http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 7
இதழ் 7 [ இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ், ஜனவரி 30, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கட்டிடக்கலை ஆய்வு
இதற்குமுன் எத்தனையோ தடவை இராஜராஜீசுவரத்திற்குச் சென்றிருந்தாலும், சிறப்பிதழுக்காகத் தகவல் சேகரிக்கச் சென்றபோது மிகவும் மலைப்பாக இருந்தது. ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும் இக்கட்டுமானத்தின் அத்தனை அம்சங்களையும் முழுமையாக விவரித்துவிட முடியுமா என்பது சந்தேகமே. அப்படியிருக்க, ஒரு நான்கு பக்கக் கட்டுரையில் அடக்க முயற்சிப்பது எப்படிச் சாத்தியமாகும்? ஆகவே, முதன்மை விமானத்தின் ஆதிதளம் மற்றும் முதல்தளத்தை மட்டும் விளக்க முயற்சிக்கிறோம்.
விமானத்தின் மொத்த உயரம் 216 அடி. உபபீடம் மட்டுமே சுமார் ஒரு ஆள் உயரத்திற்கு இருக்கிறது. உபபீடத்தையே ஒரு தளமாக உருவகப்படுத்தி, கபோதம், பூமிதேசத்துடன் கபோதபந்தமாய் அமைத்திருக்கிறார்கள். அதற்குமேல் தாங்குதளம் ஆரம்பிக்கிறது. உபானமும் அதன்மேல் சிறு தாமரை வரியும் அமைந்துள்ளன. பின்னர் ஜகதி, உருள்குமுதம், பிரதிவரி ஆகியவை அமைந்திருப்பதால் பிரதிபந்தத் தாங்குதளம் என்றாகிறது. பிரதிவரியிலுள்ள யாளிகளின் மீது போர்வீரர்கள் அமர்ந்து போர் புரிவது போலக் காட்டப்பட்டுள்ளது. திருப்பங்களில் இருக்கும் யாளிகளின் வாய்க்குள்ளிருந்து வீரர்கள் வெளிப்படுவது போலவும் உள்ளது. அதற்கு மேலுள்ள வேதிகைத்தொகுதி கம்புகளுடன் கூடிய வேதிகண்டத்துடன் அமைந்துள்ளது. சுவர் உறுப்புகளைப் பற்றிப் பார்க்கும் முன் தளங்களைப் பத்திகளாகப் பிரித்துக் கொள்வோம். மேலே உள்ள படத்தில் உள்ளவாறு எல்லாத்திசைகளிலும் இரண்டு எல்லைகளிலும் கர்ணகூடங்களும், நடுவில் சாலையும், சாலைக்கும் கர்ணகூடத்துக்கும் நடுவில் பஞ்சரமும் அமைந்துள்ளன. அதாவது கர்ணகூடம் - பஞ்சரம் - சாலை - பஞ்சரம் - கர்ணகூடம் என்ற அமைப்பில். ஒவ்வொரு கர்ணகூடத்துக்கும் பஞ்சரத்துக்கும் சாலைக்கும் கீழே ஒவ்வொரு பத்தி இருக்கிறது. ஆக, ஒவ்வொரு திசையிலும் ஐந்து பத்திகள். ஒரே கர்ணகூடம் அடுத்தடுத்த இரண்டு திசைகளுக்கும் பொதுவாக இருப்பதால், மொத்தம் எட்டு கர்ணப்பத்திகள் எட்டு பஞ்சரப்பத்திகள் மற்றும் நான்கு சாலைப்பத்திகள். கிழக்கில் கருவறை வாயிலுடன் முகமண்டபம் அமைந்திருப்பதால் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு ஆகிய திசைகளிலுள்ள அங்கங்களைக் காண்போம். ஒவ்வொரு திசையிலும் சாலைப்பத்தியில் வாயில்கள் இருக்கின்றன. படிக்கட்டுகள் ஏதும் இல்லாததால் ஏணியை வைத்துத்தான் ஏறவேண்டும். ஏன் படிக்கட்டுகள் அமைக்கப்படவில்லை என்று தெரியவில்லை. இந்த உயரத்தை வைத்துத்தான் திரு. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் (The Colas) இதை மாடக்கோயில் என்று மயங்கி விட்டார். இதன் வழியாகச் சென்றுதான் ஓவியங்களுக்கு மனதைப் பறிகொடுக்க வேண்டும். இனி ஆதிதளத்தின் சுவரிலுள்ள சிற்பங்களைப் பார்ப்போம். ஒவ்வொரு திசையிலுள்ள சுவரையும் சாலைப்பத்தியிலுள்ள வாயில்கள் இரண்டு சமபாகங்களாகப் பிரிக்கின்றன. வாயிற்காவலர்கள் நீங்கலாக, ஒவ்வொரு பாகத்திலும் தலா இரண்டு கோட்டங்கள் (கர்ணபத்திக்கு ஒன்று, பஞ்சரப்பத்திக்கு மற்றொன்று) இருக்கின்றன. ஒரு பத்திக்கும் இன்னொரு பத்திக்கும் இடையில் குடப்பஞ்சரங்கள் உள்ளன. கோட்டங்கள் வெளிப்பிதுக்கமாகவும் குடப்பஞ்சரங்கள் உள்தள்ளியும் இருக்கின்றன. இவ்வாறு உள்தள்ளி இருப்பதை அன்னிய மொழியில் depression என்றும் வடமொழியில் அகாரை என்றும் தேவமொழியில் ஒடுக்கம் எனவும் அழைக்கலாம். கோட்டங்களிலுள்ள சிற்பங்களும் வாயிற்காவலர்களின் ஆயுதங்களும் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குடப்பஞ்சரத்துக்கு இருபுறமும் சில ஆடற்சிற்பங்களும் கின்னரர்கள் பறப்பது போன்ற சிற்பங்களும் இருக்கின்றன. வாயிற்காவலர்கள் உள்ள கோட்டங்கள் நீங்கலாக மற்ற எல்லாக் கோட்டங்களிலும் மகரதோரணங்கள் இருக்கின்றன. அரைத்தூண்கள் சிலவற்றில் மாலைத்தொங்கல் இல்லை. தூண்களின் முடிவில் வெட்டுப்போதிகைகள் இருக்கின்றன. இது முதலாம் இராஜராஜர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. வெட்டுப்போதிகைகள் உத்தரத்தைத் தாங்குகின்றன. உத்தரத்தின் மேல் வாஜனமும், வாஜனத்தின் மேல் வலபியும், வலபியில் பூதகணங்களும், அவற்றிற்குக் குடை பிடித்தாற்போல் கபோதமும், கபோதத்தின் கண்களாய் நாசிகைகளும், கபோதத்திற்கு மேலுள்ள பூமிதேசத்தில் யாளிவரியும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. முதல் தளமும் இதே அமைப்பில் அமைந்துள்ளது. ஆதி தளத்தில் ஓவியங்கள் இருப்பதுபோல் முதல்தளத்தில் நடராஜரே ஆடிக்காட்டும் நாட்டியக் கரணச்சிற்பங்கள் இருக்கின்றன. விமானத்தின் மொத்த எடையை இந்த இரண்டு இருதளச் சுவர்களும் சமமாகப் பகிர்ந்து கொள்கின்றன. வெகு சில கோயில்களில் மட்டுமே இத்தகைய சாந்தாரநாழி இருப்பது தாங்குதிறனை அதிகரிக்க மட்டுமே. இதே தொழில்நுட்பத்தை அடியொற்றித்தான் கங்கைகொண்டசோழபுரமும் அமைந்துள்ளது. இங்கு விமானம் முழுக்க சதுர வடிவத்திலேயே அமைந்துள்ளது. ஆனால் கங்கைகொண்டசோழபுரத்தில் சதுரமாகத் தொடங்கி எண்பட்டையாக மாறி வட்டமாக முடிகிறது. இதுபோல இன்னும் ஏராளமான செய்திகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். முழு விமானத்தையும் ஆராய்ந்தால் எண்ணிலடங்காத இன்ப அதிர்ச்சிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இக்கோயிலிலேயே வாழ்நாள் முழுதும் குடியிருந்தாலொழிய முழுமையாக ஆய்வுக்குட்படுத்த இயலாது. இக்கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பவை 1% கூட இருக்காது. எஞ்சியவற்றை வரும் இதழ்களில் சிறிது சிறிதாகக் காண்போம். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
||||||||||||||||||||||||
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |