http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 80

இதழ் 80
[ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

காரணம் என்ன?
செருவென்ற சோழனின் செப்பேடு - 1
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 5
அறிவர் கோயில் - 2
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 3
அகவன் மகளிர்
இதழ் எண். 80 > கலையும் ஆய்வும்
அறிவர் கோயில் - 2
இரா. கலைக்கோவன்


(சென்ற இதழின் தொடர்ச்சி)

ஓவியங்கள்

கருவறை, மண்டபம், முகப்பு இவற்றின் கூரைகளும் கபோதத்தின் கீழ்முகமும் முகப்புப் போதிகைகளும் முழுத் தூண்களின் மேற்சதுரங்களும் ஓவிய வரைவுகளைத் தக்கவைத் துள்ளன. கருவறைக் கூரையின் கிழக்குப்பகுதியில் உள்ள அலங்கரிப்பு இழைகளும் அவை இணைத்துச் செல்லும் வளைவுகளும் சதுரங்களும் நன்னிலையில் உள்ளன. கூட்டல் குறி போன்ற அலங்கரிப்பொன்றால் நான்கு பிரிவுகளாக்கப்பட்டுள்ள வளைவுகளின் கீழ்ப்பகுதியில் சிங்கம், ஆடு, மாடு போன்ற விலங்குகளும் மேற்பகுதியில் இரண்டு முனிவர்களும் காட்டப் பட்டுள்ளனர்.9 சதுரங்கள் பதக்கங்கள் பெற்றுள்ளன. ஒரு வளைவு நான்கு சதுரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேற்குப் பகுதிக் கூரையில் ஈரடுக்கு ஓவியங்கள் காணப்படுகின்றன. தெற்கில் சிதைந்திருந்தபோதும், வடபகுதியில் அவை தெளிவாக உள்ளன. அவற்றுள், கீழடுக்கு, மண்டப ஓவிய வண்ணங்களில் அமைய, மேலடுக்கு காலத்தால் பிற்பட்டதாக உள்ளது. இந்த ஓவியப்பகுதியில் தாமரைகளும் அல்லிகளும் அவற்றின் மொட்டுகளும் இலைகளுமே உள்ளன. இது தென்மேற்குப் பகுதியில் தெளிவாக உள்ளது.

மண்டபக் கூரையின் தெற்கு, வடக்குப் பகுதிகளில் புள்ளி யிட்ட நிலையில் சிவப்பு நிற வட்டங்களை மட்டுமே காண முடிகிறது. அவையும் பெருமளவிற்குச் சிதைந்துள்ளன. கூரை யின் நடுப்பகுதியில் வரையப்பட்டுள்ள குளத்தில் மலர்தலின் பல நிலைகளில் உள்ள தாமரைகளும்10 அல்லிப்பூக்களும் அவற்றின் அரும்புகளும் இலைகளும் மண்டியுள்ளன. மூன்று யானைகள், மூன்று எருமைகள், பதினொரு பறவைகள், பல மீன்கள், ஒரு தவளை11 இடம்பெற்றிருக்கும் இக்குளத்தில் இறங்கி மலர் பறிப்பவர்களாக மூன்று ஆடவர்கள் காட்சிதரு கின்றனர். அவர்களுள் ஒருவர் தனியராக மலர் பறிக்க, இருவர் அருகருகே நின்றபடி பூக்கொய்வதைக் காணமுடிகிறது.

தனியர் தாம் பறித்த தாமரைகளை இடக்கையில் பிடித்த வாறு தோளில் சாய்த்துள்ளார். நீள்தண்டுகளை உடைய அம்மலர்கள் இடையில் ஒருசேரக் கட்டப்பட்டுள்ளன. கடகத் திலுள்ள அவரது வலக்கையில் நீண்ட தண்டுடன் அல்லிமலர் உள்ளது.12 நீள்செவிகளும்13 கரிய தலைமுடியும் கழுத்தில் மெல்லிய மாலையும் கை வளையும் கொண்ட அவருக்கு முன் னால் துளைக்கையை உயர்த்தியபடி குளத்தில் இறங்கியுள்ள யானையொன்றைக் காணமுடிகிறது. அலங்கார இடைவாரில் வெள்ளைக் கோவணம் அணிந்துள்ள14 அந்த இளைஞருக்கு முன்னும் பின்னும் மீன்கள் துள்ளித் திரிகின்றன.

அடுத்தடுத்து நிற்கும் இரண்டு இளையோரில் படிய வாரிய கருமுடியுடன் முன்னால் இருப்பவர் இடக்கையில் பூக்குடலை ஒன்றை மாட்டியுள்ளார். அதில் அவர் அதுவரை பறித்த பூக்கள் உள்ளன. குளத்திலுள்ள தாமரையைப் பறிக்கும் முயற்சியில் வலக்கை உள்ளது. கங்கணம், வளைகள் அணிந்துள்ள அந்த இளைஞரும் அலங்காரமான இடைவார் அணிந்து, கோவணம் உடுத்துள்ளார்.14 கழுத்தில் மெல்லிய ஆரமும் முதுகில் புரளும் கருமுடியும் கொண்டவராய் நிற்கும் பின் இளைஞர் தாம் பறித்த பூக்களை இடக்கையால் பற்றித் தோளில் சாய்த்துள்ளார். வலக்கை மடங்கிய நிலையில் கடக முத்திரையில் உள்ளது.15 இருவருமே நீள்செவியினர்.

குளத்தில் காட்சிதரும் பதினொரு நீர்ப்பறவைகளும் வெள்ளை வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன. இரண்டிரண்டு பறவைகளாக ஐந்து இணைகளும் தனித்த நிலையில் ஒன்றும் உள்ளன. இரட்டையாய் உள்ளவற்றுள் இரண்டு இணைகளும் தனித்துள்ள ஒன்றும் இறக்கைகளை விரித்தவாறு கூவுகின்றன. அவற்றின் மெல்லிய கால்கள் தாமரை இலைகளின்மீது இருத்தப்பட்டுள்ளன. அவற்றின் பார்வையும் கூவலும் பறக்க முயற்சிப்பது போன்ற இறக்கை விரிப்பும் அவற்றின் இருப்பிற்கு ஏற்பட்ட இடையூற்றினைச் சுட்டுமாறு உள்ளன.

மூன்று யானைகளுள் இரண்டு யானைகள் அடுத்தடுத்துக் காட்சிதருகின்றன. தன் துளைக்கையால் குளத்திலுள்ள தாமரை களைப் பறித்துள்ள நிலையில் நிற்கும் யானையின் பின்னால் மற்றொரு யானையைக் காணமுடிகிறது. அதன் துளைக்கை முன்னாலுள்ள யானையின் முதுகை வருடுமாறு உள்ளமை குறிப்பிடத்தக்கது. முதல் யானையின் துளைக்கையில் இருப்பது ஒரு மலர் போல் காட்சிதரினும் மூன்று தண்டுகளைப் பின்னமைப்பில் காணமுடிவதால், அது மூன்று மலர்களைப் பறித்திருப்பதாகவே கொள்ள வேண்டியுள்ளது. பூப்பறிக்கும் இரட்டையர்களின் அருகே காட்சிதரும் இவ்விரு யானைகளைப் போலன்றிச் சற்றுத் தள்ளிக் காட்சிதரும் மூன்றாம் யானை பூக்களைப் பறிக்கும் நோக்கில் துளைக்கையை நீட்டியபடி முன்னேறுகிறது.16 மூன்று யானைகளுமே தந்தங்கள் கொண்டிருப் பினும் முதுகு வருடும் யானையினும் பிற இரண்டின் தந்தங் களும் நீளமாகக் காட்டப்பட்டுள்ளன.

முழங்காலளவினவாகக் காட்டப்பட்டுள்ள மூன்று17 ஆண் எருமைகளுள் இரண்டினைக் குளத்தின் மேற்குப்பகுதியிலும் ஒன்றைக் கிழக்குப்பகுதியிலும் காணமுடிகிறது. மூன்றுமே நன்கு வளைந்து வளர்ந்த கொம்புகளைக் கொண்டுள்ளன. அவற்றின் உடல் செழுமை, பார்வை இவை இரண்டும் சங்க இலக்கிய மருதத்திணைக் காட்சிகளையே கண்முன் நிறுத்து கின்றன. சங்கமரபின் தொடரிழைகளைக் கொண்டிருக்கும் இக்குளக்காட்சி அற்புதமான படப்பிடிப்பாகும்.

குளத்தின் பல்வேறு பகுதிகளில் முழு அளவிலும் தலை யளவிலுமாய்க் காட்டப்பட்டிருக்கும் நீளமான மீன்கள் குளத்தின் தூய்மைக்குக் கட்டியம் கூறுகின்றன. இரை பிடிக்கத் தாவும் தவளை ஒன்றையும் இக்குளக்காட்சி கொண்டுள்ளது. பின்னங்கால்களை உதைத்தவாறு தாவும் தவளையின் முகம் உடலினும் பெரிய அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பொய்கைக் காட்சியை சமணர்களின் சமவசரணக் காட்சியாக அறிஞர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.

போதிகைகளிலும் உத்திரத்திலும் கொடிக்கருக்குகள், அன்னம் இவை காட்சிதர, முழுத்தூண்களின் மேற்சதுர மேற்கு முகங்களில் தூணுக்கொரு அழகி என இரண்டு ஆடல் நங்கை யர் மேகங்களுக்கு இடைப்பட்ட நிலையில் காட்சிதருகின்றனர். இவ்விருவர் ஓவியங்களுமே மார்பிற்குக் கீழ் முற்றிலுமாய்ச் சிதைந்திருந்தபோதும் டி. என். இராமச்சந்திரன் இவர்தம் தோற்றங்களைக் கரணங்களாக (இலதாவிருச்சிகம், புஜங்காஞ் சிதம்) அடையாளப்படுத்தியுள்ளார்.18 கைக்குறிப்புகள், உடல் நிலை, கால்நிலை எனும் மூன்றின் இணைவே கரணம் என்ற அடிப்படை உண்மையைப் புறந்தள்ளிய இவர் கூற்று பல அறிஞர்களை, இவ்வோவியங்கள் கரணக் காரிகைகளைக் காட்டுவனவே என எழுத வைத்துள்ளன.19

தூண் ஓவியங்கள்

வடக்குத் தூண் அழகியின் இடக்கை வேழ முத்திரையில்20 உள்ளது. மார்பருகே முழங்கை அளவில் மடிந்துள்ள வலக்கை யின் சுண்டுவிரல் மட்டும் உள்ளங்கைக்காய் மடிய, பிற விரல்கள் நன்கு நிமிர்ந்துள்ளன. இம்முத்திரையை இன்னதென அடையாளப்படுத்தக்கூடவில்லை.21 கடகவளை, கைவளை, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, கழுத்தைச் சுற்றி நெருக்கமாக அமைந்த ஆரம், நீள ஆரம், முத்துக்கள் கோத்த நீளமான மாலை இவற்றுடன்22 இன்னதென அடையாளப் படுத்த முடியாதபடி விளங்கும் தலைக்கோலத்தில்23 பல்வேறு அணிகள், மலர்கள் அணிந்துள்ளார். உண்மையிலேயே வில் போன்று அமைந்திருக்கும் புருவங்களும் பல்வேறு உணர்வு களை வெளிப்படுத்தும் விழிகளும் பாடுமாறு குவிந்துள்ள இதழ்களும் இவ்வழகியின் கலைத்திறனுக்குச் சான்றாகின்றன.

தெற்குத் தூண் அழகி இடக்கையை அர்த்தரேசிதத்தில் வீசியுள்ளார். வலக்கைக் குறிப்பை அறியக்கூடவில்லை.24 வடக்கர் போலவே நெருக்கமான முத்துமாலை, சரப்பளி, பதக்கம் பெற்ற மற்றோர் ஆரம், நீளமான மணிமாலை இவற்றுடன் கடக வளை, கைவளை, கடிப்பு வகைச் செவியணி25 அணிந்துள்ள இம்மங்கையின் தலையலங்காரம் வடக்கரின் மாறுபட்டு26 ஆனால், கூடுதல் அலங்கரிப்புடன் பல்வகை அணிகள், மலர்கள் மிடைந்த நிலையில்27 எழில் ததும்பக் காட்சிதருகிறது. இரண்டு ஆடலரசியருமே கச்சின்றி உள்ளனர்.28

இடுப்பளவில் கிடைத்திருந்தாலும் காலம் காத்துத் தந்திருக்கும் இவ்விரு அழகியரின் தோற்றங்களும் பல வரலாற்றுத் தரவுகளை நம்முன் வைப்பது பெரும் பேறாகும். சமணர் ஆடற்கலையைப் போற்றியமை, பாண்டிய நாட்டு ஆடல் அழகியரின் தோற்றம், மெய்ப்பாடு, ஒப்பனை, கலைத் திறன் இவை போன்ற எண்ணற்ற நாகரிக, பண்பாட்டுச் செய்திகளை இவ்விரு மார்பளவுத் தோற்றங்களும் தருவது எண்ணத்தக்கது.

தெற்குத் தூணின் மேற்சதுர வடமுகத்தில் பெரிதும் அழிந்த நிலையில் காணப்படும் ஓவியத்தில் மூவர் உள்ளனர்.29 கிழக்கில் நிற்பவர் துறவி. அவரது தலைப்பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது. நீள்செவிகளும் மழித்த தலையுமாய் நிற்கும் இத்துறவியை நோக்கியவாறு எதிர்ப்புறத்தே நிற்கும் இருவருள் முதலில் உள்ளவர் ஆடவர். அவரது தலையை அலங்கரிக்கும் மகுடம் அவரை மன்னராக அடையாளப்படுத்துகிறது. தோளுக்குக் கீழ்ப் பெரிதும் சிதைந்துள்ள நிலையில், அரசரின் பனை யோலைக் குண்டலங்கள், கழுத்தணிகள், சரப்பளி, துணியை மடித்து முப்புரிநூலென அணிந்திருக்கும் பாங்கு இவற்றை மட்டுமே காணமுடிகிறது. அரசி கரண்டமகுடம், பனை யோலைக் குண்டலங்கள் அணிந்துள்ளார். முகத்திற்குக் கீழ் ஓவியம் சிதைந்துள்ளது.

குறிப்புகள்

9. கெளதம கணதாரர்களும் இரண்டு சிங்கங்களும் இருப்பதாகக் கூறுகிறார் டி. என். இராமச்சந்திரன். மு. கு. நூல், ப. 40.
10. செந்தாமரைகளே நிரம்பியுள்ள இக்குளத்தில் வெள்ளைத் தாமரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ஆனால், டி. என் இராமச்சந்திரன் வெள்ளைத் தாமரைகளே இல்லை என்று எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 48.
11. மகரம் என்கிறார் டி. என். இராமச்சந்திரன். மு. கு. நூல், ப. 40.
12. சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரியும் தாமரை என்கின்றனர். மு. கு. நூல், ப. 148.
13. செவிகள் நீண்டிருப்பதால் இவர்கள் குண்டலங்கள் பெற்றவர்கள் என்றும் குளிக்கும்போது நழுவி விடும் என்று கருதி அவற்றைக் கழற்றி வைத்துவிட்டு வந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார் டி. என். இராமச்சந்திரன். மு. கு. நூல், ப. 42. தமிழ்நாட்டுக் கோயில்களில் காணப்படும் பல்வேறு நிலை களிலான நூற்றுக்கணக்கான சிற்பங்கள் குண்டலங்களற்ற நீள்செவிகளுடன் காணப்படுவது இங்குக் கருதத்தக்கது.
14. கோவணம் அணிந்து செவியணி இல்லாதிருப்பதால் இவர் கள் குளிக்க வந்திருப்பதாகக் கூறுகிறார் டி. என். இராமச்சந்தி ரன். மு. கு. நூல், ப. 42. மூவரில் ஒருவர் கூடை வைத்திருப்பது கவனிக்கத்தக்கது.
15. 'Mudra of overture' என்கிறார் டி. என். இராமச்சந்திரன். மு. கு. நூல், ப. 40.
16. இந்த யானைகள் குளிப்பதிலும் ஒன்றின் மீது ஒன்று நீரை அடிப்பதிலும் ஈடுபட்டுள்ளன என்கிறார் டி. என் இராமச் சந்திரன். மு. கு. நூல், ப. 41.
17. இரண்டு என்கிறார் டி. என். இராமச்சந்திரன். மு. கு. நூல், ப. 41.
18. மு. கு. நூல், பக். 47 - 48.
19. இரா. நாகசாமி, ஓவியப்பாவை, பக். 92 - 95.
20. டி. என். இராமச்சந்திரன் லதா முத்திரை என்கிறார். மு. கு. நூல், ப. 46.
21. வலது உள்ளங்கை சதுர அமைப்பினைக் கொண்டுள்ளதாகக் கூறும் சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரியும், 'இந்நிலை மிகவும் உயர்ந்த ஓவிய முத்திரையாகும்' என்றுரைப்பதன் பொருள் விளங்கவில்லை. மு. கு. நூல், ப. 149. பதாகமாகக் கொள்கிறார் டி. என். இராமச்சந்திரன். மு. கு. நூல், ப. 46.
22. முப்புரிநூலும் உள்ளதென்கிறார் டி. என். இராமச்சந்திரன். மு. கு. நூல், ப. 46.
23. தமிழம் கொண்டை என்கிறார் டி. என். இராமச்சந்திரன். மு. கு. நூல், ப. 46.
24. பதாகம், திரிபதாகம் என்கிறார் டி. என். இராமச்சந்திரன். வலக்கை விரல்களும் உள்ளங்கையும் மேல் நோக்கிய நிலையிலும் இடக்கை கொடி போன்று நீட்டிய நிலையிலும் உள்ளன என்கின்றனர் சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரியும். மு. கு. நூல்கள், பக். 48, 149.
25. பத்ரகுண்டலங்கள் என்கிறார் டி. என். இராமச்சந்திரன். மு. கு. நூல், ப. 46.
26. இதுவும் தமிழம் கொண்டை என்கிறார் டி. என். இராமச் சந்திரன். மு. கு. நூல், ப. 48.
27. இரண்டு மல்லிகை மாலைகள் அணிந்திருப்பதாகக் கூறுகிறார் டி. என். இராமச்சந்திரன். மு. கு. நூல், ப. 48.
28. சு. இராசவேலும் அ. கி. சேஷாத்திரியும் மேலாடை அணிந் துள்ளதாகக் கூறுகின்றனர். மு. கு. நூல், ப. 149.

(தொடரும்)this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.