http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 146
இதழ் 146 [ மே 2019 ] இந்த இதழில்.. In this Issue.. |
அம்பிகை என்னும் அழகரசி வாதாபிப் பயணத்தின்போது மாலபிரபா நதிக்கரையின் கலைவளம் கண்டோம். மறக்க முடியாத அந்தச் சில நாள்கள் சளுக்கியரின் உளித்திறம் உணர்த்தின. பாதாமி (வாதாபி), ஐஹொளெ, பட்டடக்கல், மகாகூடம் எனும் நான்கு இடங்களுமே தென்னகத்தின் தலையாய சிற்பக்களஞ்சியங்களைப் பெற்றுள்ளன. இவற்றுக்கிடையிலான பயணத்தின்போது இவை மட்டுமல்லாமல் வழியிலிருந்த பல சிதைந்த கோயில்களையும் காண வாய்த்தது. நுண்கலைகள் அனைத்திலும் சளுக்கியர் வெளிப்படுத்தியிருக்கும் பெருமிதம் சொற்களில் வடிக்க இயலாது. பாதாமி, ஐஹொளெ, பட்டடக்கல் மூன்றிடங்களிலும் சமணர் கலைக்கூடங்களைப் பார்க்க முடிந்தது. கண்களில் காட்சியாகிய செதுக்கல்களில் பல சிற்பங்கள் சிறக்க அமைந்திருந்தபோதும் ஐஹொளெயில் பார்த்த அம்பிகை நெஞ்சில் நீக்கமற நிறைந்துள்ளார். தமிழ்நாட்டில் பல இடங்களிலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் குடைவரைகள், கற்றளிகள், பாறைச் செதுக்கல்கள் எனக் கணக்கற்ற அம்பிகைச் சிற்பங்களைக் கண்டிருந்தபோதும் ஐஹொளெ அம்பிகை சிதைக்கப்பட்டிருந்த நிலையிலும் கலைவானின் தனியொரு முழுநிலவாய் உள்ளத்தில் நிறைந்தார். இந்தியாவில் கிடைக்கும் அம்பிகையின் சிற்பங்களுள் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் சிலவற்றுள் ஐஹொளெ அழகரசியும் ஒருவர். நான் பார்த்தவரையில் இப்படியொரு அழகியல் படப்பிடிப்பை அம்பிகை சார்ந்து கண்டதில்லை. மரத்தடியில் இருக்கையில் இயல்பாக அமர்ந்தவாறு வலக்காலை மடித்துப் பாதம் இடமுழங்காலின்மீது இருக்குமாறு காட்சிதரும் அம்மையின் இடக்கை இருக்கையின்மீது மெல்லெனப் படர, வலக்கை சிதைந்துள்ளது. பின்னிருக்கும் மரத்தின் கிளைகளில் பழங்கள். அவற்றை உண்ண வந்த இரண்டு பறவைகளும் அணில்களும் கிளைகளில். அம்பிகையின் இடப்புறம் கீழே சிம்மம் அடக்கமாக அமர்ந்திருக்கிறது. இடப்புறத் தோழியர் இருவரில் பனையோலை, பூட்டுக்குண்டலங்களுடன் சிறு கொண்டையிட்டு வலக்கையில் தாமரையும் இடக்கையில் கிண்ணம் ஒன்றும் ஏந்தியுள்ள முதலாமவர் இளமையும் எழிலும் ததும்பும் உருவினர். பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள்வளை, தாள்செறியுடன் காட்சிதரும் இரண்டாமவர் கைகளில் மூடியிட்ட கிண்ணம். இவரும் இளமையின் எழிலை எதிரொலிக்கும் தோற்றத்தினர். அம்பிகையின் வலப்புறத்தே நிற்கும் மூன்று அழகியரில் முதலாமவர் வலக்கையில் கவரியும் இடக்கையில் மலரும் கொள்ள, இரண்டாமவர் அம்பிகையின் குழந்தையை இருகைகளாலும் பிடித்துள்ளார். குழந்தையின் வலக்காலை வலக்கையால் பிடித்துள்ள அவரது இடக்கை குழந்தையின் வயிற்றருகே தாங்கலாக. குழந்தையின் கழுத்தில் முத்துமாலை. பட்டாடையும் மணிகள் பதித்த அரைக்கச்சும் இடையை அலங்கரிக்க பனையோலைக் குண்டலங்கள், தோள்வளைகளுடன் காட்சிதரும் மூன்றாம் அழகியின் கைகளில் மூடியிட்ட கிண்ணம். இடக்காலருகே அமர்ந்திருக்கும் கவரிப்பெண்ணின் இடத்தொடையில் அம்பிகை திருவடி இருத்தியுள்ளார். அவரது வலச்செவி வெறுஞ்செவியாக இடச்செவியில் பனையோலைக் குண்டலம். சிம்மத்தின் பின் நிற்கும் மற்றொரு கவரி நங்கையின் இடக்கையில் பழம். தலையை அண்ணாந்த நிலையில் அம்பிகையை நோக்கும் இத்தோழியின் நீள்வெறுஞ் செவிகள் தலைநிலைக்கேற்பச் சரிந்துள்ளன. கம்பீரமும் கனிவும் கலந்த அமர்வில் பேரரசி போலப் பெருமிதத்தோடு காட்சிதரும் அம்பிகையின் சடைமகுடம் தேர்ந்தெடுக்கப்பட்ட முகப்பணிகளால் அழகுபெற்றுள்ளது. அவற்றை இணைக்கும் முத்துச்சரங்கள் தலை முழுவதும் இளக்கமாய்த் தழுவி இணையற்ற கவர்ச்சியை அம்மைக்கு அளிக்கின்றன. கழுத்தில் ஓரடுக்கு முத்துமாலை. மார்பில் ஸ்வர்ணவைகாக்ஷம், கைகளில் தோள்வளைகள், கால்களில் மெல்லிய தாள்செறிகள். அம்மையின் இடைச்சிற்றாடையைத் தழுவியிருக்கும் மணிகள் பதித்த மூன்றடுக்கு அரைக்கச்சின் தொங்கல் இடத்தொடையில் நெகிழ்ந்துள்ளது. நிமிர்வும் குனிவுமின்றிப் பெண்மையை முதன்மைப்படுத்தும் நேர்காணும் முக அமைப்பு. உடலின் பல பாகங்கள் சிதைந்திருந்தபோதும் அம்மையின் அமர்வே அவரது உடற்கூறியலின் அத்தனை அழகுகளையும் கண்முன் நிறுத்துகின்றன. ஓர் எளிய அமர்வில்கூட இத்தனை அழகுகளை வெளிப்படுத்தமுடியுமா என வியந்தேன். பல்வேறு அமர்வுகளில் அம்பிகையைப் பார்த்திருக்கும் கண்களுக்கு இந்த ஒருக்கணிப்பு உன்னதம் சளுக்கியக் கைகளின் செழுங்கொடை. சிதையாமல் இருந்திருந்தால் இந்த அம்பிகையைப் பார்த்த கண்கள் பார்வை நீக்க மறுத்திருக்கும். இந்நிலையிலும் இந்த அழகரசிக்கு இணையான ஒரு படைப்பை வேறெங்கும் கண்டதில்லை என்று சொல்வதுவே பொருந்தும். |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |