![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 134
![]() இதழ் 134 [ மே 2017 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
சிறுவர் சிறுமியர்க்கு நல்வழி காட்டப் பஞ்ச தந்திரக் கதைகள், பரமார்த்த குரு கதைகள் என ஏராளமான கதைகள் நம் நாட்டில் உள்ளன. இவை அனைத்தும் ஒரே காலகட்டத்தில் ஒருவரால் மட்டும் எழுதப்பட்டதா என்று கூறமுடியாது. ஆனால் அண்மையில் தொகுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இவை தமிழ்ச் சமுதாயத்தில் பல தலைமுறைகளாகச் செவிவழியில் வழங்கப்பட்டு வந்திருக்க வேண்டும் என்பது எங்கள் வரலாற்று ஆய்வுகளின் களப்பயணங்களின்போது பல்வேறு நேரங்களில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறு அண்மையில் எங்களை ஆச்சரியப்படுத்தியது காஞ்சிபுரம் அருகிலுள்ள தென்னேரி என்றொரு சிற்றூர் ஆகும். குனிந்து பார்க்க வேண்டிய கண்டபாதச் சிற்பங்களும் அண்ணாந்து பார்க்க வேண்டிய பூதவரிச் சிற்பங்களும் அந்தந்தக் காலகட்டச் சமுதாயத்தைப் பிரதிபலிப்பவை. இவை சிற்பிகளுக்கு அவர்தம் கற்பனைத்திறனின் உச்சத்தை வெளிப்படுத்த அமைத்துத் தரப்பட்ட களங்கள். இளம் சிற்பிகள் பயிற்சிக்காக இவற்றைப் பயன்படுத்தி இருக்கிறார்களோ என்று தோன்ற வைப்பவைகளும் உள்ளன; தேர்ந்த சிற்பிகளின் மகத்தான கைவண்ணத்தைக் கொண்டவைகளும் உள்ளன. சென்னை ஒரகடத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியிலுள்ள தென்னேரியின் சிவன் கோயிலின் தூங்கானை விமானத்தின் வடபுறப் பூதவரியின் கிழக்கிலிருந்து முதல் சிற்பமாக இருப்பது இரு பறவைகள் ஓர் ஆமையைக் கழியில் தூக்கிப் பறந்து செல்லும் காட்சி. இது பஞ்சதந்திரக் கதைகளில் ஒன்றாகும். ஒரு குளத்தில் வசித்து வந்த ஆமை அக்குளத்தின் மீன்கள், பூக்கள் மற்றும் குளக்கரைக்கு அருகிலுள்ள செடிகொடிகள் தவிர வேறெதுவும் பார்த்தறியாதது. அவை மட்டுமே உலகம் என்று எண்ணிக் கொண்டிருப்பது. அக்குளத்துக்கு மீன்பிடிக்க வரும் கொக்குகள் தாங்கள் பறக்கும்போது விரியும் காட்சிகளைப் பற்றி விவரிப்பதிலிருந்து தானும் அக்காட்சிகளைக் கண்டு இன்புற வேண்டும் என எண்ணிக் கொள்ளும். ஒருநாள் தன் விருப்பத்தைக் கொக்குகளிடம் வெளிப்படுத்த, இரு கொக்குகள் ஓர் உத்தியைச் சிந்தித்து, ஆமை ஒரு கழியை வாயில் கவ்விக் கொண்டால், இரு கொக்குகளும் அக்கழியைத் தூக்கிப் பறந்து சென்று தாங்கள் கண்ட காட்சிகளை ஆமைக்கும் காட்டலாம் என்று திட்டமிடும். அவ்வாறு பறக்கும்போது அதைக் கண்ணுறும் மனிதர்கள் ஆமை பறப்பதைக் கண்டு வியக்க, ஆமை அகமகிழ்ந்து ஏதோ சொல்ல முற்பட, கீழே விழுந்து ஓடு உடைந்து இறந்துபோகும். ஒரு மனிதன் எப்போது வாயைத் திறந்து பேசவேண்டும், எப்போது வாயைத் திறக்கக்கூடாது என்பதை நன்கு உணர்ந்திருக்க வேண்டும் என்பதை விளக்கும் கதை இது. இது தென்னேரியில் பூதவரிச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இக்கதை இதுபோல் வேறு சில கோயில்களிலும் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு திருச்சிராப்பள்ளி அருகிலுள்ள திருச்செந்துறை கோயில்.
தென்னேரி
திருச்செந்துறை
கதையில் கொக்காக இருக்கும் பறவைகள் பூதவரிச் சிற்பத்தில் அன்னமாகக் காட்டப்படுகின்றன. எனவே, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அன்னங்களாக இருந்த பறவைகள் பிற்காலத்தில் இக்கதைகள் நூல்வடிவில் தொகுக்கப்பட்டபோது கொக்குகளாகச் சுட்டப்பட்டிருக்க வேண்டும். இதுபோன்ற மாற்றங்கள் இக்கதைகளில் மட்டுமல்ல. பல கைகள் மாறும் பனிக்கட்டி கரைந்துகொண்டே வருவதுபோல, செவிவழிக் கதைகளாக வழங்கப்படுபவை கால ஓட்டத்தில் மாற்றங்கள் பெறுவது சண்டேசுவரர் கதை முதல் தமிழகத்தின் பெண் தெய்வ வழிபாடுகள் வரை விரவிக்கிடக்கின்றன. இறைவனால் சண்டேசுவரர் என்றழைக்கப்பட்ட விசாரதருமரின் கதைநிகழ்வுகள் முதன்முதலில் சிற்பமாக வடிக்கப்பட்டது மாமல்லபுரத்தில் தருமராஜரதம் என்றழைக்கப்படும் அத்யந்தகாமத்தில்தான். இத்தளியின் காலம் எட்டாம் நூற்றாண்டு. அந்தக் காலகட்டத்தில் பூதகணங்கள் வாயிலாக அடியார்களை இறைவன் அணுகியிருப்பதை அதே மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தவச்சிற்பத் தொகுதியில் அர்ச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை ஒரு பூதம் மூலம் வழங்குவதிலிருந்து உறுதிப்படுத்தலாம். அத்யந்தகாமத்தில் பூதம் இல்லாமல் இருப்பதற்கு இடவசதியின்மைதான் காரணமாக இருக்கக்கூடும். பிறகு ஒன்பதாம் நூற்றாண்டின் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் வடகைலாயத்துக்கும் தென்கைலாயத்துக்கும் இடையிலமைந்த முதன்மை விமானத்தின் வெளிப்புறச் சுற்றுவரிசைத் தூண் ஒன்றில் பூதம் வழங்குவதுபோல் காட்டப்பட்டுள்ளது. பதினொன்றாம் நூற்றாண்டு கங்கைகொண்டசோழபுரத்தின் விமானத்தில் இறைவனே தம் கைப்படக் கொன்றைமாலையைச் சண்டேசுவரரின் தலையில் தானே சூட்டுவதுபோல் அமைந்துள்ளது. பனிரெண்டாம் நூற்றாண்டின் பெரியபுராணத்திலும் இறைவனே நேரடியாகத் தருவதுபோல் மாறியுள்ளது. இதுபோல் காலவாரியாக மற்ற சிற்பங்களையும் ஆராய்ந்தால், சுவையான பல தகவல்கள் புதிய முடிவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பது திண்ணம். (மீண்டும் ஆய்வுப்பாதையின் வேறொரு கண்டுபிடிப்பில்) |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |