http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 131

இதழ் 131
[ டிசம்பர் 2016 ]


இந்த இதழில்..
In this Issue..

சங்க இலக்கியங்களில் ஆடற்கலை 
தவத்துறைக் கோயில் விமான சிற்றுருவச் சிற்பங்கள்
அங்கும் இங்கும் - டிசம்பர் 2016
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 4
இதழ் எண். 131 > கலையும் ஆய்வும்
தவத்துறைக் கோயில் விமான சிற்றுருவச் சிற்பங்கள்
மு. நளினி

 சிராப்பள்ளி ஜெயங்கொண்டம் சாலையில், சிராப்பள்ளி யிலிருந்து ஏறத்தாழ 20 கி. மீ. தொலைவில் உள்ளது தவத்துறை. காவிரியின் வடகரைத் தலங்களுள் ஒன்றான இவ்வூர், தேவார மூவரின் பாடல் பெறாது போனாலும், அவர்களுள் ஒருவரான அப்பர் பெருமானின் அடைவுத் திருத்தாண்டகத்தில் இடம் பெற்றுள்ளது. 'பண்டெழுவர் தவத்துறை' (6: 71: 11) எனும் அப்பரின் குறிப்பே இவ்வூர் பற்றிக் கிடைக்கும் முதல் வரலாற்றுத் தரவாகப் பதிவாகி, இதன் பழைமையைப் பொ. கா. 6ஆம் நூற்றாண்டாக உறுதிசெய்கிறது.  பழங்காலத்தே எழுவர் தவம் செய்த துறை என்று அப்பரால் அறிமுகப்படுத்தப்படும் இவ்வூரைப் பல்லவர் காலந் தொட்டே பிராமணர் குடியிருப்புகள் பிரமதேயங்களாய்ச் சூழ்ந்திருந்தபோதும், வெள்ளான் வகை ஊராகவே இவ்வூர் நிலைத்திருந்தமையை இங்கிருந்து படியெடுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகள் நிறுவுகின்றன. தவத்துறை மகாதேவர், பெருமா னடிகள், ஈசுவர பட்டாரகர், உடையார், உடையநாயனார் என்றெல்லாம் காலத்திற்கேற்பப் பலவாறு பெயர் மாற்றம் பெற்ற இவ்வூர்க் கோயில் இறைவன் பொ. கா. 1596இல் அப்பரின் பண்டெழுவர் எனும் சுட்டலின் வடமொழியாக்கத் தில் சப்தரிஷீசுவரர் ஆனார். விமானம், முகமண்டபம், பெருமண்டபம் என அமைந்திருக்கும் இறைவன் திருமுன் கலைச்சிறப்பும் கல்வெட்டுப் பெருமையும் கொண்டது. பல்லவர், பாண்டியர், சோழர் கல்வெட்டுகளால் சுவர்களை நிரப்பிக் கொண்டிருக்கும் இத்திருமுன் முதலாம் ஆதித்தரால் கற்றளியாக்கப்பட்டது.  சிற்றுருவச் சிற்பங்கள்இத்திருமுன் விமான, முகமண்டப வேதிக்கண்டத்தின் பாதங்கள் இராமாயண, சிவபுராண, பாகவதக் கதைகளின் படக் காட்சிகளாய் 40 சிற்றுருவச் சிற்பங்களைப் பெற்றுள்ளன. முறையான பராமரிப்பின்மையால் தேய்ந்தும் பொரிந்துமுள்ள இத்தொகுதிகள் முற்சோழச் சிற்பிகளின் வடிப்புகள். விமானத்தின் வடக்குப் பாதங்களில் மேற்கிலிருந்து கிழக்காக இராவண அனுக்கிரகமூர்த்தி, நரசிம்மர் இரணியன் போர்க்காட்சி, ஸ்வஸ்திகக் கரண சிவபெருமான், சும்பவதம், விஷ்ணு அனுக்கிரகமூர்த்தி, கொற்றவை, மகிடாசுரமர்த்தினி, விஷ்ணுகருடன், வாலி-சுக்கிரீவப் போர் ஆகியன அமைய, கிழக்கில் வாலியின் மரணம், இலிங்க வழிபாடு, அண்ணாமலையார், அரிஅரர், ஆலிலைக் கண்ணன், தேவியருடன் மகாவிஷ்ணு ஆகிய சிற்பங்களும் தெற்கில் தென்திசைக்கடவுள், இரணியவதம், நிசும்பவதம், மற்போர், வித்தைக்காட்சி, தாடகைவதம், கஜேந்திர மோட்சம், மகப்பேறு ஆகியனவும் உள்ளன. முகமண்டப வேதிபாதங்களில் வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காகக் காமதகனர், கிராதார்ச்சுனர், அருச்சுன அனுக்கிரகர், இயமனை அழித்தவர், முருகன் ஆகிய சிற்பங்களும் தெற்கில் பிள்ளையார், குழுஆடல், காளிவதம், சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தி சிற்பங்களும் கிழக்கில் பிச்சைத்தேவர், நந்திஅணுக்கர்  சிற்பங்களும் காணப்படுகின்றன. நான்கு சிற்பங்களை அடையாளப்படுத்த முடியவில்லை. இரண்டு சிற்பங்கள் பெருமண்டபப் புதிய இணைப்பில் சிக்கியுள்ளன.அனைத்துச் சிற்றுருவச் சிற்பங்களுமே மிகுந்த அழகுணர்வுடன் நாடகக் காட்சிகளைக் கண் முன் நிறுத்துமாறு போலச் செம்மையாக வடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில அவை அடைந்திருக்கும் தேய்வையும் சிதைவையும் தாண்டிக் கண்களில் நிறைகின்றன.  அருச்சுன அனுக்கிரகர்நந்தியின் தலைமீது வல முன் கையை இருத்தி, அதன் உடல் மீது சாய்ந்தபடி நிற்கும் சிவபெருமானின் பின்கைகளில் மான், மழு. கண்கள் இடப்புறம் நிற்கும் இறைவியை நோக்கிட, இடப்புறம் திருப்பிய பாதங்களுடன் நின்றிருந்தபோதும் இறைவியின் பார்வை வலப்புறத்தே கிரீடமகுடத்துடன் கருடாசனத்தில் வணங்கிய கைகளுடன் இருக்கும் அருச்சுனரை நோக்கியுள்ளது. அருச்சனரின் முன் நிற்கும் பூதம் அவரிடம் பாசுபத அஸ்திரத்தைத் தரும் மெய்ப்பாட்டில் அமைய, அருச்சுனருக்குப் பின்னுள்ள முனிவரை அருச்சுனரின் தவக்கோல வடிவமாகக் கொள்ளலாம். மேலே, மேகங்களுக்குப் பின்னிருக்குமாறு வலப்புறத்தே நால்வரும் இடப்புறத்தே மூவரும் உரையாடுபவர்களாகவும் நிகழ்வைப் போற்றுபவர்களாகவும் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இராவண அனுக்கிரகர்காட்சியின் முக்கால் பகுதியாகக் கயிலாயமலை உள்ளது. கிரீடமகுடம், சவடி, உதரபந்தம், கைவளைகள் அணிந்து மூன்று முகங்களுடன் காட்சிதரும் இராவணன் மண்டியிட்டு அமர்ந்தபடி கைகளால் கயிலாயத்தைப் பெயர்க்க முயல்கிறார். மலையின் வலமேற்பகுதியில் திண்டில் வல முன் கை இருத்தி, வலக்காலால் மலையை அழுத்தும் இறைவனின் இட முன் கை கடகத்தில் உள்ளது. இடப்புறம் அமர்ந்துள்ள உமை அச்சத்துடன் இறைவனைத் தழுவ முயற்சிக்கிறார். வலது கீழ்ப்பகுதியில் மலையை ஒட்டி இரண்டு பூதங்கள் உள்ளன. தலைக்கு மேல் உயர்த்திய கல்லை இருகைகளாலும் பிடித்தபடி மேல் பூதம் நிற்க, கீழுள்ளது கத்தியும் கேடயமுமாய் இராவணனை எதிர்த்து நிற்கிறது. இராவண அனுக்கிரகர் சிற்றுருவச் சிற்பங்கள் பல கோயில்களில் காணக் கிடைத்தாலும் எதிர்க்கும் பூதங்கள் மிக அரிதாகவே இடம்பெற்றுள்ளன. சண்டேசுவர அனுக்கிரகர்வலப்புறம் முழங்கால்களை மடித்து வணங்கிய நிலையில் தலையைக் குனிந்தவாறு சண்டேசுவரர் காட்சிதர, இடப்புறம் இருக்கையில் சுகாசனத்தில் சிவபெருமானும் உத்குடியில் உமையும் சண்டேசுவரர் மீது அருட்பார்வை செலுத்துகின்றனர். பெருமானின் பின்கைகளில் மான், மழு. வல முன் கையில் சண்டேசுவரருக்குச் சூட்டக் கொன்றைமாலை கொண்டு, இட முன் கையைத் தொடைமீது வைத்துள்ளார். வலக்கையில் மலரேந்தியுள்ள அம்மை இடக்கையை இருக்கையில் இருத்தியுள்ளார். இருக்கையின் கீழே போற்றி முத்திரையில் ஒரு பூதமும் முழங்கால்களை மடித்து அமர்ந்தநிலையில் ஒரு பூதமும் இருக்க, இக்காட்சியின் சீர்மையைத் தமக்குள் உரையாடுபவர்களாய் வலமேற்புறம் இருவரும் நிகழ்வதனைத்தையும் போற்றுமாறு போல இடமேற்புறம் ஒருவரும் மேகங்களுக்குப் பின்னிருக்குமாறு இணைக்கப்பட்டுள்ளனர்.  தாடகை வதம்சுடர்முடியும் உயர்த்திய கையில் ஓங்கிய சூலமுமாய்க் காட்சியின் இடமேற்பகுதியில் தாடகையின் பாய்ச்சல். வலப்புறத்தே சடைமகுடம், தாடி, மீசை, பட்டாடை என நிற்கும் விசுவாமித்திரரின் வலக்கை, தமக்கு முன் நிற்கும் இராமருக்கும் இலட்சுமணருக்கும் இவள்தான் தாடகை எனக் காட்டிக் கொடுக்கிறது. இராமர் இருக்கும்போது தான் முயல்வது தகாது எனுமாறு போல இலட்சுமணர் இடக்கை வில்லுடன் அமைதி காக்க, தாடகையின் திறனும் ஆற்றலும் அறிந்தவராய்த் தம் முழு வில்வீச்சையும் தாடகை நோக்கி வெளிப்படுத்தும் ஆலிடக்கோலத்தில் இராமர். காட்சியின் வலப்புறத்தே கீழே, ஆற்றல் சமனுடையதாக இருந்தாலும் அறமே வெல்லும் என்பதை மெய்ப்பிக்குமாறு இராமரால் வெல்லப்பட்ட தாடகை வியப்பு முத்திரை காட்டி வீழ்ந்துள்ளார். பல்வேறு உணர்வுகள் உச்சம் காட்டும் அற்புதச் சிற்பம் இது. கொற்றவைமுற்சோழர் கோயில்களின் பாதச் சிற்பங்களில் கொற்றவை இடம்பெறாத இடங்கள் குறைவு. அவர் காட்சிதரும் இடங்களிளெல்லாம் அழகு பொலியும் என்றாலும், இக்கோயில் சிற்பம், நிற்கும் கோலத்தில் உடலின் வளைவுகள் வெளிப்படுத்தும் எழில்களை எப்படியெல்லாம் மேம்படுத்திக் காட்டமுடியும் என்பதை ஒரு சோழச் சிற்பி தம் திறனார்ந்த உளி ஓட்டத்தால் கல்லில் கனியவைத்திருக்கும் காட்சி என்றால், அது மிகையாகாது. எண் கையராய், மேற்கைகளில் சங்கும் சக்கரமும் அமைய, இட இடைக்கைகளில் கேடயம், வில் கொண்டு, முன்கையை முழங்கையளவில் மடித்து இடுப்பருகே நெகிழ்த்தியுள்ள அம்மை, வல இடைக்கைகளில் வாளும் அம்பும் ஏந்தியுள்ளார். வல முன் கை வலத்தோள் தொடுமாறு மடிந்து உயர்ந்துள்ளது. மேலாடை மடிப்பொன்று அக்கையில் தவழ்ந்து கீழே சரிந்துள்ளது. கீழே இருபுறத்துமுள்ள அடியவர்களுள் வலப்புறத்தார் தலையறுத்துத் தரும் மெய்ப்பாட்டில் காட்சிதர, இடப்புறமுள்ளவரின் செயற்பாட்டை அறியக்கூடவில்லை. வாலியின் வீழ்ச்சிமகன் அங்கதன் மடியில் இடக்கை இருத்திச் சாய்ந்தபடி வலக்காலை இடக்காலின் மேல் மடித்துப் பாதத்தைப் படுக்கை விளிம்பில் இருத்தியுள்ள வாலியின் வலக்கை அவரது வல முழங்காலைத் தொட்டவாறு உள்ளது. இடக்கால் எதிர்ப்புறத்தே முழங்கால்களை மடித்து அமர்ந்திருக்கும் தாரையின் மடியில். வலக்கையைப் படுக்கையின் மீதிருத்தி, இடக்கையைத் தலைமீது வைத்து ஓலமிட்டு அழும் தாரையின் முன்னுள்ள குரங்கு, கையால் முகம் தாங்கிச் சோகத்தில் உள்ளது.  அங்கதனுக்குப் பின்னுள்ள குரங்கு அவரைப் போலவே அமர்ந்துள்ளது. படுக்கையின் கீழுள்ள வலப்புறக் குரங்கிணை முகத்தில் முகம் புதைத்து அழ, இடக்குரங்கு கன்னத்தை இடக்கையால் தாங்கி,  நீட்டியுள்ள வலக்காலை வலக்கையால் பிடித்துள்ளது. அதன் முன்னுள்ள மனிதவடிவம் முழங்கால்களை மடித்துக் கைகளை மேலிருத்திச் சோகத்தில் உள்ளது. வாலியின் தலைக்குப் பின் தலையில் கைகளை வைத்தபடி ஒரு குரங்கிருக்க, தலைக்கு வலப்புறம் பெண்குரங்கொன்று கைகளை உயர்த்தி அலறி அழுகிறது. வலப்புறம் மேலே, கைகளை உயர்த்தியபடி ஒரு குரங்கும் சோகம் ததும்பிய முகத்துடன் மற்றொரு குரங்கும் காட்சிதருகின்றன. அவலத்தின் உச்சத்தை வெளிப்படுத்தும் இந்தச் சிற்பக்காட்சி தவத்துறையின் மிகச் சிறந்த சிற்றுருவச் சிற்பங்களுள் ஒன்றாம்.இங்குள்ள சிற்றுருவச் சிற்பங்களுள் பல சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்ட முற்சோழர் கோயில்களில் கண்டபாதச் சிற்பங்களாகக் காணப்படுவது நோக்க, முற்சோழர் காலத்தே சமுதாயத்தில் புராணக் கதைகள் பெற்றிருந்த செல்வாக்கை உணரமுடிகிறது. 


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.