http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 85
இதழ் 85 [ ஜனவரி 16 - ஃபிப்ரவரி 15, 2012 ] இந்த இதழில்.. In this Issue.. |
"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவேம் என்பது இழுக்கு". வள்ளுவருக்கென்ன? அவர்பாட்டுக்குச் சொல்லிச் சென்று விட்டார். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நம்மால் எங்கேயும் எப்போதும் எண்ணித் துணிய முடிகிறதா? அப்படி முடியாவிடில் நிச்சயமாக இழுக்கு வந்து சேர்ந்தே தீருமா? இழுக்கு வரக்கூடாதென்று மூளை சொல்வதைக் கேட்டு முடிவெடுப்பதைவிடப் பிறருக்கு உதவ வேண்டும் என்றெண்ணி இதயம் சொல்வதைக் கேட்டு முடிவடுப்பதுதானே மனித நேயம்? வள்ளுவர் ஒன்றும் மனித நேயத்துக்கு எதிரியில்லையே? பிறகு ஏன் எப்போதும் எண்ணித் துணியச் சொன்னார்? அனிச்சைச் செயல் என்பதை வள்ளுவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லையோ? அனிச்சையாக ஒரு முடிவை எடுத்துச் செயல்படுத்துபவரின் செயல் தீமை பயந்தாலும், தன்னெஞ்சறியாததால் அது தவறில்லை என்று கொள்ளலாமா? அப்படியானால் தன்னெஞ்சறியாமல் தன் தந்தையையே கொல்வது சரியா? கொன்றாலும் சரிதானென்று இறைவனால் அரவணைக்கப்பட்டவர்தானே 'சண்டிகேசுவரர்' என்று பெயர்சூடிக்கொடுக்கப்பட்ட சுடர்க்கொடியான விசாரதருமர்? வள்ளுவரின் வாக்குக்கும் இறைவனின் செய்கைக்கும் இடையே ஏனிந்த முரண்? நமக்குத்தான் முரண் போலத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இது முரணே இல்லை என்கிறார் வள்ளுவர். உண்மைதான். வள்ளுவர் வைத்திருப்பது மருந்துக்கடை அல்லவா? நோய்க்கு ஏற்றவாறு மருந்து கிடைக்கும் இடமாயிற்றே! அந்த மருந்துதான் "மனத்துக்கண் மாசிலன் ஆதல்”. தன்னெஞ்சறியாமலும் மனதளவில் தீங்கிழைக்கும் எண்ணமில்லாமலும் இறைவனை வழிபடுவது ஒன்றையே முழுமூச்சாகக் கொண்டிருந்ததும்தான் இறைவனின் அரவணைப்புக்குக் காரணம். சைவத் திருக்கோயில்கள் அனைத்திலும் கணக்காளராக அமர்ந்திருக்கும் சண்டேசுவரருக்குத் தம் வருகையைத் தெரிவிக்காமல் பக்தர்கள் யாரும் வெளியே வருவதில்லை. 'நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய். அடுத்த தாதை இனி உனக்கு நாம்' என்று விசாரதருமரை அரவணைத்த பெருமான், 'அனைத்து நாம் உண்டகலமும் உடுப்பனவும், சூடுவனவும் உனக்காகச் சண்டீசனுமாம் பதம் தந்தோம்' என மகிழ்ந்துரைத்துத் தம் சடைமீதமர்ந்த கொன்றை மாலையைச் சண்டீசருக்குச் சூட்டிப் பெருமைப்படுத்தினார். இத்தகு பெருமைக்கு ஆளாக விசாரதருமர் செய்த தவம்தான் என்ன? அந்த இரகசியத்தைக் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்கள். "சைவ மரபில் வந்த அத்தனை அடியவர்களும் சிவபெருமானிடம் இணையற்ற அன்பு பூண்டவர்கள்தான். அவர் பொருட்டுப் பிள்ளையை, மனைவியை எனப் பலவும் இழக்கத் துணிந்தவர்கள்தான். என்றாலும் அவர்களுக்கெல்லாம் வாய்க்காத சண்டீசப்பதம், 'உன் தந்தை இனி நான்' எனும் அறிவிப்பு விசாரதருமருக்கு மட்டும் வழங்கப்பட்டது ஏன்? காரணம் இல்லாமல் கண்ணுதலார் ஏதும் செய்வதில்லை. விசாரதருமர் தனிமைப்படுத்தப்பட்டுத் தூய அன்புடன் அரவணைக்கப்பட்டு இறைநிலைக்கு உயர்த்தப்பட்டமைக்கு உயரியதோர் காரணம் இருக்கத்தான் செய்தது. அவர் தவிர்த்த அடியவர்கள் அத்தனை பேரும் இறைவனை, அவர் இருந்த இடம் தேடிச்சென்று வழிபட்டனர். அவர் ஒருவரே தாம் இருந்த இடத்தில் இறைவனை உருவாக்கிக் கொண்டு வழிபட்டார். நினைத்த இடத்தில், நினைத்தபொழுது இறைவனைப் பிறப்பிக்கும் தாயாக இருந்த அவரை, தாம் உருவாக்கிய வடிவிற்குத் தீங்கிழைக்கத் துணிந்தாரை நொடி நேரத் தயக்கமும் இன்றித் தண்டித்த அவர் துணிவை இறைவன் பெரிதும் இரசித்திருக்க வேண்டும். அதனால்தான் பிறப்பிலியான தம்மையே பிறப்பித்துக் கொண்டிருந்த அந்தப் பேரன்பரின் படைப்பாற்றலிலும் துணிவிலும் சிந்தையிழந்தவராய், அவரை மகனாக ஏற்றுச் சண்டீசப் பதமளித்தார்." மேற்கண்ட கூற்றுக்கள் மாமல்லபுரத்தில் ‘தர்மராஜரதம்’ என்று மக்களால் அழைக்கப்படும் ‘அத்யந்தகாம பல்லவேசுவரகிருக’த்தை ஆராய்ந்து நூலாக்கியபோது தெரிவித்தவை. பல்வேறு கோயில்களில் விசாரதருமரின் கதைநிகழ்வுகள் சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தாலும், முதன்முதலில் இடம்பெற்றது மாமல்லபுரம் அத்யந்தகாமத்தில்தான். அதற்குப் பிறகு திருவையாறு ஐயாறப்பர் கோயிலிலும் கங்கைகொண்ட சோழபுரத்திலும் இன்னபிற கோயில்களிலும் இடம்பெற்றிருக்கும் சிற்பங்கள் அத்யந்தகாமத்திலிருந்து சற்று வேறுபட்டிருக்கின்றன. எவ்வாறு, ஏன் வேறுபட்டிருக்கின்றன என்பதை உணர, விசாரதருமரின் கதையை அறிவது அவசியம். எச்சதத்தர் என்பாருக்கு மகனாகப் பிறந்தவர் விசாரதருமர். தினந்தோறும் ஆடுமாடுகளை மேய்த்து வருவது அவருக்கு இடப்பட்ட பணி. மாலையில் வீடுதிரும்பி ஒழுங்காகப் பால் தந்துகொண்டிருந்த பசுக்கள் திடீரென்று பால் தருவதை நிறுத்தி விட்டன. காரணமறிய விரும்பிய எச்சதத்தர் ஒருநாள் விசாரதருமரைப் பின்தொடர்ந்தார். மாலைவரை மேய்ந்து கொண்டிருந்த பசுக்களை வீடு திரும்பும் முன்னர் ஓரிடத்தில் நிறுத்திவைத்துப் பால் கறந்த விசாரதருமர், அப்பாலை அருகிலிருந்த சிவலிங்கம் ஒன்றிற்குத் திருமுழுக்காட்டினார். பால் வீணாகிறதே என்று பதறிய எச்சதத்தர் திருமுழுக்காட்டைத் தடுக்கப் பாய, அது பால் வைத்திருந்த பாத்திரத்தை இடறிவிட, பூசனைக்கு இடையூறு நிகழ்வதைக் கண்ட விசாரதருமர் அனிச்சையாக அருகிலிருந்த கோலை வீச, அது மழுவாகி எச்சதத்தரின் கால்களை வெட்டியது. தந்தை வீழ்ந்ததைப் பற்றிய கவலையின்றியும் வீழ்ந்தவர் தந்தைதான் என்பதை உணராமலும் பூசனையைத் தொடர்ந்த விசாரதருமரை சிவபெருமான் ஆட்கொண்டார். சண்டீசர் என்னும் பதமளித்துத் தம் சடையிலிருந்த கொன்றைமாலை ஒன்றைச் சூட்டிப் பெருமைப்படுத்தினார். புராணங்கள் பெரும்பாலும் வாய்மொழியாகக் கதைவடிவில் பரப்பப்பட்டு வந்தன. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கொருமுறை அரிதாகவே எழுத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஒருகதை ஒருவரிடமிருந்து மற்றவருக்குச் சென்று மூன்றாமவருக்குச் செல்லும்போது சற்று மாற்றம் பெறுவது இயல்பு. பனிக்கட்டி கரைவதைப்போல. எட்டாம் நூற்றாண்டில் சண்டீசப் பதமளித்துப் பூதத்தின் மூலம் கொன்றைமாலையை இறைவன் கொடுத்தனுப்பியதாக வழங்கப்பட்டு வந்த கதை, பின்னர்ப் பதினொன்றாம் நூற்றாண்டில் அவரே விசாரதருமரின் தலையில் நேரடியாகச் சூட்டுவது போல் மாறியுள்ளது. எட்டாம் நூற்றாண்டு அத்யந்தகாமத்தில் உள்ள சிற்பத்தில் பூதம் காட்டப்படவில்லை என்றாலும், அக்காலத்தில் பூதகணங்கள் மூலமாகவே இறைவன் பக்தர்களை அணுகியிருப்பதற்குச் சான்றுகள் உள்ளன. அதே மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தவச் சிற்பத்தொகுதியில் அர்ச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை ஒரு பூதம் வழங்குவதைக் கொண்டு இதை உறுதி செய்யலாம். இட அருமை கருதி அத்யந்தகாமத்தில் பூதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். பதினொன்றாம் நூற்றாண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் விமானத்தின் மீதுள்ள சண்டேச அனுக்கிரஹ மூர்த்தி சிற்பத்தில் இறைவனே தம் கைப்படக் கொன்றைமாலையைச் சூட்டுவதுபோல் அமைந்துள்ளது. சேக்கிழாரின் பனிரெண்டாம் நூற்றாண்டுப் பெரியபுராணத்திலும் இதுவே தொடர்ந்துள்ளது. இடைப்பட்ட காலமான ஒன்பதாம் நூற்றாண்டுத் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் பூதம் தருவதுபோலக் காட்டப்பட்டுள்ளது. ஐயாறப்பர் கோயிலின் வடகைலாயம் மற்றும் தென்கைலாயத்திற்கு இடையிலமைந்த முதன்மை விமானத்தின் வெளிப்புறச் சுற்றுப் பிரகாரத்தின் தூண்களில் பல்வேறு சைவ, வைணவப் புராணக் காட்சிகள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. அதுவும் ஒற்றைச் சிற்பங்களாக இல்லாமல் Panoramic எனப்படும் பல்காட்சிச் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றன. வாலிவதம், மகிஷவதம் எனப் புராண மற்றும் இதிகாசக் குவியலாக இருக்கும் இப்பிரகாரத்தின் மேற்குப் புறத்தில் வெளிப்புற வரிசைத்தூண் ஒன்றில் சண்டேசுவரர் கதை பல்காட்சிக் கையகலச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டளவிலும் கொன்றைமாலையைப் பூதம் கொடுப்பது போலத்தான் கதை வழங்கி வந்திருக்கிறது என்பதை உணரலாம். திருவையாற்றுக்கும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கும் இடைப்பட்ட பத்தாம் நூற்றாண்டில் இக்கதை எவ்வாறு வழங்கி வந்தது என்பதையும், எப்போது பூதத்தை விலக்கி, இறைவன் தானே கொன்றைமாலையைச் சூட்டத் தொடங்கினார் என்பதையும் அறிய, இவ்விரண்டு கோயில்களுக்கும் இடைப்பட்ட காலத்தனவான தஞ்சைப் பெரியகோயில் உள்ளிட்ட கோயில்களில் இடம்பெற்றிருக்கும் சண்டேசுவரர் சிற்பங்களை ஆராய்வது அவசியம். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |