http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 80

இதழ் 80
[ பிப்ரவரி 15 - மார்ச் 17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

காரணம் என்ன?
செருவென்ற சோழனின் செப்பேடு - 1
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 5
அறிவர் கோயில் - 2
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 3
அகவன் மகளிர்
இதழ் எண். 80 > கலையும் ஆய்வும்
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 5
மு. நளினி


(சென்ற இதழின் தொடர்ச்சி)

பெருமாள் கோயில் கணக்கும் நந்தா விளக்கும்

சோழா நியமத்தார் பெருமாள் கோயில் கணக்குகளை எழுதுவதற்கு ஆளிட வேண்டுமென்றும், அக்கணக்கருக்குப் பெருமாள் கோயில் பண்டாரத்தில் இருந்து நாள்தோறும் குறுணி நெல்லும், இரண்டு கழஞ்சு பொன்னும் தரவேண்டுமென்றும் ஐந்தாம் செப்பேட்டின் முன்பக்கத் தொடக்க வரிகள் கூறுகின்றன. தொடரும் வரிகள் கச்சிப்பேட்டிலிருந்த இரணஜயப்பாடி, ஏகவீரப்பாடி, வாமன சங்கரப்பாடி என்னும் மூன்று குடியிருப்புப் பகுதிகளையும், அங்கு வாழ்ந்தவர் சங்கரப்பாடியார் என்பதையும் சுட்டுவதோடு, அவர்களிடம் இருபது கழஞ்சு பொன் வைப்பு நிதியாக ஒப்புவிக்கப்பட்டதாகவும், அதன் வட்டி கொண்டு ஊரகம் கோயிலில் அவர்கள் நந்தா விளக்கொன்று எரிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறுகின்றன. இக்குடியிருப்புப் பெயர்களுள் இரணஜயன், ஏகவீரன் என்பன பல்லவ அரசர்களின் விருதுப்பெயர்களாகும்(16). உத்தமசோழர் காலம் வரை அப்பெயர்கள் நீடித்திருந்தது தொடக்கக் காலச் சோழர்களின் சகிப்புத் தன்மையைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

சிறப்பு நிகழ்ச்சிகள்

உத்தரமயன சங்கராந்தி, சித்திரை விஷு ஆகிய இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஒதுக்கீடுகள் அடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. இத்திருவிழாக்களின்போது இரண்டு கோயில் தெய்வத் திருமேனிகளைத் திருமுழுக்காட்டும் திருப்பணிக்கும், விளக்கு பிடிப்பார், கொடி எடுப்பார், விழாக்களின்போது கோயில் வளாகத்திற்கு வருகை தரும் ஊரவைத் தலைவர்கள் (பருடை நாயன்மார்கள்) ஆகியோருக்கும் தூணி அரிசி தரப்பட்டது. அடியவர் கூட்டங்களைக் கூட்டியவருக்கு அரிசி தூணிப் பதக்கும் பூசனைக்குப் பொன் அரைக்கழஞ்சும் தரப்பட்டது.

இவை தவிர அறக்கட்டளையில் சொல்லப்படாத ஆனால் கோயிலுக்குத் தேவையான வேறேதேனும் இருக்குமானால் அவற்றையும் கண்டழிவிற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பொன் கொண்டு செய்யலாம் என்றும் செப்பேடு வழிகாட்டுகிறது.

தணிக்கையும் தேர்வும்

ஊரகப் பெருமாள் கோயிற் செயற்பாடுகளில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் பதினெட்டு நாட்டு அடியார்கள் மட்டுமே கூடி அவற்றை நேர் செய்தல் வேண்டுமென்றும், கச்சிப்பேட்டு நகரையாளும் நகரத்தார் குழுவின் தலைவரும், ஆண்டு வாரியத்தாரும், ஏற்றுவழிச்சேரி மற்றும் கஞ்சகப்பாடி குடியிருப்புகளைச் சேர்ந்தாரும் இக்கோயில் திருவிழாக்கள் முடிந்த அளவிலேயே கோயிற்கணக்குகளைப் பார்வையிட வேண்டுமென்றும், பெருமாள் கோயில் பண்டாரத்தில் வைத்து அறக்கட்டளை கொண்டு கஞ்சகப்பாடியாரும் ஏற்றுவழிச்சேரியாருமே கோயிலுக்கு மெய்க்காப்பாளரை இடவேண்டும் என்றும், கோயிற்செயற்பாடுகளை மேற்பார்வையிடுவார், திருமெய்க்காப்பு, கணக்கெழுதுவார் ஆகியோரை நகரத்தாரே தேர்ந்தெடுத்துப் பணியமர்த்தி அவர்களுக்கு வரிவிலக்களிக்க வேண்டுமென்றும், பெருமாள் கோயிலில் வழிபாடு செய்யக் கோயில் வழிபாட்டு நடைமுறைகளை நன்கறிந்து அவற்றில் தேர்ந்த ஸ்ரீகோயில் நம்பிமார் கிடைக்காது போனால், வேதங்களில் வல்ல பிராமணரையே வழிபாடு செய்யக் கொள்ளவேண்டுமென்றும் செப்பேட்டின் இறுதிப்பகுதி சில வரையறைகளை வகுத்துள்ளது.

அறையோலை செய்தவரும் செப்பேட்டை வெட்டியவரும்

இச்செப்பேட்டிற்கான அறையோலையைச் செய்தவராக நகரத்தைச் சேர்ந்த வீரப்பாடி நடுவர் நாற்பத்தெண்ணாயிர மங்கலாதித்தன் கையெழுத்திட்டுள்ளார். இதற்குப் பிறகு நில விற்பனைச் செய்தியொன்று தரப்பட்டுள்ளது. இதன்படி கச்சிப்பேட்டு நகரத்தாரிடம் விலைக்குப் பெற்ற ஒலோக மாராயப் பெருஞ்செறுவில் கிழக்கு மேற்காகக் கிடந்த நிலத்தை மாநகரத்தார் விற்றுத் தந்தனர். இதையடுத்து அறந்தாங்கி போர்மிக வீரன் செப்பேட்டை வெட்டியவராக அறிமுகமாகிறார். இறுதி ஏடு கிடைக்காமையால் போர்மிக வீரனைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடியவில்லை.

வரிவடிவமும் எழுத்து வேறுபாடுகளும்

இச்செப்பேட்டில் வெட்டப்பட்டுள்ள எழுத்துக்களின் வரிவடிவை ஆராய்ந்து திரு. எச். கிருஷ்ண சாஸ்திரி எழுதியுள கருத்துகள் பெரும்பாலும் சரியாக உள்ளன. ஒகர ஓகாரங்களை வேறுகடுத்த ஒகரத்தின் அருகே காலிட்டு எழுதியுள்ள முறை பெரும்பாலான இடல்களில் பின்பற்றப்படவில்லை(17). இகரத்துடன் இணையும் ஊகாரம், அதன் வரிவடிவத்தில் ஏற்படுத்தும் மாறுபாடாகத் திரு. சாஸ்திரி குறிப்பிடுவது பெரும்பாலான இடங்களில் இடம்பெறவில்லை(18). துணை எழுத்தையும், ரகரத்தையும் வேறுபடுத்திக் காட்டத் துணையெழுத்திற்குத் தலைப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். இம்முறை செப்பேட்டின் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டுள்ளது.

கல்வெட்டுத் தொகுதியில் வெளியிடப்பட்டிருக்கும் மசிப்படிக்கும், எடுத்து எழுதப்பெற்றுள்ள பாடத்திற்கும் சில எழுத்து வேறுபாடுகள் உள்ளன. சென்னை அருங்காட்சியகத்திலிருக்கும் செப்பேடுகளைப் பார்வையிட்டபோது அவற்றின் பாடத்திற்கும், கல்வெட்டுத் தொகுதியின் மசிப்படி மற்றும் பதிப்பிற்கும் சிறு வேறுபாடுகளைக் காண முடிந்தது. குறிப்பாக வரி 109ல் மசிப்படியிலும் செப்பேட்டிலும் 'தீர்ந்து' என்று இருக்கும் சொல் பதிப்பிக்கப்பட்டிருக்கும் பாடத்தில் 'திரந்து' என்று தரப்பட்டுள்ளது.

முடிவுரை

செப்பேடு குறிப்பிடும் இந்த ஊரகப் பெருமாள் கோயில் பிரபந்தப் பெருமையுடையது. இன்று காஞ்சி மாநகரில் உலகளந்த பெருமாள் திருக்கோயிலாகப் பெருமிதத்துடன் திகழும் இக்கோயிலின் வாழ்விலும், வளர்ச்சியிலும் அக்கறை கொண்டிருந்த அரசு அலுவலர் சோழ மூவேந்த வேளாரை எங்ஙனம் மறத்தல் இயலும்! கோயிலின் நடைமுறைகளை நன்கு திட்டமிட்டு, அவை தொடர்ந்து நடக்க உரிய முறையீடுகளை ஒழுங்குபெற அமைத்து, இவையிவை இப்படித்தான் நடக்க வேண்டுமென வரையறை செய்து, விட்டுப் போனவற்றுக்கும் வழிகாட்டி, அரசு அனுமதியுடன் ஊரகப் பெருமாள் கோயிலை என்றென்றும் சிறக்க இயங்க வைத்த இவர்போல் அரசு அலுவலர்கள் இந்நாளிலும் இல்லாமல் இல்லை.

திருச்சிராப்பள்ளியின் மேனாள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் திரு. பி. நடேசன், திரு. வ. விசுவநாதன், திரு. க.செ.கிருஷ்ணசாமி ஆகியோர் சோழ மூவேந்த வேளாரொத்த பெருமக்கள். சிற்பங்களாலும், கல்வெட்டுகளாலும், கட்டுவித்தவராலும் பெருமை கொண்ட திருச்செந்துறை சந்திரசேகரர் திருக்கோயில் இன்று முறையான திருப்பணிகளுக்கு ஆளாகி, இழந்த பெருமைகளை மீண்டும் பெறத் தொடங்கியிருப்பதற்கு மேனாள் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க.செ.கிருஷ்ணசாமி அவர்களின் தொடர்ந்த முயற்சிகளே காரணம். அவரது ஆர்வமும், ஈடுபாடும், விடாமுயற்சியும் செப்பேடுகளில் இடம் பெறாமல் போகலாம். ஆனால் திருச்செந்துறை மண் அவரை மறக்காது.

அடிக்குறிப்புகள்

16. இரணசயன், ஏகவீரன் என்பன இராசசிம்மப் பல்லவரின் விருதுப் பெயர்களாகும். தமிழ்நாட்டு வரலாறு, பல்லவர் - பாண்டியர் காலம், தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு, தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை - 600108, 1990, பக்-163.

K.R.Srinivasan, The Dharmaraja Ratha and its Sculptures, Mahabalipuram, Abhinav Publications, New Delhi, 1975, P.89.

17. SII Vol III, Part III, Plate iiia, lines 51,52.

18. Ibid, Plate ib, lines 21,22; Plate iia, lines 26,29.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.