http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 116

இதழ் 116
[ பிப்ரவரி 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 10
Mulaparudaiyar
மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் – 03
தொண்டை நாட்டு ஆனூரின் திருக்கோயில்கள்
புதுப்புனலின் வேகம்
இதழ் எண். 116 > கலையும் ஆய்வும்
தொண்டை நாட்டு ஆனூரின் திருக்கோயில்கள்
கி.ஸ்ரீதரன்
நீர்வளமும் நிலவளமும் கல்வியில் சிறந்த சான்றோர் வளமும் நிறைந்த தொண்டைநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்றே ஆனுர் என்னும் திருவூராகும்.

இவ்வூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கற்பட்டிலிருந்து 15 கி.மீ தொலைவில் ஒத்திவாக்கம் இரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள பொன்விளைந்த களத்தூர் அருகே அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் பாலாறு ஓடுகிறது. இவ்வூரில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுவதால் (Megalithic Burials) இப்பகுதியில் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பதை அறியமுடிகிறது.

திருக்கோயில்கள்:

ஆனூரில் வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று கோயில்கள் அமைந்துள்ளன.
1. அட்டபுரீசுவரர் திருக்கோயில்
2. வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில்
3. கந்தசாமி திருக்கோயில்

சிவன் மற்றும் பெருமாள் கோயில்களிலிருந்து 31 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. பல்லவர் காலத்திலேயே இங்கு கோயில் இருந்து, பிற்காலத்தில் திருப்பணிகள் நடைபெற்றது என்பதை அறியமுடிகிறது. மேலும் பெரும்பாலான கல்வெட்டுகள் துண்டுக் கல்வெட்டுகளாக முழுமை அடையாத கல்வெட்டுகளாகக் காணப்படுகின்றன.



இக்கோயில்களில் காணும் கல்வெட்டுகளிலிருந்து கீழ்க்கண்ட மன்னர்கள் கோயில்களுக்குப் பெருந்தொண்டு செய்து போற்றியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

மன்னர்கள்:

1) பல்லவ மன்னன் கம்பவர்மன் : கி.பி. 907
2) பார்த்திவேந்திராதிவர்மன் : கி.பி. 950
3) முதலாம் இராஜராஜசோழன் : கி.பி 10ம் நூற்றாண்டு
4) முதலாம் குலோத்துங்க சோழன் : கி.பி. 11ம் நூற்றாண்டு
5) இரண்டாம் இராஜராஜன் : கி.பி. 12ம் நூற்றாண்டு

ஊர்ப்பெயர்கள்:

இன்று ஆனூர் என்று வழங்கப்பட்டாலும் கல்வெட்டுகளில் ஆனியூர், ஆதியூர் மற்றும் ஆனியூரான சத்ரியகுலகால சதுர்வேதிமங்கலம் எனவும் ஆதியூரான சத்யாசிரிய குலகால சதுர்வேதிமங்கலம் எனவும் குறிப்பிடப்படுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனது கல்வெட்டில் இப்பெயர் காணப்படுகிறது. முதலாம் இராஜராஜசோழனது இரட்டபாடி ஏழரையிலக்கத்தில் சத்யாசிரியனை வெற்றி பெற்றதின் நினைவாக இப்பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம்.

நாட்டுப்பிரிவு:

ஜெயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்து ஆதியூர் என்கிற சத்யாசிரிய குலகால சதுர்வேதிமங்கலம் எனவும் களத்தூர்க் கோட்டத்து ஆனியூர் எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இனிக் கோயில்களைக் காண்போம்.

1. அட்டபுரீசுவரர் திருக்கோயில்:

ஊரின் துவக்கத்தில் வடகிழக்கு மூலையில் அட்டபுரீசுவரர் என்னும் சிவன்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் இறைவனை அஸ்தபுரீசுவரர் என்றும் அழைக்கின்றனர். அம்பாள் சௌந்தரவல்லி என அழைத்து வணங்கப்படுகிறார்.



கிழக்கு நோக்கிய திருக்கோயில். கோயிலின் முன் அழகிய திருக்குளம். ஒரு திருச்சுற்று. திருச்சுற்றுச்சுவர் பல இடங்களில் இடிந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.



தெற்குப் பக்கச் சுவரில் விநாயகர், ஜேஷ்டை சிற்பங்களைப் புதைத்து வைத்துக் கட்டியுள்ளனர். இவை பல்லவர் காலச் சிற்பங்களாகலாம். மேலும் இதே சுவரில் மாவுக்கல் போன்ற பலகைக்கல்லில் பிரம்மா, நரசிம்மர், சிவலிங்கம், உமா, திருமறு (ஸ்ரீவத்சம்) வடிவில் லட்சுமி, துர்க்கை, பிள்ளையார் ஆகிய தெய்வ வடிவங்கள் அடங்கிய சிறு சிற்பத்தொடர் இருந்ததாக அறியமுடிகிறது. இதுபோன்ற சிறுசிற்பத்தொடர் சிற்பங்கள் தொண்டைநாட்டில் மணிமங்கலம், முன்னூர், மதுராந்தகம், உக்கல், வேலஞ்சேரி, தென்னேரி, உத்திரமேரூர் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.



திருக்கோயில் நுழைவுவாயில் கோபுரம் போன்ற அமைப்பு இல்லாமல் காணப்படுகிறது. வாயிலின் முன்பாகத் திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ள கற்றூண் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை அடுத்து பலிபீடமும், நந்திமண்டபமும் அமைந்துள்ளன. அதனை அடுத்து முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவை உள்ளன.



கருவறையுடன் இணைந்த முன்மண்டபத்தில் தெற்குநோக்கி அம்பாள் சன்னிதி உள்ளது. கருவறை நுழைவுவாயிலின் அருகே பக்கச்சுவரில் ருத்ராட்ஷ மாலை அணிந்த அடியவர் ஒருவரின் வடிவம் அமர்ந்த கோலத்தில் புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. அவர் அருகில் விபூதிக் கலயம் போன்ற பாத்திரம் காணப்படுவது சிறப்பாகும்.



கருவறை செவ்வக வடிவில் அமைந்துள்ளது. கருவறை தேவகோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை வடிவங்களைக் காணலாம். வடக்குச் சுற்றில் உள்ள சண்டிகேசுவரர் வடிவம் மிகச்சிறப்பானது. வலக்கரத்தில் மழுவைத் தாங்கியும் இடக்காலை மடக்கி, வலக்காலைக் குத்திட்டு அமர்ந்த கோலம் தொன்மை வடிவமாக விளங்குகிறது. வடகிழக்கு மூலையில் பைரவர் சன்னிதி அமைந்துள்ளது.

கல்வெட்டுச் செய்திகள்:

இக்கோயிலில் காணப்படும் பல்லவமன்னன் கம்பவர்மன் காலக்கல்வெட்டில் களத்தூர் கோட்டத்து ஆனியூர் "வம்பங்காட்டு மகாதேவர்" கோயிலில் விளக்கு எரிக்க 40 கழஞ்சு பொன் காலியூர்க் கோட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கணத்தாருள் ஒருவனான ஸ்ரீதரக் கிரமவித்தன் என்பான் ஆனியூர் மகாசபையிடம் அளித்தான். அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு நந்தா விளக்கு எரிக்க சபை ஒத்துக் கொண்டதைக் கல்வெட்டு கூறுகிறது.

இக்கோயில் இறைவன் "திருவம்பங்காட்டு மகாதேவர்" எனவும் "திருவம்பங்காட்டு உடையார் ஆளுடைய மகாதேவர்" எனவும் கல்வெட்டுகளில் குறிக்கப்படுவதைக் காணமுடிகிறது.



மேலும் இக்கோயில் கல்வெட்டுகளால் ஆனியூர் மகாசபை கோயிலுக்கு நிலம் அளித்தது. சந்திவிளக்கு எரிக்கவும், இரவுநேர வழிபாட்டிற்காகவும் ஸ்ரீகுமாரம் அலங்காரதேவன் என்பவன் நிலம் அளித்த செய்தியும், கோயில் மாகேசுவரர்கள் இறையிலியாக நிலம் அளித்த செய்தியும் அறியமுடிகிறது.

மேலும் இக்கோயிலில் அமாவாசை நாளிலும், ஸ்ரீபலி வழிபாட்டின்போதும் மத்தளி-1, கரடிகை-1, கைமணி-1, சங்கு-1, காளம்-2, சேகண்டிகை ஆகிய இசைக்கருவிகளை வாசிக்க நரசிங்கபிரான் சிவன் என்பவன் நிலம் அளித்த செய்தி சோழர்காலக் கல்வெட்டில் காணப்படுகிறது. ஒரு கல்வெட்டில் திருக்கழுக்குன்றம் உடையான் என்ற பெயர்க் குறிப்பும் காணப்படுகிறது. திருக்கழுக்குன்றம் திருத்தலம் இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ளது.

சோழர் காலத்தில் இக்கோயிலில் சிறப்பான வழிபாடுகள் நடைபெற்றதை அறியமுடிகிறது.

2. வேதநாராயணப் பெருமாள் கோயில்:

ஊரின் மேற்குப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய திருக்கோயில். நுழைவு வாயிலின் முன்னர் கற்றூண் நிறுத்தப்பட்டுள்ளது.



கருவறையில் பெருமாள் தனது தேவியர்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோயிலின் கருவறை விமானத்திலும், சுற்றுச்சுவரிலும் செடிகள் முளைத்து உரிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது.

சித்திரமேழி விண்ணகர்:

இக்கோயில் "சித்திரமேழி விண்ணகர்" எனக் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. சித்திரமேழுப் பெரியநாட்டார் இக்கோயிலை எடுப்பித்தது பற்றியும் (கி.பி. 13ம் நூற்றாண்டு) கோயிலை, "நடுவில் திருமுற்றம் சித்திரமேழி விண்ணகர்" என்றும் மன்னன் பெயர் இல்லாத கல்வெட்டு மூலம் அறிகிறோம். ஆனியூரான சத்யாசிரிய குலகால சதுர்வேதிமங்கலம் என்ற பெயர் குறிப்பிடப்படுவதால் இக்கல்வெட்டு சோழர்காலக் கல்வெட்டாகும் என ஊகிக்க முடிகிறது. கல்வெட்டின் தலைப்பில் கலப்பை, தமரு, சக்கரம், செண்டு ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன.

இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில், கோயிலுக்கு ஸ்ரீபலிபுறமாக நிலம் அளித்ததும், அம்பலப்புறமாக நிலம் அளிக்கப்பட்ட செய்தியும், கார்த்திகை மாதத்தில் கார்த்திகைவிழா நடத்தவும், மலையாங்குளத்தூர் மேலகமுடையார் என்பவர் பிடாரிபட்டியாக (பிடாரிபூமி) நிலம் அளித்த செய்தியும் காணப்படுகிறது.

இக்கோயிலில் பள்ளியெழுச்சியின்போதும், ஸ்ரீபலி வழிபாட்டின்போதும் இசைக்கருவிகள், காளம் (2) வாசிக்கவும், உவச்சர்களான திருநட்டப்பேருவச்சன், ஈசானன் ஆகியோருக்கு நிலம் அளித்த செய்தி கூறப்படுகிறது. மேலும் இக்கோயிலில் கரடிகை-1, இண்டை-2, திமிலை-2 ஆகிய இசைக்கருவிகள் வாசிக்கவும், விளக்கு எரிக்கத் தேவையான எண்ணெய் வழங்கவும் தானம் அளிக்கப்பட்டது.

"நம்மூர் தெய்வமாயுள்ள தேவேந்திரனுக்கு" என்று முழுமை அடையாத இராஜராஜனின் கல்வெட்டில் காணப்படுவது இக்கோயில் இறைவன் பெயராக இருக்கலாம்! ஆய்வுக்குரியது!!.

வேதம் வல்லான் ஒருவனுக்கு 12 பட்டி நிலம் அளிக்கப்பட்டது. அந்நிலத்தைத் திருத்தி விளைந்த போகத்தால் 'சாமவேதம்' கற்பிக்கத் தானம் அளிக்கப்பட்டது. மேலும் இங்கு கோயில் புராணத்தை வக்கணிப்பானுக்கும், வேதம் வல்லானாகிய ஒருவன் 'மீமாம்சைவிம்சதத்யாயம்' வக்கணிக்கவும் வேண்டிய உணவுக்காகவும் நிலம் தானமாக அளிக்கப்பட்டது.

களத்தூர்க் கோட்டத்து ஆனியூர் மகாசபையார் இவ்வூரில் தணியல் (திருத்தணி) சுப்ரமணியர்க்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை நீங்கலாக, வேதம் பயிற்றுவித்த அந்தணர்களுக்கு நிலக்கொடை அளிக்கப் பெற்றதாக முதலாம் இராஜராஜசோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. எனவே இவ்வூரில் வேதத்தில் சிறந்தவர்களும், வேதம் கற்பிப்பதில் சிறந்தவர்களும் இருந்தனர் என்பதைக் கல்வெட்டுகள் அளிக்கும் செய்தியினால் அறியமுடிகிறது.

3. கந்தசாமி திருக்கோயில்:

பெருமாள்கோயில் அருகில் குளக்கரையில் கிழக்குநோக்கி முருகன் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி எலுமிச்சம்பட்டு (பற்று) என அழைக்கப்படுகிறது. அண்மையில் இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டுப் புதிய ஆலமரம் கட்டப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.



கருவறையில் முருகப்பெருமான் 'பிரம்மசாஸ்தா' வடிவில் காணப்படுகிறார். தனது மேலிரு கரங்களில் அக்கமாலையும், கமண்டலத்தையும் தாங்கியுள்ளார். கீழ்வலது கரத்தில் தாமரை மலரைத் தாங்கியுள்ள கோலம், இடதுகரத்தைத் தொடையில் ஊன்றி உள்ளார். இவ்வடிவம் 'பிரம்மசாத்தன்' என அழைக்கப்படும். இவ்வடிவம் பற்றிக் கந்தபுராணப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. தொண்டைநாட்டில் பல திருக்கோயில்களில் இத்தகைய வடிவங்கள் வழிபடப் பெறுவதைக் காணலாம். இப்பகுதியில் தோன்றிய பிறவியிலேயே கண்பார்வை அற்ற 'அந்தகக்கவி வீரராகவ முதலியார்' ஆனூர் முருகப்பெருமான் அருள்பெற்றுத் திருக்கழுக்குன்றபுராணம், உலா, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் போன்ற இலக்கியங்களைப் படைத்துப் புகழ் பெற்றவர் ஆவார்.

பல்லவர் காலத்திலேயே எடுப்பிக்கப்பட்ட ஆனூர் திருக்கோயில்கள் சோழமன்னர்கள் காலத்தில் சிறப்பாகப் போற்றப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றதைக் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது.

மேலும் படிக்க:

1. ARE 1932-33, No: 75 to 83
2. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் (காஞ்சிபுரம் மாவட்டம்) தொகுதி-IV - தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, ஆசிரியர்: சீ. வசந்தி - 2013, பக்கம் 111-141.
3. Art Panorama of Tamils - Dr. Avvai Natarajan, N. Kasinathan (Exquisite Panel Sculptures of Tamilnadu) Page 25, 1992.
4. ஆனூர் மும்மூர்த்தி சிற்பத்தொடர், ப.தெ.பாலாஜி, ஆவணம் இதழ் 8, 1997, பக்கம் 162.
5. தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் - மா.சந்திரமூர்த்தி, ஆனூர் அட்டபுரீசுவரர் கோயில் - சீ.வசந்தி, பக்கம் 116-2003.
6. காஞ்சிபுரம் மாவட்டத் தொல்லியல் கையேடு, இரா.சிவானந்தம் - 2008, பக்கம்-83.
7. காஞ்சிபுரம் மாவட்டக் கலைகள், தொகுதி-1, ஆனூர் திருக்கோயில்கள் - கி. ஸ்ரீதரன், பக்கம் 132-135, 2011.
8. இக்கோயில்களைத் திருப்பணி செய்ய ஆனூர் கிராம முன்னேற்ற அறக்கட்டளை அமைப்பு பொதுமக்களின் ஒத்துழைப்புடன் முயற்சி செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.