http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 131

இதழ் 131
[ டிசம்பர் 2016 ]


இந்த இதழில்..
In this Issue..

சங்க இலக்கியங்களில் ஆடற்கலை 
தவத்துறைக் கோயில் விமான சிற்றுருவச் சிற்பங்கள்
அங்கும் இங்கும் - டிசம்பர் 2016
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 4
இதழ் எண். 131 > கலைக்கோவன் பக்கம்
சங்க இலக்கியங்களில் ஆடற்கலை 
இரா. கலைக்கோவன்


சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் இயற்கையோடு இயைந்த சங்கத் தமிழர் வாழ்க்கையில் இசையும் கூத்தும் இரண்டறக் கலந்திருந்தமையை நன்கு புலப்படுத்துகின்றன. உணர்வுகளின் வெளிப்பாடாகவும் சடங்குகள், விழாக்களோடு தொடர்புடையனவாகவும் விளங்கிய அவ்விரு கலைகளும் தொழில்முறையாகவும் வழக்கில் இருந்தன. பல்வேறு சூழல்களில் மக்கள் தமக்குள் ஆடிப்பாடிக் களித்திருந்த காட்சிகளைப் படம்பிடிக்கும் இலக்கியங்கள், தொழில்முறைக் கலைஞர்களாகப் பாணர், பாடினியர், கோடியர், வயிரியர், விறலியர் முதலியோரையும் அறிமுகப்படுத்துகின்றன. அவர்களுள் பாணரும் பாடினியரும் பாட்டு வல்லாராய் இருந்தமையுடன் யாழ் இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தனர். கோடியரும் வயிரிய ருமான ஆடற்கலைஞர்களோ ஆடுவதில் மட்டும் திறனாளர்களாய்த் திகழாமல் கருவிக்கலைஞர்களாகவும் மிடற்றுக் கலைஞர்களாகவும் விளங்கினர். விறலியர் எனப்பட்ட இவர்தம் பெண்டிரும் பல்கலை வல்லுநர்களாய் வாழ்ந்தனர். 

 

ஆடற் கல்வி

நூல்கள் -- பயில்முறை

மனைநூல், மடைநூல், புரவிநூல், தேர்நூல் எனப் பல நூல்களைச் சுட்டும் சங்க இலக்கியங்கள் இசைநூல் ஒன்றையும் குறிக்கின்றன. பரதம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரதசேனா பதீயம், மதிவாணனார் நாடகத் தமிழ்நூல் எனத் தம் காலத்தில் இருந்த, இறந்த பல நாடகத் தொன்னூல்களை அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளார். இளங்கோவடிகள் அரங்கேற்றுக் காதையில் நாட்டிய நன்னூலை முன்னிலைப்படுத்துகிறார். இவை நோக்க, சங்க காலத்தில் ஆடற்கலை நூல்கள் இருந்தமை கொள்ளப்பெறும்.

சங்கத் தமிழகத்தில் ஆடல் பல்வேறு முறைகளில் பயிலப்பட்டது. மக்கள் தமக்குள் மகிழ்ந்தாடிய ஆடல்வகைகள் பெரும்பாலும் குழுஆடல்களாகவே அமைந்தன. அவை கண்டும் கேட்டும் கற்றுக் கொள்ளப்பட்டன. பரத்தையரும் தொழில்முறைக் கலைஞர்களும் குடும்பத்தின் மூத்தவர்பால் இக்கலையைப் பயின்று தேர்ந்தனர். 'படுகின்ற இயங்களின் கண்ணொலியையும் பாட்டினையும் பயின்று மகளிர் ஆடும் அரங்கம்' எனும் பரிபாடற் செய்யுளுரை ஆடற்கலை முறைப்படி பயிற்றுவிக்கப்பட்டமையைச் சுட்டுகிறது. 

அரச்சலூர் நாகமலையில் காணப்படும் பொ. கா. 4ஆம் நூற்றாண்டினவான தத்தகாரக் கல்வெட்டுகள் இரண்டும் ஆடலுக்கான சொற்கட்டுகளைக் குறிக்கின்றன. தேவன் சாத்தன் அமைத்த இவ்வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இலக்கியக் கூற்றுகளுக்குக் காலம் காத்துத் தந்திருக்கும் கல்வெட்டுச் சான்றெனலாம். 

 

ஆடல்வகைகள்

சங்க கால ஆடல்களைக் குழுஆடல்கள், தனியர் ஆடல்கள் என்றும் அகஆடல்கள், புறஆடல்கள் என்றும் மக்கள் ஆடல்கள், தொழிற்கலைஞர் ஆடல்கள் என்றும் முவ்வேறு வகைப்படுத்தலாம்.  

 

மக்கள் ஆடல்கள்

அறுவடை, விழாக்கள், போர் வெற்றி, தெய்வத் தொடர்பு காரணமாகவும் உணர்வு வெளிப்பாடுகள் நிமித்தமாகவும் மக்கள் ஆடல்கள் நிகழ்ந்தன. விரும்பியும் ஒருமித்த உணர்வுடனும் ஆடப்பெற்ற இக்குழு ஆடல்களுள் தலையாயவை குரவையும் துணங்கையும் ஆகும். 

 

குரவை

நில, பால், வயது வேறுபாடின்றிக் கைப்பிணைத்த நிலையில் மக்கள் மகிழ்ந்தாடிய ஆடல் குரவை. செழுநிலை மண்டலக் கடகக் கைகோத்து அந்நிலைக்கொப்ப நின்றாடிய குரவை நானிலத்தும் நிகழ்ந்தது. குறிஞ்சி நிலக் குறவர்கள் பழுனிய தேறலும் நறவும் அருந்தித் தம் பெண்டிரொடு குரவை நிகழ்த்தினர். வயதான பெண்களும் மகிழ்வுடன் கலந்துகொள்ளுமாறு சுற்றம் சூழப் பெரும் ஆரவாரத்துடன் இறைவனைப் பேணித் 'த>உப் பிணையூஉ' மன்று தோறும் நிகழ்ந்ததிந்தக் குரவை. முல்லைநிலக் குரவையில் அன்புறு காதலர்கள் பெரும் பங்கேற்றனர். ஆயரும் ஆய்ச்சியரும் இணைந்தாடிய இக்குரவையில், மரபுளிப் பாடித் தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுவதும் இயல்பாக நிகழ்ந்தது. ஆயத்தோடு குரவையாடிய மகளிரை அவர்தம் காதலர் அருகிருந்து பார்த்து மகிழ்ந்தனர். நெய்தல் குரவையைப் பெரிதும் பெண்களே நிகழ்த்தினர். பரதவ மகளிரின் அக்குரவை மிகுந்த ஓசையுடன் நிகழ்ந்தது. பொற்காசுகளைத் தொகுத்தணிந்த அல்குலின் மேல் பூங்கொத்துக்கள் வைத்துத் தைக்கப்பெற்ற தழையாடை அணிந்த, அழகிய நெற்றியை உடைய கன்னிப் பெண்கள் தம் வண்டல் பாவையை நீர் உண்ணும் துறையில் கொணர்ந்து வைத்து ஊதுகொம்பின் இசைக்குக் குரவையாடி மகிழ்ந்தனர். தைத்திங்களில் நடந்தமையால் தைந்நீராடலுடன் தொடர்புடைய குரவையாக இது இருந்திருக்கலாம். 

மருதநில உழவர் வெயில் வேளையில் நெல்லறுத்த தம் பணியின் களைப்புத் தீரத் தெண் கடல் திரைமிசைப் பாயும் திண்திமில் வண்பரதவரின் வெப்புடைக் கள்ளுண்டு அங்கேயே குரவையாடி மகிழ்ந்தனர்.  ஆடவர்  போலவே மருதநில மகளிரும் தெண்கள் தேறல் மாந்திக் குரவையாடினர். நுண்ணிய தொழில் நலம் வாய்ந்த அழகிய குடங்களுடன் நீர்கொள்ளப் புறப்பட்ட அப்பெண்கள், விரிந்த பூங்கொத்துக்களைக் கொண்டிருந்த காஞ்சி மரத்தடியில் குடங்களை வைத்துவிட்டு மரநிழலில் குரவையாடினர். குரவையின் பாடுபொருளாக அவரவர் கணவர் தம் பரத்தமை அமைந்தது. கழனிகளில் நாரை ஓட்டிய இளம் பெண்களோ பசிய பொன்னாலாகிய அணிகலன்களுடன் இரவு, பகbலன இரண்டு பொழுதுகளிலும் பல்வேறு இடங்களில் புதிய, புதிய குரவைகளை ஆடிக் களித்தனர். 

தெய்வம் பரவுதல், மகிழ்ச்சி வெளிப்பாடு, உள்ளக் குமுறலுக்கான வடிகால் என அக வாழ்வின் பல நிலைகளில் அமைந்த குரவை தமிழரின் புறவாழ்வில் போர்க்களக் குரவையானது. முன்தேர்க்குரவை, பின்தேர்க் குரவை என்பவற்றோடு வீரர்களின் வெறிக்குரவையும் களங்களில் நிகழ்ந்ததை, 'பொலந் தோட்டுப் பைந்தும்பை மிசையலங் குளைய பனைப் போழ் செரீஇச் சினமாந்தர் வெறிக்குரவை' எனும் புறநானூற்றுப் பாடல் உணர்த்தும்.

 

துணங்கை 

குரவையைப் போலவே சங்கச் சமுதாயத்தில் மிகப் பரவலாக ஆடப்பட்ட மற்றொரு குழு ஆடல் துணங்கை. குரவையில் ஆடவரும் பெண்டிரும் கலந்தாடினர். ஆனால், துணங்கையோ மகளிர் ஆடலாக அமைந்தது. 'மகளிர் தæஇய துணங்கை யானும்' எனும் பாடலடியால் இதை அறியலாம். விழா நாட்களில் மட்டும் நடத்தப்பட்ட துணங்கை பரத்தையர் ஆடலாகக் கடலோசை போன்ற பேரொலியுடன் நிகழ்ந்தது. பாண்டில் விளக்கின் ஒளியில் இரவு நேரத்தும் வேலைப்பாடமைந்த அணிகலன்களை அல்குலில் அணிந்தவர்களாய் இனிய தாள சுருதியுடன் இளநங்கையர் துணங்கை ஆடினர். 

துணங்கை மகளிர் ஆடலாக அமைந்ததெனினும் அதற்குத் தலைக்கை தருவது ஆடவர் பங்காக இருந்தது. எளியவர் முதல் மன்னர்கள்வரை துணங்கைக்குத் தலைக்கை தந்துள்ளனர். துணங்கைக்குக் கைகோத்துக்கொள்ளும் வலிய ஏற்றினைப் போல் முதற்கை தந்த ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை நச்செள்ளையார் காட்டுகிறார். இத்தலைக்கை தருதலை, 'மகளிர் கைப்பிணைந்தாடுமிடத்து ஆடவர் முதல்வராய்க் கை தந்தது ஆடல் தொடங்கும் திறம்' என்பர் அவ்வை சு. துரைசாமி. 

துணங்கை மகளிர் ஆடல் என்பதால், அதற்குத் தலைக்கை தந்து வரும் ஆடவரை அவர்தம் இல்லத்தரசிகள் கடிந்து கொண்டனர். அதனால், துணங்கையில் கலந்துகொள்ள விரும்பிய ஆண்கள், சில நேரங்களில் பெண்வேடமிட்டு, பெண்களோடு பெண்களாய்க் கலந்தாடியதும் உண்டு. தலைக்கை தந்தாடும் ஆடவரின் கீழாடை ஆடும் பெண்களின் காற்சிலம்பு பட்டுக் கரை கிழியும் அளவிற்கும் ஆடும் பெண்களின் தழையாடைகளில் இருந்து அவற்றில் தைக்கப்பட்ட ஆம்பல் மலர்கள் கீழே விழுந்து இதழ்கள் சிதறும் அளவிற்கும் துணங்கையில் விரைவிருந்தது. இசைக்கருவிகளின் இன்னொலியுடன் கைப்புணர்ந்து ஆடியவர்களின் பேரொலியும் பார்த்திருந்தவர்களின் களிப்பொலியும் அக்களத்தைக் கலிகெழு களமாக்கியது. 

அகவாழ்வுத் துணங்கை போலவே மக்களின் புறவாழ்விலும் துணங்கை பேரிடம் பெற்று விளங்கியது. போர்க்களங்களில் நடந்ததால் போர்த்துணங்கை என்றும் வென்றாடு துணங்கை என்றும் அழைக்கப்பட்ட புறத்துணங்கை ஆடவர் ஆடலாய் அமைந்தது. போரில் வென்ற அரசர்கள், துணைநின்ற வீரர்களுடன் இணைந்தாடிய இத்துணங்கையில், தோள்களை உயர்த்தி ஆடும் முறை பின்பற்றப்பட்டமையை, 'திணி தோள் உயர ஓச்சி', 'தோளோச்சிய வென்றாடு துணங்கை' எனும் பாடலடிகள் புலப்படுத்துகின்றன. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைத் துணங்கை ஆடிய வலம்படுகோமான் என்றே அழைத்து மகிழும் அளவு அவ்வேந்தரின் வெற்றிகளும் அவற்றின் காரணமான வென்றாடு துணங்கைகளும் அமைந்திருந்தன. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் 'பிணம் பிறங்கு அழுவத்து நிலம் பெறு திணிதோள் உயர ஓச்சிப் பண்டும் பண்டும் துணங்கையாடிய' பெருவேந்தராகக் கொண்டாடப்பட்டார். 

 

தோளி 

துணங்கை போலத் தோளியும் மகளிர் குழுஆடலே. வரிக் கூத்துகளுள் ஒன்றான இதை முல்லைப் பெண்கள் நிலவொளி ஒத்த அரும்புகள் விரிந்த பிடாமர நிழலில் ஆடி மகிழ்ந்தனர். கைமாண் தோளி என இவ்வாடல் சிறப்பிக்கப்படுவதால் கைகளை வீசித் தோள்களை அசைத்து ஆடப்பட்ட ஆடலாக இதைக் கொள்ளலாம். இதை ஆடிய பெண்கள் இளமையும் ஒளிநிறைந்த நெற்றியும் அழகிய பற்களும் உடையவர்களாய் விளங்கினர். 

 

ஒள்வாள்அமலை 

போரில் வெற்றி பெற்ற மன்னரும் அவர்தம் வீரர்களும் பட்ட மன்னனின் உடலைச் சூழ நின்று வாளுயர்த்தி வீர முழக்கமிட்டு ஆடும் ஒள்வாள்அமலை குழுஆடலாகும். தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் புறஞ்சார்ந்த இவ்வாடல் சங்கப் போர்க்களங்களிலும் நிகழ்த்தப்பட்டது. பறவைக் காவலராக விளங்கிய பெரும்படை அதிகனை மிÁலி வென்று மகிழ்ந்தாடிய ஒள்வாள்அமலையைப் பரணர் குறிப்பிடுகிறார். அறியாமையால் தம் மீது படையெடுத்து வந்த பல்வேறு அரசர்களைப் பொருது வென்ற ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அக்களங்களில் வாளுயர்த்தி அமலையாடியமையை நச்செள்ளையார் குறித்துள்ளார். 

 

துடியாடல்

மறவர்களின் வெற்றியாடலான துடியாடல் புறஞ்சார்ந்ததாகும். இதை ஆடியவர்கள், தழையுடன் கட்டிய கண்ணியைத் தலையில் சூடி, வெற்றியின் களிப்பில் வீறுகொண்டு ஆடினர். இசையின் ஏற்றத்தையும் தாளத்தின் விரைவையும் 'கனைகுரல் துடிப் பாணி' என்ற பாடலடி விளக்கும். வளைந்த வலிய வில்லையும் கொடிய பார்வையினையும் உடைய மறவர்கள் எருதைக் கொன்று, அதன் தசையினை நெருப்பில் சுட்டுத் தின்று, நீர் வேட்கை நீங்கத் தோப்பிக்கள்ளைக் குடித்துப் புலால் நீங்காத கையினராய்க் கழுவாத வாயினராய்த் துடியெhலி போல் இரட்டும் கோட்டானின் குரல் ஒலிக்கும் ஆடிக்களித்தனர். 

துடியாடல் அகம் சார்ந்த தனியாடலாகவும் நிகழ்ந்தது. ஆடல் மகளிரும் குலமகளிரும் இதை நிகழ்த்தினர். கணவர் உருட்டிய துடிச் சீருக்குத் தம் மார்பில் அணிந்திருந்த முத்துமாலை ஒல்குமாறு ஆடையணியசைய முறையாகத் தோளசைத்து ஆடிய பெண்கள் பூங்கொடி போல் காட்சிதந்தனர். பேரழகு ஆடல்மகளிரோ கள்ளுண்ட மகிழ்வுடன் துடிஒலிக்கு அடிபெயர்த்துப் பொற்சிலம்புகளின் முத்துப்பரல்கள் ஒலி எழுப்பத் தோளசைத்து ஓச்சித் துடியாடல் நிகழ்த்தினர்.

 

தொழிற்கலைஞர் ஆடல்கள் 

கலைஞர்கள்

தொழில்முறை ஆடல்கள் நிகழ்த்த உரிய பயிற்சி பெற்றோர் பலராய் இருந்தனர். கோடியர், வயிரியர், கூத்தர் என அழைக்கப்பெற்ற அவர்கள் தொழில்முறைப் பயணமாக ஊர்ஊராகச் சென்று ஆடல்கள் நிகழ்த்திப் பொருçட்டி வாழ்ந்தனர். கருவி வல்லாராகவும் விளங்கிய இக்கலைஞர்தம் பெண்டிர் விறலியர் எனப்பட்டனர். இவ்விறலியர் ஆடல், பாடல், கருவி இசையில் தேர்ந்திருந்தனர். இக்கலைஞர்களுடன் இணைந்தும் தனித்தும் பாணர், பாடினியர் என்பாரும் இருந்தனர். இவர்கள் கருவிக் கலைஞர்களாகவும் பாடுநர்களாகவும் இயங்கினர்.

 

கோடியர் 

பொருநர் என்றும் அறியப்பட்ட கோடியரைக் குறிக்கும் பெரும்பாலான சங்கப் பாடல்கள் அவர்களைப் பல் ஊர்ப் பெயர்வனராகவும் சுரம் செல் கோடியராகவும் குறிப்பதால் அவர்கள் ஓரிடத்துத் தங்காது பல்லூர்ச் சென்று கலைநிகழ்ச்சி கள் நடத்தி வாழ்க்கை வளர்த்த கலைஞர்கள் என்பது புலப்படும். பெருஞ்சுற்றத்தோடு விளங்கியதால் அவர்கள் இரும்பேர் ஒக்கல் கோடியர் என்றழைக்கப்பட்டனர். தங்களுக்குள் ஒருவரைத் தலைவராகக் கொண்டு ஒற்றுமையுடன் இயங்கியதால் கோடியருக்குச் சென்றவிடமெல்லாம் வரவேற்பிருந்தது. பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கும் ஆற்றல் பெற்றிருந்த இக்குழுவினர் பெரிய பையெhன்றில் அக்கருவிகள் அனைத்தையும் இட்டு ஒருசேரக் கட்டித் தூக்கிச் சென்றமையால் கலப்பையர் (கலங்கள் நிரம்பிய பையினர்) என்றும் பொருள் பொலிய அழைக்கப்பட்டனர்.

கோடியர் கலப்பையில் முழவு, ஆகுளி, கஞ்சதாளம், கொம்பு, நெடுவங்கியம், குறுந்தூம்பு, குழல், தக்கை, எல்லரி, பதலை முதலிய இசைக்கருவிகள் இருந்தன. அதனால், பல்லியக் கோடியர் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர். சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தரும் பகைமை நீங்கி ஒன்றிணைந்து அரசவையில் வீற்றிருக்கும் காட்சி நல்கும் இன்பத்தை ஒத்த இன்பத்தை இக்கோடியர் தம் யாழிசைப் பாடல் நல்கியதாக முடத்தாமக்கண்ணியார் கூறுவார். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனும் ஏழ் நரம்பிற்கும் உரிமை உடையவர்களாகக் கருதப்பட்ட இக்கோடியர், பல்லியக் கலைஞர் எனினும், குறிப்பாகப் பறையிலும் குழலிலும் தேர்ந்த ஞானம் கொண்டிருந்தனர்.

கடும்பறைக் கோடியர், கொடும்பறைக் கோடியர் என்றழைக்கப்பட்ட இப்பெருமக்கள் உளவியல் வல்லுநர்களாகவும் திகழ்ந்தனர். பிறர் உள்ளக் கருத்துக்களைக் குறிப்பால் அறியும் வல்லமை கொண்டிருந்தமையால்தான் கோடியரால் ஊடல் தீர்க்கும் வாயில்களாகவும் செயற்பட முடிந்தது. வாய்ந்த அறிவு உடைய கோடியர் எனும் பொருள்பட முதுவாய்க் கோடியர் என இவர்கள் அழைக்கப்பட்டதும் இதனால்தான் போலும்! இவர் தம் திறமை பாராட்டிக் குறும்பொறை நன்னாட்டையே ஓரி வழங்கினார் எனச் சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

வள்ளல்களையடைந்து ஆடிப் பாடிப் பெறும் பரிசில் பொருளைக் காத்து வைக்காது சுற்றத்தோடு உண்டு துய்த்ததால், பாயால் வேயப்பெற்ற வண்டியில் மீண்டும் மீண்டும் பயணப்பட்டுப் பொருçட்ட வேண்டிய சூழலில் இருந்த இத்தொழில்முறைக் கலைஞர்கள், சுரங்களைக் கடந்தபோது வெயில் துன்பம் தீர மரத்தடியில் அமர்ந்து பாடல்களைப் பாடி, இசைகூட்டி மகிழ்ந்தனர். ஊர்களை அடைந்ததும் கிணைப் பறை ஒலிக்க, வங்கிய இசையெhடு முழவு பொருந்துமாறு தாளம் அமைத்து வேறு சில இசைக்கருவிகளையும் இயக்கி, ஆடல்கள் நிகழ்த்திப் பிழைத்தனர். ஆடுவதற்கு முன் களத்தில் அரிய பூக்களைத் தூவித் தெய்வம் பரவினர். கோடியர் ஆடல்களை இன்னவகையின என்று இனம் பிரிக்க இயலாதவாறு பாடல்கள் மெளனம் சாதிக்கின்றன.

 

வயிரியர் 

கோடியர் போலவே வயிரியர்களும் விழாக்களில் ஆடிப் பாடி வாழ்ந்தனர். தாம் இசைத்த இசைக்கருவிகளை எல்லாம் விழா முடித்துப் பயணப்படும்போது ஒருசேர பையில் இட்டுக்கட்டி, அதைக் கழையில் தொங்கவிட்டு எடுத்துச் சென்றனர். அதனாலேயே இவர்களும் கலப்பையர் எனப்பட்டனர். முழவைத் தனியே முதுகின் பின்னே கட்டித் தூக்கியவாறு பயணப்படும் இவர்தம் யாழை இளையர் சுமந்தனர். ஊர்தோறும் சென்று மன்றங்களை அடைந்து தம் வரவை அறிவிக்கும் வகையில் இசைக்கருவிகளை இசைத்துப் பின் தெருக்களில் உள்ள வீடுகளின் புறத்தே நின்று பாடி, ஆடி உணவும் பொருளும் பெற்ற வயிரியர் போர்க்களத்தும் பாடினர். குறுக்கைப் போர்க்களத்தில் திதியனின் தொல்மரமான புன்னையை அன்னி வெட்டியபோது வயிரியர் இன்னிசை எழுப்பி வாழ்த்தினர். மலையமான் போன்ற அரசர்கள் முன் முழவிசைத்து ஆடிப்பாடி கடும்பசி நீங்க உணவு பெற்று, பொன்செய்ப் புனை இழைகளும் பெற்ற வயிரியர் குற்றமற்ற நாவினை உடையவராய் வாழ்ந்தனர்.

 

கண்ணுளர் 

பதிற்றுப்பத்தும் மலைபடுகடாமும் குறிக்கும் கண்ணுளரைக் கூத்தர் என்கிறது பிங்கல நிகண்டு. அரும்பத உரைகாரரும் அடியார்க்குநல்லாரும் இவர்களைச் சாந்திக்கூத்தர் என்பர். கோடியர் போலவே கலப்பையராகவும் விறலியரோடு இணைந்து கூட்டமாய்ச் சென்று ஆடிப்பாடி வாழ்க்கை நடத்தியவர்களாக வும் கண்ணுளரைப் படம் பிடிக்கும் மலைபடுகடாம் அவர்தம் பிள்ளைகள் செம்மறி ஆட்டினை ஒத்த புற்கென்ற தலையினராய் இருந்ததாகக் குறிக்கிறது. புரவலரை நாடி வழி நடந்து செல்லும்போது இவர்கள் ஒருவரை ஒருவர் பாதுகாத்து சென்றனர். குன்றிடத்துப் பள்ளங்களைக் கடக்குங்கால் மண்கனை முழவின் தலைக்கோலையே ஊன்றுகோலாகக் கொண்டு தளர்வின்றிச் சென்ற இவர்தம் விறலியர், தொன்றொழுகு மரபில் தம் இயல்பு வழாதவராயும் இன்குரல் கொண்டோராயும் இருந்தனர். 

 

கூத்தர் 

தொல்காப்பியத்துள் ஊடல் தீர்க்கும் வாயில்களுள் ஒன்றாகக் குறிக்கப்படும் கூத்தர்கள் சங்க காலத்தில் அருகிப் போயினர் போலும். கோடியர், வயிரியர், கண்ணுளர் பற்றிய விரிவான தரவுகளை முன்வைக்கும் சங்க இலக்கியங்கள் கூத்தரைப் பற்றி அதிகம் கூறவில்லை. தாமரைப் பூம்போது சிதைந்து விழுமாறு கூத்தர்கள் ஆடுகளத்தில் ஆடிய தகவல் மட்டுமே கிடைக்கிறது.

 

விறலியர் 

கோடியர், கண்ணுளர், பாணர் குழுக்களுடன் இணைந்து பேசப்படும் விறலியர் அவர்தம் பெண்டிராவர். மெய்ப்பாடுகள் தோன்றுமாறு விறல்பட ஆடியதால் விறலியர் என்றும் விழாக் காலங்களில் களம் அமைத்து ஆடியதால் ஆடுகளமகளிர், ஆடுகளப் பாவையர் என்றும் அழைக்கப்பட்ட விறலியர் அழகிற் சிறந்தவர். கின்னரத்தை வெல்லும் குரல் வளம் பெற்றிருந்த விறலியர் பல்வகைப் பண்களைப் பாடவும் பல்வேறு இசைக்கருவிகளை இயக்கவும் தெரிந்திருந்தனர். 'முறையின் ஆடிய' என்று விறலியர் ஆடல் விதந்து பேசப்படுவதால் அவர்தம் ஆடல்கள் முறைப்படி பயின்று முறைப்படி நிகழ்த்தப்பட்டன எனத் தெளியலாம். விறலியர் ஆடும்போது முழவு வாசித்தவர் அவர்கட்குப் பின்நின்று இசைத்தனர். யாழ், குழல், தாளம் எனப் பல்வேறு இயங்களுக்கு ஏற்பவும் ஆடிய விறலியர், ஊர்விட்டு ஊர் சென்ற போது தம்மைச் சேர்ந்த ஆடவரை முன்செல்லவிட்டுத் தாம் பின் செல்வதை மரபாகப் பின்பற்றினர். 

அரண்மனைகளில் தங்கியிருந்து ஆடல் நிகழ்த்திய விறலியரும் இருந்தனர். அவர்கள் முழவிசையோடு பொருந்திய பண்ணையுடைய யாழிசைக்கு ஏற்பத் தாளத்தோடு அரண்மனைக் கூடங்களில் ஆடி விருந்தினர்களை மகிழ்வித்தனர். அரசர்கள் பலர் பந்தலின் கீழ் அமர்ந்திருக்க, அங்கும் விறலிகள் தாம் சார்ந்திருந்த அரசரின் வீரப் புகழ் பாடி, அடிபெயர்த்துத் தோளசைத்து ஆடினர். நறவம், புன்னைப் பூக்களும் கலந்திருந்த நெய்தல் மாலைகளால் பந்தல் மணந்தது. விழாக்களம், அரண்மனை அரங்குகள் மட்டுமல்லாமல் மலையுச்சிகளிலும் கொடிகள் அசையும் தெருக்களிலும் விறலியர் ஆடினர். அவர்தம் ஆடல் பகல், இரவு என இரு போதுகளிலும் நிகழ்ந்தது. சொரி சுரையிலிருந்து வழியும் அளவிற்கு நெய் பெய்யப்பட்டதால் பாண்டில் விளக்கில் பெருஞ்சுடர் எழ, அதன் பேரொளியில் விறலியர் ஆடல் மிகுந்த சிறப்போடு விளங்கியது. 

கோடியர், வயிரியர், கண்ணுளர், கூத்தர், விறலியர் ஆகியோர் ஆடிய ஆடல் வகைகளைப் பற்றி நேரடிச் சான்றுகள் கிடைக்கவில்லை எனினும், பாட்டும் தொகையும் எடுத்துரைக்கும் கழைக்கூத்து, குடக்கூத்து, பேடியாடல், மல்லாடல், கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம், துடியாடல், வெறியாட்டு என்பவற்றுள் சில அவர்கள் ஆடிய ஆடல்களாக அமைந்தன எனக் கருதலாம். கயிறூர் ஆட்டமான கழைக்கூத்து, துடியாடல், வெறியாட்டு ஆகியவற்றை ஆடியவர்களைப் பாடல்கள் ஆடுமகள் என்றே குறிப்பதால் அவை விறலியரால் ஆடப்பட்டவையாகலாம். 

 

ஆடல்கள்                         

கழைக்கூத்து

கழைகள் நட்டு அவற்றின் இடையே முறுக்குண்ட புரியை உடைய வலிய கயிற்றினைக் கட்டி, அதன் மேல் ஏறி, இசைக்கருவிகளின் தாளத்திற்கேற்ப ஆடும் ஆடலே கழைக்கூத்தாகும். பல்வேறு கருவிகளின் கூட்டிசைக்கு நடத்தப்பட்ட இவ்வாடலில் ஆடுமகளிர் பங்கேற்றனர். புதிதாக இவ்வாடலைப் பயின்று ஆடியவர்கள் கூட்டாக ஒலிக்கும் இசைக்கருவிகளின் அரித்தெழும் தாளத்திற்கேற்ப ஆடமுடியாது தளர்வதும் உண்டு. கழைக்கூத்தை ஆரியநாட்டுக் கலைஞர்களும் ஆடினர். அவர்தம் கழைக்கூத்தில் பறையெhலி மட்டும் இடம்பெற்றது. 

 

வெறியாட்டு 

சங்க காலத்தில் இருவகை வெறியாட்டுகள் நிகழ்ந்தன. பெருவழக்காய் இருந்த சடங்கு சார்ந்த வெறியாட்டு வேலன் எனும் தொழில்முறைக் கலைஞரால் நிகழ்த்தப்பட்டது. தாமாக ஆடாது வேறு சக்தி ஆட்டுவிக்க ஆடும் ஆடலாக இவ்வகை வெறியாட்டு அமைந்தது. இதனை, 'வெறியயர் வியன்களம் பொற்ப வல்லோன் பொறியமை பாவையின் தூங்கல்' எனும் அகப்பாடல் பகுதி நன்கு விளக்கும்.

 

வேலன் வெறியாட்டு

காதல் வயப்பட்டு உடல் மெலியும் தம் மகளிரின் உண்மை நிலையறியாத அன்னையர், அவர்களை அணங்கு ஆட்கொண்டதாகக் கருதி அது குறித்து அறியவும், அணங்கினை அகற்றவும் வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்வர். இவ்வெறியாட்டை நிகழ்த்தியவர்கள் வேலன் எனப்பட்டனர். இவர்களைப் பற்றிய விரிவான தரவுகள் சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. வீட்டார் அழைப்பேற்று வரும் வேலன் களம் இழைத்து வெறியாடியதை, 'வேலன் புனைந்த வெறியயர் களம் தொறும்' எனும் குறுந்தொகைப் பாடலடி உணர்த்தும்.

அணங்குற்ற பெண்ணிருக்கும் வீட்டில் தெய்வம் பரவி, இசைக்கருவிகள் ஒலிக்க, வெறியாடு களம் இயற்றப்பட்டது. அதில் ஆடுதற்கேற்றவாறு அகன்ற பெரிய பந்தல் அழகுற அமைக்கப்பட்டது. பனந்தோட்டினைக் கடம்ப மலரோடு கண்ணியாக்கி மாலைகளாய் அணிந்து, முற்றத்தில் புதுமணல் பரப்பி, செந்நெல்லின் வெண்ணிறப் பொரியை இறைத்து, விரவு மலர் இட்டுக் கழங்கு நிறுத்தும் வேலன் உரத்த குரலில் முருகன் புகழ் பாடிப் பலி தந்தான். பின் செந்தினையைக் குருதியோடு கலந்து தூவி, முருகனை வரவழைக்குமாறு வெறியாடினான். இவ்வாட்டம் பொறியமைப் பாவையின் தூங்கலை ஒத்திருந்தது. இவ்வாட்டத்தின்போது வேலன் தன்னை முருகனைப் போல் அழகுபடுத்திக் காந்தள் சூடி, வேலேந்தி ஆடுவதும் உண்டு.

 

ஆடுமகள் வெறியாட்டு

வேலன் வெறியாட்டு போல ஆடுமகளின் வெறியாட்டு பெருவழக்காக இல்லை. வெறியயர் களத்தே தோன்றி, அசைந்து நடந்து ஆடல் இயற்றிய ஆடுமகள் ஏன் அவ்வெறியாட்டைச் செய்தாள் என்பதற்குப் பாடல்களில் சான்றில்லை. வெறியாட்டின்போது ஆடுமகளின் உடல் நடுங்கியதையும் அவள் தோற்றம் மிகுந்த பொலிவுடன் விளங்கியதையும் குறுந்தொகை, அக நானூற்றுப் பாடல்கள் தெரிவிக்கின்றன. வெறியாட்டு ஆடிய இந்த ஆடுமகளைத் தேவராட்டியான சாலினி எனப் பதிற்றுப் பத்து உரையாசிரியர் குறிப்பிடுவதும் மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் முதற் சூல் கொண்ட மகளிர் சாலினி எனும் இத்தேவராட்டியின் துணையுடன் தம் பரவுக் கடனைச் செலுத்துவர் என்று கூறுவதும் இங்குக் கருதத்தக்கன. 

 

பேடியாடல் 

பேடியோ, பேடி வேடம் பூண்டவரோ நிகழ்த்தும் ஆடல் பேடியாடல். சங்கப் பேடியாடலை அகநானூற்றுப் பாடல் ஒன்று சுட்டுகிறது. பெண் வேடம் கொண்டு பேடியாக ஆடுவானது பின்சென்று மேல் வளைந்த கை போல எருமையின் முறுக் குண்ட கொம்பு இருந்தது எனும் பாடலடி பேடியாடலின் கை அசைவுகளை விளக்குமாறு உள்ளது.

 

இறையாடல்கள் 

சிலப்பதிகாரத்தில் பதினொரு ஆடல்களின் கீழ் இடம்பெறும் பாண்டரங்கம், கொடுகொட்டி, மல்லாடல், குடக்கூத்து, துடியாடல், பேடியாடல் எனும் ஆறும் சங்க இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் துடியாடல், பேடியாடல் தவிர ஏனைய நான்கும் இறைவன் ஆடியனவாகக் குறிக்கப்பட்டுள்ளன. கலித்தொகையின் கடவுள் வாழ்த்துப் பகுதி பாண்டரங்கத்தையும் கொடுகொட்டியையும் சுட்டுவதுடன் காபாலம் எனும் ஆடல் வகையையும் குறிக்கிறது. இம்மூன்றும் சிவபெருமானால் நிகழ்த்தப்பட்டன. 

பறைகள் பல இயம்ப, பல்லுருவம் பெயர்த்து இறைவன் கொடுகொட்டி ஆடினார். முப்புரம் வென்று அங்குப் பட்டு, வீழ்ந்து, வெந்தவர் நீற்றை அணிந்து இறைவன் ஆடிய ஆடலே பண்டரங்கம் என்றும் பாண்டரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. புலியைக் கொன்று அதன் தோலை உடுத்துக் கொன்றைப் பூவால் செய்த மாலை தோளில் அசைய, நான்முகன் தலையைக் கையிலேந்தி சிவபெருமான் ஆடிய ஆடலே காபாலம். இக்கூத்து சிலப்பதிகாரம் சுட்டும் பதினொரு வகைக் கூத்துகளுள் இடம்பெறாமை குறிப்பிடத்தக்கது. 

குடக்கூத்தும் மல்லாடலும் திருமாலுடன் இணைத்துப் பேசப்படும் ஆடல் வகைகளாகும். திருமால் மல்லரை அழித்தபோது நிகழ்த்திய மல்லாடலைக் கலித்தொகை சுட்ட, மண்ணாலும் உலோகத்தாலுமான குடங்களைக் கொண்டு அவர் நிகழ்த்திய குடக்கூத்தைப் பரிபாடல் பேசுகிறது. சிவபெருமானும் விஷ்ணுவும் ஆடிய இவ்வைந்து கூத்துகளுள் நான்கினை மாதவி ஆடியதாகச் சிலப்பதிகாரம் கூறுவதால், இவற்றை அல்லது இவற்றுள் சிலவற்றைச் சங்க விறலியரும் ஆடினர் எனக் கொள்ளலாம். 

 

கொங்கர் ஆடல் 

உள்ளிவிழாவின்போது மணிக்கச்சினை இடையில் கட்டிக் கொண்டு கொங்கு நாட்டினர் தெருவில் ஆடிய ஆரவாரம் நிறைந்த குழுஆடலே கொங்கர் ஆடலாகச் சிறப்பிக்கப்படுகிறது. 

 

நாடகம் 

கதை தழுவி வரும் கூத்தாக அடியார்க்குநல்லாரால் சுட்டப்படும் நாடகம் சங்க காலத்தில் சிறக்க நிகழ்த்தப்பட்டமைக்குச் சான்றுகள் உள்ளன. காவிரிப்பூம்பட்டினத்தின் இராக்கால இனிய நிகழ்வுகளை விவரிக்கும் கடியலூர் உருத்திரங்கண்ணனார், அவ்வூர் மக்களுள் ஒரு சாரார், இரவுக் காலத்தே இசைப் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தனர் எனவும் வேறொரு சாரார் நாடகங்களை விழைந்து கண்டு களித்தனர் எனவும் குறிப்பிடுகிறார். நாடக மகளிர் தாம் ஆடும் களத்தில் வாரால் பிணித்த இசைக்கருவிகளை இயக்கியபடியே அவற்றின் தாளத்திற்கேற்ப பொருத்தமுற ஆடிக் களித்தமையைப் பெரும்பாணாற்றுப் படை குறிக்கிறது. 

 

ஒப்பனை 

மக்கள் ஆடலாக இருந்தாலும் தொழில்முறைக் கலைஞர்கள் ஆடலாக இருந்தாலும் ஆடியவர்கள் அந்தந்த ஆடலுக்கேற்பவும் இடச்சூழலுக்கேற்பவும் ஒப்பனை செய்து கொண்டமையை இலக்கியத் தரவுகள் தெரிவிக்கின்றன. 

குரவையாடியவர்கள் அவ்வந் நிலப் பூக்களைக் கொத்துகளாகவும் தொகுத்தும் சூடிக்கொண்டனர். குறிஞ்சிக் குரவையர் தேன் கமழும் வேங்கைப் பூக்களைச் சூடியும் பல்வேறு பிணையலாகிய மலர்மாலைகளை அணிந்தும் ஆடினர். முல்லைப்பூ, மயிலிறகின் அடி ஒத்த வெள்ளிய பற்களையுடைய முல்லை நிலப் பெண்கள் ஒன்று போல் அமைந்த மலரிதழ்களால் தொடுத்த மாலையை அணிந்து, செவிகளில் மகரகுழை பூண்டனர். அவருடன் ஆடிய பொதுவர் கொன்றை, வெட்சி, காயா, பிடவம், முல்லை, குருந்தம், கோடல், கஞ்சங்குல்லை ஆகியவற்றால் செய்யப் பெற்ற மணம் கமழும் கண்ணியை அணிந்து, கருந்துவராடை உடுத்தி ஆடினர். இது போன்ற கண்ணிகளைப் பெண்களும் சூடியிருந்தனர். 

மருதப்பெண்கள் புதிய குரவைகளைப் புனைந்தாடியபோது பசிய பொன்னால் செய்த அணிகலன்களை அணிந்தனர். அவர்தம் இடையில் நன்னிறம் வாய்ந்த பூங்கொத்துக்களைத் தழையுடன் மிடைந்து செய்யப்பட்டிருந்த ஆடையும் பொற்காசுகளை நிரைத்திருந்த அணிகலன்களும் இருந்தன. நெய்தல்நிலக் குரவையர் அழகிய நெய்தற்பூக்களைத் தம் தழையுடையில் சேர்த்திருந்தனர்.

துணங்கை ஆடிய பரத்தையர் பருத்த தோள்களும் மடப்பத்தை உடைய கண்களும் வெண்ணிறப் பற்களும் நெருங்கித் திரண்ட தொடைகளும் மாந்தளிர்போன்ற மேனியழகும் படைத்திருந்தபோதும் தம்மை மேலும் அழகுபடுத்திக் கொள்வதில் தனிக் கவனம் செலுத்தினர். நரந்தம்பூ நாறும் தம் கரிய கூந்தலில் மகரவாய் போலச் செய்த பொன்னாலான தலைக்கோலம் அணிந்து, செவிகளில் பொற்குழைகளும் தோள்களில் பொற்றொடிகளும் முன்கையிடத்தே நிரைத்த வளைகளும் பிணைத்த தழையாடை அணிந்த இடைப்பகுதியில் இழையணியும் கால்களில் சிலம்பும் பூண்டனர். மார்பகத்தை முத்துமாலைகள், மலர் மாலைகள் அணிசெய்தன. கூந்தலில் மயிர்ச்சாந்தும் புழுகும் தடவி, அதை ஐம்பாலாய் வகுத்திருந்தனர். பல்வேறு மலர்கள் கூந்தலை அலங்கரித்தன. சிலர் பொன்னால் வட்டமாகச் செய்யப்பட்ட பாண்டிலைச் சுற்றி மணிகள், காசுகள் சேர்த்து மேகலையுடன் அணிந்திருந்தனர். அவர்தம் தழையாடை மெல்லிய தழைகளும் குவளை மலர்களும் கலந்த பிணையலாக இருந்தது. விரி நுண்ûல் சுற்றிய வீரிதழ் அலரி மாலைகளும் அவர்தம் கழுத்தை அணிசெய்தன. 

செம்பஞ்சிக் குழம்பு பூசப்பெற்றிருந்த அவர்தம் நகங்கள் முருக்க மரத்தின் குவிந்த அரும்புகளை ஒத்திருந்தன. சந்தனக் குழம்பு முதலியவற்றால் மார்பிலும் தோளிலும் தொய்யில் எழுதியிருந்தனர். சிலர் துகிலுடுத்தி உள்ளே இருவடமாய் மேகலையும் வெளியே எண் வடமாய்க் காஞ்சியும் அணிந்திருந்தனர். இன்னுஞ் சிலர் முத்துவடம், தலைக்கோலமுத்து, பொன்னணி ஆகிய கொண்டு தம்மை அழகுபடுத்திப் பல் கலைச் சில்பூங் கலிங்கம் அணிந்து ஆடினர். துணங்கைக்குத் தலைக்கைத் தந்த ஆடவர் வினைமாண் காழகம் வீங்கக் கட்டியிருந்தனர்.

வெறியாட்டயர்ந்தவர்கள் குறிஞ்சி, வேங்கை, காந்தள் போன்ற மலர்களைக் கண்ணியாகவும் மாலைகளாகவும் அணிந்தனர். பனந்தோட்டையும் கடப்பமாலையையும் கொண்டனர். முருகனைப் போல் தங்களைப் புனைந்துகொண்டு கையில் வேலேந்தி ஆடினர். பெண்கள் தழையாடையில் ஆம்பல் மலர்களைப் பிணைத்ததுடன் வேம்பின் நாற்றமுடைய பசிய இலையுடன் நீலப்பூக்களைச் சேர்த்துச் சூடினர். வேலன் தலைப்பாகை அணிந்திருந்தார். அவர் தோள்பையில் பல தலைகளையுடைய வளைந்த கோல் இருந்தது.

தொழில்முறைக் கலைஞர்களுள் ஆடவர் குவிந்த கொத்துக்களை உடைய எருக்கின் நெருங்கிய பூக்களாலான கண்ணியைச் சென்னியில் அணிந்தனர். விறலியர் ஆவிரைச் செடியின் பூக்களாலான மாலைகளை மார்பில் கொண்டனர். ஒளிதிகழ் நெற்றி, மடப்பம் பொருந்திய பார்வை, அழகிய வெண்ணிறப் பற்கள், அமுதம் போல் சொல் சொல்லும் சிவந்த வாய், அசைந்த நடை, மூங்கிbலனப் பருத்த தோள், சில்வளை அணிந்த கை, உயர்ந்தெழுந்த தொய்யில் எழுதப்பட்ட இளமுலைகள், பூந்துகிலால் மறைக்கப்பட்ட அல்குல், பூச்சூடிய கூந்தல், மின்னும் நகைகள் என அரண்மனை விறலியர் தோற்றம் இருந்தது. அவர்கள் நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து அரவுரியன்ன ஆடை அணிந்திருந்தனர். மயிர்ச்சாந்து அணிந்து நறுமணம் கமழும் கூந்தலில் பல்வகை மலர் சூடியிருந்தனர். பூக்கள் மலர்ந்துள்ள வேங்கை போல மென்மையான இயல்பினராயிருந்தனர். 

ஏழ்மையில் இருந்த விறலியர் ஈரும் பேனும் இருந்து இறை கூடி வேர்வையாலே நனைந்து, இழை iநந்து, ஆங்காங்கே கிழிந்து தைக்கப்பெற்ற நிலையிலான ஆடையை அணிந்திருந்தனர். ஆனால், அவரது எழில் நலமோ சிறக்க அமைந்திருந்தது. பிறைநுதலும் வில் புருவமும் இனிய சொல்லவிழும் இலவம் பூவிதழ் ஒத்த வாயும் முத்துப்பற்களும் மகரகுழைகளும் மூங்கில் ஒத்த தோள்களும் அரிமயிர் முன்கையும் காந்தளன்ன மென் விரல்களும் ஈர்க்கும் இடைபோகா அழகிய இளமை பொருந்திய மார்பகங்களும் மெலிந்த இடையும் பல மணி கோத்த வடங்கள் அணிந்த அல்குலும் யானையின் துதிக்கை போன்ற தொடைகளும் ஓடி இளைத்த நாயின் நாப் போன்ற சீரடிகளும் உடையவராய் இருந்த அவர்கள் முல்லை சான்ற கற்பினராய் இருந்தனர். அணிகலன்கள் குறைவாய் இருந்த போதும் வேங்கை மலர்சூடி அவர்கள் ஆடியபோது அந்த எளிய ஒப்பனையே அவர்தம் எழிலுக்கு எழில் சேர்த்தது.

 

கலைஞர்களும் கருவிகளும்                 

பாடகர்கள் கவிஞர்கள் 

சங்க காலத்தில் பாடுவதற்கென்றே இருந்தவர்கள் பாணர்களும் பாடினியர்களும் ஆவர். பாணர்கள் இசைப்பாணர், யாழ்ப்பாணர் என இருவகையினர். யாழ்ப்பாணர்கள் இசைத் திறனுக்கேற்பப் பெரும்பாணர், சிறுபாணர் என்று அழைக்கப்பட்டனர். விறலியர், கண்ணுளர், கோடியர், வயிரியர் நன்கு பாடும் ஆற்றல் பெற்றிருந்தனர். பாடல்களையும் அவர்களே இயற்றினர். அரசர்களைப் புகழ்ந்தும் தெய்வங்களைப் பரவியும் மரபுநிலைகளைப் பகிர்ந்தும் வெற்றிகளைக் கொண்டாடியும் அவர்கள் பாடிய பாடல்கள் பலவாய் அமைந்தன. கிடங்கில் அரசனான நல்லியக்கோடனை யாழ்ப்பாணர் பாட, அதற்கேற்ப விறலியர் ஆடினர். இசையை எக்காலத்தும் கேட்கும் அரசர் அவையில் வலிவு, மெலிவு, சமம் எனும் மூன்று தானத்தினும் ஒவ்வொன்றிலும் ஏழு தானம் முடித்துப் பாடும் இருபத்தொரு பாடல்துறைகளைப் பாணர் பாடி மகிழ்வித்தனர். தமக்கு முன்னோர் பாடிய முறைப்படியும் பாடினர். புதிய முறைகளிலும் புதுப் பண்ணமைத்தும் பாடினர். பாலை பாடிய பாடினியர் மறமும் முழவிசைத்து வஞ்சியும் பாடினர்.

விறலியர் கின்னரத்தைப் பழிக்கும் இனிய குரலினர். தொன்று ஒழுகும் மரபின் வழாது பாடத் தொடங்கிப் பின் புதிய பாடல்களையும் பாடிய விறலியர் குறிஞ்சி பாடுவதில் வல்லவராய் இருந்தனர். வண்ணம் பாடும் ஆற்றல் கொண்டிருந்த அவர்கள் மருதம் வாசித்த சிறிய யாழின் இசையெhலிக்கு மேல் போகாது அதனுடன் ஒன்றிப் பாடும் கடமையறிந்தவராய் விளங்கினர். யாழிசைத்துப் பாடிய வயிரியர் விழாக்காலங்களில் மன்றுகளிலும் மறுகுகளிலும் சென்று பண்ணமைத்துப் பாடினர். பரத்தையர் தாமே பாடல்களைப் பாடி ஆடினர். வெறியாட்டிலும் பாடல்கள் இருந்தன. அவை முருகன் புகழ் பாடின. முருகனின் கடம்பும் களிறும் பாடி அவரின் வீரச் செயல்களைப் புகழ்ந்துரைத்தனர். பாடலில் நோய் தணிக்கும் வேண்டலும் இருந்தது. 

குரவையாடியவர்களும் பாடல் புனைந்து பாடி ஆடினர். 'குரவையுள் கொண்டு நிலை பாடி' எனும் கலிப்பாடலடி, கொண்டுநிலைச் செய்யுள் குறிஞ்சிக் குரவையில் பாடப்பட்டதை உணர்த்துகிறது. முல்லைக் குரவையில் மரபுமுறைகள் பாடல் வடிவம் பெற்றன. அவற்றை ஆயர் பெண்களின் உள நோக்கமாக, ஆயர்தம் குல வழக்கமாக உரையாசிரியர்கள் எடுத்துரைக்கின்றனர். துணங்கைக் கூத்திலும் பாடல்கள் இருந்தன.

 

கருவிக் கலைஞர்கள், இசையாசிரியர்கள் 

சங்க காலத்தில் கருவிக் கலைஞர்கள் பலராக இருந்தனர். அவர்கள் சுற்றம் தழுவிக் கூட்டமாக வாழ்ந்தனர். ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு தலைவர் இருந்தார். கலை நிகழ்ச்சிகள் அவர் வழிகாட்டலில் நிகழ்ந்தன. அந்நிகழ்ச்சிகளில் பாடல்கள், கருவியிசை, ஆடல்கள், நாடகம் எனப் பலவும் நிகழ்ந்தன. ஆடலை நிகழ்த்தியவர்களே பாடுநர்களாகவும் கருவிக் கலைஞர்களாகவும் அமைந்தனர். 

வயிரியரும் கோடியரும் பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர். முழவு முதன்மை இசைக் கருவியாய் விளங்கியது. இதை விறலியரும் இயக்கினர். முழவிற்குத் தலைக்கோல் இருந்தது. கோடியர் முழவு பலாப்பழம் போல் இருந்தது. அதை நெஞ்சாரத் தழுவியவாறே இசைத்தனர். விறலி ஆடுகையில் அவர் பின்னே நின்று முழவிசைஞர் தாளம் தந்தார். முழவும் குழலும் ஒலிக்க யாழில் மருதப்பண் இசைத்து விறலி பாடினார். பாடுமகளிரின் குரலொடு பொருந்தப் புல்லாங்குழல், யாழ், முழவு முதலியன இசைக்கப்பட்டன. செவ்வழிப் பண் வாசிக்கப்பட்ட யாழின் க்ஷிசக்கேற்ப, முழவும் சிறுபறையும் பொருந்தி ஒலித்தன. கோடியர் முழவொலியோடு யாழிசை புணர்ந்திசைத்தது. முதற் சாமத்தில் வாசித்தற்குரிய யாழ்களுக்கு நடுவே, முழவு அவற்றிற்கேற்பத் தாழ்த்தி வாசிக்கப்பட்டது. இத்தரவுகள் இசையாசிரியர்கள் அக்காலத்தில் இருந்தமையை உறுதிப்படுத்துகின்றன. பல்வேறு இசைக்கருவிகளை ஒத்திசைத்தும் ஒருங்கிசைத்தும் வாசித்த கலைஞர்களை ஒருமுகப்படுத்தி நிகழ்ச்சிகளை நடத்திய இவ்வாற்றலாளர்களே குழுக்களுக்குத் தலைவர்களாய் அமைந்தனர் போலும்.

ஆடலுக்கும் பாடலுக்கும் பெரிதும் துணையிருந்த மற்றோர் இசைக்கருவி யாழாகும். பல்வகை யாழ்கள் அந்நாளில் பயன்பாட்டில் இருந்தன. அவற்றின் அமைப்பும் அவை கூட்டிய இசை நயங்களும் சங்க இலக்கியங்களில் விரிவாகப் பதிவாகியுள்ளன. குழல், வங்கியம், தூம்பு என்பன ஒருபொருட் பல சொற்களாகும். குறுந்தூம்பு, நெடுந்தூம்பு எனப்படும் சிறிய, பெரிய குழல்கள் ஆடலுக்குப் பண் தருவதில் பெரும்பங்கு வகித்தன. 

முழவு போல் ஆடலுக்குப் பெரிதும் பயன்பட்ட மற்றோர் இசைக்கருவி பறையாகும். ஆடுமகள் அரிக்கோற் பறை, ஆடுகளப் பறை என இக்கருவி இலக்கியங்களில் பேசப்படுகிறது. மக்கள் வாழ்வில் ஒன்றியைந்த இசைக்கருவியாக விளங்கிய இது, குரவைக்கும் துணங்கைக்கும் முழவைப் போலவே இன்றியமையாத இசைக்கருவியாகத் திகழ்ந்தது. குறிஞ்சியர் மான்தோல் போர்த்த சிறுபறை முழக்கிக் குரவையாட, வேங்கை சூடித் தொண்டகப்பறைச் சீருக்குக் குறவரும் கொடிச்சியருமாய்த் தெருக்களில் குரவையாடினர். ஊதுகொம்பான வயிரிடைப்பட்ட தெளிந்த இசைக்கும் மகளிர் குரவையாடிக் களித்தனர். இந்த ஊதுகொம்பு விறலியர் ஆடலுக்கும் ஓர் இசைக்கருவியாய் இசைக்கப்பட்டது.

துடி, தடாரி, தண்ணுமை எனும் தோல்கருவிகளும் ஆடலுக்கு இசைக்கப்பட்டன. மறவர், மகளிர் ஆடல்கள் துடியின் இசைக்கும் அமைந்தன. நெல்லறுப்பின் போது வாசிக்கப்பட்ட தண்ணுமை குரவைக்கும் பயன்பட்டது. விரல் ஊன்று படுகண் ஆகுளி, பாண்டில் போன்றன ஆடலுக்குப் பயன்பட்ட பிற இசைக்கருவிகளாம். அரசவையில் கருவிக்கலைஞர்கள் பலராய் இருந்தனர். தேவைப்பட்ட நேரங்களில் சூழலுக்கேற்ற கருவிகளை இசைத்து அரசனுக்கும் மற்றோர்க்கும் அவர் கள் இசை விருந்தளித்தனர்.

 

அரங்கு

பல்வேறு இசைக்கருவிகளும் அவற்றை இயக்க வல்ல திறனாளரும் அவர்களை ஒருங்கிணைத்து நடத்திச் சென்ற இசையாசிரியர்களும் பாடல் இயற்றிப் பண்ணமைத்துப் பாடிய பாடகர்களும் அப்பாடல்களுக்குப் பல்வகையான ஆடல்களை நிகழ்த்திய ஆடற்கலைஞர்களும் நிறைந்திருந்த சங்க காலத்தில் அவ்வாடல்களை நிகழ்த்த அரங்குகளும் இருந்தன. அவை ஆடலுக்கேற்ப அமைந்தன. 

குரவையாடியவர்கள் வேங்கை, காஞ்சி முதலிய மரங்களின் நிழல், மலையுச்சி, தெருக்கள், மணல்வெளி, மன்றுகள் ஆகியவற்றையே அரங்காய்க் கொண்டு ஆடினர். துணங்கை அதற்கென அமைக்கப்பட்ட விழாக்களத்திலோ, பரத்தையர் சேரியிலோ ஆரவாரத்துடன் நிகழ்த்தப்பட்டது. சில ஊர்களில் ஆடல் நிகழ்த்தவென்றே களங்கள் இருந்தன. வெறியாடிய வேலன் அதற்கெனக் களம் அமைத்து ஆடினார். இக்களம் வீடு, முன்றில், துருத்தி, தெரு முதலிய இடங்களில் அமைக்கப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட பந்தல்களில் அரசர்கள் பலராய் அமர்ந்து காண விறலியர் நடனம் நடைபெற்றது. சில இடங்களில் அவை புகழ் அரங்குகள் இருந்தன. அங்குப் பாடுவார் பாணிச் சீரும் ஆடுவார் அரங்கத் தாளமும் எப்போதும் ஒலித்த வண்ணம் இருந்தன. அத்தகு அரங்குகளில் பெண்கள் இசைக் கருவிகளை இசைக்கும் முறைகளையும் பாட்டினையும் பயின்று ஆடினர். அரங்குகள் மிக அழகுபட அலங்கரிக்கப்பட்டிருந்தன. யாழும் மிடற்றுப் பாடலும் தம்முள் ஒக்க, வங்கியம் அவற்றின் சுருதியை அளந்து நிற்க, முழவு எழுந்தார்ப்ப அவ்வரங்குகளில் மகளிர் ஆடல் நிகழ்த்தினர்.

 

ஆடுநர் வாழ்க்கை

சங்க காலத்தில் ஐவகை நிலத்தும் மக்கள் ஆடல் இருந்தது. இவ்வாடல்கள் மக்கள் இயல்பு வாழ்க்கையின் ஓரங்கமாகவே விளங்கின. சமுதாயக் கூட்டுறவை நிலைப்படுத்தும் முறையில் மக்கள் அனைவரும் பால், வயது, நில வேறுபாடின்றிப் பங்கேற்றதால் இவ்வாடல்கள் சமூக வளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்தன. மரபுமுறைகளைப் பாடல்கள் வழிப் பெரியவர்கள் சொல்ல, இளையவர்கள் அறிந்துகொண்டனர். கணவன் மனைவி இணைந்து வாழவும் காதலர்கள் ஒருங்கிணையவும் சில நேரங்களில் காதலர்களைத் தேர்ந்து கொள்ளவும்கூட ஆடல்கள் உதவியுள்ளன. ஆடல்களைச் சமுதாயத்தின் பலநிலை மக்களும் நடத்தியதால் அவை மதிப்புப் பெற்று விளங்கின. அவரவர் தகுதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப, உரிய இசைக்கருவிகளுடன் இவ்வாடல்கள் தேவைக்கேற்ப நிகழ்த்தப்பட்டன.

பரத்தையர் சமுதாயம் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உரியவர்களைப் பெற்றிடவேண்டிய அவசியம் இருந்தது. அதற்குத் துணங்கை ஆடல் பெரிதும் உதவியது. பரத்தையர் வாழ்க்கை வளமாகவே இருந்தபோதும் சமுதாயத்தில் அவர்களுக்கு மதிப்பில்லாது இருந்தது. கலைகளில் சிறந்திருந்தாலும் ஆடவர்களைக் கவர்வதற்கே அத்திறன் பயன்பட்டமையின், சமுதாயத்தின் அன்பைப் பரத்தையர் பெறாதவராயினர். பரத்தை தெருவில் வருகிறாள் என்றால், எங்கே அவள் தங்கள் கணவனைக் கைக்கொண்டு விடுவாளோ என்று இல்லத் தலைவியர் அஞ்சும்படியான சமூகச் சூழலே அன்றைக்கிருந்தது. 

தொழில்முறைக் கலைஞர்களின் வாழ்க்கை வறுமையின் பிடியில் இருந்ததை ஆற்றுப்படை நூல்கள் எடுத்துரைக்கின்றன. அதனாலேயே, அவர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழாது,  பல்லூர்களுக்கும் சென்று ஆடல்நிகழ்த்திப் பசி நீங்கி வாழ்ந்தனர். 'ஈரும் பேனும் இருந்து இறைகூடி வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த துன்னற் சிதார்' உடுத்தியவர்களாகவே அவர்கள் இருந்தனர். 'இது என் ஊர்' என்று சொல்லிக்கொள்ள முடியாதவர்களாய்ப் பாயால் வேயப்பெற்ற வண்டியில் சுரம் பல கடந்து விழாமன்றுகளையும் பரிசில் தரும் வள்ளல்களையும் தேடி அவர்தம் பயணங்கள் அமைந்தன. தாம் வாசித்த பல்வகை இசைக்கருவிகளையும் ஒருசேரக் கட்டிய கலப்பையைக் கையில் சுமந்தவர்களாய், வண்டியில் போகவும் வாய்ப்பின்றி நடந்து பயணப்பட்ட கலைஞர்களையும் இலக்கியம் சுட்டுகிறது. ஒரு வள்ளலைத் தேடி காடு, மலையெல்லாம் கடந்து அவர்கள் செல்லவேண்டியிருந்தது. 

புறப்பாடல் ஒன்று சிறுபாணர் ஒருவரை, 'முதுவாய் இரவலன்' என்றே அழைக்கிறது. பாதிரி நாறும் கூந்தலையுடைய தம் இன்னகை விறலியுடன் மெல்ல நடந்து சென்றால், அப்பாணர் தம் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள வாய்ப்பாகச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இடத்தை அடையலாம் என அவர்க்கு வழிகாட்டலும் வழங்கப்பட்டுள்ளது. இலக்கண முறைமை நிரம்பிய யாழ்ப்பயிற்சி கொண்டிருந்தபோதும், ஈந்தளிப்போர் இல்லாமையால், பசியால் வாடிய மிகப்பெரும் சுற்றத்துடன் நாளைய வாழ்க்கையே கேள்விக்குறியாய் வள்ளல்களைத் தேடி வறிய வாழ்க்கை வாழ்ந்தனர் அந்நாளைய கலைஞர்களுள் பலர். 

அவர்களுக்கிடைய வளமான வாழ்க்கை வாழ்ந்தவர்களும் இருந்தார்கள். அவர்கள் அரண்மனைக் கலைஞர்களாய்ப் பேறு பெற்ற வாழ்க்கையில் திளைத்தனர். தங்களைப் போன்ற கலைஞர்களைக் காணும்போது வள்ளல்கள் இருக்குமிடம் சுட்டி, அவர் தம் துன்பம் களைந்தனர். கலைகளில் நாட்டம் கொண்டிருந்த அரசர்களும் செல்வர்களும் வறுமையில் வாடிய கலைஞர்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தனர். நோக்கு நுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து அரவுரியன்ன அறுவைகளும் கொட்டைக் கரைய பட்டுடைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அறுசுவை உணவும் அமைதி நிரம்பிய ஓய்வும் எதிர் காலத்திற்குத் தேவையான பொன்னும் பொருளும் தரப்பட்டன. பொன்னிழைகளும் பொற்பூக்களும் யானைகளும் குதிரைகளும் பெற்றுச் சிறந்த இத்தகு கலைஞர்களுக்கு நடுவே எண்ணெயும் வெண்கிழியும் பெற்ற விறலிகளும் இருக்கத்தான் செய்தனர். 

வறுமையில் வாடியபோதும் தொழில்முறைக் கலைஞர் களுக்குச் சமுதாயத்தில் மதிப்பிருந்தது. மன்னர்களுக்குச் செவியறிவுறுத்தும் உயர்நிலையை அவர்கள் பெற்றிருந்தனர். அதே நேரத்தில் மக்களின் இல்லறவாழ்விலும் பங்கேற்றனர். தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான ஊடல்தீர்க்கும் வாயில்களாக அவர்கள் செயல்பட்டனர். 'தொகுசொல் கோடியர்' எனும் சொல்லாட்சி அவர்தம் சொல்லாற்றலைக் குறிக்கும். வாழ்க்கைச் சிக்கல்களை அவிழ்ப்பதில் அவர்கள் ஆற்றிய அரும்பணி இலக்கிய ஏடுகளில் வரலாறாய்ப் பொதிந்துள்ளது.

பாணர்கள் சிலர் தலைவர்க்குப் பரத்தையரைப் பழக்கித் தரும் செயலில் ஈடுபட்டுச் சமுதாயக் கேட்டிற்குத் துணைநின்ற இடங்களும் இல்லாமல் இல்லை. என்றாலும் பொதுவான நோக்கில் தொழில்முறைக் கலைஞர்கள் வறுமையிலும் செம்மையுற வாழ்ந்ததையே பல பாடல்கள் தெரிவிக்கின்றன. முல்லை சான்ற கற்பின் விறலியர் எனக் கொண்டாடும் அளவிற்கு இக்கலைஞர்களின் வாழ்க்கை ஒழுக்கம் நிறைந்து விளங்கியது எனலாம்.

மக்கள் ஆடல்கள் உணர்வு வடிகால்களாக அமைய, தொழில் முறைக் கலைஞர்களின் ஆடல்கள் புகழ் பரவவும் வரலாறு பேசவும் உதவின. சுருங்கச் சொன்னால் சங்கச் சமுதாயத்தில் ஆடற்கலை சமூகஞ் சார்ந்த பயனுறு கலையாகவே வளர்ந்து திகழ்ந்ததெனலாம்.

 

       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.