http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 129

இதழ் 129
[ அக்டோபர் 2016 ]


இந்த இதழில்..
In this Issue..

எவ்விதத்தானும் அறமன்று
புள்ளமங்கை பயண அனுபவங்கள் - ஒரு பகிர்வு
வாசிப்பில் வந்த வரலாறு - 6
SOMUR SOMESWARA TEMPLE - 3
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 2
மதி சேர்ந்த மகம்
இதழ் எண். 129 > இதரவை
வாசிப்பில் வந்த வரலாறு - 6
ச. கமலக்கண்ணன்

இன்றைக்கு சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மின்னிதழில் "வாசி வாசியென்று வாசித்த தமிழின்று " என்றொரு கட்டுரை எழுதியிருந்தேன். தமிழ்ச் சமூகத்தின் விழுமியங்கள் பாழ்பட்டுக் கிடக்கின்ற அவலத்தை எண்ணி அன்றைக்குப் பட்ட கவலை தீர ஓர் ஒளிக்கீற்று கடந்த புத்தகக் கண்காட்சியில் தென்பட்டது. அவலநிலையை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைவிட அதற்கான தீர்வை முன்வைப்பதும் அதற்கான முதல் அடியை எடுத்து வைப்பதும் மிகவும் முக்கியம். "இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயச் சிற்பிகள்" என்று ஜவகர்லால் நேரு சொன்னார். குழந்தைகள் என்பது பள்ளிப் பிள்ளைகள் மட்டுமல்ல; இளைஞர்களையும் சேர்த்துதான். 18 வயது முடிந்து முதல்முறை வாக்களிக்கும்போதே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பணியைத் தொடங்கி விடுகின்றனர். மீதமிருக்கும் வாழ்நாட்களை எந்தச் சூழலில் எத்தகைய வசதிகளுடன் கழிக்கப் போகிறோம் என்பது இப்போது அளிக்கும் வாக்கிலிருந்தே மறைமுகமாகவேனும் முடிவு செய்யப்படுகிறது. நாம் யாரைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறோமோ அவர்கள்தான் நம் எதிர்காலத்தை முடிவு செய்யப்போகிறார்கள். அப்படியென்றால், முதல்முறை மட்டுமல்லாது பலமுறை வாக்களித்தவர்களின் அரசியல் அறிவும் சமுதாய அக்கறையும் எப்படி இருக்கவேண்டும்? வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்பதுபோல, மக்களின் எண்ணத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்றாற்போலத்தான் அவர்களுக்கான தலைவர்கள் அமைவார்கள் என்பது அரசியல் அறிவியலின் முக்கியப்பாடம்.

இந்த அரசியல் அறிவையும் சமுதாய அக்கறையையும் தீர்மானிப்பது ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலும் கட்டமைக்கப்பட்டிருக்கும் பொதுப்புத்திதான். வரலாறு, இலக்கியம், அரசியல், தாய்மொழிப்பற்று, பொருளாதாரம் ஆகியவை சார்ந்த இந்தப் பொதுப்புத்தி கட்டமைக்கப்படும் விதத்தை எடுத்துக்கூறி, இன்றைய இளைய தலைமுறை அறிந்திருக்க வேண்டிய இருபதாம் நூற்றாண்டின் தமிழக, இந்திய, உலக அரசியல் வரலாற்றை எளிதாகப் புரியவைக்கும் நோக்கில் இயற்றப்பட்டிருக்கிறது "அறிந்தும் அறியாமலும்" என்ற நூல். பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களின் தெளிவான நடையில் சுவை குன்றாமல் செய்திகளை இணைத்தும் அடுத்தடுத்த அத்தியாயங்களைத் தொடர்ச்சி விடுபடாமல் கட்டமைத்திருப்பதும் இந்நூலை ஒரேமூச்சில் வாசிக்க வைத்தது. எனது கட்டுரையில் பொதுவாக வாசிக்கும் பழக்கம் வேண்டும் என்று எழுதியிருந்தேன். இந்நூல் அதை இன்னும் சற்று விரிவாக எதைப்பற்றிப் படிக்கவேண்டும், எப்படிப் படிக்கவேண்டும் என்றும் அலசுகிறது.

கல்கி பொன்னியின் செல்வனை எழுத ஆரம்பித்ததன் நோக்கம் பலருக்குத் தெரிந்திருக்கும். இந்நாளில் காட்டுமன்னார்கோயில் என்றழைக்கப்படும் உடையார்குடியில் இருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் வரும் "துரோகிகளான இரவிதாசன் .... " என்ற அடியை ஒட்டிப் பின்னப்பட்ட பல்சுவை வரலாற்று நாவல் முழுவதும் அத்தியாய வாரியாக முன்னரே முடிவு செய்யப்பட்டு எழுதப்பட்டதல்ல. பல கட்டுரைத் தொடர்களில் பாதி ஏற்கனவே எழுதி முடிக்கப்பட்டு வெளியிட ஆரம்பித்தபின் வரும் வாசகர்களின் கடிதங்களும் கருத்துகளும் அடுத்தடுத்த அத்தியாயங்களின் போக்கை முடிவு செய்யும். இந்நூல் இணையத்தில் தொடராக வெளிவந்து இரண்டாம் அத்தியாயம் முதலே இவ்வாறுதான் எழுதப்பட்டது என்ற முன்னுரையுடன் தொடங்குகிறார் ஆசிரியர்.

இப்போது பொதுப்புத்திக்கு வருவோம். அறிதோறும் அறிதோறும் வரும் அறியாமை வேறு; அறிய விரும்பாததால் வரும் அறியாமை வேறு. கணிப்பொறி, மின்னணுவியல் மற்றும் இயந்திரவியல் துறைகளில் இன்றைய இளந்தமிழர்கள் திறமையாகக் கோலோச்சும் "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை"யை வியக்கும் அதேவேளையில், தமிழ்ச் சமூகத்தின் மூளையில் மூன்று துறைகளைப் பற்றிக் கட்டமைக்கப்பட்டிருக்கும் பொதுப்புத்தியினால் உண்டான அறியாமையைப் பற்றிப் பேசுகிறது முதல் அத்தியாயம்.

1. இலக்கியம் பயனற்றது. வேறு எந்தத் துறையிலும் இடம் கிடைக்காதவன்தான் இலக்கியம் படிப்பான்.
2. அரசியல் கயமைத்தனம் நிறைந்தது. அதில் ஈடுபட்டுள்ள அனைவரும் அல்லது மிகப் பெரும்பான்மையினர் அயோக்கியர்கள்.
3. கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்குரியது. படித்தால்தான் வேலை கிடைக்கும், பணம் சேர்க்க முடியும். தான் முன்னேறுவதும் தன் குடும்பத்தை முன்னேற்றுவதும்தான் நல்ல குடிமகனின் அடையாளங்கள்.

இவைதான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் ஓரிருவரின் பெயரைக் கேட்டதற்கு முதுகலை தமிழ் படித்தவரிடமிருந்தே மு.வ என்ற பதில் வந்ததற்கும், பாவேந்தரின் படத்தைக் காட்டி யாரென்று கேட்டதற்கு முத்துராமலிங்கத் தேவர் என்ற பதில் வந்ததற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகையாளர் திரு. மாலன் அவர்கள் மரத்தடி வலைத்தளத்தில் எழுதிய "காணாமல் போன கனல்" என்ற கட்டுரைத் தொடரிலும் இக்காரணிகள் அலசப்பட்டிருந்தன. "இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்" என்பது இன்று இந்தி எதிர்ப்புப் போராட்டமாக அறியப்படுவது தமிழ் இளைஞர்களின் சமகால வரலாற்று அறியாமையால்தான். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. அமெரிக்காவிலும் சில ஆப்பிரிக்க நாடுகளிலும் கருப்பின மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடி வெற்றி பெற்றது தமது வரலாற்றைச் சரியான முறையில் புரிந்து கொண்டதாலும், இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கக் கூட்டுப் படையினரால் சின்னாபின்னமாக்கப்பட்டுப் பிறகு போராடி வளர்ந்த ஜப்பான் இன்று அமெரிக்க வர்த்தகப் பொருட்களின் நுகர்வுக் கலாச்சார அடிமைகளாக ஆனது தமது சமகால வரலாற்றைச் சரிவர அறிந்து கொள்ளாததாலும்தான்.

இப்போது எதைப் படிக்கவேண்டும் என்பதை ஐந்தாவது அத்தியாயத்தில் கீழ்வருமாறு விளக்குகிறார்.

உலக அறிவு அனைத்தையும் எவராலும் பெற்றுவிட முடியாது. ஒருதுளி அறிவைப் பெறவே, நம் வாழ்நாள் போதுமானதாக இல்லை. அதிலும் அந்தத் துளி எது என்று கண்டுகொள்வதற்கே நமக்குப் பலகாலம் ஆகிவிடுகின்றது. எவ்வாறாயினும் ஏதேனும் ஒரு துறையில் ஒரு துளியை அறிந்துகொள்ள நாம் முயல்கிறோம். அந்தத் துறையில் ஆழ்ந்தும், பிற துறைகளில் அகன்றும் படிப்பதே பொதுவான கல்விமுறை. அகன்ற படிப்புக்கு உரிய பல்வேறு துறைகளைக் கீழ்வரும் ஏழு பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும் என்று நினைக்கிறேன்.
1. வரலாறு, அரசியல்
2. கலை, இலக்கியம், பண்பாடு
3. அறிவியல், தொழில்நுட்பம்
4. தத்துவம்
5. தொழில், வணிகம்
6. பொருளாதாரம்
7. சட்டம்

மேற்காணும் ஏழு துறைகளுள், கண்டிப்பாக ஒன்று நமக்குரியதாக அல்லது நாம் ஈடுபட்டுள்ளதாக இருக்கும். அத்துறையில், ஆழ்ந்து கற்க வேண்டிய தேவை உள்ளது. அதனை இன்றைய இளைஞர்கள் செம்மையாகவே செய்து கொண்டிருக்கின்றனர் என்று கூறலாம். தனக்கு நேரடியாகத் தொடர்பில்லாத ஏனைய 6 துறைகளிலும்கூட நமக்குக் குறைந்தபட்ச அறிவு இருந்தாக வேண்டும்.

அறிவியல், தொழில்நுட்பம், வணிகம், தொழில், பொருளாதாரம், சட்டம் ஆகியன அன்றாடத் தேவைகளாக இருப்பதால், எவரும் அவற்றை விலக்குவதில்லை. பாடநூல்களிலும் அவற்றுக்கு இடமுண்டு. வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் நாம் அவற்றைக் கற்றுக் கொள்கிறோம். அரசியல், வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு ஆகியன இன்று மிகுதியாகப் படிக்கப்படுவதில்லை.

இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

கல்விக்குரிய இரண்டு நோக்கங்களான அறிவு வளர்ச்சி, தொழில் கற்றல் என்ற இரு நோக்கங்களில் தொழில் கற்றலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்ததால்தான் என்கிறார். இந்த அடிப்படையில்தான், "இலக்கியம் கற்பது பயனற்றது, அது புலவர்களின் வேலை. வேறு வேலை ஏதும் இல்லாதவர்கள் இலக்கியம் படித்துக் கொண்டிருக்கலாம்" என்பன போன்ற எண்ணங்கள் எழுந்து, வலுப்பெற்று, இளைஞர்களின் பொதுப்புத்தியில் ஆழமாகப் படிந்துவிட்டன. என்கிறார். இலக்கியம் மற்றும் வரலாறு படிக்க வேண்டியதன் அவசியத்தை விலங்குகளையும் மனிதர்களையும் ஒப்பிட்டு விளக்குகிறார். உலகில் வாழும் எந்த உயிரும் இன்னொன்றுக்கு அறிவுடைமையில் எந்த விதத்திலும் சளைத்ததில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திறமையையும் தனது வாழிடச் சூழலுக்கேற்ற அறிவையும் கொண்டே இருக்கின்றன. கடல்கடந்து பலநூறு மைல்கள் பறந்து வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகளுக்கு உண்ண உணவின்றி, ஓய்வெடுக்க இடையில் மரங்களின்றித் தொடர்ந்து திசைமாறாமல் பறப்பதற்கு வேண்டிய அறிவு இருக்கிறது. இதுபோல்தான் ஒவ்வொரு உயிரினத்துக்கும். 

ஆனால் மனிதர்களும் விலங்குகளும் எந்தப் புள்ளியில் வேறுபடுகின்றனர்? ஆறாம் அறிவு என்று பொதுவாகச் சொன்னாலும், அது "வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளல்" என்பதுதான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குருவி எப்படிக் கூடுகட்டியதோ, அப்படித்தான் இன்றும் கட்டுகின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு புலி எப்படி உணவுண்டதோ, எதனை உணவாக உண்டதோ அதனைத்தான் அப்படித்தான் இன்றும் உண்ணுகின்றது. ஆனால், மானுட வாழ்க்கையில்தான் எவ்வளவு மாற்றங்கள்! உணவில், உடையில், போக்குவரத்தில், தொலைத்தொடர்பில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்! அனைத்தும் அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாகத்தானே வந்தன, இங்கே இலக்கியத்திற்கு ஏது இடம் என்று கேட்டு, மனிதகுல வளர்ச்சியை மிக எளிமைப்படுத்திவிட முடியாது. ஒரு தலைமுறையின் அறிவையும் அனுபவத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றதில் இலக்கியத்திற்கும் மொழிக்கும் ஏராளமான பங்கு உண்டு. ஓர் இனம் தன் புன்னகை, கண்ணீர் எல்லாவற்றையும் எழுதப்படாத கதைப்பாடல்கள், தாலாட்டு, ஒப்பாரி, கூத்து என்ற பல்வகைகளில் பதிவு செய்யும். செவிவழிச் செய்தியாக, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு அந்த வாய்மொழி இலக்கியங்கள் பரவும். தன் முன்னோர்கள் வென்றதும் வீழ்ந்ததும் எங்கே என்பதையும் எப்படி என்பதையும் அவைதாம் உணர்த்தும். கால ஓட்டத்தில் ஓவியங்கள் பிறந்தன. அவையே எழுத்துக்களாக உருமாறின. பதிவு என்பது மேலும் எளிதாயிற்று. அந்தப் பதிவுகள் மூலம், மனித இனம் தொடர்ந்து கற்றுக்கொண்டே வந்தது. அதன் காரணமாக வளர்ச்சியை நோக்கிய மாற்றமும் நிகழ்ந்துகொண்டே இருந்தது. இதுதான் வரலாறு என்பது. இலக்கியமும் வரலாறும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாதவை என்பதையும் இலக்கியம் என்பது வரலாற்றைச் சுமந்து செல்லும் ஊடகம் என்பதையும் எளிதில் மறுத்துவிட முடியாது.

ஆழ்ந்து படித்தல், அகன்று படித்தல் ஆகியவற்றில் மனித வாழ்க்கையில் முதலில் தொடங்குவது அகன்று படித்தல். பின்னர் ஒரு தெளிவு ஏற்பட்டபிறகு ஒரு குறிப்பிட்ட துறையில் ஆழ்ந்து படித்தல் தொடங்குகிறது. படித்தலைப் பற்றிச் சொல்லும்போது பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் இடையிலான ஒரு சுவையான வேறுபாட்டைக் குறிப்பிடுகிறார். 

அறிவுச் செல்வமும் பொருட்செல்வமும் தனக்கு மட்டுமின்றி, ஊர் உலகத்துக்கும் பயன்பட வேண்டும் என்பதே ஒவ்வொருவருக்கும் நோக்கமாக வேண்டும். தன்னலமில்லாமல் பொதுநலம் இல்லை. நாம் சரியாகக் காலை ஊன்றிக் கொண்டால்தான், பிறருக்குக் கை கொடுக்க முடியும். வேர்விட்ட மரம்தான் கனிதரும்!

எப்படி வேரூன்றுவது? நிலங்களில் மரங்கள் வேரூன்றலாம். நூல்களில்தான் நாம் காலூன்ற முடியும்.

படிப்பென்பது, நாம் அறியாமலே நம்மைச் செதுக்கும் உளி. ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம், குறைந்தது ஒருமணி நேரமாவது படிக்கப் பழகிக் கொண்டால், ஓராண்டிற்குப் பிறகு நாம் மேலும் முதிர்ந்த சிந்தனை உடைய மனிதராக இருப்போம்.

"காலை எழுந்தவுடன் படிப்பு" என்றார் பாரதியார். "காலையில் படி, கடும்பகல் படி, மாலை, இரவு பொருள்படும்படி படி" என்றார் பாரதிதாசன்.

இரண்டு கவிஞர்களுக்கும் இடையில் உள்ள ஒரு நுட்பமான வேறுபாட்டை இங்கு காணமுடிகிறது. காலம்காலமாகவும் தலைமுறை தலைமுறையாகவும் படித்துக்கொண்டே இருப்பவர்கள் காலையில் மட்டும் படித்தால்கூடப் போதுமானது. பிறகு, கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், தலைமுறை தலைமுறையாகப் படிப்பு மறுக்கப்பட்ட உழைக்கும் சமூகமும், அவர்களின் பிள்ளைகளும், காலையில் மட்டும் படித்தால் போதாது. கடும்பகல், மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் படிக்கவேண்டும் என்று கருதியுள்ளார் பாரதிதாசன்!

அகன்று படித்தலைத் தொடங்கும் குழந்தைகளுக்கு என்ன படிக்கக் கொடுக்கலாம் என்றும் கூறுகிறார். 'இளந்தமிழ் நூல்கள் ஏழு' என்று அறிஞர் வ. சுப. மாணிக்கனார் அவர்களால் குறிப்பிடப்பட்ட ஔவையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, உலகநாதரின் உலகநீதி, அதிவீரராம பாண்டியரின் வெற்றிவேற்கை, சிவப்பிரகாச அடிகளாரின் நன்னெறி ஆகியவையே அவை. இவ்வேழு நூல்களும் நம் பிள்ளைகளுக்கு இரண்டினைக் கற்றுக்கொடுக்கின்றன. ஒன்று, தமிழ். இன்னொன்று, வாழ்க்கை!. நம் சூழலுக்குச் சற்றும் பொருந்தி வராத Ringa ringa roses போன்றவற்றைப் பள்ளிகளில் கற்றுக்கொடுப்பதை தடைசெய்வது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்றாலும், இவ்வேழு நூல்களையும் தொடக்கக்கல்விப் பாடத்திட்டத்தில் கட்டாயமாக்குவதற்குத் தடையேதுமில்லையே! நீதிநூல்களைப் படிப்பதற்கும் வேலை கிடைப்பதற்கும் நேரடித் தொடர்பில்லை என்றாலும், கிடைத்த வேலை நீடிக்கவும், திறம்படச் செய்யவும் உலகத்தோடு ஒட்ட ஒழுகவும் இந்நூல்களிலுள்ள கருத்துக்கள் நிச்சயம் பயனுள்ளவையாக இருக்கும் என்பது நாம் அனுபவத்தில் காணும் உண்மை.

அடுத்துப் படிக்கும் முறைகளான பிரித்துப் படிப்பது, விரைந்து படிப்பது, குறித்துப் படிப்பது, ஆழ்ந்து படிப்பது, ஆராய்ந்து படிப்பது, ஒப்பிட்டுப் படிப்பது என்பனவற்றைக் கூறியபிறகு, இலக்கியங்களில் எவற்றைப் படிப்பது, தத்துவங்களை எப்படிப் பிரித்துப் புரிந்து கொள்வது என்று அடுத்தடுத்த தளங்களில் பயணிக்கிறது நூல். இங்கிருந்துதான் இந்நூலில் வரலாற்றுப் பகுதி தொடங்குகிறது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழகத்தில் சமூகநீதிப் போராட்டங்களிலிருந்து இந்திய அளவில், ஆசிய அளவில், உலக அளவில் மதங்களும் அரசியலில் அவை செலுத்திய அதிகாரத்தையும் எந்த மதத்தின் மீதும் விருப்பு வெறுப்பின்றி விளக்கிச் சுவையாகக் கொண்டு செல்கிறார். 

உலகில் நடந்த எல்லாப் போர்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணங்களில் ஒன்று மதம் என்றால், பொருளாதாரம் இன்னொன்று. இருபதாம் நூற்றாண்டு கண்ட எண்ணெய்ப் போர்களே இதற்குச் சான்று. சூயஸ் கால்வாயில் தொடங்கி ரஷ்யா, கியூபா, வியட்நாம், ஆப்கன், ஈராக் ஆகியவற்றில் அமெரிக்கா விளையாடிய விளையாட்டு அதற்கே வினையாக முடிந்ததை எடுத்துக்கூறி மீண்டும் இந்தியாவுக்கே திரும்பி வெள்ளைக்காரர்கள் புகுத்திய கல்விமுறை குறித்து விளக்கி நிறைவு பெறுகிறது இந்நன்னூல்.

 

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.