http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 156

இதழ் 156
[ ஜூலை 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 1
இது செய்யேனாயின் இப்படி ஆவதாக
மதங்கேசுவரம் - 2
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 2
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும் (ஐஹொளே தொடர்ச்சி)
அடியார் குலத்துக் கடைசி விளக்கு
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 3
இதழ் எண். 156 > கலையும் ஆய்வும்
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 2
அர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்

இரண்டாம் கோபுரம்

கீழ்த்தளம்

மாற்றுரை வரதீசுவரர் கோயிலின் ஒரே முற்சோழர் கட்டுமானச் சுவடாக விளங்கும் இரண்டாம் கோபுரம் மூன்று தளங்களுடன் எழுச்சியுறத் திகழ்கிறது. கபோதபந்தத் துணைத்தளம் (பூமிதேசம் தவிர பிற உறுப்புகள் உயர்த்தப்பட்ட தரையில் புதைந்துள்ளன), பிரதிபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, பாதம் பெற்ற எண்முக அரைத்தூண்கள் தழுவும் சுவர், குளவு பெற்ற விரிகோணத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் எனச் சாலைப்பத்தி முன்தள்ளலுடன் எழும் கீழ்த்தளத்தின் வலபி பூதவரி பெற, கபோதம் வெறுமையான இணைக் கூடுகளால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. தூண்களின் மேலுறுப்புகளில் பலகைக்குக் கீழ் இதழ் விரித்த தாமரை.

கோபுர வாயிலின் இருபுறத்தும் தளச்சுவரில் கிழக்குமுகமாக அமைந்துள்ள செவ்வகக் கோட்டங்களில் வாயிலுக்காய் உடலை ஒருக்கணித்து நேர்ப்பார்வையுடன் தாமரையில் நிற்கும் சோழக் காவலர்கள். சடைக்கற்றைகள் இருபுறத்தும் பரவும் சடைமகுடத்துடன் ஒருபாதத்தை சமத்தில் இருத்தியிருக்கும் அவர்களுள் வடக்கர் மறு பாதத்தை அருகிலுள்ள மரக்கிளையின் முண்டில் நிறுத்த, வழக்கத்திற்கு மாறாகக் கிழக்கிலும் தெற்கிலும் வெட்டுப்பகுதிகள் இணைக்கப்பட்ட மழுவின் கிழக்குமுகத்தே பாதம் இருத்தியுள்ள தெற்கரின் வலச்செவியில் அன்னக்குண்டலம். இடச்செவி பனையோலைக் குண்டலம் கொள்ள, வடக்கர் ஆந்தைக் குண்டலம் கொண்டுள்ளார். வாயில் எலியுடன் பாம்பு சுற்றியுள்ள அவரது மரக்கிளையின் பொந்தில் ஆந்தை. நெற்றிப்பட்டம், சரப்பளி, பூப்பதக்கங்களாலான முப்புரிநூல் - உதரபந்தம், இடைக்கட்டுடன் இடைக்கச்சு இருத்தும் சிற்றாடை, தோள், கை வளைகள், காற்சதங்கைகள் அணிந்துள்ள அவர்களுள் வடக்கர் அச்சுறுத்த, தெற்கர் வியப்பு காட்டுகிறார். வடக்கரின் கால்களுக்கிடையில் வாய்பிளந்த குந்து சிம்மம். தளச்சுவரின் மேற்கு முகம் கோட்டங்களின்றி வெறுமையாக உள்ளது.





இக்கோபுரத்தின் தென்கிழக்குப் பகுதியை ஒட்டி விரியும் தளத்தில் இடுப்பிற்குக் கீழ் உடைந்த வாயிற்காவலர் சிற்பம். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, சன்னவீரம், உதரபந்தம், தோள், கை வளைகள் கொண்டுள்ள அதன் வாயில் கோரைப்பற்கள். கூரையை அடுத்துத் தளமுடிவு காட்டும் பூமிதேசமும் வேதிகையும் அமைய, ஆரமற்ற நிலையில் இரண்டாம் தளத்தின் எழுச்சியைக் காணமுடிகிறது. சீனிவாசநல்லூர்க் குரங்கநாதர் விமானத்தை ஒத்த இவ்விருதளக் கட்டுமான நேர்த்தி இதையும் தஞ்சாவூரில் அமைந்த முதல் ராஜராஜரின் ராஜராஜீசுவர விமானத்தின் முன்னோடியாகக் கருதச் செய்கிறது.

பிறதளங்கள், ஆரம், கிரீவம், சிகரம்

மேற்கு முகம்

மேற்குமுகச் சாலைப்பத்தியின் நடுவே சாளரம். அதன் இருபுறத்தும் பக்கத்திற்கொருவராக ஒரு கையை உருள்பெருந்தடி மீதிருத்தி, மற்றொரு கையைக் கடியவலம்பிதத்தில் கொண்ட வாயிற்காவலர். அவர்களையடுத்து அவர்தம் துணைவியராய்க் கருதத்தக்க பெண்கள் பக்கத்திற்கொருவராய் ஒரு கை நெகிழ்த்தி, ஒரு கையில் மலர் கொண்டுள்ளனர். சிற்றாடை அணிந்துள்ள காவலர்களைப் போலன்றி, பட்டாடை, மார்புக்கச்சு, அணிகலன்கள் என இம்மகளிர் செழிப்புடன் உள்ளனர். சற்று இடைவெளியிட்ட நிலையில் பக்கத்திற்கொருவராகக் கவரிப்பெண்கள். அவர் தம் உள் கைகள் சாமரம் கொள்ள, புறக்கைகள் கடியவலம்பிதத்தில். சற்றுத் தள்ளிய நிலையில் உயரமான தளத்தின்மீது நின்ற வாறு பக்கத்திற்கொருவராய்க் கைகளில் மலர்களுடன் கதிரவனும் நிலவும். இருவருமே ஒளிவட்டம் சூழ்க் கரண்டமகுடர்களாய் மகரகுண்டலங்களுடன் இடைக்கச்சுடனான பட்டாடையணிந் துள்ளனர்.





சுவரின் கர்ணபத்திகள் தெற்கில் பிச்சையுகக்கும் பெம்மா னையும் வடக்கில் சம்பந்தர் கொல்லிமழவர் மகளின் பிணி நீக்கிய வரலாற்றின் படப்பிடிப்பையும் கொண்டுள்ளன. கர்ணபத்தியின் தெற்கு மூலையில் மூன்று முனிபத்தினியர் கையில் கரண்டிகளுடன் காட்சிதர, அவர்தம் முன்னால் ஆடையற்றவராய் வல முன் கையால் மானுக்குப் புல்லளித்தவாறே நடைபயிலும் பிச்சையேற்கும் அண்ணல். பின்கைகளில் பாம்பு சுற்றிய உடுக்கையும் மானும் திகழ, இட முன் கையில் காக்கும் குறிப்பு காட்டிப் புன்னகைக்கும் இறைவனின் அரையில் பாம்பு. சடைப்பாரம், பனையோலைச் சுருள்கள், கடக, கை வளைகள், வீரச்சங்கிலி, உதரபந்தம், வீரக்கழல் என விளங்கும் இறைவனின் இடப்புறம் தலையில் உணவுப் பாத்திரம் சுமக்கும் சிற்றாடைப் பூதம். வடக்குக் கர்ணபத்தியில் பட்டாடையும் தொழுத கைகளுமாய்ப் பெரியவர் ஒருவரும் அவர் இடப்புறத்தே பெண்ணொருவரும் அமைய, இடையில் தலையில் பெட்டியொன்றைச் சுமக்கும் பணியாள். பெரியவரின் வலப்புறத்துள்ள அடியவரும் வணங்கிய கையரே.

இரண்டாம் தள ஆரம் சுதையுருவங்களால் செழிக்கக் கட்ட மைக்கப்பட்டுள்ளது. கர்ணகூடங்களிலும் ஆரச்சுவர் நாசிகைகளிலும் உள்ள முனிவர்களில் மூவர் அர்த்தபத்மாசனத்திலும் ஒருவர் சுகாசனத்திலும் அமைய, தெற்கர்களில் ஒருவர் இருகை களாலும் வணங்க, மற்றவர் ஒரு கையில் காக்கும் குறிப்பு காட்டி, மற்றொரு கையைத் தொடைமீது இருத்தியுள்ளார். வடக்கர்களில் ஒருவர் இருகைகளையும் முழங்கால் மீது இருத்த, மற்றொருவர் இடக்கையை மட்டும் அது போல் வைத்து வலக்கையில் சின்முத்திரை காட்டுகிறார். சாலையின் நாசிகையில் சுகாசனத்திலுள்ள விஷ்ணுவின் பின்கைகளில் சங்கு, சக்கரம். முன் கைகள் காக்கும், அருட்குறிப்பு காட்ட, தலையில் கிரீடமகுடம். இடையில் பட்டாடை. அவரது வடபுறத்தில் கருடனும் தென்புறத்தே அனுமனும் வணங்கிய கைகளுடன். அவர்களை அடுத்துப் பக்கத்திற்கொருவராக ஒரு கால் உயர்த்தி, ஒரு காலைத் தளத்திலிருத்தித் தோள்களால் சாலையின் சிகரம் தாங்கும் ஆடவர் கைகளில் ஒன்று தொடையில் அமர, மற்றொன்று சிகர கீர்த்திமுகம் தாங்குகிறது.

சிறிய அளவினதாக வளரும் மூன்றாம் தளம் வலபியில் மதலைகள் பெற்றுக் கபோதம் கொள்ள, இரண்டாம் தள ஆரத்திற்கும் இதற்கும் இடையில் பக்கத்திற்கொரு நந்தி. சாளரமாய் அமைந்துள்ள கிரீவ நாசிகையின் இருபுறத்துமுள்ள காவலர் ஒரு கையை உருள்பெருந்தடிமீது இருத்தி, மற்றொரு கையைக் கடிய வலம்பிதமாக்கியுள்ளனர். கிரீவ வேதிகையின் மேல் பக்கத்திற்கொருவராய் இலலிதாசனத்திலுள்ள குறளர்கள் கைகளில் தாமரை கள். அவர்களை அடுத்துப் பக்கத்திற்கொருவர் சிகரக் கூரைதாங்க, மூலைகளில் சிம்மங்கள். கீர்த்திமுகத்தில் அர்த்தபத்மாசனத்திலுள்ள சிவபெருமானின் பின்கைகளில் சக்தி, மான் அமைய, முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். கிரீடமகுடம், சன்னவீரம் பெற்றுள்ள அவரது இடுப்பில் பட்டாடை.

கிழக்கு முகம்

நான்முக அரைத்தூண்கள் தழுவியுள்ள இக்கோபுரத்தின் இரண்டாம் தளச்சுவரின் கிழக்குமுகம் மூன்று சுதையுருவத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. தெற்கில் கோயில் தலவரலாறு சார்ந்த கதையும் வடக்கில் சிவபெருமான் பாம்பின் மீதாடும் காட்சியும் அமைய, இரண்டுக்கும் இடையில் உமாசகிதர். தமக்குக் கிடைத்த தங்கத்தின் தரம் அறிய விரும்பிய சுந்தரருக்குத் தங்கத்தின் மாற்று உரைத்த விஷ்ணுவைப் படம்பிடிக்கும் விதமாக அமைந்துள்ள முதல் தொகுதியில் முன்கைகளில் காக்கும் குறிப்பும் கடியவலம்பிதமும் காட்டிப் பின்கைகளில் சங்கு, சக்கரத்துடன் நிற்கும் பெருமாளின் இடையில் பட்டாடை, தலையில் கிரீடமகுடம். அவர் இடப்புறத்தே கையில் தங்கத் துடன் சுந்தரரும் வலப்புறத்தே தங்கக் கட்டிகளுடன் தோட்டக் காரர்களும்.

வடபுறம் பின்கைகளில் உடுக்கையும் தீச்சுடரும் கொண்டு, வலக்கையில் காக்கும் குறிப்பு காட்டி, இடக்கையை வேழக்கை யாக்கி, படமெடுத்த பாம்பின் மீது வலக்கால் ஊன்றி, இடக் காலை வலப்புறம் வீசி ஆனந்ததாண்டவம் ஆடும் சிவபெருமா னின் வலப்புறம் கொல்லிமழவரும் அவர் மகளும் வணங்கி நிற்க, இடப்புறம் அப்பெண்ணின் முயலகன் பிணி நீக்கிய சம்பந்தர். இறைவன் மிதித்துள்ள பாம்பு இக்கோயில் செப்புத்திருமேனியில் உள்ளாற் போல் அவர் காலைத் தழுவாமல் நெளிந்து நீண்டுள்ளது.

கிழக்குமுக இரண்டாம் தள ஆரச்சிற்பங்களைக் காணவியலாதவாறு முன்மண்டபக் கூரை அமைந்துள்ளது. ஆரத்தையடுத்துச் சிறிய அளவினதாக வளரும் மூன்றாம் தளம் வலபியில் மதலைகள் பெற்றுக் கபோதம் கொள்ள, மேலுள்ள வேதிகையின் மூலைகளில் ஒரு காலை உயர்த்திய குந்து சிம்மங்கள். சாளரமாய் அமைந்துள்ள கிரீவநாசிகையின் இருபுறத்துமுள்ள காவலர் ஒரு கையை உருள்பெருந்தடிமீது இருத்தி, மற்றொரு கையால் அச்சுறுத்துகின்றனர். அவர்களை அடுத்து கிரீவதளத்தில் பக்கத்திற்கொருவராய் மகாராஜலீலாசனத்திலுள்ள ஆடவர்கள் ஒரு கையை முழங்கால் மீதிருத்தி, மற்றொரு கையை நெகிழ்த்தியுள்ளனர். அவர்களை அடுத்து சிகரம் தாங்கிகளாய்ப் பக்கத்திற் கொரு ஆடவர்.

கிரீவ கீர்த்திமுகத்தில் நான்கு வளைவுகளில் ஒன்று வெறுமை யாக அமைய, இறுதி வளைவு தீச்சுடர்களாய்ச் சுடுகிறது. பிற இரண்டில் அலங்கரிப்புகள். தோரணக் குழிவில் அர்த்தபத்மா சனத்திலுள்ள சிவபெருமானின் வல முன் கையில் காக்கும் குறிப்பு, இட முன் கை சிதைந்துள்ளது. பின்கைப் பொருள்களில் தெளிவில்லை.

தெற்கு முகம்

இரண்டாம் தளத் தெற்கு, வடக்கு முகங்கள் உள்சுற்று மதில் சுவரின் இணைவால் இரு பிரிவுகளாக்கப்பட்டுள்ளன. தெற்குமுக மேற்குப் பிரிவின் கர்ணபத்திப் பகுதியில் நிற்கும் இரு அடியவர்களில் கழுத்திலும் தலையிலும் ருத்திராக்கமாலை அணிந்துள்ளவர் இரு கைகளையும் கூப்பி வணங்க, மற்றவர் தலையில் சுமக்கும் நீர்க்கலயத்தை வலக்கையால் பிடித்தபடி இடக்கையை வயிற்றருகே கொண்டுள்ளார். அவரது கழுத்தில் ருத்திராக்கமாலை. ஆரச்சுவர்ப்பகுதியிலுள்ள மூன்று அடியவர்களில் கிழக்குக் கோடியில் கோவணஆடையுடன் காட்சிதருபவர் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி வணங்க, அவரது வலப்புறத்துள்ளவர்களில் ஒருவர் வலக்கையில் பழம் கொண்டு இடக்கையைத் தொடைமீது இருத்தியுள்ளார். இடக்கையை அருகிலுள்ள தூண் மேல் இருத்தியபடி வலக்கையை நெகிழ்த்தியுள்ள மற்றவரின் கழுத்தில் நீள் ருத்திராக்கமாலை. கிழக்குப் பிரிவுச் சிற்பங்களைக் காணக்கூடவில்லை.

இரண்டாம் தள ஆரக் கர்ணகூடங்களில் மேற்கில் சுகாசனத்திலுள்ள பெண் அடியவர் வலக்கையில் அருட்குறிப்பு காட்டி, இடக்கையைத் தொடைமீதிருத்த, கிழக்கில் அர்த்தபத்மாசன முனிவர் கைகூப்பி வணங்குகிறார். ஆரச்சுவரில் இருபுறத்தும் வலக் கையில் காக்கும் குறிப்பு காட்டி, இடக்கையைத் தொடையிலிருத் திய அர்த்தபத்மாசன முனிவர்கள். சாலைநாசிகையில் முயலகனற்றவராய்ப் பின்கைகளில் உடுக்கை, மான் கொண்டு ஆலமர்அண்ணலாய் வீராசனத்திலுள்ள இறைவனின் வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இட முன் கை சின்முத்திரையில். அவரது இருபுறத்தும் அர்த்தபத்மாசனத்திலுள்ள இருமுனிவர்களும் வலக்கையைக் காக்கும் குறிப்பில் வைக்க, இடக்கை தொடைமீது. கிழக்குப் பிரிவுச் சிற்பங்களைக் காணக்கூடவில்லை.

மூன்றாம் தளம் மேற்குப் போலவே அமைய, கிரீவசுவரில் அர்த்தபத்மாசனத்திலுள்ள நான்கு முனிவர்களும் வலக்கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையைத் தொடைமீது வைத்துள்ளனர். கிரீவநாசிகையில் சடைப்பாரம், சிற்றாடையுடன், வீரசானத் திலுள்ள ஆலமர்அண்ணலின் பின்கைகளில் வலப்புறம் பாம்பு சுற்றிய உடுக்கையும் இடப்புறம் தீச்சுடரும். முன்கைகளில் இடப்புறம் சுவடி அமைய, வலக்கையில் காக்கும் குறிப்பு. கிரீவ கீர்த்திமுகத்தில் அர்த்தபத்மாசனத்திலுள்ள சிவபெருமானின் தலையில் நீள் சடைமகுடம். பின்கைகள் மான், மழு கொள்ள, அவரது முன் கைகள் காக்கும், அருட்குறிப்புகளில்.

வடக்கு முகம்

இரண்டாம் தள வடக்குமுகச் சிற்பங்களைக் காணக்கூட வில்லை. அத்தளத்தின் மேலுள்ள ஆரக் கர்ணகூடங்களிலும் ஆரச்சுவர்களிலும் அர்த்தபத்மாசன முனிவர்கள். அவர்தம் ஒரு கை தொடை மீதிருக்க மற்றொரு கை சின், காக்கும் குறிப்புகளில். சாலை நாசிகையில் சுகாசனத்திலுள்ள நான்முகனின் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை. முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். அவரது இருபுறத்தும் அர்த்தபத்மாசனத்திலுள்ள இரு முனிவர்களும் வலக்கையைச் சின்முத்திரையில் காட்டி, இடக்கையை முழங்கால்மீது இருத்தியுள்ளனர்.

மூன்றாம் தளம் தெற்குப் போலமைய, கிரீவசுவரில் அர்த்த பத்மாசனத்திலுள்ள நான்கு முனிவர்களும் வலக்கையில் சின் அல்லது காக்கும் முத்திரை காட்டி, இடக்கையைத் தொடைமீது வைத்துள்ளனர். கிரீவநாசிகையில் சடைமகுடம், பட்டாடையுடன், சுகாசனத்திலுள்ள நான்முகனின் பின்கைகளில் அக்க மாலை, குண்டிகை. முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில். ஆறு வளைவுகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ள கிரீவ கீர்த்திமுக மகரதோரணத்தில் முதல் வளைவு வெறுமையாக அமைய, ஆறாம் வளைவு தீச்சுடர்களுடன் ஒளிர, ஐந்தாம் வளைவில் கருவியேந்திய பூதகணங்கள். எஞ்சிய வளைவுகள் கொடிக்கருக்கு, பூப்பதக்க அலங்கரிப்பு பெற்றுள்ளன. கீர்த்திமுகத்தில் அர்த்தபத்மாசனத்திலுள்ள நான்முகனின் கைகளில் அதே கருவிகள், குறிப்புகள்.

உள்சுற்று

இரண்டாம் கோபுர வாயில் வழி விரியும் உள்சுற்றின் நடுப் பகுதியில் இறைவன் விமானமும் அதன் முன்னுள்ள மண்டபங்களும் அமைய, இவ்வளாகத்தின் ஒரே தனித்த சுற்றாலைத் திருமுன்னாய் வடக்கில் சண்டேசுவரரின் ஒருதள வேசர விமானம். அதையடுத்து, இறைவன் கோயில் முன்மண்டபத்தில் வாயில் கொண்டுள்ள பாம்பின்மீதாடும் பெருமானின் திருமுன் தனிச் சுற்றாலைக் கோயில் போல் முன்மண்டபத்தின் வடபுறத்தே பிதுக்கமாக அமைந்துள்ளது. தனித்த சுற்றாலைத் திருமுன்களில் அமைய வேண்டிய எழுவர்அன்னையர், பிள்ளையார், முருகன், யானைத்திருமகள் ஆகியோர் உள்சுற்று மதிலை ஒட்டித் தெற்கு, மேற்கு, வடக்கு என முப்புறத்தும் நீளும் சுற்றுமாளிகையில் அவரவர்க்குரிய திசைகளில் இடம்பெற்றுள்ளனர். வடகிழக்கில் அமைய வேண்டிய பைரவர் முன்மண்டபத்தின் வடக்கிலுள்ளார்.

சண்டேசுவரர் விமானம்

துணைத்தளம், பிரதிபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், கபோதம் கொண்டு ஒருதள வேசரமாக எழும் சண்டேசுவரர் விமானத்தின் கீழ்த் தளத்தையடுத்த உயரமான வேதிகையின் மூலைகளில் பூதர்கள். அவர்களுக்கிடையில் நந்திகள். கிரீவகோட்டங்களில் கிழக்கிலும் தெற்கிலும் சிவபெருமானும் வடக்கில் நான்முகனும் மேற்கில் விஷ்ணுவும் சுகாசனத்திலுள்ளனர். கருவறையில் சடைப்பாரம், மகரகுண்டலங்கள், முத்துமாலை, முப்புரிநூல், உதரபந்தம், பட்டாடை, தோள், கை வளைகள் பெற்று சுகாசனத்திலுள்ள சண்டேசுவரரின் வலக்கையில் மழு. இடக்கை தொடைமீதுள்ளது.

பாம்பின் மீதாடும் பெருமான் திருமுன்

ஒருதளச் சாலையாகக் கபோதபந்தத் துணைத்தளம், பாதபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், தரங்கவெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண் டெழும் இத்திருமுன் வலபி தாமரையிதழ்கள் கொள்ள, கபோதத்தில் மேலோட்டமான கூடுவளைவுகள். கூரை மேலுள்ள வேதிகையின் மூலைகளில் பூதர்களும் நந்திகளும். சாலை சிகரத்தின் கீழுள்ள கிரீவகோட்டங்கள் வெறுமையாக உள்ளன.

சுற்றுமாளிகை

பாதபந்தத் தாங்குதளம் பெற்றுள்ள சுற்றுமாளிகையின் கூரையை அதன் விளிம்பருகே அமைந்த முச்சதுர இருகட்டுத் தூண்கள் தரங்கவெட்டுப் போதிகைகளுடன் தாங்குகின்றன. சுற்றின் தென்கிழக்கில் மடைப்பள்ளியும் வடகிழக்கில் சரக்கறையும் உள்ளன. தெற்கு மாளிகைப்பகுதியில் நால்வருக்கென சாலை சிகரத்துடன் தனி மேடையும் 63 நாயன்மார்களுக்காக நீள் திண்ணையும் உள்ளன. அடுத்துப் பொல்லாப் பிள்ளையாரும் அன்னையர் எழுவரும் ஐயனாரும் அமைய, மாளிகையின் தென்மேற்குப் பகுதியில் தலைப்பலிச் சிற்பம், ஊரகச் சிற்பங்கள் இரண்டு, கருடாசனத்தில் நிலமகள், யோகாசன சிவன் சிற்பங்கள் உள்ளன. தென்மேற்கு மூலை தனித் திருமுன்னாக்கப்பட்டு கோடிப்பிள்ளையார் இருத்தப்பட்டுள்ளார்.

கோடிப்பிள்ளையார் திருமுன்னையும் சேர்த்து மேற்கு மாளிகை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கோடிப்பிள்ளையாரை அடுத்துள்ள சோமாஸ்கந்தர் அறை முச்சதுர இரு கட்டுத் தூண்கள் இருவரிசையில் நின்று தரங்கவெட்டுப் போதிகைகளால் கூரைதாங்கும் கற்பந்தல் பெற்றுள்ளது. வெறு மையாக உள்ள இதையடுத்த மாளிகையின் நடுப்பகுதி முன்றில் பெற்ற ஒருதள நாகரமாக மாற்றப்பெற்று அதில் ஆறுமுகன் தேவியருடன் எழுந்தருளியுள்ளார். முன்றிலின் கர்ணகூடுகளில் சுதையுருவங்களாய்த் தெற்கில் இடும்பனும் வடக்கில் மற்றோர் அடியவரும் அமைய, சாலையில் இருபுறத்தும் தேவியர் நிற்க, மயில்மீது ஆறுமுகனாய் முருகன். அவரது முன்கைகள் காக்கும், அருட்குறிப்புகளில் அமைய, பிற கைகளில் கருவிகள். வலப்புறத் தெய்வானையும் இடப்புற வள்ளியும் ஒரு கையில் மலரேந்தி, ஒரு கையை நெகிழித்தியுள்ளனர். பந்தல் கூரையின் நாற்புறத்தும் மயில்கள்.

வடமேற்கு மூலையில் அமைந்துள்ள அறையில் உயரமான தளத்தின்மீது யானைத்திருமகள். சோமாஸ்கந்தர் அறைக்கும் ஆறுமுகன் திருமுன்னுக்கும் இடைப்பட்ட பகுதியில் மூன்று பலித்தளங்களும் காரைக்கால் அம்மை, கொடிப்பெண், ஐயனார், நந்தி, இரண்டு பிள்ளையார் உள்ளிட்ட ஏழு சிற்பங்கள் அமைய, முருகன், யானைத்திருமகள் திருமுன்களுக்கு இடைப்பட்ட மாளிகைப் பகுதியில் 5 இலிங்கத்திருமேனிகள், 5 அம்மன் வடிவங் கள், 2 கொற்றவைத் தோற்றங்கள், 2 நந்திகளுடன் முருகன், விஷ்ணு, சூரியன் உள்ளிட்ட 17 சிற்பங்கள் உள்ளன. வடக்கு மாளிகை இறைவன் உலாச்செல்லும் ஊர்திகளின் இருப்பிடமாகியுள்ளது.

தெற்கு மாளிகைச் சிற்பங்கள்

அறுபத்து மூவருக்கு முன்னுள்ள நால்வரில் சிற்றாடையும் வலப்புறக் கொண்டையுமாய் விளங்கும் சம்பந்தரின் இருகைகளிலும் தாளம். வலத்தோளில் உழவாரப் படையுடன் அடுத்துள்ள அப்பர் பெருமான் வணங்கிய கைகளுடன் அமைய, இடக்கையைக் கடியவலம்பிதமாக்கி, வலக்கையில் செண்டு கொண்டுள்ள சுந்தரரின் தலையை மகுடம் அலங்கரிக்கிறது. இடுப்புச் சிற்றாடையும் ருத்திராக்கமாலையுமாய் விளங்கும் மாணிக்கவாசகரின் வலக்கை சின்முத்திரையில். இடக்கையில் சுவடி.

கரண்டமகுடம், தோள், கை வளைகள், முப்புரிநூல், உதர பந்தம், இடைச்சிற்றாடை கொண்டு பேருருவினராய் நிற்கும் பொல்லாப் பிள்ளையாரின் பின்கைகளில் பாசம், அங்குசம். வல முன் கை உடைந்த தந்தம் கொள்ள, இட முன் கை மோதகத்தைத் துளைக்கை சுவைக்கிறது.

எழுவர்அன்னையர் தொகுதியில் முதலில் உள்ள சிற்பம் ஒரு காலத்ததாகவும் பிற ஆறும் பிறிதொரு காலத்தனவாகவும் உள்ளன. சுகாசனத்திலுள்ள இவ்அன்னையரின் வல முன் கை காக்கும் குறிப்பிலும் இட முன் கை தொடையில் கடகத்திலும் உள்ளன. அவருள் பலர் மார்புக்கச்சுடன், தோள், கை வளைகள், கழுத்தாரம், தொடைவரை சுருக்கிய பட்டாடை அணிந்துள்ளனர்.

முதல் அன்னையின் சிற்பம் பெரிதும் சிதைந்துள்ளதால் இன்னாரென அடையாளம் காணக்கூடவில்லை. கரண்டமகுடத்துடன் இரண்டாவதாக உள்ள வராகி பின்கைகளில் கலப்பை, சங்கு கொள்ள, கிரீடமகுடம், முத்தாரத்துடனுள்ள வைணவியின் பின்கைகளில் சங்கு, சக்கரம். மகர, பனையோலைக் குண்டலங்களுடன் முப்புரிநூலணிந்துள்ள மகேசுவரியின் பின்கைகளில் மழு, அக்கமாலை. கரண்டமகுடம், முத்துமாலை, பனை யோலைக் குண்டலங்களுடன் காட்சிதரும் கௌமாரியின் பின்கைகளில் வஜ்ரம், அக்கமாலை. சடைமகுடம், பூட்டுக்குண்டலங்களுடன் உள்ள நான்முகி பின்கைகளில் குண்டிகை, அக்கமாலை பெற, கிரீடமகுடத்துடனுள்ள இந்திராணி வலக்கையில் வஜ்ரம் கொண்டுள்ளார். அவரது இடக்கைப் பொருள் சிதைந்துள்ளது. இத்தொகுதியில் சாமுண்டியைக் காணக்கூடவில்லை. அடுத்துச் சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், இடைச்சிற்றாடையுடன், இடக்கை முழங்கால் மீது படர, உத்குடியாசனத்திலுள்ள ஐயனாரின் வலக்கையில் செண்டு.

கழுத்தாரம், மீசை, கைவளைகள், பட்டாடையுடன் கருடாசனத்திலுள்ள ஆடவர் இடக்கையால் தலைமுடியைப் பற்றி வலக்கைக் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொள்ளும் தலைப்பலிச் சிற்பத்தைக் கோயிலார் மாமுண்டி என்கின்றனர். அடுத்துள்ள இரு சிற்பங்களில், இடக்கையை உருள்பெருந்தடி மீதிருத்தி, வலக்கையில் வாள் கொண்டுள்ள மீசை ஆடவர் மரமேறி ஆடையுடன் முத்துமாலை, பதக்கமாலை, முப்புரிநூல், தோள், கை வளைகள் அணிந்து நீள்வெறுஞ் செவிகளுடன் காட்சிதருகிறார். வலக்கையில் வாளும் இடக்கையில் கேடயமும் கொண்டு நீள்வெறுஞ் செவிகள், மீசை, பட்டாடையுடன் நிற்கும் ஆடவர் சிற்பம் அடுத்துள்ளது. கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், கழுத்தாரம், பட்டாடை அணிந்தவராய் உத்குடியாசனத்தில் உடலை வலமாய் ஒருக்கணித்து, முகத்தை நேர்நிறுத்தியுள்ள நிலமகளின் வலக்கையில் மலர். இடக்கை தொடைமீது.

இறுதியாக உள்ள யோகாசன சிவபெருமான் எழுவர்அன்னையர் தொகுதியைச் சேர்ந்தவராகலாம். குறுக்கீடு செய்யப்பட்டுள்ள கால்களை இணைக்கும் யோகபட்டத்துடன் சடைமகுடம், முப்புரிநூல், உதரபந்தம், முத்துமாலை பெற்றுள்ள அவரது முன்கைகள் பக்கவாட்டில் நெகிழ்ந்துள்ளன. பின்கைக் கருவிகளை அடையாளப்படுத்த முடியவில்லை.

கரண்டமகுடம், முப்புரிநூல், நடுப்பதக்கம் பெபற்ற முத்துப் பட்டையாக உதரபந்தம், சிற்றாடையுடன் இலலிதாசனத்தி லுள்ள கோடிப்பிள்ளையாரின் பின்கைகளில் பாசம், அங்குசம். வல முன் கை உடைந்த தந்தம் கொள்ள, இட முன் கை மோதகத்தைத் துளைக்கை சுவைக்கிறது. பிள்ளையாரின் இரண்டு தந்தங்களுள் வலத்தந்தம் மட்டுமே உடைந்துள்ளது.

மேற்கு மாளிகைச் சிற்பங்கள்

மேற்கு மாளிகையின் முதல் தொகுதியாகக் கிழக்குப் பார்வை யிலுள்ள சிற்பங்களில் மகாராஜலீலாசனத்திலுள்ள காரைக்கால் அம்மை இருகைகளிலும் தாளங்கள் கொண்டுள்ளார். வெறுஞ் செவிகளுடன் மழித்தத்தலையில் ருத்திராக்கமாலையும் இடுப்பில் பட்டாடையும் பெற்றுள்ள அம்மையின் கைகளில் ருத்ராக்கவளைகள், கழுத்தில் மணிமாலை. பெருந்திருமேனியராய் லலிதாசனத்திலுள்ள பிள்ளையாரின் பின்கைகளில் அங்குசம், பாசம், கரண்டமகுடம், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், தோள், கை வளைகள், தாள்செறி, இடைச்சிற்றாடை கொண்டுள்ள அவரது சிதைந்த இடக்கையின் மோதகத்தைத் துளைக்கை சுவைக்கிறது.

இடக்காலை மடக்கிப் பாதத்தை அருகிலுள்ள மரத்தின் மீது இருத்தியவாறு வலப்பாதத்தைத் திரயச்ரத்தில் திருப்பி, முகத்தை இலேசான வலஒருக்கணிப்புச் செய்து நிற்கும் கொடிப் பெண்ணின் வலக்கையில் மலர். தலைமுடியைக் கொண்டையாக முடிந்து செவிகளில் பனையோலைக் குண்டலங்களுடன், இடக்கையால் மரத்தைத் தழுவியவாறு கச்சற்ற மார்பகங்களுடன் நிற்கும் அவரது இடையில் இடைக்கட்டுடன் பட்டாடை. உத்குடியில் வலக்கால் கீழிருக்க இடக்கை முழங்கால் ஒட்டி நெகிழ, சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, முப்புரிநூல், உதரபந்தம், தொடைவரை சுருக்கிய பட்டாடை கொண்டு விளங்கும் ஐயனாரின் வலக்கை காக்கும் குறிப்பில் உள்ளது.

மேற்கு மாளிகையின் இரண்டாம் தொகுதியில் 5 சிற்பங்கள் வடபார்வையிலும் ஒரு சிற்பம் தென்பார்வையிலும் அமைய, ஏனையன கிழக்குப் பார்வையில். இங்குள்ள சிற்பங்களில் அள வில் மிகச் சிறியதாக உள்ள சூரியன் ஒளிவட்டம் சூழ்க் கரண்டமகுடத்துடன், பனையோலைக் குண்டலங்கள், பட்டாடை, சரப்பளி அணிந்து இருகைகளிலும் தாமரை மலர்களுடன் நிற்கிறார். இங்குள்ளவற்றில் அளவில் பெரியதாக விளங்கும் முருகனின் சிற்பம் முகம் சற்றே சிதைந்த நிலையில் சமபாதத்தில் உள்ளது. பின்கைகளில் சக்தி, அக்கமாலை. சென்னிசூழ்க் கரண்ட மகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், இடைக்கட்டுடனான சிற்றாடை அணிந்துள்ள அவரது வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கை தொடையில்.

கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், பெருமுத்துமாலை, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், நீள்நடுப்பட்டி நெகிழும் இடைக்கச்சு, இடைக்கட்டுடனான பட்டாடை கொண்டு சமபாதத்திலுள்ள விஷ்ணுவின் முன்கைகள் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பிதத்திலும் அமைய, பின்கைகளில் சங்கு, சக்கரம்.

இங்குள்ள இரண்டு கொற்றவைச் சிற்பங்களும் கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, மார்புக்கச்சு, தோள்மாலை, தோள், கை வளைகள், சுவர்ணவைகாக்சம், குறங்குசெறி பெற்ற இடைக்கச்சு, இடைக்கட்டுடனான பட்டாடை கொண்டு, பின்கைகளில் சங்கு, சக்கரத்துடன் முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் கடியவலம் பிதத்திலும் கொண்டு சமபாதத்தில் உள்ளனர். ஓர் அம்மை கூடுதலாக அரும்புச்சரமும் பெற்றுள்ளார்.

இப்பகுதியிலுள்ள 5 அம்மன் சிற்பங்களில் தென்பார்வையி லுள்ளது அளவில் பெரியதாக நான்கு கைகளுடன் அரும்புச் சரம், சுவர்ணவைகாக்சம், பட்டாடை, முத்துச்சரம் பெற்ற இடைத்தொங்கல், கரண்டமகுடம் கொண்டு பின்கைகளில் அங்குசம், பாசம் ஏந்தி, முன்கைகளில் காக்கும், அருட்குறிப்புடன் காட்சிதருகிறது. பிற அம்மன் சிற்பங்கள் கரண்டமகுடம், பனையோலை அல்லது மகரகுண்டலங்கள், சரப்பளி, தோள், கை வளைகள், பட்டாடை கொண்டனவாய் ஒரு கையில் மலர் மொட்டேந்தி, மற்றொரு கையை நெகிழ்த்தியுள்ளன. நீள்கரண்டமகுடம் பெற்ற அம்மன் எழிலார்ந்த இடைத்தொங்கல் பெற்றுள்ளார். மார்புக்கச்சற்ற, சமபாத நிலையினரான அவர்கள் ஏந்தியுள்ள மலர் மொட்டுகள் அளவிலும் அமைப்பிலும் மாறுபட்டுள்ளன.

- வளரும்
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.