http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 140

இதழ் 140
[ ஃபிப்ரவரி 2018 ]


இந்த இதழில்..
In this Issue..

இருண்டகாலமா? - 2
செய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 1
கயிலைப் பயணம் - 2
மாமல்லபுரக் குடைவரைகள்
வட்டாடல் கலை
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 5
இதழ் எண். 140 > கலைக்கோவன் பக்கம்
இருண்டகாலமா? - 2
இரா. கலைக்கோவன்
இலக்கியங்கள்

முருகாற்றுப்படை தவிர்த்த பிற ஒன்பது பாடல்களும் புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் தவிர்த்த பிற தொகை நூல்களும் சங்க காலத்தின் மேல் எல்லையாகக் கொள்ளப்படும் பொ. கா. 250க்கு முற்பட்டவை என்பதில் தமிழ், வரலாற்று அறிஞர்களுக்கிடையே ஒத்திசைவு உள்ளது. எனில், முருகாற்றுப்படை, புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் ஆகிய நான்கு இலக்கியங் களும் எக்காலத்தன என்ற கேள்வி எழுகிறது. இந்நான்கனுள் புறநானூறும் கலித்தொகையும் சங்கச் சாயலில் தோய்ந்தவை. முருகாற்றுப்படையும் பரிபாடலும் 6ஆம் நூற்றாண்டில் எழுச்சியோடு வெளிப்பட்ட பத்திமை இலக்கியங்களின் முன்னோடிகளாகவும் அதே சமயம் சங்க இழையோட்டத்தில் வடிவமைக்கப்பட்ட இலக்கியங்களாகவும் காட்சிதருகின்றன.

பெரும்பாலான தமிழ், வரலாற்று அறிஞர்கள் இந்நான்கையும் சங்கம் மருவிய காலமாகக் கருதப்படும் பொ. கா. 250க்கும் 550க்கும் இடைப்பட்ட தொகுப்புகளாகவே கொள்கின்றனர். எனில், புறநானூற்றில் சுட்டப்படும் சேர, சோழ, பாண்டிய அரசர்களும் சிற்றரசர்களும் ஊர்த்தலைவர்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலம் எதுவாக அமையமுடியும்? சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் தமிழ்நாட்டில் இவர்கள் தழைத்திருந்ததாகக் கொள்வதுதானே பொருந்தும். புறநானூற் றில் காட்சிப்படுத்தப்படும் ஊரகப்பண்பாடு கலித்தொகையிலும் பரவலாகக் கண்சிமிட்டுகிறது. சிலப்பதிகாரத்து ஆய்ச்சியர் குரவையில் கலித்தொகையின் சாயல் இருக்கிறது. பத்திமை இலக்கியங்களில் பேசப்படும் செய்திகளில் சில கலித்தொகையிலும் பரிபாடலிலும் வேர்பிடித்துள்ளன. உள்ளீடு கொண்டும் உணர்த்தப்படுவன கொண்டும் சங்கம் மருவிய கால இலக்கியங்களாக உறுதிப்படும் புறநானூறு, கலித்தொகை, முருகாற்றுப் படை, பரிபாடல் ஆகிய நான்கும் இருண்டகாலமாக ஒதுக்கப்பட்ட மூன்று நூற்றாண்டுக் கால அரசியல், சமுதாயம், பண்பாட்டுச் செய்திகளைத் தருவதோடு, அக்காலத்தே தமிழ்நாட்டில் நிகழ்ந்த களப்பிரர் பரவல் நாடு தழுவியதாக அமையவில்லை என்பதையும் உள்நாட்டுக் கலை, பண்பாட்டிற்கு இடையூறாக இருக்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்துவது காண்க.

பொ. கா. 6-7ஆம் நூற்றாண்டினவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அப்பர், சம்பந்தரின் ஆறு திருமுறைகளும் இருண்டகாலக் கலை, பண்பாட்டு வாழ்க்கையில் ஒளியேற்றும் சுடர்களாக உள்ளன. பத்திமைப் பார்வையை விலக்கி, இந்த ஆறு திருமுறைகளையும் சமுதாய நோக்கில் ஆராயும்போது அவை தோன்றிய காலத்தே தமிழ்நாட்டில் நிலவிய கலை, பண்பாட்டுக் கூறுகள் வெளிச்சம் பெறும்.

சில சான்றுகளைக் காண்போம். சங்க இலக்கியங்களில் பேசப்படும் இசைக்கருவிகளிலிருந்து பல்கிப் பெருகிய, மாறுபட்ட பல்வேறு தோல், காற்று, நரம்பு, கஞ்சக்கருவிகளைப் பத்திமை இலக்கியங்கள் கண்முன் வைக்கின்றன. சங்க காலத்தின் முதன்மை நரம்புக்கருவியான யாழ் பத்திமைக் காலத்தில் தொடர்ந்தபோதும் புதிய நரம்புக்கருவியாக வீணையையும் பார்க்கமுடிகிறது. ஐவகை நிலங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட பறை, துடி வழக்கில் குறைந்து, கரடிகை, இடக்கை, மொந்தை, கொடுகொட்டி, தக்கை, கல்லவடம், குடமுழவு எனப் புதிய தோல்கருவிகள் கையாளப்படுகின்றன. சங்கப் பாடல்களில் இடம்பெறாத பாணி, சதி (ஜதி) முதலிய தாளம் சார்ந்த சொற்கள் சம்பந்தரால் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாலை மழவர்களின் இசைக்கருவியான சங்கத் துடி சமயக் குறியீடாகச் சைவம் சார்ந்த கடவுளின் கைக்கு மாறுகிறது.

சங்க இலக்கியங்களில் கோயில், கடவுள், வழிபாட்டுமுறைகள் மிக எளிய நிலையில் காட்டப்படும் அமைப்பிலிருந்து மாறுபட்ட வளர்நிலைகளை முருகாற்றுப்படையிலும் பரிபாடலிலும் காணமுடிந்தாலும், பத்திமை இலக்கியங்கள் அவற்றின் உச்சத்தைத் தொட்டுள்ளமை கண்கூடு. கலித்தொகையில் கண்காட்டும் தொன்மங்களும் பரிபாடலில் இடம்பெறும் சமயச் செய்திகளும் அப்பர், சம்பந்தர், முதல் ஆழ்வார் மூவர் பாடல்களில் முழுவீச்சில் விரிகின்றன. சான்றாக இராவணனுக்கு அருள்தந்த சிவபெருமானின் கதையைக் கொள்ளலாம். கலித்தொகையில் ஓரடியில் வெளிப்படும் இச்செய்தி அப்பரின் பெரும்பாலான பதிகங்களில் இடம்பிடித்துள்ளது. சம்பந்தராலும் இது போற்றப்பட்டு, இராவணன் வரலாறு தொடர்பான பல முதன்மைச் செய்திகள் முன்வைக்கப்படுகின்றன.

சைவம் சார்ந்த பல தொன்மங்கள் அப்பராலும் சம்பந்தராலும் முதன்முறையாக விதந்தோதப்படுவதைப் பார்க்கும்போது பொ. கா. 6ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அச்சமயம் மிகப் பெரிய அளவில் சமுதாயத்தில் கிளைத்துப் பரவியிருந்ததை அறியலாம். வழிபாட்டுமுறைகளில் வளர்ச்சியும் ஆடலும் பாடலும் வழி பாடு சார்ந்து செழித்ததும் பத்திமை இலக்கியங்கள் காட்டும் உண்மைகளாகும். இவையெல்லாம் திடீரென நேர்ந்த மாற்றங்களன்று. களப்பிரர்கள் தமிழகத்தில் பரவியதாகக் கருதப்படும் மூன்று நூற்றாண்டுகளிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக வளர்ந்தே ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் அவை உச்சத்தை அடைந்திருக்கவேண்டும். இதை உறுதிப்படுத்துமாறு அப்பருக்கும் சம்பந்தருக்கும் காலத்தால் முற்பட்டுப் பல நாயன்மார்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்தமை அவ்விருவர் பதிகங்களால் வெளிப்படுதல் காண்க.

முதல் ஆழ்வார்கள் மூவராக வைணவப் பாரம்பரியத்தில் போற்றப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் விஷ்ணுவின் கைக்கருவிகளையும் அவரது வீரச்செயல்களையும் அவரால் அழிக்கப்பட்டவர்களையும் தங்கள் அந்தாதிப் பாசுரங்களில் விரிவாகச் சுட்டியுள்ளனர். உலகளந்த பெருமாளாக விஷ்ணு விண்ணோக்கி உயர்த்திய திருவடியை நான்முகன் கழுவித் தூய்மை செய்ததாகப் பூதத்தாழ்வார் குறிப்பிடும் காட்சி பொ. கா. 8ஆம் நூற்றாண்டின தான மாமல்லபுரத்து வராகர் குடைவரையில் சிற்பப் படப்பிடிப்பாகப் பதிவாகியுள்ளது. அது போலவே பேயாழ்வார் குறிப்பிடும் மது, கைடபர் கதை தமிழ்நாட்டில் பல்லவர், பாண்டியர், அதியர், முத்தரையர் குடைவரைகளில் பொ. கா. 8, 9ஆம் நூற்றாண்டுகளில் சிற்பவடிவம் கண்டுள்ளது.

சிலப்பதிகாரத்தின் பதினோராடல்களில் ஒன்றாக விளக்கப்படும் குடக்கூத்து பூதத்தாழ்வாராலும் பேயாழ்வாராலும் விஷ்ணு ஆடிய கூத்தாக விதந்தோதப்படுகிறது. 'குடமாடிக் கோவலனாய் மேவி', 'குடம் நயந்த கூத்தனாய்' எனும் பாடலடிகளைக் கண்ணே போல் போற்றிப் பல்லவர், பாண்டியர், சோழர் காலத்தே எழுந்த கற்றளிகளில் குடக்கூத்துச் சிற்பங்கள் விமானத்தின் அனைத்து உறுப்புகளிலும் இடம்பெற்றுப் பொலிந்தன. விஷ்ணு குடக்கூத்தாடிய இடம், அதற்கான காரணம், அங்கு நிகழ்ந்த போர் என நீண்டதொரு வரலாற்றைப் பேயாழ்வார் முன்வைக்கிறார். ஆழ்வார்கள் காலநிலை குறித்து விரிவான அளவில் ஆய்வுசெய்த பேராசிரியர் மு. இராகவைய்யங்கார் இம்மூவர் காலத்தைப் பொ. கா. 6ஆம் நூற்றாண்டிற் குரியதாகவே பதிவுசெய்துள்ளார். எனில், இருண்டகாலமாகக் கருதப்படும் சங்கம் மருவிய காலத்தில் வைணவம் சார் தொன்மங்கள் எத்தகு வளர்நிலைகளைச் சந்தித்திருக்க வேண் டும் என்பதை உணரலாம். பரிபாடலில் சொல்லப்படாத புதிய தொன்மக்கூறுகளை இம்முதலாழ்வார் மூவரும் முன்வைப்பது அக்காலத்தே விளைந்த வைணவ வளர்ச்சியின் எதிரொலிப் பாகவே அமையும்.

கோயில்கள்

அப்பரும் சம்பந்தரும் பாடிய தமிழ்நாட்டுக் கோயில்களாய் அவர்தம் பதிகங்கள் அடையாளப்படுத்தும் 200க்கும் மேற்பட்ட இறையகங்கள் தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பரவியிருந்தன. சோழமண்டலத்தில் எண்ணிக்கையில் மிக அதிகமாகவும் பல்லவர்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவிலும் பாண்டியர்பகுதியில் சற்றே குறைந்த அளவிலும் இருந்த சைவம் சார்ந்த இக்கோயில்கள் எக்காலத்தில் உருவாகியிருக்க முடியும்? அப்பரின் அடைவுத்திருத்தாண்டகம் ஊர், குடி, துறை, காடு, துருத்தி, வாயில், குளம், களம், ஆறு, பள்ளி எனப் பல்வேறு பின்னொட்டுக்களுடன் அமைந்திருந்த எண்ணிறந்த ஊர்களின் கோயில்களைப் பதிவுசெய்துள்ளது. கொகுடிக்கோயில், கரக் கோயில், ஞாழற்கோயில், ஆலக்கோயில், இளங்கோயில், மாடக்கோயில், தூங்கானைமாடம் எனப் பல்வகைத்தனவாய் விளங்கிய இவையெல்லாம் மிகக் குறுகிய காலத்தில் தோற்றம் கண்டிருக்க முடியாது. சமயச் சிந்தனைகள் ஊரோடும் குடியோடும் சேர்ந்து வளர்பவை. காலநடையில் கனிபவை. மிகக் குறைந்த அளவில் கொண்டாலும் தமிழ்நாடு முழுவதும் சைவமும் வைணமும் கிளைத்துப் பரவிக் கோயில்களைக் கொண்ட மைக்கு 100 - 150 ஆண்டுகளேனும் தேவைப்பட்டிருக்கும். சங்க காலத்திலிருந்து ஒரு தொடர் நிகழ்வாகவே இவை மாற்றங்களைக் கண்டும் வளர்நிலைகளை எய்தியும் காலநீரோட்டத்தில் சமூகத்தில் நிலைபெற்றதாகக் கொள்வதே பொருந்தும்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பட்டிக் குடைவரை வளாகத்திருக்கும் எக்காட்டூருக்கோன் பெருந்தசன் எனும் வட்டெழுத்துக் கல்வெட்டை அதன் எழுத்தமைதி கொண்டு திரு. ஐராவதம் மகாதேவன் 6ஆம் நூற்றாண்டினதாகக் கொள்கிறார். சில கல்வெட்டாய்வாளர்கள் இக்கல்வெட்டை ஐந்தாம் நூற்றாண்டினதென்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள 105 குடைவரைகளில் பிள்ளையார்பட்டிக் குடைவரை அமைப்பில் பிறவற்றினின்றும் முற்றிலும் மாறுபட்ட வடிவினது. தாய்ப்பாறை இலிங்கமுடைய அதன் கருவறை, தாங்குதளமும் கூரை யுறுப்புகளும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குடைவரையின் பின்சுவரில் தாய்ப்பாறையிலான பிள்ளையாரின் அமர்நிலைச் சிற்பமும் துணைவர்களுடனான சங்கரநாராயணரின் நின்றநிலைச் சிற்பமும் முழுமையுற்ற நிலையில் சிறக்க வடிக்கப்பட்டுள்ளன. இடுப்புக்குக் கீழ்ப்பட்டபகுதி பாறையாக விடப்பட்ட நிலையில் இலிங்கோத்பவரின் சிற்பம் கருவறையின் வடசுவரில் அமைந்துள்ளது. இம்மூன்று சிற்பங்களும் சைவம் சார்ந்த தொன்மங்கள் சமூகத்தில் வேரோடியிருந்தமையை உணர்த்தவல்லன. களப்பிரர்ஆட்சி பாண்டியர் பகுதி யில் மூன்று நூற்றாண்டுகள் தொடர்ந்து இருந்ததாகக் கொள்வோமாயின், அவர்கள் சமணம் சார்ந்தவர்கள், சைவக்கோயில்களை அழித்தவர்கள் எனும் கல்லாடச் செய்தியில் சிறிதளவேனும் உண்மை இருக்குமாயின், ஐந்தாம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் பிள்ளையார்பட்டிக் குடைவரை எப்படி உருவாகியிருக்கமுடியும்? குடைவரையை ஆறாம் நூற்றாண்டினதாகக் கொண்டாலும் பொ. கா. 550வரை களப்பிரர்கள் கால்கொண்டிருந்த சமணஞ்சார்ந்த பாண்டியர்பகுதியில் சைவக்கோயில், தமிழ்நாட்டுக் கலைவரலாற்றின் புரட்சிப் படைப்பாகக் கருதப்படும் முதல் குடைவரை மிகக் குறுகிய காலத்தில் முழுமையுற்ற நிலையில் எங்ஙனம் வடிவமைக்கப்பட்டிருக்க முடியும்?

களப்பிரர் - சான்றுகளும் கேள்விகளும்

பொ. கா. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டனவாகக் கிடைக்கும் பாண்டிமண்டலத்துத் தமிழ்பிராமி கல்வெட்டுகளின் எண்ணிக்கையோடு (89) ஒப்பிடும்போது களப்பிரர் காலப் பதிவுகளாக விரல்விட்டு எண்ணும்படியான கல்வெட்டுகளே அங்குக் காணக்கிடைக்கின்றன. மகாதேவன் பதிப்பித்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் ஒன்று மட்டுமே பாண்டியர் பகுதி சேர்ந்தது. மதுரையைக் கைப்பற்றி மூன்று நூற்றாண்டுக் காலம் அதையாண்ட களப்பிரர்கள், வரலாற்றாசிரியர்கள் குறிக்குமாறு சமணசமயத்தினர் எனில், அவர்கள் வருகைக்கு நான்கு நூற்றாண்டுகள் முன்பாகவே மதுரையில் செழித்திருந்த சமணம் களப்பிரர் ஆட்சிக்காலத்தே உச்சத்தைத் தொட்டிருக்க வேண்டும். ஆனால், பாண்டியர் பகுதியில் களப்பிரர் ஆட்சிக்காலத்தே சமண எழுச்சியிருந்ததைக் காட்டும் சான்றுகள் எதையும் காணக்கூடவில்லை.

களப்பிரர் வருகைக்கு முன் தாமாகவே சமணமுனிவர்களை ஆதரித்து, அவர்களுக்கு வாழ்விடங்களைச் செய்து தந்த தமிழ் மன்னர்களும் மக்களும் களப்பிரர் காலத்தில் அப்பணி துறந்தமைக்குக் காரணம் யாது? களப்பிரர் வேற்றுநாட்டவர் என்பதால் மக்கள் அவர்களைப் புறக்கணித்ததாகக் கொண்டாலும் சமணர்களான களப்பிரர்கள் ஏற்கனவே வழக்கில் இருந்த கொடைமரபுகளைத் தாங்களேனும் தொடர்ந்திருக்கலாம் அல்லவா? மதுரையிலோ அதன் சுற்றுப்புறங்களிலோ இக்காலம் சார்ந்த கட்டுமானங்களோ, வேறுவிதமான சான்றுகளோ இது நாள்வரை அறியப்படாமை எண்ணத்தக்கது. பாண்டிநாட்டில் பாடல் பெற்ற தலங்கள் குறைவாக இருப்பதற்கும் அப்பகுதி ஏற்கனவே சமணம் வயப்பட்டிருந்தமைதான் காரணமாக இருக்கமுடியுமே தவிர, களப்பிரர் அவற்றை அழித்ததாகக் கொள்வது எங்ஙனம் பொருந்தும்? பூலாங்குறிச்சிக் கல்வெட்டு இரண்டு தேவகுலங்களைக் குறிப்பதும் இங்கு எண்ணத்தக்கது.

களப்பிரர் பாண்டிமண்டலத்தைக் கைக்கொண்டமை குறிப்பிடும் வேள்விக்குடிச் செப்பேடு அவர்களை வென்று பாண்டியர் ஆட்சியை மீளவும் மதுரையில் தோற்றுவித்த கடுங்கோனைக் குறிப்பிடுகிறதே தவிர, களப்பிரர் குறித்த வேறெந்தத் தகவலும் தரவில்லை. காலத்தால் மிகப் பிற்பட்ட தான கல்லாடம் என்னும் இலக்கியமே, 'படைநான்கு உடன்று பஞ்சவன் துறந்து மதுரை வவ்விய கருநடர் வேந்தன் அருகர்ச் சார்ந்து அரன்பணி அடைப்ப' என்று களப்பிரர் யார், அவர்தம் சமயம் என்ன, அவர்கள் சைவத்திற்கிழைத்த தீங்கு எனச் செய்திகளைச் சேர்த்தளித்துள்ளது. சேக்கிழார் பெரியபுராணத்தில் இதை விரித்துப் பேசுகிறார். இவ்விரு செய்திகளுமே களப்பிரர் ஆட்சி முடிவுற்ற காலத்திற்கு ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் உருவாக்கப்பட்டவை. இவற்றை விலக்கிப் பார்த்தால் களப்பிரர்களின் சமயத்தை நிறுவுவதற்கோ, அவர்கள் சைவவழிபாட்டைத் தடுத்தமைக்கோ வேறு சான்றுகள் இல்லை.

புத்த சமய இலக்கியமாகப் பதிவாகியுள்ள புத்ததத்தரின் அபிதம்மாவதாரம், புகார் நகரத்தையும் அதைச் சூழ்ந்திருந்த சோழநாட்டையும் அச்சுதவிக்கந்தன் என்ற களப்பிர மன்னன் ஆண்டதாகக் குறிப்பிடுகிறதென்று கூறும் திரு. நடன. காசிநாதன், புத்ததத்தர், தம்முடைய மற்றொரு நூலான வினய வினிச்சயத்தில் தாம் சோழநாட்டுப் பூதமங்கலத்தில் வேணுதாசர் அமைத்த விகாரையில் தங்கியிருந்தபோது களப்பகுல மன்னர் அச்சுதவிக்கந்தன் ஆட்சியில் அந்நூலை இயற்றியதாகக் கூறுவதாகவும் பதிவுசெய்து, இந்த புத்ததத்தரின் காலத்தைப் பொ. கா. 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகக் கொள்கிறார். புத்ததத்தரின் சமகாலத்தவராகிய புத்தகோசரும் தம் நூலில் சோழநாட்டை ஆண்ட களப்பிர அரசர் ஒருவரைப் பற்றிக் குறிப்பிடுவதாக நடன. காசிநாதன் கூறுகிறார். இச்சான்றுகள் சங்கச் சோழர்களின் துறைமுகமாக இருந்த புகார்ப்பகுதியில் களப்பிரர் ஆட்சி இருந்தமையை உறுதிப்படுத்தினாலும் மன்னரின் சமயம் குறித்து அமைதி காக்கின்றன.

குறளும் சிலம்பும்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தலைமையானதான வள்ளுவரின் குறள், சங்கம் மருவிய கால இலக்கியமாகப் பல தமிழறிஞர்களால் நிறுவப்பட்டுள்ளது. அரசு, அரசுசார்ந்த சமுதாயம் குறித்த மிகத் தெளிவான சிந்தனைகளை முன்வைக்கும் இந்நூல் களப்பிரர் காலத்தில் எழுதப்பட்டதென்பது அக்காலத்திருந்த கருத்துரிமைக்குச் சான்றாகும். சங்க கால அரசியல், வாழ்வியல் சிந்தனைகளின் வளர்நிலைகளையும் முதிர்ச்சியையும் குறளில் காணமுடிகிறது. சங்க வாழ்க்கைக்கு நேரெதிரான சில கருத்துக்களைக்கூடக் குறள் (கள்ளுண்ணாமை, கொல்லாமை, புலால் மறுத்தல் முதலியன) பதிவுசெய் துள்ளது. சங்க இலக்கியங்கள் சுட்டாத தவ்வை திருக்குறளில் தான் முதன்முதலாக வெளிப்படுகிறார். பல்லவர், பாண்டியர் குடைவரைகளில் (வல்லம், பரங்குன்றம், ஆண்டிச்சிப்பாறை) இடம்பெறும் மிகச் சில இறைவடிவங்களில் ஒன்றாக இவர் உயர்நிலை பெறுவதைக் குறளின் அறிமுகத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கமுடியும். இது குறளின் காலத்தை உறுதிப்படுத்தவும் உதவும். குறளில் இடம்பெற்றுள்ள பல சொற்கள் சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் பயின்று வந்துள்ளன. தலைமையையும் மூத்தாரையும் குறித்த சங்கச் சொல்லான 'ஐ' குறளில் அதே பொருளில் தலைமையைக் குறிக்க ஆளப்பட்டுள்ளது (என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ முன் நின்று கல்நின்றவர்). இக்குறளில் சங்க நடுகல் கோட்பாடும் இழையோடுவது காண்க.

இளங்கோவடிகளால் யாக்கப்பட்ட சிலப்பதிகாரம் தமிழ் மொழியின் மிகச் சிறந்த இலக்கியங்களுள் ஒன்றாகும். இந் நூலைச் சங்கம் மருவிய காலப் படைப்பாகப் பல தமிழறிஞர்கள் கொள்ள, ஒரு சிலர் இதை 8ஆம் நூற்றாண்டுக் காப்பியமாகக் கொள்கின்றனர். இதன் உள்ளீடு கொண்டு ஆராய்வார் யாரும் இதைப் பொ. கா. 6ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட படைப்பாகக் கொள்ள இயலாது. அப்பரும் சம்பந்தரும் போற்றிக் கொண்டாடும் உமை சிலப்பதிகாரத்தில் மூன்று இடங்களில் மட்டுமே குறிக்கப்படுகிறார். இம்மூன்று இடங்களிலுமே சிவபெருமானின் ஒரு பாதியாக அவ்வம்மை விளங்கும் செய்திதான் கூறப்பட்டுள்ளது. இத்தகவல் உமையை மலைமகளாக அறிமுகப்படுத்தும் முருகாற்றுப்படையிலும் இடம்பெற்றுள்ளது. காரைக்கால் அம்மையால் முதன்முறையா கச் சுட்டப்படும் 'மத்தளம்' எனும் தோல் கருவி பொ. கா. 8ஆம் நூற்றாண்டுப் பல்லவர், பாண்டியர் கட்டமைப்புகளில் முழு வீச்சுடன் காணப்படுகிறது. ஆனால், சிலப்பதிகாரம் தலைமைத் தோல்கருவியாக அரங்கேற்றுகாதையில் சங்கப் புகழ்த் தண்ணுமையையே முன்னிருத்துகிறது.

கொற்றவையை மிக எளிய நிலையில் காட்டும் சங்கப் போக்கிலிருந்து முருகாற்றுப்படை, கலித்தொகை, பரிபாடல் வண்ணனைகள் சற்றே மாறுபட்டுக் கூடுதல் செய்திகள் தந்தாலும் கொற்றவைத் தெய்வம் குறித்த மிக விரிவான தகவல்களைச் சிலப்பதிகாரமே கொண்டுள்ளது. இக்கொற்றவை பொ. கா. 7, 8ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர், பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் (வல்லம், சிங்கவரம், மாமல்லபுரம், மலை யடிப்பட்டி, திருத்தங்கல், பரங்குன்றம்) சிலம்பின் வண்ணனைகளை ஒட்டியே காட்சிதரத் தொடங்குவது எண்ணத்தக்கது. இவையெல்லாம் நோக்க, சிலப்பதிகாரத்தின் காலத்தைப் பொ. கா. 6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கொள்வதே பொருந்துவதாகும். கலைசார்ந்தும் வாழ்வியல் போக்குகள் சார்ந்தும் சங்கத்தின் பல சாயல்களைச் சிலப்பதிகாரத்தில் காணமுடிவது இக்கருத்துக்குக் கூடுதல் வலிமை தரும். எனில், தமிழ்மொழியின் மிகச் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரம் உருவான களமாக இருண்டகாலமே அமைந்தது என்பதும் உணரப்படும்.

சிலப்பதிகாரத்தில் சுட்டப்படும் இசை, ஆடல் செய்திகள் சங்க அமைப்பை ஓரளவிற்குத் தழுவியும் பேரளவிற்கு விலகியும் நிற்பது சங்கம் மருவிய காலத்தில் இவ்விரு கலைகளும் கண்ட வளர்ச்சியினால்தான். சங்கப் பொதியில் மறைந்து, கோட்டங்களும் கோயில்களும் கருவிகளுக்காகவும் இறைவடிவங்களுக்காகவும் இக்காப்பியத்தில் தோற்றம் தருவது, இக்காலத்தே கட்டமைப்பிலும் கருத்தியலிலும் நிகழ்ந்த மாற்றங்கள் எனக் கொள்ளலாம். பூலாங்குறிச்சிக் கல்வெட்டுக் குறிக்கும் கோட்டம் சிலப்பதிகாரக் கோட்டத்துடன் ஒப்புநோக்கத்தக்கது. இக்கல்வெட்டுக் குறிப்பிடும் தேவகுலம் என்ற சொல், பொ. கா. 3ஆம் நூற்றாண்டினதான குணபதேயச் செப்பேட்டில் கண்காட்டி, பொ. கா. 6ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட வல்லம், சிறுவாக்கம் கல்வெட்டுகள்வரை தொடர்ந்துள்ளது. இது கடவுட்குலமாக ஐங்குறுநூற்றிலும் பதிவாகியுள்ளது.

பெண்ணியம்

கருந்திரைக்குப்பின் ஒடுங்கிய இம்மூன்று நூற்றாண்டுக் காலத்தில்தான் பெண்மையின் எழுச்சியைக் காணமுடிகிறது. கூற்றுகள் வரையறுக்கப்பட்டவளான சங்கத்தலைவி, அடுத்த நிலையில் தகைசான்ற சொற்காக்க வேண்டியவளாகக் குறள் காட்டும் தலைவியாகிச் சிலப்பதிகாரத்தில் பாண்டியன் அரசவையில் வழக்கு உரைப்பவராக மாற்றம் பெறும் வீறு சமுதாயத்தில் காணப்பட்ட நிலைகளின் பிரதிபலிப்புகளாகவே இருக்கமுடியும்.

வாயிலில் நின்ற கண்ணகியைப் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வண்ணனை செய்யும் காவலன், அக்காலத்தே பெண் தெய்வ வழிபாட்டுச் சிந்தனைகளில் நிகழ்ந்த மிகப்பெரும் மாற்றத்தை உரிய தொன்மப் பின்னணிகளில் புலப்படுத்தும் பாங்கு, இருண்டகால இறையியல் அறிய உதவும். சிலம்பு அறிமுகப்படுத்தும் காளி, காரைக்கால் அம்மையால் சுட்டப்பட்டு, சம்பந்தர், அப்பரால் கைக்கொள்ளப்பட்டமை, கூடுதல் செய்திகளாக ஆடல் தலைமை சிவபெருமானை அடைந்தது பற்றியும் நாட்டிய சாத்திரத்தின் அறிமுகம் தமிழகக் கலைவடிவங்களில் புதுமைகளை இணைத்தமை பற்றியும் தெரிவித்தல் அறிக. சிலப்பதிகாரம் குறிப்பிடும் எழுவர்அன்னையர் பொ. கா. 7, 8ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய குடைவரைகளிலும் கற்றளிகளிலும் சிற்பவடிவங்களாகப் பொளியப்பட்டுள்ளமை (குன்னத்தூர், பரங்குன்றம், கோளக்குடி, மலையடிப்பட்டி, காஞ்சிபுரம்) காப்பியப் பதிவுக்குக் கிடைத்த கண்ணெதிர்ச் சான்றுகளாகும்.

இதுகாறும் பார்த்த அனைத்துச் சான்றுகளும் விரிவான அளவில், சார்பற்ற நோக்கில் ஆராயப்பட்டால், இருண்டகாலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொ. கா. 250-550க்கு இடைப்பட்ட காலத்தின் வரலாற்றைப் பெருமளவிற்கு மீட்டுருவாக்கம் செய்ய முடியும். அகழாய்வுகளில் கிடைத்திருக்கும் இக்காலகட்டக் கலத்துண்டுகள் பற்றிய பரவலான ஒருங்கிணைந்த அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் களப்பிரர் கால வரலாற்றுக்குக் கூடுதல் பக்கங்களைத் தரமுடியும்.

இக்கட்டுரையில் முன்னிருத்தப்பட்டிருக்கும் சான்றுகள் முதற்பார்வையிலேயே, இக்காலத்தே தமிழ்நாடு முழுவதும் களப்பிரர் ஆட்சியில் தொடர்ந்து இருக்கவில்லை என்ற உண்மையையும் சோழர்களும் பல்லவர்களும் முத்தரையர், வேளிர், பாணர், கொங்கர் முதலிய பல்வேறு சிற்றரசர்களும் சங்கம் மருவிய கால ஆட்சியாளர்களாக இங்கு நீடித்திருந்தனர் என்ற உறுதிப்பாட்டையும் புலப்படுத்துவதுடன், மதுரையை ஆண்ட களப்பிரர்கள் சமண சமயத்தவர் - புகாரை ஆண்ட களப்பிரர்கள் புத்தசமயத்தினர் எனும் முந்து கூற்றுகளின் உண்மைத்தன்மையையும் கேள்விக்குரியதாக்குகின்றன.

களப்பிரர்கள் எச்சமயத்தவர்களாக இருந்தபோதும், தாம் ஆண்டபகுதிகளில் விளங்கிய மொழி, சமயம், பண்பாடு, சமூக மரபுகள், வாணிகம் என எது சார்ந்தும் இடையூறு விளைவிக்கவில்லை என்பதும் தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வாணிகம், மொழி ஆகியவை அவர்தம் ஆட்சிக்காலத்தே தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் முன்னேறிச் செழித்தன என்பதும் இக்கால எல்லை சார்ந்து கிடைத்திருக்கும் அனைத்துச் சான்றுகள் வழிப் பெறப்படும் வரலாற்று உண்மைகளாகும். அவற்றின் அடிப்படையில், இனியேனும் சங்கம் மருவிய காலத்தை இருண்டகாலம் என்று அழைக்காமல், அதற்குக் கூடுதல் ஒளி சேர்க்கும் பணியில் ஆய்வாளர்கள் கையிணைக்கலாம்.


(நிறைவு)
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.