http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 97
இதழ் 97 [ ஜூலை 2013 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
தேடலில் தெறித்தவை
தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் கல்வெட்டு வளம் நிரம்பிய பெருங்கோயில் திருவரங்கம். சோழர், தெலுங்கு சோழர், பாண்டியர், ஒய்சளர், காகதீயர், கஜபதியர், விஜயநகரத்தார், நாயக்கர் என இக்கோயிலை ஊட்டி வளர்த்த அரச மரபினர் பலராவர். சோழர்களின் கல்வெட்டுக்கள் மட்டுமே 191 ஆகப் பதிவாகியுள்ள இக்கோயிலில் முதற் குலோத்துங்கர் காலக் கல்வெட்டுக்கள் 83 படியெடுக்கப்பட்டுள்ளன. திருவரங்கத்திலுள்ள 647 கல்வெட்டுக்களில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் வேறெந்த மன்னரின் ஆட்சிக்காலத்திலும் இக்கோயிலில் நிகழாமை குறிப்பிடத்தக்கது. திருவரங்கத்திற்கும் குலோத்துங்கரின் ஆட்சிக் காலத்திற்கும் இடையிலான நெருக்கம் முழுமையான ஆய்வுக்குரியது. இந்த 83 கல்வெட்டுக்களையும் வேறொர் ஆய்வுப்பணிக்காகப் படிக்க நேர்ந்தபோது, தமிழ்நாட்டு வரலாற்றில் வேறெந்த காலத்தும் நிகழாத செயல்பாடொன்றைக் குலோத்துங்கர் காலக் கல்வெட்டுக்கள் உள்ளடக்கியிருப்பதை அறிய நேர்ந்தது. சோழப் பேர ரசர்கள் பெரும் படையினர். தென்னிந்திய அளவிலும் வடபுலத்தும் கடல் கடந்தும் படை நடத்திய பெருவீர ர்கள். அவர்தம் காலப் படைத்தலைவர்கள் பலராய் இருந்திருப்பர். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் கல்வெட்டுக்களில் கிடைக்கின்றன. இந்நிலைக்கு முற்றிலும் மாறுபட்டுத் திருவரங்கத்தின் குலோத்துங்கர் காலக் கல்வெட்டுக்கள் அப்பேரரசரின் படைத்தலைவர்கள் நால்வரைக் கொடையாளர்களாகக் காட்டுகின்றன. சேநாபதிகள் இளங்கோவேளார், சேநாபதிகள் மதுராந்தகனான இராஜேந்திர சோழக் கிடாரத்தரையர், சேநாபதிகள் கங்கை கொண்ட சோழ முனையதரையர் ஆகிய மூவரும் முதற் குலோத்துங்கரின் ஆட்சிக்காலத்தில் திருவரங்கத்துப் பெருமானுக்கு ந ந்தவனம் அமைப்பதற்காக கோயிலாரிடம் நிலம் விலைக்குப் பெற்றனர். சேநாபதிகள் வீரசோழ முனையதரையரோ, திருவரங்கத்து இறைவனின் திருப்பள்ளி எழுச்சி நிகழும்போது அரங்கன் செவிமலரத் திருவாய்மொழி விண்ணப்பம் செய்வதற்காகக் கொடையளித்துள்ளார். ஒரு கல்வெட்டு, படையோடு தொடர்புடைய நிலைகளாய்க் கருதப்படும் பெருந்தரம், சிறுதரம் சார்ந்த மலையாளரைக் கொடையாளிகளாகக் காட்டுகிறது. இக்கோயிலில் குலோத்துங்கர் காலத்தே பணியாற்றிய ஸ்ரீகாரிய அலுவலர்களும் பலராவர். கோயில் நிர்வாகத்தின் உயர் அலுவலர்களாக விளங்கிய அவர்தம் ஆணைகள் கல்வெட்டுகளாய்க் கண்சிமிட்டுகின்றன. அவர்தம் ஊர், பெயர் ஆய்வும் பயனளிக்கும். கால மாற்றத்தில் நேரும் கல்வெட்டு நடை மாற்றமும் திருவரங்கத்தில் தேடுவார்க்காகக் காத்திருக்கிறது.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |