http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 116
இதழ் 116 [ பிப்ரவரி 2015 ] இந்த இதழில்.. In this Issue.. |
நீர்வளம் மிக்கிருந்த சோழவளநாடு அந்நாளில் புனல் நாடு நீர் நாடு என்றெல்லாம் பெயர்கள் பெற்றுச் சிறப்புற்றிருந்தது. பெரும் வாவிகளும் வளமிகு பொய்கைகளும் வற்றாத நதிகளும் சிற்றாறுகளும் நிறைந்து மண்வளம் பெற்ற மருதநிலமாய்ப் பேறு பெற்றிருந்தது. சோழவளநாட்டை ஊடறுத்துப் பாய்ந்த காவிரி நதியின் நீர் வாய்க்கால்களின் வழியே வயல்களெங்கும் பாய்ந்தோடி உழவுத் தொழில் சிறக்க உதவியுள்ளது.
ஐங்குறுநூறில் மருதம் பாடிய ஒரம்போகியார் சோழ நாட்டின் உழவுத் தொழில் நுட்பத்தைத் தம் பாடலொன்றில் படம் பிடிக்கிறார். இதோ அப்பாடல். பரத்தை கூற்று கூற்று - முன்னொரு ஞான்று தலைவியோடு புனலாடினான் எனக்கேட்டு ‘இவனுடன் இனி ஆடேன்’ என உட்கொண்ட பரத்தை ‘புதுப்புனல் ஆடப் போதுக’ என்ற தலைமகற்குச் சொல்லியது. ‘கதிர் இலை நெடுவேல் கடுமான் கிள்ளி மதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த சிறை அழி புதுப்புனல் ஆடுகம்’ எம்மொடு கொண்டுமோவெந் தோன்புரை புணையே!’ (ஐங்குறுநூறு 78;1-4) விளக்கம்; ஒளி பொருந்திய இலைகளை உடைய நீண்ட வேலையும் விரைந்து செல்லும் குதிரைகளையும் உடைய சோழமன்ன ன் கிள்ளியின் அரணை அழிக்கும் யானை போன்று விரைவாக வந்த புதுப்புனல், தடுப்புக்களை அழித்துக்கொண்டு வந்தது. அப்புதுப் புனலில் ஆடுவோம் என்னோடு வருக என்பதாம். ஆற்று நீரீன் போக்கை ஒழுங்கு படுத்தவும் அதன் நீர் வாய்க்கால்களின் வழி தொலைவில் இருக்கும் வயல்கள் வரை பாய்வதற்காகவும் பல்வேறு தடுப்புக்களை வைத்திருப்பார்கள். அத்தடுப்புக்களையெல்லாம் உடைத்துக்கொண்டு ஒரு யானையின் வேகத்துடன் பாய்ந்தது என்கிறார் புலவர். இவ்வாறு சிறையுடைத்து வரும் புதுப்புனலில் வெள்ளி நிறத்துடன் பெருத்த கயல்மீன்களும் இருக்குமல்லவா? அவற்றை உண்பதற்கு ‘மாரிச் சுதையின் ஈரம் புறத்து அன்ன கூரல் கொக்கு’கள் ஆர்வத்துடன் காத்திருந்தனவாம். இந்தக் காட்சியைப் படம்பிடிப்பது அகநானுறு (346;1-11). இவ்வாறு சோறுடைத்த சோழவளநாட்டின் வளமையை சங்க இலக்கியங்களெங்கிலும் காணமுடிகிறது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |