![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 146
![]() இதழ் 146 [ மே 2019 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
கண்முன்னே நின்ற பெரும்பாறைப் புதையல் கதிரவன் மேலை வானில் மறையத் தொடங்கியிருந்தார். அருகிலிருந்த அகத்தியர் தீர்த்தம் பொன்வண்ணமாகியிருந்தது. டாக்டர் இரா. கலைக்கோவனும் நளினியும் பூதநாதர் கோயில் பற்றிய கலந்துரையில் இருந்தனர். என் கண் முன் அந்தப் பெரும்பாறையும் அதன் சிற்பச் செதுக்கல்களும். சளுக்கிய பூமியின் வரலாற்றில் வாதாபியாக அறியப்படும் பாதாமியில் நான்கு குடைவரைகளையும் மல்லிகார்ச்சுனர் வளாகக் கோயில்களையும் கண்களால் அள்ளிப் பருகிக் கலை மயக்கத்திலிருந்த எனக்குக் கருநாடகத்தில் அது இரண்டாவது பயணம். தும்கூர் பல்கலைக் கழகத் தேசியக் கருத்தரங்கிற்கான முதற் பயணத்தின்போது ஹொய்சளர் கலைப்படைப்புகளைக் காணும் பேறு வாய்த்தது. அப்போதே சளுக்கிய மண்ணிலும் பயணம் கொள்ள உள்ளம் துடித்தபோதும் வாய்ப்பு சற்றுத் தள்ளியே கிடைத்தது. மாமல்லபுரம் ஒருகல் தளிகள் ஆய்வின்போதுதான் சளுக்கியர் கலைப்படைப்புகள் குறித்து விரிவான அளவில் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒப்பீட்டாய்வே கலைச்சிந்தனைகளைத் தெளிவுற விளங்கிக்கொள்ள உதவும் என்பார் டாக்டர் இரா. கலைக்கோவன். அவர், நான், பேராசிரியர் மு.நளினி இணைந்து மாமல்லபுரம் ஆய்வுகள் மேற்கொண்டபோது பாதாமி, ஐஹொளெ, பட்டடக்கல், மகாகூடா படைப்புகள் குறித்து டாக்டர் அவ்வப்போது சொல்வார். அவர் பேசும் போது உடனே அங்குச் சென்று அவற்றையெல்லாம் பார்க்கவேண்டும் என்ற தவிப்பு வரும். ![]() நளினி பேறு பெற்றவர். அஜந்தா, எல்லோரா தொடங்கி இந்தியாவின் பல மரபுப் பேரரசுகளின் கைவண்ணங்கள் காணும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. சென்னையில் தனியார் கல்லூரிகளில், கிடைத்த வேலைவாய்ப்புகளில் வரலாறு கற்பித்துக் கொண்டிருந்த எனக்கு நினைத்த நேரத்தில் விடுமுறை கிடைக்காது. முசிறியில் நிலையான பணிக்கு வந்த பிறகுதான் தொடர்விடுப்பு எளிதானது. விளைவு, இதோ, இங்கே புலிகேசியின் மண்ணில். உடல் சிலிர்த்துக்கொண்டது. காற்று சிவகாமியின் சபதத்தையும் மாமல்லரின் சளுக்கியப் படையெடுப்பையும் செவியோரத்தே மென்குரலில் சொல்லிச் சென்றாலும், கண் முன்னே நிற்கும் அந்தப் பெரும் பாறை சளுக்கியர்களைப் பற்றியே சிந்திக்கவைத்தது. இரண்டு பாறைகள் ஒன்றன் மேல் ஒன்றாய் இருத்தப்பட்டது போல் காட்சியளித்தாலும் என் கண் முன் நின்றது ஒரு பாறையின் இரண்டு பிரிவுகள். கீழ்ப் பிரிவின் மேற்பகுதியில் சிற்பிகளின் கைவண்ணம். இரண்டு வரிசைகளாய்ச் சிற்பங்கள். மேல் வரிசையில் ஐந்து செவ்வகங்கள். நடுச் செவ்வகம் பிறவற்றைப் போல் மூன்று மடங்கு அகலம் பெற்றுள்ளது. ஐந்தாவது செவ்வகத்தின் அருகில் இலிங்கத்திருமேனியைக் கருவறையில் கொண்ட இருதள