![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 88
![]() இதழ் 88 [ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2012 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
திரும்பிப் பார்க்கிறோம்
அன்புள்ள வாருணி, 29. 7. 1990 அன்று நிகழ்ந்த திருப்புத்தூர்ப் பயணத்தின்போது பிரான்மலையை அடுத்து பெரிச்சியூர் சென்றோம். பெரிச்சியூர் திருப்புத்தூரிலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ள சிற்றூராகும். அங்கு மாறுபட்ட பைரவர் சிற்பம் இருப்பதாகத் திரு. என். சேதுராமன் வழிக் கேள்விப்பட்டிருந் தோம். அவ்வூரிலுள்ள சுகந்தவனேசுவரர் கோயில் இறைவன் திருத்தி யூர் முட்டத்துத் திருமட்டுக்கரை நாயனார் என்று கல்வெட்டு களில் அழைக்கப்படுகிறார். பிற்பாண்டியர் காலத்தில் செழிப்பாக இருந்த அத்திருக்கோயில் நாங்கள் சென்றிருந்தபோது மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது. கல்வெட்டுகள் சேத்ரபாலதேவர் என்றழைக்கும் திருமேனி கோயில் வளாகத்தின் வடகிழக்குத் திருமுன்னில் இருந்தது. வழக்கமான சுடர்முடி அமைப்பிலிருந்து மாறுபட்டு சிரஸ்திரக முடியமைப்புடன் நின்றகோலத்தில் காட்சிதந்த அந்த நிர்வாண அழகருக்கு எட்டுத் திருக்கைகள். வல முன் கையில் கத்தி. பின் கைகளில் பாம்பு, முத்தலைஈட்டி. நான்காவது கைக்கருவி சிதைந் திருந்தது. இட முன் கை தலையோடு கொள்ள, இரண்டாம் கை அறுபட்ட தலையொன்றை முடிக்கற்றையைப் பிடித்துத் தூக்கிய நிலையில் காட்சிதந்தது. பின்கைகளில் உடுக்கை, பிணமொன்றைக் குத்தி ஏந்திய நிலையில் கங்காளத் தண்டு. கழுத்தில் மாலைகளுடன் மிக அரிதாகவே சிவபெருமானின் அணிகலனாகக் காட்சிதரும் பதிகப் புகழ் பன்றிக் கொம்பு இருந்தமை வியப்பளித்தது. இடத்தோளிலிருந்து முழங்கால்கள்வரை தொங்கி, வலத்தொடையின் வழிப் பின்னால் மறையும் தலைமாலை புதுமையான அமைப்பில் இருந்தது. இருதொடைகளையும் பின்னி வளைத்த நிலையில் பாம்பு அமைய, செவிகளில் குண்டலங்கள். தலைக்குப்பின் ஒளிவட்டம். சேத்ரபாலரைச் சுற்றி அமைந்திருக்கும் திருவாசியின் வலக்கீழ்ப் பகுதியில் இருந்த மூன்று ஆண் வடிவங்களுள் இரண்டு அமர்நிலையிலும் ஒன்று ஆடற்கோலத்திலும் அமைந்திருந்தன. ஆடலரின் வலக்கை பதாகத்திலும் இடக்கை வேழமுத்திரையிலும் அமைய, இடுப்புக்குக் கீழ்ப்பட்டபகுதி அமர்ந்துள்ள இசைக் கலைஞர்களின் பின் மறைந்திருந்தது. கலைஞர்களுள் ஒருவர் தாளம் இசைக்க, மற்றவர் குடமுழவு வாசிக்கிறார். திருவாசியின் இடப்புறம் நாய் ஒன்றுடன் உள்ள ஆடவரின் வலக்கை அதன் முதுகைத் தடவிடும் மெய்ப்பாட்டில் அமைய, இறைவனது இடக்கையிலிருந்து தொங்கும் தலையின் தசைப்பகுதியைச் சுவைக்குமாறு நாய் தாவிய நிலையில் காட்சிதருகிறது. அதன் முன், பாதங்களின் மேல் முழவொன்றை வைத்து முழக்கி மகிழ்பவராய் அமர்நிலையில் ஒருவர் காட்டப்பட்டுள்ளார். என்னுடைய கோயில் வாழ்க்கை அனுபவத்தில் இப்படியொரு சேத்ரபாலர் திருமேனியை நான் எங்கும் கண்டதில்லை. சிற்பங்களின் முக அமைப்பு, காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கருப்பொருள் இவை அனைத்துமே புதுமையாக இருந்தன. மூன்று கல்வெட்டுகள் இந்த இறைவடிவத்தைப் பற்றிப் பேசுகின்றன. அவற்றுள் காலத்தால் முற்பட்ட சடையவர்மர் வீரசோழ பாண்டியரின் 21ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு குலாசனி அம்பலத்தாடியாரான இராஜாதிராஜப் பூங்குன்ற நாடாள்வார் நலத்திற்காக அவரது தம்பி குலாசனி மாளவ மாணிக்கமான அதிராஜாதிராஜ பூங்குன்ற நாடாள்வார் சேத்ரபாலரின் நாள் வழிபாட்டிற்கும் அவர் திருமுன் விளக்கேற்றவும் நிலக்கொடை அளித்த தகவலைத் தருகிறது. கண்டன் உதையஞ் செய்தானான காங்கேயன், அரசநாராயணன் சந்தி என்ற பெயரில் சேத்ரபாலருக்குச் சிறப்பு வழிபாடு அமைத்ததோடு அதன் செலவினங்களுக்காக இறையிலியாக நிலக்கொடை அளித்தார். சேத்ரபாலரின் நாள் வழிபாட்டிற்காக உதைய திவாகரன் ஆளுடையானான இலங்கேசுவரன் நிலக்கொடை தந்த செய்தியைச் சுந்தரபாண்டியரின் கல்வெட் டொன்று பகிர்ந்துகொள்கிறது. புதுமையான அந்த சேத்ரபாலர் சிற்பத்தைப் பற்றி நான் எழுதிய 'பெரிச்சியூர் பாலதேவர்' என்ற கட்டுரை 16. 12. 1990 தினமணி கதிரில் வெளியானது. ![]() பெரிச்சியூரிலிருந்து திருக்கோட்டியூரிலுள்ள செளமிய நாராயணப் பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். கோயிலின் திருச்சுற்றைப் பார்வையிட்டு வந்தபோது சுற்றின் சுவரிலிருந்து நளினி கைவைத்த இடத்தில் சுண்ணப்பூச்சு உதிர்ந்தது. அதன் கீழே நாயக்கர் கால ஓவியம் கண்சிமிட்டியது. அதிர்ந்துபோன நாங்கள் கோயிலார் உதவியுடன் சுவரிலிருந்த பூச்சை அகற்ற, அந்தச் சுவர் முழுவதும் நாயக்கர் கால ஓவியங்கள் வெளிப்பட் டன. உடனிருந்த கோயில் மேலாளர் அக்கண்டுபிடிப்பிற்காக எங்களை மனமுவந்து பாராட்டினார். திருச்சுற்று முழுவதும் சுண்ணப்பூச்சை அகற்றி ஓவியங்கள் இருப்பின் அவற்றை வெளிப்படுத்துவதாகவும் தொடர்ந்து அவற்றைப் பாதுகாக்க உரிய முயற்சிகள் எடுப்பதாகவும் உறுதியளித்தார். இந்தக் கண்டுபிடிப்பு 12. 8. 1990ல் வெளியான தினமலரில் பதிவானது. ஒரு கோயிலை முழுமையாக ஆராயும் பயிற்சி பெறுவதற்காக மாணவர்கள் திருவரங்கம் கோயிலைத் தேர்ந்தனர். மூன்று நாட்கள் காலை முதல் மாலைவரை கோயில் வளாகத்திலேயே இருந்த ஆய்வின்போது பல அரிய சிற்பங்களைக் காணமுடிந்தது. பல்வேறு பாலுணர்வுச் சிற்பங்களைப் பார்த்தோம். கழைக்கூத்து, கரணச் சிற்பங்களை அகிலா கண்டறிந்தார். ஒரு பெரிய கோயிலை எப்படித் திட்டமிட்டு ஆராய வேண்டும் என்ற தெளிவினைத் திருவரங்கம் ஆய்வு எங்கள் அனைவருக்குமே வழங்கியதென்று சொல்லலாம். ஆகஸ்டு 4, 5ம் நாட்களில் 'பிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி' என்ற தலைப்பில் தமிழகனும் 'தொல்காப்பிய மரபுகள்' என்ற தலைப்பில் திருமாறனும் உரையாற்றினர். பேராசிரியர் திருமாறன் தனித்தமிழ் இயக்கப் பற்றாளர். சிறக்க உரையாற்றும் திறன் பெற்றவர். பழகுதற்கு