http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 7
இதழ் 7 [ இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ், ஜனவரி 30, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
டிசெம்பர் மாதம் 11, 12ம் தேதிகள், சனி ஞாயிறு விடுமுறை என்பதால், சோழ தேச பயணம் மேற்கொள்ளலாம் என்று நினைத்தோம். நமக்குத் தான் விடுமுறை நாட்களில் பயணம் இல்லையென்றால் பொழுது போகாதே.
சோழ தேசத்தில் எந்தக் கோயிலுக்கு செல்வது என்பதைப் பற்றி எந்த ஒரு குழப்பமும் எங்களுக்கு இல்லை. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத பிரும்மாண்டமான கோயில், எத்தனை முறை சென்று படித்தாலும் முடிவடையாத மிக நீளமான கல்வெட்டுகள், அழகிய சிற்பங்கள் என அனைத்தையும் பெற்ற ராஜராஜீசுவரம் என்ற அருமையான தலம் எங்களுக்கிருக்கையில் எதற்குக் குழப்பம். எடுக்க எடுக்க குறையாத செல்வம் என்று கூறுவார்கள். ராஜராஜீசுவரத்தை அப்படிக் குறிப்பிடுவது சாலப் பொருத்தமாக அமையும். பலமுறை சென்றாலும், ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும் பார்த்து வியக்க, இரசிக்க புதியதாய் ஏதேனும் ஒரு விஷயம் இல்லாமல் போகாது, ஒவ்வொரு சிற்பத்தையும், கல்வெட்டையும், அந்த பிரும்மாண்டமான கோவிலைப் பற்றியும் ஆராய்வதற்கும் விஷயங்கள் பல இல்லாமல் போகாது. இன்னும் சொல்லப் போனால், அந்தக் கோயிலைப் பற்றி முழுமையாய் தெரிந்து கொள்ள நமக்கிருக்கும் இந்த ஒரு ஆயுள் போதாது. அதே போல, சாதாரணமாக ஒரு கோயிலுக்கு சென்றால், ஒரு நாளில் என்ன பார்த்தோம் என்று எவரேனும் கேட்டால், இந்தக் கோயிலில் கிழக்கு மற்றும் தெற்குப் பக்கங்களிலுள்ள சிற்பங்களையும், ஒரு சில கல்வெட்டுகளையும் பார்த்தோம், அக்கோயில் கட்டட அமைப்பை ஆராய்ந்தோம் என்று கூறலாம். ஆனால் ராஜராஜீசுவரத்தைப் பொறுத்த வரையில் ஒரு பகுதியை முழுமையாகப் பார்த்தோமா என்றால் அது கூட இயலாத காரியமாகவே எங்களுக்கு இது நாள் வரையிலும் இருந்திருக்கிறது. இந்த முறையும் அவ்வாறே. அதனால் ஒவ்வொரு முறையும் இக்கோயிலுக்கு செல்லும் பொழுதும், ஒரு கட்டுரை எழுதி விடலாம். ஏனெனில் ஒவ்வொரு முறையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு புதிய செய்த்¢கள் இருக்குமல்லவா! கோயிலினுள் நுழைந்து ஒருமுறை வலம் வந்துவிட்டு, அதன் பிரம்மாண்டத்தை பார்த்து வியந்துவிட்டு ஒருவர் அக்கோயிலின் கட்டிட அமைப்பையும், ஒருவர் சிற்பங்களையும், ஒருவர் கல்வெட்டையும் பார்க்க ஆரம்பித்தோம். இக்கோயிலின் ஆதி மற்றும் முதல் தளங்களின் கட்டிட அமைப்பு பரந்தகன் காலத்திய கோயிலான ஸ்ர்நிவாசநல்லூர் குரங்கநாதர் ஆலயத்தை ஒத்திருப்பதைப் பார்த்துக்கொண்டு வந்தோம். பிரதிபந்த அதிஷ்டானத்தில்தான் எத்தனை எத்தனை யாளிகள்? அவை காட்டும் உணர்வுகள்தான் எத்தனை? பரந்துகிடக்கும் பிரதிவரியில் ஒரேயொரு யாளியைக் குறிப்பிட வேண்டுமெனில், விமானத்தின் வடக்கில், சண்டேசுவரர் திருமுன்னிற்கெதிரில் இருக்கும் யாளியைக் குறிப்பிடலாம். பல கற்களாலான விமானத்தின் யாளி வரி, சமமான இடைவெளியில் அமைந்துள்ளது. அவ்வாறு அமைக்கும் பொழுது, ஒரு யாளியின் பாதிவுருவிலேயே கல்லின் இறுதிப்பகுதி வந்துவிட, மீதியுருவை அடுத்த கல்லில் கச்சிதமாய் அமைத்து, சட்டென்று பார்ப்பவர் கண்ணிற்கு இரண்டு கற்களெனத் தெரியா வண்ணம் அமைத்திருக்கும் சோழ சிற்பிகளின் திறன் எங்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. கமலக்கண்ணன் இக்கோயிலின் கட்டிட அமைப்பை இந்த சிறப்பிதழின் கட்டிடக்கலைப் பகுதியில் மிகவும் விரிவாக விளக்கியிருக்கிறார். தவறாமல் படியுங்கள். எந்தக் கல்வெட்டினைப் படிக்கலாம் என்று பார்த்துக்கொண்டிருந்த பொழுது, விமானத்தின் தெற்குப் பக்கமிருந்த ஜகதியில் ஓரிடத்தில் வல்லவரையர் என்ற பெயரைக் கண்டது தான் தாமதம், உடனே இக்கல்வெட்டையே படிப்பது என தீர்மானித்து படிக்கத்தொடங்கினோம். மிக நீளமான பல வரிகளைக் கொண்ட அந்தக் கல்வெட்டில் சில வரிகளைப் படித்தோம், பல செய்திகளைத் தெரிந்துகொண்டோம். அக்கல்வெட்டில் ஓரிரு வரிகளில் உள்ள செய்திகளை இந்த சிறப்பிதழின் கல்வெட்டுப் பகுதியில் பாருங்கள். நாங்கள் கல்வெட்டு படித்துக்கொண்டிருந்தபொழுது, மூன்று பள்ளிக்கூட மாணவிகள் எங்களை நெருங்கி என்ன மொழி என்று கேட்க, நாங்கள் எங்கள் மொழியைக் கேட்கிறீர்களா, இல்லை கல்வெட்டு என்ன மொழியிலுள்ளது என்று கேட்கிறீர்களா? என்று கேட்டுவிட்டு இரண்டுமே தமிழ் தான் என்று கூறினோம். அவர்கள் பள்ளியில் கல்வெட்டு படித்துக்கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்கள் என்றும் அதற்காக Project Work போல கல்வெட்டைப் படித்துக்கொண்டு போக வந்திருக்கிறார்கள் என்றும் தெரிந்துகொண்டோம். அதுவும் அவர்கள் தமிழ் பாடப் புத்தகத்தில் கல்வெட்டுகளைப் பற்றிய "சதாசிவம் பண்டாரத்தாரின்" கட்டுரை இருக்கக்கண்டு மனமகிழ்ந்தோம். உடனே எங்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை. அவர்களுக்கு அங்கேயே கல்வெட்டு படிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தோம். சிறிது நேரம் கல்வெட்டு எழுத்துகளையும், சொற்களையும் காண்பித்துவிட்டு அவர்களை படிக்கச் சொன்னோம். அதற்குப் பிறகு அவர்கள் எழுதியதைப் பார்த்தோம். பரவாயில்லை! அந்த சிறிது நேர பயிற்சிக்கே நல்ல பலன் தான். பல எழுத்துகளையும் அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்கள். அவர்கள் தவறாக எழுதியிருந்ததை திருத்திக்கொடுத்து விட்டு, நாங்கள் படித்துக்கொண்டிருந்த வல்லவரையர் கல்வெட்டை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தோம். பிறகு அக்கோயிலிலுள்ள சிற்பங்களை குறிப்பாக இசை, நாட்டிய சிற்பங்களைப் பார்க்க ஆரம்பித்தோம். இசை சம்பந்தப்பட்ட சிற்பங்கள் அத்தனை பெரிய கோயிலில் சண்டேஸ்வரர் திருமுன்னில் இருக்கும் கைப்பிடிச்சுவரில் மட்டுமே இருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தோம். பிறகு திரு. குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களை சந்தித்துக் கேட்டபொழுது, ஸ்ர்ராஜராஜீஸ்வரத்தின் வடக்கு வாயில் ஸ்ர்ராஜராஜத்தேவரும், அரசில் முக்கிய நிலையில் உள்ளவர்கள் மட்டுமே சென்று தரிசிக்க உபயோகிக்கப்பட்டது. அதனால் வடக்கு வாயிலுக்கு செல்லும் வழியில் இருக்கும் சண்டேஸ்வரர் திருமுன்னை நன்கு அலங்கரித்திருக்கின்றனர் என்றும், வடக்கு வாயிலிலேயே குத்துவிளக்கு போன்ற மங்களச் சின்னங்கள் பொரித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். நாங்கள் பார்த்த சிற்பங்களின் அழகை லலிதா இந்த சிறப்பிதழில் வெளியாகியுள்ள "சண்டேஸ்வர திருமுன் கலைப்பிடிச்சுவர்" கட்டுரையில் மிகவும் அழகாக விளக்கியிருக்கிறார். கண்டிப்பாகப் படித்து மகிழவும். அடுத்த நாள் திரு. குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களை சந்தித்தோம். வழக்கமாக வருவது போலவே பல சந்தேகங்கள். எங்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்தோம். அவரும் மிகவும் உற்சாகமாகவும் விரிவாகவும் விடையளித்தார். நாங்கள் கேட்காமலே கோயிலைப் பற்றிய பல தகவல்களையும் சொல்லி எங்கள் வியப்பை மேன்மேலும் பெருக்கினார். இராஜராஜன் திருவாயில், ஸ்ர் விமானக் கோட்டச் சிற்பங்கள், திருச்சுற்று மாளிகையில் இருக்கும் அஷ்ட திக்பாலகர்களின் உருவங்கள் என்று நாங்கள் அதுவரைக் கண்டிரா பல அற்புதச் சிற்பங்களைக் கண்டு களித்தோம். குறிப்பாக, தென்கிழக்கு மூலையில் அமைந்திருக்கும் அக்னி பகவானின் கருவறை எங்கள் நெஞ்சைவிட்டு அகலாத சுவடைப் பதித்துவிட்டது. இப்பொழுது கோயிலின் மடப்பள்ளி அங்கே தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அக்னிபகவானின் கருவறைக்குச் சென்று விளக்கைப் போட்டவுடன் எங்கள் இதயத்திலே ஒளிவெள்ளம் பாய்ந்தது. அந்த அக்னி பகவானிடம் தான் என்ன அழகு என்ன அழகு! பார்த்தோம் பார்த்தோம் பார்த்துக்கொண்டே இருந்தோம். இவ்வளவு நாட்கள் இப்படி ஒரு அழகிய அரிய சிற்பம் இருப்பது தெரியாமலே போய்விட்டதே என்று நினைத்தோம். அதனால் என்ன இப்பொழுது தான் கண்குளிர தரிசனம் செய்தாகிவிட்டதே. டிசம்பர் 12-ஆம் தேதி மாலை, புறப்பட வேண்டிய நேரம் வந்துவுடன்தான் இரண்டு நாட்கள் ஓடிவிட்டதை உணர முடிந்தது. காலமெல்லாம் கண்டாலும் முற்றுமறிய முடியா இராஜராஜீஸ்வரத்தில் இரண்டு நாட்கள் இரண்டு நொடிபோல் ஓடியதில் ஆச்சரியம்தான் என்ன? வழக்கம்போல, புதிதாய் கற்றதை நினைத்து குதூகலித்தபடியும், பிரிகிறோமே என்று வருந்தியபடியும் இராஜராஜீஸ்வரத்தைவிட்டுக் கிளம்பினோம், அடுத்த பயணத்திற்கு திட்டமிட்டபடியே! this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |