![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 128
![]() ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
சிராப்பள்ளி முசிறிச் சாலையில் உமையாள்புரத்தை அடுத்துள்ள சுண்டைக்காய் என்னும் ஊரில் ஆய்வு மேற்கொண்டபோது புறவழிச்சாலையில் பாதிக்குமேல் மண்ணில் புதைந்த நிலையில் இருந்த சிற்பம் ஒன்றைக் கண்டோம். பேராசிரியர் முனைவர் மு. நளினியின் வழிகாட்டலில் ஊர் மக்களின் உதவியுடன் அச்சிற்பத்தைச் சுற்றிலும் அகழ்ந்து பார்த்த நிலையில், அது சோழர் காலத்தைச் சேர்ந்த சண்டேசுவரர் சிற்பமாக அமைந்திருந்தமை தெரியவந்தது. 92 செ. மீ. உயரம், 58 செ. மீ. அகலம், 15 செ. மீ. திண்மை கொண்டுள்ள இச்சிற்பம் பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டுக் கலையமைதியில் உள்ளது. சடைப்பாரம் என்ற அமைப்பில் தலையலங்காரமும் தொடையளவாகச் சுருக்கிய இடையாடையும் கொண்டு, ஒரு காலை மடித்து இருக்கையில் இருத்தி, மறுகாலைக் கீழிறக்கிய நிலையில் சுகாசனத்தில் அமர்ந்துள்ள சண்டேசுவரரின் கீழிறக்கிய கால் (வலக்கால்) மண்ணில் புதைந்துள்ளது. வலச்செவி குண்டலங்கள் ஏதுமின்றி நீள்வெறுஞ் செவியாக இருக்க, இடச்செவியில் கனமான பனையோலைக் குண்டலம். முப்புரிநூல், இடைப்பட்டை, தாள்செறி, கைவளை அணிந்துள்ள சண்டேசுவரரின் கழுத்தில் அகலமான அலங்காரச் சரப்பளியைக் காணமுடிகிறது. வலக்கையில் மழு ஏந்தியுள்ள அவரது இடக்கை தொடைமீது இருத்தப்பட்டுள்ளது. பொலிவான உருண்டை முகமும் செறிவான உடலமைப்பும் கொண்டுள்ள இச்சிற்பத்தின் வடிப்புக்கூர்மை சிறப்பாக அமைந்துள்ளது. 63 நாயன்மார்களுள் ஒருவராக அறியப்படும் சண்டேசுவரர் பலவிதங்களில் சிறப்புக்குரிய அடியவராவார். பல்லவர் காலத்திலிருந்தே கோயில்களில் இடம்பெறத் தொடங்கிய மிகச் சில நாயன்மார்களுள் சண்டேசுவரர் முதன்மையானவர். தமிழ்நாட்டுக் கோயில்களில் சண்டேசுவரருக்கென்று கோயிலின் வடக்குச் சுற்றில் தனித் திருமுன்கள் கட்டமைக்கப்பட்டன. அத்தகு திருமுன்களில் அளவில் பெரியதாகவும் சிற்பச் சிறப்புடையதாகவும் கல்வெட்டுகள் கொண்டதாகவும் அமைந்துள்ள சண்டேசுவரர் திருமுன் தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் வளாகத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறைவனின் முதன்மைத் தொண்டராகக் கல்வெட்டுகளில் குறிக்கப்படும் சண்டேசுவரர் சிவபெருமானால் மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டுச் சண்டீசப்பதம் அளிக்கப்பட்ட பெருமைக்குரியவர். கோயில் அலுவலர்களைக் குறிப்பிடும்போது தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் அவர்களை ஆதிசண்டேசுவர தேவகன்மிகளாகவே குறிப்பிட்டுச் சிறப்புச் செய்கின்றன. கோயில்களுக்குரிய கொடுக்கல் வாங்கல்களும் சண்டேசுவரர் பெயராலேயே நிகழ்ந்தமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உண்டு. கோயில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புகள் சண்டேசுவரர் அருளிச் செய்ததாகச் சுட்டும் கடித வடிவிலான கல்வெட்டுகளையும் காணமுடிகிறது. இத்தகு உயர்நிலைக்குரிய சண்டேசுவரரின் சிற்பம் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளமை இவ்வூரிலோ அல்லது பக்கத்து கிராமங்களிலோ சோழர் காலக் கோயில் ஒன்று இருந்து காலப்போக்கில் மறைந்து போனமையைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். ஆய்வுக்குத் துணைநின்ற ஊரார், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர். இரா. கலைக்கோவன், உதவியாளர் திரு. பி. லோகநாதன் ஆகியோருக்கு உளமார்ந்த நன்றி உரியது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |