![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 147
![]() இதழ் 147 [ ஆகஸ்ட் 2019 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மாலப்பிரபா மண் நனைத்து வளம் சேர்க்கும் சாளுக்கிய நாட்டில் கலையோடு கண் தழுவி வாழ்ந்த நாள்கள் நினைக்குந்தோறும் நெஞ்சை மலர்விப்பன. பாதாமியிலும் ஐஹொளெயிலும் பட்டடக்கல்லிலும் மகாகூடத்திலும் சாளுக்கியச் சிந்தனைகள் செதுக்கி வைத்திருக்கும் சிற்பக் களஞ்சியங்கள் கலையை நேசிக்கும் ஒவ்வொருவரும் காணவேண்டிய பதிவுகளாகும். அங்கும் இங்குமாய் ஐந்து நாள்களுக்குக் குறையாமல் அந்த மண்ணில் பார்த்ததும் பயின்றதும் எங்கள் நோக்குகளை வளப்படுத்தியதோடு, ஒப்பீட்டு உணர்வுகளைக் கூர்மைப்படுத்திப் பரவலாகப் பார்க்கும் பண்பை வளர்த்தன. காணும் இடமெல்லாம் கைவண்ணம் என்பதால் ஒவ்வொரு கட்டுமானத்தையும் அங்குலம் அங்குலமாகக் கண்களால் துழாவி இரசிக்க நேர்ந்தது. சில பார்வைகளின்போது சிற்பங்களிடமிருந்து கண்களை மீட்கமுடியாமல் கட்டுண்டோம். சில பார்வைகளோ, கலையின் உன்னதம் இது எனக் காட்டி அச்சிற்பங்களையே மீளவும் மீளவும் காணச் செய்தன. இன்னும் சிலவோ, பார்ப்பது வாழ்க்கை என்பது போல் சிற்பம் மறைத்துக் காட்சிகள் காட்டிக் கண்கட்டு வித்தைகள் நிகழ்த்தின. காலச் சுருக்கம் விரைவாக நகரவைத்த போதும் நேரம் மறந்து, மயங்கி நின்று நெஞ்சில் நிறைத்த அற்புதப் படைப்புகளில் சிலவே கரையோர நினைவலைகளாய் உங்கள் முன்.
பாதாமியும் பட்டடக்கல்லும் மகாகூடமும் சுற்றுச்சுவர் எழுப்பியது போல் கட்டுமான உன்னதங்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கின்றன. ஆனால், ஐஹொளெ அப்படியன்று. ஓடியும் தேடியும் முயன்றும் பார்க்குமாறு ஊர் முழுக்கவும் கலை பரவிப் படர்ந்துள்ளது. வாழ்க்கை முழுவதும் எழுதுமாறு அங்குதான் எத்தனை சிற்ப அற்புதங்கள்! ஒவ்வொரு சிற்பமும் கற்பனை, வாழ்வியல் இரண்டும் சரியான விகிதங்களில் கலந்த நிலையில் கலைநோக்குடன், காலத்துக்கும் நின்று சாளுக்கியச் செழுமை காட்டவேண்டும் என்ற தணியாத ஆர்வத்தோடு வடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றுதான் இந்த இணையற்ற இணை. ஹுச்சப்பயன மடமும் அது சார்ந்த இரண்டு கோயில்களும் ஐஹொளெயில் பார்க்க வேண்டிய கட்டுமானங்கள். கோயில்களுள் ஒன்று சிற்பக்களஞ்சியமாகத் திகழ்கிறது. புறச்சுவர்கள் முன், உள்தூண்கள், வாயில்நிலை, கூரை என இக்கட்டுமானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்களை ஈர்க்கும் சிற்பங்கள். தலை நிமிர்த்திப் பார்க்கத் தவறுபவர்கள் மண்டபக் கூரைச் சிற்பங்களைத் தவறவிட்டுவிட நேரும். கூரையை மூன்றாகப் பகுத்து மும்மூர்த்திகளுக்கும் பகிர்ந்துள்ளனர். மூன்று இறைவடிவங்களுமே சிறக்க வடிக்கப்பட்டிருந்தாலும் சிவபெருமான் தொகுதி இணையற்ற காட்சியாய்த் தனித்து நிற்கிறது. நாற்புறமும் சட்டமிடப்பெற்ற ஒளிப்படம் போல நடுவில் கயிலாயக்காட்சி அமைய, வலமும் இடமுமாய்க் கொடிக்கருக்குப் பட்டைகள். மேலும் கீழும் இரண்டு தாமரைப்பதக்கங்கள் இடையிட்ட மூன்று சிற்பத்தொகுதிகள் திகழும் செவ்வகச் செதுக்கல்கள். கீழுள்ள தொகுதிகள் மூன்றும் ஆணும் பெண்ணுமாய் இணைந்திருக்கும் காட்சிகள் காட்ட, மேல் தொகுதிகளில் நடுப் பெண் கால்களை மடித்து முழங்கால்களில் நின்றவாறு இருகைகளிலும் தாமரைகள் ஏந்த, வலமும் இடமுமாக ஆண்பெண் இணைகள். இடப்புற இணையினும் வலஇணையின் நெருக்கமும் நேயமும் சிறப்பு. அவர்கள் அமர்ந்திருக்கும் கோலமே காதலின் கனிவைக் காட்டுகிறது. ஆணின் வலக்கைக் கிண்ணத்தில் பெண்ணுக்கு நாட்டமில்லை என்பதை அவரது பார்வையே பகிர்ந்து கொள்கிறது. ![]() ![]() ![]() இயல்பாகக் கால்மடக்கி அமர்ந்திருக்கும் காளையின் மீது சுகாசனத்தில் சிவபெருமான். பின்னிருகைகளும் படமெடுத்த பாம்புகளைப் பிடித்திருக்க, சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், உருத்திராக்க மாலை, தோள், கை வளைகள், முப்புரிநூல், கற்கள் பதித்த அரைக்கச்சு இருத்தும் சிற்றாடையுடன், இடமுழங்கால் காளையின் பிடரியில் அமைய, அதன் திமில் அவர் மடி மறைக்க, வல முன் கையில் கடகம் காட்டிப் புன்னகைக்கும் சிவபெருமானின் இட முன் கை அவர் மடியருகே. இரு தோள்களிலும் மகுடம் மீறிய சடைப்புரிகள் தவழ்ந்துள்ளன. அவரது வலப்புறம் இலலிதாசனத்திலுள்ள உமையின் இடக்கை இறைவனின் வலத்தொடையில் படர, வலக்கையில் மலர். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், மார்பகங்களைத் தழுவியிறங்கும் பதக்க மாலை, தோள், கை வளைகள், பட்டாடை, தாள்செறி கொண்டு எழிலார்ந்து விளங்கும் இறைவியின் வலப்புறம் அவருக்கு ஆர்வத்தோடு குடை பிடிக்கும் இளந்தோழி. கீழே மலர்கொண்டு இணை போற்றும் நிலையில் வானவப்பெண். சிவபெருமானின் இடப்புறம் மேலே இரு ஆடவர்கள். முதலாமவர் கவரியைக் கைகளில் பிடித்தவாறு நிற்க, இரண்டாமவர் சிறு மத்தளமொன்றில் இசைகூட்டியவாறே ஆடுகிறார். கீழே பிருங்கியும் மற்றொரு வானவரும் அந்த மத்தள இசைக்கு ஆடும் காட்சி. பிருங்கியின் வலக்கை பதாகம் காட்ட, இடக்கை வேழமுத்திரையில். அவரது வலப்பாதம் பார்சுவத்திலிருக்க, இடப் பாதம் அக்ரதலசஞ்சாரத்தில். வானவரின் கைகள் மேலுயர்த்திய பதாகமாகவும் மடிமறைக்கும் நெகிழ்கையாகவும் அமைய, இந்த ஆடலைக் காண்பதற்கோ என்னவோ குடைத்தோழியின் முகம் ஆவல் பொங்க முன்னோக்கியுள்ளது. ஆடலைப் போற்றும் இறையிணையின் புன்னகையும் எட்டிப் பார்க்கும் தோழியின் கலையார்வமும் மேகங்களுக்கிடையில் காட்டப்பட்டிருக்கும் இந்தக் கயிலைக் காட்சியை இணையற்ற படப்பிடிப்பாய்ப் பதிவுசெய்துள்ளன. தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் விமானச் சாந்தாரநாழியில் காட்டப்பட்டிருக்கும் ஓவியக் கயிலாய ஆடல் காட்சியோடு இந்த ஐஹொளெ சிற்பக் காட்சியைப் பொருத்திப் பார்க்கும்போதுதான் கலைஞர்களின் கற்பனை எழுச்சி மண்ணிற்கும் காலத்திற்கும் ஏற்ப விதந்து வெளிப்படுவதை அறிந்து துய்க்க முடிகிறது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |