http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 122
இதழ் 122 [ ஆகஸ்ட் 2015 ] பதினொன்றாம் ஆண்டு நிறைவு மலர் இந்த இதழில்.. In this Issue.. |
தெய்வங்களின் சொந்த சுவர்க்க பூமியாக வர்ணிக்கப்படும் சேரநாடான கேரளம் பல மலைபடு பொருட்களின் விளைநிலம். சங்க காலத்தில் இந்நிலம் பண்டமாற்று வாணிபத்தில் சிறந்து விளங்கியது. இங்கே விளைந்த மிளகு இதர வாசனைப் பொருட்களும் கிரேக்க யவனர்களை ஈர்த்தன. நாளும் செழித்த வாணிபத்தால் சேரநாட்டின் துறைமுகங்கள் உலக வரைபடத்தில் தமக்கெனத் தனியிடம் தேடிக்கொண்டன. அத்தகைய துறைமுகங்களுள் ஒன்றுதான் மேற்கு கடற்கரைத் துறைமுகப்பட்டினமான முசிறி.
சங்க காலத் துறைமுகமாக அறியப்படும் பட்டணம் (முசிறி) பகுதியில் அகழ்வாராய்ச்சி. பட உதவி - நன்றி - தி இந்து நாளிதழ் சங்கப் புலவர் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் சங்கத் தமிழர்களின் வர்த்தக மாண்பினை, தொல்பெரும் சிறப்பை அகப்பாடல் வரிகளில் படம்பிடிக்கிறார். “......................................... சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க யவனர் தந்த விளைமாண் நன்கலம் பொன்னோடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி.......................................” (அகம்.149:7-8) விளக்கம் சேர மன்னரது சுள்ளி மற்றும் பேரியாற்றினது வெள்ளிய நுரை சிதற யவனர்கள் கொண்டு வந்து தொழில் மாட்சியமைப்பட்ட நல்ல மரக்கலம் பொன்னுடன் வந்து மிளகோடு மீளும் வளம் பொருந்திய முசிறி என்னும் பட்டினம் என்பதாம். சுள்ளி பேரியாறு என்பன சேர நாட்டு முசிறி மருங்கில் கடலில் சங்கமிக்கும் நதிகளின் பெயர்கள் பொன்னைக் கொண்டு வந்து விலையாக கொடுத்து மிளகை ஏற்றிக் சென்றன கிரேக்கத்தின் பெரும் மரக்கலங்கள். சோழ, பாண்டிய துறைமுகங்களுக்கு இணையாக பெரும் சிறப்பு பெற்று விளங்கியது அன்றைய முசிறி துறைமுகம் என்பது இப்பாடல் அறிவிக்கும் அறியும் வரலாற்றுச் செய்தியாகும். குறிப்பு - சங்க காலத்து முசிறிப்பட்டினம் பேரா. ஷாஜன் மற்றும் பேரா. செல்வகுமார் முதலியோரின் முயற்சியால் அண்மைய தொல்லியல் அகழ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |