http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 128



இந்த இதழில்..
In this Issue..

அருள்மிகு நாகநாதசாமி திருக்கோயில்
SOMESWARA SHRINE OF SOMUR-Continued
திருக்கழுக்குன்றம் குடைவரை
கண்ணாரக் கண்டும் கையாரக் கூப்பியும்....
பரமேசுவரமங்கலம் திருக்கோயில்கள்
சிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள் - 9
இன்குதல் விறலியர் இசை மரபு
இதழ் எண். 128 > கலையும் ஆய்வும்
அருள்மிகு நாகநாதசாமி திருக்கோயில்
மு.நளினி, அர.அகிலா

சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை நகரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு நாகநாதசாமி திருக்கோயில். சுற்றிலும் மதிலால் சூழப்பெற்று, வடகிழக்கில் வாயில் பெற்றுள்ள இக்கோயில் வளாகத்தில் கிழக்கு மதிலை ஒட்டி, மேற்குப் பார்வையாக, இந்நகரில் மருத்துவப் பணியாற்றி அமரரான திரு. வி. என். இலட்சுமிநாராயணன் பெயரில் நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வாயிலை ஒட்டி வளாகத்தின் வடகிழக்கு மதிலருகே உள்ள பின்னாளைய திருமுன்னில், பின்கைகளில் உடுக்கையும் பாசமும் கொண்டு,முன்கை களில் முத்தலைஈட்டியும் தலையோடும் ஏந்தியவராய்க் கரண்ட மகுடம், பாம்பு அரைஞாண், சுடர்முடி கொண்ட நிர்வாணியாக பைரவர் இடம்பெற்றுள்ளார். அவர் பின்னே அவரது ஊர்தியான நாய்.

வளாகச் சுற்று

வளாகத்தின் தென்புறம் பல அறைகள் உள்ளன. தென்மேற்கில் உயர்த்திக் கட்டப்பெற்ற செங்கல்லாலான ஒருதள திராவிடத் திருமுன்னில் பிள்ளையாரும் மேற்கிலுள்ள ஒருதள வேசரத் திருமுன்னில் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகனும் உள்ளனர். இரண்டு திருமுன்களுமே முன்றில் பெற்றுள்ளன. கரண்டமகுடம், உதரபந்தம், முன் விரிப்புக் கொண்ட பட்டாடையுடன் இலலிதாசனத்தில் உள்ள பிள்ளையாரின் பின்கைகளில் பாசம், அங்குசம். முன்கைகளில் உடைந்த தந்தம், மோதகம். வலம்புரித் துளைக்கையிலும் மோதகம்.

மயில் மேல் சுகாசனத்திலுள்ள ஆறுமுகனின் பன்னிரண்டு கைகளில் முன்கைகள் இரண்டும் காப்பு, அருட்குறிப்புகளில் உள்ளன. பின்னிரண்டு கைகளில் முருகனுக்கே உரிய வஜ்ரமும் சக்தியும். இடைக்கைகளில் பல்வேறு கருவிகள். பட்டாடையும் கச்சுமாய்க் காட்சிதரும் வள்ளி, தெய்வானை வெளிக்கைகளை நெகிழ்த்தி, உள்கைகளில் மலரேந்தியுள்ளனர். வளாகத்தின் வடபுறத்தேயுள்ள சிறு திருமுன்னில் வலக்கையில் மழுவேந்தி சுகாசனத்தில் உள்ள சண்டேசுவரரது இடக்கை அருட் குறிப்புக் காட்ட, கைகளில் கங்கணம், வளை.

இறைவன், இறைவித் திருமுன்கள்

வளாகத்தின் நடுப்பகுதியில் பேரளவிலான கற்பந்தல், பெருமண்டபம், முகமண்டபம், விமானம் என இறைவன் திருமுன்னும் பெருமண்டபத்துள் வாயில் கொண்டு, அதன் வடபுறத்தே முகமண்டபம், விமானம் பெற்று இறைவித் திருமுன்னும் விளங்குகின்றன.

 

 

கற்பந்தல்

பன்னிரண்டு முச்சதுர, இருகட்டுத் தூண்கள் வெட்டுத் தரங்கப் போதிகை கொண்டு கூரை தாங்கும் கற்பந்தல் தூண் ஒன்றில் காணப்படும் பின்னாளைய கல்வெட்டுப் பொறிப்பு சங்கரன் நித்தம் சதாசேர்வை என்கிறது. பெருமண்டபத்தின் வாயிலைப் பக்கத்திற்கொருவராகக் காவலர் இருவர் காக்கின்றனர். சமபங்கத்திலுள்ள வடக்கரின் பின்கைகளில் மழு, பாசம். வல முன் கை எச்சரிக்க, இட முன் கை உருள்பெருந்தடி பிடித் துள்ளது. கரண்டமகுடம், பட்டாடை, பல்வேறு அணிகலன்கள் பெற்றுள்ள இவர் பாதங்களில் தாள்செறிகள். தெற்கர் பின் கைகளில்  அங்குசம், பாசம் கொண்டு, இட முன் கையைக் காப்பு முத்திரையில் கொண்டுள்ளார். வல முன் கை உருள்பெருந்தடி பிடித்துள்ளது. ஆடை, அணிகலன்கள் வடக்கர் போலவே  பெற்றுள்ள இவரது தாள்களிலும் செறிகள். இப்பந்தலின் மேலே நான்கு மூலைகளிலும் சுதையாலான நந்திகள்.

பெருமண்டபம்

கிழக்கிலும் தெற்கிலும் வாயில்கள் பெற்றுள்ள பெருமண்டபக் கூரையை முச்சதுர, இருகட்டுத் தூண்கள் பூமொட்டுப் போதிகைகளுடன் தாங்குகின்றன. தூண்களின் சதுரமுகங்களில் சங்கூதும் பூதம், காளிங்கமர்த்தனம், வேடர் கண்ணப்பர், புல்லாங்குழல் கலைஞர், பிச்சைத்தேவர், பிள்ளையார், அனுமார், நந்தி, விஷ்ணு, சிம்மம், அன்னம், மகரம், குரங்கு, குதிரை வீரர் எனப் பல்வேறு சிற்பங்கள். கீழ்ச்சதுரங்கள் பேரளவிலான நாகபந்தம் பெற்றுள்ளன. மண்டபத்தின் இரு வாயில்களின் கதவுகளும் கவரிப்பெண்கள், சிவபெருமான், இறைவி, முருகன், பிள்ளையார், விளக்குப் பாவைகள், நந்தி, தென்திசைக்கடவுள் முதலிய சிற்பங்களாலும் தாமரைப் பதக்கங்களாலும் அழகுபடுத்தப்பட்டுள்ளன.

 

 

 

 

மண்டபத்தின் கிழக்குச் சுவர் வாயிலருகே மேலன்னம் நீண்ட மீன் சிற்பம் ஒன்றும் இரட்டை மீன்களின் சிற்பமும் உள்ளன. இது போன்ற சிற்பங்கள் இலால்குடி சப்தரிஷீசுவரர் கோயிலிலும் இடம்பெற்றுள்ளன. மண்டபத்தின் தெற்கு வாயிலைக் காவற்பெண்கள் காக்கின்றனர். மேற்கிலுள்ளவர் வலக்கையை உருள்பெருந்தடி மீது இருத்தி, இடக்கையில் காப்பு முத்திரை காட்ட, கிழக்கிலுள்ளவர் வலக்கையால் எச்சரித்து, இடக்கையைத் தடிமீது இருத்தியுள்ளார். இருவருமே கரண்டமகுடர்களாய்க் கச்சு, பட்டாடை, கழுத் தணிகள், கங்கணம், வளை, ஸ்வர்ணவைகாக்ஷம் கொண்டு நிற்கின்றனர்.

மாதுளாம்பிகைத் திருமுன்

பெருமண்டபத்தின் வடபுறத்தே வாயில் பெற்றுள்ள மாதுளாம்பிகைத் திருமுன் முகமண்டபம், ஒருதள வேசர விமானம் பெற்றுள்ளது. கருவறையில் இறைவி பின்கைகளில் தாமரை மொட்டு, அக்கமாலை ஏந்தி, முன்கைகளைக் காப்பு, அருள்முத்திரைகளில் கொண்டுள்ளார்.

முகமண்டபம், கருவறை

பெருமண்டபத்தின் மேற்கில் வாயிலுடன் முகமண்டபமும் அதையடுத்துக் கருவறையும் உள்ளன. இறைவன் நாகநாதசாமி என்ற திருப்பெயருடன் இலிங்கத்திருமேனியராய்க் கருவறையில் எழுந்தருளியுள்ளார். முகமண்டப வாயிலை ஒட்டி வலப்புறம் பிள்ளையார்.

இறைவன் விமானம்

முத்தள நாகரமாய் உள்ள இறைவன் விமானத்தின் கீழ்த்தளம் பாதபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகளுடன் கருங்கல் பணியாய்க் காட்சிதருகிறது. கண்டப்பகுதிவரை சுற்றுத்தரை உயர்த்தப்பட்ட நிலையில், கண்டமும் பட்டிகையுமே தாங்குதள உறுப்புகளாய்க் காட்சிக்குக் கிடைக்கின்றன. சுவரின் முப்புறத்துமுள்ள கோட்டங் களில் தென்புறம் ஆலமர்அண்ணலும் மேற்கில் இலிங்கோத்பவரும் வடக்கில் நான்முகனும் இடம்பெற்றுள்ளனர்.

கோட்டச் சிற்பங்கள்

முயலகன் முதுகின்மீது வலப்பாதம் இருத்தி, வீரசானத்திலுள்ள ஆலமர்அண்ணல், பின்கைகளில் உடுக்கை, தீயகல் ஏந்தியுள்ளார். முன்கைகளில் வலக்கை சின்முத்திரை காட்ட, இடக்கை சுவடி கொண்டுள்ளது. இக்கோட்டத்தின் முன் மக்கள் மண்ட வாய்ப்பாகச் செங்கற்பந்தல் அமைக்கப் பட்டுள்ளது. பின்கைகளில் மான், மழுவுடன் உள்ள மேற்குக் கோட்ட இலிங்கோத்பவரின் வல முன் கை காக்கும் குறிப்புக் கொள்ள, இட முன் கை கடியவலம்பிதமாய்த் தொடைமீது படர்ந்துள்ளது. மேலே அன்னத்தில் நான்முகன் காட்சிதரக் கீழே பன்றி. இலிங்கோத்பவரின் கீழ்ப்பகுதியில் பக்கத்திற்கு ஒருவராக நான்முகனும் விஷ்ணுவும் உள்ளனர். இலிங்கத்தின் இடமேற்பகுதியில் தாழம்பூ காட்டப்பட்டுள்ளமை சிறப்பு. சடைமகுடம், கழுத்தாரம், பட்டாடை, வளைகள் பெற்றுள்ள வடக்குக் கோட்ட நான்முகன் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை கொண்டு,  வல முன் கையைக் காக்கும் குறிப்பில் இருத்தியுள்ளார். இட முன் கை கடகத்தில் உள்ளது.

ஆரஉறுப்புகளும் மேற்றளங்களும்

விமானத்தின் கீழ்த்தள ஆரம் ஆறங்க உறுப்புகளுடன் வண்ணப்பூச்சிலான சுதையுருவங்கள் கொள்ள, உயரமான இரண்டாம் தளத்தையடுத்து இயல்பான மூன்றாம் தளமும் நாகர கிரீவம், சிகரம் ஆகியனவும் குடமும் உள்ளன. சாலைகளிலும் கிரீவ பெருநாசிகைகளிலும் தெற்கில் ஆலமர் அண்ணலும் மேற்கில் விஷ்ணுவும் வடக்கில் நான்முகனும் கிழக்கில் சிவபெருமானும் சுதையுருவங்களாக இடம் பெற்றுள்ளனர். பிற ஆரஉறுப்புகளிலும் பல்வேறு இறைக் கதைகளை முன்னிருத்தும் சுதையுருவங்கள் நிறைந்துள்ளன.

முகமண்டபக் கோட்டங்கள்

விமானத்தையொத்த அதே கட்டமைப்பிலுள்ள முக, பெருமண்டபங்களில் முகமண்டபம் தெற்கிலும் வடக்கிலும் கோட்டங்கள் பெற்றுள்ளது. தென்கோட்டத்தில் ஆடற் கோலப் பிள்ளையாரும் வடகோட்டத்தில் கொற்றவையும் உள்ளனர். இடப்பாதத்தை உத்கட்டிதத்தில் இருத்தி, வலப்பாதத்தைத் திரயச்ரமாக்கியுள்ள பிள்ளையாரின் பின்கைகளில் அங்குசம், பாசம். இப்பாசம் தலைகீழாகப் பற்றப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. வல முன் கை உடைந்த தந்தம் கொள்ள, இட முன் கை மோதகத்தை இடம்புரித் துளைக்கை சுவைக்கிறது. வடகோட்டத்தில் எருமைத்தலைமீது சமபங்கத்தில் உள்ள கொற்றவை வல முன் கையைக் காக்கும் குறிப்பில் கொண்டுள்ளார். இட முன் கை கடியவலம்பிதமாக அமைய, பின்கைகளில் சங்கு, சக்கரம். கரண்டமகுடம், பட்டாடை, கச்சு, கங்கணம் வளைகள் பெற்றுள்ள அம்மையின் கழுத்தில் ஆரம். இவர் கோட்டத்தின் முன்னும் ஆலமர்அண்ணல் கோட்டத்தின் முன் உள்ளாற் போலச் செங்கற் பந்தலைக் காணமுடிகிறது.

அம்மன் விமானம், முகமண்டபம்

அம்மன் எழுந்தருளியுள்ள விமானமும் முகமண்டபமும் இறைவன் விமானம் ஒத்த அதே கட்டமைப்பில் திகழ்கின்றன. விமானச் சுவரின் முத்திசைக் கோட்டங்களும் முகமண்டபத் தின் வட, தென்கோட்டங்களும் அகலக் குறுக்கமாக இருந்த போதும் ஆழமாக உள்ளன. வெறுமையாக உள்ள இந்தக் கோட்டங்களை இறையகம் போலவே சட்டத்தலை பெற்ற நான்முக அரைத்தூண்கள் தழுவியுள்ளன. விமான கிரீவ கோட்டங்கள் வண்ணச் சுதையுருவங்களாய் இறைவியின் பல்வேறு தோற்றங்களைக் கொண்டுள்ளன.

காலம்

கல்வெட்டுகளோ, பழஞ்சிற்பங்களோ இல்லாத சூழலில் இக்கோயிலின் காலத்தை இப்போதுள்ள கட்டமைப்புக் கொண்டு பொதுக்காலம் 16 அல்லது 17ஆம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.

முடிவுரை

இக்கோயில் ஆய்வுக்குத் துணைநின்ற திருஆனைக்கா இயற்கை நலவாழ்வு மைய நிறுவனர் திரு. பெ. பாலசுப்பிரமணியன், பேராசிரியர் கு. இரத்தினவேலு, மணியாங்குறிச்சிப் புலவர் திரு. இருளப்பன், சிவாச்சாரியார் திரு. சு. தியாகராசன் ஆகியோருக்கு உளமார்ந்த நன்றி.

       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.