http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 7

இதழ் 7
[ இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ், ஜனவரி 30, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

பொங்கும் பெருங்கடலில் ஒரு கை அள்ளி....
காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி...
வரலாறு காத்திருக்கிறது....
ராஜராஜீசுவரம் கல்வெட்டுகள்
சண்டேஸ்வரர் திருமுன் கலைப்பிடிச்சுவர்
கட்டடக்கலை ஆய்வு - இராஜராஜீசுவரம்
பண்டைய ஓவியங்களின் மீட்டுருவாக்கம் - சிக்கல்களும் தீர்வுகளும்
ராஜராஜீசுவரம் பயணக்கட்டுரை
Raja Rajisvaram - Certain Revelations
The Saanthaaram Icons of Raajarajeeswaram - An Overview
இதழ் எண். 7 > கலைக்கோவன் பக்கம்
காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி...
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி,

வரலாறு.காம் திங்கள் இதழ், ஜனவரி 30ல் இராஜராஜீசுவரம் (தஞ்சாவூர்) சிறப்பிதழ் வெளியிடுவதாகவும் அக்கோயில் தொடர்பான கட்டுரையொன்று வேண்டுமென்றும் நண்பர் ச. கமலக்கண்ணன் கேட்டிருந்தார். நீயும் நானும் மாமல்லபுரத்து மணல்வெளியில் முழு நிலவின் பாலொளியில் இராஜசிம்மரின் கடற்கரைக் கோயில் வளாக விமானங்களைப் பார்த்தவாறே மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தபோது, 'இராஜசிம்மரை இராஜராஜருடன் ஒப்பிடமுடியுமா? இராஜராஜீசுவரம் இத்திருக்கோயில்களினும் சிறப்புடையதா?' என்றெல்லாம் நீ பலவும் கேட்டாய். தமிழ்நாட்டின் முதல் இராஜராஜரான இராஜசிம்மரைப் பற்றியே அன்று நினைத்துக் கொண்டிருந்ததால் உன் கேள்விகள் விடைபெறாமல் காற்றில் கரைந்தன. இன்று கமலக்கண்ணன் வழி காற்று அந்தக் கேள்விகளை மீண்டும் வடிவமைத்து என் செவிமடல்களில் நிறுத்துகிறது. உன் கேள்விகள் இரண்டும் பெரியன; பெரிதினும் பெரிது கேள் என்றாரே பாரதி, அது போல் விசுவரூபமெடுத்திருக்கும் அந்தக் கேள்விகளுள் இரண்டாம் கேள்விக்கு என் அநுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் விடையிறுக்க முடியுமா என்று முயல்கிறேன்.

'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' இறைவனைப் பார்த்தவர் சம்பந்தர். இராஜராஜீசுவரத்துடனான என் அநுபவம் சற்று முன்பின்னானது. பார்த்துப் பார்த்துக் கசிந்துருகி, அந்தக் கட்டுமானத்தின் உன்னதம் உணர்ந்த நிலையில் காதலாகி, அதன் பின்னணியில் இருந்த மாமனிதரின் பண்பு நலன்கள் புரிந்த அளவில் கண்ணீர் மல்கி அந்தத் திருக்கோயிலின் வயமாகிப் போனேன். இப்போதெல்லாம் நான் அதைக் கோயிலாகவே பார்ப்பதில்லை வாருணி; பார்க்கவும் முடிவதில்லை. அந்த வளாகத்திற்குள் பார்வைகள் படரும்போதே தன் நலத்திற்காக இறைத்திருமுன் விளக்கெரிக்க வந்தவரை, நாட்டு நலத்திற்காக விளக்கெரிக்க வேண்டுகோள் வைத்த ஒரு பேருள்ளத்தின் எழுச்சி மிக்க நினைவுத் தடங்கள் அந்தக் கட்டுமானமெங்கும் கலைவீச்சுக்களாய்ப் பதிவாகியிருப்பதை என்னால் உணர முடிகிறது. அந்த வளாகத்தின் ஒவ்வொரு கல்லிலும் இராஜராஜர் இருக்கின்றார்; அவர் காலத்துச் சமுதாயம் வாழ்கிறது; கற்பனைகளையும் கண்களில் பதிவானவைகளையும் எந்த மனிதருக்காக எடுத்தார்களோ அந்த மனிதரின் உள்ளுணர்வுகளுக்கு ஏற்பச் சரியாகக் கலந்து சரித்திரம் படைத்துவிட்ட சாதனையாளர்களின் ஆத்மா நிலைபெற்றிருக்கிறது.

அந்த வளாகத்தில் நான் அழாமல் இருந்ததே இல்லை. கண்களில் நீர் மல்குவது மட்டும்தானா அழுகை? விளங்கியதால் வியந்தும், விளங்காமையால் தவித்தும் தொட்டுணர்ந்து பூரித்தும், தொடத்தயங்கித் தவிர்த்தும், எங்கே, எது, எப்படி, ஏன் என்று கேள்விகளால் சூழப்பட்டும் எந்தச் சொற்களையும் உச்சரிக்க முடியாமல் அந்த விமானத்தின் உயரத்தில் நெக்குருகி நின்றும் ஒரு குழந்தையைப் போல் கதறுகிறதே நெஞ்சம், அந்த அழுகை ஏன் வாருணி? எதனால் என்று கூடப் பலமுறை கேட்டும் மீண்டும் அழுதிருக்கிறேன். நான் சாதாரணமானவன் வாருணி. அந்த விமானத்தின் முன் அதைக் கருவுயிர்த்த மாமனிதரின் முன், அவர் கனவுகளை நினைவுகளாக்கிய சிற்பப் பேராசான்களின் சிற்றுளிகளின் முன் நான் எறும்பினும் சிறியவன். என்னால் அழமட்டுமே முடிகிறது. வேதனைக்கு மட்டுமா இந்த மனம் அழுகிறது? விந்தைக்கு முன்னாலும் செய்வதறியாது திகைத்து அழமட்டும்தானே முடிகிறது.

வாருணி, இந்தக் கோயிலை அணுஅணுவாய்ச் சுவைக்கவும் அநுபவிக்கவும் இதன் கட்டுமான நுணுக்கங்களை விளங்கிக்கொள்ளவும் காலம் எனக்குத் துணை நின்றது. துணைகளையும் தந்து மகிழந்தது. முழு நிலவின் குளிப்பாட்டலிலும் தகிக்கும் வெயிலின் கடுமையிலும் கொட்டும் மழையிலும், பனிப் பொழிவிலும், சாரலாய்த் தூவிய நீர்த் தெளியலிலும் அந்த வளாகத்திற்குள் நான் இருந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அந்தக் கோயில் காலத்தின் கைகளால் அழகூட்டப்பட்டு மிளிர்வதை இரசித்திருக்கிறேன். ஓர் ஐப்பசித் திங்கள் காலைக் கருக்கலில் இரவெல்லாம் பெய்த மழையில் நனைந்து, குளித்து முழுகி ஈரம் சொட்டச்சொட்டக் கூந்தலில் மலர்க்கொத்துகள் சூடி, மங்கலம் நிறைந்த திருமுகத்தோடு மனைவி நிற்பது போல் அந்த விமானம் நின்றிருந்த காட்சி இந்த விநாடியிலும் என் கண்களை நிறைக்கிறது. அந்தக் கோயிலில் இருக்கும்போதெல்லாம் எனக்கு வெளியுலகச் சிந்தனைகள் வருவதில்லை. எத்தனையோ பேர் சூழ இருந்தாலும் அந்த சூழமைவிலும் தனித்திருக்க என்னால் முடிந்திருக்கிறது. வள்ளலார், 'தனித்திரு' என்றது இந்த அமைவைத்தானா? தெரியவில்லை வாருணி. மிகப் பெரியவர்களின் மிகப் பெரிய மொழிவுகளுக்கெல்லாம் பொருள் காணல் கொய்யாப் பிஞ்சுகளான நமக்கு எளிதல்ல.

தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தை முதன்முதலாகப் பார்த்தபோது என் மருத்துவத் தோழர் பெருமாள் உடனிருந்தார். அவர் அற்புதமான ஓவியர். திரப்பட நடிகர் திரு. சிவகுமாரின் இனிய நண்பர். அவரது ஓவியக் கண்கள் வழியாக அந்தக் கோயிலைப் பார்க்கும் வாய்ப்பு முதன் முறையிலேயே வாய்த்தது என் பேறு. இரண்டாம் முறை என் காதல் மனைவியுடன் அங்குச் சென்றிருந்தேன். 'கோயில்' பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருந்த காலம் அது. அதனால் இருவரும் அந்தக் கோயிலைப் பற்றிப் புரிந்தும் புரியாமலும் பலவும் பேசி வியந்து நகர்ந்தோம்.

புத்தர் வடிவிலும் சைக்கிள் ஓட்டியாகவும் வந்து இறைவன் என்னைக் கைப்பிடித்து இழுத்தபோது, வரலாற்று வனப்பில்தான் இனி வாழ்க்கை என்பது அறியாமலேயே தடம் மாறினேன். முள்ளிக்கரும்பூரைக் கண்டறிந்த காலத்தில் என் முதல் ஆய்வு மாணவியாய் வந்தவர் திருமதி. வாணி செங்குட்டுவன். அவருடைய கேள்விக் கணைகளும், கூர்ந்த சிந்தனைகளும் என்னை நிறையப் படிக்கவைத்தன. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தை முழுமையாய் ஆராயவேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தவர் அவர்தான். இராஜராஜீசுவரத்தில் எங்களுக்குத்தான் எத்தனை அநுபவங்கள்! தேடித்தேடி, தெரிந்து தெளிந்து, தெளியத்தெளிய ஐயங்கள் வளர்ந்து, அறிதோறும் அறிதோறும் அறியாமை உணர்ந்து நானும் அவருமாய் இராஜராஜீசுவரத்தோடு ஒன்றத் தொடங்கினோம்.

இராஜராஜீசுவரத்தை உணர்வு பூர்வமாக அணுக வாணி உதவினாற் போல் அதை ஒரு கட்டமைப்பாக நெருங்க எங்கள் மையத்தில் பட்டயக்கல்வி கற்க வந்த மாணவர்கள் உதவினர். அமரர் திரு. மு. ம. கோபாலன் அந்த விமானத்திடம் தனையிழந்தார். அவரால் முடியாமற் போனதால் அவருக்காகத்தான் என் வாழ்க்கையில் முதன்முறையாக அந்த விமானத்தின் மேல் கயிற்றைப் பிடித்தபடி ஆர உறுப்புகளில் கால் பதித்துக் கீழே பார்க்காமல் ஏறிச்சென்றேன். வழியெல்லாம் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் கட்டுமான மேற்பார்வையாளர் திரு. பாலன் ஊக்கமளித்துத் துணிவூட்டி வந்தது, நான் உயரச்சென்றதற்கு முக்கியமான காரணம். உச்சித்தளத்தில் கால் பதித்ததும் சுற்றிலும் பார்த்தேன். அந்த விநாடியில் ஏற்பட்ட பிரமிப்பு இன்றளவும் மறக்கவில்லை. தொடர்ந்து பலமுறை அந்த விமானத்தின் மேல் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதே பிரமிப்புதான். அந்த விமானத்தின் உச்சித்தளம் ஒரே கல்லால் ஆனதல்ல என்பதையும், அதன் சிகரம் பல கற்களால் ஆனது என்பதையும் அறிய நேர்ந்தபோது இந்தக் கோயிலைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் தரவுகளுள் எத்தனை உண்மையானவை, எத்தனை போலியானவை என்பதறியும் ஆர்வம் மேலோங்கியது.

பட்டயக் கல்வி மாணவர்களுடன் இணைந்து இக்கோயிலை ஆராய்ந்த காலத்துப் பல புதிய செய்திகளை அறியமுடிந்தது. ஒவ்வொரு கட்டமைப்பிலும் புதியன கண்டறிய வாய்ப்பிருந்தது. என்றேனும் ஒரு நாள் இந்தக் கோயிலை ஆய்வுக்கட்டுக்குள் முழுமைப்படுத்தவேண்டும் என்று நினைத்தேன். நானும் வாணியும் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் இதுபற்றிப் பேசுவோம்.

வே. கல்பகம் ஆடற்கலையில் முனைவர் ஆய்வு செய்தவர். அவருடன் இராஜராஜீசுவரத்துக் கரணச் சிற்பங்களை ஓராண்டிற்கும் மேலாக ஆய்வுசெய்ய வாய்த்தது. ஒவ்வொரு கரணத்தையும் அவர் நிகழ்த்திக் காட்டியபோது கை, கால் அசைவுகளின் நேர்த்தி, உடலின் குழைவு, கரண முழுமையின் புலமைப் பொருள் என அனைத்தும் விளங்கியது. எண்பத்தொரு கரணங்களே அமைத்தமைக்கான காரணம் கேட்டார் கல்பகம். அப்போதுதான் வாருணி, அந்தக் கோயிலின் பின்னனியில் 'முடிவடையாத சில' இருப்பதை என்னால் உணரமுடிந்தது. கோயில் வளாகம் முழுதுமாய் இந்தச் 'சில' பரவியிருப்பதைத் தேடியறிந்தோம். இராஜராஜருடன் கரணங்களையும் தளிச்சேரியையும் இணைத்தது எது? யார்? என்ற கல்பகக் கேள்விகளே 'புதிய பார்வையில் சாரங்கபாணி கரணங்கள்', 'தளிச்சேரிக் கல்வெட்டு' எழுத என்னுள் விதையிட்டன. அவருடைய கேள்விகளுக்கான விடையை இராஜேந்திரரின் அணுக்கியாரான பரவை நங்கையிடம் பெற முயற்சித்தேன். விளைவு, 'செம்புலப் பெயல் நீர் போல' கட்டுரை. ஆனால் விடை? அவனிகந்தர்வபுரத்துத் தேவனார் மகளார் பஞ்சவன்மாதேவியைத்தான் கேட்கவேண்டுமோ? நானும் வாணியும் பஞ்சவன் மாதேவீசுவரம் போய்வந்தோம். பள்ளிப்படைக் கல்வெட்டும் இராஜேந்திரரின் பாசமும் புரிந்தாற்போல் பஞ்சவன் மாதேவியின் தனித்தன்மையும் விளங்கியது. இராஜேந்திரரின் மக்கள் பரவைக்குக் கோயிலெடுத்தாற்போல், இராஜேந்திரர் பஞ்சவன் மாதேவிக்குப் பள்ளிப்படை செய்திருக்கிறார். இரண்டு பெண்களின் உன்னதம் புரிந்தது. என்றாலும் அந்தக் கேள்விகளுக்கு விடை? வாருணி, என்னைச் சுற்றித் தொக்கி நிற்கும் சுந்தரமான கேள்விகள் அவையும் அடக்கம். விடையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

இராஜராஜீசுவரத்தைச் சாந்தாரமாக்கிய அந்தப் பேரரசர், சுற்றுவழியில் புராணம், வரலாறு என இரண்டிற்கும் இடமளித்தார். மீட்கப்பட்ட அவ்வோவியப் பதிவுகளை ஆராய்வதற்கென்றே கோயில் பற்றி ஒன்றுமே அறியாத மு. நளினி 1986ல் எங்கள் மையத்திற்கு வந்தார். எறும்பியூரில் தொடங்கிய அவரது கல்வெட்டு வாழ்க்கை இன்று தமிழ்நாட்டின் நீள, அகலங்களைத் தொட்டுக் கடல் கடந்தும் பரவியுள்ளது. என் ஆய்வு வாழ்க்கையில் நான் சந்த்தித்த அற்புதமான ஆய்வாளர் அவர். குறைவான பேச்சு, நிறைவான பணி. இராஜராஜீசுவரத்து ஓவியங்கள் அவர் பார்வைக்கு வரும்வரை, 'இளந்தளிர்' நிலை ஆய்வுகளையே சந்திதிருந்தன. அவ்வளவு நாட்கள், எத்தனை மணி நேரம் அந்தச் சுற்றுவெளியில் பேனாவும் கையேடும் தேடும் விழிகளுமென அவர் இருந்திருக்கிறார். வாணன் வந்து வழி தந்ததும் அந்த வழி பல பயணங்களுக்கு வித்திட்டதும் நளினியின் தேடலால்தான். இராஜராஜீசுவரத்தில் நானும் அவரும் தரவுத் தேடல்களிலும் தர்க்க உரைகளிலும் பல நாட்களை வீழாத நாட்களாக்கியிருக்கிறோம். அவர் அடிக்கடி கேட்பார், 'நம்மால் முடியுமா?'

எனக்குத் தெரியவில்லை வாருணி. நீயும் நானும்கூட இராஜராஜீசுவரத்துப் புல்வெளியில் அடிக்கடி அமர்ந்தபடி அந்த விமானத்தை நேசித்தும் அதன் கட்டுமானத்தைக் கண்களால் வாசித்தும் கருத்திழந்திருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் இந்தக் கோயிலைப் பற்றிப் பலவும் கேட்டு மகிழ்ந்தவாறு, 'இதை உங்களால் முழுமையும் ஆய்வுக் கட்டுக்குள் கொணர முடியுமா கலை' என்று வியப்பும் மலைப்புமாய் ஐயப்பட்டிருக்கிறாய். வாருணி, கால வருடலில் எத்தனையோ கலைப்பிழம்புகள் இந்தக் காசினியில் பதிவாகின்றன. ஆனால் காலமே வியந்து வணங்கும் ஒரு கலைப் பதிவு இந்த நாட்டில் உண்டென்றால் அது இராஜராஜீசுவரம் மட்டுமாகத்தான் இருக்கும்.

பிரமிடுகளைப் பற்றிப் படிக்கும் போதும் படங்களில் பார்க்கும் போதும் வியப்பேற்படுவது உண்மைதான். உலகத்தின் சிறந்த கட்டுமானங்கள் அனைத்துமே அப்படித்தான். ஆனால் வியப்பு, பூரிப்பு, மலைப்பு எனும் உணர்வலைகளை முதல் பார்வையில் உண்டாக்கி, புரிதல் ஆசையுடன் நெருங்குவாரை அணுஅணுவாய்ச் சுவைக்கவைத்து, ஆயிரம் கைகளால் தன் அதிசயப் பிறப்பின் இரகசியம் சுட்டி, வா வா என்று அழைத்துக்கொண்டே போகிறதே அந்த நடையைத்தான், காலத்தின் அந்தக் கண்கொள்ளா நடையைத்தான் இந்தக் கலைக்கோயிலில் உலக உன்னதமாய் என்னால் உணரமுடிகிறது வாருணி. அதனாலேயே இப்போதெல்லாம் இந்தக் கோயிலை அநுபவிப்பதோடு மகிழ்கிறேன். ஆராய முயற்சிப்பதிலை, அவசியம் நேர்ந்தாலொழிய.

எப்படி எழுந்து, எதனால் விழுந்து, எப்படி இப்படித் தவழ்ந்து என ஒவ்வோர் அலைவீச்சிலும் மனம் குதூகலிக்கிறது அல்லவா! இந்த எழல், விழல், தவழல் இவற்றின் கீழே அறிவியல் காரணங்கள் கண்டறியப்பட்டு, நாமும் அறிந்து எல்லாம் தெரிந்து விளங்கிவிட்ட பிறகும் கரையோரம் கால்தடவும் அந்த நுரைவீச்சில், வாருணி, அதே கேள்விகள்தானே! எப்படி எழுந்து, எதனால் விழந்து, எப்படி இப்படித் தவழ்ந்து? இராஜராஜீசுவரமும் அந்த அலைகளைப் போலத்தான்! காரணங்கள் தெரிந்தாலும் கனவுகளை வளர்க்கிறது. காரணங்களே இல்லாமலும் நினைவுகளில் நிலைக்கிறது.

'காதல்' என்ற சொல் தமிழனின் மகத்தான கண்டறிதல்களுள் முதன்மையது. அந்தச் சொல்லை உச்சரிக்கும்போதே இதழ்கள் நனைகின்றன. இதயம் குளிர்கிறது. உடலெங்கும் புது இரத்தம் பாய்கிறது. 'காதல்' உன்னதமான காவியங்களை உலகளாவி உருவாக்கிய உணர்வு. இந்தச் சொல்லின் ஆழத்தை உன்னால் புரிந்துகொள்ள முடிந்தால், வாருணி, இராஜராஜீசுவரத்தை நான் காதலிக்கிறேன் என்று என்னால் வாய் நிறைய உன்னிடம் சொல்லமுடியும். எந்தக் காதலனாவது அல்லது காதலியாவது தன் காதல் துணையை எந்தக் காலத்திலாவது முழுமையாய் விளங்கி, முழுமையாய் நேசித்து, முழுமையாய் அநுபவித்தது உண்டா? அது முடியாது வாருணி. உண்மையான காதலில் எத்தனை நெருங்கினாலும் எவ்வளவு கிடைத்தாலும் நிறைவு இருப்பதில்லை. இன்னும் இன்னும் என்று ஏங்கித் தொடரும் உணர்வு அது. நானும் இராஜராஜீசுவரமும் அப்படித்தான். காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி நிலைகளையெல்லாம் கடந்த ஒன்றல் அது.

'பச்சை மாமலை போல் மேனி' என்று லலிதாம்பாள் பாடும்போது என் கண்ணிமைகள் மூடும். திறவா விழிகளுக்குள் பரவும் பார்வைப் புலத்தில் என்னதென விவரிக்கமுடியாத காட்சிகள் படமாகும். ஏனென்றே தெரியாமல் இமைகள் நனையும். 'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்' என்று அப்பர் வழியில் சொற்களை உச்சரிக்கும் போதும் அதே நிலைதான். இந்த மெய்மறத்தலுக்குக் காரணம் அநுபவிப்புதான். எதையோ இரசித்து, எதற்கோ கசிந்து, எப்படியெல்லாமோ உருகும் உள்ளம் அந்த நொடிகளில் தன் வயம் இழப்பது உண்மை. ஒரு பித்தனைப் போல் இராஜராஜீசுவரத்தைத் தழுவியிருக்கிறேன். வளாகத்தின் அனைத்து இடங்களிலும் அமர்ந்து அந்த விமானத்தை அளந்திருக்கிறேன். அது ஒரு கட்டுமான உன்னதம் வாருணி. அதைப் புரிந்துகொள்ளத் தமிழ்நாடு முழுவதும் சுற்றவேண்டும். எல்லாக் கோயில்களையும் ஆராய வேண்டும். என்னால் அந்த முயற்சிகளைச் செய்ய முடிந்தது. என் பயணங்கள் அந்தக் கட்டுமானத்தின் புரிதலுக்கு உதவின. மகேந்திரரையும் இராஜசிம்மரையும் விளங்கிக் கொள்ளாமல் இராஜராஜரை அணூகுவது எப்படி? அதனால்தான் மகேந்திரர் குடைவரைகளில் தொடங்கி, அத்யந்தகாமத்தில் வளர்ந்து, இந்த நித்தவிநோதத்தை நெருங்கியிருக்கிறோம் நானும் நளினியும்.

இந்தக் கட்டுமானம் என்றேனும் ஒரு நாள் எனக்குள் வருமென்று நம்புகிறேன். கலைகளைச் சந்திக்கும் இந்தக் காலநிரலான பயணத்தில் யார் என் கைகளைப் பற்றிபயடி இறுதிவரை துணை வருகிறார்களோ, அந்த இனிய உறவுகளுடன் இராஜராஜீசுவரத்தோடு நான் ஒன்றினைவது திண்ணம். வாழ்க்கை அர்த்தப்படுவதே நிறைவான மகிழ்வில்தான். அந்த நிறைவான மகிழ்வை இந்த வளாகத்திற்குள் திருவடி பதிக்கும்போதெல்லாம் என்னால் பெறமுடிகிறதென்றால் அதற்குக் காரணம் அந்த ஜனநாதரே.

அன்புடன்,

இரா. கலைகோவன்this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.