http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 7
இதழ் 7 [ இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ், ஜனவரி 30, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் தமிழ்நாட்டைத் தலைநிமிர்த்தும் கோயில். தமிழரின் கட்டுமானப் பொறியியல் அறிவு உச்சத்தை உலகுக்கெல்லாம் உணர்த்தி நிற்கும் அந்த இணையற்ற கற்றளியைச் சூழவிருக்கும் தனிச் சிறப்புகள் ஒன்றிரண்டல்ல. அது போலவே அந்தத் திருக்கோயிலைக் காலந்தோறும் தொடர்ந்துவரும் பொய்களுக்கும் கணக்கில்லை. 'ஜனநாதன்' என்று மக்கள் தலைவராய் விருதேற்ற தமிழ்நாட்டின் ஒரே வேந்தரான முதலாம் இராஜராஜரால் உருவாக்கப்பட்ட இந்த மாபெரும் கட்டுமான உன்னதத்தின் கலைச்சிறப்புகளைக் கண்முன் காட்சிகளாகக் காட்டுவதுதான் எவ்வளவு மகிழ்வளிக்கிறது!
கலைச் சிறப்புகள் தமிழ்நாட்டில் இரண்டு திருவாயில்களைக் கொண்டெழுந்த முதற் கோயில் இராஜராஜீசுவரம்தான். கட்டப்பட்ட காலத்துக் கோபுரங்களோடு திகழும் முதற் சோழர் கோயிலும் இதுதான். திருவாயில்கள், கட்டியவர் பெயரேற்றுக் களிப்புற்றிருக்கும் முதல் கட்டுமானமும் இராஜராஜீசுவரம்தான். முதல் வாயில் கேரளாந்தகன் திருவாயில். இரண்டாம் வாயில் இராஜராஜன் திருவாயில். கோபுரச் சுவர்களில் இலக்கியப் பக்கங்களைச் சிற்பப் பதிவுகளாகப் பெற்ற ஒரே தமிழ்நாட்டுத் திருக்கோயில் இதுதான். இராஜராஜன் திருவாயிலின் வடபுறம் நக்கீரதேவரின் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் பதிவாகியுள்ளது. மேற்கில் சேரமான் பெருமாளின் கயிலாய உலா காட்சிக்குக் கிடைக்கிறது. இரண்டடுக்குத் திருச்சுற்று மாளிகை பெற்ற முதல் தமிழ்நாட்டுக் கோயில் இதுதான். இரண்டடுக்குகளின் மேல் மூன்றாம் அடுக்காய் நடைப்பரப்பும், பிடிச்சுவரும் கொண்ட ஒரே கோயிலும் இதுதான். சுற்று மாளிகையில் நான்கு வாயில்களும் கோபுரவாயிலாய் ஐந்தாவது நுழைவிடமும் பெற்ற முதல் தமிழ்நாட்டுக் கோயில் இதுதான். வளாகத்தின் எட்டுத் திசைகளிலும் அவ்வத் திசைக்காவலருக்கென இருதளத் திருமுன்கள் பெற்ற ஒரே கோயில். தமிழ்நாட்டின் மிகப் பெரிய திசைக்காவலர் சிற்பங்களைப் பெற்ற முதற் கோயில்; ஒரே கோயில். நெருக்குதல் இல்லாத பரந்தவெளியில் விமானமும் இடைநாழிகையும் மண்டபங்களுமாய் அமைந்த முதற்கோயில். 215 அடி உயரக் கல் விமானம் தமிழ்நாட்டின் முதற் சாதனை. இன்றளவும் யாரும் தொடமுடியாமற் போன உயர் சாதனை. இராஜசிம்மரின் சாந்தார அறிவை அகலப்படுத்தி, தொழில்நுட்ப நேர்த்தியுடன் ஈரடுக்குச் சாந்தாரம் பெற்ற முதல் விமானம். விமானத்திற்கு நாற்புறமும் வாயில் அமைத்து அதைச் சர்வதோபத்ரமாக்கிய சோழச் சாதனையாளர்களின் முதற் பதிவு. ஒரே பதிவு. கருவறைச் சுவர்களின் இடைச் சுற்றில் முதல் தளத்தில் ஓவியங்களும் இரண்டாம் தளத்தில் கரணச் சிற்பங்களூம் பெற்ற ஒரே கோயில். விமான ஆர அலங்கரிப்பில் அதுநாள்வரையும் காட்டப்படாத அமைவுகள் பெற்ற முதற் கோயில். மிக உயரமான குடம்; கட்டியவர் அளித்ததாய்க் கல்வெட்டில் இடம்பெற்றது தமிழ்நாட்டிலேயே இது ஒன்றுதான். தமிழ்நாட்டின் பொள்ளல் வகை விமானங்களில் மிக உயரமானது. கொடிக்கம்பமாய்ப் பூதமொன்றின் சிற்பத்தைக் கழுத்துப் பகுதியில் பெற்ற முதல் விமானம். தமிழ்நாட்டின் மிகப் பெரிய சண்டேசுவரர் திருமுன் இங்குதான் உள்ளது. படிப்பதற்கும் பயில்வதற்கும் என்றே செதுக்கினாற் போல் கல்வெட்டுகள் கொண்ட ஒரே கோயில். 50 மீட்டருக்கும் மேலான நீளத்திலமைந்த பல கல்வெட்டுகளைக் கொண்ட ஒரே கோயில். கட்டுமானப் பணியில் பங்களிப்புச் செய்தவர்களையெல்லாம் கல்வெட்டுகள் பெருமைப்படுத்தியிருக்கும் ஒரே கோயில். 400க்கும் மேற்பட்ட ஆடற்பெண்களும் 216 தொழிலறிஞர்களும் பணியாற்றிய ஒரே தமிழ்நாட்டுக் கோயில். நாடெங்கிலும் இருந்து வந்த மெய்க்காவலர்களைப் பெற்றிருந்த முதற் பெருங்கோயில். தமிழ்நாட்டிலேயே மிகுதியான அளவில் செப்புத்திருமேனிகள் பெற்றிருந்த திருக்கோயில். தமிழ்நாட்டிலேயே மிகுதியான அளவில் விலைமதிப்பற்ற மணிகளையும் நகைகளையும் கவன்களையும் கொண்டிருந்த ஒரே கோயில். தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின் பெருமைகள் வளர்ந்து கொண்டே வருவன. சொல்லச்சொல்லத் தொடர்ந்து உயர்வன. அங்கு எல்லாமே பெருமைதான், முதனிமைதான், புதியனதான். இனி, பொய்களைக் கற்பனைகளை, வெற்று ஊகங்களைப் பார்ப்போம்.
இராஜராஜீசுவரம் கற்பனைகளை வளர்க்கும் கோயில். எழுத்தாளர்களும் கவிஞர்களும் கலைஞர்களும் இந்தக் கோயிலைப் பற்றிக் கதைக்கலாம். ஊக வளத்துடன் விழைவுபோல் கட்டுரைக்கலாம். ஆனால் ஆய்வாளர்கள்? அறிவியல் பின்புலத்தோடு, அழுத்தமான சான்றுகளின் மேல் மட்டுமே உண்மைகளை அல்லது உணர்பவைகளை மக்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டிய ஆய்வாளர்கள் கதைக்கலாமா? இந்தக் கோயிலின் தன்மை அப்படி. மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகாவிட்டால் ஆயிரமாயிரம் கதைகளை ஆய்வுகள் போலவே எழுத வைத்திடும் ஆற்றல் இந்தக் கோயில் வளாகச் சூழலுக்கு உண்டு. இப்படி வளரும் பொய்களையும் இவை மூடிமறைக்கும் உண்மைகளையும் காலம் இனம்பிரிக்கும் என்ற நம்பிக்கையோடு உரியவர்களை நோக்கி வரலாறு காத்திருக்கிறது.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |