http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 120

இதழ் 120
[ ஜுன் 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

சிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-3
A Study on Nagaram in Thiruchirappalli District - II
To Sacred Shrines.. with Sacred Hymns..- 1
Chola Ramayana 14
இசையால் இசையும் இடைமருதூர் இறைவன் -2
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 11
திருவல்லம் கம்பராஜபுரம் சிதைந்த திருக்கோயில்
சிறுபாணாற்றுப்படை சுட்டும் மடைநூல்
இதழ் எண். 120 > கலையும் ஆய்வும்
இசையால் இசையும் இடைமருதூர் இறைவன் -2
பால.பத்மநாபன்
இடைமருதூர் என்று பதிகங்களில் அழைக்கப்படும் திருவிடைமருதூர் கோயிலில் முதல் பராந்தகர்(கி.பி.907- 953) காலத்திலிருந்தே நாடகசாலை இருந்து அதனுள் ஆலய நிர்வாக கூட்டங்கள் நடத்தப்பட்டதையும் என்னென்ன இசைக்கருவிகள் எந்தெந்த நேரங்களில் இசைக்கப்பட்டன என்பதையும் கல்வெட்டுகள் வாயிலாக சென்ற கட்டுரைகளில் பார்த்தோம்.

இனி இக்கோயிலில் நிலவிய ஆடல்,பாடல்,பாடுவோர் நியமனம் ஆகியவற்றை நோக்குவோம்.



1)141/1895. S.I.I.Vol.5 NO:705

இரண்டாம் குலோத்துங்க சோழனின் ( கி.பி.1133-1150 ) 9-ம் ஆட்சியாண்டில் இடைமருதூர் கோயிலில் இறைவன் முன்பு பாடவும், இக்கோயிலில் உள்ள தளியிலார்க்கும், தேவரடியார்க்கும் பாட்டு சொல்லிக்கொடுத்து அவர்களை பாடச் செய்வதற்க்கும் இருமுடிசோழன் பிரானான அசஞ்சலப்பேரயன் என்ற பாணணை நியமித்து அவனுக்கும், அவன் சந்ததியினருக்கும் பாணகாணியும் (பாடல் பாடி செய்யும் தொழிலுக்கு ஊதியமாக வழங்கப்படும் நிலம்) நில ஜீவதமும் (அவனின் வாழ்நாள் முழுவதும் தரப்படும் ஊதியம்) ,குடியிருப்பிற்கு, முன்பு இக் கோயிலில் இருந்த பாணன் குடியிருந்த மனையையும் ஒதுக்கி செயல்படுத்துமாறு அரசரிடமிருந்து ஆணை வரப்பெரவே, திருவிடைமருதூர் ஊரை ஒட்டியிருந்த திரைமூர் நாட்டின் அருகில் இருந்த செம்பியன்குள்த்தூர் என்ற ஊரில் நிலம் ஒதுக்கி வருடத்திற்கு 360 கலம் நெல் வழங்க அரசு அதிகாரிகளும் கோயில் நிர்வாகமும் முடிவு செய்தன.



2)274/1907 S.I.I.Vol.23 NO:274

விக்கிரம சோழனின் 9-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு இக்கோயிலில் இருந்த நிருத்த மண்டபத்தை சுட்டுகிறது. இந்நிருத்த மண்டபத்தில் இருந்த நிலை விளக்குகளையும் கோயிலில் இருந்த விக்கிரம சோழன் திருமாளிகையில் இருந்த விளக்குகளையும், கோயில் சூழ இருந்த விளக்குகளையும் எரியவிட விளக்குபுறமாக (விளக்குகள் எரிய வைப்பதற்காக ஆகும் செலவிற்காக வழக்கப்பட்ட நிலம்) இரு இடங்களில் நிலம் வழங்கப்பட்டது.

நிருத்த மண்டபத்தில் விளக்கு எரியவைக்கப்பட்டது என்ற செய்தியும் அவ்விளக்குகள் பெரிதான நிலை விளக்குகளாக இருந்தன என்ற செய்தியும் நிருத்த மண்டபத்தில் தினசரி விளக்குகள் கோயில் நிர்வாகத்தால் எரிய வைக்கப்பட்டு மண்டபம் பராமரிக்கப்பட்ட விபரமும் ஆடல் கலையின்பால் இக் கோயில் கொண்டிருந்த சிறப்பினை வெளிப்படுத்துகின்றன.

3)306/1907 S.I.I.Vol.23 NO:306

மூன்றாம் குலோத்துங்கனின் (1178-1218 ) 13-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று நட்டுவம் தொடர்பாக இவன் பிறப்பித்த ஆணையின் விபரம் பற்றி தெரிவிக்கின்றது. திருவிடைமருதூர் கோயிலில் ஆடற்கலையில் நட்டுவம் செய்கின்றவர்களுடன் கூடுதலாக அவிநயம் நட்டுவமாக, அரண்மனையில் இருந்த நட்டுவர்களில் ஒருவராய் இருந்த ஆடல்வல்லானான குலோத்துங்கசோழ நித்தபேரரையன் என்பவனை நியமனம் செய்வித்து இவனுக்கு, இக்கோயில் அகமார்க்க நட்டுவனார் பெற்று வந்த நிலஜீவதமே இவனுக்கு வழங்கவும் இந்நிலதானத்தை இவனுக்கு வேண்டியவர் மூலம் பெறவும் ஏற்பாடு செய்து அதன் விபரத்தை கல்லில் பொறிக்கவும் அவ்வாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



கூத்து, சாந்தி, வினோதம் எனறு இரு பெரும் பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தது. சாந்திக்கூத்து, சொக்கம், மெய், அவிநயம், நாடகம் என்ற நால்வகை கூத்துகளை கொண்டது. வினோதக்கூத்து, குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என்ற ஆறுவகைக் கூத்துகளை கொண்டது.

இதில் மெய்க்கூத்து அகச்சுவை பறறி அமைந்ததால் அகமார்க்கம் என அழைக்கப்பட்டது.இந்த அகமார்க்க நாட்டியத்தை கற்றுகொடுக்கும் ஆசிரியர் அகமார்க்க நட்டுவம் என்று அழைக்கப்பட்டார். அவிநயம் கூத்து என்பது கதை தழுவாது அவிநயம் புரிந்து நடனமாடுவது ஆகும். இதன் ஆசிரியர் அவிநய நட்டுவம் என்று அழைக்கப்பட்டார்.

இடைமருதுர் கோயிலில் அகமார்க்க நடன கலைஞர்களும் அகமார்க்க நட்டுவனாரும் ஏற்கனவே பணிபுரிந்துகொண்டிருக்கும் நிலையில் புதிதாக அவிநய நட்டுவம், அரண்மனைப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு இக்கோயிலில் பணிநியமனம் செய்யப்பட்டிருப்பது இக்கோயிலின்பால் அரசு கொண்டிருக்கும் சிறப்பினையும் இக்கோயில் வளர்த்த கலைகளின் நிலையினையும் சுட்டிக் காட்டுகின்றது.

4)308/1907 S.I.I. Vol. 23 NO:308

குலோத்துங்க சோழனின் 9-ம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ( ஆரம்பம் மட்டுமே உள்ள கல்வெட்டு) இக்கோயிலில் இருமுடி சோழ பிரானான அசஞ்சலப்பேரயன் என்பவன் பாட நியமிக்கப்பட்டதை தெரிவிக்கின்றது

5)312/1907 S.I.I. VOL..23 NO:312

விஜயநகர மன்னன் விருபாட்சரின் ஆட்சிக்காலத்தில் இடைமருதூர் கோயிலின் கிழக்கு வாசல் ஏகநாயகன் திருஞானசம்பந்தன் திருவாசல் வழியே இறைவன் வீதியுலா காட்சி எழுந்தருளும்போது கோயில் பதியிலார் ஆடலும் , பாடலும் நடத்த, ஏற்பட்ட ஒப்பந்தத்தை தெரிவிக்கின்றது. கல்வெட்டு ஆங்காங்கே சிதைந்துள்ளதால் முழு விபரம் அறிய இயலவில்லை.

சோழர்கள் காலத்தில் ஆடலும்,பாடலும்,இசையும்,கூத்தும், நாடகமும் கோயில்கள் வழியே வளர்ந்த வரலாற்றினை இடைமருதூர் கல்வெட்டுகள் மூலம் பார்த்தோம். தமிழ்நாட்டுக் கோயில்களில் பெரும்பாலான கோயில்கள் சற்றேறக்குறையே இடைமருதூர் கோயில் நிலையையே கொண்டிருந்தன. ஆனால் இடைமருதூர் கோயிலில் ஆடற்கலை மிக உயரிய நிலையிலே இருந்தது என்பதை தஞ்சை பெரிய கோயிலில் உள்ள முதலாம் இராஜராஜனின் தளிச்சேரி கல்வெட்டு சுட்டுகிறது

தஞ்சை இராஜராஜீசுவரமுடையார் கோயிலில் நடனமாட 400 தளிச்சேரி பெண்களை இராஜராஜன் நியமித்தான். இவர்கள் சோழமண்டலத்திலிருந்த கோயில் சார்ந்த தளிச்சேரிகளிலிருந்தும், ஊர் சார்ந்த தளிச்சேரிகளிலிருந்தும் வரவழைக்கப்பட்டு தஞ்சை கோயில் சார்ந்த தளிச்சேரியில் குடியமர்த்தப்பட்டனர். 20 ஊர்களிலுள்ள 49 கோயில் சார்ந்த தளிச்சேரிகளிலிருந்து 241 தளிச்சேரிப் பெண்டிர்களும் 51 ஊர் சார்ந்த தளிச்சேரியிலிருந்து 157 தளிச்சேரிபெண்டிர்களும் (கல்வெட்டு சிதைந்துள்ளதால் 2-தளிச்சேரிபெண்டிர் பற்றிய விபரம் அறிய இயலவில்லை) வரவழைக்கப்பட்டனர்.

ஊர் சார்ந்த தளிச்சேரியிலிருந்து வரவழைக்கப்பட்ட தளிச்சேரிபெண்டிர்களில் அதிக பெண்களை அனுப்பியது திருவிடைமருதூர் ஊர் தளிச்சேரியாகும். 17-தளிச்சேரி பெண்டிர்கள் இங்கிருந்து வரவழைக்கப்பட்டு தஞ்சை கோயிலின் தெற்கு பக்கமாய் அமைந்த தென் தளிச்செரியின் தென் சிறகில் 18 வது வீட்டிலிருந்து 23 வது வீடு வரை உள்ள 6-வீடுகளில் 6 தளிச்சேரிபெண்டிகளும் தென் தளிச்சேரியின் வட சிறகில் 49வது வீட்டிலிருந்து 53 வீடு வரை உள்ள 5-வீடுகளில் 5 தளிச்சேரிபெண்டிர்களும் கோயிலின் வடக்கு பக்கத்தில் உள்ள வட தளிச்சேரியின் தென் சிறகில் 71 வது வீட்டில் ஒருவரும், 82-வது வீட்டில் ஒருவரும், வடதளிச்சேரியின் வட சிறகில் மீதமுள்ள 4-தளிச்சேரிபெண்டிர்களும் முறையே 33-வது,77-வது,79-வது மற்றும் 80-வது வீடுகளிலும் குடியமர்த்தப்பட்டனர்.

இக்கோயிலுக்கு திருவிடைமருதூர் கோயில் சார்ந்த தளிச்சேரி பெண்டிர் எவரும் வரவழைக்கப்படவில்லை. திருவிடைமருதூரில் கோயில் சார்ந்த தளிச்சேரியும், ஊர் சார்ந்த தளிச்சேரியும் இயங்கி வந்தமையாலும் அதிக அளவில் தஞ்சைக்கு தளிச்சேரிபெண்டிகர்களை அனுப்பியதாலும் இம்மண்ணில் ஆடற்கலை செழித்தோங்கிய நிலை பற்றி அறியலாம்.

இப்படி கடந்த 11 நூற்றாண்டுகளாய் கண்டும் கேட்டும் இரசித்தும் இன்பத்தில் இளைப்பாரியிருந்த இடைமருதூர் இறைவனை மயக்கிய (கி.பி.10-நூற்றாண்டின் முற்பகுதியில்) முதலாம் பராந்தகனின் ஆட்சிக்காலத்தில் இயங்கிய நாடகசாலையும் விக்கிரமசோழனின் காலத்தில் நிலை விளக்குகளினாலும் மற்ற விளக்குகளாலும் ஏற்பட்ட ஒளி வெள்ளத்தாலும் மிதந்த நிருத்தமண்டபமும் அதில் ஆடிய பதியிலாரும், தலைக்கோலிகளும், தளிச்சேரிபெண்டிர்களும் உடுக்கை, செண்டை,கைமணி, திமிலை, பாடவியம் போன்ற இசைக்கருவிகளிலிருந்து எழும் இசை ஓசையும், உத்தமசோழன் காலத்தில் உருவான அகச்சுவை சொல்லும் தேசிப்பாடல்களூம் ,ஆதித்த கரிகாலன் காலத்தில் எழுந்த கதை தழுவிய ஆரியக்கூத்தும்,பாணர்கள் பாடிய பாடலும், வைகறை ஆட்டமும், அவிநய நட்டுவம் சொல்லிக்கொடுத்த கதை தழுவாது அவிநய நாட்டியமும், அகமார்க்க நட்டுவம் கற்றுக்கொடுத்த அகச்சுவை தெரிவிக்கும் அகமார்க்க நாட்டியமும் இன்று இங்கு காணுமாறு இல்லை

சுமார் 60 ஆண்டுகலுக்கு முன்னர் நடனம் நிறுத்தப்பட்டது ஆடல் மகளிர் மறைந்தனர். இசைக்கருவிகளும் வழக்கொழிந்தன. வைகறை ஆட்டமும் இல்லை..பள்ளியெழுச்சி பாடலும் இல்லை நாட்டியமும் இல்லை நாடகமும் இல்லை..நாடகசாலையும் இல்லை நிருத்த மண்டபமும் இல்லை.

மிச்சமிருப்பவை பழைய நினைவுகள் சுமந்த அந்தத் திருக்கோயில் வளாகமும் நமது கனத்த மனமுமே.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.