http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 104

இதழ் 104
[ பிப்ரவரி 2014]


இந்த இதழில்..
In this Issue..

தமிழ் அமுதம்
தேடலில் தெறித்தவை - 10
Chola Ramayana 11
பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - கண்ணனூர்
Gokarneswara - 2
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 2
அம்பர் பெருந்திருக்கோயில்
அறுவர்க்கு இளையநங்கை - 2
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 1
வட்டணை ஆடல் கண்ட திருவாய்மூர் திருக்கோயில்
Book Street Bonanza-2
இதழ் எண். 104 > கலையும் ஆய்வும்
அறுவர்க்கு இளையநங்கை - 2
ச. கமலக்கண்ணன்
தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் 'பழையோள்' என்று தமிழகத்தின் மிகப் பழமையான பெண் தெய்வமான கொற்றவை குறிப்பிடப்பட்டிருந்தாலும், கொற்றவையின் உருவ அமைப்பைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் விவரிப்பது சிலப்பதிகாரமே. கொற்றவை வழிபாட்டுக்கெனத் தனியாக ஒரு காதையையே வடித்துள்ளார் இளங்கோவடிகள். மதுரைக் காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு மிக விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது. முதலாவது காதையான காடுகாண் காதையில் காட்டுக்குள் கோவலனும் கண்ணகியும் நுழைந்த பிறகு, அக்கானகத்தில் வசிக்கும் வேட்டுவர்கள் (எயினர்கள்), தமக்கு வெற்றியைத் தேடித்தரும் கொற்றவையை வழிபடும் நிகழ்வு நமக்குச் சாலினி என்பாள் மூலமாக வேட்டுவவரியில் உரைக்கப்படுகிறது.

கொற்றவையின் வடிவம்

சடை : சிறிய வெள்ளிய பாம்பின் வடிவிலான தங்க நாணைச் சுற்றி நீண்ட கூந்தலைக் குறுக்கிக் கட்டப்பட்டுள்ளது. (சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக் குறுநெறிக் கூந்த னெடுமுடி கட்டி)

பிறைநிலவு : காவல் மிகுந்த காட்டை அழிக்கும் வல்லமை உள்ள பன்றியின் கொம்பைப் பறித்துச் சடையில் சாத்தப்பட்டுள்ளது. (இளைசூழ் படப்பை யிழுக்கிய வேனத்து வளைவெண் கோடு பறித்து மற்றது முளைவெண் டிங்க ளென்னச் சாத்தி)

கழுத்தணி : வலிமை வாய்ந்த புலியின் வாயைப் பிளந்து உதிர்க்கப்பட்ட ஒழுங்கான வரிசையில் உள்ள பற்களால் கோக்கப்பட்ட வெள்ளிய நிரைத்தாலி பூட்டப்பட்டுள்ளது. (மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பற் றாலிநிரை பூட்டி)

இடையாடை : புலியின் தோலிலுள்ள வரியும் புள்ளியும் கலந்த ஆடை (வரியும் புள்ளியு மயங்கு வான்புறத் துரிவை மேகலை யுடீஇப்) மற்றும் சிங்கத்தின் தோல் (வரியி னுரிவை மேகலை யாட்டி) மேகலையாக உடுத்தப்பட்டுள்ளது.

கையில் உள்ள ஆயுதங்கள் : வைரவில்லை வளைத்துக் கையில் வைத்துக்கொண்டுள்ளாள். (பரிவொடு கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்), மேரு மலையை வளைத்து கொடிய சினத்தினையுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணைப்பூட்டி வளைக்கப்பட்ட வில் (வெஞ்சினத் தரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்), சூலம் (வளையுடைக் கையிற் சூல மேந்தி), வெற்றிவாள் (வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை)

ஊர்தி : முறுக்கிய கொம்பினையுடைய கலைமான் (திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப்)

படையல் பொருட்கள் : பாவை, கிளி, கானக்கோழி, நீலநிற மயில், பந்து, கழங்கு ஆகியன. (பாவையுங் கிளியுந் தூவி யஞ்சிறைக் கானக் கோழியு நீனிற மஞ்ஞையும் பந்துங் கழங்குந் தந்தனர் பரசி)

அலங்கரிப்பு : திருமேனிக்கு வண்ணம் தீட்டி, நறுமணம் மிக்க குளிர்ந்த சந்தனம் பூசப்பட்டது. (வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்)

பலியுணவு : அவரை, துவரை முதலான புழுக்கல் காய்கறிகளும் நோலை எனப்படும் எள்ளிலிருந்து கசியும் எண்ணெயும் நிணச்சோறும் இருந்தன. (புழுக்கலு நோலையும் விழுக்குடை மடையும்)

வழிபாட்டுப் பொருட்கள் : பூ, நறுமணப்புகை, வாசனைப் பொருட்கள் ஆகியவற்றை ஏந்தி வேட்டுவர்கள் சூழ்ந்து வந்தனர். (பூவும் புகையு மேவிய விரையும் ஏவ லெயிற்றிய ரேந்தினர் பின்வர)

இசைக்கருவிகள் : வழிப்பறி செய்யும்போது கொட்டப்படும் பறையும், சூறையாடும்போது ஊதப்படும் சின்னமும், துத்தரிக் கொம்பும், புல்லாங்குழலும் மணியும் ஒலித்தன. (ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும் கோடுங் குழலும் பீடுகெழு மணியும்)

நெற்றி : நிலவின் வெண்மை போன்ற மலர்களின் இதழ்களால் செய்யப்பட்ட சென்னி மற்றும் இமைக்காத நெற்றிக்கண். (மதியின் வெண்டோடு சூடுஞ் சென்னி நுதல்கிழித்து விழித்த விமையா நாட்டத்துப்)

வாய் : பவள வாயும் வெண்பற்கள் தெரியும் நகையும் கொண்டவள். (பவள வாய்ச்சி தவளவா நகைச்சி)

கழுத்து : விடத்தை உண்டதால் ஏற்பட்ட கருப்பு (நஞ்சுண்டு கறுத்த கண்டி - இதில் புலிப்பல் தாலி காணப்படுகிறது)

மார்பகங்கள் : பாம்பைக் கச்சாக அணிந்த மார்பகங்கள் (துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி)

மேலாடை : யானையின் தோலைப் போர்த்தவள் (கரியி னுரிவை போர்த்தணங் காகிய)

காலணிகலன்கள் : இடப்புறம் சிலம்பும் வலப்புறம் கழலும் (சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி)

காலடியில் : உடலும் தலையும் வேறு வேறு வடிவங்களைக் கொண்ட அரக்கன் (இரண்டுவே றுருவிற் றிரண்டதோ ளவுணன் தலைமிசை நின்ற தையல் - மனித உடலும் எருமைத் தலையும் உடைய அரக்கன் - மகிடாசுரன் என்றும் விக்கிரமாசுரன் என்றும் கூறுகிறார்கள்)

வழிபடப்படும் வேறு பெயர்கள் :

அமரி - அலங்கரிப்பு இல்லாதவள், இறப்பில்லாதவள்
குமரி - இளமை பொருந்தியவள், அழிவில்லாதவள்
கவுரி - கௌர நிறத்தையுடையவள்
சமரி - போரில் வல்லவள்
சூலி - சூலத்தை உடையவள்
நீலி - நீல நிறமானவள்

மாலவற்கு இளங்கிளை - திருமாலுக்கு இளையவள்
ஐயை - தலைவி
செய்யவள் - திருமகள்
பாய்கலைப் பாவை - தாவும் மானை ஊர்தியாக உடையவள்
பைந்தொடிப் பாவை -
ஆய்கலைப் பாவை - ஆராயும் கலைகளை உணர்ந்த பாவை
அருங்கலப் பாவை - இரத்தினப் பாவை
தமர் தொழ வந்த குமரி - திருமாலும் நான்முகனும் வணங்கத் தோன்றிய கன்னிக் கோலத்தினை உடைய பெண் தெய்வம்

சங்க இலக்கியங்களிலும் சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும் விதந்தோதப்படும் கொற்றவை பல்லவர் மற்றும் பாண்டியர் குடைவரைகளில் எங்குமே கொற்றவையாக இல்லாமல், துர்க்கை என்ற பெயரிலேயே சிற்பமாக அமைந்துள்ளார். பல்லவர் ஆண்ட வடதமிழ்நாட்டில் ஆறாம் நூற்றாண்டிலேயே குடைவரைகளில் இடம்பெற்றுவிட, பாண்டியர் ஆண்ட தென்தமிழ்நாட்டில் எட்டாம் நூற்றாண்டளவில்தான் துர்க்கை இடம்பெறுகிறார். செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் குடைவரையில்தான் தமிழ்நாட்டின் முதல் துர்க்கை வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. (பார்க்க: பெண் தெய்வங்களின் தொன்மையான சிற்பங்கள், பெண் தெய்வ வழிபாடு - தோற்றமும் வளர்ச்சியும், இரா. கலைக்கோவன், மு. நளினி). தமிழ்நாட்டின் இரண்டாவது பழந்துர்க்கை வடிவமாகக் கொள்ளத்தக்க சிற்பம் செஞ்சிக்கருகிலுள்ள சிங்கவரம் குன்றின் மேற்பகுதியில் குடையப்பட்டுள்ள அரங்கநாதர் குடைவரையின் தெற்கில், கீழ்ப்புறமுள்ள பாறையில் இடம்பெற்றிருக்கிறது. அண்மையில் நாங்கள் பார்க்க நேர்ந்த இச்சிற்பத்தின் விளக்கத்தைக் கீழே காணலாம்.



சடை : கரண்ட மகுடம் (நீண்ட கூந்தலைக் குறுக்கிக் கட்டப்பட்ட கோலம்)
பிறைநிலவு : இல்லை
குண்டலங்கள் : வலது செவியில் பனையோலைக் குண்டலம், இடது செவி வெறுஞ்செவி
கழுத்தணி : சரப்பளி, கண்டிகை, சவடி
கையில் உள்ள ஆயுதங்கள் : இடப்பின்கையில் சங்கும் வலப்பின்கையில் எறிநிலைச் சக்கரமும். வலமுன்கை கடகத்திலும் இடமுன்கை கடிஹஸ்தத்திலும் இருக்கின்றன. இடமுன்கையின் மணிக்கட்டு அருகே கிளி அமர்ந்திருக்கிறது.
ஊர்தி : இல்லை
நெற்றி : சென்னி இல்லை, நெற்றிக்கண் இல்லை
மார்பகங்கள் : கச்சால் மூடப்பட்டிருக்கின்றன
மேலாடை : இல்லை
காலணிகலன்கள் : சதங்கை, சிலம்பு
காலடியில் : எருமைத்தலை

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் என்ற ஊரிலுள்ள துர்க்கையின் சிற்பத்தையும் அண்மையில் நாங்கள் பார்க்க நேர்ந்தது. அதன் விளக்கம் கீழே.



சடை : கரண்ட மகுடம்
பிறைநிலவு : இல்லை
குண்டலங்கள் : இரண்டு செவிகளிலும் பனையோலைக் குண்டலங்கள்
கழுத்தணி : சரப்பளி மற்றும் வீரச்சங்கிலி, முப்புரிநூல் நிவிதமாக உள்ளது
கையில் உள்ள ஆயுதங்கள் : இடப்பின்கைகளில் சங்கும், கேடயமும், வில்லும் உள்ளன. இடமுன்கை கடியவலம்பிதமாக இருக்கிறது. வலப்பின்கைகளில் எறிநிலைச் சக்கரமும், வாளும், மணியும் உள்ளன. வலமுன்கை ஏந்தலாக இருக்கிறது. வலமுன்கையின் முழங்கைக்கு அருகே கிளி அமர்ந்திருக்கிறது. தோள்வளைகள் உள்ளன.
ஊர்தி : சிங்கம் மற்றும் மான் ஆகியன காட்டப்பட்டுள்ளன.
நெற்றி : சென்னி இருக்கிறது. நெற்றிக்கண் இல்லை
மார்பகங்கள் : கச்சு அணியப்பட்டுள்ளது.
மேலாடை : இல்லை
காலணிகலன்கள் : முழங்காலிலிருந்து கணுக்கால் வரை இரு கால்களிலும் கழல்கள், இடதுகாலில் சிலம்பு இருக்கிறது.
காலடியில் : எருமைத்தலை

காலத்தால் முற்பட்ட சிங்கவரம் கொற்றவையைவிடத் தச்சூர்க் கொற்றவையின் உருவம் வேட்டுவர்கள் வழிபட்ட கொற்றவையை ஓரளவுக்கு ஒத்திருக்கிறது. கையில் வைத்திருக்கும் ஆயுதங்களும் ஊர்திகளும் நெற்றி மற்றும் காலடியில் இருக்கும் மகிடத்தலையும் பெரும்பாலும் சிலப்பதிகாரக் கொற்றவையை ஒத்திருக்கிறது. உரைப்பாட்டுமடை வரையிலான வர்ணனையில் இளங்கோவடிகள் கையில் சங்கும் சக்கரமும் வைத்திருப்பதாகவோ என்ன வகையான காதணிகளை அணிந்திருந்தார் என்பதையோ குறிப்பிடவில்லை.

இக்கட்டுரை வேட்டுவவரியைப் பற்றிய ஒரு மேலோட்டமான விவரிப்பே. இன்னும் ஆழ வாசித்துப் பல்வேறு கோணங்களில் சிந்தித்தாலன்றித் தமிழகத்தின் பெண் தெய்வங்களைப் பற்றிய ஆய்வு முழுமை பெறாது. அந்த முழுமையை நோக்கிய இத்தொடரின் ஆரம்பப் புள்ளிகளில் ஒன்றே இக்கட்டுரை.

(தொடரும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.