http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 156

இதழ் 156
[ ஜூலை 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 1
இது செய்யேனாயின் இப்படி ஆவதாக
மதங்கேசுவரம் - 2
திருவாசி மாற்றுரை வரதீசுவரர் - 2
பதாமி சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும் (ஐஹொளே தொடர்ச்சி)
அடியார் குலத்துக் கடைசி விளக்கு
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 3
இதழ் எண். 156 > கலையும் ஆய்வும்
மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 1
இரா.கலைக்கோவன், மு.நளினி

மாமல்லபுரத்தில் பதினான்கு குடைவரைகளும் கழுக்குன்றத்தில் ஒரு குடைவரையுமாகப் பதினைந்து குடைவரைகள் பல்லவர் காலத்தே அகழப்பட்டுள்ளன. அவற்றுள், நிறைவடையாதன ஐந்து. பெருமளவிற்கு நிறைவடைந்த பத்தனுள், கருவறையில் தாய்ப்பாறைப் பிறப்பாய் இறைத்திருமேனி பெறாதவை ஐந்து. எஞ்சிய ஐந்து குடைவரைகளிலேயே கருவறை இறையைத் தாய்ப் பாறைச் சிற்பமாகக் காணமுடிகிறது. இப்பதினைந்து குடைவரைகளுள், மண்டபக் குடைவரைகளாய் அமைந்தவை பதினான்கு. அவற்றுள் ஒன்றில் மண்டபம் உருவாகவில்லை எனினும், முகப்பின் அமைப்பு அதை மண்டபக் குடைவரையாகவே காட்சிப்படுத்துகிறது. மும்மூர்த்தி மட்டுமே மண்டபமற்ற நிலையில் இப்பகுதியின் ஒரே கருவறைக் குடைவரையாய் மூன்று கருவறைகளுடன், மூன்றிலும் தாய்ப்பாறை உருவாக்கமான இறைத்திருமேனிகளுடன் தனித்து நிற்கிறது.

மண்டபப் பகுப்பு

மண்டபம் உருவாகியுள்ள பதின்மூன்று குடைவரைகளுள் எட்டுக் குடைவரைகள் ஒருமண்டபக் குடைவரைகளாய்ப் பொலிய, ஐந்தில் மட்டுமே இரண்டாம் வரிசைத் தூண்களின் இருப்பால் முகமண்டபம், அர்த்தமண்டபம் என மண்டபப் பகுதி இரண்டு பிரிவுகளாகக் காட்சிதருகிறது. அவ்வைந்தனுள் பஞ்சபாண்டவர், தருமராஜர், கோனேரிப் பெரிய மண்டபம், கழுக்குன்றம் ஆகிய நான்கும் அவற்றின் கருவறைகளில் தாய்ப்பாறையிலான இறைத்திருமேனிகளைக் கொள்ளாமையும் பெருவராகர் மட்டும் அத்தகு இறைத்திருமேனி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கன.

முதலாம் மகேந்திரரின் ஏழு குடைவரைகளுள் இரு மண்டபக் குடைவரைகளாய் ஆறு அமைய, பல்லவர்களின் அடுத்த காலகட்டக் குடைவரைகளாய் எழுந்த மாமல்லபுரம் குடைவரைகளுள் பெரும்பான்மையன (8:5) ஒரு மண்டபக் குடைவரைகளாய் உருவாகியுள்ளமை குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அமைப்பு மாற்றமாகும். எனினும், மகேந்திரரின் மாமண்டூர் முதற்குடைவரையிலேயே இதற்கான தொடக்கம் நிகழ்ந்துவிட்டமையை நினைவில் இருத்த வேண்டும்.1

திசைப் பார்வை

மாமல்லபுரத்திலும் கழுக்குன்றத்திலுமாய்ப் பிறந்துள்ள பதினைந்து பல்லவர் குடைவரைகளுள் கிழக்குப் பார்த்தவை ஏழு. மேற்குப் பார்த்தவை எட்டு. மகேந்திரர் காலத்தன போல் வடக்கு, தெற்குப் பார்வைகளில் இக்காலகட்டக் குடைவரை களுள் ஒன்றேனும் அமையாமையுடன், கருவறைகளும் அவ்விரு பார்வைகளில் இடம்பெறவில்லை.2 மகேந்திரர் குடைவரைகளில் சத்ருமல்லேசுவரமும் லலிதாங்குரமும் மண்டபப் பக்கச்சுவர்களில் கருவறை பெற்றமை போல் இப்பதினைந்தனுள் ஒன்றேனும் கொள்ளாமையும் இக்காலகட்ட அமைப்பு மாற்றமாகக் கருதத்தக்கது.

முகப்பு

பதினைந்தனுள் பதினான்கு குடைவரைகள் முகப்புப் பெற்றுள்ள நிலையில், மிக நீளமான முகப்பைப் பஞ்சபாண்டவர் குடைவரையும் அகலமான முகப்பை வராகரும் உயரமான முகப்பை மகிடாசுரமர்த்தினி குடைவரையும் பெற்றுள்ளன. ஏழு அங்கணங்களுடன் பேரளவிலான முகப்பைப் பெற்றுள்ள பஞ்சபாண்டவர் குடைவரையே மாமல்லபுரக் குடைவரைகளுள் முகப்பில் எட்டுத் தூண்கள் பெற்றுள்ள ஒரே குடைவரை. அடுத்த நிலையில் ஆறு தூண்கள் பெற்ற முகப்புடன் பெருவராகர், மகிடாசுரமர்த்தினி, கோனேரிப் பெரிய மண்டபம் ஆகிய மூன்றும் ஐந்து அங்கணங்களுடன் உருவாகியுள்ளன.

தூண்கள்

முகப்புத் தூண்களை மகேந்திரர் காலச் சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பில் பெற்றுள்ள குடைவரைகளாக அதிரணசண்டேசுவரம், தருமராஜர், கொற்றவை, கோனேரிப் பெரிய மண்டபம், கழுக்குன்றம் ஆகிய ஐந்தைக் குறிக்கலாம். அவற்றுள், அதிரணம் தவிர்த்த ஏனைய நான்கும் கருவறையில் தாய்ப்பாறைத் தெய்வம் பெறாத குடைவரைகளாகும். தாய்ப்பாறைத் தெய்வம் பெற்றிருந்தபோதும் முகப்புத் தூண்களைச் சதுரம், கட்டு, சதுரம் நிலையிலேயே பெற்றுள்ள அதிரணம் ராஜசிம்மருடைய பணியாகக் கல்வெட்டுகளின் அடிப்படையில் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை இங்கு நினைவில் ஆழ இருத்தத்தக்கது. முகப்புத் தூண்கள் உருவாகியுள்ள பிற குடைவரைகளுள் ஆறில் அவை எண்முகமாகவும் மகிடாசுரமர்த்தினியில் மட்டும் பன்முகமாகவும் அமைந்துள்ளன.

நிறைவடையாத ஐந்து குடைவரைகளுள் ஓரளவிற்கு முழுமையுற்றுள்ள பஞ்சபாண்டவர், கோனேரிச் சிறிய மண்டபம், புலிப்புதர் ஆகிய மூன்றின் முகப்புத் தூண்களும் ஒன்று போல அமர்யாளி எண்முகத் தூண்களாக வடிவெடுத்துள் ளன. கருவறைத் தெய்வமற்ற ஐந்தனுள் வராகருக்கு மட்டுமே அப்பேறு வாய்த்துள்ளது. கருவறைத் தெய்வம் பெற்ற மண்டபக் குடைவரைகள் நான்கனுள் பெருவராகரும் ராமானுஜரும் அமர்யாளி எண்முகத் தூண்கள் கொண்டுள்ளன. இதன் வழி, மாமல்லபுரத்தின் மண்டபக் குடைவரைகள் பதின்மூன்றனுள் ஆறு குடைவரைகள் அமர்யாளி எண்முகத் தூண்கள் பெற்று, மகேந்திரர் தூணமைப்பு முறையிலிருந்து முற்றிலும் மாறியுள்ளமை தெளிவாகும். இத்தகு அமைப்பை வடதமிழ்நாட்டின் பிறபகுதிகளில் உருவாகியுள்ள பல்லவர் குடைவரைகளிலோ, தென்தமிழ்நாட்டிலுள்ள பாண்டியர், முத்தரையர் குடைவரைகளிலோ,3 நாமக்கல் அதியர் குடைவரைகளிலோ காணக்கூடவில்லை என்பது தமிழ்நாட்டுக் கலைவரலாற்றில் குறிப்பிடத்தக்க பதிவாகும்.

முகப்புத் தூண்களை இந்திரகாந்த அமைப்பில் பெற்ற ஒரே குடைவரையாக மகிடாசுரமர்த்தினி மிளிர்கிறது. மாமல்லபுரக் குடைவரைகளில் இத்தகு பன்முகத் தூண்களைப் பார்க்கக்கூடிய மற்றொரு குடைவரை கோனேரிப் பெரிய மண்டபமாகும். ஆனால், அங்கு மகிடாசுரமர்த்தினி போலன்றி, மண்டபத்தை இரு பிரிவாக்கவே இந்திரகாந்தத் தூண்கள் பயன்பட்டுள்ளன. இரண்டு குடைவரைகளிலுமே அவற்றின் பாதம் உருளையாக, அலங்கரிப்பின்றி அமைந்துள்ளது.

சதுரம், கட்டு, சதுரம் அமைப்பிலான தூண்களைத் தவிர, ஏனைய முகப்புத் தூண்களில் இடைக்கட்டுத் தொடங்கிப் பலகை வரையிலான உறுப்புகளில் சிலவற்றையோ, பலவற்றையோ, அனைத்தையுமோ பார்க்கமுடிவது குறிப்பிடத் தக்கது. முழுமையுற்ற தூண்களில் வடிவம் பெற்றும் நிறைவுறாத் தூண்களில் ஒதுக்கீடுகளாகவும் இவை அமைந்துள்ளன. இடைக்கட்டு இரண்டே குடைவரைகளில்தான் உள்ளது. மகிடாசுரமர்த்தினியில் முகப்புத் தூண்களில் இடம்பெற்றுள்ள இது, பெருவராகரில் இரண்டாம் வரிசைத் தூண்களில் உள்ளது.

தொங்கல், தானம், தாமரைக்கட்டு ஆகிய மூன்றின் இணைவையும் தலையுறுப்புகளான கலசம், தாடி, கும்பம் ஆகியவற்றையும் சதுரம், கட்டு, சதுரம் தவிர்த்த பிற வடிவத் தூண்களில் காணமுடிகிறது. கும்பத்திற்கு மேல் அமையும் பாலி, பலகை, வீரகண்டம் ஆகியவை நிறைவடையாத குடைவரைகளுள் முகப்பு உருவாகியுள்ள மூன்றிலுமே உள்ளன. கருவறைத் தெய்வமற்ற குடைவரைகளுள் வராகர் முகப்புத் தூண்கள் மட்டுமே பாலி, பலகை, வீரகண்டம் பெற்றுள்ளன. கருவறைத் தெய்வம் பெற்ற நான்கு மண்டபக் குடைவரைகளுள் மகிடாசுரமர்த்தினியில் மட்டுமே இம்மூன்றும் காணப்படுகின்றன.

இராமானுஜரிலும் பெருவராகரிலும் பாலி, பலகை இடம்பெறாத நிலையில், கும்பமே நேரடியாக வீரகண்டம் சுமக்கிறது. ஆக, மாமல்லபுரக் குடைவரைகளின் மூன்று பிரிவுகளில் நிறைவடையாப் பிரிவிலேயே அதிக அளவில் பாலியையும் பலகையையும் காணமுடிவதால், அப்பிரிவுக் குடைவரைகளைப் பிறவற்றினின்றும் காலத்தால் சற்றுப் பிற்பட்ட உருவாக்கங்களாகக் கொள்வது தவறாகாது. பலகை இடம்பெற்றுள்ள இரண்டு குடைவரைகளுள் வராகரின் பலகைகள் தனிச்சிறப்புடன் காட்டப்பட்டுள்ளமை, அதைக் காலத்தால் சற்றுப் பிற்பட்டதாகக் கொள்ளத் துணையாகிறது. பலகை இடம்பெற்றுள்ள எந்த ஒரு குடைவரையிலும் பலகையைத் தாங்குமாறு பத்மம் பிறக்கவில்லை என்பது நினைவில் இருத்த வேண்டிய குறிப்பாகும். பலகை அமைப்பை மகேந்திரர் குடைவரைகளில் காண முடியாவிட்டாலும் தளவானூர் சத்ருமல்லேசுவராலயத்தின் முகப்புத் தூண்களில் அதற்கான தொடக்கம் அமைந்துள்ளமையை, அவற்றின் மேற்சதுரங்களின் நாற்புறத்தும் பிதுக்கமாகக் காணப்படும் வடிப்பு தெளிவாக்குகிறது.4

போதிகை

அனைத்துக் குடைவரைகளின் முகப்புத் தூண்கள் மீதும் கூரையுறுப்புகள் தாங்குவனவாய்ப் போதிகைகள் உள்ளன. அவற்றின் கைகள் வளைமுகமாகவோ, விரிகோணத்திலோ, தரங்கம் பெற்றோ, இல்லாமலோ அமைந்துள்ளன. தரங்கப் போதிகைகள் நிறைவடையாக் குடைவரைகளில் பஞ்சபாண்டவரிலும் இறையற்ற குடைவரைகளில் கோனேரிச் சிறிய மண்டபம், வராகர் ஆகியவற்றிலும் இறைக் குடைவரைகளில் அதிரணம், ராமானுஜர், பெருவராகர் ஆகிய மூன்றிலும் இடம்பெற்றுள்ளன. எனினும், கொடிக்கருக்குடனான பட்டை பெற்ற தரங்கக் கைகளை ராமானுஜரில் மட்டுமே காணமுடிகிறது. தரங்கத்தின் மீதமையும் கொடிக்கருக்குடனான பட்டைகள் மகேந்திரர் குடைவரைகளின் முகப்புத் தூண்களிலேயே இடம்பிடித்துள்ளபோதும்5 முழுமையுற்ற பெருவராகர், அதிரணம், மகிடாசுரமர்த்தினி முதலிய பின்னாளைய குடைவரைகளில்கூட அவற்றைக் காணமுடியாமை, ‘பல்லவர் கலைமுறை’ பற்றிய சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துகிறது.

கூரையுறுப்புகள்

கூரையுறுப்புகளாக விளங்கும் உத்திரம், வாஜனம், வலபி ஆகியவற்றுள் முன்னிரண்டும் கூரையிழுப்பான கபோதத்துடன் மகேந்திரர் குடைவரைகளிலேயே சிறக்கக் காட்டப்பட்டுள்ளன. வலபியும் கந்தருவத்தலைகள் பெற்ற கூடுவளைவுகளுடனான கபோதமும் தளவானூர் சத்ருமல்லேசுவரத்தில் உள்ளன.6 கோனேரி மண்டபங்களிலும் வராகரிலும் ராமானுஜர், பெருவராகர் ஆகிய இறைக் குடைவரைகளிலும் வலபி உள்ளது. கோனேரிச் சிறிய மண்டபத்தின் முகப்பு முழுமையுறாமையின் அங்கு வலபி ஒதுக்கீடு நிலையிலுள்ளது. கோனேரிப் பெரிய மண்டப வலபி அன்னவரி பெற, ராமானுஜரில் பூதவரி. வராகர், பெருவராகர் இரண்டுமே வலபியில் கொடிக்கருக்கு கொண்டுள்ளன. வடதமிழ்நாட்டுப் பல்லவக் குடைவரைகளில் பூதவலபி ராமானுஜரில் மட்டுமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகேந்திரர் குடைவரைகளிலேயே காணமுடியும் வளமான கபோதத்தை நிறைவுற்ற மாமல்லபுரம் குடைவரைகளில் பெரும் பான்மையன கொண்டுள்ளபோதும் தருமராஜர், கொற்றவை, கழுக்குன்றம் ஆகியவற்றில் அதைக் காணமுடியவில்லை. இந்த மூன்றுமே கருவறையில் இறைவடிவம் பெறாதவை. கோனேரிப் பெரிய மண்டபம், மகிடாசுரமர்த்தினி, பெருவராகர் ஆகியன பத்துக் கூடுவளைவுகளுடனான கபோதம் பெற, வராகர் ஆறு கூடுவளைவுகளுடனான கபோதத்தில் சந்திரமண்டல அலங்கரிப்பும் கொண்டுள்ளது. பல்லவர் பகுதியில் முதன்முறையாகச் சந்திரமண்டல அலங்கரிப்பைக் காணமுடிவது இங்குதான். தமிழ்நாட்டுக் குடைவரைகளில் சந்திரமண்டல அலங்கரிப்புப் பெற்ற மற்றொரு கபோதத்தைச் சொக்கம்பட்டிக் குடைவரையின் முகப்புப் பெற்றுள்ளது.7

அதிரணக் கபோதம் விளிம்பு மட்டும் கொள்ள, ராமானுஜர் கபோதம் விளிம்புடன் எட்டுக் கூடுவளைவுகள் கொண்டுள்ளது. அத்துடன், தமிழ்நாட்டின் வேறெந்தப் பல்லவக் குடைவரையிலும் இடம்பெறாத கபோதம் தாங்கும் வளைவுச் சலாகை அமைப்பும் பெற்றுள்ளது.8 நிறைவுறாத குடைவரைகளில் பஞ்சபாண்டவரில் மட்டுமே கபோத அமைப்பு உள்ளது. கபோதக் கூடுகளில் கந்தருவத் தலைகள் காட்டும் மகேந்திர மரபு பெருவராகரிலும் கோனேரிப் பெரிய மண்டபத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. இராமானுஜர் கபோதக்கூடுகளில் எழுகதிரோன் அமைப்பும் வராகர் கபோதக்கூடுகளில் தாமரை போன்ற அலங்கரிப்பும் இடம்பெற்றுள்ளன. இராமானுஜரின் எழுகதிரோன் அமைப்பு பெருவராகர் மண்டபக் கபோதக் கூடுகள் சிலவற்றிலும் ஒருகல் தளிகளின் நாசிகைக் கூடுகள் சிலவற்றிலும் காணப்படுவது இங்குக் கருதத்தக்கது.

தாவுயாளி

தூண் பலகைகளில் நின்று கபோதம் தாங்குவனவாய்க் காட்சிதரும் தாவுயாளிகளை, முகப்புப் பெற்ற மாமல்லபுரம் குடைவரைகளில் பஞ்சபாண்டவரில் மட்டுமே காணமுடிகிறது. இத்தாவுயாளிகள் மகிடாசுரமர்த்தினியில் முன்றில் கபோதம் தாங்கவும் வராகரிலும் கோனேரிப் பெரிய மண்டபத்திலும் கருவறைக் கபோதம் தாங்கவும் பெருவராகரிலும் பஞ்ச பாண்டவரிலும் ஆரஉறுப்புகளின் சிகரம் தாங்கவும் பயன் படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் வேறெந்தக் குடைவரை யிலும் இடம்பெறாத இவற்றை மாமல்லபுரத்து அருச்சுன ரதம், பிடாரித்தளி முதலிய ஒருகல் தளிகளிலும் பாண்டியர் பகுதியில் வெட்டுவான்கோயிலிலும் காணமுடிகிறது. பெருவராகரில் தாங்கியாகச் சிம்மமும் தாவு, நடைபயில் நிலைகளில் காட்சியளிப்பது அக்குடைவரைக்கு மட்டுமே அமைந்த தனிப் பெருமையாகும்.

பஞ்சபாண்டவரின் முகப்புத் தாவுயாளிகள் பிறவற்றினின் றும் வேறுபட்ட நிலையில் மும்மூன்றாய் ஒரு தொகுதி என நிற்பதும், அவற்றுள் பக்க யாளிகள் மீது வீரர்கள் அமர்ந் திருப்பதும் தாவுயாளிகள் அமைப்பில் நேர்ந்த வளர்நிலைகளாகும். இத்தகு அமைப்பொட்டிப் பேரளவிலான சிம்மங்கள், யாளிகள் மீதமர்ந்த வீரர்களின் சிற்பங்களைக் காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் வளாகப் புறச்சுவர் பெற்றுள்ளது. பின்னாளில் இவ்வமைப்பே பிரதிபந்தத் தாங்குதளங்கள் சிலவற் றின் பிரதிவரியாகவும் பின்பற்றப்பட்டமைக்குத் தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் சிறந்த சான்றாகும்.

பூமிதேசம்

தளமுடிவைக் காட்டும் பூமிதேசத்தின் தொடக்கநிலைக் கூறுகளை மகேந்திரரின் சத்ருமல்லேசுவரத்திலும் முழுமையுறாத நிலையில் சொக்கம்பட்டியிலும் காணமுடிந்தாலும் நிறைநிலை பூமிதேசம் உள்ளமை மாமல்லபுரத்தில்தான். தமிழ்நாட்டுக் குடைவரைகளில் வேறெங்கும் இல்லாத இக்கூறு மாமல்லபுரம் குடைவரைகளின் முகப்பிலும் உள்ளிலும் வளமையுடன் உள்ளமை மாமல்லபுரக் கலைமுறையின் சிறப்பமைவு எனலாம். எனினும், அமைப்பிலும் தொடரிலும் முகப்பு பூமிதேசத்திற்கும் மண்டப பூமிதேசத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன.

முகப்பு பூமிதேசத்தில் இடம்பெற்றுள்ள விலங்கு உருவங்கள் சிறிய அளவினவாக, அதிக இடைவெளியின்றிச் சிறுசிறு தொகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் இடையிலுள்ளவை எதிரெதிர் நோக்கியனவாகவும் மூலைகளில் உள்ளவை அவ்வத்திசைப் பார்வையிலும் அமைய, திருப்பங்களில் மகரங்கள் இடம்பெற்றுள்ளன. மண்டப பூமிதேசத்தில் தொகுதி அமைப்போ, திருப்ப மகரங்களோ இல்லை. இதிலுள்ள விலங்குருவங்களும் அளவில் பெரியனவாய் நன்கு இடைவெளியிட்டுக் காட்சிதருகின்றன. முகப்பு பூமிதேசத்தில் வேழ, சிம்மயாளிகள் இடம்பெற, மண்டப பூமிதேசத்தில் பெரும்பாலானவை சிம்மங்களாகவும் சிலவே யாளிகளாகவும் உள்ளன.

ஆரம்

முகப்பின் கூரை மேல் ஆரம் அமரும் பாங்கினை மாமல்லபுரம் குடைவரைகள் சிலவற்றில் தவிர, தமிழ்நாட்டின் வேறெந்தக் குடைவரையிலும் காணக்கூடவில்லை. நிறைவடையாத குடைவரைகளில் பஞ்சபாண்டவர் ஆரம் பெற்றுள்ளது. இறையற்ற குடைவரைகளில் கோனேரிப் பெரிய மண்டபமும் வராகரும் ஆரம் பெற்றுள்ளன. இறைக் குடைவரைகளுள் மகிடாசுரமர்த்தினி, பெருவராகர், ராமானுஜர் குடைவரைகளில் ஆரம் காணப்படுகிறது. கருவறைகள் மட்டுமே பெற்றுள்ள மும்மூர்த்தியும் ஆரம் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் கருவறைக் குடைவரைகளில் ஆரமுள்ள ஒரே குடைவரை மும்மூர்த்திதான்.

மாமல்லபுரத்தின் பதினான்கு குடைவரைகளுள் ஏழு குடைவரைகள் ஆரம் பெற்றுள்ளபோதும், அவற்றின் ஆரஅமைப்பு ஒன்று போல் அமையாது மாறுபட்டுள்ளமை, மாமல்லபுரத்தில் கட்டடக்கலை சார்ந்து நிகழ்த்தப்பட்ட சோதனை முயற்சிகளின் உரைகல்லாகக் காட்சிதருகிறது. பல்லவர் கற்றளிகளில் நேர்ந்த பின்னாளைய ஆரக்கட்டமைப்பின், ‘மூலைகளில் கர்ணகூடங்கள், இடையில் சாலைகள், அவற்றை இணைக்கும் ஆரச்சுவர்’ என்ற திட்டத்திற்கான முன்னோடி வரைவுகளை, அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களுடன் மாமல்லபுரம் குடைவரைகள் கண்முன் நிறுத்துகின்றன. மும்மூர்த்தி, பஞ்சபாண்டவர் தவிர்த்த பிற ஐந்து குடைவரைகளின் ஆரஅமைப்புகளில் கர்ணகூடங்கள் இல்லை.

மகிடாசுரமர்த்தினியில் ஆரம் நிறைவுபெறாவிட்டாலும் ஆரச்சுவருடன் ஐந்து சாலைகளை உருவாக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. பெருவராகரிலும் கோனேரிப் பெரிய மண்டபத்திலும் ஐந்து சாலைகள் ஆரச்சுவரால் இணைக்கப்பட்டுள்ளன. சாலைகளுக்கு இடைப்பட்ட சுவர்த்துண்டுகள் ஒவ்வொன்றும் இரண்டு குறுநாசிகைகள் பெற, வட, தென்சாலைகளை அடுத்து நீளும் சுவர்த்துண்டுகளில் பக்கத்திற்கொரு குறுநாசிகையைக் காணமுடிகிறது. சாலைகள் இரண்டு தூபிகள் கொள்ள, இடைப்பட்ட சுவர்த்துண்டுகள் மூன்று தூபிகளுடன் உள்ளன. இராமானுஜரில் ஐந்து சாலைகள் காணப்படினும், நடு மூன்று சாலைகளுக்கு இடைப்பட்ட சுவர்த்துண்டுகளே இரண்டு குறுநாசிகைகள் பெற்றுள்ளன. எஞ்சிய சுவர்த்துண்டுகள் ஒரு குறுநாசிகை மட்டுமே கொண்டுள்ளன. இங்கு வட, தென்சாலைகளை அடுத்து ஆரச்சுவர் நீளவில்லை. வராகரில் மூன்று சாலைகளே உள்ளன. பெருவராகர் போலவே இங்கும் சாலைகளுக்கு இடைப்பட்ட சுவர்த்துண்டுகள் இரண்டு குறுநாசிகைகள் பெற, வட, தென்சாலைகளை அடுத்த சுவர்த்துண்டுகளில் ஒரு குறுநாசிகை மட்டுமே காணப்படுகிறது. இங்கும் சாலைகள் இரண்டு தூபிகள் பெற்றுள்ளன. ஆனால், சுவர்த்துண்டுகளில் ஒரு தூபி மட்டுமே உள்ளது.

பஞ்சபாண்டவர் ஆரம் இவற்றினின்று முற்றிலும் வேறு பட்டதாய்க் காட்சிதருகிறது. இத்தகு ஆரஅமைப்பை இங்குள்ள ஒருகல் தளிகளிலோ, கற்றளிகளிலோகூடக் காண முடியவில்லை. ஏழு சாலைகளைப் பெற்றுள்ள அதன் ஆரத்தில், வடக்கிலும் தெற்கிலும் பக்கத்திற்கிரு சாலைகள் அமைய, முகப்பின் நடுப்பகுதியில் இருக்குமாறு நன்கு முன்னிழுத்த நிலையில் எஞ்சிய மூன்று சாலைகள் கர்ணகூடங்களின் அணைப்பில் எழுச்சியுடன் காட்டப்பட்டுள்ளன.9 கர்ணகூடங்கள் ஒரு தூபி கொள்ள ஏழு சாலைகளும் சாலைக்கு இரண்டு தூபிகளுடன் காட்சிதருகின்றன. இடைப்பட்ட ஆரச்சுவர்த் துண்டுகள் ஒவ்வொன்றும் ஒரு குறுநாசிகை பெற, ஆரஉறுப்புகளின் நாசிகைக் கோட்டங்கள் சிலவற்றில் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. பின்னாளில் முற்சோழர் கால விமானங்களில் தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்ட எழிலார்ந்த ஆரக்கோட்டச் சிற்பங்களுக்குப் பஞ்சபாண்டவர் ஆரத்திலேயே விதை தூவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க சிறப்பாகும். பெருவராகர் ஆரஉறுப்புகள் சிகரம் தாங்கிகளாய்த் தாவுயாளிகள், நடைபயில் சிம்மங்கள் பெற்றுள்ளமை பிற குடைவரை ஆரங்களில் காணமுடியாத அமைப்பாகும்.

மும்மூர்த்தி குடைவரை அதன் அமைப்பிற்கேற்ப ஆரம் கொண்டுள்ளது. மூன்று கருவறைகளுள் முன்னோக்கி நகர்ந்துள்ள சிவபெருமானின் கருவறைக் கூரை மேல் அதன் வட, தென்மூலைகளில் அமர்ந்துள்ள கர்ணகூடங்களின் அணைப்பில் சாலை காட்டப்பட்டுள்ளது. அவற்றை இணைக்கும் ஆரச்சுவர்த்துண்டுகள் குறுநாசிகைகளுக்கு மாற்றாகப் பக்கத்திற்கு ஒரு கோட்டம் கொண்டுள்ளன. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் முதலிய பல்லவக் கற்றளிகள் சிலவற்றிலும் முற்சோழர் கற்றளிகள் பலவற்றிலும் அழகிய சிற்பங்களின் உருவாக்கத்திற்கு இடமளித்த இந்த ஆரச்சுவர்க் கோட்டங்கள் தமிழ்நாட்டுக் குடைவரைகளில் மும்மூர்த்தி சிவபெருமான் குடைவரையில் மட்டுமே காட்சிதருகின்றன. விஷ்ணு கருவறைக் கூரை தென் கோடியில் கர்ணகூடத்தையும் அதையடுத்துச் சாலையையும் பெற்றிருந்த போதும், வடமூலை ஆரஉறுப்பு உருவாகாமையின் அதன் ஆரத்திட்ட முழுமை பற்றிக் கருத்துக் கூற முடியவில்லை. முருகன் குடைவரைக் கூரையில் இரு மூலை ஆரஉறுப்புகளுமே நிறைவுறவில்லை. இவ்விரு கூரைகளிலுமே ஆரச்சுவர்த் துண்டுகள் குறுநாசிகைகளோ, கோட்டங்களோ பெறவில்லை.

படிகள்

மாமல்லபுரம், கழுக்குன்றம் குடைவரைகளில் முகப்பை அடையுமாறு நேர்த்தியான படியமைப்புக் கொண்டவை மிகச் சிலவே. அவற்றுள் பெரியதும் இருபுறப் படிகளுடன் நடுத்தளம் பெற்றதுமான படியமைப்பைக் கழுக்குன்றத்தில் பார்க்கமுடிகிறது. இத்தகு படியமைப்பை அதியர் பகுதியில் அதியேந்திர விஷ்ணுகிருகத்திலும் பாண்டியர் பகுதியில் கந்தன் குடைவரை யிலும் காணலாம். கோளக்குடி கோளகிரிநாதர், நாமக்கல் சிங்கப்பெருமாள், திருமலை மலைக்கொழுந்தீசுவரர் குடைவரைகளின் முன்னும் இத்தகு படிகள் இருப்பினும் அவை பின்னாளைய தளஅமைப்புகளால் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுள்ளன. மும்மூர்த்தி குடைவரையின் மூன்று கருவறைகளுக்கு முன்பும் புத்தமைப்பில் படித்தொடர்கள் இடம்பெற்றிருப்பினும் அவற்றை முகப்பின் முன்னமைந்த படியமைப்புகளாகக் கொள்ளமுடியாது.

நிறைவடையாக் குடைவரைகளுள் பஞ்சபாண்டவர் முன் ஒதுக்கீடு நிலையிலும் இறைக் குடைவரைகளுள் மகிடாசுரமர்த்தினி முன் முழுமையுறா நிலையிலும் படியமைப்பு உள்ளது. வடிவான படியமைப்பு ராமானுஜர், வராகர் முகப்புகளின் முன்பு காணப்படுகிறது. இராமானுஜரில் வடக்கு நோக்கிய படித்தொடராய்ப் பிடிச்சுவரற்ற நிலையில் மூன்று அளவான படிகளும் வராகரில் யாளித்தலையில் தொடங்கிச் சுருளாய் முடியும் துளைக்கைப் பிடிச்சுவருடன் முகப்பு நோக்கியனவாய் மூன்று படிகளும் உள்ளன. இராமானுஜர் படியமைப்பின் கீழ் மெலிதான தளஅமைப்பு முப்புறத்தும் பரவியுள்ளது. கோனேரிப் பெரிய மண்டபத்தின் முன்பும் வராகரில் உள்ளாற் போல் பிடிச்சுவருடன் மூன்று படிகள் முகப்பு நோக்கியனவாய் அமைந்திருப்பினும் அவை நிறைவுறவில்லை.

முகப்பின் சரிவுச் சுவர்கள்

மாமல்லபுரம், கழுக்குன்றம் குடைவரைகளில் முகப்பை ஒட்டி முன்னோக்கி நீளும் சரிவுச் சுவர்கள் அவை வெட்டப்பட்டுள்ள பாறை அல்லது குன்றின் சரிவிற்கேற்ப அகலப்பட்டோ, அகலக் குறுக்கமாகவோ உள்ளனவே தவிர, ஒன்றில் கூடச் செவல்பட்டி போல உள்வாங்கிய நிலையில் அமையவில்லை.1க்ஷூ பொதுவாகவே பல்லவர் பகுதிக் குடைவரைகளில் இந்த உள்வாங்கலை யாண்டும் சந்திக்கக் கூடவில்லை. உருவாக்கியவரின் கல்வெட்டுகளைப் பெற்றுள்ள அதிரணம் தவிர்த்த பிற மாமல்லபுரக் குடைவரைகளில் இப்பக்கச்சுவர்கள் வெறுமையாகவே உள்ளன.11

