http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 129

இதழ் 129
[ அக்டோபர் 2016 ]


இந்த இதழில்..
In this Issue..

எவ்விதத்தானும் அறமன்று
புள்ளமங்கை பயண அனுபவங்கள் - ஒரு பகிர்வு
வாசிப்பில் வந்த வரலாறு - 6
SOMUR SOMESWARA TEMPLE - 3
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 2
மதி சேர்ந்த மகம்
இதழ் எண். 129 > கலைக்கோவன் பக்கம்
எவ்விதத்தானும் அறமன்று
இரா. கலைக்கோவன்

அன்புள்ள வாருணி, 

2015 மேத்திங்களில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் செய்தியாளர் திரு. சம்பத்குமார் மலைக்கோட்டையின் பின்புறத்தே ஒரு சிற்பம் காணப்படுவதாகவும் அதைப் பற்றி அறிய விழைவதாகவும் கூறி அழைத்தார். நானும் பேராசிரியர் நளினியும் உதவியாளர் லோகநாதனுடன் மலைக்கோட்டை வடக்குத் தெருவுக்குச்  சென்றோம். அப்பகுதி வாழ் திரு. இரா. சுந்தரராஜன் தம் நண்பர்களுடன் எங்களை வரவேற்றுச் சிராப்பள்ளிக் குன்றின் பின்பகுதிக்கு வடக்குத் தெரு வழியாக அழைத்துச் சென்றார்.

சற்றுத் தொலைவு மலையேறியதும் ஒரு பெரும் பாறையில் ஆடவர் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். பாறையின் மேற்கு முகத்தில் மேற்பகுதியில் நீர்வடி விளிம்புடன் 2. 28 மீ. நீளம், 97 செ. மீ. உயரம், 32 செ. மீ. ஆழமுள்ள கோட்டம் அகழ்ந்து அதில் சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது. நடுநாயகமாக அர்த்தபத்மாசனத்தில் நீள்செவிகளுடன் இருகைகளையும் மடிமீது தியானமுத்திரையில் வைத்து, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் காட்சியளித்த ஆடவர் சிற்பத்தின் வல மேற்பகுதியில் காணப்படும் இருவரித் தமிழ்க் கல்வெட்டு அவரை சிவபண்டிதர் என அடையாளப் படுத்தியது. மழித்த தலையுடன் மார்பில் துணியொன்றை முப்புரிநூல் போல் மடித்து அணிந்துள்ள இப்பண்டிதர் அமர்ந்துள்ள தளம் நன்கு சமன் படுத்தப்பட்ட நிலையில் 1. 10 மீ. நீளத்தில் உள்ளது.

அவரின் இருபுறத்தும் பக்கத்திற்கொருவராக அடியவர்கள் நின்ற கோலத்தில் உள்ளனர். வலப்புற அடியவர் பண்டிதருக்காய் ஒருக்கணித்த நிலையில் கைகளைக் கூப்பியுள்ளார். இடுப்புக்குக் கீழ்ச் சிதைக்கப் பட்டிருந்தாலும் பாதங்கள் பண்டிதரை நோக்கித் திரும்பியுள்ளன. இடப்புறத்தார் கால்களைப் பண்டிதரை நோக்கி ஒருக்கணித்திருந்தபோதும் முகம் நேர்ப்பார்வையில் உள்ளது. கைகளைக் கூப்பியுள்ள அவரது இடக்கை சிதைக்கப்பட்டுள்ளது. அணிகலன்கள் ஏதுமற்றவர்களாகத் தலையையும் செவிகளையும் மறைக்குமாறு துணியாலான தொப்பி போன்ற தலையணியுடன் காட்சிதரும் இவ்விருவருள் இடப்புறத்தார் முகம் நன்கு செதுக்கப்பட்டுள்ளது.

பண்டிதர் அமர்ந்துள்ள தளமுகப்பின் இடப்புறத்தில் நின்றநிலையில் மிகச்சிறு வடிவினராய்க் காட்சிதருபவர் இச்சிற்பத்தைச் செதுக்கக் காரணமானவராகலாம். பண்டிதரை நோக்கிய நிலையில் கைகூப்பி நிற்கும் இவரது இடையாடை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டப்பட்டுள்ளது. இருபுறத்தும் இடைக்கச்சின் முடிச்சுகள் உள்ளன. தலைமுடி கொண்டையாக முடிக்கப்பட்டுள்ளது. தளமுகப்பின் இடப்புறத்தே வலப்பாதி சிதைந்த நிலையில் சிறிய அளவிலான ஆடவர் வடிவம் அர்த்தபத்மாசனக் கோலத்தில் காட்சிதருகிறது. இவர் சிவபண்டிதரின் சீடராகலாம்.

சிற்பங்களின் தோற்ற அமைதி, கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இச்சிற்பத்தொகுதியைப் பிற்சோழர் காலத்ததாகக் கொண்டோம். இச்சிற்பத்தைப் பற்றிய குறிப்பைத் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் பதிவு அலுவலராகச் சிராப்பள்ளியில் இருந்த திரு. கி. ஸ்ரீதரன் ஆவணம் 7ஆம் தொகுதியில் (1996) பக்கம் 63இல் குறிப்பிட்டிருந்தபோதும் சிற்பத்தை அடையாளப்படுத்தும் கல்வெட்டைப் பற்றி அவர் ஏதும் குறிப்பிடாமையின், சிராப்பள்ளியில் ‘இவர் சிவபண்டிதர்’ என்ற கல்வெட்டுக் குறிப்போடு சிவத்துறவி ஒருவரின் சிற்பம் பாறைச் செதுக்கலாகக் கிடைத்துள்ளமையைத் தமிழ்நாட்டு வரலாற்று நோக்கர்களுடன் பகிர்ந்துகொள்ளும் எண்ணத்தில் நாளிதழ்களில் செய்தி வெளியிட்டோம். தினமணியும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் 2015 மே 29லும் தி இந்து, ஜூன் 2ஆம் நாளன்றும் இச்செய்தியை வெளியிட்டன.

சிற்பம் காணப்படும் அதே இடத்தின் கிழக்குப்பகுதியிலுள்ள மற்றொரு பாறையில் பெரிதும் சிதைந்த நிலையிலிருந்த தமிழ்க் கல்வெட்டொன்றையும் படித்தோம். அக்கல்வெட்டும் கி. ஸ்ரீதரனால் அதே ஆவணம் இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் அளித்துள்ள பாடத்தினின்றும் சற்றே மேம்பட்ட பாடம் பெறமுடிந்தமையால் அதை வரலாறு 25ஆம் தொகுதியில் பக்கம் 29-30இல் வெளியிட்டோம். மறைபொருளான கருத்தை வெளிப்படுத்தும் அத்தமிழ்க் கல்வெட்டு, ‘ஆணை, சாபம், துரோகி, சித்தி’ போன்ற சொற்களையும் சோமீசுவரதேவன், கூமருள் தேவர், சித்தராம குரு, ஸ்ரீமாகேசுவரர், இலிங்கம் போன்ற சுட்டல்களையும் பெற்றுள்ளது. கல்வெட்டின் மேற்பகுதியில் செதுக்கப்பட்டுள்ள இரண்டு திருவடிகளும் கல்வெட்டின் பாடத்தில் ஸ்ரீகூமருள் தேவர் ஸ்ரீபாதம் என்றே சுட்டப்பட்டுள்ளன. 

அண்மையில் இப்பகுதியை ஆய்வுக்குட்படுத்திய விழுப்புரம் கல்வெட்டாய்வாளர் திரு. வீரராகவன் இச்சிற்பத்தைப் பற்றிய தம் கருத்துக்களைச் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டதாக நாளிதழ்களில் செய்தி கண்டேன். இந்தியன் எக்ஸ்பிரஸ், திரு. வீரராகவன் இச்சிற்பத்தை அது அமர்ந்திருக்கும் நிலை கொண்டு இது புத்த சிற்பமாகலாம் அல்லது மற்ற சமய மனிதராகலாம் என்று குறிப்பிட்டதாகப் பதிவுசெய்திருந்தது. இது குறித்துக் கூடுதல் தகவல்கள் பெறவிரும்பிய அந்நாளிதழின் செய்தியாளர் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் திரு. க. நெடுஞ்செழியனைத் தொடர்பு கொண்டதாகவும் அவர், நீலகேசி எனும் நூலில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மலைக்கோட்டையின் உச்சியிலுள்ள குகைத்தளங்களில் ஆசீவகத் துறவிகள் தங்கி வானவியல் ஆய்வுகளை மேற்கொண்டதாகத் தகவல் உள்ளதாகவும் புத்த மதத்தினருக்கு கயா போல ஆசீவகர்களுக்கு மலைக்கோட்டை விளங்கியதாகவும் தெரிவித்தாரெனவும் செய்தி தந்திருந்தார்.

இச்செய்தியைப் பார்த்து அதிர்ந்துபோன நான் பேராசிரியர் நெடுஞ்செழியனைத் தொடர்பு கொண்டேன். மலைக்கோட்டைச் சிற்பம் தொடர்பாகச் செய்தியாளர் தம்மைத் தொடர்புகொள்ளவில்லை என்றும் தாம் எப்போதோ தெரிவித்த செய்திகளை இப்போது அவர் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் நெடுஞ்செழியன் கூறினார். நீலகேசித் தகவல் குறித்த உண்மையை அறியவேண்டி, தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான (1984) நீலகேசி நூலை நண்பர் புலவர் பி. தமிழகன் வழி பெற்றுப் படித்தேன்.  அந்நூலில், நீலகேசி குக்குடநகரின் அருகே இருந்த சமதண்டம் எனும் ஊரில் ஆசீவக ஆசிரியரையும் துறவிகளையும் சந்தித்து உரையாடிய தகவல் உள்ளது (பக்கம் 7). குக்குடநகரைச் சிராப்பள்ளியின் உறையூராக இனங்கண்டுள்ளனர். நீலகேசியின் எப்பகுதியிலும் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் ஆசீவகத் துறவிகள் மலைக்கோட்டையின் உச்சியில் உள்ள குகைத்தளங்களில் தங்கி வானவியல் ஆய்வுசெய்த தகவல் இன்மையின் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு இது குறித்து மடல் எழுதினேன். செய்தியில் இருந்த பிற பிழைகளையும் சுட்டியிருந்தேன். இந்தியன் எக்ஸ்பிரஸ் 17. 6 2016 அன்று என் மடலின் ஒருபகுதியை வெளியிட்டது. திரு. வீரராகவனுடன் உரையாடியபோது தாம் அச்சிற்பத்தைப் பிறமதச் சிற்பமாகக் குறிப்பிட வில்லை என்றார். எனினும் செய்தி வெளியிட்ட அத்தனை நாளிதழ்களும் அச்சிற்பத்தைப் பிறமதச் சிற்பமாகவே அடையாளப்படுத்தியிருந்தன.

இச்செய்தி இந்து நாளிதழில் (13. 6. 2016) சற்று மாறுபட்ட நிலையில் பதிவானது. சிவபண்டிதர் சிற்பத்தைப் புத்தர் பெருமானின் அடியவரான தீர்த்தங்கரர் என்ற அந்நாளிதழ், தீர்த்தங்கரரின் இருபுறத்தும் அடியவர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டது.  கல்வெட்டுப் பாறையின் மேற்பகுதியிலுள்ள திருவடிகளை சமணத் தொடர்புடையதாகவும் அது சுட்டியிருந்தது. புத்த மதத்தில் தீர்த்தங்கரர்கள் இல்லாமையையும் மலைக்கோட்டைச் சிற்பம் தீர்த்தங்கரர் அல்லர் என்ற உண்மையையும் திருவடிகள் சைவம் சார்ந்தவை என்பதைக் கல்வெட்டுக் கொண்டு சுட்டியும் அந்நாளிதழுக்கு மடல் எழுதினேன். இந்து நாளிதழின் சிராப்பள்ளி அலுவலகத்தார் தொலைபேசியில் தொடர்புகொண்டனர். 

தினமணி நாளிதழ் (13. 6. 2016), ‘திருச்சி மலைக்கோட்டையில் மேலும் சில சமண தடயங்கள்’ என்ற தலைப்பின் கீழ் சிவபண்டிதர், தமிழ்க் கல்வெட்டின் படங்களை வெளியிட்டுப் பண்டிதரை சமணச் சிற்பமாகவும் கல்வெட்டு சமணத் தடயங்கள் குறிக்கும் கல்வெட்டென்றும் அடையாளப் படுத்தி, சமணத் துறவியர்களின் பாதங்கள், அர்த்தபரியங்காசன நிலையில் தீர்த்தங்கரர் போன்ற புடைப்புச் சிற்பம் மலைக்கோட்டையில் காணப்படுவதாகச் செய்தி வெளியிட்டிருந்தது. நான்கு மாதங்களுக்கு மேலாக இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வழி இவற்றைக் கண்டறிய முடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்ததாகவும் செய்தி கூறியது.

இச்செய்தியிலுள்ள பிழைகளைச் சுட்டி தினமணிக்கு மடல் எழுதி, தினமணியில் 2015இல் வந்திருந்த செய்தித் தகவல்களை இணைத்திருந்தேன். தினமணி மறுநாளே ‘மலைக்கோட்டையில் காணப்படுவது சிவபண்டிதர் சிற்பம்’ என்ற தலைப்பில் என் மடலை வெளியிட்டது.

அன்புடையீர் வணக்கம். 

இன்றைய தினமணியின் 14ஆம் பக்கத்தில் "திருச்சி மலைக் கோட்டையில் மேலும் சில சமண தடயங்கள்" என்ற தலைப்பின் கீழ் நான்கு படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சமணச் சிற்பமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள முதல் படத்திலுள்ள ஆடவர், சிவபண்டிதர் ஆவார். இது குறிக்கும் கல்வெட்டு இச்சிற்பத்தின் வலமேற்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி 29. 5. 2015ஆம் நாள் தினமணியில், "மலைக்கோட்டையில் சிவபண்டிதரின் சிற்பம் கண்டுபிடிப்பு" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இச்சிற்பம் 1996லேயே சிராப்பள்ளியில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் பதிவுஅலுவலராக இருந்த திரு. கி. ஸ்ரீதரனால் கண்டறியப்பட்டது (ஆவணம் 7, ஜூலை 1996, ப. 63). சிற்பத்தை ஒட்டியுள்ள "இவர் சிவபண்டிதர்" என்ற கல்வெட்டைத் திரு.. ஸ்ரீதரன் அறியவில்லை. தம் கட்டுரையிலும் அது பற்றிக் குறிப்பிடவில்லை. அதனாலேயே இச்சிற்பத்தையும் கல்வெட்டையும் கண்டறிந்த நாங்கள் தினமணி உள்ளிட்ட நாளிதழ்கள் வழித் தமிழ் மக்களிடம் இச்செய்தியைப் பகிர்ந்து கொண்டோம். ஏறத்தாழ ஓராண்டுக்கும் மேலான நிலையில் மீண்டும் அதே முனிவர் சமயம் மாற்றப்பட்ட நிலையில் தினமணியில் வெளிப்பட்டிருப்பது வருத்தமுறச் செய்கிறது.

இச்சிற்பம் காணப்படும் பாறையின் வலப்புறத்தே சற்றுத் தொலைவிலுள்ள மற்றொரு பாறையில் காணப்படும் கல்வெட்டும் திரு. ஸ்ரீதரனால் 1996லேயே பதிப்பிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டை மீளாய்வு செய்த நாங்கள் எங்கள் ஆய்வு மைய ஆய்விதழான வரலாறு 25ஆம் தொகுதியில் ப. 29இல், ஸ்ரீதரனின் படிப்பையும் குறிப்பிட்டுப் புதிய பாடத்தைப் பதிப்பித்துள்ளோம். பல இடங்களில் படிக்கமுடியாத அளவிற்குச் சிதைந்துள்ள இக்கல்வெட்டு முற்றிலும் சைவம் சார்ந்த கல்வெட்டாகும். இதை உறுதிப்படுத்த அக்கல்வெட்டிலுள்ள, "ஸ்ரீமாகேசுவரர்", "இலிங்கத்துக்கும்" என்ற தொடர்களே போதுமானவையாகும். இன்றைய தினமணியில் இக்கல்வெட்டைக் காட்டும் இரண்டு படங்களின் செய்திக்குறிப்பாக "சமணத் தடயங்கள் குறித்துக் காணப்படும் கல்வெட்டுச் செய்தி" என்ற தகவல் தரப்பட்டுள்ளது.

இருபதாண்டுகளுக்கு முன்னால் கண்டறியப்பட்டு, ஓராண்டுக்கு முன்னால் கல்வெட்டுச் சான்றின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள சிவபண்டிதரும், சைவம் சார்ந்த கல்வெட்டும் சமணச் சார்பு கொள்வது அறமன்று’. இம்மடலை வெளியிட்ட தினமணிக்கு நன்றி சொல்லவேண்டும்.

உண்மையைக் காப்பாற்ற உறுதியோடு போராடவேண்டியுள்ளது. ஆய்வாளர்கள் செய்தி இதழ்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுமுன் ஒருமுறைக்குப் பலமுறை கண்டுபிடிப்புகளை நேர்மையுடன் அணுகுவது வரலாற்றுக் குழப்பங்களைத் தவிர்க்கும். இல்லாதவற்றை இருப்பதாகக் கூறுவதும் இலக்கியத் தகவல்களை விழைவுக்கேற்பப் பொருள் மாற்றிக் காட்டுவதும் நியாயமன்று. புரிதலில் ஏற்படும் இத்தகு பிழைகள் உண்மையான வரலாற்றை மாற்றி அமைத்துவிடும். எந்தச் சார்பும் இன்றி நேரிய நோக்குடன் அமையும் ஆய்வு அணுகல்களே தமிழ்நாட்டு வரலாற்றைக் கட்டமைக்க உதவும். கற்பனைகளையும் பொருந்தாத ஊகங்களையும் உண்மைகளை மறைக்கும் கேடயங்களாக முன் நிறுத்துவது எவ்விதத்தானும் அறமன்று.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்

       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.