![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 154
![]() இதழ் 154 [ மே, 2021 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
விமானம் சற்றே உயரமான துணைத்தளத்தின் மேலுறுப்பான பெருவாஜனமும் அதன் மீதமைந்த பாதபந்தத் தாங்குதளத்தின் பட்டிகையும் தவிர இக்கற்றளியின் பிற உறுப்புகள் மணற்கல்லால் ஆனவை. பிற தளிகளில் இல்லாத அமைப்பாகக் கண்டத்திலிருந்து வெளிப்படும் வளைமுகத் துண்டுகள் பட்டிகை தாங்குகின்றன. விமானத்தின் சுவர்த்திருப்பங்களை நான்முகத் தாவுயாளி அரைத்தூண்கள் தழுவ, அவற்றிற்கு இடைப்பட்ட சுவர்ப்பகுதி நான்முக அரைத்தூண்களால் அகலமான நடுப்பகுதி, அகலக் குறுக்கமான பக்கப்பகுதிகள் என முப்பிரிவுகளாக்கப்பட்டுள்ளது. இவ்விருவகைத் தூண்களும் பாதம் பெற்றுள்ளன. ![]() ![]() நடுப்பிரிவில் நான்முக யானையடி அரைத்தூண்களால் தழுவப்பட்ட கோட்டமும் அதன் இருபுறத்தும் தொடர்புடைய சிற்பங்களும் அமைய, நான்முக அரைத்தூணுக்கும் திருப்பத் தூணுக்கும் இடைப்பட்ட குறுகலான பிரிவில் காவலர் சிற்பங்கள் (இப்போது அவை வடக்கில் மட்டுமே உள்ளன). தெற்குக் கோட்டத்தில் ஆலமர்அண்ணலும் இருபுறச் சிற்பங்களாய்க் காட்டுக்காட்சிகளும் அமைய, மேற்குக் கோட்டத்தில் குஞ்சிதகரணராய் சிவபெருமான். கோட்டத்தை அடுத்துள்ள சிற்பங்கள் சிதைந்துள்ளன. வடக்குக் கோட்டத்தில் ஜலந்தரன் அழித்த மூர்த்தி. அவரது இருபுறத்தும் போற்றும் கையுடன் நான்முகனும் விஷ்ணுவும். கோட்டங்களின் தலைப்பாக உத்திரம், வாஜனம், வலபி அமைய, அவற்றைப் பொருத்துமாறு போலப் பதக்கத் தொங்கல். மேலே சிதைந்த மகரதோரணம். சுவர்த் திருப்பத் தூண்கள், சுவர்ப் பிரிப்புத் தூண்கள் மீதுள்ள வளைமுகப் போதிகைகள் வெறுமையான வலபி உள்ளிட்ட கூரையுறுப்புகள் தாங்க, கோண, நடுப்பட்டம் பெற்ற கபோதம் பிள்ளையார் சிற்பத்துடன் திசைக்கு நான்காகக் கூடுவளைவுகளைப் பெற்றுள்ளது. பெரும்பாலான பிள்ளையார் சிற்பங்கள் சிதைந்துள்ளன. சிறப்புத்தளம் கீழ்த்தளக் கபோதத்தை அடுத்து பூமிதேசத்திற்கான ஒதுக்கீ டும் அதன் மீதிருக்குமாறு நான்கு மூலைகளிலும் அமர்சிம்மங் கள் கொண்ட பூதவரியுடனான ஏறத்தாழ ஓரடி உயரத் தளமும் அமைய, மேலே மற்றொரு கபோதமும் பூமிதேசத்திற்கான ஒதுக்கீடும். வடக்கிலும் மேற்கிலும் தொடராக அமைந்துள்ள பூதவரி தெற்கில் முற்றிலுமாய் அழிந்துள்ளது. இராஜசிம்மரின் பிற தளிகளில் காணப்பெறாத உயரக்குறைவான இத்தளம் பிறவாதானின் தனிச் சொத்து. ஆரம்,-இரண்டாம் தளம் இரண்டாம் கபோதத்தின் மேலுள்ள இயல்பான ஆர உறுப்புகளின் நாசிகைக்கூடுகளில் கர்ணகூடங்கள் கந்தருவத் தலைகளும் சாலைகள் பிள்ளையாரும் கொண்டுள்ளன. ஆர உறுப்புகளுக்கு இடைப்பட்ட சுவர்த்துண்டுகள் வெறுமையாக உள்ளன. ஆரஉறுப்புகளின் பின்னெழும் சற்றே உயரமான இரண்டாம் தளச்சுவரின் திருப்பங்களை நான்முக அரைத்தூண்கள் தழுவியுள்ளன. அவற்றின் பட்டை பெற்ற வளைமுகத் தரங்கக் கைகள் கூரையுறுப்புகள் தாங்க, மேலே வள்ளிமண்டலம், கந்தருவத்தலைகளுடன் திசைக்கிரு கூடுவளைவுகள் பெற்ற கபோதம். தளச்சுவரிலுள்ள பஞ்சரங்களுக்கு இக்கூடுவளைவுகள் சிகரமாக, பஞ்சரத் தூண்களுக்கு இடைப்பட்ட சுவர்ப்பகுதியில் வடக்கிலும் மேற்கிலும் காவலர்கள். தென், கிழக்குச் சுவர்ப் பகுதிகளில் இவை ஒற்றைக்கால் பஞ்சரங்களாய் அமைந்துள்ளன. தளக்கூரையின் மேல் பூமிதேசத்திற்கான ஒதுக்கீடும் வேதிகையும் அமைய, உயரமான திராவிட கிரீவத்தின் சுவரை நான்முக அரைத் தூண்கள் தழுவியுள்ளன. கிரீவகோட்ட நாசிகைத் தலைப்புகளாய்ச் சிகர விளிம்பு கந்தருவத்தலைகளுடன் கூடுவளைவுகள் பெற, நாசிகைத் தூண்களாய் முன்தள்ளி அமைந்துள்ள செவ்வகப்பட்டிகள் ஒன்றிரண்டில் சிற்பங்கள். மேலே திராவிட சிகரம் வள்ளிமண்டலம் பெற்றுள்ளது. முகமண்டபம் விமானம் ஒத்த கட்டமைப்பிலுள்ள முகமண்டபத்தின் நான்முக யானையடி அரைத்தூண்கள் தழுவிய சுவர்க் கோட்டங்களில் வடக்கில் சிம்மத்தின் மீது காலிருத்திய கொற்றவையும் தெற்கில் தாமரை மீதமர்ந்த யானைத்திருமகளும். கோட்டத்தின் இருபுறத்துமுள்ள சுவர்ப்பகுதிகள் வெறுமையாக உள்ளன. ![]() முகமண்டபத்தின் மேற்குச் சுவர்த்திருப்பங்களில் பாதம் பெற்ற தாவுயாளி நான்முகத் தூண்களும் சுவரில் விலங்கடியற்ற நான்முக அரைத்தூண்களும் அமைய, அவற்றிற்கு இடைப்பட்ட சுவர்த்துண்டுகள் வெறுமையாக உள்ளன. வாயிலின் நிலைக்கால்களென நான்முக விலங்கடி அரைத்தூண்கள். மண்டப அகச்சுவர்களில் வடபுறம் கங்காளர், தென்புறம் ஊர்த்வதாண்டவர். கங்காளருக்கு மேலிருக்குமாறு கபோதத்துண்டும் அதன் மேல் பூமிதேசமும் காட்டப்பட்டுள்ளன. ![]() கங்காளர் இடஒருக்கணிப்பில் சுவஸ்திகத்திலுள்ள சிவபெருமானின் திருவடிகளில் மிதியடிகள். கால்களில் கிண்கிணிகள். முழங்கையளவில் மடித்து உயர்த்தப்பட்டுள்ள வலக்கை சிதைந்துள்ளது. இடத்தோளில் சாய்ந்துள்ள கங்காளத்தண்டை இடக்கை பற்றியுள்ளது. இலேசான வலஒருக்கணிப்பிலுள்ள இறைவனின் சடைப்பாரம் தலை உச்சியில் கொண்டையாக முடிக்கப்பட்டுள்ளது. தோள், கை வளைகள் இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்துள்ள அவர் முன், கருடாசனத்தில் ஓர் அம்மையும் ஒயிலாகச் சாய்ந்த நிலையில் மற்றோர் அம்மையும் உள்ளனர். இருவருமே பட்டாடை, தாள்செறிகள், கழுத்தணிகள், தோள், கை வளைகள் பெற்றுள்ளனர். நிற்பவரின் இடக்கை அவரது இடச்சாய்வான தலைக்குத் தாங்கலாக, வலக்கை தொடையில். இருவருமே கேசபந்தம், பனையோலைக் குண்டலங்கள் பெற்றுள்ளனர். கருடாசன அம்மையின் கைகள் சிதைந்துள்ளன. சாய்ந்திருக்கும் அம்மைக்கு மேலுள்ள பகுதியில் இடுப்பளவாக ஒரு முனிவரும் தலைகாட்டித் தம்பிரானாக ஒரு முனிவரும் காட்டப்பட்டுள்ளனர். முதலாமவர் நீள்செவிகள், தாடியுடன் இடக்கையை மார்பருகே கொண்டு வலக்கையைப் போற்றியில் உயர்த்தியுள்ளார். பின்னிருப்பவர் இளையவர். ஊர்த்வதாண்டவர் இடப்பாதத்தைப் பார்சுவத்தில் தரையில் ஊன்றி, வலக்காலை முதுகுக்குப் பின் தலையை ஒட்டி உயர்த்தியிருக்கும் சிவபெருமானின் வல முன் கை கடகத்திலுள்ளது. சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், தோள், கை வளைகள், கிண்கிணியுடன் ஊர்த்வ தாண்டவமிடும் இறைவனின் இடையில் இடைக்கட்டுடனான ஆடையாகப் புலித்தோல். புலியின் தலையும் காலும் இடத்தொடையருகே காட்சியாக, வால் தொடையில் படர்ந்துள்ளது. இறைவனின் பிற வலக்கைகளில் கீழிருந்து மேலாகப் பாம்பு, கவரி, கடகக் குறிப்பு, உடுக்கை. இட முன் கை மேலுயர்ந்து கீழ் நோக்கிய பதாகமாய் அமைய, பிற இடக்கைகளுள் இரண்டு தலையோடும் தீச்சுடரும் கொள்ள, ஒன்று பாம்புப்பட முத்திரையில். மற்றொரு கை சிதைந்துள்ளது. மடக்கிய வலக்காலின் பாதம் தளத்தில் தாங்கலாக, இடக் காலைத் தரையில் ஊன்றி இடுப்பிற்குக் கீழ் இடஒருக்கணிப்பிலும் உடலின் மேற்பகுதி இறைவனை நோக்கியவாறும் அமைய, ஒசிந்து நிற்கும் உமையின் வலக்கை தளத்தின் மீதுள்ளது. கேசபந்தம், செவி யணிகள், மெல்லிய ஆரம், இடையாடை கொண்டு விளங்கும் அம்மையின் இடக்கை மடியருகே. கீழ்ப்பகுதியில் இறைவனின் வலப்புறத்துள்ள முப்புரிநூலணிந்த பூதஆடலர் வலக்கையைப் பதாகத்திலிருத்தி, இடக்கையை வேழமுத்திரையில் வீசி மண்டலநிலையில் வெறுஞ்செவியராய் ஆடுகிறார். கருவறை மெல்லிய சட்டத்தலை நான்முக அரைத்தூண்கள் அணைத் துள்ள கருவறை வாயிலின் மேல்நிலை தோரணம் பெற, மேலே வாஜனம், சிம்ம வலபி. ஐந்து சிம்மங்கள் இடம்பெற்றுள்ள இவ்வலபியில் வட, தென்சிம்மங்கள் ஒரு கால் உயர்த்திய அமர் நிலையில் அவ்வத்திசை நோக்க, நடுவிலுள்ள குந்து சிம்மம் நேர்ப் பார்வையில். அதன் இருபுறத்தும் படுத்துள்ள யாளிகளும் நேர்ப் பார்வையில் அமைய முனைகளில் மகரத்தலைகள். இவ்வலபியின் மேல் மற்றோர் உத்திரமும் தாமரையிதழ் வரியும் அமைய மேலே கூரை. தாமரைவரி பிற முத்திசைகளிலும் படர்ந்து முகமண்டபக் கூரையின் நடுப்பகுதியைத் தாமரைச் சட்டகமாய்த் தனித்துக் காட்டுகிறது. சடைமகுடம், சடைக்கற்றைகள், பனையோலைக் குண்ட லங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூல், மார்புநூல், இடைக்கட்டுடனான இடையாடை, கிண்கிணிகள் பெற்றுக் கருவறைக்காய் ஒருக்கணித்துள்ள காவலர்களின் முகம் நேர்ப்பார்வையில் உள்ளது. ஒரு பாதத்தைத் தரையில் ஊன்றி, மற்றொரு பாதத்தை அக்ரதலசஞ்சாரத்தில் நிறுத்தியுள்ள அவர்தம் ஒரு கை அருகிலுள்ள உருள்பெருந்தடிமீதமர, மற்றொரு கை சிம்மமுக முத்திரையில் தோளருகே. சூலத்தேவராய் ஒளிரும் வடகாவலரின் வலத்தோளருகே பாம்பொன்று படமெடுத்துள்ளது. சதுரமாக உள்ள கருவறையின் பின்சுவர்க் கோட்டத்தை எதிரெதிர் நோக்கும் குந்து வேழயாளி நான்முகத் தூண்கள் தழுவ, அவற்றின் மேலுள்ள வளைமுகப் போதிகைகள் உத்திரம் தாங்க, மேலே வாஜனம், வலபி, கபோதம். சந்திரமண்டல அலங்கரிப்புள்ள கபோதத்தின் கிளாவர் தலைப்புப் பெற்ற இரு கூடு வளைவுகளில் கந்தருவத்தலைகள். கூரையுறுப்புகள் மட்டும் பெற்றுக் கபோத அலங்கரிப்புக் கொண்டுள்ள கருவறையின் தென், வடசுவர்களில் வடபுறம் வணங்கிய, போற்றிய நிலையில் ஐந்து அடியவர்களுடன் நான்முகனும் தென்புறம் ஐந்து அடியவர்களுடன் வணங்கிய நிலையில் விஷ்ணுவும் அமைய, கருவறைத் தரையில் ஆவுடையாருடன் பிற்கால லிங்கம். தென், வடசுவர்களை ஒட்டித் தரைப்பகுதியில் இருகுழுவினரும் நிற்பதற்கேற்ப உயரக் குறைவான நடைமேடை. இவ்விரு சுவர்ச்சிற்பங்களும் பெருமளவிற்குச் சிதைந்துள்ளன. வடக்குத் தொகுதியில் சடைமகுடம், பூட்டுக்குண்டலங்கள், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான பட்டாடையுடன் கிழக்கிலிருந்து இரண்டவதாக நிற்கும் நான்முகனின் வல முன் கை தொடையிலும் இட முன் கை கடகத்திலும் அமைய, இடப் பின் கை சோமாஸ்கந்தரைப் போற்றுகிறது. வலப் பின் கை தோளருகே. நான்முகனின் முன்னுள்ள வானவரும் நான்காமவரும் இறைவனை வணங்க, மேற்குக் கோடியர் வலக்கையை இடுப்பிலிருத்திக் கருவறை நோக்கியுள்ளார். சடைக்கற்றைகளுடனுள்ள அவரது இடக்கை சிதைந்துள்ளது. மூன்றாம், ஐந்தாம் நிலையில் உள்ளவர்கள் தலைமட்டும் தெரியுமாறு பின்தங்கியுள்ளனர். அனைவருமே சடைமகுடம், சரப்பளி, பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான பட்டாடை பெற்றுள்ளனர். தெற்குச் சுவரில் அணிவகுத்துள்ள வானவரில் கிழக்கிலிருந்து இரண்டாம் நிலையிலுள்ள விஷ்ணு தலைச்சக்கரத்துடனான கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, நிவீத முப்புரிநூல், இடைக்கட்டுடனான பட்டாடையுடன் இட முன் கையைத் தொடையிலிருத்தி வலப் பின் கையால் சோமாஸ்கந்தரைப் போற்ற, அவரது இடப்பின் கை பாம்புப்பட முத்திரை காட்டுகிறது. வல முன் கை தோளருகே. ஏனைய ஐவரில் மூன்றாம் ஐந்தாம் நிலையிலுள்ளவர்கள் தலை மட்டும் தெரியுமாறு பின் தங்க, நான்காம், ஆறாம் நிலையிலுள்ளவர்கள் இறைத்தொகுதியை வணங்குகிறார்கள். சற்றே முன்தள்ளியுள்ள முதலாமவர் வடிவம் சிதைந்துள்ளது. அனைவரும் வடக்கு வானவர் போலவே ஆடையணிகள் பெற்றுள்ளனர். சோமாஸ்கந்தர் பின்சுவர்க் கோட்டத்தில் தோரணத் தொங்கல்களுடனுள்ள சோமாஸ்கந்தர் தொகுதியில் மகரதலைகளுடனான சாய்வு பெற்ற சிம்மஇருக்கையில் சுகாசனத்திலுள்ள சிவபெருமானின் இடக்கால் முயலகன் மீதுள்ளது. அவரது வல முன் கை கடகத்தில் அமைய, பின்கையில் பாம்பு. இட முன் கை மடியில் தியானமுத்திரையில். பின்கை கடகத்தில் மேலுயர்ந்து இடத்தோளருகே. சடைமகுடம், குண்டலங்கள், தோள் மாலை, சவடி, சரப்பளி, உதரபந்தம், முப்புரிநூல், தோள், கை வளைகள், இடைக்கட்டுடனான இடையாடை பெற்றுள்ள இறைவனின் இடப்புறம் அவருக்காய் ஒருக்கணித்த உமை. இடப்பாதம் கீழே தனித் தளத்தில் இருக்க, இடக்கை இருக்கையில். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், கழுத்தணிகள், தோள், கை வளைகள், இடையாடை அணிந்துள்ள அம்மையின் வலத்தொடையில் கரண்டமகுடத்துடன் அமர்ந்துள்ள முருகனின் வலக்கை இறைவனின் இடமுழங்கையைத் தொட்டவாறுள்ளது. உமையின் வலப்புறம் தலைக்கு மேல் குடை. இறைவனின் பின்புறம் வலப்புறத்தே நான்முகனும் இடப்புறத்தே விஷ்ணுவும் இடையளவினராய்ப் பின்கைகளில் அவரவர்க்குரிய கருவிகளுடன் முன்கைகளில் ஒரு கை போற்ற, மற்றொரு கையை மார்பருகே கொண்டுள்ளனர். நான்முகன் சடைமகுடமும் விஷ்ணு கிரீடமகுடமும் கொள்ள, சரப்பளி, தோள், கை வளைகள் இருவருக்கும் உள்ளன. நான்முகன் முப்புரிநூலென மடித்த துண்டு கொள்ள, விஷ்ணுவின் மார்பில் முப்புரிநூல். இறைவியின் பின்புறத்தே அஞ்சலித்த கைகளுடனுள்ள அடியவர் கேசபந்தம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகளுடன் நிற்க, இருக்கையின் கீழ்ப்பகுதியில் அமர்ந்துள்ள இரண்டு பூதங்களும் இறையிணையைப் போற்றுகின்றன. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |