http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 88

இதழ் 88
[ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

செயத்தக்க செய்யாமையானும் கெடும்
சேரர் கோட்டை - விழா அழைப்பிதழ்
திரும்பிப்பார்க்கிறோம் - 35
பசுபதிகோயில்
அறுவர்க்கு இளையநங்கை - 1
வாசிப்பில் வந்த வரலாறு - 3
இதழ் எண். 88 > கலையும் ஆய்வும்
அறுவர்க்கு இளையநங்கை - 1
ச. கமலக்கண்ணன்

அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்


பாண்டியன் அவைக்கு வழக்குரைக்க வந்த கண்ணகியின் கோலத்தை வாயிற்காவலன் வழியாக இளங்கோவடிகள் விவரிக்கையில்தான் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது அன்னையர் எழுவர் வழிபாடு. கூடவே ஆறு அன்னையர்க்கு இளையவர் காளி என்னும் ஏழாவது நங்கை என்னும் செய்தியையும் இவ்வர்ணனையில் பதிவு செய்திருக்கிறார் இளங்கோவடிகள்.

எழுவர் அன்னையர் தோன்றிய விதமானது மார்க்கண்டேய புராணத்தில் இருக்கும் தேவி மகாத்மியத்தின் எட்டாவது அத்தியாயமான 'ரக்தபீஜனின் வீழ்ச்சி' என்ற பகுதியில் கீழ்க்கண்டவாறு குறிக்கப்பட்டிருக்கிறது. (ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி ஜகதீஷ்வரானந்தர் என்பவரால் செய்யப்பட்ட ஆங்கில மொழியாக்கம் பெறப்பட்ட தளம் : http://shaktisadhana.50megs.com/Newhomepage/shakti/Saptamarkas.html)

12-13. "At this moment, O King, in order to annihilate the enemies of devas and for the well-being of the supreme devas, there issued forth, endowed with exceeding vigour and strength, Saktis from the bodies of Brahma, Siva, Guha, Visnu and Indra, and with the form of those devas went to Candikaஸ

14. Whatever was the form of each deva, and whatever his ornaments and vehicle, in that very form his saktis advanced to fight with the asuras.

22. Then Siva, surrounded by those saktis of the devas, said to Candika, 'Let the asuras be killed forthworth by you for my gratification."

23. Thereupon from the body of Devi Issued forth the Sakti of Candika, most terrific, exceedingly fierce and yelling like a hundred jackals.

24. And that invincible (Sakti) told Siva, of dark coloured matted locks, "Go my lord, as ambassador to the presence of Sumbha and Nisumbha"

25. "Tell the two haughty asuras, Sumbha and Nisumbha, and the other asuras assembled there for battle.

27. But if through pride of strength you are anxious for battle, come on then. Let my jackals be satiated with your flesh."


தேவ-அசுரப் போர்கள் நடைபெற்று வந்த காலத்தில் இறைவனுக்குத் துணைசெய்ய உருவாக்கப்பட்டவர்கள்தான் இவ்வெழுவரும் என்கிறது இந்நூல். அன்னையர் எழுவர் தொகுதியில் மகேசுவரி, வைணவி, கௌமாரி, நான்முகி, வராகி, இந்திராணி ஆகிய அறுவரும் சைவ, வைணவ மதங்களின் ஆண் தெய்வங்களின் மனைவியர்கள். ஆனால் காளி மட்டுமே இறைவியின் அம்சமாகத் தோன்றியவள். சிலப்பதிகார காலத்தில் ஏழாவது நங்கையாகச் சுட்டப்பட்டிருந்த காளி தேவாரகாலத்தில் சாமுண்டியாக மாறுகிறார். இந்த மாற்றத்தைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார் முனைவர் இரா.கலைக்கோவன், 'பெண் தெய்வ வழிபாடு - தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தனது நூலில்.

"எவருடைய மனைவியாகவுமின்றி இறைவியின் அம்சமாகத் தோன்றிய காளியை அன்னையர் எழுவருடன் சிலகாலமே வைத்திருந்த சமய மரபுகள், அவளை அக்கூட்டத்திலிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தி, தனியொரு தெய்வமாக்கி உயர்நிலைக்கு நகர்த்தின." (பக்:21)

"தொன்மங்கள் வளர்ந்து கிளைத்த நிலையில், காளி எழுவர் அன்னையர் குழுவிலிருந்து விலகித் தனிப்பெருந் தெய்வமாகிறார். அன்னையர் எழுவர் தொகுதியில் காளியின் நகர்வால் ஏற்பட்ட வெற்றிடத்தைச் சாமுண்டி எனும் புதிய பெண்தெய்வம் கொண்டு நிரப்பிய சமயச் சூழலை அப்பர் மறைமுகமாகத் தம் பதிகமொன்றில் பதிவுசெய்துள்ளார். 'சாமுண்டி சாமவேதம் கூத்தொடும் பாடவைத்தார்' (நான்காம் திருமுறை, பதிகம் : 251) என்னும் நாவுக்கரசரின் சுட்டல், சாமுண்டி எனும் புதுப் பெயரைப் பெண்தெய்வ வழிபாட்டிற்கு வழங்குகிறது." (பக்:21)


திருமுறைகள் காலத்திலேயே இந்த இடமாற்றம் நிகழ்ந்து முடிந்து விடுவதால், அதற்குப் பின் தோன்றிய குடைவரைகளிலும் கற்றளிகளிலும் இடம்பெற்றிருக்கும் அன்னையர் எழுவர் சிற்பத்தொகுதிகளில் காளிக்குப் பதிலாகச் சாமுண்டியையே காணமுடிகிறது. அண்மையில் நான் காண நேர்ந்த திருவையாறு ஐயாறப்பர் கோயில், கர்நாடக மாநிலம் பேளூர் சென்னகேசவர் கோயில், திருத்தணி வீரட்டானேசுவரர் கோயில் மற்றும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் ஆகிய கற்றளிகளில் இருக்கும் சாமுண்டி சிற்பங்களின் ஒப்பீடே இக்கட்டுரை.

இந்த நான்கு கோயில்களையும் காலவரிசைப்படி அடுக்கினால், கீழ்க்கண்டவாறு கொள்ளலாம்.
1. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் (பல்லவர் - இராஜசிம்மர்)
2. திருத்தணி வீரட்டானேசுவரர் கோயில் (பல்லவர் - அபராஜிதவர்மர்)
3. திருவையாறு ஐயாறப்பர் கோயில் (சோழர் - ஆதித்தர்)
4. பேளூர் சென்னகேசவர் கோயில் (ஹொய்சளர் - விஷ்ணுவர்த்தனர்)காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்


காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலின் முதன்மை விமானத்தின் தென்மேற்குக் கர்ணகூடத்தின் தென்முகத்திற்கு எதிரில் இருக்கும் இரு சிற்றாலயங்களுக்கு இடையில் இருக்கும் அன்னையர் எழுவர் தொகுதி தற்போது பெருமளவு சுதையால் பூசப்பெற்றுள்ளமையால் சாமுண்டியின் பின்கைகளிலிருக்கும் கருவிகளைச் சரியாக அறியக்கூடவில்லை. வலப்பின்கையில் இருக்கும் கருவி குறுவாளாகலாம். வலமுன்கையில் திரிசூலத்தையும் இடமுன்கையில் கபாலவோடாகக் கொள்ளத்தக்கதொரு பொருளையும் கொண்டுள்ள இவர் வலது காலைக் கீழிறக்கி இடதுகாலை மடித்து சுகாசனக் கோலத்தில் (ஒரு பீடத்தில் அமர்ந்துகொண்டு ஒருகாலைத் தொங்கவிட்டு மற்றொருகாலைக் கிடைமட்டமாக மடித்துப் பீடத்தின்மீது இருத்தி இருக்கும் நிலை) அமர்ந்துள்ளார். இரு செவிகளிலும் பனையோலைக் குண்டலங்கள். கழுத்தில் சுதைப்பூச்சால் சரப்பளிபோல் காணப்படும் ஆபரணம் என்னவாக இருந்திருக்கும் என்று தெரியவில்லை.

சடைமகுடத்துடனும் அதன் முகப்பில் மண்டையோட்டையும் கொண்டுள்ள இவரது முப்புரிநூல் கச்சற்ற மார்பகங்களின் குறுக்கே உபவீதமாக வஸ்திரம் போலக் காட்சியளிக்கிறது. பிற்காலச் சிற்பங்களில் உருத்திராக்கங்கள், மண்டையோடுகள் அல்லது மனிதத்தலைகளைக் கொண்ட முப்புரிநூல் காணப்படுவதால், சுதை பூசப்பெறுவதற்கு முன்னரும் வஸ்திரமாகவே இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால், சிற்பத்தின் மீது பூசப்பட்டுள்ள சுதையின் தடிமனைக் கொண்டு பார்க்கும்போது மண்டையோடுகள் அல்லது மனிதத்தலைகளைக் கொண்ட முப்புரிநூலாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. வஸ்திரமாகவோ உருத்திராக்கங்களாகவோ இருக்கவே வாய்ப்பு அதிகம். வாகனங்களோ சின்னங்களோ காட்டப்படவில்லை. நெற்றி சிதைந்துள்ளதால் நெற்றிக்கண்ணைக் காண முடியவில்லை.திருத்தணி வீரட்டானேசுவரர் கோயில்


திருத்தணி வீரட்டானேசுவரர் கோயிலிலிருக்கும் சாமுண்டியும் சுகாசனத்திலேயே அமர்ந்துள்ளார். எனினும், இடதுகாலைக் கீழிறக்கி வலதுகாலை மடித்து இருக்கிறார். கீழிறங்கியிருக்கும் இடதுகால் சமத்தில் இருக்கிறது. இடப்பின்கையில் உடுக்கை, வலப்பின்கையில் திரிசூலம், இடமுன்கையில் கபாலவோடு ஆகியவற்றை ஏந்தி, வலமுன்கையைக் காக்கும் குறிப்பில் வைத்துள்ளார். இவரது வாகனமாகப் பேய் காட்டப்பட்டுள்ளது. ஒரு மனிதக்கையைக் கடித்துத் தின்னும் கோலத்திலுள்ள இப்பேய் அம்மை அமர்ந்திருக்கும் பீடத்தின் கண்டப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சடைமகுடத்துடனும் அதன் முகப்பில் மண்டையோடு அமைந்துள்ள பகுதியை ஒரு பாம்பும் கண்ணுடைய நெற்றியை இரு பாம்புகளும் அலங்கரிக்கின்றன. மனிதத்தலைகளைக் கோத்த உபவீத முப்புரிநூலை அணிந்துள்ளார். வலதுசெவியில் பனையோலைக் குண்டலமும் இடதுசெவியில் பிணக்குழைக்குப் பதிலாக உயிருள்ள மனிதனையும் கொண்டுள்ளார். ஒரேயொரு பதக்கத்துடன் கூடிய சவடியும் இருவட முத்துமாலையும் இவரது கழுத்தை அலங்கரிக்கின்றன. கச்சற்ற மார்பகங்களைப் பாம்பு சுற்றியுள்ளது.திருவையாறு ஐயாறப்பர் கோயில்


திருவையாறு ஐயாறப்பர் கோயிலிலிருக்கும் சாமுண்டியின் கச்சற்ற மார்பகங்களையும் பாம்பு சுற்றியுள்ளது. உபவீதமாய் அமைந்திருக்கும் முப்புரிநூல் மண்டையோடுகளால் ஆனது. அம்மையின் இடது பின்கையில் கபாலவோடும் வலது பின்கையில் திரிசூலமும் உள்ளன. வலமுன்கை காக்கும் குறிப்பிலும் இடமுன்கை கடக முத்திரையிலும் அமைந்துள்ளன. இடமுன்கையில் தோள்வளையாகப் பாம்பு காட்டப்பட்டுள்ளது. வலதுகாலைக் கீழிறக்கி இடதுகாலை மடக்கித் தாமரைப் பீடத்தின்மேல் சுகாசனத்தில் அமர்ந்திருக்கிறார். கீழிறங்கியிருக்கும் வலதுகால் பார்சுவத்தில் இருக்கிறது.

மண்டையோட்டை முகப்பில் கொண்டிருக்கும் சடைமுடியும் பாம்பால் சுற்றப்பட்ட கண்ணுடைய நெற்றியையும் கொண்டுள்ள இவரது இடதுசெவியில் பனையோலைக்குண்டலம்; வலதுசெவியில் பிணக்குழை. இடையாடையும் இடதுகாலில் சலங்கையும் காணப்படுகின்றன. இவரது வலப்புறமாக இருக்கும் கொடிமரத்தில் வாகனமாக வல்லூறு காட்டப்பட்டுள்ளது.பேளூர் சென்னகேசவர் கோயில்


கர்நாடக மாநிலம் பேளூர் சென்னகேசவர் கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு எழுவர் அன்னையர் தொகுதிகளில் கிழக்கில் இறுதியாக ஒவ்வொரு அன்னைக்குக் கீழும் அவரவர் வாகனங்கள் காட்டப்பட்டுள்ள தொகுதியே இக்கட்டுரையில் ஆளப்பட்டுள்ளது. மாக்கல் என்ற வகையைச் சேர்ந்த கல்லில் செதுக்கப்பட்டிருப்பதால் சிற்பம் பெருமளவு சிதைந்துள்ளதுபோல் காட்சியளிக்கிறது. அதிக அளவிலான ஆபரணங்கள் இச்சிற்பத்தைப் பிற்காலத்தியதாக அடையாளப்படுத்துகின்றன. மார்பகங்கள் கச்சுடன் இருக்க, முப்புரிநூல் காட்டப்படவில்லை.

இடமுன்கையில் கபாலவோடும் இடப்பின்கையில் உடுக்கையும் வலமுன்கையில் வாளும் வலப்பின்கையில் திரிசூலமும் கொண்டுள்ள இவ்வம்மை ஒரு பீடத்தின்மீது வலதுகாலைக் கீழிறக்கி இடதுகாலை மடித்து சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். கால்களில் சலங்கைகள் மற்றும் கழுத்தில் சரப்பளியுடன் மண்டையோட்டு மாலை. சடைப்புரிகள் தொங்கும் நெற்றியில் நெற்றிக்கண்ணைக் காணமுடிகிறது. இரு செவிகளிலும் இருக்கும் குண்டலங்களை அடையாளப்படுத்த இயலவில்லை. பீடத்தின்கீழே இவரது வாகனமாக நரி காட்டப்பட்டுள்ளது.

மேற்சொன்ன நான்கு சாமுண்டிகளின் சிற்பவியல் கூறுகளைக் கீழ்க்கண்டவாறு எளிமையாக அட்டவணைப்படுத்தலாம்.

சிற்பக்கூறுகள் காஞ்சிபுரம் கைலாசநாதர் திருத்தணி வீரட்டானேசுவரர் திருவையாறு ஐயாறப்பர் பேளூர் சென்னகேசவர்
இருக்கை எளிய தளம் எளிய தளம் தாமரை எளிய தளம்
அமர்வுநிலை சுகாசனம் சுகாசனம் சுகாசனம் சுகாசனம்
கீழிறங்கிய கால் வலது (சமம்) இடது (சமம்) வலது (பார்சுவம்) வலது (திரயச்சரம்)
தலையலங்காரம் சடைபாரம் சடைபாரம் சடைபாரம் சடைபாரம்
நெற்றிக்கண் தெரியவில்லை உண்டு உண்டு உண்டு
வலச்செவிக் குழை பனையோலை பனையோலை பிணக்குழை தெரியவில்லை
இடச்செவிக் குழை பனையோலை மனிதக்குழை பனையோலை தெரியவில்லை
கழுத்தணிகள் சரப்பளி சவடி, இருவட முத்துமாலை சரப்பளி சரப்பளி
முப்புரிநூல் வஸ்திரம் மனிதத்தலை மண்டையோடு இல்லை
மார்புக்கச்சு இல்லை, மேற்புறம் பாம்பு இல்லை, மேற்புறம் பாம்பு இல்லை, மேற்புறம் பாம்பு உண்டு
வலமுன்கை திரிசூலம் காக்கும் குறிப்பு காக்கும் குறிப்பு வாள்
வலப்பின்கை குறுவாள் திரிசூலம் திரிசூலம் திரிசூலம்
இடமுன்கை கபாலவோடு கபாலவோடு கடக முத்திரை கபாலவோடு
இடப்பின்கை தெரியவில்லை உடுக்கை கபாலவோடு உடுக்கை
கைவளைகள் வலப்பின்கை வளையல் இரு முன்கைகளிலும் வளையல்கள் அனைத்துக் கைகளிலும் வளையல்கள் தெரியவில்லை
தோள்வளைகள் இல்லை இடமுன்கையில் பாம்பு இடமுன்கையில் பாம்பு தெரியவில்லை
கால்வளைகள் இடது காலில் சிலம்பு இரு கால்களிலும் சலங்கை இடது காலில் சலங்கை இரு கால்களிலும் சலங்கை
வாகனம் / சின்னம் இல்லை பேய் வல்லூறு நரி


இந்நான்கு சிற்பங்களில் வாகனங்களாக இடம்பெற்றுள்ள பேய், வல்லூறு, நரி ஆகியவை மட்டுமின்றி, முப்புரிநூல், குழைகள், கைகளிலிருக்கும் கபாலவோடு மற்றும் தலையலங்கார ஆபரணங்கள் அனைத்துமே இடுகாட்டுடன் தொடர்புடையவையாய் இருக்கின்றன. 'இறைவனாடும் காடு அணங்காடும் காடு' என்றும் பேயொன்று தன் பிள்ளைக்குக் காளியென்று பெயரிட்டதையும் குறிக்கும் காரைக்காலம்மையின் மூத்த திருப்பதிகத்துடன் இவற்றை இணைத்துப் பார்க்க முடிகிறது. மேலே குறிப்பிட்ட தேவி மகாத்மியமும் 27வது அடியில் நரியை வாகனமாகக் கொண்டிருந்ததைக் குறிக்கிறது. 23வது அடியில் சாமுண்டி தோன்றும்போது ஆயிரம் நரிகள் ஒன்றாக ஊளையிடும் சத்தத்துடன் தோன்றியதாகக் குறிப்பது அப்பர் பெருமானின் ஐந்தாம் திருமுறையின் 230வது பதிகத்தில் வரும் 'கத்துங் காளி' என்னும் தொடருடன் இணைத்துப் பார்க்கத்தக்கது.

இந்நான்கனுள் காலத்தால் மிகவும் பிற்பட்டதான பேளூர் சென்னகேசவர் கோயில் சாமுண்டியைத் தவிர்த்துவிட்டு மீதமுள்ள மூன்று சாமுண்டிகளுக்குள் காலநிரலாக ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்தால், ஆயுதங்களிலோ கழுத்தணிகளிலோ குறிப்பிடத்தக்க மாற்றம் எதையும் காணமுடியவில்லை எனினும், முப்புரிநூலிலும் குழைகளிலும் சிறிது வேறுபாட்டைக் காணமுடிகிறது. முப்புரிநூலில் மண்டையோடுகள் அல்லது மனிதத்தலைகள் கோக்கப்பட்டிருப்பதும் செவிகளில் மனிதக்குழை அல்லது பிணக்குழையைக் கொண்டிருப்பதும் பிற்காலப் பல்லவர் மற்றும் முற்காலச் சோழர் காலத்தில் ஏற்பட்ட மாற்றம் எனலாம். அபராஜிதரும் ஆதித்தரும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனினும், மனிதத்தலைகளும் மண்டையோடுகளும் இதே காலகட்டத்தைச் சேர்ந்த பழுவேட்டரையர்கள் மற்றும் முத்தரையர்கள் காலச் சாமுண்டிகளிலும் இடம்பெற்றிருக்கிறதா என்பதும் சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் மற்றும் திருமுறைகளில் குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதும் விரிவான ஆய்வுக்குரியவை.

(ஆய்வு வளரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.