நாகரவிமானம். நடுச்செவ்வகத்தில் வலப்புறம் நான்முகன், இடப்புறம் விஷ்ணு, நடுவில் சிவபெருமான். மூவரும் சமபாதத்தில் நின்ற திருக்கோலத்தில் பின்கைகளில் அவரவர்க்குரிய சிறப்புக் கருவிகளுடன். மூவருமே இட முன் கையைக் கடியவலம்பிதமாகக் கொண்டுள்ளனர். நான்முகனும் விஷ்ணுவும் பட்டாடை கொள்ள, சிவபெருமானுக்குச் சிற்றாடை. இந்த முக்கடவுள் படப்பிடிப்பின் வலப்புறம் முதல் செவ்வகத்தில் பூவராகர். அவரது மடக்கிய இட முன் கையின் மேலமர்ந்து வலக்கையால் அவரது முகம் தொடும் நிலமகள் பாதாமி, ஐஹொளெ குடைவரைக் காட்சிகளுக்கு மாறானவர். இடக்கை ஒன்றின் உள்ளங்கைத் தாமரையில் திருவடி நிறுத்தி, மற்றோர் இடக்கையில் மெல்லென அமர்ந்து இறைவனின் இடத்தோளில் வலக்கை பொருத்தி இதமாய்ச் சிரிக்கும் ஐஹொளெ குடைவரை நிலமகள் புதிய கற்பனையின் பொலிவான கீற்று. இந்தியாவின் பிற பகுதிகளில் காணமுடியாத மாற்று. பாதாமியின் கூடுதல் பெருமை இறைவனின் இடப் பின் கைத் தாங்கலில் அம்மை அமராமல் நிற்பதுவே. இட முன் கை மோதகக் கிண்ணத்தைத் துழாவும் துளைக்கையுடன் இரண்டாவதில் இலலிதாசனப் பிள்ளையார். இடப்புறம் காளியின் வீரத்திருக்கோலம். காலுயர்த்திய சிம்மம் வலமிருக்க, கால்மடக்கி அரக்கன் வீழ்ந்திருக்க, அவன் தோள்மீது இடப்பாதம் இருத்தி, எண்கை எழிலியாய் நெஞ்சு நிமிர்த்தியிருக்கும் அம்மையின் கைகளில் வில், அம்பு, கேடயம், வாள், முத்தலைஈட்டி, சங்கு, சக்கரம். வெற்றியின் பெருமிதம் காட்ட ஒரு கை தொடைமீது. இறுதிச் செவ்வகத்தில் நரசிம்மர் இரணியனை மடியில் கிடத்தித் தண்டிக்கும் காட்சி. கீழ்ப்பகுதி பத்துச் சதுரங்களாகப் பிரிந்து வணங்கும் நாகர்களைப் படம்பிடிக்கிறது. அனைவருமே அர்த்தபத்மாசனத்தில். இவர்தம் வணக்கம் வராகருக்கா அல்லது மேல் வரிசையில் இடம்பெற்றிருக்கும் அனைவருக்குமா என்று ஒரு நொடி யோசித்தேன். பூவராகர் காட்சிதரும் சிற்பத்தொகுதிகளில் பாம்பரசனும் தேவியும் தவறாது தோற்றம் காட்டுவது நினைவிற்கு வந்தது. பாதாமி குடைவரையில்கூட படப்பிடிப்பு அப்படித்தான். மிகச் சிறிய காட்சியாக பூவராகர் தோன்றும் சீனிவாசநல்லூர் குரங்கநாதர் கோயில் மகரதோரணத்திலும்கூட பாம்பரசனும் தேவியும் தவறாமல் இடம்பிடித்துள்ளனர். முடிவு செய்தேன், முதல்வருக்குத்தான் இந்தப் பதின்மர் வணக்கம். பாதாமியில் பார்வைகள் நிறைத்த காட்சிகள் கணக்கில. ஆய்வு நூல்களிலும் கட்டுரைகளிலும் யாவர்க்குமான அறிமுக நூல்களிலும் இடம்பிடித்த செதுக்கல்கள் என்னையும் கவர்ந்தது உண்மைதான். எனினும், அந்த மண்ணின் அதிகம் அறியப்படாத, பார்த்தவர்களாலும் பெரிதும் பகிரப்படாத புதையல்கள் பல உண்டு. அவற்றில் என் கண்களில் விழுந்து உள்ளத்தில் உறைந்த சளுக்கியச் செம்மாப்புகளை நாளும் நினைக்கிறேன். அந்த நினைவலைகள் வரலாற்றுக் கரைகளைத் தொடும்போது வாழ்க்கைதான் எத்தனை பொருள் பொதிந்ததாகிறது! (வளரும்) |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |