http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 8

இதழ் 8
[ ஃபிப்ரவரி 15 - மார்ச் 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

ஈன்ற பொழுதினும் பெரிதுவந்தோம்
முப்பெரும் விழா நிகழ்வுகள் - 1
மத்தவிலாசப் பிரகசனம் - 5
நாளிதழ்களில் வரலாறு டாட் காம்
சீவரமுடையார் குடைவரையும் கல்வெட்டுகளும்
பழுவூர் - 1
கல்வெட்டாய்வு - 6
இராஜராஜரின் வெற்றிகள்
கட்டடக்கலைத் தொடர் - 7
யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை
நார்த்தாமலையை நோக்கி...
அழிவின் விளிம்பில் ஒரு அரிய வரலாற்றுப் பெட்டகம்
Genesis of Vimana in Pallava Art
சங்கச்சாரல் - 7
இதழ் எண். 8 > கலையும் ஆய்வும்
கல்வெட்டாய்வு - 6
மா. இலாவண்யா
இராஜராஜீசுவரம் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரைகளை ஆர்வமுடன் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

வரலாறு ஆறாம் இதழில் வெளிவந்த கட்டுரையில் இடம்பெற்ற கல்வெட்டுப் புகைப்படத்தைப் பார்த்துப் பலரும் விடை அனுப்பியிருந்தீர்கள். அனேகமாக பலரும் அக்கல்வெட்டில் இருந்த பல எழுத்துகளையும் சொற்களையும் கண்டுபிடித்து எழுதியிருந்ததிலிருந்து, நீங்கள் கல்வெட்டு படிக்கக் கொண்டுள்ள ஆர்வம் தெளிவாக விளங்குகிறது. எங்களுக்கும் இப்படி ஆர்வமுடன் கற்றுக்கொள்ளும் உங்களனைவருக்கும் இன்னும் பல நல்ல கல்வெட்டுகளையும், செய்திகளையும் இக்கட்டுரையின் மூலம் வழங்கவேண்டுமென ஆசையும் ஆர்வமும் உண்டாகிறது.

அக்கல்வெட்டுப் புகைப்படத்திற்கான சரியான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் படித்ததைச் சரிபார்த்துக்கொள்ளவும். புகைப்படத்தில் சரியாகத் தெரியவில்லை.


1) ஆயிரமுடையநாயனார் கோ
2) யில் தானத்தாற்க்கு நீரூபம் எ
3) டுத்தது ஆயிரமுடையநாயநார்
4) தானத்தை முன்பே குலோத்
5) துங்க சோழதேவர் காலத்தி
6) லே இறங்கல் இட்டு நாயனார்
7) திருநாமத்துக் காணியுமாறி தி
8) ருவிருப்பும் திருமடைவிளாகமு
9) ம் அனைய பதங்காவுடையனா
10) யனா()க்கு குடுத்த இதுவும் எடுத்
11) தது ஆயிரமுடையநா (ய*)
12) னார் தானத்தை இறங்
13) கல் இட்ட இதுவும் ய88
14) ம் அல்லாத படி ஆலே

பதினான்காம் வரியிலுள்ள ய88 என்பன கிரந்த எழுத்துகளாகும். "ய" என்பது "த" வையும் "8" என்பது "ம" வையும் குறிக்கும். ஆகையால் அதை தம்மம் என்று படிக்க வேண்டும். இக்கல்வெட்டு காஞ்சி கயிலாசநாதர் கோயிலில் ஒரு தூணில் நாஙு பக்கமும் வெட்டப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டிருப்பது அக்கல்வெட்டில் ஒரு பகுதியேயாகும்.

இராஜராஜீசுவரம் சிறப்பிதழில் வெளிவந்த கல்வெட்டுக் கட்டுரையில், ஆழ்வார் பராந்தகன் குந்தவையார், இராஜராஜீசுவரம் கோயிலுக்கு வழங்கிய கொடைகளைப் பகரும் கல்வெட்டில் ஓரிரு வரிகளைப் பார்த்தோம். இக்கட்டுரையில் அக்கல்வெட்டில் இடம்பெறும் மேலும் ஓரிரு வரிகளைக் காண்போம்.

கல்வெட்டில் 2ம் வரியில் "கல்லில் வெட்டின ||-" என்ற சொல் வரை இராஜராஜீசுவரம் சிறப்பிதழ் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை அடுத்து வரும் கல்வெட்டு வரிகள் மூன்றும் அவை தரும் செய்தியும் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

2) (1) [க*] தக்ஷிணமேருவி[ட]ங்கர் நம்பிராட்டியார் உமாபரமேஸ்வரியாரும் தஞ்சைவிடங்கர் நம்பிராட்டியார் உமாபரமேஸ்வரியாருந் திருவிழா எழு[ந்]தருளும்போது ஏறியருளுந்திருவரங்கணியக்குடுத்த பொன் தண்டவாணிக்கு கால் மாற்று நல்ல பொன் மூவாயிரத்து ஐஞ்ஞூற்றுக்கழஞ்சும் தண்டாவாணிக்கு ஒருமாற்றுத்தண்ணிய பொன் ஆயிரத்து ஐஞ்ஞூற்றுக்கழஞ்சும் ஆகப் பொன் ஐய்யாயிரக்கழஞ்சு ||- (2)[உ*] ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் தம்மையாக எழுந்தருளுவித்த திருமேனிக்குக் குடுத்தன (3) [ஙு*] கம்பி இருபதினால் பொன் அறுகழஞ்செய் குன்றி ||- (4) [ச*] தாலிமணிவடம் ஒன்று தாலி உட்படப் பொன் நாற்கழஞ்செய் ஆறு மஞ்சாடியுங்குன்றி ||- (5) [ரு*] தக்ஷிணமேருவிடங்கர்க்குக் குடுத்தன ||- (6) [சு*] எகாவல்லி ஒன்றிக்கோத்த பழ[மு]த்து அனுவட்டமும் ஒப்புமுத்தும் குறுமுத்தும் ஆக முப்பத்தைஞ்சும் பவழம் இரண்டும் ராஜாவர்த்தம் இரண்டும் தாளிம்பமும் படுகண்ணுங்கொக்குவாயும் உடையது நிறை நாற்க்கழஞ்செய் எட்டு மஞ்சாடியும் நான்கு மாவுக்கு விலை காசு பதினொன்று ||- (7) [எ*] தக்ஷிணமேருவிடங்கர் நம்பிராட்டியார் உமாபரமேஸ்வரியாக்குக் குடுத்தன [||-] (8) [அ*] ஏகா

3) வல்லி ஒன்றிற்கோத்த பழமுத்து அனுவட்டமும் ஒப்புமுத்துங்குறுமுத்தும் ஆக முத்து முப்பத்தைஞ்சும் பவழம் இரண்டும் ராஜாவர்த்தம் இரண்டும் தாளிம்பமும் படுகண்ணுங்கொக்குவாயும் உடை[ய]து நிறை நாற்கழஞ்செய் ஒன்பது மஞ்சாடியுங்குன்றிக்கு [வி]லை காசு பன்னிரண்டு ||- (9) [கூ*] தக்ஷிணமேருவிடங்கர் நம்பிராட்டியார் உமாபரமேஸ்வரியாருந்தஞ்சைவிடங்கர் நம்பிராட்டியார் உமாபரமேஸ்வரியாருந்திருவிழா எழுந்தருளும்போது திருஅமிர்துக்குந்திருப்பள்ளித்தாமத்துக்குந்திருவிளக்கெண்ணைக்கும் உள்ளிட்டு வேண்டும் அழிவுக்குப் பொலிசையூட்டுக்கு வைத்த காசில் நித்தவினோத வளநாட்டு முடிச்சோழ நாட்டு ப்ரம்மதேயம் ஜநநாதச்சதுர்வேதிமங்கலத்து ஸபையார் யாண்டு இருபத்தெட்டாவது பசான் முதல் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டன் முக்குறுணி நெற்பொலிசையாகத் தஞ்சாவூர் ஸ்ர்ராஜராஜீஸ்வரம் உடையார் பெரும் பண்டாரத்தெய் ஆடவல்லான் என்னும் மரக்கால[¡*]ல் சந்திராதித்தவல் அளக்கக்கடவர்களாகக்கொண்ட காசு இருநூறினால் ஆட்டாண்டு தோறும் அளக்கக்கடவ நெல்லு ஐய்ம்பதின் கலம் ||- (10) [ய*] நித்தவினோதவளநாட்டு ஆவூர்க்கூற்றத்து ப்ரம்மதேயம் இரும்புதலாகிய மநுகுலசூடாமணிச்சதுர்வேதிமங்கலத்து ஸபையார் யாண்டு இருபத்தெட்டாவது பசான் முதல் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டன் முக்குறுணி நெல்லுப்பொலிசையாகத்தஞ்சாவூர் ஸ்ர்ராஜராஜீஸ்வரம் உடையார்

4) பெரும் பண்டாரத்தெய் ஆடவல்லான் என்னும் மரக்காலால் சந்திராதித்தவல் அளக்கக்கடவர்களாகக்கொண்ட காசு நூறினால் ஆட்டாண்டு தோறும் அளக்கக்கடவ நெல்லு இருபத்தைங்கலம் ||- (11) [யக*] கேரளாந்தக வளநாட்டு உறையூர்க்கூற்றத்து ப்ரம்மதேயம் ராஜாஸ்ரயச்சதுர்வேதிமங்கலத்து ஸபையார் யாண்டு இருபத்தொன்பதாவது முதல் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டன் முக்குறுணி நெல்லுப் பொலிசையாகத்தஞ்சாவூர் ஸ்ர்ராஜராஜீஸ்வரம் உடையார் பெரும் பண்டாரத்தெய் ஆடவல்லான் என்னும் மரக்காலால் சந்திராதித்தவல் அளக்கக்கடவர்களாகக்கொண்ட காசு ஐஞ்ஞூறினால் ஆட்டாண்டு தோறும் அளக்கக்கடவ நெல்லு நூற்றிருபத்தைங்கலம் ||- (12) [யஉ*] நித்தவினோதவளநாட்டுக் கிழார்க்கூற்றத்துப் பெருமிலட்டூர் ஊரார் யாண்டு இருபத்தொன்பதாவது முதல் காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டன் முக்குறுணி நெல்லுப் பொலிசையாகத்தஞ்சாவூர் ஸ்ர்ராஜராஜீஸ்வரம் உடையார் பெரும் பண்டாரத்தெய் ஆடவல்லான் என்னும் மரக்காலால் அளக்கக்கடவர்களாகக்கொண்ட காசு இருநூறினால் ஆட்டாண்டு தோறும் அளக்கக்கடவ நெல்லு ஐய்ம்பதின் கலம் ||-


குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, பல செய்திகளைக் கொண்ட இக்கல்வெட்டில், "||-" என்ற குறியிட்டு செய்திகளைப் பிரித்துப் பொறித்திருப்பதேயாகும். இராஜராஜீசுவரம் கோயிலில் அனேகமாக எல்லா கல்வெட்டுகளிலும் இம்முறையை மேற்கொண்டு செய்திகளை அழகாகப் புரியும்படி கோடுகளைக்கொண்டு (||-) பிரித்துப் பொறித்திருக்கிறார்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு வரிகளில் ஒவ்வொரு செய்தியின் ஆரம்பத்திலும் 1,2,3 என்று எண்ணிடப்படுள்ளது. அந்த எண்கள் கல்வெட்டில் இல்லை, உங்களுக்குப் புரியும்படி செய்தியைச் சுலபமாக விளக்குவதற்காக நாங்கள் கொடுத்த எண்கள்தாம் அவை.

கல்வெட்டு செய்தியாவது:

செய்தி 1 - தக்ஷிணமேருவிடங்கர் மற்றும் தஞ்சைவிடங்கரின் தேவியர் திருவிழாவின் பொழுது எழுந்தருளும் அரங்கை அதாவது மண்டபத்தை அலங்கரிப்பதற்காக ஐயாயிரம் கழஞ்சு பொன்னைக் குந்தவையார் கொடுத்துள்ளார். ஐயாயிரம் கழஞ்சில், மூவாயிரத்து ஐநூறு கழஞ்சு பொன், தண்டவாணி என்று குறிப்பிடப்படும் பொன்னின் நிலையான தரத்தைவிட (gold standard) கால் மாற்று உயர்ந்த தரம் கொண்டது. மீதமுள்ள ஆயிரத்து ஐநூறு தண்டவாணியை விட ஒரு மாற்று குறைந்த தரத்தில் உள்ளது.

செய்தி 2, 3, 4 - குந்தாவையார், அவரின் அன்னையாக எழுந்தருளுவித்தச் செப்புத்திருமேனிக்கு அணிவிக்க, ஆறு கழஞ்சு ஒரு குன்றி அளவிலான இருபது (20) பொன் கம்பிகளைக் கொடுத்துள்ளார். கம்பி என்பது காதணியாகலாம். மேலும் நாலு கழஞ்சு, ஆறு மஞ்சாடி, ஒரு குன்றி பொன் கொண்ட மணிகள் கோர்த்த தாலி ஒன்றினையும் வழங்கியுள்ளார். இதில் கழஞ்சு, மஞ்சாடி, குன்றி இவையெல்லாம் கிராம், கிலோகிராம் என்று இக்காலத்தில் சொல்வது போல் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த பொன் அளவைகள். இந்த அளவைகளைப் பற்றி அடுத்து வரும் இதழ்களில் விரிவாகக் காணலாம். நகைகளின் எடை அறிய ஆடவல்லான் மற்றும் தக்ஷிணமேருவிடங்கர் என்ற இருவகையான எடைகல்லினை பயன்படுத்தினர் என்று இராஜராஜீசுவரம் கல்வெட்டுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை இங்கு நினைவு கூறலாம்.

செய்தி 5, 6 - தக்ஷிணமேருவிடங்கர்க்கு அணிவிக்க, 35 முத்துகள் மற்றும் 2 பவழம் கோர்க்கப்பட்ட ஒரு கம்பி, 2 ராஜாவர்த்தம் ("South Indian Inscriptions Vol II"வில் ராஜாவர்த்தம் என்றால் Lapis Lazuli என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. Lapis Lazuli என்பது உயர்ரக நீலக்கல்லாகும்), ஒரு தாளிம்பம் ("South Indian Inscriptions Vol II"வில் தாளிம்பம் என்பது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் "தத்பவா" என்றும், அச்சொல் மாதுளையைக் குறிக்கும் சமஸ்கிருத சொல்லான "ததிமா" என்ற சொல்லிலிருந்தது பிறந்தது என்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆகவே "தாளிம்பம்" என்பது மாதுளைமுத்தைப் போல் இருந்த ஒரு கல்லாக இருக்கலாம்), ஒரு கொக்கி (கொக்குவாய்), கொக்கியை மாட்டுவதற்குத் தேவையான சிறு வளையம் இவையெல்லாம் கொண்ட ஒரு மாலையினைக் குந்தவையார் கொடுத்துள்ளார். இம்மாலையின் நிறை நாலு கழஞ்சு, எட்டு மஞ்சாடி மற்றும் பத்தில் நாலு பங்கு மஞ்சாடி(4/10); மொத்தம் பதினொரு காசு அளவுக்குச் சமமானது. மேலே குறிப்பிட்ட 35 முத்துகள் எவ்வெவ்வகையினவை என்றும் கல்வெட்டு கூறுகிறது. அனுவட்டம் (வட்ட முத்து), ஒப்பு முத்து (ஒப்பனை அதாவது பாலிஷ் செய்யப்பட்ட முத்து), குறுமுத்து (சிறிய முத்து) என மூவகை முத்துகளாக மொத்தம் 35 முத்துகள் அம்மாலையில் கோர்க்கப்பட்டுள்ளன.

செய்தி 7, 8 - தக்ஷிணமேருவிடங்கரின் தேவியார் உமாபரமேஸ்வரியாரின் திருமேனிக்கு அணிவிக்க, மேலேயுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ள மாலையைப் போன்றே ஒரு மாலையைக் குந்தவையார் கொடுத்துள்ளார். இம்மாலையின் நிறை நாலு கழஞ்சு, ஒன்பது மஞ்சாடி மற்றும் ஒரு குன்றி; மொத்தம் பனிரெண்டு காசு அளவுக்குச் சமமானது.

செய்தி 9, 10, 11, 12 - இரு தேவியரும் திருவிழாவில் எழுந்தருளும்போது திருவமுது செய்வதற்கும், மலர் மாலைகளுக்கும், திருவிளக்கு ஏற்றத் தேவையான எண்ணைக்கும் குந்தவையார் பொலிசையாகக் கொடுத்த காசில், ஜநநாதசதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்த ஊர்சபையார் இருநூறு காசைப் பெற்றுக்கொண்டுள்ளனர். தாம் கொண்ட காசிற்கு வட்டியாக, ராஜராஜதேவரின் 28ம் ஆட்சியாண்டு முதல் ஆண்டொன்றுக்கு ஒரு காசுக்கு மூன்று குறுணி நெல் என்ற வட்டி விகிதப்படி, இருநூறு காசுக்கு ஐம்பது கலம் நெல்லை இராஜராஜீசுவரம் கோயில் பண்டாரத்தில் சந்திரசூரியர் இருக்கும் வரை ஒவ்வொரு ஆண்டும் சேர்க்க வேண்டும். நெல் ஆடவல்லான் என்று குறிப்பிடப்படும் மரக்காலால் அளக்கப்பட வேண்டும்.

செய்தி 10, 11, 12 - அதேபோல மநுகுலசூளாமணி சதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்த சபையார் தாம் கொண்ட நூறு காசிற்கு வட்டியாக, இருபத்தைந்து கலம் நெல்லும், ராஜாஸ்ரய சதுர்வேதிமங்கலத்து சபையார், தாம் கொண்ட ஐநூறு காசுக்கு வட்டியாக நூற்று இருபத்தைந்து கலம் நெல்லும், பெருமிலட்டூர் ஊரார், தாம் கொண்ட இருநூறு காசுக்கு வட்டியாக ஐம்பது கலம் நெல்லும் இராஜராஜீசுவரம் கோயில் பண்டாரத்தில் ஆண்டாண்டுதோறும் சேர்க்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள ஊர்கள் எந்த வளநாட்டைச் சேர்ந்தவை, எந்த நாட்டைச் சேர்ந்தவை என்ற செய்தியினையும் கல்வெட்டில் விரிவாகப் பொறித்திருக்கிறார்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ள வட்டி விகிதத்தையும் பண்டாரத்தில் சேர்க்க வேண்டிய நெல் அளவினையும் கொண்டு குறுணி மற்றும் கலம் நெல் அளவுகளை ஒப்பீடு செய்யலாம். ஒரு காசுக்கு மூன்று குறுணி நெல் என்றால் 100 காசுக்கு 300 குறுணி நெல். அதை கலம் அளவுப்படி இருபத்தைந்து என குறிப்பிட்டுள்ளார்கள். ஆக 300 குறுணி நெல் 25 கலத்திற்குச் சமமானது. ஆக 12 குறுணி என்பது ஒரு கலம் என்று வருகிறதல்லவா. என்ன ஒரே கணக்குப்பாடமாக இருக்கிறதென்று பார்க்கிறீர்களா? கல்வெட்டிலிருந்து நமக்குக் கிடைக்காத செய்தி இல்லை எனும்பொழுது, கணக்கு மட்டும் விதிவிலக்கா என்ன.

இக்கல்வெட்டில் மேலே குறிப்பிட்டுள்ள ஊர் சபையினர் கொடுக்கும் நெல்லை எவ்வெவ்வகையில் எதற்காகப் பயன்படுத்த வேண்டுமென விரிவாகக் கொடுக்கப்படவில்லை. ஆனால் இக்கல்வெட்டில் மேலே தொடரும் வரிகள் (செய்தி 13) வடகரை ராஜேந்திரசிங்கவளநாட்டு பொய்கைநாட்டுக் கண்டராதித்த சதுர்வேதிமங்கலத்து ஊர் சபையார் தாம் கொண்ட ஐநூற்று இருபது காசுக்கு, நூற்று முப்பது கலம் நெல் வட்டியாகக் கொடுக்கவேண்டுமெனவும், அந்த நெல் பொன்மாளிகைதுஞ்சின தேவர் செப்புத்திருமேனிக்கு திருவமுது செய்வதற்கு எவ்வெவ்வாறு பயன்பட வேண்டும், என்னென்ன அமுதுகள் படைக்கப்பட வேண்டும் எனவும் மிகவும் விரிவாகக் கூறுகிறது. இச்செய்தியை இராஜராஜீசுவரம் கல்வெட்டுக் கட்டுரையில் படித்தது நினைவிருக்கிறதல்லவா?.

இக்கல்வெட்டுகள் மறைமுகமாக நமக்கு எடுத்துச்சொல்லும் செய்திகள் பல இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று - அப்பூதியடிகள் தம் ஊரில் தாம் கட்டிய மடம், ஏற்படுத்திய தண்ணீர் பந்தல், தனது இல்லம் என எல்லாவற்றுக்கும் திருநாவுக்கரசர் பெயரைவைத்து மகிழவில்லையா. அது போல நகைகளின் எடையை அறிய உதவும் எடைகல், நெல்லை அளக்க உபயோகிக்கும் மரக்கால், பொன்னின் நிலையான நிறை என்று எதனைப் பற்றிக் குறிப்பிட்டாலும், ஆடவல்லான், தக்ஷிணமேருவிடங்கர், தண்டாவாணி என்று இறைவனின் திருப்பெயரைக் கொண்டு குறிப்பிடுவதைப் பார்க்கும் பொழுது, அவர்களுக்கிருந்த தெய்வபக்தி விளங்குகிறதல்லவா! this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.