http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 104

இதழ் 104
[ பிப்ரவரி 2014]


இந்த இதழில்..
In this Issue..

தமிழ் அமுதம்
தேடலில் தெறித்தவை - 10
Chola Ramayana 11
பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - கண்ணனூர்
Gokarneswara - 2
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 2
அம்பர் பெருந்திருக்கோயில்
அறுவர்க்கு இளையநங்கை - 2
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 1
வட்டணை ஆடல் கண்ட திருவாய்மூர் திருக்கோயில்
Book Street Bonanza-2
இதழ் எண். 104 > கலையும் ஆய்வும்
வட்டணை ஆடல் கண்ட திருவாய்மூர் திருக்கோயில்
கி.ஸ்ரீதரன்
காவிரி ஆறு பாய்ந்து வளப்படுத்தும் சோழநாட்டில் சிறப்பான பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. பாடல்பெற்ற தென்கரைத் தலங்களில் 124வது தலமாக விளங்குவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாய்மூர் திருத்தலம் ஆகும்.

இத்தலம் வழிபாட்டுச் சிறப்புடனும் வரலாற்றுச் சிறப்புடனும் விளங்குகிறது.

சப்தவிடங்கத்தலம்:

சிவபெருமான் விடங்கர் வடிவமாக (தியாகராஜராக) ஏழு திருக்கோயில்களில் சிறப்பாக வழிபடப்பெறுகின்றார். இவற்றை 'சப்தவிடங்கத்தலங்கள்' எனக்கூறுவர். இத்தலங்களில் இறைவன் ஆடிய நடனங்களும் சிறப்பானவை.


திருவாய்மூர் - நீலவிடங்கர் - கமலநடனம்
திருநள்ளாறு - நாகவிடங்கர் - உன்மத்தநடனம்
திருக்கோளிலி - அவனிவிடங்கர் - பிருங்கநடனம்
திருவாரூர் - வீதிவிடங்கர் - அஜபாநடனம்
நாகப்பட்டினம் - சுந்தரவிடங்கர் - தரங்கநடனம்
திருக்காரவாசல் - ஆதிவிடங்கர் - குக்குடநடனம்
திருமறைக்காடு - புவனிவிடங்கர் - அம்சபாதநடனம்


திருவாய்மூர் திருத்தலத்தில் இறைவன் நீலவிடங்கராக எழுந்தருளி, கமலநடனம் புரிந்து அருள் செய்கிறார்.

அமைவிடம்:

நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி பேருந்து சாலையில் எட்டுக்குடிக்குப் பிரியும் சாலையில் சென்றால் இத்தலத்தினை அடையலாம். இங்கு கோயில் கொண்டு விளங்கும் இறைவன் 'வாய்மூர் நாதர்' என்றும், அம்மன் 'பாலினும் நன்மொழியாள்' என்ற பெயருடனும் போற்றி அழைக்கப்படுகின்றனர்.


திருவாய்மூர் திருக்கோயில் கோபுரம்


திருக்கோயில் அமைப்பு:

திருக்கோயில் கிழக்கு நோக்கி மூன்று நிலைக் கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. கோயில் முன்பாகத் திருக்குளமும் அதன் கரையில் திருக்குள வினாயகர் சன்னிதியும் அமைந்துள்ளது. கோபுரத்திற்கு முன்னர் நந்தியும், கொடிமரமும், வினாயகப் பெருமானுடன் காட்சிதரும் பலிபீடத்தையும் வணங்கி உள்ளே செல்லலாம். திருச்சுற்றில் வினாயகர், வள்ளி, தெய்வானை உடனாகிய சுப்ரமணியசுவாமி சன்னிதி, மகாலட்சுமி சன்னிதி, அஷ்ட(எட்டு) பைரவர் சன்னிதி ஆகியவை அமைந்துள்ளன.


நடமிடும் நிலையில் விநாயகர். இரு புறத்தும் அடியவர்கள்



கோயிலில் அமைந்துள்ள அட்ட பைரவர் (எட்டு பைரவர்) சன்னிதி


இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இத்தலத்தில் இறைவனை வான்மீகி சித்தர் வழிபட்ட சிறப்பும் கூறப்படுகிறது. மூலவர் திருவாய்மூர் சன்னிதியின் தென்புறம் தியாகராஜர் சன்னிதியும், வடபுறம் திருமறைக்காடர் சன்னிதியும், அம்பாள் சன்னிதியும் அமைந்துள்ளன.(1)


திருக்கோயிலில் அமைந்துள்ள பல்வேறு திருமுன்கள்



தியாகராஜர் திருமுன் தோற்றம்



இடபத்தின் மீது அமர்ந்த நிலையில் தட்சிணாமூர்த்தி


திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருவாய்மூர் இறைவன் ஆடலைப் போற்றியது:

திருநாவுக்கரசர் பெருமானும், திருஞானசம்பந்தப் பெருமானும் திருவாய்மூர் இறைவனையும் இறைவியையும் போற்றிப்பாடி அருள் பெற்ற சிறப்புடன் இத்தலம் விளங்குகிறது. திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) திருநாவுக்கரசர் பதினொரு திருப்பாடல்கள் கொண்டு திருப்பதிகம் அருளிச்செய்யத் திருக்கதவு திறந்தது. அடுத்து திருஞானசம்பந்தர் முதல் திருப்பாட்டு அருளிச் செய்த உடனே திருக்கதவு மூடிக்கொண்டது. இதனால் வருந்தியவராய் திருநாவுக்கரசு சுவாமிகள் நித்திரை கொள்ளும்போது இறைவன் அவரிடம், திருவாய்மூரில் இருப்போம்! தொடர்ந்து வா என அருளினார்.

திருவாய்மூரில் இறைவனைக் கண்டு "திருவாய்மூர் விளக்கினைத் தூண்டிக் கொள்வன் நான் என்றலும் தோன்றுமே" என இறைவன் கருணையைப் போற்றினார்.

பின்னர் திருஞானசம்பந்தரும் அங்கே வர, இருவரும் காண இறைவன் நடனமாடுகிறார். இதனைக் கண்ட நாவுக்கரசர் மகிழ்ந்து போற்றுகின்றார் (6-ம் திருமுறை).

ஈசன் அம்பிகையுடன் இருந்து ஆடிய நடனக்காட்சியை ஞானசம்பந்தர் பெருமானும் தமது பாடலில் போற்றுவதைக் காணலாம்.


"கட்டிணை புதுமலர்க் கமழ் கொன்றைக்
கண்ணியர் வீணையர் தாமும் அஃதே
எட்டுணை சாந்தமொடு உமை துணையா
இறைவனார் உறைவதோர் இடம் வினவில்
பட்டிணை யகல் அல்குல் விரிகுழலார்
பாவையர் பலியெதிர் கொணர்ந்து பெய்ய
வட்டணை ஆடலொடு இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே. (2-ம் திருமுறை)


வட்டணை:

வட்டணை என்றால் என்ன?

வட்டணை என்றால் தாளக் கருவி, தாளம் போடுகை, இடசாரி - வலசாரியாக சுற்றுகை, அபிநயம் என்ற பொருள் அகராதிகளில் கூறப்படுகிறது.(2)

வட்டணை என்றால் நாட்டியத்தில் ஒரு வகையான அபிநயம் என்ற கருத்தை மணிமேகலை கூறுகிறது.(3)


அகல்மனை யரங்கத் தாசிரியர் தம்மொடு
வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி
ஆடல் புணர்க்கும் அரங்கியன் மகளிரிற்
கூடிய குயிலுவக் கருவி கண்டுயின்று


சிலப்பதிகாரத்தில் கானல்வரிக் காதையில் எட்டுவகை ஆடல்கள் குறிப்பிடப்படுகின்றன. இதில் ஒன்று 'பரிவட்டணை' என்பதாகும்.

பெண் குழந்தைகளுக்கு வட்டணை, தூசி, மண்டலம், பண் முதலியன கற்றுத் தந்து பின்னர் கீதம், அலங்காரம் முதலியனவும் புகட்டி 12-ம் வயதில் தகுதியைச் சோதனை செய்து அரங்கேற்றம் செய்யவேண்டும் என பரத சேனாபதியார் பாடல் குறிப்பிடுகிறது.(4)


வட்டணையும் தூசியும் பண்ணமைய வெண்மையாண்
டிட்டுடனீ ராறாண் டெய்தபின் - வட்டணையும்
கீதக்குறிப்பும் அலங்கார முங்கிளரச்
சோதித்து அரங்கேறச் சூழ்.


எனவே 'வட்டணை' என்பது நாட்டியத்தின் ஓர் அங்கம் என்பது தெளிவாக விளங்குகிறது.

வட்டணை - திருமுறைகளில் - கல்வெட்டுகளில்:

திருமுறை பாடல்களிலும் வட்டணை என்பது நடனத்தின் ஓர் அங்கமாகக் குறிக்கப்படுவதைக் காணலாம்.

சென்னைக்கு அருகில் உள்ள 'ரத்தின சபை' எனப்படும் திருவாலங்காடு திருக்கோயிலில் இறைவனின் ஊர்த்துவ தாண்டவக் கோலத்தினைக் கண்டு வணங்கலாம். இவரை 'அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார்' எனக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆடவல்லானின் அழகிய ஊர்த்துவ தாண்டவத்தை காரைக்கால் அம்மையார் தமது மூத்த திருப்பதிகத்தில்,


கழலொலி கைச் சிலம்பொலிப்பக்
காலுயர் வட்டணை இட்டு நட்டம்
அழலுமிழந் தோரிகதிக்க ஆடும்
அப்பனிடந் திருஆலங்காடே.


(திருவாலங்காடு மூத்த திருப்பதிகம், 11-ம் திருமுறை, பாடல்-7)

எனப் போற்றுகின்றார்.

ஞானசம்பந்தப் பெருமான் சீர்காழியில் கோயில் கொண்டிருக்கும் இறைவனை,


கொட்ட முழவிட்ட வடி வட்டணைகள் கட்ட நடமாடி குலவும்
பட்டநுதல் கட்டு மலர்மட்டுமலி பாவையொடு மேவுபதிதான்
(3-ம் திருமுறை, திருச்சண்பை நகர்)


என்று போற்றுகின்றார். இங்கும் வட்டணை என்ற சொல் இறைவன் நடனத்துடன் சேர்ந்து வருவதைக் காண்கிறோம்.(5)

நாகை மாவட்டத்தில் பூம்புகார் அருகில் மேலப்பெரும்பள்ளம் என்ற ஊர் உள்ளது. இது பாடல்பெற்ற தலச்சிறப்புடன் திருவலம்புரம் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் சிவபெருமான் பிட்சாடனர் கோலத்தில் உள்ள செப்புத்திருமேனி வழிபாட்டில் உள்ளது. இறைவன் சடைமுடி தரித்தவராய்க் கைகளில் வீணை ஏந்திய பாவத்துடன் இளநகை இதழ்களில் தோன்றப் பெருமிதமான தோற்றத்துடன் ஒருகாலைச் சற்று மடித்து நடக்க முயல்வது போல அமைக்கப்பட்டுள்ளது. இறைவன் நடக்கும் பாவமே ஒரு நடனம் போன்று விளங்குகிறது. இக்கோயிலில் காணப்படும் சோழமன்னன் இரண்டாம் ராஜாதிராஜன் (கி.பி. 1166-1182) காலக் கல்வெட்டுல் 'வட்டணை பட நடந்த நாயகர்' என்று இத்திருமேனி பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் மேலும் ஒரு சிறப்பு உள்ளது. திருநாவுக்கரசர் பெருமான் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். தம் பாடல்களில்


தெறித்த தொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்
சிறுமுறுவல் வந்தெனது சிந்தை வெளவ'

'வேறோர் பதிபுகப் போவார் போல
வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி
வலம்புரமே புக்கங்கே மன்னினாரே
(6-ம் திருமுறை)


என்று போற்றுகின்றார். திருப்பதிகத்தில் வரும் வட்டணை என்ற சொல்லே பிட்சாடனர் திருமேனிக்கும் பெயராக அமைந்துள்ளது சிறப்பானதாகும்.(6)

சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் திருநாவுக்கரசர் வரலாற்றைக் கூறும்போது ஒரு காட்சி வருகிறது. திருப்புகலூரில் அப்பர் பெருமான் உழவாரப்பணி செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் மனதை மாற்ற வானிலிருந்து வந்த அரம்பையர்கள் நாட்டியம் ஆடுகின்றனர். இந்த அரம்பையர் நாட்டியம் பற்றிப் பெரியபுராணத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


கற்பகபூந் தளிரடிபோங் காமருசாரிகை செய்ய
உற்பலமென் முகிழ்விரல் வட்டணையொடுங்க கைபெயரப்
பொற்புறும் அக்கையின் வழிப் பொருயற்கண் புடைபெயர
அற்புதப் பொற்கொடி நுடங்கி ஆடுவபோல் ஆடுவார்
(பெரியபுராணம் பாடல் எண் 420)


இங்கும் அரம்பையர் நடனத்தின் ஒரு அங்கமாகவே வட்டணை விளங்குகிறது.

இவ்வாறு இலக்கியங்களில் பலபடப் பேசப்படும் வட்டணை என்கிற சொல் திருவாய்மூர் திருக்கோயில் கல்வெட்டுக்களில் முக்கிய இடம்பெற்று விளங்குகிறது. இனி அதனைக் காண்போம்.

திருவாய்மூர் கோயில் கல்வெட்டுக்கள்

இக்கோயிலில் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கல்வெட்டுக்கள் மூன்றாம் குலோத்துங்க சோழன் (1178-1218) மற்றும் மூன்றாம் இராஜராஜசோழன் (1216-1256) காலத்தைச் சார்ந்தவையாகும். (7)

கோட்டூர் என்ற ஊரைச் சேர்ந்த 'செம்பொற்ஜோதி வட்டணை ஆடல் உடையான்' என்பார் இக்கோயிலில் பலிபீடத்தில் நடனமாடும் கோலத்தில் (வட்டணை அமைதியில் எனக் கல்வெட்டு குறிப்பிடுவது சிறப்பானது) இறைத்திருமேனியை எழுந்தருளுவித்து அதன் வழிபாட்டிற்காகத் தானம் அளித்த செய்தி மூன்று கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் மற்றும் கோயிலையும் இக்கல்வெட்டு 'வட்டணை ஆடலுடையார் கோயில் திருவாய்மூருடையார்' என்றே பெயரிட்டு அழைக்கிறது. அதாவது இவ்வூர் இறைவன் பெயரையே கொடையளித்தவர் பெயராகக் கொண்டுள்ளார் என்பது சிறப்புக்குரிய செய்தி.


தியாகராஜர் திருமுன் - மகாமண்டப வடக்குச் சுவர் - மூன்றாம் குலோத்துங்கர் கல்வெட்டு (கீழ்ப்பகுதியில் வேதிகைக்கு மேல் உள்ளது)



தியாகராஜர் திருமுன் - விமான வடக்குச் சுவர் - வட்டணை ஆடலுடையார் பற்றிக் குறிப்பிடும் மூன்றாம் இராஜராஜர் கல்வெட்டு - 29+1ன் எதிராமாண்டு ஆவணி - திருவாய்மூருடையார் கோயில் வட்டணை ஆடலுடையார்க்கு ( வரிகள் 4-5 )


சிற்றாமூர் என்ற ஊரைச் சேர்ந்த ஆதித்த தேவன் திருவையாறு உடையான், அரையன் கம்பிக்காதன் பவழக்குன்றன், வீர இராஜேந்திரப் பல்லவரையன் ஆகியோர் இக்கோயிலில் வழிபாட்டில் இருந்த 'வட்டணை ஆடல் உடையார்க்கு' சித்திரைத் திருநாளிலும் புரட்டாசித் திருநாளின்போதும் திருநீராட்டு, குங்குமம், பன்னீர், செங்கழுநீர்த் திருப்பள்ளிதாமம் (மலர் மாலை), அமுதுபடி ஆகியவற்றுக்கான செலவுகளுக்காக தானமளித்த செய்தி கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

மேலும் 'வட்டணை ஆடல் உடையார்' மார்கழித் திருவாதிரை அன்று சிறப்பான வழிபாட்டிற்கும், வீதியுலா வருவதற்கும் தானம் அளித்த செய்தி கூறப்படுகிறது.

வட்டணை ஆடல் உடையார் திருமேனி ஆடவல்லானாகிய நடராஜப் பெருமானின் திருமேனியைத்தான் குறிப்பிட்டதா அல்லது வேறு ஏதாவது நடனக்கோலத்தில் இருக்கும் சிவபெருமான் திருமேனியைக் குறிப்பிட்டதா என்று உறுதியாக அறியமுடியவில்லை.

மூன்றாம் இராஜராஜ சோழனது கல்வெட்டுக்களில்தான் 'வட்டணை' என்ற சொல் அதிக அளவில் இடம் பெறுவது கவனிக்கத்தக்கது.(8)

திருவாய்மூருடைய நாயனார் திருவிழா எழுந்தருளும்பொழுது வீதியின் அகலம் குறைவாக உள்ளதைக்கண்டு அதன் அகலத்தைப் பெரிதாக்க இடப்பட்ட அரசனின் ஆணை மற்றும் அளிக்கப்பட்ட நிலங்கள் பற்றிய குறிப்பு ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது.

திருக்கோயிலின் தேவைக்காக நாற்பத்தெண்ணாயிரவன் திருநந்தவனம் என்ற பெயருடைய நந்தவனம் அமைக்க நிலமும் குளமும் அளிக்கப்பட்டது. இறைவனுக்கு செங்கழுநீர் மலர்மாலை அளிக்க நிலம் அளிக்கப்பட்டதாக மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு கூறுகிறது.

திருமுறைகள் பாட திருக்கைக்கொட்டி மண்டபம் இருந்ததையும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இக்கோயிலில் திருஞானசம்மந்தப் பெருமானுக்கு வழிபாடு மேற்கொள்ள தானமாக நிலம் அளிக்கப்பட்டது. இக்கல்வெட்டில் அவரை 'திருஞானம் பெற்ற பிள்ளை' என்று குறிப்பிடுவது சிறப்பானது. நிலம் தானமாகப் பெற்றுக்கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பவர் கோயில் மாகேசுவரக் கண்காணி. இவர் பெயரும் 'வட்டணை ஆடலுடையார் எழுத்து' என்று கல்வெட்டு குறிப்பிட்டுள்ளது.

இப்பகுதியில் வழக்கில் இருந்த காசின் பெயர் திருவாய்மூர் வராகன் என்றழைக்கப்பட்டது.

தனது தாய் தந்தையர் நன்மைக்காக இறைவன் - இறைவி சன்னிதியில் விளக்கெரிக்க சீர்த்தங்குடையான் வேளான் பட்டன் என்பவர் 50 காசுகள் தானமளித்த செய்தி ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது.

பாசை என்ற ஊரைச் சேர்ந்த வணிகன் திருநாகீசுவரமுடையான் மற்றும் அவன் மனைவி சிவன் பெருந்தேவியும் 600 காசுகள் கோயிலுக்கு அளிக்கின்றனர். அதன் வட்டியைக் கொண்டு கோயிலில் நெய்த்தீபம் ஏற்ற பித்தளைக் குத்துவிளக்கு அளிக்கப்பெற்ற செய்தி ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. குத்துவிளக்கு பற்றிக் குறிப்பிடும்பொழுது 'இரும்பு உள்ளீட்டுடன் கூடிய பித்தளைக் குத்துவிளக்கு' என்று அது செய்யப்பட்ட முறை பற்றி கல்வெட்டு விளக்குவது சிறப்புக்குரியது.

இக்கோயிலில் பணிபுரிந்த ஆடல் மகளிர் திருவாய்மூர் மாணிக்கம் மற்றும் பூ நங்கை என்பார் கோயில் வழிபாட்டிற்காக நிலம் தானமளித்துள்ளனர்.

கோயில் நிலங்கள் யார் யார் பொறுப்பில் இருந்தன என்பதனை விரிவாக ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

இக்கோயில் கல்வெட்டுக்களுள் ஒன்றினைப் பொறித்த தச்சன் 'உலக நாயக ஆசாரியன்'' என்பதையும் அறியமுடிகிறது. (9)

இவ்வாறு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகத் திகழும் திருவாய்மூர் திருக்கோயிலை வாய்ப்புக் கிடைக்கும்போது வழிபட்டு இன்புறுவோம்.

அடிக்குறிப்புக்கள்

1) திருவாய்மூர் திருக்கோயில் வரலாறு - திருக்கோயில் வெளியீடு
2) Tamil Lexicon - PrePallavan Tamil Index - 1966 Page 729. சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு.
3) மணிமேகலை, சிலப்பதிகாரம் - உ.வே.சா. நூல் நிலையம் வெளியீடு, திருவான்மியூர்.
4) வரலாற்றில் பரதநாட்டியம் - இரா.நாகசாமி, 1986.
5) வட்டணை ஆடல் உடையார் - கட்டுரை, கி.ஸ்ரீதரன் - திருவாடுதுறை ஆதீனம், மெய்க்கண்டார் இதழ், மார்ச் 1989.
6) வட்டணை பட நடந்த நாயகர் - கட்டுரை, இரா.நாகசாமி - கல்வெட்டு இதழ் - 1 (1974) மற்றும் கவின்மிகு சோழர் கலைகள் - 2011 - பக்கம் 29-30, படங்கள் 153 - 158 வரை.
7) A.R.E: 1960-16-298 - 309, 1962-63:579-620.
8) நாகப்பட்டினம் மாவட்டக் கல்வெட்டுக்கள் - தமிழக அரசு தொல்லியல்துறை வெளியீடு - 2007
9) திருவாய்மூர் கோயில் பற்றிய செய்திகள் மற்றும் நிழற்படங்கள் உதவி - திரு.கோ.முத்துசாமி, பதிவு அலுவலர், திருச்சி.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.