மிக இனிய பண்பாளர். தமிழில் புலமையும் தெளிவும் உடையவர். பேராசிரியர் என்று கருதாமல் பட்டயக்கல்வி மாணவராகவே விளங்கி அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். தொல்காப்பியத்தில் வல்லமை பெற்றிருந்த அவருடைய பயிற்சியாலும் இலக்கணச் செம்மலாக விளங்கிய புலவர் தமிழகனின் வழிகாட்டலாலும் மாணவர்கள் பயன்பெற்றனர். ஆகஸ்டு 18ம் நாள் நளினியின் தலைமையில் அமைந்த சிவகாமி வடிவேல் நினைவுப் பொழிவில் பெரியார் ஈ. வே. ரா. கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் பே. க. வேலாயுதம் 'இலக்கியத்தில் வானியல்' எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ்ப் பற்றாளரான திரு. வேலாயுதம் வரலாற்றிலும் இணையற்ற ஈடுபாடு கொண்டவர். புதுக்கோட்டை மாவட்ட வரலாற்று மையத்திற்குப் புரவலராகவும் நெறியாளராகவும் அமைந்து வழிகாட்டியவர். அவரது பொழிவைக் கேட்டுப் பயனுற்ற நிலையில், அடுத்த நாள் பட்டயக்கல்வி மாணவர்களுடன் அரியலூர் சென்றோம். அங்குள்ள கோயில்களை ஆய்வு செய்து கங்கை கொண்ட சோழபுரமும் பார்த்தாக நினைவு. ஆகஸ்டு 19, தினமணி கதிரில் 'சிலம்பின் வரிகளுக்குச் சிற்பச் சான்றுகள்' என்ற தலைப்பில் குடக்கூத்துச் சிற்பங்களைப் பற்றிய என்னுடைய கட்டுரை வெளியானது. 'வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும்' எனும் சிலப்பதிகார அடிகள் குடக்கூத்து நிகழ்ந்த இடத்தையும் நிகழ்த்தியவர் யார் என்பதையும் படம்பிடிக்கின்றன. கோவலனை மகிழ்விக்க மாதவி ஆடிய பதினொரு வகைக் கூத்து வகைகளில் குடக்கூத்தையும் ஒன்றாகச் சிலப்பதிகாரத்தின் கடலாடு காதை சுட்டுகிறது. முதன் முதலாகக் குடக்கூத்துச் சிற்பத்தைப் பார்த்தபோது இலக்கியமும் சிற்பங்களும் சந்திக்கும் இடமாக அதைக் கருதினேன். ![]() ![]() ![]() தொடர்ந்து பல கோயில்களில் குடக்கூத்துச் சிற்பங்களைக் கண்டபோது சமுதாயத்தில் குடக்கூத்துப் பெற்றிருந்த உயரிய இடத்தை உணரமுடிந்தது. தினமணி கதிர் கட்டுரையில் கொற்ற மங்கலம் விஷ்ணு கோயில், திருவல்லம் வில்வநாதேசுவரர் கோயில், கீழப்பழுவூர் ஆலந்துறையார்க் கோயில் இவற்றில் நாங்கள் கண்டறிந்திருந்த குடக்கூத்துச் சிற்பங்களைப் பற்றி எழுதியதுடன் திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலில் உள்ள சிற்பத்தைப் பற்றியும் கூறியிருந்தேன். பின்னாளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடக்கூத்துச் சிற்பங்களைத் தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களிலிருந்து நளினி, அகிலா இருவரும் கண்டறிந்து வெளிப்படுத்தியமை கலை வரலாற்றிற்குக் குறிப்பிடத்தக்க வரவாக அமைந்தது. செப்டம்பர்த் திங்களில் எட்டுத்தொகை நூல்கள் பற்றித் திருமாறனும் ஆற்றுப்படை நூல்கள் பற்றித் தமிழகனும் உரையாற்றினர். கல்வெட்டறிஞர் ஐராவதம் மகாதேவனின் எழுத்தியல் அனுபவங்கள் பட்டயக்கல்வி மாணவர்களுக்குக் கிடைத்தால் பெரும் பயன் அமையும் என்று கருதியதால் உரையாற்ற வருமாறு அவரை அழைத்தோம். அப்போது அவர் தினமணி ஆசிரியராக இருந்தமையால் சிராப்பள்ளி தினமணி வாசர்களுடன் ஒரு கலந்துரையாடலையும் இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார். 16. 9. 1990 ஞாயிறன்று மாலை முதல் நிகழ்வாக வாசகர் கலந்துரையாடல் அமைந்தது. தமிழ்மணி, சுடர் எனும் புதிய இணைப்புகளால் தினமணி படிப்பார் எண்ணிக்கை பெருகியிருந்தது. சிராப்பள்ளித் தமிழ்ப் பற்றாளர்கள் பலராய் அவையில் கூடியிருந்தனர். திரு. மகாதேவனின் தொடக்க உரையைப் பின்பற்றிக் கலந்துரையாடல் நிகழ்ந்தது. தொடர்ந்து அமைந்த புகழேந்தி நினைவுப் பொழிவிற்குத் துணைவேந்தர் ச. முத்துக்குமரன் தலைமையேற்றார். ஐராவதம் மகாதேவன் 'தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கலந்துரையாடலுக்கு வந்த அனைவருமே பொழிவிலும் கலந்து கொண்டனர். அவை நிறைந்திருந்தமையும் பொழிவிற்குப் பிறகு கேள்விகள் பலவாய் எழுந்தமையும் திரு. மகாதேவனை மகிழ்ச்சிப்படுத்தின. சிராப்பள்ளிச் சுவைஞர்களைப் பற்றி மிகப் பெருமையாக அவர் பேசிப் பாராட்டியது எங்களைச் சிறப்புச் செய்யுமாறு அமைந்தது. திரு. பரணீதரன் ஆனந்தவிகடனில் எழுதி வந்த திருத்தலப் பெருமை தொடரின் 136வது அத்தியாயத்தில் குற்றாலம் பந்தநல்லூர்ச் சாலையில் உள்ள வில்லியநல்லூர்க் காளீசுவரர் கோயிலில் தாம் பார்க்க நேர்ந்த சிற்பம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டு, அதைப் புரியாத சிலை என்று சுட்டியிருந்ததுடன், திருமணஞ்சேரி சிவாச்சாரியார் திரு. சாமிநாத குருக்கள் அதை நான்முகன் என்று கருதுவதாகவும் எழுதியிருந்தார். அக்கட்டுரையுடன் வெளியிடப்பட்டிருந்த படத்தைப் பார்த்ததுமே அந்தச் சிற்பம் நான்முக சண்டேசுவரர் என்பதை அறிந்தேன். இருந்தபோதும் அச்சிற்பத்தைப் பார்ப்பதற்காக வில்லியநல்லூர் சென்றேன். நான்கு கைகளுடன் மூன்று முகங்கள் பெற்று சுகாசனத்தில் இருந்த அச்சிற்பத்தின் ஒவ்வொரு முகத்திலும் நெற்றிக்கண். இதழ்க்கடையில் கோரைப்பற்கள். சடைமகுடம், பனை யோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்துள்ள அச்சிற்பத்தின் பின்கைகளில் முத்தலைஈட்டியும் மழுவும் அமைய, முன்கைகளில் அக்கமாலையும் கமண்டலமும் உள்ளன. இதே போன்ற நான்முக சண்டேசுவரச் சிற்பங்களைப் பழையாறை மேற்றளியின் வடக்குக் கோட்டத்திலும் திருக்கச்சூர் மருந்தீசர் கோயிலிலும் சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் காணமுடிகிறது. ![]() ஆறைமேற்றளிச் சிற்பம் நெற்றிக்கண்கள், கோரைப்பற்கள் பெறவில்லை. இச்சிற்பத்தைத் தம்முடைய 'வரலாற்றுப் போக்கில் பழையாறை மாநகர்' என்ற நூலில் திரு. வே. மகாதேவன் நான்முகனாக அடையாளப்படுத்தி இருந்தார். மேற்றளியை ஆய்வு செய்தபோது இச்சிற்பம் நான்முக சண்டேசுவரரே என்பதை உறுதிசெய்து கலைமகள் திங்கள் இதழில் கட்டுரை எழுதியிருந்தேன். திருக்கச்சூர் சண்டேசுவரரின் வலப் பின் கையில் பாசம் உள்ளது. ஆனால், அத்திருமேனியைப் பற்றிக் கட்டுரைத்திருந்த திரு. வை. நாராயணசாமி அதை அக்கமாலையாக அடையாளப்படுத்தியிருந்தார். என் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்துவதற்காகப் பேராசிரியர் அரசுவிற்குத் தொலைபேசி, சென்னைக்கருகில் இருந்த திருக்கச்சூருக்குச் சென்று சண்டேசுவரர் சிற்பத்தைப் படமெடுத்தனுப்புமாறு வேண்டியிருந்தேன். அவரும் திரு. கோவிந்தராசுடன் கச்சூர் சென்று சண்டேசுவரரின் ஒவ்வொரு கையையும் கருவியுடன் தனித்தனியே படம் எடுத்து அனுப்பியிருந்தார். படங்களைப் பார்த்த பிறகு என் கருத்து சரி என்பது உறுதிப்பட்டது. அனைத்து நான்முக சண்டேசுவரச் சிற்பங்களின் படங்களுடன் விரிவான அளவில் ஒரு கடிதம் எழுதி ஆனந்தவிகடனுக்கு அனுப்பியிருந்தேன். திரு. பரணீதரன் தம்முடைய தொடரில் என் கடிதத்தை வெளியிட்டுப் புரியாத சிற்பத்தை அடையாளப்படுத்தித் தந்தமைக்காக நன்றி தெரிவித்திருந்தார். சேகரித்திருந்த செய்திகளின் அடிப்படையில் 'சண்டீசக் குழப்பம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அமுதசுரபிக்கு அனுப்பினேன். திரு. விக்கிரமன் அக்கட்டுரையை உடன் வெளியிட்டதுடன், என்னுடன் தொலைபேசி என் கண்டுபிடிப்புகளை உளமாரப் பாராட்டினார். செப்டம்பர் இறுதியில் பட்டயக்கல்வி மாணவர்களுக்கான எட்டுத்தொகை பற்றிய தம்முடைய இரண்டாவது பொழிவைத் திருமாறனும் கல்வெட்டெழுத்துக்கள் பற்றிய தொடர் பொழிவை நளினியும் பக்தி இலக்கியம் பற்றிய உரையை இராதாகிருட்டிணனும் நிகழ்த்தினர். கல்வெட்டாய்விற்கும் கோயிற்கலை அறிவிற்கும் இலக்கியப் பின்புலம் இன்றியமையாதது என்பதனால்தான் மாணவர்களுக்கு இலக்கியப் பயிற்சியும் கிடைக்குமாறு செய்தோம். மாணவர்களுடைய இரண்டாம் கருத்தரங்கிற்கான ஆய்வுப்பொருளாகத் தஞ்சாவூர் இராஜ ராஜீசுவரத்தைத் தேர்ந்தோம். அத்தகவலை வகுப்பில் குறிப்பிட்டபோது அனைவரும் மகிழ்வுடன் இசைந்தனர். செப்டம்பர் 23, 30 அக்டோபர் 7, 14 ஆகிய நாட்களில் அனைத்து மாணவர்களும் தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் வந்தனர். எங்களிடம் கலந்து பேசிய பிறகு திருமாறன், இராதாகிருட்டிணன் இருவரும் சோழர் கால ஓவியங்களைத் தலைப்பாகக் கொண்டனர். பொன்மணி கரணங்கள், சண்டேசுவரர் திருமுன் இரண்டையும் தேர்ந்தார். வீராசாமி முதல் தளத்தையும் விமானத்தைக் கோபாலனும் இராமகிருஷ்ணன் திருவாயில்களையும் இராஜேந்திரதேவன் கோயிலில் இருந்த அருங்காட்சியகத்தையும் தலைப்புகளாகத் தேர்ந்தனர். முருகன் கோயிலைத் தமிழரசியும் அம்மன் கோயிலை அகிலாவும் ஆராய்ந்தனர். 'உளிக்கோலங்களின் உயிர்க்கோலங்கள்' என்ற தலைப்பில் இராஜராஜீசுவரத்துச் சிற்பங்களைப் பற்றி நளினியும் 'நாதனும் கணநாதர்களும்' என்ற தலைப்பில் எண்திசைக் காவலர்களின் கோயில்கள் குறித்து இலட்சுமியும் திருச்சுற்றுமாளிகையைப் பற்றி இலலிதாம்பாள், தமிழகன் இவர்களும் ஆய்வுசெய்தனர். அகிலா வெளித்திருச்சுற்று தொடர்பாக மற்றொரு கட்டுரை தயார் செய்தார். எங்கள் ஆய்வுகளுக்கு அனுமதி அளித்து வேண்டிய அனைத்து உதவிகளையும் இந்தியத் தொல்லியல்துறை தெற்கு வட்டப் பிரிவின் கண்காணிப்புத் தொல்லியல் அலுவலர் செய்து தந்தார். தஞ்சாவூர்த் திருக்கோயிலில் அது போழ்து பராமரிப்பு அலுவலராகப் பணியாற்றிய திரு. த. பரமநாதன், உடன் பணியாற்றிய திரு. மதிவாணன், திரு. வைத்தியநாதன், சிற்பி திரு. பாலன், காவலர்கள் என அனைவருமே மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஆய்வுகள் சிறக்க உதவினர். பணியாற்றிய நான்கு நாட்களிலும் மதிய உணவுக்குப் பிறகும் மாலைத் தேநீரின் போதும் கலந்துரையாடல்கள் நிகழ்த்தப்பட்டன. தொல்லியல்துறை அலுவலகத்தின் முன்னிருந்த புல்வெளியில் நிகழ்ந்த அக்கலந்துரையாடல்களில் திருவாளர்கள் தெய்வநாயகம், தயாளன், ஸ்ரீதரன், அப்துல்மஜீது, தாமோதரன் ஆகியோர் கலந்துகொண்டு உரிய வழிகாட்டல்களை நல்கினர். விமானத்தைத் தம் ஆய்வுக்களமாக்கிக் கொண்ட கோபாலன் முன் பல ஐயங்கள் உயர்ந்தோங்கி நின்றன. 'இராஜராஜீசுவரத்து விமானத்தின் உச்சித்தளம் ஒரே கல்லால் ஆனது. அது எண்பது டன் எடை கொண்டது. அக்கல்லை விமானத்தின் மேலேற்றத் தஞ்சாவூரை அடுத்திருந்த சாரப்பள்ளம் என்னும் ஊரிலிருந்து சாரம் அமைத்தனர்' என்று சில அறிஞர்களும் 'இராஜராஜீசுவரம் விமானத்தின் சிகரம் ஒரே கல்லால் ஆனது. அதுவே எண்பது டன் எடை உடையது' என்று சில அறிஞர்களும் 'விமானக் குடத்தின் நிழல் கோயில் வளாகத்துள் விழுவதில்லை' என்று சிலரும் எழுதியிருந்தமை குறித்த உண்மைகளை அறிய கோபாலன் விரும்பினார். குடத்தின் நிழல் வளாகத்தில் விழுவதை நாள் முழுவதும் அங்கிருந்தமையால் அனைவருமே காணமுடிந்தது. எனவே அது குறித்த ஐயம் தோன்றிய விரைவில் தெளிவானது. உச்சித்தளம், சிகரம் குறித்த ஐயங்களைத் தெளிவுசெய்து கொள்ள வழியறியாது திகைத்த கோபாலனுக்குத் திரு. பாலன் உதவிக்கு வந்தார். 'உச்சித்தளமோ, சிகரமோ ஒரே கல்லால் ஆனவை அன்று' என்று தெளிவுபடுத்திய திரு. பாலன், சென்ற குடமுழுக்கின்போது தாம்தான் மேலே சென்று உச்சித்தளத்திலும் சிகரத்திலும் பூச்சு வேலைகள் பார்த்தது என்று உறுதிபடக் கூறியும் கோபாலனுக்கு நிறைவு ஏற்படவில்லை. தாம் மேலே சென்று உச்சித்தளத்தையும் சிகரத்தையும் பார்த்தாலன்றித் தெளிவு ஏற்பட வழியில்லை என்று கூறிய அவரிடம், 'விமானத்தின் மேலே சென்று பார்க்கலாம் வாருங்கள்' என்று கூறிய பாலன் உதவியாளர்களை அழைத்து வடக்கயிறு கொண்டுவரப் பணித்தார். உதவியாளர்களுள் ஒருவரான திரு. மோகன் கயிற்றுக் கட்டுடன் விமானத்தின் மேலே சென்று உச்சித்தளத்தின் மீதிருந்த நந்தியொன்றின் கழுத்தில் கயிற்றின் ஒரு முனையைக் கட்டி, மறு முனையைக் கீழே தொங்குமாறு நெகிழ்த்தினார். விமானத்தின் உச்சியிலிருந்து நான்காம் தளத் தரைவரை தொங்கிய அந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு விமானத்தின் ஆர உறுப்புகளான சாலை, கூடம், பஞ்சரம் இவற்றில் கால் பதித்து மேலே ஏறிச் செல்லலாம் என்று பாலன் உற்சாக மூட்டினார். கயிறு கட்டி முடிக்கும்வரை மகிழ்வோடு இருந்த கோபாலன் கயிற்றைப் பிடித்தபடி சென்றுதான் உண்மைகளைக் கண்டறியவேண்டும் என்பதை அறிந்த நிலையில் மேலேறத் தயங்கினார். நீரிழிவு நோய்க்கு மருத்துவம் மேற்கொண்டிருந்த நிலையில் அவருடைய தயக்கம் எனக்கு நியாயமாகப்பட்டது. வீராசாமி, இராமகிருஷ்ணன் இருவருமே அவருக்குப் பதிலாக மேலே செல்லத் தயாராக இருந்தனர். எனினும் அவர்கள் வழி உண்மைகளை அறிவதினும் என் வழி அறிவதையே கோபாலன் விரும்பினார். அவருடைய விருப்பத்தை மதித்து மேலே செல்லத் துணிந்தேன். பாலன் தாமும் என்னுடன் வருவதாகக் கூறி என் துணிவிற்குத் துணை நின்றார். அனைவரும் நான்காம் தளம் சென்றோம். மேலே வருவதற்கு நளினி, அகிலா இவர்களுடன் மாணவிகளும் முனைந்தனர். கயிறு வழிப் பயணம் என்பதால் பாதுகாப்புக் கருதி பெண்கள் வேண்டாம் என்று முடிவாயிற்று. கயிற்றைப் பிடித்தபடி சாலை ஒன்றின் மீது காலை வைத்தது மட்டுமே நினைவிருக்கிறது. என் இருபுறத்தும் கருப்பையா, பாலன் இருவரும் ஆரஉறுப்புகளைப் பிடித்தவாறே துணைக்கு வந்தனர். என்னுடைய அச்சம், தயக்கம் நீங்குமாறு இருவரும் மாறி மாறி உற்சாகப்படுத்திக் கொண்டே வழி நடத்திச் சென்றனர். அவர்கள் சுட்டிய இடங்களில் கால்களை வைத்தது மட்டுமே என் செயலாக அமைந்தது. இராஜராஜீசுவரத்துப் பெருமான் மீதும் இராஜராஜன் மீதும் பொறுப்பைச் சுமத்தி மேலே சென்றேன். கீழே பார்க்கவே இல்லை. உச்சித்தளத்தை நெருங்கியதும் மேலே நின்று கொண்டிருந்த மோகன் கை கொடுத்து என்னை அங்கு அழைத்துக் கொண்டார். உச்சித்தளத்தின் மீதிருந்து கீழே பார்த்தபோதுதான் இறைவன் என்னை எங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன். என் கண்களில் நீர் மல்கியது. கேட்காமல் கிடைத்த பேறு இது. அங்கிருந்தபடியே கோபாலனுக்கு நன்றி தெரிவித்தேன். என்னைக் குழந்தையைப் போல் நடத்தி மேலே கொணர்ந்து சேர்த்த பாலனுக்கும் கருப்பையா, மோகன் இவர்களுக்கும் நன்றி கூறினேன். உச்சித்தளம் அடையும்வரை கவலையோடு மேலே பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் நான் தளம் ஏறியதும் மகிழ்ச்சிப் பெருக்கில் கையொலி செய்தனர். அனைவர் முகங்களிலும் மலர்ச்சி. கீழே இருந்த இராமகிருஷ்ணன், வீராசாமி இருவரும் மேலே வர விழைந்தனர். அவர்கள் ஆர்வத்துடிப்பை உணர்ந்த பாலன் அவர்களும் மேலே வர உதவினார். உச்சித்தளத்தின் மீது இடப்பட்டிருந்த நீளமான கற்களை அவர் அடையாளப்படுத்தினார். சுதை பூசப்பட்டிருந்தபோதும் தளம் பல கற்களால் மூடப்பட்டிருந்தமையை நன்கு காணமுடிந்தது. ஓரிடத்தில் சுதைப் பூச்சு விலகியிருந்தமை எங்கள் தெளிவை உறுதிப்படுத்தியது. சிகரம் பல கற்களால் அமைக்கப்பட்டிருந்ததை பாலன் சுட்டிக் காட்டினார். கிரீவகோட்டச் சிற்பங்களையும் நந்திகளையும் பார்த்த பிறகு வடமேற்குப் பகுதியில் இருந்த பூதத்தின் சிற்பத்தை ஆராய்ந்தோம். அகிலாவின் கட்டுரைக்காக வெளிச்சுற்றின் மேற்குப்பகுதியில் இருந்தபோது தற்செயலாக அந்தச் சிற்பத்தைப் பார்த்தேன். அப்போது அதை இன்ன சிற்பம் என்று அடையாளப்படுத்த முடியாமல் இருந்தது. அதன் அருகிலேயே நிற்கும் வாய்ப்புக் கிடைத்த அந்த நொடியில் அப்பூதவடிவத்தைக் கொடிப்பூத மாக அடையாளப்படுத்த முடிந்தது. அதுநாள்வரை நாங்கள் படித்திருந்த தஞ்சாவூர் தொடர்பான நூல்களிலோ, கட்டுரைகளிலோ அச்சிற்பத்தைப் பற்றிய குறிப்பேதும் கண்டோமில்லை. அதனால், அதை எங்கள் கண்டுபிடிப்பாகப் பதிவுசெய்தோம். மேலிருந்தவாறே கோயிலின் நான்கு திசைகளிலும் பார்த்தேன். அகழி, சுற்றுமாளிகை, கோபுரங்கள், பூங்கா, அரண்மனை, தெருக்கள், கட்டடங்கள் எனக் கண்ட காட்சி கண்களை மலர்த்தியது. என் வாழ்நாளில் கோயில் விமானத்தின் உச்சியில் இருந்து வளாகத்தையும் ஊரையும் நோக்கிய முதல் பார்வையாக அது அமைந்தது. அந்த வளாகத்தின் பெருமிதத்தை விமானப் பார்வையில் மிகச் சிறப்பாக உணரமுடிந்தது. அம்மன்கோயில், பிள்ளையார், முருகன் திருமுன்கள், ஆடவல்லான் அம்பலம் இவற்றை நீக்கிய அந்த வளாகத்தைக் கற்பனை செய்து பார்த்தேன். ஒரு பிரமிப்புணர்வே வளர்ந்தது. எவ்வளவு நேரம் அங்கிருந்தோம் என்பது நினைவில்லை. ஆனால், பாலனின் துணையோடு கிரீவம் முழுவதும் சுற்றிவந்த அந்த அனுபவம் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத பேரின்பப் பதிவாகும். ஒரு விமானத்தின் உச்சியில் இருக்கும் பேறு மிக அரிதாகவே மனிதர்களுக்கு வாய்க்கிறது. இராஜராஜீசுவரம் எனும் மகத்தான கட்டுமானத்தின் விமானத்தை அணு அணுவாக அருகிருந்து இரசிக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய கோபால னையும் உடன் அழைத்துச் சென்ற பாலனையும் என்னால் என்றுமே மறக்கமுடியாது. நாங்கள் சென்றது போலவே கயிறு வழி இறங்கி வந்து நான்காம் தளத்தை அடைந்தபோது கோபாலன் கண்களில் நீரைக் கண்டேன். விமானத்தின் உச்சியை அடையும் வாய்ப்பை நலக்குறைவு காரணமாக அவர் இழந்தத னால் ஏற்பட்ட துன்பத்தின் வெளிப்பாடு அது என்று கருதினேன். ஆனால், அவருக்காக நான் சென்று வந்தமைக்கான நன்றிக் குறியீடு அது என்பதனை அவர் கூற அறிந்தேன். 'என் பொருட்டு எதுவும் கருதாமல் அவ்வளவு உயரம் சென்று வந்தீர்களே' என்று அவர் அன்பு பெருகிட என் கைகளைப் பற்றியவாறு கலங்கியபோதுதான் ஏதோ செயற் கரிய செயலைச் செய்த உணர்வு எனக்கு உண்டானது. கோபாலனின் அன்பிற்கு என் உள்ளம் குழைந்தது. நளினி, அகிலாவின் கண்களில் நிம்மதியைப் பார்த்தேன். கீழிருந்த அனைவருமே உணர்வு வயப்பட்டிருந்தனர். சில மணித்துளிகள் யாரும் பேசவில்லை. வீராசாமியும் இராமகிருஷ்ணனும் வெற்றிப் பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்தனர். அனைவரும் பாலனுக்கும் அவருடைய உதவியாளர்களுக்கும் நன்றி தெரிவித்து விட்டுக் கீழிறங்கினோம். வாழ்க்கையில் இது போன்ற மிக உன்னதமான பொழுதுகள் அவ்வப்போதேனும் அமையத்தான் செய்கின்றன. அன்புடன், இரா. கலைக்கோவன். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |