http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 98

இதழ் 98
[ ஆகஸ்ட் 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

ஒன்பதாம் ஆண்டு நிறைவு
காவிரிக் கரையிலோர் காவியக் கற்றளி - 4
Thirumeyyam - 4
சேக்கிழாரும் அவர் காலமும் - 6
தேடலில் தெறித்தவை - 5
புத்தகத் தெருக்களில் - நான், காவற்கோட்டம் மற்றும் சடச்சி மக்கள்
இதழ் எண். 98 > கலைக்கோவன் பக்கம்
காவிரிக் கரையிலோர் காவியக் கற்றளி - 4
இரா.கலைக்கோவன், மு.நளினி
கோயிலுக்குள்ளே..

கோபுர வாயிலுள் நுழைந்த தும் திறந்த வெளியில் கோயிலின் வடபுறத்திலுள்ள பாழடைந்த இரண்டு கட்டிடங்கள் கருத்தைக் கவர்கின்றன. அருகே சென்று பார்த்தால் ஒன்று அண்மைக்காலக் கட்டிடம். மற்றொன்று மண்டபம். இரண்டுமே ஒரு காலத்தில் பள்ளிக்கூட வகுப்புக்களாய் பயன்பட்டிருக்கின்றன(9). இந்த இரண்டு கட்டிடங்களுமே அழிவின் அரவணைப்பில் உள்ளன. என்ன காரணத்தினாலோ குடமுழுக்கு நிகழ்த்தியவர்கள்கூட இதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றனர். இந்த மண்டபத்தின் சுவர்களில் சிதறிய கல்வெட்டுத் துணுக்குகள் காணப்படுகின்றன. இதுவரை படியெடுக்கப்படாத இக்கல்வெட்டுத் துணுக்குகளை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் படியெடுத்துப் படித்த தில் இவை இரண்டு கல்வெட்டுக்குரிய துணுக்குகள் என்பதும் கோயிலுக்களிக்கப்பட்ட நிலக்கொடைகளைக் குறிப்பன என்பதும் தெளிவாயின(10).

கோயிலின் வெளித்திருச்சுற்று தென்ன மரங்களும் முட்செடிகளுமாய் அமைந்துள்ளது. செங்கல்லால் ஆன வெளிமதிலுக்கும் கருங்கல்லால் ஆன உள்மதிலுக்கும் இடைப்பட்ட இப்பகுதியில் எவ்வளவோ செடிகொடிகளைப் பயிரிட்டு வளர்க்கலாம். கோயிலுக்கும் பயன்படும். ஊருக்கும் உணவாகும்.

இரண்டாம் கோபுர வாயில் எளிய அமைப்புக்களுடையது. இதன் இருபுறக் கருங்கல் நிலைகளிலும் கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றுள் இடப்புற நிலை சேதன்குடியைச் சேர்ந்த ஆழ்வார்கள் ராமன் இராஜராஜ விழுப்பரையன் என்பரவரால் தரப்பட்டுள்ளது(11). வலப்புற நிலையிலுள்ள கல்வெட்டு சிதைந்துள்ளதால் பெயரை அறியக்கூடவில்லை (12).

கோபுர உள் அமைப்பிலுள்ள திணைணை முகப்பிலும் வட தென் சுவர்களிலுமாய் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று திரிபுவனச் சக்ரவர்த்தி இராஜராஜ தேவனின் பதினான்காம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இருபத் வேலி நிலம் இறையிலியாக்கப்பட்டு இராசகம்பீர நல்லூரென்ற பெயருடன் புதிய ஊராக உருவாக்கப்பட்டு திருச்செந்துறை இறைவனின் படையல்களுக்காய்த் தரப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு தருகிறது (13). மற்றொரு கல்வெட்டு கோனேரி தேவ மகாராயர் இக்கோயில் ஆதிசண்டேசுவர தேவகன்மிகளுக்கு அளித்த சர்வமான்ய பட்டயம் பற்றிப் பேசுகிறது(14).


திருச்செந்துறை விமானம்


முன் மண்டபம் - அம்மன் திருமுன்

இரண்டாம் கோபுர வாயில் வழியே உள் நுழைந்த தும் முன்மண்டபம் பார்வையில் படமாகின்றது. தூண்கள் நிறைந்த இம்மண்டபத்தின் வடபுறத்தில் தெற்குப் பார்த்த அம்மன் திருமுன் அமைந்துள்ளது. உள்மண்டபமும் கருவறையுமாய்க் காணப்படும் இத்திருமுன்னில் இறைவி மானேந்தியவல்லி என்ற திருப்பெயரில் நான்கு திருக்கரங்களுடன் அருளாச்சி செய்கிறார். வட முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இட முன் கை அருட்குறிப்பிலிருக்க பின் கைகளில் மானும் அங்குசமும் ஏந்தியுள்ளார். இந்த அங்குசத்தை கோயிலார் மழு என்று தவறாகச் சொல்கிறார்கள்(15). இத்திருமுன்னின் கருவறைக் கோட்டங்களில் சிறிய அளவிலான இதே இறைவியின் வடிவங்கள் கையில் அங்குசத்திற்கு பதிலாக மழுவுடன் காட்சி தருகின்றன. சண்டேசுவர ரின் சிறிய திருமுன் வெற்றிடமாய் உள்ளது. முன்மண்டபத்தின் கிழக்குச் சுவரையொட்டி பைரவரும் சந்திரனும் நிற்க சற்றுத்தள்ளி ஒன்பான் கோள்களின் காட்சி. பைரவர் சற்றுப் பழமையான சிற்பம். பைரவருக்குப் பின்னாலுள்ள சுவரில் காணப்படும் கல்வெட்டு இக்கோயிலில் உலாவரும் திருமேனியாக இருந்த இறைவியின் பெயரைத் தருகிறது (16).

மகாமண்டபத்து வாயிலின் வலப்புறம் கலவிக் கணபதியும் இடப்புறம் பழனியாண்டியும் இடம் பெற்றுள்ளனர். பிள்ளையாரின் துதிக்கை விக்னேசுவரியின் பிறப்புறுப்பை வருட, அம்மை இறைவனின் ஆண்குறியைக் கையில் பற்றியவாறுள்ளார். உறவுக் கோலத்திள் உள்ள இதுபோன்ற பிள்ளையார் வடிவங்கள் திருநல்லூர், குடந்தைக் கீழ்க்கோட்டம், தில்லையம்பதி போன்ற கோயில்களில் காணப்படுகின்றன. மகாமண்டபத்தின் வலப்புறம் இறைத்திருமேனிகளும் உலாவரும் ஊர்திகளும் உள்ளன. இடப்புறம் ஆடவல்லான் உமையுடன் தனியானதொரு மேடையில் கம்பிக்கதவுகளுக்குப் பின்னால் சிறைப்பட்ட நிலையில் சிரிப்பொன்றைச் சிந்தியிவராகக் காட்சி தருகிறார். நம் மீதே நமக்கு நம்பிக்கையில்லாமல் போனதால்தான் இங்கே இறைவனுக்குச் சிறை.

மகாமண்டபம் - உள்மண்டபம் - கருவறை

மகாமண்டபத்துக்கும் உள்மண்டபத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நந்தியும் பலித்தளமும் உள்ளன. உள்மண்டப வாயிலை வாயில் காப்போர் காவல் செய்கின்றனர். இரண்டுமே சோழர் காலத்து நிறை வடிவங்கள். இருவருமே பூவேலைப்பாடுடைய முப்புரி நூலும் வீரக் கழலும் கதையுமாய்க் காட்சியளித்தாலும் முக அமைப்பிலும் நிற்கும் நிலையிலும் வேறுபாடுகள் உள்ளன. வலப்புறம் நிற்பவர் கோரைப்பற்களுடன் சற்று கடுமை நிறைந்தவராகக் காட்சியளிக்க இடப்புறம் நிற்பவர் புன்னகைத்த அழகு முகத்துடன் நம் அச்சத்தை நீக்கி அருகே அழைக்கிறார். உள்மண்டபத் தூண்கள் பூவேலைப்பாடோடும் சிற்றுருவச் சிற்பக் காட்சிகளும் கொண்டமைந்துள்ளன. போற்றி வியக்கும் மெய்ப்பாட்டில் இத்தூண்களில் பல ஆடவர் மகளிர் வடிவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் உள்மண்டபத் தூண்களிலும் இதேபோல் சிற்றுருவச் சிற்பங்கள் கண்களைக் கொள்ளை கொள்வனபோல் செதுக்கப்பட்டிருப்பதை இங்கு நினைவு கூரலாம் (17) ஆடற்கோலங்களில் அழகைத் தெளிக்கும் அந்தச் சிற்பங்களுடன் ஒப்பிடும்போது செந்துறைச் சிற்பங்கள் சற்று மாற்றுக் குறைந்தவைதான். கருவறையில் இறைவன் திருச்செந்துறைப் பெருமானடிகள் என்ற அழகுத் தமிழ்ப் பெயர் இருக்க சந்திரசேகரர் என்ற பெயரில் அழைக்கப்படுவதற்காக வருந்தியவர்போல் லிங்க வடிவில் இனம்புரியாத சோகத்துடன் காட்சியளிக்கிறார்.

விசுவநாதர் திருமுன்

கோயிலின் உள்திருச்சுற்று, முன் மண்டப வழியாய்த் தொடங்குகிறது. தென் திருச்சுற்றின் மேற்குக் கோடியில் இரண்டு சுற்றாலைத் திருமுன்கள் உள்ளன. ஒன்று பிள்ளையாருக்கு மற்றொன்று விசுவநாதருக்கு. விசுவநாதர் கோயிலின் தாங்குதளம் பெரிதும் நிலத்தில் புதைந்துள்ளது. இங்கிருந்து நான்கு கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டன (18). இவற்றைப் படிப்பதற்காகத் தாங்குதளத்தைச் சுற்றிலும் மண்ணை அகழ்ந்தெடுக்கவேண்டியதாயிற்று. திருச்செந்துறையில் தஞ்சை மாணிக்க வாணியர் கருநாடகப் புழலையன் என்பார் தம் பெயரால் புழலைய விண்ணகரமென்ற கற்றளியை எழுப்பியது குறித்த சுவையான செய்திகள் இக்கல்வெட்டுகளில் கிடைக்கின்றன. இன்று இக்கோயில் இப்பகுதியில் காணுமாறு இல்லை. ஊரின் மேற்குப் பகுதியில் புதிய பெருமாள் கோயிலொன்று அண்மைக்கால கட்டிட அமைப்புடன் காட்சி தருகிறது.(19) இதுவே பழைய கோயில் அழிந்த இடமாக இருக்கலாம்.

விசுவநாதர் திருமுன்னுள் சிறிய வடிவிலான லிங்கமொன்றும் அருகிலேயே அம்மன் வடிவமொன்றும் காணப்படுகின்றன. உள்மண்டபத்தில் லட்சுமி தேவியும் அவருக்குத் துணையாக நாகரும் உள்ளனர். இச்சிறு கோயிலின் புறச்சுவர்களில் பூசியிருந்த அடர்த்தியான சுண்ணாம்புப் பூச்சுக்குள்ளிருந்து டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் சில அற்புதமான ஆடற்கரணக் கோலங்களை கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளது.(20)

அடிக்குறிப்புக்கள்.

(9) டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் கல்வெட்டாய்வாளர் திரு. ஆறுமுகம் சிறு வயதில் இப்பள்ளியில் பயின்றவர்.
(10) 17-6-89 அன்று நடந்த கள ஆய்வின்போது இக்கல்வெட்டுத் துணுக்குகள் படித்துப் படியெடுக்கப்பட்டன.
(11) ARE 147 of 1937-38
(12) ARE 349 of 1937-38
(13) ARE 146 of 1937-38
(14) ARE 145 of 1937-38
(15) கள ஆய்வின்போது சிவாச்சாரியார் கூறியது. விளக்கிக் காட்டியபின் அது அங்குசம்தான் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
(16) ARE 144 of 1937-38
(17) டாக்டர் இரா. கலைக்கோவன், புகழ் பொலிந்த புள்ளமங்கை, கட்டுரை கலைமகள் தீபாவளி மலர், 1989.
(18) SII Vol. VIII, Ins.No. 633-636.
(19) 17-4-90 அன்று இக்கோயிலை நாங்கள் பார்வையிட்டோம்.
(20) தினமணி நாளிதழ் 8-7-89.


this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.