பக்கப் பாறைச்சுவர்கள்

முகப்பையொட்டி இருபுறத்தும் விரியும் சீரமைக்கப்பட்ட பாறைச் சுவர்களை மகேந்திரர் குடைவரைகளான சத்ருமல்லேசுவரம், லக்ஷிதாயதனம் ஆகிய இரண்டுமே கொண்டுள்ளபோதும் பிற பல்லவர் குடைவரைகளில் அவ்வமைப்பைக் காணக்கூடவில்லை. விதிவிலக்காக, மாமல்லபுரம் ராமானுஜர் குடைவரையில் அவ்வமைப்புப் பின்பற்றப்பட்டுள்ளது. சத்ரு மல்லேசுவரம், லக்ஷிதாயதனம் போல் அப்பாறைச் சுவர்களின் கோட்டங்களில் வாயிற்காப்போர் நிறுத்தப்பட்டிருப்பதுடன், தொடர்ந்து விரியும் சுவரின் இரண்டாம் நிலைக் கோட்டங்களில் முற்றிலும் மாறுபட்ட சிந்தனையாக தூயநாகர விமானங்களை ராமானுஜரில் உருவாக்கியுள்ளனர். இப்புத்தமைப்பு தமிழ்நாட்டின் வேறெந்தக் குடைவரையிலும் இல்லை. இவ்விமானக் கோட்டங்களின் முன் உருவாகியுள்ள தளஅமைப்புகளும் தமிழ்நாட்டுக் குடைவரைக் கலைக்குப் புதியன.

தாங்குதளம்

வராகர் முகப்பின் முன் அதனையும் இணைத்த நிலையில் கட்டமைக்கப் பட்டுள்ள செவ்வகப் பள்ளமும் தனித் தன்மையதே. அதன் பயன்பாடு அறியக்கூடவில்லையாயினும், முகப்பின் தாங்குதள அமைப்பிலேயே கட்டமைப்பின் உருவாக்கமும் நேர்ந்துள்ளமை அதன் சமகாலத்துப் பிறப்பை உணர்த்துவதாக உள்ளது. மாமல்லபுரம், கழுக்குன்றம் குடைவரைகளின் முகப்புகளில் வராகர், ராமானுஜர் ஆகிய இரண்டு மட்டுமே முறையான பாதபந்தத் தாங்குதளம் பெற்றுள்ளன. பின்னாளைய இணைப்புப் பெற்ற பெருவராகரின் தாங்குதளம் பற்றி அறியக்கூடவில்லை.

படங்கள்


அதிரண சண்டேசுவரம்


தருமராஜ மண்டபம்


கலங்கரை விளக்கக் குடைவரை


கோனேரி பெரிய மண்டபம்


கொற்றவை குடைவரை


மகிஷாசுரமர்த்தினி குடைவரை


மும்மூர்த்தி குடைவரை


பஞ்சபாண்டவர் குடைவரை


புலிப்புதர் மண்டபம்


இராமானுஜ மண்டப எதிர்க் குடைவரை


இராமானுஜர் குடைவரை


வராகர் குடைவரை

குறிப்புகள்
1. மு. நளினி, இரா. கலைக்கோவன், மகேந்திரர் குடைவரைகள், ப. 201.
2. மேற்படி, ப. 197.
3. மலையடிப்பட்டி ஒளிபதிக் குடைவரையின் முன்சுவர்த் தூண்கள் யாளி, சிம்மம் ஆகியவற்றை விலங்கடிகளாகப் பெற்ற எண்முகத் தூண்களாகக் காட்டப்பட்டிருப்பினும் அவை மாமல்லபுரம் போலத் தனித் தூண்களாக அமையாமல், சுவர்த் துண்டுகளில் செதுக்கப்பட்ட அரைத்தூண் களாகவே அமைந்துள்ளன. மு. நளினி, இரா. கலைக்கோவன், புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள், ப. 14.
4. மகேந்திரர் குடைவரைகள், ப. 199.
5. மேற்படி.
6. மேற்படி, பக். 151-4.
7. மு. நளினி, இரா. கலைக்கோவன், தென்மாவட்டக் குடைவரைகள், ப. 127.
8. நாமக்கல் அதியேந்திர விஷ்ணு கிருக முகப்புக் கபோதம் இத்தகு அமைப்புடன் உள்ளது. மு. நளினி, இரா. கலைக்கோவன், பல்லவர், பாண்டியர் அதியர் குடைவரைகள், பக். 151-152.
9. இவ்வமைப்பு உள்ளிருக்கும் கருவறை கருதியதாகலாம்.
10. மேற்படி, ப. 66.
11. இராமானுஜரிலும் கோனேரிப் பெரிய மண்டபத்திலும் இச்சுவர்களில் பிற்காலப் பொறிப்பாகச் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன.

-வளரும்
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.