![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 80
![]() இதழ் 80 [ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2011 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம்.
15 ஆகஸ்ட் 2004 முதல் ஆறரை ஆண்டுகளாகத் தொடர்ந்து 79 இதழ்களாக மலர்ந்திருந்த வரலாறு.காம் பல்வேறு காரணங்களால் கடந்த 6 மாதங்களாக வெளிவரவில்லை. பல்வேறு காரணங்கள் என்று சொல்வதைவிட, ஒரே காரணம் ஆசிரியர் குழுவினர் அனைவருமே அலுவலக மற்றும் குடும்பச் சூழலால் இப்பணியில் ஈடுபட முடியவில்லை என்பதுதான். ஒவ்வொரு மாதமும் 'இந்த மாதமாவது வெளியிட்டு விடலாம்' என்று எண்ணுவோம். ஆனால் பணிச்சூழல் அதற்கு இடம் கொடுக்காது. இப்படியே 6 மாதங்கள் உருண்டோடி விட்டன. 'வெயிலின் அருமை நிழலில்தான் தெரியும்' என்ற பழமொழியை இந்த 6 மாதங்கள் மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்தன. வரலாறு.காம் இதழ் தொடர்ந்து வெளிவந்த காலங்களில் அமைதியாக வாசித்துக் கொண்டிருந்த பல வாசகர்கள் சில மாதங்கள் இடைவெளியைத் தொடர்ந்து மவுனத்தைக் கலைத்துக் காரணம் கேட்டபோது, வரலாற்றின் வீச்சு புரிந்தது. எப்பேர்ப்பட்ட வாசகர்களை வரலாறு பெற்றிருக்கிறது என்பதை எண்ணிப் பூரிப்பாகவும் இருந்தது. இத்தகைய வாசகர்களைச் சில மாதங்களாக ஏமாற்றமடையச் செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்வும் ஏற்பட்டது. அவ்வாசகர்களுக்கு நன்றியைத் தெரிவித்து, மன்னிக்கவும் கோரிக்கொள்கிறது வரலாறு.காம். நீண்ட விடுமுறைக்குப் பின்னர்ப் புத்துணர்ச்சியுடன் விருப்பமான பணிக்குத் திரும்பும் மனநிலையுடன் எட்டாவது ஆண்டிற்கு அழைத்துச் செல்லும் இவ்விதழில் உங்களைச் சந்திப்பதில் உள்ளம் நிறைகிறோம். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே கண்டிக்க விரும்பிய ஒரு செய்தியை இந்த இதழில் மறுக்க வேண்டிய அவசியம் இன்னும் மீதமிருக்கிறது. காலம் கடந்தும் அதை மறுக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது. அச்செய்தியைப் படித்தபோது, 'எத்தனை பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தவே முடியாது' என்று ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. தமிழ்நாட்டில் அண்மையில் நடந்த ஆட்சிமாற்றம் தொடர்பான கீழ்க்கண்ட செய்திதான் அது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=241413 'உண்மையின் உரைகல்' என்று தன்னைக் கூறிக்கொள்ளும் தினமலர் நாளிதழ், உண்மையை உரசிப்பார்க்கத் தவறி ஒரு செய்தியைக் கடந்த மே 15ம் தேதியன்று வெளியிட்டு விட்டது. கடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை இழந்ததற்கு ஒரு புதிய காரணத்தைக் கற்பித்திருக்கிறது தினமலர். தஞ்சைப் பெரியகோயிலின் 1000ம் ஆண்டு விழாவில் கலைஞர் பங்கேற்றதால்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டதாம். இதற்கு, பிரதமராக இருந்த இந்திரா, முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். எனக் காரணங்களை அடுக்குகிறது தினமலர். திமுகவுக்கு எதனால் தோல்வி ஏற்பட்டது என்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்க, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் இத்தகைய செய்திகள் மூடநம்பிக்கைகளுக்குத் தூபம் போடும் என்பதில் ஐயமில்லை. தினமலரின் இணையதளத்தில் வெளிவந்துள்ள அச்செய்திக்குப் பல வாசகர்கள் தெரிவித்திருக்கும் கண்டனங்கள் சற்று ஆறுதல் அளிக்கின்றன என்றாலும், அச்சில் வெளிவந்திருக்கும் செய்தியைப் படித்தவர்களின் மனதில் பெரியகோயிலைப் பற்றி எத்தகைய பிம்பம் விதைக்கப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க மனம் வேதனையடைகிறது. ஏற்கனவே ஓர் எதிர்மறைத் துரதிருஷ்டக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்படும் பெரியகோயிலைப் பற்றி இப்படியொரு செய்தியை வெளியிட வேண்டியது அவசியம்தானா என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அல்லது தேர்தல் காலத்தில் அப்படி என்ன செய்திப்பஞ்சம் வந்துவிட்டது என்றும் புரியவில்லை. திமுகவின் தோல்வியைக் கொண்டாடத் தினமலருக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதைத் தஞ்சைப் பெரியகோயிலின் செலவில்தான் கொண்டாடவேண்டும் என்பதில் நமக்கு உடன்பாடில்லை. நடுவணரசின் தொல்லியல் துறை உயரதிகாரிகளும் மாநில அரசின் தொல்லியல் மற்றும் பண்பாட்டுத்துறை சார்ந்த இந்திய ஆட்சிப்பணி (IAS) அதிகாரிகளும் எத்தனையோ தடவைகள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கெல்லாம் பதவி பறிபோனதாகவோ உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவோ செய்தி ஏதுமில்லை. அப்படியிருக்க, 'ஆஹா! இறைவன் தண்டித்துவிட்டான்' என்று ஒரு சாரார் மகிழ்ச்சியடைய உதவும் நோக்கில் வெளியிடப்பட்டிருக்கும் இச்செய்தியைக் கண்டிக்க வேண்டியது அறிவுடையவர்களின் கடமையல்லவா? அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |