http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 85
இதழ் 85 [ ஜனவரி 16 - ஃபிப்ரவரி 15, 2012 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
சங்கச்சாரல்
இன்றைய தமிழ்மொழியில் வழக்கொழிந்து போன தமிழ்ச்சொல் "ஊன்சோறு". அன்றைய தமிழகத்தில், ஐந்து திணைகளிலும் மக்கள் இதனை விரும்பி உண்டுள்ளனர். அன்று பெரும்பாலோரின் உணவுப் பழக்கத்தில் இடம்பிடித்த இந்த ஊன்சோறு தற்காலத்தில் பிரியாணி என்ற உருதுமொழிப் பெயர்மாற்றம் கண்டுள்ளதோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது. "ஊன் துவையடிசில்' எனச் சங்கப் பாடல்கள் பேசும் அவ்வுணவினை மன்னர்கள் பாணர்களுக்கு, பெரும் புலவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளனர். ஊன் சோற்றினைப் பல புலவர்கள் ரசித்து ருசித்து பாடிப் போற்றியுள்ளனர் தம் பாடல்களில். பழந்தமிழர்கள் சாதாரண எளியகுடிகள் முதல் மன்னர்கள்வரை இதனை மிகவும் விரும்பி, "மிகுதி"யாக உண்டு களித்துள்ளனர். மதுரைக்காஞ்சியில், வாலுவன், அஃதாவது சமையல் செய்வோன் தன் கைகளையே துடுப்பாகக் கொண்டு விரவி ஊன் சோற்றினைச் சமைத்து உண்போர் வரிசையறிந்து வழங்கினான் என்று விளக்கமாகக் கூறுகிறது. அப்பாடல் இதோ, "துடித்தோட்கை துடுப்பாக ஆடுற்ற ஊன்சோறு நெறியறிந்த கடிவாலுவன்" (மதுரைக்காஞ்சி : 34 - 36) மேலும், வெண்சோற்றுடன், நெய் கலந்து, ஆட்டிறைச்சி சேர்த்து சமைத்துண்டனர் என்பது கீழ்க்காணும் நற்றிணை வரிகள் வழித்தேற்றம். இப்பாடலில் வரும் மையூன் என்பது ஆட்டின் இறைச்சியைக் குறிப்பதாகும். "மையூன் தெரிந்த நெய்வெண்புழக்கல்" (நற்றிணை : 83 : 4-9 வரிகள்) சங்கத் தமிழர்கள் இவ்வாறு ஊன் சோற்றினை அதிகமாக உண்டுள்ளனர். எயிற்றியர் குடிசை முதல் கரிகாலச் சோழன் அரண்மனை வரை "ஊன் துவையடிசில்" வகையறாதான் புலவர் பெருமக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. உலகின் மூத்த முதல்குடிக்கு பீடுடைய நீண்ட நெடிய வரலாறு உள்ளது போலவே அவர்களின் உணவுக்கும் பண்டுத் தொடங்கி ஒரு நெடும் வரலாறு உள்ளது என்பது திண்ணம். மிளகாய், தக்காளி (அன்று வழக்கில் இல்லை) இல்லாது சமைக்கப்பட்ட ஊன்சோற்றின் சுவை எப்படியோ? ஆனால் அனைத்துப் பாடல்களும் "மிக்கச்சுவை" உடைத்து என்றே நற்சான்று பகர்கின்றன. அன்றைய தமிழர்களுக்கு மிளகு மற்றும் உணவுக்குச் சுவைசேர்க்கும் பொருட்கள் அதாவது Spices போன்ற மிகவும் அறிமுகமானவை அன்று வழக்கத்தில் இருந்திருக்கின்றன. எனவே, ஊன்சோறு அல்லது ஊன் துவையடிசில் என்பது இன்றைய பிரியாணிக்கு முன்னோடியே என்பது சங்கப் பாடல்களின் வழித்தேற்றம். Great Tamils! Great Food Delights! (நம் வாசகர் மத்தியில் Tamil food historians and Tamil food anthropologists உள்ளனர் என்றால் என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |