http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 156
இதழ் 156 [ ஜூலை 2021 ] இந்த இதழில்.. In this Issue.. |
20ம் நூற்றாண்டின் முற்பாதியின் கடைசி 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நாட்டியக்கலை வரலாற்றில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. ஒன்று தற்செயலானது; மற்றொன்று சமூக மாற்றத்திற்கானது. இரண்டும் தனித்தனி நிகழ்வுகள்தான். இருந்தாலும் முன்னது தழைக்கப் பின்னது காரணமானது என்றும் கூறலாம். 1904ம் ஆண்டு மதுரையில் திரு. நீலகண்ட சாஸ்திரிக்கு மகளாகப் பிறந்த ருக்மிணிதேவி தந்தையாரின் பணி ஓய்வுக்குப் பின் சென்னை அடையாறில் தியசாபிகல் சொசைட்டிக்கு அருகில் இடம் வாங்கிக் குடும்பத்துடன் குடியேறினார்கள். டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார் அவர்களின் மேற்பார்வையிலும் டாக்டர் ஜார்ஜ் சிட்னி அருண்டேல் குடும்பத்துக்கு நெருக்கமாகவும் வளர்ந்த ருக்மிணிதேவியை அவரைவிட 24 வயது மூத்த அருண்டேல் 1920ல் திருமணம் செய்துகொண்டபோது பழமைவாதிகளின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் சென்னையிலேயே தொடர்ந்து வாழ்ந்து காட்டினார்கள். அன்னிபெசண்ட் அம்மையார் மறைந்த பிறகு திரு அருண்டேல் தியசாபிகல் சொசைட்டியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தியசாபிகல் சொசைட்டியின் பணிகளுக்காகப் பல்வேறு பயணங்கள் மேற்கொள்ளவேண்டி வந்தது. அப்படிப்பட்ட ஒரு பயணத்தின்போது லண்டனில் சந்தித்த அன்னா பவ்லோவா ருக்மிணிதேவியின் வாழ்க்கையை மாற்றினார். அவரிடம் பாலே நடனம் கற்றுக்கொண்டாலும் ஓர் இந்தியர் என்ற முறையில் இந்திய நாட்டின் நடனத்தையும் கற்றுக்கொள்ளவேண்டும் என பவ்லோவா அறிவுறுத்தியபடியே இருந்தார். தியசாபிகல் சொசைட்டியில் ருக்மிணிதேவி நிறைய நாடகங்களைத் தயாரித்தார். பின்னர் நாட்டிய நாடகங்களைத் தயாரித்தார். ஆனால் எதிலும் அவருக்கு நிறைவு ஏற்படவில்லை. எனவே, செவ்வியல் இசையுடன் கூடிய பாரம்பரிய நாட்டியத்தைக் கற்க விரும்பினார். 1927ல் ருக்மிணிதேவியை அவரது சகோதரர்கள் இரு தேவதாசி சகோதரிகள் ஆடிய சதிராட்டத்தைக் காண அழைத்துச் சென்றனர். அந்தத் தாள அழகில் உருகிப் பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களைக் குருவாக ஏற்றுக்கொண்டு சதிராட்டம் பயிலத் தொடங்கினார். மேல்தட்டுக் குடும்பத்துப் பெண்கள் இத்தகைய நடனங்களைக் கற்கக்கூடாது எனப் பழமைவாதிகளிடமிருந்து மீண்டும் எதிர்ப்பு வந்தது. மீண்டும் அவற்றைப் புறந்தள்ளி நாட்டியப் பயிற்சியில் முன்னேறினார். 1935ல் தியசாபிகல் சொசைட்டியின் வைரவிழா நிகழ்ச்சியில் அவரது அரங்கேற்றம் நிகழ்ந்தது. மீண்டும் எழுந்த எதிர்ப்பைத் தனது அர்ப்பணிப்பு உணர்வால் இல்லாமல் போகச் செய்தார். ஆனால் நோபல் பரிசு பெற்ற சர். சி.வி.இராமன் இவரது நாட்டியத்தையும் திரு அருண்டேல் இடையிடையே தந்த தத்துவ விளக்கங்களையும் வெகுவாக விதந்தோதியிருக்கிறார். அன்று ஒரு வரலாறு உருவானது. சாதியத் தடைகளை உடைத்தெறிந்து ஒரு புதிய நடனமுறை உருவானது. அதுவரை நடனமாடுபவருடன் சேர்ந்து மேடையில் இருந்த இசைக்கலைஞர்களை முதல்முறையாக மேடையின் பக்கவாட்டில் அமரவைத்துத் தான் மட்டும் மேடையில் ஆடினார். கவர்ச்சியான ஆடைகள் பழங்காலச் சிற்பங்களில் இருந்ததுபோல் ஆபரணங்களுடன் மாறின. தான் கற்ற வித்தையைத் தன்னுடன் வைத்துக்கொள்ளாமல் ஆர்வமுடைய இளையோருக்கும் கற்றுத்தந்து நடனக்கலை மறுமலர்ச்சியில் அவர்களையும் பங்குகொள்ள வைத்தார். அதிலிருந்துதான் கலாஷேத்ரா உதயமானது. தென்சென்னையின் அடையாறில் இது நிகழ்ந்த அதே காலகட்டத்தில் வடசென்னையிலிருந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அடுத்த நிகழ்வு நடந்தது. ஆண்கள் மட்டுமே படித்த மருத்துவக் கல்லூரியில் படித்த முதல் மாணவி, அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த முதல் பெண் பயிற்சி மருத்துவர், பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் சட்டமேலவை உறுப்பினர், மாநில சமூகநல ஆலோசனை வாரியத்தின் முதல் தலைவர், சட்டமேலவையின் முதல் பெண் அவைத்தலைவர், சென்னை மாநகராட்சி அவ்வை இல்லத்தின் முதல் பெண் மூத்த உறுப்பினர் எனப் பல முதல்களுக்குச் சொந்தக்காரரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் 1929ல் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். 1886ம் ஆண்டு புதுக்கோட்டையில் திரு. நாராயணசாமி ஐயருக்கும் சந்திரம்மாள் என்ற தேவரடியாருக்கும் மகளாகப் பிறந்த இவரும் கடும் போராட்டங்களுக்கு இடையில்தான் பல முதல்களைத் தக்கவைக்க முடிந்தது. சமூகத் தடைகளை உடைத்தெறிந்த நாராயணசாமி ஐயர் முத்துலட்சுமியைப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்கவைத்தார். ஆனால் பருவமெய்தியபின் பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது. எனவே வீட்டிலேயே படிப்பு தொடர்ந்தது. சந்திரம்மாள் வரன் பார்க்க முற்பட்டதையும் மீறிக் கல்லூரி சென்று படிக்க விரும்பினார். ஆனால் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் முதல்வரும் பிற பெற்றோர்களும் பெண் என்பதாலும் அவரது தாயாரின் சமூகப் பின்புலத்தாலும் அவரது கல்லூரி நுழைவை எதிர்த்தனர். ஆனால் புதுக்கோட்டை மன்னர் முற்போக்குச் சிந்தனை கொண்டவராக இருந்ததால் எதிர்ப்புகளைப் புறந்தள்ளிக் கல்லூரியில் இடம் கொடுத்து உதவித்தொகையும் நல்கினார். கல்லூரி முடித்தவுடன் அவர் ஓர் ஆசிரியர் ஆகவேண்டும் எனத் தந்தையார் விரும்பினார். ஆனால் முத்துலட்சுமியின் கனவு வேறாக இருந்தது. சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து 1912ல் பட்டம் பெற்றுப் பயிற்சி மருத்துவர் ஆனார். பின்னர்த் தனது ஆசைகளுக்குக் குறுக்கே நிற்காத, கனவுகளைக் கலைக்காத உறுதிமொழியைத் தந்த திரு. சுந்தர ரெட்டியை 1914ல் மணம்புரிந்தார். மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்று திரும்பிய பின்னர் சென்னை சட்டமேலவை உறுப்பினராவதற்காகத் தன் மருத்துவப் பணியைத் துறந்தார். 1930ல் தேவதாசி ஒழிப்புச் சட்டம், பெண்களின் திருமண வயதை அதிகரிக்கும் சட்டம் ஆகிய இரண்டு முக்கியச் சட்டங்களைச் சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். அதே புதுக்கோட்டையிலிருந்து காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகத் தீரர் சத்தியமூர்த்தி எதிர்த்தரப்பில் இருந்தார். பாரம்பரிய வழக்கமான பொட்டுக்கட்டும் பழக்கத்தை நிறுத்தக்கூடாது என்று சொன்ன சத்தியமூர்த்தியை எதிர்த்துக் கடுமையாக வாதிட்டுத் தன்பக்க நியாயங்களை எடுத்துரைத்து அவையில் பதிவு செய்தார். அவர் காலத்தில் இச்சட்டம் நிறைவேறாவிட்டாலும் பின்னர் 9, அக்டோபர் 1947 அன்று அந்நாளைய முதலமைச்சர் திரு. ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் தந்தை பெரியாரின் ஆதரவுடன் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றினார். பின்னர் சென்னை தனி மாநிலமாக ஆனபிறகு 14, ஆகஸ்ட் 1956ல் மீண்டும் முறைப்படி மசோதா நிறைவேற்றப்பட்டது. அதுவரை தமிழ்நாட்டுக் கோயில்களில் பொட்டுக்கட்டித் தேவதாசி ஆக்கப்பட்ட பெண்கள் பல்வேறு கோயில் விழாக்களில் ஆடிவந்த சதிர் என்னும் நடனத்திலிருந்த பாலுணர்வெழுப்பும் அசைவுகளை நீக்கி நாட்டியசாஸ்திரத்தின் சில கூறுகளைச் சேர்த்துத் தற்போது உள்ள வடிவத்தை அளித்த ருக்மிணிதேவி அருண்டேல் அவர்களின் முயற்சியால் பரதநாட்டியம் இன்று எல்லோரும் பயின்று பயிற்சி செய்யும் கலையாக மாறியுள்ளது. இந்தப் பொட்டுக்கட்டும் நிகழ்வு தமிழ்நாட்டில் கடைசியாக நடந்த இடம் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் பிறந்த புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்ரமணியசுவாமி கோயில். அங்கிருந்த 32 தேவதாசிகளில் கடைசியாகப் பொட்டுக்கட்டப்பட்ட பெண்ணின் பெயர் முத்துக்கண்ணம்மாள். ஆண்டு 1944. அவருக்கு அப்போது வயது 7. தனது 10வது வயதில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டபோது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாலும் நடனக்கலையைக் கைவிடவில்லை. தந்தையார் இராமச்சந்திரன் நட்டுவனாராக இருந்து ஆசிரியராகவும் இருந்துள்ளார். செங்குந்த முதலியார் வகுப்பைச் சேர்ந்த இவரைச் சொந்தக்காரர் ஒருவரே திருமணம் செய்துகொண்டார். இவரது கடந்தகாலத்தை முழுவதும் அறிந்தவராகையால் மணவாழ்க்கையில் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. 3 குழந்தைகளும் தற்போது மணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். கணவர் இறந்துவிட்டாலும் பொட்டுக்கட்டியவர் என்பதால் இன்னும் தாலியுடனும் பொட்டுடனும் மங்கலமாகவே வாழ்ந்து வருகிறார். முத்துக்கண்ணம்மாள் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஸ்மிதா வத்ஸ் ஷர்மா தயாரிப்பில் சண்முகநாதன் இயக்கத்தில் Devaradiyaar in Sadir - The life and art of Muthukannammal என்ற பெயரில் 16-Dec-2019 அன்று வெளியானது. ஓர் ஆவணப்படத்தை இவ்வளவு சுவையாக இயக்க முடியுமா என்று வியப்பாக இருக்கிறது. சில படங்கள் தகவல் களஞ்சியமாக இருக்கும். சுவாரசியமாக இருக்காது. பல படங்கள் வெகுமக்களைக் கவரும் உத்திகளைக் கொண்டிருக்கும். ஆனால் பயனுள்ள தகவல்கள் ஏதும் இருக்காது. இந்த ஆவணப்படத்தில் புதிய தகவல் இல்லாத ஒரு காட்சி கூட இல்லை. பொதுவாக வாழ்க்கை வரலாறு என்பது பிறப்பு முதல் இறப்பு வரை அல்லது இப்போது வரை எனத் தொடர் நிகழ்வுகளால் நிரப்பப்பட்டிருக்கும். ஆனால் இப்படத்தில் சதிராட்டத்தின் வரலாறு, அவற்றினூடாக முத்துக்கண்ணமையின் வாழ்க்கை என இரண்டு கருக்களை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பார்ப்போருக்குச் சலிப்பு ஏற்படாவண்ணம் Non-linear முறையில் மாறிமாறிக் கலந்து எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் நாட்டியம் தொடர்பான வரலாற்றுத் தகவல்களும் இவர்களில் முத்துக்கண்ணம்மாள் அவர்களை அறிந்தவர்களின் நினைவலைகளும் முத்துக்கண்ணம்மாள் அவர்களே தனது வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறும் காட்சிகளுடன் இணைந்து ஒரு மணிநேர ஆவணப்படமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. இதில் திருச்சிராப்பள்ளி டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குனர் முனைவர் இரா. கலைக்கோவன், காரைக்குடி கலைக்கோயில் நாட்டியப்பள்ளியின் முதல்வர் முனைவர் சரளா, வழுவூர் இராமையாப் பிள்ளை அவர்களின் கொள்ளுப்பேத்தி நிருத்யா பிள்ளை ஆகியோர் அளிக்கும் தகவல்கள் அரியதும் பயனுடையதுமாக இருக்கிறது. சங்ககாலத்தில் தொடங்கிச் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுகாதையைத் தொட்டுப் பல்லவர், சோழர்காலச் சிற்பங்களில் தோய்ந்து மராத்திய, விஜயநகர, நாயக்கர் கால ஆடல்கள் எவ்வாறு பரதநாட்டியமாக மாறியது என ஆங்காங்கே தளிச்சேரிக் கல்வெட்டு உள்ளிட்ட கல்வெட்டுச் செய்திகளைத் தூவிச் சிறப்பாகப் பங்களித்திருக்கிறார் முனைவர் கலைக்கோவன் அவர்கள். தமிழகத்தின் ஆடற்கலை வரலாற்றைப் பார்த்தால் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சான்றுகள் உள்ளன. ஐவகை நிலங்களிலும் குரவை, துணங்கை முதலான ஆடல்கள் இருந்தன. நாம் தற்காலத்தில் வட இந்தியர்களைப் பார்த்துத் திருமணம் முதலான குடும்ப நிகழ்வுகளில் ஆடுவதுபோல் சங்க காலத்திலேயே அக ஆடல்கள் இருந்தன. வெற்றிக் களிப்பில் ஆடிய புற ஆடல்களும் இருந்தன. ஆண்களும் பெண்களும் இணைந்து ஆடும் குரவையானாலும் பெண்கள் மட்டும் ஆடும் துணங்கையானாலும் இசைக்கலைஞர்களும் உடனிருந்து சேர்த்த முழவொலியும் யாழிசையும் பார்ப்போருக்குக் களிப்பை உண்டாக்கின. இவை மட்டுமின்றித் தோளி, ஒள்வாள் அமலை, துடியாடல், கழைக்கூத்து, வெறியாட்டுகள் என இன்னும் பலவகைகள் இருந்தன. இவை அனைத்தும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் பதிவாகியுள்ளன. ஆடலைப் பற்றி மிக விரிவாகப் பேசுவதில் அரங்கேற்றுகாதைக்கு இணையில்லை. 11 வகையான ஆடல்வகைகளை மாதவி ஒருவரே ஆடியிருக்கிறார் என முனைவர் சரளா அவர்களும் வியக்கிறார். சோழர்கால ஆடற்கலை, தலைக்கோல் முதலான நாட்டியம் தொடர்பான நூல்களை எழுதியிருக்கும் முனைவர் கலைக்கோவன் அவர்கள் இதுபற்றித் தொடர்ந்து கூறும்போது பல்வேறு ஆடல்வகைகள், முத்திரைகள், நாட்டிய நிகழ்ச்சியில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஆகியவற்றை இளங்கோவடிகள் தெளிவாக உரைத்திருக்கும் தகவலைத் தருகிறார். அதன் பின்னர் பரதரின் நாட்டிய சாஸ்திரம் வழக்கத்தில் வந்தபிறகு சங்கம் மருவிய காலத்திற்குப் பின்னர் வட தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள் எழுப்பிய தளிகளில் தோன்றிய சிற்பங்கள் நாட்டிய சாஸ்திரத்தின் கரணங்களையும் முத்திரைகளையும் பெற்றன. சங்ககாலத்திலேயே இருந்த ஒள்வாள் அமலை என்னும் ஆடல் செய்யாறு அருகிலுள்ள சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேசுவரகிருகத்தில் சிற்பமாக இடம்பெற்றிருப்பதைத் தமது குடைவரைகள் நூலில் பதிவு செய்திருக்கிறார். சோழர் காலத்திலும் இவ்வழக்கம் தொடர்ந்தது. தஞ்சைப் பெரியகோயிலில் 108 கரணச் சிற்பங்கள் திட்டமிடப்பட்டு 81 சிற்பங்கள் முழுமை பெற்றிருப்பது மட்டுமின்றிப் புள்ளமங்கை போன்ற பல்வேறு கோயில்களில் தூண், கண்டபாதம், மகரதோரணங்கள் எனப் பரவலாக அமைந்துள்ளன. இங்கும் பெரும்பாலான இடங்களில் அருகில் இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்த ஆடற்கலைஞர்களின் பெயர்களும் காலந்தோறும் மாறி வந்திருக்கின்றன. சங்க இலக்கியங்களில் பொருநர், கோடியர், வயிரியர், கண்ணுளர், கூத்தர், விறலியர் எனப் பல்வேறு வகையினர் சுட்டப்பெறுகின்றனர். துணங்கைக் கூத்தைப் பரத்தையர் ஆடி ஆடவரை மனங்கொளச் செய்த தகவல் இருக்கிறது. பல்லவர் காலக் கல்வெட்டுகளில் கூத்தி என்ற சொல் இடம்பெறுகிறது. கூத்தாடும் பெண் கூத்தி. சோழர் கல்வெட்டுகளில் இத்தளிக்கூத்தப்பிள்ளை, தேவரடியார் ஆகிய பெயர்கள் இடம்பெறுகின்றன. நக்கன் என்ற முன்னொட்டு பல ஆடல் மகளிருக்கு இருந்திருக்கிறது என்பதைத் தளிச்சேரிக் கல்வெட்டு சுட்டுகிறது. பின்னர் மராட்டியர்கள் காலத்தில் சதிர் என்ற ஆட்டம் உருவாகிறது. கோயில்களின் ஆதரவும் செல்வாக்குடையவர்களின் ஆதரவும் குறைந்துகொண்டே வந்ததால் ஆடல் அமைப்புகள் மாறுகின்றன. கோயில்களில் இருந்த ஆடல் பின்னர் மற்றோருக்குக் கற்றுத்தரும் பள்ளிகளுக்கு இடம்பெயர்கிறது. இந்த மாற்றத்துக்கு ஆடல் முறைகளும் விலக்காகவில்லை. விஜயநகர காலத்தில் கோலாட்டம், நாயக்கர் காலத்தில் பறையிசைக்கு ஆடும் பறையாட்டம் போன்ற புதுவகை ஆடல்களும் தோன்றுகின்றன. பிற்காலங்களில் அரசவையில் ஆடுகிற ஆடல், திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடுகிற ஆடல் என உருமாறி 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சதிராட்டமும் நாட்டியக் கரணங்களும் சங்கமித்துப் பரத நாட்டியம் உருவானது. இந்தச் சதிராட்டம் பரதநாட்டியமாக மாற்றம் பெற்றதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் நட்டுவனார்கள் என்னும் ஆடலாசிரியர்கள். அவர்களும் சில கூறுகளை மாற்றி மெருகேற்றியதால்தான் இப்போதிருக்கிற வடிவத்துக்கு வந்திருக்கிறது. இவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம்பிள்ளை மற்றும் வழுவூர் இராமையாப்பிள்ளை ஆகியோர். இந்த மாற்றத்தைப் பற்றி நிருத்யா பிள்ளை அவர்கள் கூறும்போது ருக்மிணிதேவி அருண்டேலுக்கு முன்பே நட்டுவனார் குடும்பங்களில் பரதநாட்டியம் என்ற பெயரிலேயே அழைத்துக் கொண்டிருந்த தகவலைப் பதிவு செய்கிறார். 15ம் நூற்றாண்டிலேயே பரதநாட்டியம் என்ற பெயர் சில நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சில வரலாற்றாய்வாளர்கள் கூறுகிறார்கள். முற்காலத்தில் மாதவி, சித்ராபதி தொடங்கி இடைக்காலத்தில் பரவை நாச்சியார், பஞ்சவன் மாதேவியார் எனத் தொடர்ந்து இப்போது மாரிக்கண்ணம்மாள், முத்துக்கண்ணம்மாள் வரை இவர்களின் கலைப் பங்களிப்பும் சமூகப் பங்களிப்பும் அளப்பரியது. 19ம் நூற்றாண்டில் இக்கலையைப் பேணி வளர்த்தவர்கள் இசைவேளாளர் மற்றும் செங்குந்த முதலியார் குலத்தைச் சேர்ந்தவர்கள். இக்குலங்களைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே கோயில்களில் பொட்டுக்கட்டப்பட்டுத் தேவரடியார்களாகிச் சதிராட்டத்தை ஆடிவந்தார்கள் என ஆய்வாளர் காந்திராஜன் அவர்கள் குறிப்பிடுகிறார். இக்குலங்களில் தோன்றிய புகழ்பெற்றவர்களாக எம்.எஸ் சுப்புலட்சுமி, பால சரஸ்வதி, அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரைக் குறிப்பிடுகிறார் இசைவேளாளர் சங்கத் தலைவர் விராலிமலை பூபாலன். மேலே குறிப்பிட்டதுபோல் நாடு விடுதலையடைந்த காலகட்டத்தில் தேவதாசி முறை ஒழிப்பும் சதிராட்டம் பரதநாட்டியமாக உருமாறிய நிகழ்வும் ஒருசேர நிகழ்ந்ததால் பொட்டுக்கட்டுவது முத்துக்கண்ணம்மாள் அவர்களுடன் நின்றுபோனது. அது பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாத காலகட்டம். மன்னர்கள் பேணி வந்ததாலும் வாழ்வாதாரத்திற்காக நிலங்கள் தானமளிக்கப்பட்டதாலும் தேவதாசிப் பெண்களுக்கு மட்டுமே சொத்துக்கள் இருந்தன. கலையும் இருந்தது; சொத்தும் இருந்தது; அதிகாரம் இருந்தது; அரசர்களுடன் நேரடித் தொடர்பு இருந்தது; இவற்றையெல்லாம் கொண்டு, தற்காலப் பெண்கள் எப்படிப் பொருளாதாரத் தன்னிறைவையும் சமூகப்பாதுகாப்பையும் கொண்டிருக்கிறார்களோ, அதுபோல் தேவதாசிப் பெண்களும் அந்தக் காலத்திலேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். தேவதாசி முறை ஒழிந்து மக்களாட்சி மலர்ந்து பேணுவார் இன்றிக் கற்பித்தல்வழி வாழத்தொடங்கினர். தமிழ்நாட்டின் சில கோயில்கள் திருவிழாக்களின்போது சதிர் ஆடுவதற்குப் பொட்டுக்கட்டியவர்களை மட்டும் அழைக்கும் வழக்கம் பின்னரும் தொடர்ந்தது. என்றாலும் வருமானம் சொல்லிக்கொள்ளும் வண்ணம் இல்லை. அதன் பிறகு தமிழகத்தில் வந்த நில உச்சவரம்புச் சட்டம் இவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியது. உதாரணமாக, முத்துக்கண்ணம்மாள் அவர்களின் தந்தையாரே நிலங்களையெல்லாம் விற்று அரசுக்குச் செலுத்தவேண்டிய ரூபாய் 14,000 தீர்வையைச் செலுத்தியிருக்கிறார். பின்னர் கோயில் திருவிழாக்களில் இடம்பெறும் கலைவடிவங்களும் கூத்துக்கள், நாடகங்கள், திரைப்பாடல் நடனங்கள், திரையிசைக் கச்சேரிகள் என மாறிக்கொண்டே வந்ததால் இவர்களின் வாழ்க்கை முறையும் மாறியது. தற்போது இவர்களுக்கு இருக்கும் ஒரே மகிழ்ச்சி அவ்வப்போது யாராவது ஆர்வலர்கள் வந்து சதிராடிக் காட்டச் சொல்லி இரசிப்பதுதான். அண்மையில் சென்னை தட்சிணசித்ராவுக்கு அழைத்திருந்ததை அவ்வளவு மகிழ்வுடன் குழந்தைத்தன்மை மாறாக் குதூகலத்துடன் விவரிக்கிறார். இவரது நடனத்தில் வெளிப்படும் அழகியலும் நளினமும் எல்லோரிடமும் காணக்கிடைக்காது என்கிறார் குடியாத்தத்தைச் சேர்ந்த பரதக் கலைஞர் திரு சசி சேகரன் அவர்கள். “சதிர் பண்ணத் தெரியும், பணம் பண்ணத் தெரியாது” என்று இவர் கூறும்போது குழந்தைத்தனம் மிளிரும் கள்ளங்கபடமற்ற முகம் ஒருமுறை கண்ணில் வந்துபோகிறது. கண்களில் தெரியும் ஒளியும் தேவர்களைப் போல் சமத்தில் பார்க்காமல் சற்று மேல்நோக்கிய கம்பீரப் பார்வையும் பாடிக்கொண்டே ஆடும் இவரின் மேன்மைகள் என்பதை யாராலும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியாது. சென்னை அரசினர் கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் திரு சந்துரு அவர்கள் ஒரு பாராட்டுவிழாவுக்காக இவரது சிலையை வடித்த அனுபவத்தைக் கூறும்போது மெய் சிலிர்க்கிறார். விழாவில் அச்சிலையை வாங்கும்போது உடம்பை முன்பக்கம் குறுக்கி பவ்யமாக வாங்கிக் கூச்சமென்று சொல்லமுடியாத முகமலர்ச்சியை வெளிப்படுத்தியபோது சிலைசெய்ததை விடப் பேருவகை தந்ததாகக் கூறும்போது நாமும் நம்மையறியாமலே மனத்துள் ஆம் எனச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. கடைசிச் சில காட்சிகளில், எப்படி எப்படியோ செல்வச் செழிப்பில் வாழத்தொடங்கிப் படிப்படியாக வாழ்க்கை களையிழந்து வந்து இப்போது ”எத்தனை கோயில்களுக்குப் போவோம் தெரியுமா நாங்க? யாருமே இப்போ கூப்பிடறது இல்ல” எனச் சொல்லும்போது நம்மையறியாமலே கண்கள் குளமாகின்றன. நிலம், நகை, வீடு, வாசல் என எல்லாவற்றையும் விற்றுவிட்டோம் எனக்கூறி ஒரு சிரிப்பை உதிர்க்கும்போது இனி இழப்பதற்கு ஏதாவது இருந்தால்தானே காலம் மீண்டும் துன்புறுத்தும் எனச் சொல்லாமல் சொல்வதுபோல் இருக்கிறது. இப்படிச் சதிர் என்ற மரபு கடந்த நூற்றாண்டில் வழக்கொழிந்து போனதைக் கடைசிக் காட்சியில் ஒரு மொட்டை மரத்தைவிட்டுப் பறவை பறந்து செல்வதாகக் காட்டி முடிவடைகிறது இந்த ஆவணப்படம். |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |