http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 122

இதழ் 122
[ ஆகஸ்ட் 2015 ] பதினொன்றாம் ஆண்டு நிறைவு மலர்


இந்த இதழில்..
In this Issue..

வள்ளுவத்தில் மதலை
தெரிவதும் தொடர்வதும் வரலாறுதான் வாருணி
சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில், இலால்குடி
To Sacred Shrines.. with Sacred Hymns..- 3
புகைப்படத் தொகுப்பு - திருச்சிராப்பள்ளி இலளிதாங்குரம்
இலளிதாங்குர பல்லவேஸ்வர கிருகம்
Rituals, Special occasions and Festivals at the Temples of Thiruchirappalli District - Part II
சிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-5
காஞ்சிபுரம் தெற்கிருந்த நக்கர் திருக்கோயில்
முசிறியின் பண்டமாற்று வணிகம்
இதழ் எண். 122 > கலையும் ஆய்வும்
சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில், இலால்குடி
சு.சீதாராமன்
அமைவிடம்

திருச்சிராப்பள்ளியிலிருந்து ஒரு இருபத்தாறு கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கில் திருமழபாடி வழியாக அரியலூர் செல்லும் மார்க்கத்தில் அமைந்துள்ள எழிலான அழகிய ஊர்.


அமைவிடம்



சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்


சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய வரலாற்றுப்பெட்டகங்களில் நிச்சயமாக இலால்குடி இலால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயத்திற்கு தனி இடமுண்டு என்றால் அது சற்றும் மிகையான கூற்றாக இராது. தேவர மூவரால் பாடல் பெறப்படாவிட்டாலும் இத்திருக்கோவிலில் கிடைக்கப்பெறும் பல்லவ,பாண்டிய மற்றும் முற்சோழர் கால கல்வெட்டுக்களிலிருந்து இத்திருக்கோயிலின் தொன்மையினையும் அரசியல்ரீதியாக அக்காலகட்டத்தில் இவ்வாலயம் பெற்ற முக்கியத்துவத்தையும் நாம் அறியலாம்


விமானம் மண்டபம் வடக்குப் புறம்


கட்டுமான அமைப்பு

மேற்கு நோக்கிய கருவறையாக அமையப்பெற்ற இவ்வாலயம் நாகர ஆதிதளம் பெற்று வேசர கிரீவம் மற்றும் சிகரத்துடன் கூடிய ஒரு தள விமானமாக காட்சியளிக்கிறது. எளிய பத்திப்பிரிப்புடன் கூடிய ஆதிதளத்தில் சாலைப்பகுதி மட்டும் சற்று முன்னிழுக்கப்பட்டு கோட்டத்துடன் அமையப்பெற்றுள்ளது . இக்கருவறையை அடுத்து காணப்படும் ஒடுக்கம் நுழைவாயிலோ கருங்கல் பலகணியோ இல்லாமல் மூடப்பட்ட ஒரு சுவராக காட்சியளிக்கிறது. இதனை அடுத்து பத்திப்பிரிப்புகளற்ற ஒரு முக மண்டபம் காணப்படுகிறது.


விமானம் கிழக்குப் புறம்


உபானம் பத்ம ஜகதி, ஊர்த்வ மற்றும் அத பத்ம வரிகளால் அணைவு பெற்ற உருள் குமுதம், நன்கு அலங்கார உறுப்புகளுடன் செதுக்கப்பட்டுள்ள யானை,குதிரை மற்றும் யாளி வீரகளுடன் கூடிய பிரதி வரிகள் பெற்று இவ்வதிஷ்டானம் பத்ம பந்த தாங்குதளமாக அமைந்துள்ளது. பிரதிவரிகளின் ஒவ்வொரு மூலையிலும் வாய் பிளந்த நிலையில் உள்ள மகரத்தின் வாயில் வாளேந்திய நிலையில் உள்ள வீரர்கள் காட்டப்பட்டுள்ளனர்.

அதிஷ்டானத்தின் ஜகதி மற்றும் குமுதப்பகுதியில் நிறைய கல்வெட்டுகள் காணக்கிடைகின்றன.

அதிஷ்டானத்திலிருந்து மேலெழும் வேதிகைத்தொகுதி அணைவுக்கம்புகளுடன் கூடிய கண்டம் பெற்று வேதிகையும் பெற்றுள்ளது. இவ்வேதிக்கண்ட பாதத்தில் புராணக்காட்சிகள் குறுஞ்சிற்பங்களாக காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வேதிக்கண்டத்தின் மேல் காட்டப்பட்டுள்ள வேதிகை மேல்நோக்கி சற்று வளைந்துள்ள வரிசையாக காணப்படும் தாமரை இதழ்களையும் அதற்கு மேலே ஒரு கம்பும் பெற்று காணப்படுகிறது.

விமானத்தின் சுவர் நான்கு பக்கத்திலும் இவ்வேதிகைப்பகுதியிலிருந்தே எழுகிறது. சாலை மற்றும் கர்ணப்பகுதிகள் விஷ்ணு காந்த அணைவுத்தூண்கள் பெற்று காணப்படுகிறன. தூண்கள் பிரம்மகாந்த அடிப்பாகம் பெற்று விஷ்ணுகாந்தமாக எழுந்து மாலாஸ்தானம்,கலசம்,தாடி,கும்பம்,பாலிகை மற்றும் பலகை பெற்று பலகையின் மேல் வீரகண்டத்துடன் எழுந்து குழவுத்தரங்கப்போதிகை பெற்று உத்திரம் தாங்குகின்றன.உத்திரத்தின் மேல் வலபியும் வாஜனமும், வலபியில் பூதவரியும் காட்டப்பட்டுள்ளன. அதன் மேலெழும் கூரை கபோதமாக லதாமண்டலங்கள் பெற்று அழகுடன் காட்டப்பட்டுள்ளது. கபோதத்திற்கு மேலெழும் பூமிதேசம் யாளிவரியாக காட்டப்பட்டுள்ளது. பூமிதேசத்தின் மேலெழும் கிரீவம், சிகரம் ஸ்தூபி ஆகியவை சுதையால் செய்யப்பட்டு சமீபத்தில் வண்ணம் தீட்டப்பட்டது எளிதில் அறிந்து கொள்வதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேவ கோட்ட சிற்பங்கள் சாலைப்பகுதியில் அமையப்பெற்றுள்ளன. இக்க்கோட்டங்கள் விஷ்ணுகாந்த அரைத்தூண்களால் அணைவு பெற்று கோட்டத்தின் அளவுகளுக்கு பொருத்தமாக இத்தூண்கள் சிறிதாக காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோட்டத்தின் மேல்பகுதி எழிலுடன் கூடிய மகரதோரணத்துடன் காட்சியளிக்கிறது.


பிச்சைத்தேவர்



வீணாதரர்


வடக்கு கோட்டத்தின் மகரதோரணத்தில் நடுவில் ஒரு இராமாயணக்காட்சி காட்டப்பட்டுள்ளது. மூன்று கோட்டங்களிலும் நின்ற நிலையில் காணப்படும் உருவங்கள் வடக்கில் பிச்சை தேவரும், தெற்கில் வீணாதர தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் அர்த்தநாரீஸ்வரருமாக எழிலுடன் காட்டப்பட்டுள்ளனர்.


அம்மையப்பர்


கருவறையை அடுத்து எழும் பத்திப்பிரிப்புகளற்ற முகமண்டப சுவர்கள் நான்கு விஷ்ணு காந்த தூண்களுடன் எழுப்பப்பட்டு கருவறை போலவே அமையப்பெற்ற கூரைகளை தாங்குகின்றன.


முகமண்டபம்


சிற்பங்கள்

இத்திருக்கோயில் சிற்பங்கள் கண்கவரும் வண்ணம் பல வகைகளில் அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப மாறுபட்டு எழிலுற செதுக்கப்பட்டுள்ளது

பல வகைப்பட்ட விலங்குகளின் சிற்பங்கள் பிரதிவரியில் இடம்பெற்றுள்ளன குறிப்பாக யாளிகளின்யின் மேலும் யானைகளின் மேலும் குதிரைகளின் மேலும் வீரர்கள் போரிடும் காட்சிகள்! வாய்பிளந்த மகரங்களில் வாள் மற்றும் கேடயத்துடன் வீரர்கள்! இம்மகரங்களில் சவாரி செய்யும் வீரர்கள்!

அதிஷ்டானத்தின் வேதிக்கண்ட பகுதியில் செதுக்கப்பட்டுள்ள குறுஞ்சிற்பங்கள் புராண இதிகாச காட்சிகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இராமயணக்காட்சிகளும் சிவபுராணச்சிற்பங்களும் இச்சிறுபகுதியில் செதுக்கப்பட்டுள்ளது சோழர்களின் கலைப்பாணியின் தனித்துவம் என்றால் அது மிகையாகாது! இக்குறுஞ்சிற்பங்களில் பல முதற்பராந்தகர் கலைப்பாணியில் காணப்படுவது கவனிக்கத்தக்கதாகும்.

கோட்டங்களின் மேல் உள்ள மகரதோரணங்கள் அழகிய சிற்பங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது! குறிப்பாக வடக்கு தோரணத்தில் காணப்படும் இராமாயணக்காட்சி இக்காலகட்டத்தில் மகரதோரணத்தில் இராமாயணக்காட்சி இடம்பெறுவது முற்சோழர் கால கோயில்களில் இத்திருக்கோயிலில் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோட்டங்களில் இடம் பெறும் நீண்ட நின்ற நிலையில் உள்ள சிற்பங்கள் ஒரு ஒற்றுமையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வொற்றுமையானது அவைகள் சிவனின் வெவ்வேறு வடிவங்கள் என்பதுவே! இவ்வகையில் கோட்டச் சிற்பங்கள் இடம் பெறுவது முற்சோழர் கோயில்களில் திருப்பழனம், திருப்பூந்துருத்தி,திருச்சோற்றுத்துறை மற்றும் தில்லைஸ்தானம் போன்ற திருக்கோயில்களில் காணலாம்.

இலால்குடியில் அமைந்துள்ள வீணாதர தட்சிணா மூர்த்தி சோழர்கால சிற்பங்களில் சிறந்த நிலையில் செதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சிற்பங்களில் ஒன்று எனலாம்.

கட்டுமானத்தின் காலம்

இத்திருக்கோயிலின் விமானம் மற்றும் முக மண்டபத்தின் அதிஷ்டானம் மற்றும் சுவர்களிலிருந்து கிடைக்கும் கல்வெட்டுகளில் மிகவும் காலத்தால் முற்பட்ட மூன்றாம் பல்லவ நந்திவர்மனின் 5 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டும் அவருடைய புதல்வன் நிருபதுங்கவர்மனின் 2 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டும் , பாண்டிய மன்னன் மறவன் சடையன் என்ற வரகுண சக்கரவர்த்தியின் 13 ஆம் ஆட்சியாண்டுக்கல்வெட்டும் காணக்கிடைக்கின்றன.

ஆனால் இப்போதிருக்கும் இத்திருக்கோயில் கட்டுமானம் முற்சோழர் முறையிலேயே அமைந்திருப்பதும் பல்லவ மற்றும் பாண்டியர் முறையில் கட்டுமானக் கூறுகள் இல்லாதிருப்பதும் இக்கல்வெட்டுகள் இத்திருக்கோயில் பின்னாளில் கற்றளியாக்கப்பட்டபொழுது ஓலைகளிலிருந்து கற்றளிக்கு மாற்றப்பட்டமை என்பதும் வெள்ளிடை மலை போல் விளங்குதலுக்கு உரியதாகும்.

முற்சோழர் கால கல்வெட்டுகளில் முதலாம் அதித்த சோழனின் 27ம் ஆண்டு கல்வெட்டு முகமண்டபத்தில் தெற்கு பகுதியில் காணக்கிடைகிறது . இக்கல்வெட்டுகளின் எழுத்தமைதி கொண்டு முன்பு ஆய்வு செய்த அனைத்து சரித்திர ஆசிரியர்களும் இவ்வெழுத்தமைதி முற்சோழர் முறையில் அமைந்துள்ளதால் ஆதித்த சோழனின் 27 ஆம் ஆண்டு கல்வெட்டையும் இணைத்து இது முதலாம் ஆதித்தனனின் காலத்திய கட்டுமானம் என்றே தீர்மானித்துள்ளனர். (SRB 1966:97 & Dhake in Meister et al. 1983:163). இந்த த் தீர்மனத்தினை மீள்பரிசீலனை செய்யவேண்டியுள்ளது.


விமானத்தில் மதுரை கொண்ட கோப்பரகேசரி கல்வெட்டு


முதலாவதாக, இத்திருக்கோயிலின் பெரும்பகுதியில் நாம் காணும் கல்வெட்டுகளில் “மதுரை கொண்ட கோப்பரகேசரி” எனத்தொடங்கும் முதற்பராந்தகரின் கல்வெட்டுகளும் மதுரை கொண்ட என்ற அடைமொழி இல்லாத சில பரகேசரி வர்மனின் கல்வெட்டுக்களும் காணக்கிறைக்கின்றன. இக்கல்வெட்டுகள் அனைத்தும் விமானத்தின் அதிஷ்டானத்திலும் சுவர் பகுதிகளிலும் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேற்கூறிய ல்லவ ,பாண்டிய மற்றும் முதலாம் ஆதித்தன் ஆகியோரது கல்வெட்டுகள் விமானத்தில் காணப்படாமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இரண்டாவதாக , வேதிபாதம் மற்றும் கண்ட பாதங்களில் குறுஞ்சிற்பங்கள் அமைப்பது பராந்தகர் கால கட்டுமானங்களின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இக்கோயிலின் குறுஞ்சிற்பங்களின் கருத்துருவாக்கங்கள் பெரும்பாலும் திருச்சென்னம்பூண்டி மற்றும் புள்ளமங்கை கோயில்களின் குறுஞ்சிற்பங்களின் கருத்துருவாக்கங்களுடன் இணைந்து செல்வதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மூன்றாவதாக இராமாயணக் காட்சிகளை குறுஞ்சிற்பங்களில் அமைப்பது பராந்தகர் கால கட்டுமானத்தின் தனித்துவமான அங்கமாகும். இக்கூற்றினை வேறு பராந்தகர் கால கட்டுமானக்கோயில்களின் கண்டபாத மற்றும் வேதிபாத இராமாயண காட்சிகளடங்கிய குறுஞ்சிற்பங்களை ஒப்பிட்டு நோக்குவதன் மூலம் நாம் விளங்கிக்கொள்ளலாம்.

இராஜகேசரி ஆதித்தனின் உச்சபட்ச ஆட்சியாண்டுக்கல்வெட்டை கருத்தில் கொண்டு இத்திருக்கோயிலின் செங்கல் கட்டுமானம் கருங்கல் கற்றளியாக மாற்றம் பெற்றது ஆதித்த சோழனின் கடைசி காலங்களில் தொடங்கப்பட்டு முதற்பராந்தக சோழனால் முழுமைப்படுத்தப்பட்டது என்பதாக கருதலாம்.

சில முடிவுகள்

மேற்கூறிய ஆய்வுகளிலிருந்து கீழ்க்கண்ட முடிவுகளை நாம் கொள்ளலாம்.

இலால்குடி ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவ மற்றும் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருந்தது போலவே சோழர்களின் ஆட்சியிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

பண்டைய செங்கல் கட்டுமானம் முற்சோழர் காலத்தில் கற்றளியாக மாற்றம் பெற்றிருக்கிறது. குறிப்பாக முதலாம் ஆதித்தனால் தொடங்கப்பெற்று முதற்பராந்தகரால் முழுமைப்படுத்தப்பட்டது.

இலால்குடி திருக்கோயிலின் கட்டுமானம் மற்றும் சிற்பங்கள் சோழசிற்பிகளின் பல்நோக்கு திறமைகளை பறைசாற்றுவதாக அமைந்துள்ளமை இத்திருக்கோயிலில் செதுக்கப்பட்டுள்ள மிருகங்கள்,மனிதர்கள் மற்றும் கடவுளர்களின் பல்வேறு சிற்பங்களிலிருந்து அறியலாம்.

நன்றி

டாக்டர் இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் முனைவர் இரா.கலைக்கோவன் மற்றும் முனைவர் மு.நளினி

கோயில் அதிகாரிகள்

சக முனைவர் பட்டய ஆய்வர் திரு.கோகுல் சேஷாத்ரி

துணை நூல்கள்

தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் (Volume II -Part III and Volume -V)

Balasubramaniyam S.R Early Chola Art, Asia Publishing House , New Delhi ,1996.

Meister et al. Encyclopaedia of Indian Temple Architectture : Vol-I, Part -I, American Institute of Indian Studies, New Delhi, 1983.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.