http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 146

இதழ் 146
[ மே 2019 ]


இந்த இதழில்..
In this Issue..

இலக்கிய, வரலாற்றுப் பாலமாய் வாழ்ந்த பேராசிரியர் முனைவர் க. ப. அறவாணன்
செய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 4
புள்ளமங்கை இராமாயணக் குறுஞ்சிற்பத் தொடர் - 2
கரை தழுவும் நினைவலைகள் - 2
கரை தழுவும் நினைவலைகள் - 1
பாச்சில் ஆதிநாயகப் பெருமாள்
கொடும்பாளூர்
இதழ் எண். 146 > கலையும் ஆய்வும்
பாச்சில் ஆதிநாயகப் பெருமாள்
மு. நளினி
கோபுரப்பட்டி (பாச்சில்) அவனீசுவரர் கோயிலுக்கு அண்மையிலுள்ள தெற்கு நோக்கிய ஆதிநாயகப் பெருமாள் கோயில், இடிந்து சிதைந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டு முற்றிலுமாய்ச் சீரமைக்கப்பட்டுள்ளதால் தாங்குதளம் தவிர ஏனைய அனைத்து மேலுறுப்புகளும் அண்மைக் காலக் கட்டுமானமாக உள்ளன.

முன்மண்டபம்

முச்சதுர, இருகட்டுத் தூண்கள் கூரை தாங்கும் முன்மண்டபம் முப்புறத்தும் திறப்பாக உள்ளது. தூண்கள் பன்னிரு ஆழ்வார்களின் சுதையுருவங்களைக் கொண்டுள்ளன. மண்டபத்தின் மேற்கிலுள்ள பிள்ளையார் இலலிதாசனத்தில் பின்கைகளில் அங்குசம், பாசம் ஏந்தி, கரண்டமகுடம், சரப்பளி, முப்புரிநூலுடன் வல முன் கையில் உடைந்த தந்தம் கொண்டு, இட முன் கை மோதகத்தை மணி கட்டிய துளைக்கையால் சுவைத்தவாறு உள்ளார். இந்த மண்டபத்தின் பின்சுவரிலுள்ள சாளரம் கருவறைக் காட்சியைக் கண்முன் நிறுத்துகிறது. எதிரிலுள்ள சிறிய அளவிலான ஒருதள நாகர விமானத்தில் இறைவனை நோக்கியவாறு கருடனும் அவ்விமானத்தின் பின்சுவரில் சுதைவடிவிலான ஆஞ்சநேயரும் வணக்க முத்திரையில் உள்ளனர். முன்மண்டபக் கூரையின் முகப்பு வளையத்தில் தேவியருடன் பெருமாள் பாம்புப் படுக்கையில் சாய்ந்தவாறு உள்ளார். அவர் தொப்புள்கொடித் தாமரையில் வணங்கிய கைகளுடன் நான்முகன்.



விமானம்

உபானம், பிரதிபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி கொண்டெழும் இருதளச் சாலை விமானத்தின் சுவரை நான்முக அரைத்தூண்கள் தழுவ, மகரதோரணம் பெற்ற அதன் முப்புறக்

கோட்டங்களும் வெறுமையாக உள்ளன. வெட்டுத்தரங்கப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, மேலே வெறுமையான, ஆழமற்ற கூடுவளைவுகளுடன் கபோதம். ஆரமும் இரண்டாம் தளமும் கிரீவம், சிகரம் முதலியனவும் செங்கற்பணிகள். சாலை சிகரம் ஐந்து தூபிகள் பெற்றுள்ளது.

விமான ஆரச் சாலைகளில் கிழக்கில் இராமன், இலட்சுமணன், சீதை, அனுமன் தொகுதியும் மேற்கில் தேவியருடன் பரமபதரும் வடக்கில் இலட்சுமிவராகரும் சுதையுருவங்களாக அமைய, தெற்கில் பாம்பணைப் பெருமாள். கிரீவகோட்டங்களில் கிழக்கிலும் மேற்கிலும் தேவியருடன் நிற்கும் நிலையிலும் தெற்கிலும் வடக்கிலும் பள்ளிகொண்டவராகவும் விஷ்ணு காட்டப்பட்டுள்ளார்.

கருவறையில் ஆதிநாயகப் பெருமாள் மேற்கில் தலைவைத்து, இடக்கையைத் தலையொட்டி நீட்டி, வலக்கையைச் சற்றே மடித்து மேலுயர்த்தியவாறு திருவடிகளைக் கிழக்குப் பார்வையாக விரித்துப் பாம்பணையில் படுத்துள்ளார். உற்சவர் நம்பெருமாளாய்த் தேவியருடன் எழுந்தருளியுள்ளார். அனைத்தும் அண்மைக் காலத் திருமேனிகள்.



மண்டபங்கள்

விமானத்தின் முன் அதே கட்டமைப்பிலுள்ள முகமண்டபம் கிழக்கிலும் மேற்கிலும் வெறுமையான கோட்டங்கள் கொள்ள, அதற்கும் முன்மண்டபத்திற்கும் இடையிலுள்ள பெருமண்டபம் கட்டமைப்பில் மாறுபட்டுள்ளது. உபானம், ஜகதி, குமுதம் மட்டுமே தாங்குதள உறுப்புகளாகச் சுவர் பெற்று எழும் இதற்குக் கோட்டங்களோ, தூண்களோ இல்லை. இம்மண்டபத்தின் மேற்குக் குமுதத்தில் புன்செய்க் கோல் என்ற பொறிப்புடன் 1. 34 மீ. நீள நிலமளந்தகோல் ஒன்று காணப்படுகிறது. இதைக் கண்டறிந்தவர் பேராசிரியர் முனைவர் அர. அகிலா. முகமண்டப வாயிலின் மேலே யானைத்திருமகளும் வாயிலின் இருபுறத்தும் அச்சுறுத்தும் கைகளுடன் சுதையாலான காவலர்களும் காட்சிதருகின்றனர்.

வளாகத்தின் வடமேற்கு மூலையில் உள்ள ஒருதள நாகரவிமானம் தாயார் திருமுன்னாக அமைந்துள்ளது. ஆதிநாயகியாகவும் ரெங்கநாயகியாகவும் அறியப்படும் தாயார் அர்த்தபத்மாசனத்தில் முன்கைகளில் காக்கும், அருட்குறிப்புக் காட்டி, பின்கைகளில் தாமரை ஏந்தியுள்ளார். இத்திருமுன்னுக்கு வலப்புறமுள்ள மாடத்தில் கரண்டமகுடம், இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்தவராய் இருகைகளிலும் தாமரை ஏந்திய சூரியனும் வலக்கையில் மலர் கொண்டு இடக்கையை நெகிழ்த்தியுள்ள பெண்தெய்வச் சிற்பம் ஒன்றும் உள்ளன. இப்பெண்தெய்வம் கரண்டமகுடம், சரப்பளி, பட்டாடை கொண்டுள்ளது.





கல்வெட்டுகள்

இக்கோயிலிலிருந்து 2 கல்வெட்டுகள் களஆய்வின்போது கண்டறியப்பட்டன. இரண்டுமே எழுத்தமைதி அடிப்படை யில் 14 அல்லது 15ஆம் நூற்றாண்டினதாகலாம். முன்மண்டபத் தெற்குக் குமுதத்தில் கண்டறியப்பட்ட துண்டுக் கல்வெட்டு, தாமோதர பட்டரான உலகுடைய பெருமாள், தாம் கூடப்பள்ளி நிலத்தில் குமாரர்குடி உட்கிடையில் ஸ்ரீராமபட்டர் பட்டவிருத்தியாகப் பெற்ற இராசவிபாடன் கோலால் அளக்கப்பெற்ற நிலம் அரைவேலியை ஆதிநாயகப் பெருமாள் கோயில் ஆராதனைக்கும் திங்கள் திவசம் திருநாள் திருப்பணிக்குமாகக் கொடையளித்த தகவலைத் தருகிறது.

கோயில் கருவறை, முகமண்டபக் கிழக்குக் குமுதத்தில் மூன்று துண்டுகளாகவும் முகமண்டப வடக்குக் குமுதத்தில் சில துணுக்குகளாகவும் சிதறியிருக்கும் கல்வெட்டு, மேற்றளிக் கோயில் தானத்தாருக்கும் ஜலசயனத்துப் பெருமாளான ஆதி நாயகப் பெருமாள் கோயில் நம்பிமாரான வைணவர்களுக்கும் நாயங்கரசராயரால் அளிக்கப்பட்ட தன்மசாதனப் பட்டயமாக விளங்குகிறது. இக்கல்வெட்டு, ஆடித்திங்கள் 29ஆம் நாள் நாயங்கரசராயர் ஜீவிதமான ஆமூர் நாட்டு வடவழி மேற்கரைப் பற்றில், 'அனாதி புனத்தலையாய் உடைகுளமாய்' விளங்கிய நன்செய், புன்செய் நிலத்தொகுதியை மேற்றளி ஈசுவரத்துக்கும் ஆதிநாயகப் பெருமாள் கோயிலுக்கும் அவற்றின் வழிபாடு, படையல் ஆகியவற்றிற்காகத் தேவதானமாகவும் திருவிடையாட்டமாகவும் அவர் அளித்த செய்தியைத் தருகிறது.

நிலத்தின் எல்லைகளாகப் பெரிய புதுக்கடையினின்றும் திருவெள்ளறை சென்ற வழி, திருப்பைஞ்ஞீலிக்குப்போன பெருவழி ஆகியனவும் உலகுதொழநின்றார் குழி, பறையன் குழி முதலிய நிலத்துண்டுகளும் சுட்டப்பட்டுள்ளன. குளத்தின் உடைப்பை அடைத்து, நன்செய், புன்செய் திருத்தி, வேண்டும் பயிர் செய்து நிலவிளைவை இருகோயில் நிருவாகமும் தலைக்குப் பாதியாகக் கொள்ளவேண்டும் என்ற வேண்டலுடன் சர்வமானியமாக அளிக்கப்பட்டுள்ள இந்நிலக்கொடை ஆவணத்தை இரண்டு கோயில்களிலும் கல்வெட்டாகப் பொறிக்கவும் கொடையாளி கேட்டுக்கொண்டுள்ளார்.

காலம்

இங்குள்ள கல்வெட்டுகள் கொண்டு கோயிலின் காலத்தைப் பொ. கா. 14 அல்லது 15ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளலாம்.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.