![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 81
![]() இதழ் 81 [ செப்டம்பர் 16 - அக்டோபர்17, 2011 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் கலைவளத்தில் மட்டுமல்லாமல் பொருள் வளத்திலும் சிறந்தவை. மன்னர்களும் மக்களுமாய்த் திருக்கோயில்களுக்கு அள்ளி வழங்கிய கொடைகளின் செழுமையைப் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. பெரும்பாலான கொடைகள் நிலத்தொகுதிகளாகவோ, ஊர்களாகவோ அமைந்தமையால்தான் கோயில்கள் நிலவுடைமைச் செல்வாக்கில் செம்மாந்திருந்தன. கோயில்களின் இறைத்திருமேனிகளுக்கு அளப்பரிய நகைகள் வழங்கும் பழக்கமும் தங்கத்திலேயே இறைத்திருமேனிகள் அமைக்கும் பழக்கமும் சோழர்கள் காலத்தில்தான் பெருகியது. என்றாலும், தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோயில்களுக்கும் இந்த வாய்ப்பு அமைந்ததாகக் கூறமுடியாது. தஞ்சாவூர் இராஜராஜீசுவரம், வலஞ்சுழி சேத்ரபாலர், வலஞ்சுழிச் சடைமுடிநாதர், ஆரூர் தியாகராஜர், வீழிமிழலை வீழிநாதர் முதலிய எண்ணிக்கையில் குறைவான கோயில்களே வைரம், வைடூரியம், முத்து, மரகதம், பவழம் எனப் பல வகையான விலையுயர்ந்த கற்கள் பதித்த தங்க நகைகளை அளவிறந்த நிலையில் பெற்றுக் களித்தன. கொடை வழி வந்த விலையுயர்ந்த நகைகளையும் பொன்னையும் காசுகளையும் பாதுகாத்து வைக்கப் பெரும்பாலான கோயில்களில் பண்டாரம் என்னும் நிலவறைகள் இருந்தன. இத்தகு நிலவறைகள் பொதுவாகக் கருவறைக்கு முன்னுள்ள மண்டபத்தில் அமைந்தன. அழுந்தூர் வரகுணீசுவரம், கோளக்குடி கோளகிரிநாதர் கோயில், பரங்குன்றம் முருகன் கோயில், கழுகுமலைக் கழுகாசலேசுவரர் கோயில், நாமக்கல் சிங்கப்பெருமாள்கோயில், திருமலை மலைக்கொழுந்தீசுவரர் கோயில், குடுமியான்மலைக் குடுமிநாதர் கோயில் ஆகியவற்றில் இத்தகு நிலவறைகள் இன்றும் உள்ளன. சில கோயில்களில் இத்தகு நிலவறைகளைச் சுற்றுமாளிகைப் பகுதியில் காணமுடிகிறது. திருஎறும்பியூர்க் கோயிலில் இரண்டு நிலவறைகள் திருச்சுற்றில் உள்ளன. வேறு சில கோயில்களில் சுவர் அறைகளாகவும் இத்தகு பண்டாரங்கள் அமைந்துள்ளன. இப்பண்டாரங்கள் அனைத்தும் கதவுகள் பெற்ற அல்லது கற்களால் அடைக்கப்பட்ட திறப்புகளைப் பெற்றுள்ளன. இரண்டாம் பாண்டியப் பேரரசு, விஜயநகர, நாயக்க அரசர்கள் காலத்தில் திருவரங்கம் அரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோயில் சுந்தரராஜப்பெருமாள் கோயில் முதலியவை ஏராளமான நகைக்கொடைகளைப் பெற்றமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. பெரும்பாலான தமிழ்நாட்டுக் கோயில்களின் பொருள் வளம் இசுலாமியர், ஐரோப்பியர் படையெடுப்புகளால் பெரிதும் சுருங்கியது. அதன் காரணமாகப் பொருள் செழித்திருந்த கோயில் நிலவறைகள் வெற்றறைகளாக மாறின. திறப்போடு அமைந்த இவ்வறைகளைக் காலப்போக்கில் கோயிலார் சுரங்கவழிகளின் வாயில்களாகக் கருதத் தொடங்கினர். திருவரங்கம் கருடாழ்வார் திருமுன் பின்சுவரில் அறை இருப்பதாகவும் அங்குப் பொன்னும் பொருளும் குவிந்திருப்பதாகவும் கருத்துக்கள் வெளியானபோது கோயில் இணைஆணையர் அது குறித்து ஆய்வு செய்ய எங்களை அழைத்திருந்தார். கோயிலார் அளித்த வரைபடத்தின் அடிப்படையிலும் நேரிடை ஆய்வின் வழியும் அங்குப் புதையல் இருப்பதற்கான வாய்ப்பின்மையை வெளிப்படுத்தி அறிக்கை அளித்தோம். அது போலவே, சிராப்பள்ளித் தாயுமானவர் கோயிலில் திருமுன் அருகே உள்ள சுவருக்குப் பின் அறை இருப்பதாகவும் அதில் புதையல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானபோது மாவட்ட ஆட்சியர், அறநிலையத்துறை இணைஆணையர் முன்னிலையில் அவ்வறைச் சுவர் அகற்றப்பட்டது. அறையில் புதையல் ஏதும் இல்லை. அந்த அறையின் பயன்பாடு குறித்து ஆட்சியர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆய்வு செய்து அறிக்கை அளித்தோம். தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ள பல நிலவறைகள் இன்று வெற்றறைகளாகவே உள்ளன. மிகச் சில கோயில்களிலேயே இவ்வறைகளில் கோயில் நகைகள், செப்புத்திருமேனிகள் பாதுகாக்கப்படுகின்றன. புதையல் இருப்பதாகத் தகவல் வெளியான கோயில்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அத்தகு தகவல்கள் ஆதாரமற்றவை என்பதையே உறுதிசெய்துள்ளன. திறப்பு இல்லாமல் அடைக்கப்பட்டிருக்கும் சுவர் இணைப்புகளின் பின் அறைகள் இருப்பதாகவும் அங்குப் புதையல் இருப்பதாகவும் தகவல் வெளியிடுவோர் சற்றுச் சிந்திக்க வேண்டும். பொருள்களைப் பாதுகாக்க நினைப்போர் தேவைப்பட்ட காலத்தே அவற்றைத் திரும்ப எடுக்க வாய்ப்புள்ளாற் போலவே மறைத்து வைப்பர். அதன் காரணமாகவே நிலவறைகளும் சுவரறைகளும் திறப்புகளுடன் அமைந்தன. திறப்பே இல்லாமல் கட்டுமானம் அமைத்துக் கோயில் சார்ந்த விலையுயர்ந்த பொருட்களை மறைத்து வைக்கக் கோயில் நிருவாகம் எந்தக் காலத்திலும் முயற்சி எடுக்காது. தமிழ்நாட்டில் இதுநாள் வரை கிடைத்துள்ள சான்றுகள், திடீர் படையெடுப்புகளின்போதும் ஆபத்துக் காலங்களிலும் கோயிலார் இறைத்திருமேனிகள் உட்பட வழிபாட்டுப் பொருட்களை நிலத்துக்கடியில் புதைத்து வைத்தே பாதுகாத்துள்ளமையை நிறுவுகின்றன. ஒரு தவறான தகவல் கோயில்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கே ஊறுவிளைவிக்கும் என்பதைப் புதையல் பற்றிப் பேசுவோர் உளங்கொளல் வேண்டும். தகுந்த சான்றுகள் இல்லாமல் கோயில்கள் சார்ந்த தகவல்களை வெளியிடாமல் இருப்பதே நாம் கோயில்களுக்குச் செய்யும் பெருந்தொண்டாகும். கோயில்கள் நம்முடைய அடையாளங்கள். அவை அழிவதற்கு நாமே காரணமாகிவிடக்கூடாது. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |