http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 134

இதழ் 134
[ மே 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 7
உலகப் பார்வைக்கு உதயம் - 2
கங்கைகொண்ட சோழபுரம் – குடமுழுக்கு
இடம் பொருள் ஏவல்
நைவளம் பூத்த பாலை
இதழ் எண். 134 > கலையும் ஆய்வும்
உலகப் பார்வைக்கு உதயம் - 2
இரா.கலைக்கோவன், மு.நளினி



சமையற்கூடம்



முதற்பகுதியின் கீழ்ப்பிரிவில் புத்தூர் மணவீட்டின் சமையற்கூடம் காட்சிதருகிறது. ஒன்பது பெண்களும் ஓர் ஆணும் இயங்கும் இவ்வடுக்களைப்பதிவு சோழர்காலச் சமையற்கூடத்தைக் கண்முன் நிறுத்துகிறது. விறகுகள் நிறைத்த வாயுடன் மூன்று அடுப்புகள். அவற்றின் மேல் கொதிநிலையில் உணவுப்பொருள் கொண்ட மூன்று பெரும் கலங்கள். இக்கலங்களின் அடிப்பகுதி பெருத்தும் கழுத்துக் குறுகலாகவும் வாய் அதனினும் சற்றுப் பெரிய அளவிலும் உள்ளன. உலை கொதித்த இரு கலங்களிலுள்ள எஞ்சிய நீரை(?) அக்கலங்களின் முன் கீழே இருக்கும் சிறிய அகன்ற வாயுள்ள பாத்திரங்களில் வடிப்பதில் இரு பெண்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு பெண் கலத்தில் கொதிக்கும் பொருளைக் கிளறுவதிலும் மற்றொரு பெண் அதன் கீழுள்ள அடுப்பின் தீயைத் தூண்டி விறகிடுவதிலும் முனைய, சிறிய பாத்திரமொன்றைக் கையிலேந்தி அதிலிருப்பதைக் குடிக்கிறார் வயதில் சிறியவராய்த் தோற்றம் கொண்ட ஒரு பெண்.



உதவியாளர்களாய் நிற்கும் நான்கு பெண்களுள் மூவர் ஜாடி போன்ற வெள்ளை நிறப் பாத்திரத்தைக் கையில் பிடித்தவாறு நிற்க, ஒருவர் சற்றே அகன்றவாய்ச் சிவப்புப் பாத்திரத்தைக் கைகளில் ஏந்தியுள்ளார். தேவையான அளவு தானியத்தையோ, மளிகைப் பொருளையோ பிரித்துக் கொட்டிய நிலையில் ஜாடி போன்ற பாத்திரத்தைக் கையில் பிடித்தபடி நடு உதவியாளர் நிற்க, அதைச் சிறிய பாத்திரமொன்றில் பெற்ற ஆடவர் அருகிலிருக்கும் பெரும் கலத்திற்குள் அதைக் கொட்டும் முயற்சியில் உள்ளார். ஜாடியைப் பிடித்து நிற்கும் இடக்கோடி உதவியாளரிடமிருந்து அதிலுள்ளதைப் பெறுமாறு போல அவர் முன் நிற்கும் மற்றொரு உதவியாளரின் கையில் சிறிய கலம். வலக்கோடியிலுள்ள நான்காம் உதவியாளர் முக்காலியின் மீதிருக்கும் ஜாடி போன்ற பாத்திரத்தைப் பிடித்தபடி உள்ளார். அதிலிருந்து அவர் தானியம் கொள்ளக் கருதுகிறார் எனுமாறு போல முக்காலியின் முன் அகன்றவாய்ப் பாத்திரமொன்று காட்டப்பட்டுள்ளது. 



அடுக்களையில், பிடிப்பதற்கு ஏதுவாக இருபுறத்தும் வளையம் பெற்ற பல்வேறு அளவுகளிலான அகன்றவாய்ப் பாத்திரங்கள் முக்காலிகளின் மேல் ஆங்காங்கே இருத்தப்பட்டுள்ளன. அவற்றுள், வெள்ளை வண்ணத்தில் இரண்டும் இளமஞ்சளும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் ஒன்றும் உள்ளன. வடிநீர் வாங்கும், தானியம் கொள்ளும் பாத்திரங்கள் தவிர ஏனைய பாத்திரங்கள் அனைத்துமே தரைமீது இடப்பெறாமல் முக்காலிகளின் மேல் இருத்தப் பெற்றிருப்பது தரையின் ஈரப்பதம் தாக்கி உணவுப்பொருட்கள் கெட்டுவிடாது காக்கும் அடுக்களையாரின் எச்சரிக்கையுணர்வையும் பாத்திரங்களைத் தரைத்தூசுகள், பூச்சிகள் ஆகியவற்றிலிருந்து காக்கும் முன்னோக்கையும் உணர்த்துமாறு உள்ளது. இம்முக்காலிகளுள் சில தனித்தும் சில பாத்திரங்களுடன் இணைந்த நிலையிலும் இருந்தமையை ஓவியக்காட்சி நன்கு புலப்படுத்துகிறது.  



பெரும்பாலான அடுக்களைப் பெண்கள் இடுப்பிற்கு மேல் ஆடையின்றியுள்ளனர். மார்புக்குக் குறுக்காக மேலாடை அணிந் துள்ள சிலரும் அம்மேலாடை விலகிய நிலையிலேயே காட்டப்பட்டுள்ளனர். இப்பெண்களுள் சிலர் மங்கையராகவும் சிலர் அரிவையராகவும் இருப்பதை முகத்தோற்றம் கொண்டு அறியலாம். தலையில் பூவும் சிறிய அளவிலான அணிகலன்களும் நீளவளர்த்த செவிகளில் குதம்பை உள்ளிட்ட காதணிகளும் கழுத்தில் சரப்பளி, முத்துமாலை, மெல்லிய ஆரம் உள்ளிட்ட பல்வகை அணிகலன்களும் கைகளில் வளைகளும் கொண்டுள்ள இவர்தம் கீழாடைகள் பலவண்ண ஆடைகளாகக் கோடுகளுடனும் பூச்சித்திர வேலைப்பாட்டுடனும் அழகுற அமைந்துள்ளன. 



குறுகிய இடையும் எழிலார்ந்த மேனியும் அளவான மார்பகங்களும் சற்றே அகன்ற முகமும் நீள்விழிகளும் கொண்ட இச்சோழப் பெண்களின் உருவ அமைப்பு அவர்தம் உழைப்பிற்குச் சான்று பகர்வதாய் உள்ளது. அடுக்களையின் ஒரே ஆண் பணியாளராய்க் காட்சிதரும் இளைஞர் அணிகலன்களற்ற நிலையில் உரமேறிய மேனியராய் மரமேறி போல் இடையும் பின்புறமும் மறைத்துத் தொடையின் பெரும்பகுதி தெரியுமாறு ஆடையுடுத்தியுள்ளார். 



அடுக்களையின் பின்னால் சரியான இடைவெளிவிட்டு வரிசையாகக் குத்துவிளக்குகள். இந்நாளைய குத்துவிளக்குகள் போலவே வடிவமைப்புக் கொண்டுள்ள அவற்றின் தண்டுப் பகுதியில் சாரணர்கள் போடும் ரீஃப் முடிச்சு போலப் பட்டுத் துணியால் முடிந்துள்ளனர். இவ்விளக்குகள் அடுக்களைக்கு ஒளியூட்டின போலும். அவற்றுக்கிடையே சந்தனக் கிண்ணம் போன்றவையும் முக்காலியின் மீதிட்ட பாத்திரங்களும் உள்ளன.



சோழர்காலக் கல்வெட்டுகளில் அடுக்களை குறித்த தரவுகள் நிரம்பக் கிடைக்கின்றன. அடுக்களை சார்ந்த சொற்களாகக் கணக்கு, காணி, சிலவு ஆகியன அமைய, அடுக்களைக்காக ஒதுக்கப்பட்ட நிலமும் ஊரும் அடுக்களைப்புறமாக அறியப்பட்டன. அடுக்களையில் பணிபுரிந்த மகளிர் அடுக்களைப் பெண்டுகள் என்றழைக்கப்பட்டனர். 



 





 



 





 



திருமண அரங்கு



சமையற்கூடக் காட்சிக்கு நேர் மேலே திருமண அரங்கு. உபானம், தாமரைவரிகளுக்கு இடையிலமைந்த உருள்குமுதம், பெருவாஜனம் ஆகிய உறுப்புகள் கொண்டு உருவான தெற்றியொன்றின் மீது முதல் வரிசையில் விருந்தினர் அறுவர் அமர்ந்திருக்கப் பின்னிருக்குமாறு எழுவர் நிற்கின்றனர். இத்தெற்றி முகப்பின் நடுப்பகுதியில் தெற்றியின்மீது ஏற வாய்ப்பாக யாளித்தலை பெற்ற பிடிச்சுவருடனான படிகள் இருபுறத்தும் உள்ளன. இப்பிடிச்சுவர்களுக்கு இடைப்பட்டு இரண்டு நான்முக அரைத்தூண்கள் தாங்கும் கூரை கொண்ட கோட்டமும் அதில் ஓர் ஆடற்பெண்ணின் வடிவமும் காட்டப்பட்டுள்ளன. இடப்புறம் முகம் திருப்பிய நிலையில் மார்பளவாகக் காட்சிதரும் அப்பெண்ணின் இடக்கையும் மார்புக்குக் கீழ்ப்பட்ட பகுதியும் சிதைந்துள்ளன. கங்கணம் அணிந்துள்ள வலக்கை இடுப்பருகே திரும்பிய நிலையில் சிதைந்துள்ளது. விருந்தினர்கள் நிறைந்துள்ள மணவரங்கத் தெற்றியின் விதானம் இருபட்டிகளுக்கு இடையிலான பூப்பதக்க வரிகளை மேல் ஒன்றும் கீழொன்றுமாகக் கொண்டு, அவற்றிடையே இறக்கைகளை விரித்தபடி, வலப்பார்வையாய்க் கழுத்தைத் திருப்பியுள்ள அழகிய அன்னங்களின் வரிசையைப் பெற்றுள்ளது. 



 





 



விருந்தினரில் பெரும்பான்மையர் துணியை முப்புரிநூல் என அணிந்துள்ளனர். பலருக்கு அது இயல்புநிலையிலிருக்க, முதல் வரிசையின் வலக்கோடிப் பெரியவருக்கு மட்டும் நிவீதமாகக் காட்டப்பட்டுள்ளது. முதல் வரிசையிலுள்ள இரண்டாமவரும் ஆறாமவரும் பழுத்த முதியவர்களாய், வெண்தாடி வேந்தர்களாய்ச் சடைமுடிந்த தலையினராய்க் காட்சியளிக்கின்றனர். இம்முதியவர்க்கு இடையிலமர்ந்துள்ள மூவரும் வலக்கையை வியப்பு முத்திரையில் விரித்திருக்க, அவருள் முதலாமவர் தம் இடக்கையை ஆசி அருளும் மெய்ப்பாட்டில் குவித்துள்ளார். அமர்ந்துள்ளவர்களில் மூவருக்குக் கொண்டையுள்ளது. மூவர் தலையலங்காரம் அறியக்கூடவில்லை. அனைவருமே வியப்பும் திகைப்பும் சூழ, விரித்த விழிகளுடன் நடப்பதொன்றும் விளங்காதார் போல் அமர்ந்துள்ளனர். அவர்தம் இடையாடை அடுக்களை ஆடவர் ஆடையமைப்பை ஒத்துள்ளது. 



நிற்பவர்களுள் ஐவர் இளைஞராகவும் இருவர் முதியவராகவும் உள்ளனர். முதியவருள் ஒருவர் நரைத்த பெருங்கொண்டையும் வெண்தாடியுமாய் விளங்க, இளைஞர்களுள் இருவர் கருத்த கொண்டையராய்க் காட்சிதருகின்றனர். ஒருவர் தலையிலும் கழுத்திலும் ருத்திராக்க மாலையுடன், இடக்கையைச் சற்றே உயர்த்திய நிலையில் விரல்களை விரித்து வியப்புக் காட்டி நிற்க, சிலர் தம் கண் முன் நிகழும் நிகழ்ச்சியின் விளைவுகளைப் பார்வைப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். விருந்தினர்களுள் பலர் நீள வளர்த்த வெறுஞ்செவியர்களாக அமைய, ஓரிருவர் காதணிகள் கொண்டுள்ளனர். இளையவர்களை மஞ்சள் மேனியராகவும் முதியவர்களைச் சிவந்தவர்களாகவும் சோழ ஓவியர்கள் வேறுபடுத்திக் காட்டியுள்ள இவ்விருந்தினர் அரங்கு முப்பரிமாணக் காட்சியாக மிகுந்த திறனுடன் வரையப்பட்டுள்ளது. 



அரங்க விருந்தினர்களின் உணர்வுக் கொந்தளிப்பிற்குக் காரணமானவரும் அவர் தேடிவந்த மாப்பிள்ளை சுந்தரரும் ஓவியக்காட்சியில் பெருமளவிற்குச் சிதைந்திருந்தபோதும் வந்தவரின் குடையும் தலைப்பகுதியும் சுந்தரரின் எஞ்சிய தோற்றமும் அவர்களை அடையாளம் காட்டுகின்றன. பஞ்சு போல் நரைத்த தலைமுடியைக் கொண்டையாய் முடிந்து, பழுத்த பழமாய், முப்புரிநூல் போல மார்பில் துணியணிந்து, வலக்கையில் ஓலையும் இடக்கையில் குடையும் கொண்டு, இடுப்பில் கீளுடையும் முகத்தில் மீசையும் தாடியுமாய்த் தொங்கு செவியராய்க் கண்களில் குறும்புடன் சுந்தரர் முன், 'அடிமை நீ, ஆவணம் இதோ' என்றறிவிப்புச் செய்து, எஜமானப் பொலிவுடன் நிற்கும் சிவபெருமானை, அடுத்துள்ள வழக்கு மன்றக் காட்சி கொண்டே இங்கு வண்ணிக்க முடிந்துள்ளது. நிகழ்ச்சிகளைச் சேக்கிழார் பார்வையில் பார்க்கலாம்.  



நாவலூரார் சுந்தரரின் எதிரில் வந்து நின்ற சிவபெருமான், மணவரங்கில் கூடியிருந்தோரைப் பார்த்து, 'நாவலூரான் என் அடிமை' என்றார். அந்தணர் நகைத்தனர். சுந்தரருந்தான். 'நண்பனே, ஏன் நகைக்கிறாய், இதோ உன் பாட்டன் அந்நாளில் எழுதித் தந்த முறிவோலை' என்று ஆவணங் காட்டிச் சுந்தரரின் நகையையும் அதன் பின்னிருந்த சினத்தையும் அடக்க முயன்றார் இறைவன். 'அந்தணர் மற்றோர் அந்தணருக்கு அடிமையாவதா! நீ பித்தனா?' சினமடங்காத சுந்தரர் ஏக வசனத்தில் இறங்கி, 'எங்கே அவ்வோலையைக் காட்டுக' என்றார். 'முறியோலையைப் பெரியவர்கள் பார்க்கட்டும். நீ எனக்குத் தொண்டு செய்யப் புறப்படு' என்றார் இறைவன். 



அவ்வளவில் பெருஞ்சினம் பொங்கத் தாவிய சுந்தரர் சிவபெருமான் கையிலிருந்த ஓலையைப் பறித்துக் கிழித்தெறிந்தார். அரங்கிலிருந்தோர் சுந்தரரின் முறையற்ற செயலால் வருந்தினர். மேற்கொண்டு ஏதும் நடவாதவாறு அவரைத் தடுத்தனர். சிவபெருமானை நோக்கி அவர் இருப்பிடம் வினவினர். 'வெண்ணெய்நல்லூர் என் இடம். முறையின்றி என் ஓலை கிழித்ததனால் இவன் என் அடிமை என்பதை மெய்ப்பித்தான்' எனச் சிரித்தார் சிவபெருமான். 'வெண்ணெய்நல்லூர் உம் இடமா? அங்ஙனமாயின் அங்கேயே வழக்கிடுக' என்ற சுந்தரரிடம், 'வெண்ணெய்நல்லூர் அந்தணர் அறக்களத்தில் என்னிடமுள்ள மூலவோலை காட்டி உன் அடிமைநிலை மெய்ப்பிப்பேன்' எனச் சூளுரைத்த முதியவர் புத்தூரிலிருந்து வெண்ணெய் நல்லூருக்கு விரைந்தார்.



இராஜராஜரின் ஓவியர்கள் வரைந்த திருமண அரங்கின் சிதைவு சிவபெருமான், சுந்தரர் உணர்வலைகளைப் புரிந்து கொள்ளவோ, அவை குறித்த எண்ணங்கள் வளர்க்கவோ வழி விடவில்லை. நல்லவேளையாக விருந்தினர்களின் பார்வைகள் தப்பிப் பிழைத்தன. அதனால், நாயகர் இருவரின் உரை வளர்ந்து உச்சமான நிலையை அப்பார்வைப் பின்னல்கள் கொண்டும் வியப்பில் விரிந்திருக்கும் அவர்தம் முகக்குறிப்புகள், கையமைதிகள் கொண்டும் சேக்கிழாரின் பின்னணியில் சிந்தித்து அறிதல் இயலுவதாகிறது.



வெண்ணெய்நல்லூர் வழக்கு மன்றம் மூன்றாம் பகுதியாக விரிகிறது. சோழர்கால வழக்காடு மன்றுகள் எப்படியிருந்தன, அங்கே வழக்கு எப்படி நிகழ்த்தப்பட்டது, அறக்கள அந்தணர்கள் எப்படியிருந்தனர் என்பதற்கெல்லாம் விடையிறுக்குமாறு இவ்வோவியம் வரையப்பட்டுள்ளமை இதன் சிறப்பாகும். 



- வளரும்



 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.