார்பங்களுடன் இறைவன் திருவடியருகே சேஷனில் ஒன்றியவாறு கருடாசனத்தில் உள்ள நிலமகளின் இடையைக் கணுக்கால்வரை நீளும் பட்டாடை அழகுசெய்கிறது. நூபுரம், தோள்வளைகள், வளையல்கள், முத்துமாலைகள், கடிப்புத்தோடுகள், முப்புரிநூல், மேற்கை தோளைச் சேருமிடத்தில் மணிவளையம் இவற்றை அணிந்துள்ள தேவியின் கைகள் இரண்டும் எதையோ கொண்டபடி அஞ்சலியில் இருக்க, முகம் இலேசான இடத்திருப்பத்தில் பெருமாளை நோக்கியவாறு உள்ளது. மது, கைடபர் இறைவன் திருவடியருகே நிற்கும் மது, கைடப அரக்கர் களுள், முதலாமவர் விஷ்ணுவிற்கு முதுகு காட்டியுள்ளார். புறமுதுகிட்டு ஓடும் தோற்றத்தில் உள்ள அவரது கால்களில் மணிகள் கோத்த சதங்கைகள். இடுப்பில் மரவுரியாடையும் இடைக்கட்டும். இடைக்கட்டின் முடிச்சுத்தொங்கல்கள் இருபுறத்தும் காட்டப்பட்டுள்ளன. கிளிஞ்சல் வடிவ மணிகள் கோத்த இடுப்பணி அரைப்பட்டிகையின் கீழ்க் காட்டப்பட்டுள்ளது. உதரபந்தமும் வஸ்திரமுப்புரிநூலும் தோள், கை வளைகளும் குழல்கள் நெகிழ்ந்து பரவும் சடைமகுடமும் கொண்ட அவரது இடக்கை, தம்மைத் தாக்கவரும் ஆதிசேடனின் நச்சுத் தீச்சுடர்கள் முதுகின் மீது படாவண்ணம் தடுக்குமாறு போலப் பதாகமாய் விரிந்துள்ளது. வலக்கை, கத்தியின் கைப்பிடியைப் பிடித்தபடி சுவரில் படிந்துள்ளது. அவரது வலக்கால் தரையில் ஊன்றியிருக்க, இடக்கால் சேஷனின் அடுக்கில் சிக்கியுள்ளது. தலையை நிமிர்த்திப் பின்னுக்குச் சாய்த்தவாறு தீயின் வெம்மை தாங்காமல் வாய்விட்டு அலறும் அவரது வாய்க்கடையில் கோரைப்பற்கள். அவரை நோக்கியவாறு நிற்கும் இரண்டாம் அரக்கரும் சடைமகுடரே. அவரது நெகிழும் குழல்களில் தாமரைகள்; செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். இலேசாய்த் திறந்திருக்கும் வாயின் கடையில் கோரைப்பற்கள். பிதுங்கிய விழிகள். மணிகளின் சரமாய்த் தொங்கும் முப்புரிநூல்; உதரபந்தம். இடையில் சிற்றாடையும் இடைக்கட்டும். இடைக்கட்டின் முடிச்சுத்தொங்கல்கள் வலப்புறம் நன்கு காட்டப்பட்டுள்ளன. கைகளில் வளையல்கள். தோள்வளைகள் இல்லை. கழுத்தில் ஆரமொன்று காட்டப்பட்டுள்ளது. வலக்கை பின்னவரை நிறுத்துமாறு போலப் பதாகத்தில் உள்ளது. இடக்கை வியப்பு முத்திரையில் விரிந்துள்ளது. வலக்கால் முழங்காலளவில் மடங்கிப் பாறையில் மறைய, இடக்கால் அதே போல் மடங்கிச் சற்று உயர்த்தப்பட்டுள்ளது. வடசுவர்ச் சிற்பங்கள் மேற்குச் சுவர் வடசுவரைத் தழுவுமிடத்து ஒரு சிற்பமும் கிழக்குச் சுவர் வடசுவரைத் தழுவுமிடத்து இரண்டு சிற்பங்களும் வடசுவரில் இருபத்தைந்து சிற்பங்களும் இடம்பெற்றுள்ள இந்தத் தேவர், முனிவர் இணைவுக்காட்சி பாறைச்சுவர்களின் வளைவுக்கும் அமைப்பிற்கும் ஏற்ப நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இடத்தின் அளவும் சிற்பங்களாய் அமையவேண்டியவர்களின் எண்ணிக்கையும் அவரவர்க்கு உரிய முக்கியத்துவமும் கருத்தில் கொள்ளப்பட்டு அதற்கேற்ப அமைக்கப்பட்டுள்ள இந்த அணிவகுப்பு இக்குடைவரையை உருவாக்கிய கைகளின் திறம், பயிற்சி, கலைநோக்கு அனைத்திற்கும் சான்றாகிறது. நான்முகனைத் தலைநாயகர் போல் வடசுவரின் நடுவில் இருத்தி, அவருக்கு வலப்புறம் பதினொரு சிற்பங்களும் இடப்புறம் பதின்மூன்று சிற்பங்களும் அமைத்து, தொடக்கத்தை மேற்கு முகமாகச் சந்திரனில் காட்டி, முடிவைக் கிழக்குமுகமாகச் சூரியனில் பொருத்தி, சுவர் வளைந்து திரும்புமிடங்களில் அஞ்சலிக் கையர்களாய்ப் பத்திமை பூண்டோரை வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு இக்குடைவரையைக் கருவுயிர்த்தாரின் திட்டமிடும் நேர்த்தி, செயல்திறன், அழகுணர்வு அனைத்தையும் பறைசாற்றுவதாய் அமைந்துள்ளது. தமிழ்நாட்டளவில் இது போல் தேவர், முனிவர் அணிவகுப்புடன் அமைந்த பாம்புப் படுக்கையர் தொகுதிகளுள், மெய்யத்துக் காட்சிக்கே அனைத்திலும் முதலிடம். வடமேற்கு உச்சியர் மேற்குச் சுவர் வடசுவரைத் தொடுமிடத்துத் தேவஅணியைத் தொடங்கும் முதல்வராய் அமைந்துள்ள ஆடவர் கைகள் வணக்கமுத்திரையில். செவிகளில் குண்டலங்கள். இடுப்புவரையே காட்டப்பட்டுள்ள அவரது தலையைச் சடைமகுடம் அலங்கரிக்கிறது. சரப்பளி அணிந்துள்ள அவரை இன்னாரென அடையாளம் காணக்கூடவில்லை. சந்திரன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டத்துடன் இடுப்பளவிற்குக் காட்டப்பட்டுள்ள சந்திரனின் வலக்கைத் தாமரை மொட்டு தோளில் சாய்க்கப்பட்டுள்ளது. இடக்கை போற்றி முத்திரையில் உயர்ந்து நீள, இடையில் அரைக்கச்சு. சடைமகுடத்தை மீறிய குழல்கள் இடப்புறம் நெகிழ்ந்துள்ளன. பெண் தலைக்குப் பின் ஒளிவட்டம் பெற்றுள்ள இவர் சந்திரனின் மனைவி ரோகிணியாகலாம்.18 கைகள் அஞ்சலியில் அமைய, செவிகளில் வலப்புறம் பனையோலைக் குண்டலம். இடப்புறம் பூட்டுக்குண்டலம். சடைமகுடத்தை மீறிய குழல்கள் வலப்புறம் நெகிழ்ந்துள்ளன. இடையில் அரைப்பட்டிகை இருத்தும் சிற்றாடை, இடைக்கட்டு. கழுத்தில் சரப்பளி. கைகளில் வளைகள். தும்புருவும் சீடரும் பெண்மணியை அடுத்து இளையவர் ஒருவரும் அவருக்கு முன்னால் நன்கு பரவியமர்ந்தபடி யாழ் வாசிக்கும் தும்புருவும்19 காட்டப்பட்டுள்ளனர். இளையவர் தும்புருவின் சீடராகலாம். வலக்கை கடகமாய் மார்பருகே அமைய, தலைமுடியைச் சடை மகுடமாய் முடிந்துள்ளார். வஸ்திர முப்புரிநூலும் சரப்பளியும் அணிந்துள்ள அவரது செவிகள் நீள்வெறுஞ் செவிகளாக உள்ளன. தலைநிமிர்ந்து அமர்ந்திருக்கும் இச்சீடர் உடலின் இடப்பாதி தும்புருவின் பின் மறைந்துள்ளது. சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் தும்புருவின் மடியில் இருக்குமாறு யாழ் கிடத்தப்பட்டுள்ளது. அதன் குடப்பகுதியில் இருந்து வளைந்து திரும்பும் தண்டுப்பகுதி மேனோக்கி நீண்டுள்ளது. தண்டுப்பகுதியை இடக்கையால் வருடியவாறு உள்ள தும்புருவின் வலக்கை மார்பருகே கடகமாய் உள்ளது. தாடி, மீசையும் சடைமகுடமும் சரப்பளியும் நிவீதமாய் வஸ்திரமுப்புரிநூலும் கொண்டுள்ள தும்புருவின் முன் நீண்டதொரு தண்டுள்ள வீணையுடன் நாரதர்.20 அவருக்கும் தும்புருவுக்கும் இடையில் இரண்டு இளையவர்கள். நாரதரும் சீடர்களும் வயது முதிர்ந்தவராய்ச் சம்மணமிட்டு அமர்ந்துள்ள நாரதரின் வலக்கை, மடியிலும் தரையிலுமாய்க் கிடத்தப்பட்டுள்ள வீணையின் நரம்புகளை மீட்ட, இடக்கை ஸ்வரதானங்களில் உள்ளது. மீசை, தாடியுடன் சடைமகுடமும் செவிப்பூப் பொருந்திய நீள்செவிகளும் கைகளில் வளைகளும் மார்பில் உருத்திராக்க ஆரமும் நிவீதமாய் வஸ்திரமுப்புரிநூலும் கொண்டு இடுப்பில் அரைப்பட்டிகையிருத்தும் பட்டாடையுடன் அமர்ந்திருக்கும் நாரதரின் பின்னால் குழல்கள் நெகிழ்ந்த சடைமகுடர்களாய்ப் பூட்டுக்குண்டலங்களுடன் இளைஞர்கள் இருவர். முன்னவர் மார்பில் வஸ்திரமுப்புரிநூல். வலக்கை கடகத்தில் உள்ளது. மார்பளவினராய்க் காட்டப்பட்டுள்ள பின்னவரின் சடைக்குழல்கள் நெகிழ்ந்துள்ளன. தண்டபட்சர் நாரதரின் வீணைத்தண்டு நீளுமிடத்தில், அதன் பின் தண்டபட்சக் கரணத்தில் வயதான ஆடவர் ஒருவர் தாடி, மீசை, செவிப்பூ இவற்றுடன் காட்டப்பட்டுள்ளார். அவரது வலக்கால் தளத்தில் இருத்தப்பட்டுள்ளது. முழங்காலளவில் மடிக்கப்பட்டு மார்பளவிற்கு உயர்த்தப்பட்டுள்ள இடக்கால் பாதத்தில் சிலம்பு. இடக்கை முழங்காலைச் சூழ்ந்த நிலையில் பதாகமாய் உள்ளது. வலக்கை மடிந்து தோளுக்கு மேல் உயர்ந்து, குடுவையொன்றைத் தோளில் நிறுத்திப் பிடித்துள்ளது. தலையைச் சுற்றிக் காணப்படும் கொம்பு போன்ற எழுச்சிகளைச் சக்கரத்தின் ஆரங்களாகக் கொண்டால் இவரைச் சக்கரத்தாழ்வாராகக் கருதலாம். உடல் நேர்நோக்கியிருந்தாலும் முகத்தை இடப்புறமாய்த் திருப்பியுள்ள அவரது மார்பணி சன்னவீரமாகலாம்.21 குறளர் முப்புரிநூலும் சரப்பளியும் பனையோலைக் குண்டலங்களும் அணிந்து குழல்கள் பறக்கும் கரண்டமகுடராய்த் தாமும் பறக்கும் நிலையில் காட்சியளிக்கும் குறளரின் வலக்கை போற்றியிலும் இடக்கை வியப்பிலும் அமைய, அவரது இடைக்கட்டின் முடிச்சுத்தொங்கல்கள் இடப்புறம் நன்கு காட்டப்பட்டுள்ளன. 'கூனற் சங்கம்' என்று சங்காயுதத்தைக் குலசேகர ஆழ்வார் குறிப்பிடுவது நோக்க, இக்குறளரை ஆயுத புருஷர்களுள் ஒருவரான சங்காயுதராகக் கொள்ளலாம்.22 மது, கைடபர்களை அழிக்கப் பாய்வது போன்ற அவரது தோற்றம், பத்திமையாளர்களையும் இசைவாணர்களையும் அடுத்தமையும் மாறுபட்ட உணர்வுக் கலவையாகும். வித்யாதரர் குழல்கள் பறக்கும் சடைமகுடமும் பனையோலைக் குண்டலங்களும் சரப்பளியும் முப்புரிநூலும் வளைகளும் அரைப்பட்டிகையிருத்தும் மரவுரியாடையும் அணிந்து பறக்கும் வித்யாதரரின் இடைக்கட்டு முடிச்சும் தொங்கல்களும் வலப்புறத்திருக்க, அரைப்பட்டிகையின் முடிச்சுத்தொங்கல்கள் கால்களுக்கிடையில் காட்டப்பட்டுள்ளன. அவர் விரைவுக்கு ஏற்ப முப்புரிநூலும் தொங்கல்களும் பறக்கும் அழகு சொல்லுந் தரமன்று. வலக்கை மேலுயர்ந்து கடகமாய் நிற்க, இடக்கை அச்சுறுத்துகிறது. நான்முகன் - தக்கன் - அக்னி தாமரையில் அர்த்தபத்மாசனத்திலுள்ள நான்முகனின் வல முன் கை கடகத்திலிருக்க, இட முன் கை மடிமீது தியான முத்திரையில் உள்ளது. பின்கைகளில் வலப்புறம் குண்டிகை. இடப்புறம் அக்கமாலை. சடைமகுடம், சரப்பளி, நிவீதமாய் வஸ்திர முப்புரிநூல், பட்டாடை, தோள், கை வளைகள், பூட்டுக்குண்டலங்கள் அணிந்துள்ள நான்முகனின் மூன்று திருமுகங்களும் முறுவலுடன் உள்ளன. தலைக்கு மேல் மூன்று தலைகளுக்குமாய்க் கவிந்துள்ள பெருங்குடை. நான்முகனின் பின்கைகளுக்கு மேலிருக்குமாறு அவர் திருமுகங்களின் வலப்புறம் தக்கனும் இடப்புறம் அக்னியும் காட்டப்பட்டுள்ளனர். தக்கன் ஆட்டுத்தலையுடன் தோள், கை வளைகள், சரப்பளி விளங்க, கைகளைக் கடகத்தில் கொண்டுள்ளார். அக்னியின் செவிகளில் பூட்டுக்குண்டலங்கள். தலையில் சுடர்முடி. கைகளில் ஏந்தியிருப்பது அக்னிக் குண்டமாகலாம். வித்யாதரர்கள் நான்முகனின் இடப்புறம் பறக்கும் நிலையில் மூன்று வடிவங்கள் காட்டப்பட்டுள்ளன. முதல் வடிவம் ஆண். குழல்கள் பரவி நெகிழ்ந்த கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், கணுக்கால்களில் வலப்புறம் சிலம்பு, இடப்புறம் சலங்கை, வஸ்திரமுப்புரிநூல், இடை யில் சிற்றாடை, இடைக்கட்டு கொண்டு இடப்பார்வையாய்க் கிழக்கு நோக்கிப் பறக்கும் இவ்விளையவரின் வலக்கை ஓங்கி உயர்ந்து பதாகத்திலுள்ளது. இடக்கை மது, கைடபர் திசை நோக்கிச் சுட்டு முத்திரையிலுள்ளது. வலக்கால் மடிந்து பின்னுக்காய் உயர, இடக்கால் மடங்கிப் பாதம் வலத் தொடைக்காய்த் திருப்பப்பட்டுள்ளது. பக்கங்களில் திரண்ட சடைக்கற்றைகளும் வாய்க்கடையில் நீண்டிருக்கும் கோரைப்பற்களும் முகத்தில் காட்டப்பட்டிருக்கும் உக்கிரமும் இவரது சினவேகத்தை அதிகப்படுத்துவனவாய் அமைந்துள்ளன. முன்னவரைப் போல் அல்லாமல், இரண்டாமவர் வலக் காலைக் கீழ்நோக்கி நீட்டியுள்ளார். இடக்கால் மட்டுமே முன்னவரைப் போல் மடங்கிப் பாதம் வலத்தொடைக்காய்த் திருப்பப்பட்டுள்ளது. கணுக்கால்வரை ஆடை அணிந்துள்ள அவரும் முன்னவரைப் போலவே குழல்கள் நெகிழ்ந்த கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், சரப்பளி, தோள், கை வளைகள் அணிந்து, வலக்கையை உயர்த்திக் கடகமாய்த் திருப்பியுள்ளார். இடக்கை தோளுக்காய் மடிந்துள்ளது. மார்பகங்களைக் கச்சால் மறைத்துள்ள அவர் முகத்தில் முன்னவரைப் போல் அத்தனைக் கடுமையில்லை. முதலாமவரைப் போன்ற காலமைப்புடன் உள்ள மூன்றாமவரும் பெண்.23 அவரது இளமார்புகள் கச்சின்றியுள்ளன. இடக்கை மது, கைடபர் நோக்கிச் சுட்டிலுள்ளது. வலக்கை மேனோக்கி உயர்ந்து அம்சாஸ்யத்திலுள்ளது. இவருக்கும் குழல்கள் நெகிழ்ந்த கரண்டமகுடம், முப்புரிநூல், தோள், கை வளைகள், சலங்கைகள், பனையோலைக் குண்டலங்கள், ஆரம் இவை காட்டப்பட்டுள்ளன. இம்மூவருள் முதலாமவர் முகத்தை வலப்புறம் சாய்த்து இடப்பக்கம் திருப்பியிருக்க, இரண்டாமவர் முகத்தை நேராக வைத்துள்ளார். மூன்றாமவர் முகம் இலேசான இடச்சாய்வில் நேர்ப்பார்வையாக உள்ளது. சப்தரிஷிகள் 24 பெண்களின் இடப்புறம் நெருக்கியடித்தவாறு காட்சிதரும் சப்தரிஷிகளில் மூவர் மட்டுமே இடுப்பளவிற்குத் தெரியுமாறு நிற்கின்றனர். ஏனைய நால்வரும் அவர்களுக்குப் பின்னால் தலைகாட்டித் தம்பிரான்களாய் உள்ளனர். எழுவருமே வயது முதிர்ந்த சடைமகுடர்களாய், மீசை, தாடியுடன் காட்சிதருகின்றனர். மார்பின் வலப்பகுதி மட்டும் தெரியுமாறு நிற்கும் முதலாமவரின் எதையோ பற்றியுள்ள வலக்கையில் வளை. அடுத்தவர் வஸ்திர முப்புரிநூல் அணிந்துள்ளார். வலக்கை மார்பருகே கடகத்திலிருக்க, இடக்கை வயிற்றருகே தியான முத்திரையில் உள்ளது. மூன்றாமவரின் தலை மட்டுமே தெரிகிறது. நான்காமவரும் வஸ்திரமுப்புரிநூல் அணிந்துள்ளார். தோள், கை வளைகள் பெற்றுள்ள அவரது வலக்கை கடகமாக மார்பருகே அமைய, இடக்கை வயிற்றருகே விரல்கள் மடிந்த நிலையில் உள்ளது. ஐந்தாமவரும் ஏழாமவரும் தலைகாட்டித் தம்பிரான்கள். ஆறாமவர் அஞ்சலியில் உள்ளார். மார்பில் வஸ்திரமுப்புரிநூல், கைகளில் வளைகள். நான்காமவருக்கும் ஐந்தாமவருக்கும் இடையில் தெரியும் தலை அருந்ததியுடையதோ? சூரியன் மிகப் பெரிய ஒளிவட்டப் பின்னணியில், வலக்கையால் போற்றி, இடக்கை மலரைத் தோளில் சாய்த்து நிற்கும் சூரியனின்25 வலக்கால் நீண்டுள்ளது. இடக்கால் முழங்காலளவில் மடக்கப்பட்டுள்ளது. நிவீதமாய் முப்புரிநூலும் உதரபந்தமும் மரவுரியாடையும் குழல்கள் புரளும் கரண்டமகுடமும் பனையோலைக் குண்டலங்களும் தோள், கை வளைகளும் சரப்பளியும் அழகிய இடைக்கட்டும் அணிந்திருக்கும் சூரியனின் இடைக்கட்டு முடிச்சுகளும் தொங்கல்களும் இருபுறத்தும் பறக்கின்றன. வடகிழக்கு அஞ்சலி இணை கிழக்குச் சுவரின் உச்சியில் இடுப்பளவாய்க் காட்டப் பட்டிருக்கும் ஆணும் பெண்ணும்26 குழல்கள் சரியும் சடை மகுடர்களாய் அஞ்சலியில் உள்ளனர். ஆடவர் முப்புரிநூல் அணிந்து, குண்டலங்களற்ற நீள்செவிகளுடன் அமைய, பெண்ணின் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். கைகளில் தோள், கை வளைகள். இடுப்பில் அரைக்கச்சுடனமைந்த பட்டாடை. இவர்களை இன்னாரென அடையாளம் காணக்கூடவில்லை. குறிப்புகள் 16. 'பெருமாளின் மார்பில் தஞ்சம் கொண்டுள்ள திருமகளை (ஸ்ரீதேவி) அவரது இடதுகை அணைக்க' என்று பிழையாகக் குறித்துள்ளார் ஜெ. ராஜாமுகமது. மு. கு. நூல், ப. 239. 17. இவரைச் 'சித்திரகுப்தர்' என்று குறிக்கிறார் ஜெ. ராஜாமுகமது. மு. கு. நூல், ப. 239; இவரை விஷ்வக்சேனராகக் கொள்ளும் சம்பகலட்சுமி, இவர் கைகளை மடக்கிய நிலையில் நிற்பதாக எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 72. 18. சந்திரனையும் ரோகிணியையும் 'சூரியன், உஷஸ்' எனக் கொள்கிறார் சம்பகலட்சுமி. மு. கு. நூல், ப. 72. இருக்கும் திசைக்கேற்ப, இவர்களைச் சந்திரனாகவும் ரோகிணியாகவும் கொள்ளலாம். 19. இவரை நாரதராகவும் கொள்ளலாம். சம்பகலட்சுமி நாரதராகவே கொண்டுள்ளார். மு. கு. நூல், ப. 72. 20. இவரைத் தும்புருவாகவும் கொள்ளமுடியும். சம்பகலட்சுமி, இவரையே தும்புரு என்கிறார். மு. கு. நூல், ப. 72. 21. இதை வலமிருந்து இடமாக அணியப்பட்டுள்ள முப்புரிநூலாகவும் கொள்ளமுடியும். குடைவரைச் சிற்பங்களைப் பற்றி எழுதியுள்ள ஜெ. ராஜாமுகமது, கே. வி. செளந்தரராஜன், சம்பகலட்சுமி ஆகியோர் மாறுபட்ட இச்சிற்பத்தைப் பற்றி ஏதும் கூறவில்லை. மு. கு. நூல்கள். 22. பெருமாள் திருமொழி : 654. மாமல்லபுரம் அனந்தசாயித் தொகுதி, சிங்கவரம் பள்ளி கொண்ட பெருமாள் குடைவரை, மலையடிப்பட்டி ஒளிபதிவிஷ்ணுகிருகம், நாமக்கல் அதியேந்திர விஷ்ணுகிருகம் இவை அனைத்திலும் இந்தக் குறளரைக் காணமுடிகிறது. 23. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி ஆகியோர் இவர்களைச் சுட்டவில்லை. மு. கு. நூல். கே. வி. செளந்தரராஜன், 'கின்னர வித்யாதரர்கள்' என்றும் ஜெ. ராஜாமுகமது, கின்னரர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மு. கு. நூல்கள், பக். 103, 239. கின்னரர்கள் மனித முகமும் பறவை உடலும் கொண்டிருப்பர். Alice Boner, Principles of Composition in Hindu Sculpture, Motilal Banarsidass Publishers Pvt. Ltd., Delhi and Indira Gandhi National Centre for the Arts, New Delhi, 1990, . 252. இத்தொகுதியிலுள்ள நான்கு வித்யாதரர்களுள் இருவர் ஆண்கள். இருவர் பெண்கள். இவர்களில் எவரையும் ஆயுத புருஷராக இனங்காணும் அடையாளங்கள் இல்லை. 24. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி, ஜெ. ராஜாமுகமது இவர்கள் சப்தரிஷிகளைக் குறிப்பிடவில்லை. மு. கு. நூல்கள். 25. இவரைச் சந்திரனாய்க் கொள்கிறார் சம்பகலட்சுமி. மு. கு. நூல், ப. 73. ஜெ. ராஜாமுகமது, சூரியன், சந்திரன் இருவரையுமே குறிப்பிடவில்லை. மு. கு. நூல். 26. மற்றோர் ஆடவருடன் இணைந்து அஞ்சலியில் காட்டப்பட்டிருக்கும் இப்பெண்ணைச் சந்திரனின் மனைவி ரோகிணியாய் சம்பகலட்சுமி குறிப்பிட்டுள்ளமை பொருந்துவதாக இல்லை. மு. கு. நூல், ப. 73. இவரை, அந்த ஆடவருக்குரிய பெண்மணியாகவே கொள்ளமுடியும். சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி குறிப்பிடும் சிவபிரானை இக்கலைக்கூடத்தில் காணக்கூடவில்லை. அது போலவே கே. வி. செளந்தரராஜன் சுட்டியுள்ள சுகபிரம்மரையும் அறியக்கூடவில்லை. (தொடரும்) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |